Followers

Search Here...

Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

Saturday 16 February 2019

எந்த பலம் நமக்கு இருந்தால், தன்னம்பிக்கை எல்லையில்லாமல் இருக்கும்? ...

"க்ரதுமய புருஷ:" என்று வேதம் (சாந்தோக்ய உபநிஷத்) சொல்லும் போது,
"நம்பிக்கையே வடிவமாக இருப்பவன் மனிதன்" என்று மனிதனின் அடையாளத்தை சொல்கிறது.


"நம்பிக்கையை ஒரு மனிதன் இழந்து விட்டால்", அவன் உலகில் வாழ முடியாது போகிறான்.

உலகில் வாழ்வதற்கே, மனிதனுக்கு முதலில் தேவைப்படுவது "தன்னம்பிக்கை".
எந்த காரியத்தை எடுத்தாலும் "என்னால் செய்ய முடியாது" என்ற நம்பிக்கை இல்லாதவனாக இருந்தால், அவனால் எதிலும் முன்னேற முடியாமல் போகிறது. 
"ஒழுங்காக படிக்கிறாயா?" என்று கேட்டால், ஒரு மாணவன் "ஏதோ படிக்கிறேன்" என்று தன்னம்பிக்கை இல்லாமல் சொன்னால்,
அவனுடைய நம்பிக்கையின்மையே ஜெயிக்க முடியாதபடி செய்து விடும்.
"வேலை பார்க்கிறாயா?" என்று கேட்டால், ஒருவன் "ஏதோ பார்க்கிறேன்" என்று தன்னம்பிக்கை இல்லாமல் சொன்னால், அவனுடைய நம்பிக்கையின்மையே ஜெயிக்க முடியாதபடி செய்து விடும்.
"கல்யாணம் செய்து வைக்கலாமா?"
 என்று தகப்பன் கேட்டால், பிள்ளை "செய்து வையுங்கள். குடும்பம் ஏதோ நடத்த பார்க்கிறேன்" என்று தன்னம்பிக்கை இல்லாமல் சொன்னால், அவனுடைய நம்பிக்கையின்மையே ஜெயிக்க முடியாதபடி செய்து விடும்.

இப்படி தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கும் மனிதன், உலக வாழ்க்கைக்கே லாயக்கு இல்லாமல் போகிறான்.
நான் இந்த படிப்பு படிப்பேன்,
இந்த மாதிரி உத்யோகம் பார்ப்பேன்,
கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவேன்
என்று சொன்னால் தானே, அது தன்னம்பிக்கைக்கு லக்ஷ்னமாகும்.
படிப்பு, தனக்கு தகுந்த படிப்பா?
உத்யோகம், உயர்ந்த உத்யோகமா?
கல்யாணம் செய்து கொண்ட துணை சரியான துணையா?
என்று பார்ப்பது, ஒரு புறம் இருந்தாலும்,
எப்படி இருந்தாலும் தன்னம்பிக்கையோடு இருப்பேன் என்று சொல்வது தானே மனிதனுக்கு அழகு.


தனக்கு விதிக்கப்பட்ட காரியங்களில் ஸ்ரத்தை (ஈடுபாடு) இல்லாதவன், தன்னம்பிக்கையை இழக்க நேரும்.
இப்படிப்பட்டவர்கள் உலக வாழ்க்கைக்கே லாயக்கு இல்லை.
திடமான தன்னம்பிக்கை உடையவன், எப்பொழுதும் எல்லையற்ற ஆச்சர்யமான காரியங்களை செய்வான்.
இதற்கு யார் சாட்சி? நம் வீர ஹனுமானே சாட்சி.

தன்னம்பிக்கை நமக்கு இரண்டு விஷயங்களை பொறுத்து வருகிறது.

  1. ஒன்று, நம்முடைய உடல், அறிவு பலத்தை அறிந்து கொள்வதால் ஏற்படும் "தன்னம்பிக்கை".
  2. மற்றொன்று, தெய்வம் நமக்கு துணை நிற்கிறது என்பதை உணர்ந்து கொள்வதால் ஏற்படும் "தன்னம்பிக்கை".

சீதா தேவியை கண்டுபிடிக்க, நாற்புறமும் வானரர்கள் சுக்ரீவனால் அனுப்பப்பட்டனர்.
தெற்கு நோக்கி வந்த வானர சைன்யத்தில் (படையில்), ஹனுமான் இருந்தார்.

கடலை தாண்டி, இலங்கை சென்று பார்க்க வேண்டும் என்கிற நிலையில், அனைத்து வானரர்களும் ஒரு கூட்டம் போட்டு ஆலோசித்தனர்.

