Followers

Search Here...

Showing posts with label மண்ணவர் விதியே. Show all posts
Showing posts with label மண்ணவர் விதியே. Show all posts

Friday 28 September 2018

சக்தியை கொடுப்பது எது? உலகில் மதிக்கத்தக்கது எது? மதிக்க வேண்டியது எது?

இந்த உலகில்,
                     நாம் மிகவும் மதிக்கத்தக்கது எது?
                     நாம் மதிக்க வேண்டியது எது?
                     நாம் உணர வேண்டியது எது? 
                     நாம் அடைய வேண்டியது எது?
உலகத்தை பார்ப்பதற்கு, நமக்கு ஒரு தீபத்தின் ஜோதி (ஒளி) தேவைப்படுகிறது.



ஒரு தீபத்தின் வெளிச்சத்தில் உலகம் தெரிகிறது.
யார் நிற்கிறார்கள்? யார் இருக்கிறார்கள்?
என்று அனைத்தும் இந்த தீப ஜோதியினால் நமக்கு தெரிகிறது.
தீப ஜோதி இல்லையென்றால், நிலா வெளிச்சத்தில் உலகம் தெரிகிறது.
இரவில் சந்திர ஜோதி நமக்கு உலகை காட்டுகிறது.
பகலில், சூரிய வெளிச்சத்தில் உலகம் தெரிகிறது.
சூரிய ஜோதி நமக்கு உலகை காட்டுகிறது.

தீப ஜோதியை விட ப்ரகாசமானது 'சந்திர ஜோதி'.

சந்திர ஜோதியை விட மிகவும் ப்ரகாசமானது 'சூரிய ஜோதி'.

ஆக சந்திர ஜோதியை விட, மிகவும் மதிக்கத்தக்கது சூரிய ஜோதி.

சூரிய ஜோதியை விட, பிரகாசமான ஜோதி உலகத்தில் இருக்க முடியுமா?
சூரிய ஜோதியை விட உலகத்தை காட்டும் சக்தியுள்ள ஒரு ஜோதி உண்டா?
ஆம்... இருக்கிறது.

கண் என்ற உறுப்பு இருந்தும், பார்க்க முடியாத குருடனுக்கு, ஆயிரம் சூரியன் சேர்ந்து, வெளிச்சத்தை கக்கினாலும், உலகம் இருப்பதை அவனுக்கு காட்ட முடியுமா?

கண் என்ற உறுப்பில், நேத்ர ஜோதியும்  உடையவன் தானே உலகை காண்கிறான்.

நேத்ரம் என்றால் தமிழில் "கண்" என்று அர்த்தம்.
ஆக சூரிய ஜோதியை விட, மிகவும் மதிக்கத்தக்கது நம்முடைய "நேத்ர ஜோதி" தானே.

இந்த கண்ணுக்கு எங்கிருந்து இந்த 'நேத்ர ஜோதி' வந்தது?
என்ற கேள்வி எழும்போது நமக்கு பல உண்மைகள் விளங்கும்.

செத்துப்போனவனுக்கு கண் இருந்தாலும், அந்த கண்ணில் இருந்த நேத்ர ஜோதியை காணவில்லையே!!

உடம்பில் உயிர் இருந்தவரை, நேத்ர ஜோதியை கண்ணுக்கு கொடுத்தது, உள்ளிருக்கும் "ஆத்ம ஜோதி" அல்லவா.

கொஞ்சம் சிந்தித்து பார்த்தாலே, 'ஆத்மஜோதி இந்த உடம்பில் இருக்கும் வரை தானே, இந்த உடம்பில் உள்ள ஜட பொருட்கள் சக்தி பெற்றது' என்ற உண்மை புரியும்.
ஆத்மா இந்த உடம்பில் இருக்கும் வரை தானே, 'கண்' என்ற அவயவம் பார்ப்பதற்கு பயன்பட்டது.
ஆத்ம ஜோதி உடலை விட்டு பிரிந்தவுடன், கண்ணுக்கு கிடைத்த "நேத்ர ஜோதியும்" மறைந்து விட்டதே.

