Followers

Search Here...

Showing posts with label புலஸ்திய. Show all posts
Showing posts with label புலஸ்திய. Show all posts

Saturday 14 September 2019

புலஸ்திய ரிஷி, புலஹர் ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... தமிழ் முனி அகத்தியரின் தந்தையல்லவா புலஸ்தியர்..தெரிந்து கொள்வோமே நம் ரிஷிகள் பெருமையை..

புலஸ்திய ரிஷி, புலஹர் ரிஷி
"புலஹ ரிஷியும், புலஸ்திய ரிஷியும்" ப்ரம்மாவால் படைக்கப்பட்ட மானஸ புத்திரர்.
சகோதர்கள்.

பிரம்மாவால் படைக்கப்பட்ட ரிஷிகள் ப்ரம்ம தேவன் இருக்கும் வரை இருக்கிறார்கள்.
தேவைப்படும் போது ஜன, தப லோகங்களில் இருந்து பூலோகம், சொர்க்கலோகம் வருகிறார்கள்.

இருவரும் பூலோகத்தில் ஹிமாலயத்தில் நேபாள தேசத்தில் (Nepal) ஓடும் 'கண்டகி என்ற சக்ர' நதிக்கரையில் கடும் தவம் செய்தனர்.
அங்கேயே ஆசிரமம் அமைத்து வசித்து வந்தனர்.
புலஹர் வசித்த இடமே இப்போது "சாளக்கிராம க்ஷேத்ரம்" (Nepal) என்று சொல்லப்படுகிறது.
இவரின் சிஷயர் தான் "பரத" யோகீசவ்ரர்.
இவரால் தான் நம் நாட்டுக்கு "பரத" கண்டம் என்று பெயர் ஏற்பட்டது.

பாரத வர்ஷத்தில் (இந்திய, ஆப்கான், பாகிஸ்தான், இந்தோனேஷியா வரை) பரத கண்டத்தில் (இந்திய) தான் நாம் வசிக்கிறோம்.

பாரத என்ற சமஸ்கரித சொல்லுக்கு "பரமாத்மாவில் ரமிப்பது" என்று பொருள். பாரத நாட்டுக்கு "இண்டியா" என்று ஏன் இந்த அர்த்தமில்லாத பெயர்  ஏற்பட்டது?. தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்.

பொதுவாக இந்த பாரத வர்ஷத்தில் தான், "தெய்வ சிந்தனை உள்ளவர்கள் அதிகமாக பிறப்பார்கள்" என்பதால் இதற்கு பாரத வர்ஷம் என்று பெயர் ஏற்பட்டது.

புலஹரின் சிஷ்யர் "பரத" யோகீசவ்ரர் மோக்ஷத்திற்காக கடும் தவம் செய்து வந்தார்.
"தன் தவமே மோக்ஷம் கொடுத்து விடும்" என்று நினைத்த இவரை ஒரு மான் வந்து கெடுத்து விட்டது.
மான் குட்டியை வளர்த்து வந்த பரத யோகீஸ்வரர், தன் ஆயுசு முடியும் சமயத்தில், "இனி இந்த மானை யார் காப்பாற்றுவார்களோ!!" என்ற கவலையுடனேயே உயிர் விட, மோக்ஷம் கிடைக்காமல், அடுத்த பிறவி கிடைத்து அதில் மானாகவே பிறந்து விட்டார்.

போன ஜென்மத்தில் யோகீஸ்வரராக இருந்ததால், பூர்வ ஜென்ம நினைவோடு மானாக பிறந்தார்.
தன் குரு புலஹர் என்று அறிந்து இருந்ததால், புலஹர் இருக்கும் சாளக்கிராம க்ஷேத்ரத்துக்கே வந்து, கடைசி வரை அங்கேயே மானாக இருந்து உயிர் விட்டார்.
பின்னர் "ஜட பரத"ராக அவதரித்து, உலக விஷயங்களில் துளியும் தலையிடாமல், மோட்சத்தையே லட்சியமாக கொண்டு வாழ்ந்து மூன்றாவது பிறவியில் மோக்ஷத்தை பெற்றார்.


புலஹர் என்ற ரிஷியை ஆச்ரயித்த பரதரும் மோக்ஷம் பெற்றார் என்று பார்க்கும் போது, ரிஷிகளின் பெருமை நமக்கு புரியும்.

புலஸ்தியர் தன் தவ வலிமையால் பலம் வாய்ந்த "யக்ஷர்கள், ராக்ஷஸர்களை" ஸ்ருஷ்டி செய்தார்.

ஆதிகாலத்தில் இலங்கை ராக்ஷஸர்களால் ஆளப்பட்டது.

முதல் மனுவான ஸ்வாயம்பு மனுவுக்கு தேவஹூதி என்ற மகள் பிறந்தாள்.
தேவஹூதி "கர்தம முனி"யை மணந்தாள்.

புலஹ ரிஷி, தேவஹூதியின் மகள் "ஆகதி"யை மணந்தார். இவர்களுக்கு கர்மசிரேஷ்டன், வனீயான், ஸஹிஷ்ணு என்ற மூன்று புதல்வர்கள் பிறந்தனர்.

புலஸ்திய ரிஷி, தேவஹூதியின் மகள் "ஹவிர்பு"வை மணந்தார்.

புலஹர், புலஸ்திய ரிஷிக்கு கர்தம பிரஜாபதி மாமனார் முறை.

புலஸ்திய ரிஷிக்கு தமிழ்நாடே கடன் பட்டு இருக்கிறது..
ஏன்?
"தமிழ் முனிவர்" என்று கொண்டாடப்பட்டும் 'அகஸ்தியர்' இவருடைய மகன். 
புலஸ்திய ரிஷியை தமிழ்நாடு கொண்டாடாமல் இருக்க முடியுமா?..

புலஸ்தியருக்கு 'அகஸ்தியர்', 'விச்ரவஸ்' என்று இரு புதல்வர்கள்.
இருவருமே தவத்தில் ஆர்வம் உள்ளவர்கள், ரிஷிகள்.

இவர்கள் அனைவரும் கண்டகி நதிக்கரையில் (Nepal) புலஸ்தியரோடு இருந்து தவம் செய்து கொண்டிருந்தனர்.

'த்ருணபந்து' என்ற ராஜரிஷி, தன் மகள் 'இடவிடா'வை புலஸ்திய ரிஷியின் புதல்வர் விச்ரவஸுக்கு மணம் செய்து கொடுத்தார்.
விச்ரவஸுக்கும், இடவிடாவுக்கு பிறந்தவர் தான் "குபேரன்' என்று அழைக்கப்படும் 'வைச்ரவணன்'.

குபேரன் அருள் கிடைத்தால் செல்வம் கொழிக்கும் என்று சொல்வார்கள்.

புலஸ்தியரின் பேரன் குபேரன் என்று அறியும் போது, புலஸ்திய ரிஷியின் வம்ச பெருமை ஓங்குகிறது.

தேவர்களில், தேவர் கூட்டம் மட்டும் தான் உள்ளது என்று நினைக்க கூடாது.
முப்பத்து முக்கோடி தேவர்களில், 'யக்ஷர்கள், கிண்ணரர்கள், கந்தர்வர்கள்' என்று பல பிரிவுகள் உண்டு.

புலஸ்திய ரிஷி தன் பேரன் 'குபேரன்' என்ற வைச்ரவணனை "யக்ஷர்களுக்கு அரசனாக்கினார்".
குபேரன் எளிதாக நினைத்த இடங்களுக்கு சென்று வர, சொர்க்க லோகத்தில் உள்ள விஸ்வகர்மா, குபேரனுக்காக புஷ்பக விமானம் செய்து கொடுத்தார்.

'மால்யவான்' என்ற ராக்ஷஸன் இலங்கையை ஆண்டு கொண்டு இருந்த போது, குபேரன் இவர்களை விரட்டி, இலங்கைக்கு அரசனானான்.
யக்ஷர்கள் குடியேறி இலங்கையை ஆண்டனர்.

எப்படியாவது "ராக்ஷஸர்கள் மீண்டும் இலங்கையை பிடிக்க வேண்டும்" என்று மால்யவான் முயற்சி செய்து கொண்டிருந்தான்.

மால்யவானின் இளைய சகோதரன் "சுமாலி"க்கு "கேகசி" என்ற மகள் இருந்தாள்.

குபேரனின் தந்தை விச்ரவஸ் தவவலிமையுள்ளவர் என்று அறிந்து, அவருக்கு ராக்ஷஸ குலத்தை சேர்ந்த "கேகசி" என்பவளை மணம் செய்து கொடுத்தான் மால்யவான்.
இவர்களுக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற மூன்று பிள்ளைகள் கண்டகி என்ற சக்ர நதி தீரத்தில் பிறந்தனர்.
நேபாள தேசத்தில் (Nepal) பிறந்தவர்கள்.
சிவ பக்தனாக வளர்ந்தார்கள்.

"ராவணன், விபீஷணன், கும்பகர்ணன்" ஆகியோர் புலஸ்திய ரிஷியின் பேரன்கள்
ராவணனுக்கு "பௌலஸ்த்யன்" என்று பெயர்.




"ப்ரம்மத்தை உபாசிப்பவன்" ப்ராம்மணன்.
புலஸ்திய ரிஷியின் மகன் விச்ரவஸ் "ப்ராம்மணன்".
இவருக்கு பிறந்த ராவணன், கும்பகர்ணன் இருவரும் தாய் வழியில் ராக்ஷஸ குணத்தையே பெற்று இருந்தனர்.
விபீஷணன் "ப்ராம்மண குணம்" அதிகம் உள்ளவனாக இருந்தார்.
மூவருமே 4 வேதமும் கற்றவர்கள்.

சிவ பக்தனான ராவணன், ரஜோ குணம் அதிகமுள்ளவனாக இருந்ததால், பூஜை கூட  அனைவரையும் போல பூ, பழங்கள் கொண்டு செய்ய மாட்டான்.

"சிவ பூஜை தன்னை போல யாரும் செய்ய முடியாதபடி இருக்க வேண்டும்" என்று நினைப்பான்.
அதனால், மாய சக்தி உடைய ராவணன், தன் 10 தலையை அறுத்து ரத்த பூஜை செய்வான்.
இன்னும் வேகம் அதிகமாகி, ஹிமாலயத்தையே தன் 20 கைகளால் தூக்கி, தன் சிவபக்தியை, சிவ பெருமானுக்கு காட்டினான்.

சிவபெருமான் தன் நக கட்டைவிரலால் ஒரு அழுத்து அழுத்த, ராவணனின் 20 கைகளும் மலையில் சிக்கி கொள்ள, அது போன்ற திமிர் பிடித்த சிவ பக்தி செய்வதை  நிறுத்தினான்.

மகா பலம் கொண்ட ராக்ஷர்களான ராவணன் குபேரனை இலங்கையில் இருந்து விரட்டி, அவனிடம் இருந்த "புஷ்பக விமானத்தை" (flight) தன்னிடம் வைத்துக்கொண்டான்.

குபேரன் வட பூமியை  ஆண்டு வந்தான். வடக்கு பகுதியில் குபேரன் இருக்கிறார் என்று சொல்வதற்கு காரணம் இது தான்.

விபீஷணன் பரம சாத்வீகனாக இருந்தார்.
இவரால் தான்,
நமக்கு ப்ரம்ம தேவன் வழிபட்டு, ஸ்வாயம்பு மனு வழிபட்டு, பிறகு ஸ்ரீ ராமரே வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீரங்கத்துக்கு கிடைத்தார்.

ராம பட்டாபிஷேகம் நடந்த பின், அயோத்தி விட்டு, ஸ்ரீ ராமரை பிரிய மனமில்லாமல் விபீஷணன் இருந்தார்.
"தானும், ஸ்ரீ ரங்கநாதரும் வேறல்ல"
என்று ஸ்ரீ ராமரே தன் குலதெய்வமான ரங்கநாதரை விபீஷணனுக்கு கொடுத்து, இலங்கை சென்று ஆட்சி செய்ய சொன்னார்.

வரும் வழியில், ஸ்ரீ ரங்கநாதரை சந்தியா வந்தனம் செய்ய கீழே வைத்து விட்டு, தன் பிரார்த்தனையை செய்து முடித்தார்.

ஸ்ரீ ரங்கநாதர் தெற்கு முகமாக படுத்து இருக்க, "இங்கிருந்தே இலங்கையை கடாக்ஷித்து கொண்டு இருப்பேன்" என்று சொல்லி, ஸ்ரீ ரங்கத்திலேயே தங்கி விட்டார்.
"புலஸ்திய ரிஷி" பரம்பரையில் வந்த "விபீஷணன்" நமக்கு ரங்கநாதரை தந்து விட்டார்,
ஸ்ரீ ராமரே வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதர் தமிழ்நாட்டுக்கு கிடைத்து விட்டார்.

ராக்ஷஸனாக இருந்தாலும் விபீஷணன் பெருமாள் பக்தி செய்தார்.

ராவணன், கும்பரகர்ணன் இந்த பிறவியில் ஸ்ரீ ராமரை எதிர்ப்பது போல இருந்தாலும், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மஹாவிஷ்ணுவின் காவலாளிகள், ஜெய விஜயர்கள் என்பதை மறக்க முடியாது..

சிவ பக்தனான அகஸ்தியர், பரமாத்மா நாராயணனே ஸ்ரீ ராமராக அவதாரம் செய்து இருக்கிறார் என்று உணர்ந்து அவரின் தரிசனத்திற்காக காத்து இருந்தார்.
தன் தந்தை தசரதன் கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற, ஸ்ரீ ராமர் அயோத்தி சாம்ராஜ்யத்தை பரதனுக்கு கொடுத்து, 14 வருட வனவாசத்தை ஏற்று சீதை, லக்ஷ்மணனுடன் புறப்பட்டார்.

பாரத பூமியில் பல வனங்களில் சஞ்சரித்து, ஒரு சமயம் அகத்திய முனிவரை தரிசித்தார் ஸ்ரீ ராமர்.

அகத்தியர் ஸ்ரீ ராமரை 'தன் ஆசிரமத்திலேயே தங்கி விட்டு அயோத்தி திரும்பலாம். 12 வருடங்கள் ஆகி விட்டது, இன்னும் 2 வருடங்கள் தானே உள்ளது' என்று சொல்ல,
ஸ்ரீ ராமர் அகத்தியர் வாக்கை மீற கூடாது என்ற மரியாதையின் காரணத்தால், அந்த இரவு அவர் ஆசிரமத்திலேயே தங்கினார்.
மறுநாள் காலை அனுஷ்டானங்களை முடித்து கொண்டு, ஸ்ரீ ராமர், சீதா, லக்ஷ்மணனுடன் அகஸ்தியரை வந்து சேவித்தனர்.

முக்காலமும் உணர்ந்த அகத்தியர், ஸ்ரீ ராம அவதார நோக்கத்தை புரிந்து கொண்டார்.

ஸ்ரீ ராமரை பார்த்து,
"ராமா, என்னிடம் ஏராளமான அபூர்வமான அஸ்திர-சஸ்திரங்கள் உள்ளது. அதை அனைத்தையும் உனக்கு தருகிறேன்.
நான் நேற்று உங்களை இங்கேயே தங்குமாறு சொன்னேன். உங்களுக்கு இந்த இடம் சௌகரியமாக இருக்காது.

இங்கு கோதாவரி நதி கரையில், பஞ்சவடி என்ற ஒரு இடம் உள்ளது. அது உங்களுக்கு மிகவும் ஏற்ற இடமாக இருக்கும்."
என்று சொன்னார்.

"மீதம் உள்ள 2 வருடங்கள் இங்கேயே தங்கலாம் என்று நேற்று தானே சொன்னீர்கள்? இன்று திடீரென்று தனியாக பஞ்சவடியில் தங்கலாம் என்று அனுப்புகிறீர்களே!!"
என்று ஸ்ரீ ராமரும் கேட்கவில்லை, அகத்தியரும் திடீரென்று ஏன் இப்படி மாற்றி சொன்னேன் என்று விளக்கவுமில்லை.

இருவருக்கும் தெரிந்த விஷயம் ரகசியமாகவே வைக்கப்பட்டது.

"ராவண வதம் என்ற அவதார நோக்கத்தை பூர்த்தி செய்ய தான் ஸ்ரீ ராமர் வனவாசம் ஏற்றுள்ளார். 
சீதையை ராவணன் அபகரித்து இலங்கை செல்ல போகிறான். 
பிறர் மனைவியை அபகரித்த பாவத்துக்கு ராவணன் அழிய போகிறான்" என்று ஞான த்ருஷ்டியால் புரிந்து கொண்டார் அகத்தியர்.

ஒரு வருஷ காலம் பஞ்சவடியில் (மகாராஷ்டிரா) ஸ்ரீ ராமர், சீதை வசித்தனர். 
லக்ஷ்மணன் குடில் அமைப்பது, வீடு பெறுக்குவது, காய் கனிகள் கொண்டு வருவது என்று சகல சேவையும் செய்து வந்தார்.

ராவணனின் தங்கை சூர்ப்பனகை சீதையை கொலை செய்ய முயற்சிக்க, அனுஷ்டானத்தில் இருந்த ஸ்ரீ ராமர் லக்ஷ்மணனை காப்பாற்ற சொல்ல, பெண்ணாக இருப்பதால் கொலை செய்யாமல், மூக்கு அறுக்கப்பட, இலங்கைக்கு ஓடி ராவணனிடம் சீதையை எப்படியாவது கவர்ந்து மணம் செய்து கொள்ளுமாறு சொல்ல, ராவணன் போலி சாமியார் போல வந்து தூக்கி சென்று விட்டான்.

தன் அயோத்தி சேனையை அழைத்து கொள்ளாமல், தனி ஒருவனாக, ஸ்ரீ ராமர் பஞ்சவடியில் (மகாராஷ்டிரா) இருந்து தன் தம்பி லக்ஷ்மணனை கூட்டி கொண்டு,
கர்நாடக தேசத்தில் வானரர்களை சிநேகம் செய்து கொண்டு,
கடலை கடந்து,
ராவணனுக்காக நின்ற அனைத்து ராக்ஷஸ கூட்டத்தையும் அழித்து, ராவணன் 10 தலையையும் மண்ணில் சாய்த்து,
இலங்கையை தன் ஆளுமையில் கொண்டு வந்து,
ராவணன் தம்பிக்கு அப்படியே இலங்கையை கொடுத்து, இலங்கை அரசனாக்கி,
சீதையை மீட்டு, அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டு "ராம ராஜ்யத்தை" உலகில் நிறுவினார் பரமாத்மா நாராயணன்.

புலஸ்திய ரிஷி பின்னாளில் விந்திய மலையை (மத்திய பிரதேசம்) தாண்டி தக்ஷிண பாரதத்துக்கு வந்தார்.

அகஸ்தியர் தமிழ் முனிவரனார்.

புலஸ்திய ரிஷியால் குபேரன், தமிழ் முனி என்று பெயர் பெற்ற அகத்தியர் நமக்கு கிடைத்தார்.
விஷ்ணுவின் பக்தர்களான ஜெய விஜயர்கள் சனகாதிகள் சாபத்தால் மூன்று ஜென்மங்கள் பூலோகத்தில் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட,
கண்டகி நதி தீரத்தில் தவம் செய்யும் புலஸ்திய ரிஷியின் மகன் விச்ரவஸ் என்ற ரிஷியை தன் தகப்பனாக தேர்ந்து எடுத்தனர்.

விஷ்ணு பார்ஷதர்கள் "புலஸ்திய ரிஷியின் பரம்பரையில் பிறக்க ஆசைப்பட்டனர்" என்றால் புலஸ்தியர்  பெருமை எத்தகையது என்று உணரலாம்.

அவதாரத்தில் ராக்ஷஸனாக பிறந்தாலும், "விஷ்ணு பார்ஷதர்கள்" ஆயிற்றே ராவணனும், கும்பகர்ணனும்.

சப்த ரிஷிகளில் ஒருவராக இருக்கும் அகஸ்தியர் தன் "தகப்பனாக புலஸ்தியரை தேர்ந்து எடுத்தார்" என்றால் புலஸ்தியர்  பெருமை எத்தகையது என்று உணரலாம்.

பரத யோகீஸ்வரர் "புலஹரின் சிஷயர்" என்ற பெற்றதால் தானே, மோக்ஷம் அவர் முயற்சியால் கிடைக்காமல் போனாலும், இரண்டு ஜென்மங்களிலேயே மோக்ஷத்தை அடைந்தார். 
குரு கிருபை தானே வென்றது.

பெருமை பெற்ற பரத யோகீஸ்வரர் அந்த ஜென்மத்தில் மானை நினைத்து மோக்ஷத்தை நழுவ விட்டாலும்,
குரு அணுகிரஹம் இருந்ததால், மானாக அடுத்த பிறவி எடுத்தும் பூர்வ ஜென்ம ஞாபகத்தோடு இருந்து, புலஹர் ஆசிரமத்திலேயே இருந்தார், பிறகு மூன்றாவது ஜென்மத்தில் மோக்ஷத்தை அடைந்து விட்டார் என்று பார்க்கிறோம்.

ரிஷிகளை உபாசித்து நாசம் போனவன் கிடையாதே...
தன் கிருபையால் குருவாக ரிஷிகள் இருந்து காப்பாற்றி விடுவார்கள் என்று தெரிகிறதே..


புலஸ்திய ரிஷி சத்ய யுகம், த்ரேதா யுகம் தாண்டி, துவாபர யுகத்திலும் பூலோகம் வந்தார்.

மகாபாரத சமயத்தில், தீர்த்த யாத்திரை செல்ல பீஷ்மர் சென்று இருந்த போது, கங்கையின் புத்திரனான பீஷ்மருக்கு "புலஸ்திய" ரிஷி காட்சி கொடுத்தார்.
அவருக்கு புண்ணிய க்ஷேத்ரங்களுக்கு சென்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி வருவதன் புண்ணியங்களை பற்றி விரிவாக சொல்கிறார்.

புலஸ்திய ரிஷி, புஷ்கரத்தை பற்றி சொல்லும் போது,
"புஷ்கரையில் குளித்தால் மறுபிறவி என்ற கடமையில் இருந்து விடுபடுவார்கள். 
குறிப்பாக கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளில் புஷ்கரைக்குச் செல்பவன், நித்தியமான பிரம்மனின் வசிப்பிடத்தை அடைவான்.


ஓ மன்னா {பீஷ்மா}, மதுவைக் கொன்றவனே {மதுசூதனனே} "தேவர்களில் முதன்மையானவன்" என்பது போல, 
புஷ்கரையும் அனைத்துத் தீர்த்தங்களிலும் முதன்மையானது. 

நூறு வருடங்கள் அக்னி ஹோத்திரம் செய்தவனின் தகுதியை, கார்த்திகை மாதம் முழுதும் புஷ்கரையில் தங்கியவன் பெறுகிறான்."
என்று தீர்த்த யாத்திரையின் பலன்களை பீஷ்மருக்கு சொன்னார்.

புலஹர், புலஸ்திய ரிஷியின் பரம்பரையில் வந்த அனைவரும் பாக்கியவான்கள்.

"தேவர்களை, ரிஷிகளை, மக்களை ஸ்ருஷ்டி செய்யும் மகா சக்தி கொண்ட, ரிஷிகள் மூலமாக வந்தவர்கள் நாம்"
என்ற பெருமை நமக்கு வேண்டும்.

"அறிவு இல்லாத, முட்டாள் ஆதாம் ஏவாள் வழியில் வந்த முட்டாள்கள் நாங்கள்" என்று சொல்லிக்கொள்வதை விட ஒரு மனிதனுக்கு அவமானம் வேறு இருக்க முடியுமா..?

நம் ரிஷி பரம்பரையை தெரிந்து கொள்வோம்.
ரிஷிகளின் பெருமையை அறிவோம்.

இவர்களை போல, மேலும் பல ரிஷிகள், சாதுக்கள், மகாத்மாக்கள் இந்த பரம்பரையில் தோன்றி உள்ளனர்.

புலஸ்திய, புலஹ ரிஷிகளின் பெயர்களை ஸ்மரித்து கொண்டே,
'நான் இந்த ரிஷிகளின் கோத்திரத்தில் (வம்சத்தை) பிறந்தவன்'
என்று அபிவாதயே (self intro) சொல்வது ஹிந்துக்களுக்கு வழக்கம்.

இன்று பிராம்மண சமுதாயம் மட்டுமே, தான் எந்த ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் என்று தன்  அடையாளத்தை ஞாபகத்தில் வைத்து இருக்கிறார்கள்.

மற்ற சமுதாய மக்களும், ரிஷி பரம்பரையில் இருந்து வந்தவர்கள் தான்.

ஹிந்துக்கள் அனைவரும் தன் ரிஷி பரம்பரையை அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் எந்த ரிஷியின் பரம்பரையில் இருந்து வந்தோம்?
என்று தெரிந்து கொள்வது மிக அவசியம். கௌரவமும் கூட.


அந்த ரிஷிகளை பற்றி நன்கு தெரிந்து இருக்கவும் வேண்டும்.