ஒரு வானரன் "நான் 10 யோஜன தூரம் தாண்டுவேன்" என்றான்,
மற்றொரு வானரன் "நான் 20 யோஜன தூரம் தாண்டுவேன்" என்றான்,
மற்றொரு வானரன் "நான் 30 யோஜன தூரம் தாண்டுவேன்" என்றான்,

மகா பலசாலியான அங்கதன், "100 யோஜன தூரமும் தாண்டி விடுவேன், ஆனால் திரும்பி வர முடியாது" என்றான்.
"சிறு வயதாக இருந்தால் தாண்டி, சீதா தேவி அங்கு உள்ளாரா என்று பார்த்து விட்டு, திரும்பியும் வந்து விடுவேன்.. வயதாகி விட்டதால் தாண்ட முடியாது" என்றார் ஜாம்பவான்

இப்படியே ஒவ்வொரு வானரனும் தன் உடல், அறிவு பலத்தை அறிந்து கொண்டு, அவரவர்கள் எவ்வளவு தூரம் தாண்ட முடியும் என்று, தன்னம்பிக்கையுடன் பேசினர்.
ஹனுமானை கேட்டதும், "கடலை தாண்டுவேன். சீதையை பார்ப்பேன். மீண்டும் திரும்பி வருவேன்" என்று எல்லையற்ற திடமான தன்னம்பிக்கையுடன் மார்பு தட்டிக்கொண்டு சொன்னார்.





எல்லையற்ற திடமான தன்னம்பிக்கை ஹனுமானுக்கு மட்டும் எப்படி ஏற்பட்டது?

மற்ற வானரர்கள் அனைவரும், தங்கள் உடல் வலிமையை மட்டும் வைத்து ஆலோசித்ததால், தன் சுயபலத்தை கொண்டு ஏற்பட்ட "தன்னம்பிக்கையிலேயே" அவர்களுக்கு அவநம்பிக்கை வந்தது.

இத்தனை பெரிய காரியத்தை செய்ய வேண்டும் என்கிற போது, தன் பலத்தை கொண்டு ஏற்பட்ட "தன்னம்பிக்கையிலேயே" அவர்களுக்கு அவநம்பிக்கை வந்தது.

ஹனுமான் தான் "ராம பக்தன்" என்று அறிந்தவர்.
மேலும், தன் பக்தியால், ராமரின் அபிமானத்துக்கு பாத்திரமானவர்.
தெய்வம் எல்லோருக்கும் பொதுவானவர் என்றாலும்,
"கடவுளா? எங்கே காட்டு!!" என்று திமிராக பேசுபவனை காட்டிலும்,
"100 கோடி ராம நாமம் சொன்னால் ஸ்ரீ ராமரை தரிசிக்கலாம்" என்று தியாகராஜரை பார்த்து அவர் அப்பா சொல்ல,
"100 கோடி ராம நாம ஜபம் செய்து பார்த்து விட வேண்டும்" என்று ஆவலோடு ஜபம் செய்த அவருக்கு ஸ்ரீ ராமர் தரிசனம் கொடுத்தார் என்று பார்க்கிறோம்.

தன் உடல், அறிவு பலத்தால் ஏற்படும் தன்னம்பிக்கை, உடல், அறிவு பலத்தை தாண்டிய செயல்கள் செய்ய நிலை வரும் போது உடைந்து போகும்.

தெய்வத்திடம் உண்மையாக பக்தி (உறவு, அன்பு, ஆர்வம், உருக்கம் சேர்ந்தது "பக்தி") செய்து, தெய்வம் மனம் குளிர நாம் வாழ்ந்தால், தெய்வ அணுகிரஹத்தால், நாம் செய்யும் எந்த காரியமும் சுபமாக முடியும்.

ஹனுமானின் "ராமபக்தி" உலகம் அறிந்தது.

ஹனுமான் கடலை தாண்ட வேண்டும் என்று மற்ற வானரர்கள் பேசி கொண்டிருக்கும் போது, யோசித்து பார்த்தார்.
"சீதையை தேட லட்சக்கணக்கான வானரர்களை சுக்ரீவன் நாற்புறமும் அனுப்பினார்.  
சீதைக்கு தன் அடையாளமாக காட்ட, ஸ்ரீராமர், தன் கையில் அணிந்திருந்த கனையாழியை (மோதிரத்தை) எந்த வானரனுக்கோ கொடுத்து இருக்கலாம்.
இத்தனை வானரர்களிடையே, அடியேனான என்னை தேர்ந்தெடுத்து எப்பொழுது கூப்பிட்டு, இந்த கனையாழியை (மோதிரத்தை) என்னிடம் கொடுத்தாரோ!!
இதிலிருந்தே, நான் நிச்சயம் சீதா தேவியை பார்க்க போகிறேன் என்று தெரிகிறது.
இந்த தன்னம்பிக்கை என்னுடைய உடல், அறிவு பலத்தால் வந்தது அல்ல,
இந்த எல்லையற்ற தன்னம்பிக்கை, 'ஸ்ரீ ராமர் என்னை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்' என்கிற தெய்வ பலத்தால் என்று அறிகிறேன்"
என்று மனதுக்குள் புரிந்து கொண்டார்.