கண் பார்த்தால் தானே, சூரிய ஜோதியே ப்ரயோஜனப்படுகிறது.

கண் பார்த்தால் தானே, சந்திர ஜோதியே ப்ரயோஜனப்படுகிறது.

கண் பார்த்தால் தானே, தீப ஜோதியே ப்ரயோஜனப்படுகிறது.

இந்த கண் பார்க்காமல் போனால், உலகம் இருந்தும் ப்ரயோஜனமில்லையே நமக்கு.

கண் தெரிவதற்கு காரணம்,  "ஆத்மஜோதி" உள்ளே இருப்பதால் தானே.

இப்படி இருக்கும் போது, ஆத்ம ஜோதியை விட பெரிய ஜோதி எது இருக்க முடியும்?

ஆத்ம ஜோதியை காட்டிலும் பெரிய ஜோதி கிடையாது.
அந்த மதிப்பு மிகுந்த ஆத்ம ஜோதி தானே "நாம்".
"நாம்" எத்தனை அருமை என்று அப்பொழுதுதானே புரியும்.

இந்த ஆத்ம ஜோதியின் அருமை புரிந்தவன், இந்த ஆத்மாவை எப்படி மதிப்போடு பார்த்து கொள்வான்.

இந்த உடம்பை காப்பாற்ற, அதற்கு உணவு கொடுக்க,  வாழ்நாள் முழுவதும் வேலை செய்து, யார் யாருக்கோ பணத்திற்காக அடிமையாகி போய், இந்த உடம்பை போஷிக்கும் நாம், ஆத்ம ஜோதியான நமக்கு ஆகாரம் போடாமல், நம்மை கவனிக்காமல் விட்டு விடுகிறோமே?
இது அநியாயம் அல்லவா?

உடம்பை கவனிப்பது போல, கொஞ்சம் ஆத்மாவையும் கவனிக்க வேண்டாமா?

ஜீவ ஆத்மாவான நமக்கு, இந்த உடல் கிடைக்க பகவான் அனுக்கிரகம் செய்ததே, பரமாத்மாவான தன்னை பூஜிப்பான், முக்திக்கு வழி செய்து கொள்வான் என்பதற்காக தானே.
கண் என்ற அவயவத்தால், ஸ்ரீ கிருஷ்ணனை தரிசித்து,
காலால் கோவிலுக்கும், திவ்ய க்ஷேத்ரங்களுக்கும் நடந்து,
வாயால் பகவானை பாடி, ராம ஜபம் செய்து,
கையால் பூஜை செய்து, பக்தி செய்து, இறுதியில்
இந்த ஜீவஆத்மாவை, அந்த பரமாத்மாவிடம் சேர்த்து கொள்வான் என்று தானே மனித உடம்பு கொடுக்கிறார் பகவான்.
நம் உடம்பில் உள்ள எந்த உறுப்புக்கும், சக்தியை கொடுப்பது உள்ளிருக்கும் ஆத்ம ஜோதி தானே.

கண் என்ற அவயவம், நேத்ர ஜோதியை, ஆத்ம ஜோதியின் துணையால் தானே பெறுகிறது.



ஆத்மாவோ, "சுயமே பிரகாசம்" உடையதாக உள்ளது.

இருட்டான இடத்தில் ஒருவனிடம், "நீ (ஆத்மா) இருக்கிறாயா?" என்று கேட்டாலும்,
"நான் இருக்கிறேன்" என்று தானே சொல்வான்.
"நான் இல்லை" என்று சொல்வானா? இல்லையே.

இருட்டில் இருந்தாலும், வெளியில் உலகில், தீபஜோதி இல்லாமல் போனாலும், தன் ஆத்மஜோதியாலேயே "நான் இருக்கிறேன்" என்று தெரிந்து கொண்டு விடுகிறானே.




இதை சற்று சிந்திக்கும் போது தான், நமக்கு, "ஆத்ம ஜோதி"யான நம் மகத்துவம் புரியும். நாம் அருமை என்றும் புரியும்.

