Followers

Search Here...

Showing posts with label srimushnam. Show all posts
Showing posts with label srimushnam. Show all posts

Thursday 30 January 2020

ஸ்ரீ முஷ்ணம் - வராஹ பெருமாள்.. தண்டகாரண்யம் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது? ஸ்ரீமுஷ்ணம் வராக பெருமாள் அவதாரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா ஹிந்துக்கள்....

 




க்ஷீராப்தியில் ஸ்ரீமந்நாராயணனுக்கு வாயில் காப்பாளர்களான இருக்கும் ஜெய விஜயர்கள்,
சனகாதி முனிவர்களின் சாபத்தால், பூலோகத்தில் அவதரித்தார்கள்.
முதல் பிறவியில், ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷனாக பிறந்தார்கள்.

பெருமாள், வராஹ மூர்த்தியாக அவதாரம் செய்து, ஹிரண்யாக்ஷனை சம்ஹாரம் செய்தார்.

இந்த ஹிரண்யாக்ஷனுக்கு "ஜில்லிகா" என்று ஒரு பெண் இருந்தாள்.

"ஜில்லிகா" என்றால் 'குளவி' என்று தமிழில் அர்த்தம்.
குளவி போன்று யாரை கண்டாலும் கொட்டும் குணம் கொண்டவள்.
அசுர பெண்ணான இவளும், உணவு உண்ணாமல், பல காலங்கள் ப்ரம்ம தேவனை நோக்கி தவம் செய்தாள்.

அசுரர்கள், தேவர்கள், மனிதர்கள், ரிஷிகள் அனைவரையும் படைத்தவர் 'ப்ரம்மா'.
வேதம் இவரை நமக்கு 'தாத்தா' (பிதாமகர்) என்று உறவுமுறை சொல்லி  அழைக்கிறது.

ப்ரம்மாவை படைத்தவர் 'நாராயணன்'.
ஆதலால் பெருமாளை நமக்கு  "கொள்ளு தாத்தா" (ப்ரபிதாமகர்) என்று சொந்தம் காட்டி அழைக்கிறது..

நாராயணன், பொதுவாக 'நாம் கேட்பதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு தந்து விடுவதில்லை'.
'இந்த வரத்தால், கேட்பவனுக்கு நலமா? உலகுக்கு நன்மையா?' என்று பார்த்து தான் கொடுப்பார்.

பெருமாள், "நமக்கு எது நன்மையோ, அதை மட்டுமே தருவார், தீயதை கேட்டாலும் தரமாட்டார்" என்பதையே ஆண்டாளும்
"ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்"
என்று திருப்பாவையில் பாடுகிறாள் என்று கவனிக்கிறோம்.

இதனாலேயே, துர்குணம் கொண்டவர்கள், தாங்கள் செய்த கர்மாவுக்கு கண்ணை மூடிக்கொண்டு பலன் தரும் பிரம்மாவை, சிவபெருமானை, தேவர்களையே தேர்ந்தெடுத்தனர்.
'கர்மாவுக்கு பலன் கொடுக்கிறோம்' என்று கண்ணை மூடிக்கொண்டு இவர்கள் வரம் கொடுத்து விடுவதால்,
பல சமயங்களில் உலகமே கஷ்டப்பட்டது. 
அதுமட்டுமில்லாமல்,
'பஸ்மாசுரன் போன்றவர்களுக்கு வரம் கொடுத்து விட்டு, சிவபெருமானே திண்டாடினார்' என்றும் பார்க்கிறோம்.

இவர்கள் கொடுக்கும் இந்த வரங்களால், உலகம் கஷ்டப்படும் போது, நல்லவர்கள் துன்பப்படும் போது, ஒவ்வொரு முறையும் பெருமாள் வந்து காப்பாற்ற வேண்டியதாகி விடும்.
ஹிரண்யாக்ஷனின் மகளான 'ஜில்லிகா' கடுமையான தவம் செய்து கொண்டிருக்க, அவள் தவத்திற்கு கட்டுப்பட்டு, ப்ரம்ம தேவன் ப்ரத்யக்ஷமானார்...

அவளிடம் "என்ன வரம் வேண்டும்?" என்று ப்ரம்ம தேவன் கேட்க,
அவள், "உலகத்தில் உள்ள அனைத்து ப்ராம்மணர்களையும் ஒழிக்கும் படியாக ஒரு புத்ரன் எனக்கு வேண்டும்"
என்று கேட்டு விட்டாள்.

"பெருமாள் பார்த்து கொள்வார்" என்ற தைரியத்தில், வழக்கம் போல, ப்ரம்ம தேவன் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி மறைந்து விட்டார்.

அவளுக்கு "தண்டகன்" என்ற மகா அரக்கன் பிறந்தான்.
இவன் காட்டு பிரதேசமாக இருந்த கோதாவரி முதல் காவிரி நதி வரை உள்ள வன பகுதியில் சஞ்சரித்து கொண்டு இருந்தான்.

கோதாவரி நதி மஹாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா வரை சென்று கடலில் சேருகிறது.
காவிரி நதி கர்நாடக, தமிழ்நாடு சென்று கடலில் சேருகிறது.




கோதாவரி முதல் காவிரி வரை உள்ள வன பகுதிக்கு தான்,  "தண்டகாரண்யம்" என்று பெயர் ஏற்பட்டது.

தண்டகன் என்ற இந்த ராக்ஷசன் பயங்கரமாக சப்தம் செய்து கொண்டு, அங்கு தவத்தில் ஆழ்ந்து இருக்கும் முனிவர்களை அப்படியே நாவல் பழத்தை விழுங்குவது போல விழுங்கி, அதன் கொட்டையை துப்புவது போல, அவர்களின் எலும்பை துப்பி விடுவான்.
க்ருத யுகத்தில் ஆரம்பித்து, அடுத்த யுகமான த்ரேதா யுகம் வரை இந்த "தண்டகாரண்யம்" மனிதர்கள் வாழ முடியாத படி, நர மாமிசமாக விழுங்கி விடும் ராக்ஷஸர்கள் நடமாடும் பயங்கரமான வனமாக இருந்தது.

த்ரேதா யுகத்தில், ராமபிரான் 14 வருடம் வனவாசமாக வந்த போது, ராக்ஷசர்கள் நடமாடும் பயங்கரமான 'தண்டகாரண்யத்தில்' நுழைந்தார் என்று அறிகிறோம்.

ராக்ஷசர்கள் ஒழிக்கப்பட்டு, மனிதர்கள் வாழும் படியாக செய்தார் ராமபிரான்.

தண்டகனின் அட்டகாசத்தால் வேத ப்ராம்மணர்களான முனிவர்கள் பெரிதும் துக்கப்பட்டனர்.

இருந்தாலும் சில வேத ப்ராம்மணர்கள், இப்படியே போய் கொண்டிருந்தால், சந்தியா வந்தனம் செய்ய கூட ஆள் இல்லாமல் போய் விடுமே என்ற கவலையில்,
நித்யபுஷ்கரணி என்ற தாமரை தடாகத்தில் ஹிரண்யாக்ஷனை வதம் செய்த "வராஹ பெருமாளை" குறித்து தவம் செய்ய ஆரம்பித்தனர்.

இவர்கள் இப்படி சங்கல்பம் செய்து கொண்டு, ஒரு அரச மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு "வேத மந்திரங்களை" ஓத ஆரம்பிக்க, 'பெருமாளே தானும் ஒரு வேத ப்ராம்மணனாக வந்து' இவர்களுடன் வந்து அமர்ந்து கொண்டு விட்டார்.

வேத மந்திரங்கள் இந்த இடத்தில் ஒலிப்பதை கேட்டதும், மகா கோபம் கொண்ட தண்டகன், பெரிய சூலத்தை எடுத்துக்கொண்டு, கர்ஜனை செய்து கொண்டு, இவர்களை நோக்கி பாய்ந்து வர,
மரண பயத்தால், அங்கு இருந்த வேத ப்ராம்மணர்கள் அங்கும் இங்கும் ஓடி ஒளிய ஆரம்பித்தனர்.

கருநீல வண்ணத்துடன், தாமரை போன்ற கண்களையுடைய இந்த ஒரு ப்ராம்மணன் மட்டும், பிரசன்னமாக அங்கேயே உட்கார்ந்து இருந்தார்.

ஓடி வந்த தண்டகன், "கொஞ்சம் கூட பதட்டமோ, பயமோ இந்த ப்ராம்மணனிடம் இல்லையே!! மேலும் கோபம் கூட இல்லாமல், மிகவும் சாந்தமாக முக மலர்ச்சியுடன் இருக்கிறாரே!! இது எப்படி சாத்தியம்?" என்று இந்த ப்ராம்மணனை பார்த்து அதிசயித்தான்.
கொலை செய்து விழுங்குவதை காட்டிலும், முதலில் இதன் காரணத்தை அறிந்து கொள்ள ஆவல் உண்டாக, அந்த ப்ராம்மணன் அருகில் வந்து,
"ஒய் ப்ராம்மணரே !! என்னை கண்டு உமக்கு பயமில்லையா?..
இவ்வளவு பேரும் நான் வரப்போவதை கண்டு ஓடினார்கள் அல்லவா... நீ மட்டும் இங்கேயே உடகார்ந்து கொண்டு இருக்கிறாய்?!!
நான் யார் தெரியுமா?.. 
தண்டகன் என்று பெயர் எனக்கு.
உலகத்திலே ஒரு ப்ராம்மணன் கூட இருக்க கூடாது என்ற சங்கல்பத்துடன் பிறந்தவன் நான்." 
என்று சொல்ல,

பிராம்மணனாக வந்த பெருமாள் அவனிடம் பேசலானார்.
"இப்பொழுது ஓடி ஒளிந்த ப்ராம்மணர்கள் எல்லோரும் தரித்திர ப்ராம்மணர்கள். ஒன்றும் இல்லாதவர்கள்.
அதனால் உன்னை கண்டு பயந்து விட்டார்கள்.

நான் சீமானாகிய ப்ராம்மணன். நான் ஸ்ரீமான், செல்வ செழிப்பு மிக்கவன் என்பதால் தைரியமாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன்" 
என்று பதில் சொன்னார்.

இப்படி ஒரு பதிலை கேட்டதும், தண்டகன் தனக்குள்ளேயே ஆலோசித்தான்...
"இவர் என்ன இப்படி சொல்கிறார்.
யார் ஸ்ரீமானோ அவனுக்கு தானே பயம் ஏற்படும்!!
ஏழை ப்ராம்மணன் யாருக்குமே பயப்பட வேண்டிய அவசியம் இல்லையே!! ஒன்றுமே இல்லாதவனிடம் அடித்து பிடுங்கினாலும் அவனிடம் ஒன்றுமே இருக்காதே!!
இவர் ஸ்ரீமான் என்றால், இவர் தானே என்னை பார்த்து நியாயமாக பயப்பட்டு இருக்க வேண்டும். 
பார்ப்பதற்கும் இவர் பெரிய பணக்காரன் போல தான் இருக்கிறார். பெரும் பொழிவுடன் தான் இருக்கிறார்."
என்று நினைத்து கொண்டே, அந்த ப்ராம்மணனை பார்த்து,
"உன்னை பார்த்தால் சீமானை போல தான் இருக்கிறாய். அப்படி என்ன பெரும் சொத்து உன்னிடம் இருக்கிறது என்று சொல்"
என்று கேட்க, ப்ராம்மணனாக இருக்கும் பெருமாள்,
"ப்ராம்மணனிடம் என்ன சொத்து இருக்கிறது என்று கேட்கிறாயே...
இதை கேட்கவும் வேண்டுமா?...
வேதம் தான் ப்ராம்மணனின் சொத்து.
வேதம் அறியாததாலேயே இவர்களை தரித்திர ப்ராம்மணன் என்று சொன்னேன்.
வேதம் என்ற முழுமையான சொத்து இவர்களிடம் இல்லாததாலேயே இவர்கள் உன்னை கண்டு ஓடுகிறார்கள்.
மேலும், 
இந்த சொத்தை மட்டும், நீ என் அனுமதி இல்லாமல் திருடவே முடியாது..







வேதம் என்ற சொத்து என் வாக்கிலேயே இருப்பதால், நாங்கள் எங்கு சென்றாலும் வாழ இயலும். 'வித்வான் சர்வத்ர பூஜ்யதே'"
என்று சொல்ல,
தண்டகன், "அப்படியென்றால் வேதம் என்ற சொத்தை (ஸ்ரீ), நான் உன்னிடமிருந்து கைப்பற்றி (முஷ்ணா) விடுகிறேன்.
உம்முடைய பொலிவுக்கு காரணம் இந்த வேதம் தான் காரணம் என்று அறிகிறேன்"
என்று மிரட்ட,
"அது உன்னால் ஆகாது.. 
ப்ராம்மணர்கள் ஒதும் வேதத்தை மத்ஸ்ய ரூபத்தில் விஷ்ணுவே காத்து கொண்டு இருக்கிறார்." என்று இவர் சொல்ல,
"அந்த விஷ்ணுவின் இதயத்தில் வேதம் ஒளிந்து இருந்தாலும் அதை நான் கைப்பற்றி விடுவேன்"
என்று தண்டகன் சொல்லி,
'ப்ராம்மணர்களை வேதத்தை விட்டு விட செய்தாலேயே, ப்ராம்மணன் ஒழிந்து விடுவான்' என்பதால், 'அந்த வேதத்தை அழிக்க வேண்டும்' என்று தீர்மானித்து கொண்டான்.

"ப்ராம்மணர்கள் வேத படிக்க கூடாது...
வேதம் என்று இருப்பதே ப்ராம்மணனுக்கு மறந்து போக வேண்டும்"
என்றே சங்கல்பித்து கொண்டு, அதற்காக கடுமையான தவம் செய்ய ஆரம்பித்தான் தண்டகன்.

இவன் செய்த கோரமான தவத்தின் பலனால், ப்ராம்மணனுக்கு வேதம் கற்று கொள்ளும் ஆர்வம் குறைந்தது.
உண்மையான வேத ப்ராம்மணர்களை கண்ணால் காண்பதே அரிதாகி போனது.
"தரித்திர ப்ராம்மணனாகி" போன இவர்கள்,
தன் தகப்பனுக்கு சொல்ல வேண்டிய தர்ப்பண மந்திரமும் கூட தெரியாமல்,
அமாவாசை தர்ப்பண மந்திரமும் தெரியாமல்,
காயத்ரி மந்திரமும் ஜபம் செய்யாமல்,
சந்தியா வந்தனம் கூட தெரியாது என்ற நிலைக்கு சென்று விட்டனர்.

இப்படி வேதத்தை விட்ட இவர்கள், நாதீகர்களாகவும், மிலேச்சனாகவும், வேதத்துக்கு எதிரான பாஷண்டிகளாக ஆகி நிற்க,
"தான் செய்த தவம் பலித்ததே!! ப்ராம்மணன் ஒழிந்தானே!! "
என்று பெரும் ஆனந்தம் அடைந்தான் தண்டகன்.
தனக்கே சபாஷ் போட்டுக்கொண்டான்.

இன்றைய தேதியில், ப்ராம்மணர்கள்,
"இங்கிலீஷ் படிப்பு, ஜெர்மன், பிரெஞ்ச் மொழி கூட படிப்பேன், ஆனால் தப்பித்தவறி கூட வேதத்தை படிக்க மாட்டேன்"
என்று தரித்திர ப்ராம்மணர்களாக ஆகி, யார் யாருக்கோ கால் பிடித்து கொண்டுள்ளனர்.
வேதத்தை படிக்க ஒரு ப்ராம்மணன் தயாரில்லை.
இந்த கலியில், தண்டகன் போல யார் தவம் செய்தார்களோ!!
என்று தோன்றுகிறது.

தண்டகன்
"சபாஷ்... அக்ரஹாரம் ஒன்று கூட இல்லாமல் அடியோடு ஒழித்து விட்டேன்...
வைதீக ப்ராம்மணன் எல்லோரும் ஒழிந்தார்கள்..
ப்ராம்மணன் எல்லோரும் லௌகீக ப்ராம்மணனாக ஆகி, வேதத்தை விட்டு விட்டான்.
வேதம் ஒழிந்தது..
இனி இந்த நாராயணன் என்ன செய்து விடுவான்? என்று பார்க்கிறேன்"
என்று பூரித்து போனான்.
பொறுக்க முடியாத இந்திரன், "வேத மந்திரங்கள் சொல்லும் ப்ராம்மணர்கள் இல்லாமல் செய்து விட்டானே!!" என்று தன் வஜ்ராயுதத்தை எடுத்து கொண்டு இவன் மேல் வீச, இந்திரனை அடக்கி, அவர்  சக்தியையை கைப்பற்றி (முஷ்ணம்) விட்டான் தண்டகன்.

இப்படியே யமன், வாயு, அக்னி என்று தேவர்கள் அனைவரும் ஒவ்வொன்றாக இவனை ஒழிக்க வர, அனைவரையும் ஒடுக்கி, அவர்கள் சக்தியை அபகரித்து, அனைவரையும் தோற்கடித்து விட்டான் தண்டகன்.

பூதேவர்களான ப்ராம்மணனும் ஒழிந்தார்கள், 
சொர்க்க லோகத்தில் உள்ள தேவர்களும் ஒழிந்தார்கள் 
என்றதும் பெரும் வெற்றி பெற்றான் தண்டகன்.

இந்த நிலையில்,
வேதம் மறைந்ததால், எங்குமே யாகங்கள் நடப்பது நின்று போனது.. கோவிலில் பூஜைகள் நின்று போனது..
இந்திரன், வாயு, அக்னி போன்ற தெய்வ வழிபாடுகள் நின்று போனதால்,
இவர்களுக்கு கட்டுப்பட்டு இருந்த பஞ்ச பூதங்கள் தாறுமாறாக போக ஆரம்பிக்க,
ஒரு இடத்தில் மழையே இல்லாமல் பெரும் வறட்சி உண்டானது..
நதிகள் வறண்டு போனது..
ஒரு இடத்தில் கடுமையான வெயில் ஏற்பட்டு, வாழ முடியாத நிலையில் உலகம் தவித்தது..
உலக ஜனங்கள் தரித்திர நிலைக்கு தள்ளப்பட்டனர்.. எங்கும் பஞ்சம் உண்டானது.
பஞ்சம் ஏற்பட்டதால், 
மாமிசம் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டு, ஒரு மனிதன் இன்னொரு மனிதனையே சாப்பிடும் அளவுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டு ..
உலகம் முழுவதுமே தாறுமாறாக போய் விட்டது




பஸ்மாசுரன், "சிவபெருமான் கொடுத்த வரத்தை கொண்டு, சிவபெருமானையே பஸ்பமாக்க நினைக்க, வஞ்சகனை வஞ்சகனாயாலேயே கொன்றார் பெருமாள்".
அது போல,
தண்டகன் செய்த இந்த காரியத்தை அவன் வழியிலேயே சென்று சரி செய்ய சங்கல்பித்தார்.

வராக பெருமாள், அதே பழைய பிராம்மண ரூபத்தை எடுத்துக்கொண்டு, தண்டகன் எதிரே வந்தார்.

"தண்டகா... தபசு செய்து வேதத்தையெல்லாம் அபகரித்து விட்டாயா?
சௌக்கியமாக இருக்கிறாயா?"
என்று பெருமாள் கேட்க,
தண்டகன்
"அனைத்து ப்ராம்மணனிடமிருந்தும் வேதத்தை அபகரித்து விட்டேன். உம்மிடத்தில் உள்ள வேதத்தை மட்டும் இன்னும் அபகரிக்க வில்லை."
என்றான்.
"ஏன்... என்னை மட்டும் விட்டுவிட்டாய்?" 
என்று பெருமாள் கேட்க,
"நீர் என் நண்பனாக ஆகிவிட்டீர்.. இதை சொல்லிக்கொடுத்ததே நீர் தானே.  அதனால் உம்மை மட்டும் விட்டு வைத்திருக்கிறேன் !
அனைத்து ப்ராம்மர்களின் வேதமும் இப்பொழுது என் கையில்.."
என்றான்.

"இந்த வேதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்து விடப்போகிறாய்?"
என்று பெருமாள் கேட்க,
"வேதம் யாரிடம் உள்ளதோ அவர்களிடம் பெரும் சொத்து உள்ளது அல்லவா.. நானே பெரும் ஸ்ரீமானாக ஆகி விட்டேன் !"
என்றான்.

"அட பைத்தியங்கக்காரா!!  உலகத்தில் உள்ள ப்ராம்மணர்களை இத்தனை எளிதாக ஒழித்து விட முடியுமா? 
உண்மையில் உன் சாமர்த்தியத்தால், இவர்களிடமிருந்து வேதத்தை கைப்பற்றவில்லை. இவர்கள் ஏற்கனவே தரித்திர பிராம்மணர்கள்.
இவர்கள் வேத மந்திரங்களை கூட தவறாக உச்சரித்து சொன்னவர்கள்.

உண்மையில், நீ தப்பான வேதத்தை கைப்பற்றி வைத்து கொண்டிருக்கிறாய்.
நீ இந்த வேதத்தை படித்தால், நீயும் ஒழிந்து போய் விடுவாய்."
என்று பெருமாள் பேச,
"அப்படியா.... ஆஹா.. எனக்கு தெரியாதே ஸ்வாமி !!"
என்று தண்டகன் பதற,
"கவலைப்படாதே... உன் வேதத்தை என்னிடம் கொடு. நான் அதை திருத்தி கொடுக்கிறேன்..." என்றார் பெருமாள்.
உடனே,
தண்டகன், அம்ருத கலசத்தை அசுரர்கள், மோகினியாக வந்த பெருமாளிடம் அப்படியே கொடுத்ததை போல, தான் அபகரித்த வேதத்தை பெருமாளிடம் கொடுத்து விட்டான்.

வேதத்தை வாங்கிக்கொண்ட பெருமாள், பட்டென்று மறைந்து விட்டார்.
வராஹ பெருமாளாக சுயமாக ஆவிர்பவித்து நின்றார்.
தண்டகன் வேதத்தை இழந்து நின்றான். 
மீண்டும் வேத ஒலி உலகெங்கும் ஒலிக்க ஆரம்பித்தது.

தண்டகனால் கைப்பற்ற பட்ட வேதம் என்ற சொத்தை (ஸ்ரீ), 
வராக பெருமாள் தானே சென்று கைப்பற்றியதால் (முஷ்ணம்),
இந்த திவ்ய தேசத்துக்கு "ஸ்ரீ முஷ்ணம்" என்ற பெயர் ஏற்பட்டது.
க்ருத யுகத்தில் நடந்த சம்பவம். தமிழகத்தில் நடந்த சம்பவம்.
இன்று, ஸ்ரீ முஷ்ணம் சென்றால், அதே வராஹ பெருமாளை, சுயமாக ஆவிர்பவித்த பெருமாளை, தரிசிக்கலாம்.

இந்த திவ்ய தேசத்தில், வராஹ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி கொடுக்கிறார்.
இந்த பெருமாளை சேவித்தால், நல்ல கல்வி ஞானம் உண்டாகும்.
மற்ற உலக பலன்களும் கிடைக்கும்.





'வராஹ அவதாரம்' பற்றி, 'சிவபெருமான் அவதாரம்' பற்றி தெரிந்து கொள்ள... இங்கே படிக்கவும்.


வாழ்க ஹிந்துக்கள்...
வாழ்க ஹிந்து தர்மம்...