'தன் சுய பலத்தை காட்டிலும், தனக்கு தெய்வம் பலம் கூட இருக்கிறது' எனறு புரிந்து கொண்ட பின், தன் பலத்தை மீறிய செயலையும் தான் செய்ய முடியும் என்று தன்னம்பிக்கை கொண்டார் ஹனுமான்.

மற்ற வானரர்கள் தங்கள் சுய பலத்தை கருத்தில் கொண்டு யோசித்ததால்,  தன்னம்பிக்கை ஒரு எல்லையுடன் இருந்ததால், கடலை தாண்ட முடியாது என்று நினைத்தனர்.
ஒருவரும் லாயக்கு இல்லை என்று, கடைசியில் ஹனுமானை கேட்டதும், "கடலை இப்பொழுதே தாண்டுவேன். சீதையை பார்ப்பேன், திரும்பி வருவேன்" என்று உற்சாகமாக கிளம்பினார்.
குரு நமக்கு துணை நிற்கிறார் என்று "குருவின் அணுகிரஹ பலத்தையும்",
நாராயணன் நமக்கு துணை செய்கிறார் என்று 'தெய்வ அணுகிரஹ பலத்தையும்" யார் உணர்ந்து கொள்கிறார்களோ,
அவர்களுக்கு எல்லையில்லா திடமா தன்னம்பிக்கை உண்டாகிறது.

தன் சுய பலம், அறிவு பலத்தை மட்டும் நம்பினால், ஓரளவு தான் தன்னம்பிக்கை கிடைக்கும்.

மகான்கள், சாதுக்கள் "தெய்வ பலத்தால் ஏற்பட்ட தன்னம்பிக்கையில்",  நினைத்து பார்க்க முடியாத, பெரிய பெரிய காரியங்களை கூட எளிதில் செய்து விடுகிறார்கள்.
மகான்கள் செய்யும் காரியங்கள்,
"ஸமர்த்த ராமதாசர்" போன்ற மகானின் அன்புக்கு பாத்திரமான "வீர சிவாஜி" போன்றவர்கள் மராட்டிய சாம்ராஜ்ஜியம் அமைத்து, செய்த சாதனைகள் காரியங்கள்
என்று பல ஆச்சர்யங்களை காணலாம்.
தெய்வத்திடம் பக்தி செய்த ப்ருகு, கன்வர், ஹரிதர் போன்ற ரிஷிகள், தங்களின் தெய்வபக்தியால், தெய்வ அணுகிரஹம் பெற்று, தெய்வங்கள் இவர்களுக்காக பாரத தேசம் முழுவதும் சிவனாக, விஷ்ணுவாக, முருகனாக, காட்சி கொடுத்தனர்.
அந்த ரிஷிகளுக்காக அங்கேயே சாநித்யம் குறையாமல் இருக்க சம்மதித்து இருக்கின்றனர்.

ரிஷிகள் தன் தெய்வபக்தியினால்  தெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்தி, தெய்வங்கள் காட்சி தந்தவுடன், "சக்தியில்லாத, பக்தி குறைவாக உள்ள நமக்கும் காட்சி கிடைக்கட்டுமே" என்று, தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்ய, அர்ச்ச அவதாரமாக, அங்கேயே சாநித்யம் குறையாமல் இருக்க, தெய்வத்திடமே சம்மதம் வாங்கி, நமக்கு தந்து விட்டனர்.
ரிஷிகளால் தெய்வ சாநித்யம் அடைந்த இடங்கள், அரசர்களால் கோவில் அமைக்கப்பட்டு, காட்சி கொடுத்த தெய்வங்கள் வேத மந்திரங்கள் மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் செய்ய வேதம் கற்று அறிந்த வேதியர்கள் அமர்த்தப்பட்டு, அந்த இடங்கள் திவ்ய க்ஷேத்ரங்கள் ஆனது.


பாரதம் ஏங்கும், ரிஷிகள் தொடாத இடங்களே இல்லை என்பதால், ஆங்காங்கு தெய்வங்கள் அவர்களுக்கு பிரசன்னம் ஆனார்கள்.
ஊருக்கு ஒரு கோவில் இருப்பது போல,
உலகத்திற்கே ஒரு கோவிலாக நம் பாரத தேசம் உள்ளது.

தெய்வ பக்தி திடமாக இல்லாத நாமும், தெய்வ சிந்தனை ஏற்பட்டு மோக்ஷத்திற்கு வழி செய்து கொள்ள, 
ரிஷிகளின் பக்தியால், நமக்கு தெய்வங்கள் பாரத தேசம் முழுவதும் அர்ச்ச (விக்கிரக) ரூபமாக கிடைத்தார்கள்.