"ஆத்ம ஜோதியான நாம்" உடம்பை விட்டு வெளியேறி விட்டால்,
மலை, ஆகாயம், கடல் போன்ற ஜடமான பொருட்களை போன்று தான், இந்த உடம்பும் என்று தெரிந்து விடுமே?

இத்தனை நாள் இந்த "உடம்பே" 'நான்'" என்று நினைத்த அறிவீனம் நமக்கு புரியுமே.

நான் தான் அந்த "ஆத்ம ஜோதி" என்று புரிந்து கொண்டவன், இந்த ஜடமான உடம்பு நமக்கு பரமாத்வால் ஏதோ ஒரு காரணத்துக்காக கொடுக்கப்பட்டு உள்ளது என்று உணர்கிறான்.
உடம்பை மட்டுமே போஷிக்காமல், ஆத்மாவையும் போஷிக்கிறான்.

இன்னொரு விளக்கு (ஜோதி) கொண்டு பார்க்க வேண்டிய அவசியமில்லாமல், தானே பிரகாசமாக இருப்பதால், ஆத்ம ஜோதியே சிறந்தது.

அந்த ஆத்ம ஜோதி "நீ தான்" என்று வேதம் நம் மதிப்பை நமக்கு காட்டுகிறது.

தீப ஒளியை கொண்டு, ஆத்ம ஜோதியை பார்க்க முடியாது.
சூரிய ஒளியை கொண்டும், ஆத்ம ஜோதியை பார்க்க முடியாது.
ஆனால்,
ஆத்ம ஜோதியால், அனைத்து ஜோதியையும் பார்க்க முடிகிறது.
ஆத்ம ஜோதியை விட உயர்ந்தது உலகில் உண்டா?

ஆத்மாவுக்கு தான் இருப்பது இருட்டில் இருந்தாலும் தெரிவதால், ஆத்மாவை "சுயம் பிரகாசம்" என்றும் சொல்கிறோம்.

இன்னொரு ஜோதி கொண்டுதான் அறிய முடியும் என்று இல்லாத படி, தானே பிரகாசமாக இருப்பதால், தானே ஞானத்துடன் இருப்பதால், ஆத்மாவுக்கு "ஞான ஸ்வரூபன்" என்றும் பெயர்.

ஞான ஸ்வரூபனான ஆத்மாவுக்கு தான் இருப்பது தெரிகிறது. 
ஜடமான பொருளுக்கு தான் இருப்பது தெரிவதில்லை.

உலகத்தில் உள்ள எல்லா ஜட வஸ்துக்களும், இந்த ஞான ஸ்வரூபமான 'ஆத்ம ஜோதியால்' மட்டுமே அறியப்படுகிறது.

அத்தனை பெரிய ஜடமான மலைக்கு, தனக்கு மேலே ஆகாயம் இருப்பது தெரியாது. "தான்" இருப்பதும் தெரியாது.
அத்தனை பெரிய ஜடமான ஆகாயத்திற்கு, அருகில் கடல், மலை இருப்பது தெரியாது. "தான்" இருப்பதும் தெரியாது.

இவையெல்லாம் பெரிய பெரிய பொருளாக இருந்தாலும், ஜடமாக இருப்பதால், "தான்" இருப்பது கூட தெரிவதில்லை.

ஆனால், உலகத்தில் உள்ள சிறிய பொருளிலிருந்து, பெரிய பெரிய மலைகள், கடல், ஆகாயம் வரை  இருப்பது, ஆத்மாவான "நமக்கு" தெரிகிறது.

'ஆத்மா'வான நமக்கோ இந்த உலகம் இருப்பதும் தெரிகிறது. "தான்" இருப்பதும் தெரிகிறதே!!  எத்தனை அற்புதமான படைப்பு நாம்! 

அப்பொழுது தான், ஆகாசத்தை விட, மலையை விட, கடலை விட, மிகவும் பெரியது, மதிக்கத்தக்கது "ஆத்மா" என்று புரியும்.

"உலகத்தில் உள்ள ஜட பொருட்களை எல்லாம் அறியக்கூடிய ஆத்மாவல்லவோ நீ.
மதிப்பு மிக்க ஆத்மாவாகிய நீ, ஜடமான இந்த உடம்பை போய் "நான், நான்" என்று நினைக்கிறாயே?
ஆத்மாவுக்கு எவ்வளவு பெரிய அவமானம் இது?"
என்று கேட்கிறது வேதம்.

இந்த உடம்பு மாறிக்கொண்டே இருக்கிறதே. ஒரு நாள் சுருங்கி, அழுகி, செத்து போய் விடுமே.
ஆத்மா (நீ) வெளியேறிய பின்,
இந்த உடம்பு தானாக அழுகி விடுமே?
புதைத்தால் மண்ணோடு மண்ணாகி விடுமே?
எரித்தால் சாம்பலாகி விடுமே?.
அப்படியே விட்டு விட்டால், பறவைகள் கொத்தி தின்று விடுமே?
இந்த உடம்பை போய் "நான் நான்" என்று நினைப்பது, எத்தனை முட்டாள் தனம்?

கொஞ்சம் விவேக புத்தியால் உணர்ந்து, தான் அந்த "ஆத்ம ஜோதி" என்று எப்பொழுதும் அனுசந்தானம் (நினைத்து) செய்ய வேண்டும்.

இந்த உடம்பு தான் அல்ல, தான் உள்ளிருக்கும் "ஆத்ம ஜோதி" என்று உணர்ந்தவன் எப்படி இருப்பான்?

அந்த ஆத்ம ஜோதி தான் "நான்" என்று புரிந்து கொண்டு விட்டால்,
ஒரு பிடி சர்க்கரையை வாயில் போட்டால், "சுவைக்கிறதே" என்றா தோன்றும்?. பைத்தியக்காரா! அதே சக்கரையை செத்தவன் நாக்கில் போட்டால், சுவைக்குமா?

இது நாள் வரை நாக்கா சுவைத்தது?
சுவைக்கும் சக்தியை கொடுத்தது ஆத்ம ஜோதி அல்லவோ.

ஆத்ம ஜோதியான "நான்" உள்ளே இருப்பதால் தானே, நாக்குக்கு சுவை தெரிகிறது என்ற ஞானம் ஏற்படும்.
இந்த சுவை என்ற சுகம் நாக்கினால் ஏற்பட்டது. அவ்வளவு தானே என்று இருப்பான்.

ஒருவன் நீங்கள் ரொம்ப அறிவாளி சார், என்று புகழ்ந்தால், காதுக்கு இனிமையாக இருக்கிறது.
ஆனால், அந்த காதுக்கு கேட்கும் சக்தியை கொடுத்தது யார்?
ஆத்ம ஜோதியான உள்ளே இருப்பதால் தானே காதுக்கு கேட்கும் சக்தியை கிடைத்தது என்ற ஞானம் ஏற்படும்.

இந்த புகழ்ச்சி என்ற சுகம் காதினால் ஏற்பட்டது. அவ்வளவு தானே என்று இருப்பான்.
இதெல்லாம் அல்ப சுகம் என்று நிதானமாக இருப்பான்.

இந்த ஜட வஸ்துக்களான கண், காது, நாக்கு, மூக்கு, தோல் போன்றவற்றின் துணை கொண்டு ஆத்மா அனுபவிக்கும் சுகம் அல்ப சுகங்களே.

இவற்றின் துணை இல்லாமல், ஆத்ம ஜோதியான தன்னை மட்டுமே கொண்டு அனுபவிக்க தெரிந்தவன், "ஞான இன்பத்தை' அல்லவா அனுபவிக்கிறான் என்கிறார் நம்மாழ்வார்.

மகான்கள் இந்த உலகத்தில் பூத உடலை விட்டு சென்றாலும், ஆத்ம ஜோதியான அவர்கள் இருந்து கொண்டே இருக்கின்றனர். அருள் செய்து கொண்டே இருக்கின்றனர்.
காஞ்சி பெரியவர், சாய் பாபா போன்ற மகான்கள் இன்றும் ஜீவிக்கின்றனர். ஞான இன்பத்தை அனுபவித்து கொண்டு இருக்கின்றனர்.

'அதனில் பெரிய சுடர் ஞானஇன்பமே ஓ' - என்று  திருவாய்மொழியில் (நம்மாழ்வார்) பாடுகிறார்.

இந்த ஜட வஸ்துக்களை கொண்டு, ஆத்ம ஜோதியான நீ அனுபவிக்கும் அனைத்து சுகங்களும், "அல்ப இன்பத்தை" தானே தரும்.
ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, அதன் மேல் ஐந்து ஓட்டை உள்ள ஒரு மூடியை வைத்து மூடி விட்டால், அந்த தீபத்தின் வெளிச்சம் சுதந்திரமாக எங்கும் பிரகாசிக்க முடியாமல், எப்படி வெளிச்சத்தை அந்த ஐந்து ஓட்டைகள் வழியோடு மட்டும் காட்டி, சிறை படுமோ,
அது போல,
ஆத்ம ஜோதியான நீ, ஆனந்தத்தை சுதந்திரமாக அனுபவித்த நீ, இந்த உடம்பு என்ற சிறையில், கண் காது மூக்கு நாக்கு தோல் என்ற ஐந்து ஓட்டைகள் வழியாக மட்டும் சுகத்தை அனுபவித்து, கைதியாக இருக்கிறாய்.



இதிலும், 'தான்' சிறையில் உள்ள ஆத்ம ஜோதி என்பதை அறியாமல், ஐந்து ஜன்னல் உடைய சிறைச்சாலையான இந்த உடம்பையே தான் என்று நினைத்து அஞானத்தில் மூழ்குகிறாய்.

நீ அனுபவித்த எல்லையில்லா இன்பத்தை தடுத்து, இந்த ஐந்து ஜன்னல் வழியாக மட்டும் சுகத்தையே பேரின்பமாக நினைக்காமல், இந்த ஜட வஸ்துக்களான கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இல்லாமல் சுகத்தை அனுபவிக்க தெரிந்தவன் எல்லையில்லா ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.

கண் என்ற வஸ்துவை கொண்டு தான் பார்க்க முடியுமானால், கண் என்ற ஜன்னல் கொடுக்கும் அளவு தான், ஆத்ம ஜோதி உனக்கு இன்பம் கிடைக்கிறது.

காது என்ற வஸ்துவை கொண்டு தான் கேட்க முடியுமானால், காது என்ற ஜன்னல் கொடுக்கும் அளவு தான், ஆத்ம ஜோதி உனக்கு இன்பம் கிடைக்கிறது.

இந்த உடம்பு என்ற சட்டையை கழற்றினோம் என்றால், அற்பமாக கிடைத்த சுகங்கள் போய், அகண்டமான எல்லையில்லா சுகம் இந்த ஆத்மாவுக்கு கிடைக்கிறது.

இந்த ஐந்து புலன்கள் வழியாகவே கிடைக்கும் இன்பத்தை கொண்டு எத்தனை ஜென்மங்கள் உழல்வேன்? என்கிறார் ஆழ்வார்.
எப்பொழுது இந்த உடலை விட்டு பிரிந்து, எல்லையில்லா ஆனந்தத்தை பெறுவேன் என்கிறார்.

சுதந்திரமான ஆத்மா பேரின்பத்தை அனுபவிக்க ஆசையில்லாமல், இந்த உடம்பினால் அனுபவித்த சிற்றின்பத்தை ஆசைப்பட்டால், சிற்றின்பமே கிடைக்கும்.

உடலை நினைத்தே உயிரை விடுபவன் முக்தி அடைவதில்லை. மீண்டும் மீண்டும் பிறக்கிறான்.

வைகுண்டம் நம்முடைய சொத்து. அங்கு அனுபவித்த பேரின்பமும் நம்முடையது, என்று இருக்க, "வைகுண்டமும் வேண்டாம், பேரின்பமும் வேண்டாம்" என்று இருக்கலாமா?
உலக ஆசையை தள்ளி, பேரின்பத்தை நாடி, வைகுண்டம் அடைவது மண்ணவற்கு விதியே என்று சொல்கிறார் நம்மாழ்வார்.

எப்பொழுது வரை நாம் அழியக்கூடிய பொருளை விரும்புகிறோமோ, அதுவரை, பிறப்பு வந்து கொண்டே இருக்கும்.
அழியக்கூடிய பொருளை விரும்பினால், அழியக்கூடிய பொருளே கிடைக்கும்.

எந்த ஜென்மத்தில் நமக்கு அழிவில்லாத இந்த ஆத்ம ஜோதியே 'நான்' என்ற தெளிவு பிறக்கிறதோ, நான் அடைய வேண்டியது அந்த பரமாத்வான நாராயணனை மட்டுமே என்று அறிந்து கொள்கிறானோ, அதுவே அவனது கடைசி பிறவி ஆகிறது. அந்த ஆத்மா முக்தி அடைந்து விடுகிறான்.

அழியக்கூடிய எதை ஆசைப்பட்டாலும் அதில் கிடைக்கும் இன்பமும் அழியக்கூடியதாகவே உள்ளது.
அதனால் தான்,
நமக்கு சுகம் என்று வந்தால், அதை தொடர்ந்து துக்கம் வருகிறது.
ஆரோக்யமாக இருக்கிறோம் என்று நினைத்தால், ஒரு நாள் நோய் வருகிறது.
லாபம் என்றால், நஷ்டம் வருகிறது.

உலகம் சுகமாக இருக்கிறது என்று நினைக்கிறான் உடம்பே "நான்" என்று நினைக்கும் அஞானி.
ஆனால் உலகம் உண்மையில் பயங்கரமாக இருக்கிறது.
கல்யாணம், விசேஷம், குழந்தையின் மழலை பேச்சு, அருமையான இசை, நிலா, சுமங்கலியான பெண்கள், பசு மாடு, வசதியான வாழ்க்கை
இவை அனைத்தையும் பார்க்கும் போது உலகம் சுகமாக இருக்கிறதே என்று தோன்ற செய்தாலும்,
கொஞ்சம் விவேகத்துடன் பார்த்தால்,

  • குழந்தையாக இருக்கும் போதே மரணம்,
  • கல்யாணம் ஆகி சில வருடத்தில் கணவன் மரணம், விதவையாகும் பெண்,
  • பெற்றவள் இருக்க, மகன் இறந்து விடுகிறான்,
  • மனைவி இறந்து, கணவன் அழுகிறான்,
  • அதை விட சோகம், குழந்தை, மனைவியை விட்டு விட்டு, கணவன் இறந்து விடுகிறான்.
  • இளமையான பையன் திடீரென்று இறந்து விடுகிறான்,
  • தாங்க முடியாத வியாதிகள்.

இவையெல்லாம் உலகத்தில் நாம் அனைவரும் பார்க்கிறோமே.

அல்ப காலம் வாழ கிடைத்த இந்த உடம்பை வைத்துக்கொண்டு, கொஞ்சம் விவேகமுள்ள எவன் தான் இந்த உலகம் சுகமானது என்று சொல்லி இங்கு வாழ ஆசைப்படுவான்?

இந்த துக்கமான உலகத்தில் இருந்து எனக்கு விமோசனம் கிடைக்காதா? என்று தானே நினைப்பான்.
உலக துக்கம் தாளாமல், தற்கொலை செய்து கொண்டு விடுவோம் என்று கூட சிலர் துணிந்து விடுகிறார்களே. 

தற்கொலை செய்து கொண்டாலும், மீண்டும் பிறக்க வேண்டுமே! 
அழிவில்லாத சுகம் இந்த உலகத்தில் பார்க்க முடியவில்லையே..

நோய்களும், துன்பங்களும் துரத்தும் இந்த உலகத்தில், இருந்து விடுபட, இந்த ஆதம் ஜோதி "நான்" என்று அறிந்து, பக்தி செய்து மோக்ஷம் போவதை தவிர நமக்கு வழி இல்லையே..
இதனால் தான், ஆழ்வார் "வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே" என்று சொல்கிறார்.

இந்த உலக துன்பத்தில் இருந்து தப்பிக்க, ஆத்ம ஜோதியான நாம் வைகுண்டம் அடைய முயற்சிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதால், மண்ணில் பிறந்த அனைவரும், 
"வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே" என்கிறார் நம்மாழ்வார்

திருவாய்மொழியில் நம்மாழ்வார் பாசுரம்.
"வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர் வகுந்தம் புகுவது மண்ணவர் விதியே"
என்று சொல்கிறார்.

உலக துன்பத்தில் இருந்து தப்பிக்க, வைகுண்டம் போகவேண்டியது தவிர வேறு வழியில்லை என்பதால், வைகுண்டம் புகுவது நம் விதியே என்று ஆழ்வார் சொல்வதற்கு காரணம் இது தான்.

உலகம் துன்பத்தால் சூழ்ந்து  இருப்பது புரியாதவரை "வைகுண்டம்" என்ற சொல் கூட புரியாமல் தான் இருக்கும். ஏளனமாக கூட இருக்கும்.

பணம் இருக்கும் போதும், இளமை இருக்கும் போதும், புதிதாக கல்யாணம் ஆகி இருக்கும் போதும், அகம்பாவம் (கர்வம்) மறைக்கும் போது, "வைகுண்டம்" ஏளனமாக கூட இருக்கும்.
ஆனால், விவேகமுள்ளவன், எந்த நிலையிலும் "இது எவ்வளவு நாளுக்கு?" என்று கேட்டுக்கொள்ளும் போது,
பின் வரக்கூடிய முதுமை, மரணம் போன்றவற்றை அறிந்து, அகம்பாவம் இல்லாமல், பக்தி செய்து வைகுண்டம் அடைய முயற்சி செய்வான்.

இன்றைய விஞ்ஞான உலகத்தில், இந்த சுகத்தை நிரந்தரமாக செய்ய பெரும் முயற்சி செய்கிறார்கள்.
தானே விசிறி கொள்ளாமல் இருக்க, ac, fan செய்துள்ளனர்.
காலால் நடப்பதற்கு பதில் bus, train, flight செய்துள்ளனர்.
உடல் ஆரோக்கியமாக இருக்க ஏதேதோ  மருந்து தயாரிக்கின்றனர்.

நூறு வயது ஆனாலும், இளமை ஆரோகிக்கியம் குறையாத மருந்து தயாரிக்க வேண்டியது தானே?
சாகாமல் இருக்க, மருந்து தயாரிக்க வேண்டியது தானே?. இன்று வரை முடியவில்லையே.



இன்றைய விஞ்ஞானம் எப்படியாவது உலகத்தில் அழியா சுகம் கிடைக்க வைக்க முயற்சி செய்கிறது.

முதுமையும், மரணமும் நிச்சயமாக உள்ள இந்த உலகில், எந்த முயற்சியும் எடுபடாது என்பதை உணர்ந்த நம் ரிஷிகள், இவர்கள் முயற்சிகளை பெரிதாக எடுத்து கொள்ளவும் இல்லை. நம்பவும் இல்லை.

இந்த வசதிகள் புராணத்திலும் இருந்ததே. புஷ்பக விமானம் என்று flight ராமாயண காலத்திலேயே சொல்லப்பட்டு உள்ளதே. காலால் நடக்காமல் இருக்க தேர் இருந்தது.
இதையெல்லாம் நம் ரிஷிகள் பெரிய விஷயமாக கருதவில்லையே.
இந்த வெளி சுகங்களை நம்பவில்லையே நம் ரிஷிகள்.
தாற்காலிகமாக உள்ள இந்த சுகங்களை நம் ரிஷிகள் நம்பவில்லையே.

எத்தனை பெருமையாக வாழ்ந்தாலும், சுகமாக வாழ்ந்தாலும், "தாற்காலிகம்" தானே.

இறந்த பின், எவனாக இருந்தாலும் மண்ணோடு மண்ணாகவோ, பொசுங்கியோ போக வேண்டியது தானே இந்த சரீரம்.

"பஸ்மாந்தகம் சரீரம்" என்ற ஒரு சொல்லில் வேதம் உண்மையை சொல்லி விடுகிறதே.

கோடீஸ்வரனானாலும், இறந்து விட்டால், தங்கத்தாலா பாடை கட்டுவார்கள்?

இந்த சரீரம் ஒரு நாள் சாம்பலாகி விடும் என்று வேதம் சொல்லும் போது, இந்த உலகத்தின் தாற்காலிகத்தை தானே அது நமக்கு சொல்கிறது.

ஆழ்வார்கள் பாசுரத்தில் பல இடங்களில் இந்த உலகத்தில் உள்ள துன்பங்களை, மரணத்தின் போது ஏற்படும் துன்பங்களை எடுத்து எடுத்து நமக்கு காட்டுகின்றனரே, எதற்காக?
"தற்காலிகமான வாழ்க்கையை நம்பாதே" என்பதற்காக தானே.

"ப்ரம்ம லோகம் வரை அழிய கூடியது என்று இருக்கும் போது,50-100 வயது வரை வாழும் அல்ப வாழ்க்கையை நம்பாதே.
அகம்பாவம் அகற்றி, வைகுண்டம் அடைய நாராயணனை சரணம் செய்"
என்று ஆழ்வார்கள் வழி காட்டுகின்றனரே.

சொர்கலோகம் சென்றாலும் உலகத்திற்கு திரும்ப வேண்டும்.

பிரம்மாவின் இரவு பொழுதில்,
நைமித்திய பிரளயம் ஏற்பட்டு, சொர்கலோகம் ஆரம்பித்து, பூலோகம், பாதாளம் வரை அழிந்து விடும்.
மீண்டும் அவருடைய பகலில்
ப்ரம்மா மூன்று லோகங்களை மீண்டும் ஸ்ருஷ்டி செய்கிறார்.

பிரம்மாவின் ஆயுசு முடியும் பொழுது,
பரமபத நாதனான நாராயணனால் மகா பிரளயம் ஏற்பட்டு,
சொர்கலோகத்துக்கு மேல் உள்ள மகர (நக்ஷத்திர) லோகம், ஜன லோகம்,தப லோகம், சத்ய லோகம் என்ற ப்ரம்ம லோகம் உட்பட  பூலோகம், பாதாளம் வரை சேர்த்து 14 லோகங்களும் அழிந்து விடுகிறது.
பஞ்ச பூதங்களான ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்று எதுவுமே இல்லாது போகும்.
அந்த நிலையிலும், அழியாமல் இருப்பது நம்முடைய ஆத்ம ஜோதியும்,
வைகுண்டமும் தான். 
வைகுண்டத்தில் நாராயணன் யோக நித்திரையில் இந்த ஜீவ ஆத்மாக்கள் அனைவரையும் தன் இதயத்தில் வைத்து, 14 உலகங்களை தன் திரு வயிற்றில் வைத்து இருந்து, மீண்டும் தன் சங்கல்பத்தால் 14 லோகங்களை ஸ்ருஷ்டி செய்து, பிரம்மாவை நியமித்து, மோக்ஷம் அடையாத ஜீவ ஆத்மாக்கள் மீண்டும் பிறக்க வைக்கிறார்.

இந்த பிரளய காலத்தில், பரமாத்மாவாவின் இதயத்தில் இருந்து பேரின்பத்தை எங்கு இருந்து அனுபவித்தோம் என்று தெரியாமல் அனுபவித்த நாம், உலகத்தில் பிறந்தாலும் ஆனந்தத்தை தேடிக்கொண்டே இருக்கிறோம்.

அறியாமல் பேரின்பத்தை அனுபவித்ததால், உலகில் கிடைக்கும் சிற்றின்பத்தை எல்லாம் அடைய முயற்சி செய்து, துன்பத்தை அடைகிறோம்.

ஸத் என்ற அழிவில்லாத வைகுண்டம் அடைவதை தவிர, பரமாத்மாவை அடைவதை தவிர, ஆத்ம ஜோதியான நமக்கு, உலக துன்பங்களில் இருந்து விடு பட வேறு வழியில்லை.

நாம் இந்த உடம்பு அல்ல, "ஆத்ம ஜோதி"யே நாம் என்று அறிவோம்.
நாராயணனிடம் பக்தி செய்து, வைகுண்டம் அடைய ஆசை படுவோம்.