அரசர்களால், அதை சுற்றி கோவில்கள் ஆகம விதிப்படி கட்டப்பட்டது.
ரிஷிகளுக்காக பிரகடனமான தெய்வங்களை, "நாயன்மார்கள், ஆழ்வார்கள், மகான்கள், சித்தர்கள்" போன்ற தெய்வீக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் மங்களாசாசனம் செய்து பாடல்கள் பாடி, அவர்கள் சார்பில் நமக்கு பாசுரங்கள், பிரபந்தங்கள், ஸ்தோத்திரங்களை தந்து விட்டு சென்றனர்.
"ராமானுஜர், மாத்வர், சங்கரர்" போன்ற ஆசாரியர்கள் கோவிலில் வீற்று இருக்கும் தெய்வத்திடம் எப்படி பழக வேண்டும், பூஜை செய்ய வேண்டும் என்று முறைகளை காட்டி, கைங்கர்யம் செய்யும் வழியை காண்பித்து சென்றனர்.
இப்படி,
"தெய்வத்தைநமக்காக கொடுத்து விட்டு, ரிஷிகள் சென்றனர்.
"கோவிலை" கட்டி, நமக்காக கொடுத்து விட்டு, அரசர்கள் சென்றனர்.
கோவிலில் சென்று நாமும் பாட, பாசுரங்கள், பிரபந்தங்கள், "ஸ்தோத்திரங்களைநமக்காக கொடுத்து விட்டு, ஆழ்வார்கள். நாயன்மார்கள், மகாத்மாக்கள் சென்றனர்.
தெய்வத்திடம் "கைங்கர்யம் செய்யும் முறையை" ராமானுஜர், மாத்வர், சங்கரர் போன்ற ஆசாரியர்கள் நமக்கு தந்து விட்டு சென்றனர்.

மனிதன் நம்பிக்கையின் மேல் தான் வாழ்கிறான்.
உலக வாழ்க்கை வாழ்வதற்கே, உடல், அறிவு பலத்தின் மூலம் ஏற்படும் தன்னம்பிக்கையில் தான் மனிதன் வாழ்கிறான்.

உலக வாழ்க்கைக்கே தெய்வ பலமோ, சுய பலமோ தேவைப்படும் போது,
தெய்வத்தை பார்க்க வேண்டும் என்றால், கட்டாயம் நமக்கு "தெய்வத்திடம் பக்தி" அடிப்படையாக தேவைப்படுகிறது.

தெய்வ பக்தி இல்லாமல், "கடவுளை காட்டு" என்று திமிராக பேசுபவன், பேசிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
ஒரு வேளை இவன் அறிவு மற்றும் உடல் பலத்தால் ஏற்பட்ட தன்னம்பிக்கையில் செய்த காரியத்தில் தோற்று போக நேர்ந்தால், மனம் ஒடிந்து போகிறான் மனிதன்.

ரிஷிகளுக்காக ப்ரத்யக்ஷம் ஆகி, 
மகான்கள், நாயன்மார்கள், ஆழ்வார்களுக்காக எப்பொழுதும் கோவிலில் அருள் செய்ய தயாராக இருக்கும் தெய்வத்திடம் 
ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை பாடி பக்தி செய்து, 
தெய்வ பலத்தை பெற நாமும் முயற்சிப்போம்.

உண்மையான பக்தி செய்து, தெய்வ பலத்தை நாம் பெறும் போது,
நாமும் திடமான தன்னம்பிக்கையை பெறுவோம். 
உலக வாழ்க்கையில் திடமான நம்பிக்கையுடன் நாமும் வாழ்வோம்.

தெய்வ பலத்தால் ஏற்பட்ட தன்னம்பிக்கை, எந்த காரியத்தை எடுத்தாலும் நமக்கு வெற்றி தரும்.

சுய பலத்தால் ஏற்படும் "தன்னம்பிக்கையை" காட்டிலும், தெய்வ பக்தியினால் நமக்கு கிடைக்கும் தெய்வ பலம், அசைக்க முடியாத "தன்னம்பிக்கையை" தருகிறது.

கோவிலுக்கு சென்று வழி படுவோம்.
தெய்வத்திடம் பக்தி செய்து, தெய்வ அணுகிரஹத்தை பெறுவோம்.

தெய்வம் நமக்கு துணை நிற்கிறார் என்று ஹனுமானை போன்று உணர்ந்து விட்டால், எதையும் சாதிக்க தன்னம்பிக்கை கிடைக்கும்.

தன்னம்பிக்கையை கொண்டே மனிதன் வாழ்கிறான்.

வாழ்க ஹிந்துக்கள்.
ஹிந்துவாக பிறந்ததே நம் பாக்கியம்.

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka