Followers

Search Here...

Showing posts with label அழிந்தே. Show all posts
Showing posts with label அழிந்தே. Show all posts

Sunday 25 February 2018

'தவறு' என்று தெரிந்தும் செய்பவன் அழிந்தே தீருவான். பகவத் கீதை முதல் ஸ்லோகம், நமக்கு சொல்லும் அறிவுரை.. தெரிந்து கொள்வோமே...

பகவத் கீதை முதல் ஸ்லோகம்



மனிதர்களாகிய நாம், பல நேரம்,
'நாம் செய்யும் ஒழுக்க கேடான செயல்கள், தனக்கும், மற்றவர்களுக்கும் தீங்கு உண்டாக்கும் என்று தெரிந்தும்' செய்கிறோம்.

'இது கெட்ட பழக்கம் என்று தெரிந்தும்' செய்கிறோம்.

'பலர் இது தவறு என்று சொன்னாலும் கேட்டு விட்டு, மீண்டும் மீண்டும்' செய்கிறோம்.

'நம் உள்ளே இருக்கும் பரமாத்மா, உள்ளிருந்து நாம் செய்வது தவறு என்று சொன்னாலும் தெரிந்தே' செய்கிறோம்.

'நாம் செய்யும் இந்த தவறான செயலுக்கு சரியான அடி கிடைக்கும் என்று தெரிந்தாலும், ஒன்றும் ஆகாது என்ற குருட்டு நம்பிக்கையில்' செய்கிறோம்.

'செய்யும் தவறுக்கு, அடி வாங்கி கொண்டு இருக்கும் போது, இனியாவது விட்டு விடு என்று யாராவது சொன்னாலும், கேட்டு விட்டு, தொடர்ந்து' செய்கிறோம்.

'செய்த தீய செயலுக்கு பலர் எச்சரிக்கை செய்தும், தெய்வமே மனசாட்சியாக சொல்லியும் கூட, சிறிது அடி வாங்கும் பொழுதாவது செய்யும் தவறை திருத்தி கொள்ளாமல், மேலும் மேலும் செய்து,' தண்டனை பெறுகிறோம்.

இப்படிப்பட்ட ஒருவன் செய்த தவறு தான், 
மஹாபாரத போருக்கு வித்திட்டது. 40 லட்ச க்ஷத்ரிய வீரர்கள், 18 நாட்களில் அழிய காரணமானது.
த்ருதராஷ்டிரன் இத்தனை பேர் எச்சரித்தும், தனக்கே தவறு செய்கிறோம் என்று தெரிந்தும், தன் தவறை தொடர்ந்து செய்தான். 
தன் அழிவுக்கும், தன் குலம் அழியவும் வித்திட்டான்.

நாமும் த்ருதராஷ்டிரன் போல வாழாமல்,
'தவறு' என்று தெரிந்தவுடன் விபீஷணன் போல, எது தர்மமோ அந்த வழியில் சென்று நிற்க வேண்டும். 



'தவறு' என்று தெரிந்தும் செய்பவன் அழிந்தே தீருவான்.
இதுவே இந்த முதல் ஸ்லோகம் நமக்கு சொல்லும் அறிவுரை. மனதில் பதிய வைக்க வேண்டிய அறிவுரை.

மஹாபாரத போர் சுமார் 3150BC சமயத்தில், துவாபர யுக முடிவில் நடந்தது.

பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்ட வீரர்கள் மொத்தம் - 15 லட்சத்து, 30 ஆயிரத்து 900.

இதில் உயிர் பிழைத்தவர்கள்
பாண்டவர்கள் ஐவர்,
ஸ்ரீ கிருஷ்ணர்,
ஸ்ரீ கிருஷ்ணரின் படை தளபதி சாத்யகி,
த்ருதராஷ்டிரனுக்கு பிறந்த தாசி புத்ரன் 'யுயுத்சு' மட்டுமே.

கௌரவர்கள் பக்கம் நின்று போரிட்ட வீரர்கள் மொத்தம் - 24 லட்சத்து, 5 ஆயிரத்து 700.

இதில் உயிர் பிழைத்தவர்கள்,
அஸ்வத்தாமா, க்ருபர், க்ருதவர்மன்.

'அஸ்வத்தாமா' போர் முடிந்த பின்,
தூங்கி கொண்டிருந்த பாஞ்சாலியின் 5 புதல்வர்கள், த்ருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோரை இரவோடு இரவாக  கொன்று விட்டான்.
பாரத போரால் அனைத்து வீரர்களும் மடிந்தனர்.
18 நாட்களில் 40 லட்சம் மஹாவீரர்கள் மடிந்தனர்.

ஒவ்வொரு ஆணுக்கும் தாய், மனைவி, பெண்கள் என்று உறவு இருக்கும் என்று பார்க்கும் பொழுது, 40 லட்சம் ஆண்கள் இறந்ததால், குறைந்தது 1 கோடி பெண்கள், தங்கள் குடும்பத்தில் ஆண் வாரிசுகளை, ஆண் பாதுகாப்பை இழந்தனர்.

கிரேக்க நாட்டில் இருந்து ரஷ்யா வரை இருந்த, க்ஷத்ரிய அரசர்கள் அழிந்தனர். 

உலகத்தை ஒரு குடையின் கீழ் தர்மபுத்ரர் ஆண்டார். 
பின்னர் பரிக்ஷித், எதிரிகள் இல்லாத இந்த பெரும் அரசாட்சியை பெற்றான்.

போர் ஏற்பட்டால், பெண்கள் தனித்து விடப்பட்டு, ஆண் ஆதரவு இன்றி, தங்களையும், குழந்தைகளையும் பார்த்து கொள்ள முடியாமல் தற்கொலையோ, தவறான வழியையோ தேர்ந்தெடுக்க நேரிடுமே!! 
என்று அர்ஜுனன் போர் ஆரம்பத்தில் புலம்பினான்.
பகவத் கீதை உபதேசம் செய்து, ஞானத்தை கொடுத்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

போர் முடிந்து துவாரகை திரும்பும் பொழுது, மகரிஷி உத்தங்கரை வழியில் சந்தித்தார் ஸ்ரீ கிருஷ்ணன்.

மகரிஷி உத்தங்கர், கோபமாக ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து,
"நீங்கள் நினைத்து இருந்தால், இப்படி ஒரு பேரழிவு நடந்து இருக்காது. லட்சகணக்கான க்ஷத்ரியர்களின் உயிர் காப்பாற்ற பட்டு இருக்கும்.
ஒரு குடும்ப சண்டைக்காக, உலக க்ஷத்ரியர்கள் இப்படி சேர்ந்து கொண்டு உயிர் விட்டு விட்டார்களே!! "
என்றார்.

ஸ்ரீ கிருஷ்ணர், இவருக்கு ஞான உபதேசம் செய்து, தர்மத்தை விளக்கினார்.
வியாசர், விதுரர், சஞ்சயன் உபதேசம் செய்தும், 
இதற்கு மேல் தானே எச்சரிக்கை விடுத்தும், 
த்ருதராஷ்டிரன் போரை தன் மகன் துரியோதனனுக்காக நடக்க செய்தான். 
பேரழிவு நடக்க காரணமாக இருந்தான், என்பதையும் விளக்கினார்.



உதங்கர் உண்மை அறிந்து, ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கினார்.

போர் நடக்காமல் இருக்க, சமாதான தூதுவனாக சென்றும், ஸ்ரீ கிருஷ்ணரை சிறை பிடிக்க முயன்றான் துரியோதனன். 
போர் வேண்டாம் என்ற எண்ணம் துளியும் இல்லை கௌரவர்களுக்கு.

கௌரவர்கள் தந்தை 'த்ருதராஷ்டிரன்' தடுக்கவும் இல்லை.

போர் நடக்கும் முன்பே, த்ருதராஷ்டிரனுக்கு போர் வேண்டாம் என்று வியாசர் உபதேசம் செய்தார்.
பின்னர் விதுரர் த்ருதராஷ்டிரனுக்கு உபதேசம் செய்தார்.

பீஷ்மர் த்ருதராஷ்டிரனுக்கு உபதேசம் செய்தார்.

தூது வந்த ஸ்ரீ கிருஷ்ணர், த்ருதராஷ்டிரனுக்கு தானே உபதேசம் செய்தார்.
'தான் பகவான்' என்று விஸ்வரூபம் காட்டி, 'போர் வேண்டாம்' என்று முடிவு செய்வானா என்று பார்த்தார்.
'மாயாஜாலம்' என்றான் துரியோதனன்.

மேலும்,
"த்ருதராஷ்டிரா! 
ஒரு குடும்பம் தர்மத்தில் இருக்க, தர்மத்தை கெடுக்கும் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவனை, அந்த  குடும்பத்தை விட்டு விலக்க வேண்டும்.
ஒரு ஊர், ஒரு குடும்பத்தால் அதர்மத்தில் வீழும் என்றால், அந்த குடும்பத்தை அந்த ஊரை விட்டு விலக்கலாம்.
ஒரு நாட்டுக்கு நன்மை அமைய, ஒரு ஊரை அழிக்க வேண்டும் என்றாலும், நாட்டின் நன்மைக்காக செய்ய வேண்டும்.
இப்படி பலர் நன்மை அடைய, ஒரு சில தியாகம் செய்யலாம்.

உன் குடும்ப சண்டையால் ஏற்பட போகும் இந்த போரில், பல லட்சம் க்ஷத்ரியர்கள் அழிந்து விடுவார்கள்.
போரினால் அழிவு நிச்சயம். 
இந்த பேரழிவுக்கு நீ காரணமாகி விடாதே !.

இந்த போர் நடக்காமல் இருக்க ஒரு வழி சொல்கிறேன் கேள்.
உனக்கு ஒன்று இரண்டு புதல்வர்கள் இல்லை. 100 புதல்வர்கள்.
இந்த போரால், உன்னுடைய 100 புதல்வர்களையும் இழக்க நேரிடலாம். உன்னால் பல க்ஷத்ரிய அரசர்களும் உயிர் துறக்க நேரும்.

இந்த பேரழிவை தடுக்க, நீ 99 பிள்ளைகளை வைத்துக்கொள், ஒரே ஒரு மகனை மட்டும் தியாகம் செய்து விடு. துரியோதனன் ஒருவனை நாடு கடத்து. போர் நேராது"
என்றார்.
த்ருதராஷ்டிரன், "கிருஷ்ணா ! நீ மற்ற எந்த பிள்ளையையும் தியாகம் செய்ய சொல், செய்கிறேன். ஆனால், துரியோதனனை மட்டும் என்னால் தியாகம் செய்ய முடியாது"
என்றான்.



இப்படி ஸ்ரீ கிருஷ்ணர், தானே சமாதான தூது சென்று,
'தானமாக 5 கிராமங்கள் கேட்டும்' முடியாது என்று சொல்லி,
'தான் பகவான்' என்று விஸ்வரூபம் காட்டியும் 'மாயாஜாலம்' என்று நினைத்து,
'துரியோதனனை விலக்கு' என்று சொல்லியும் மறுத்து,
தன்னையே சிறை பிடிக்க முயற்சி செய்தான் துரியோதனன்.
இப்படி பல முயற்சி செய்தும், பாரத போர் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
போர் நடக்க போகும் சமயத்தில்,
த்ருதராஷ்டிரன் வ்யாசரிடம் தான் 'இந்த போரை பார்க்க அணுகிரஹம் செய்ய வேண்டும்' என்றான்.

போர் அழிவை தரும், வேண்டாம் என்று சொல்லியும் திருந்தாத த்ருதராஷ்டிரன், போரை பார்க்க ஆசைபட்ட பொழுது, 'இவன் இதை பார்த்தாலாவது ஏதாவது ஒரு சமயத்தில் போரை நிறுத்துவானோ' என்று நினைத்து,
"நீ குருக்ஷேத்ர இடத்துக்கு செல். 
அங்கு ஒரு இடத்தில் அமர்ந்தபடியே, 
ஒவ்வொரு வீரனும் என்ன செய்கிறார்கள்? 
யாருடன் சண்டை செய்கிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? 
என்று அனைத்தும் என் அணுகிரஹத்தால், ஞான த்ருஷ்டியில் அப்படியே தெரியும்" என்றார்.

இதற்கு த்ருதராஷ்டிரன் சொல்லும் பதிலை கவனித்தால் நமக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும்.
த்ருதராஷ்டிரன் சொல்கிறான்,
"எனக்கு ஞான திருஷ்டி வேண்டாம். 
இந்த போரில் என் 100 பிள்ளைகள் மடிவதை என்னால் பார்க்க முடியாது. நான் பார்க்க ஆசை படவில்லை. 
இருந்தாலும் என்ன நடக்கிறது? என்று தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன். வேறு உபாயம் சொல்லுங்கள்"
என்றான்.

அப்படியென்றால், தனக்கு சிஷ்யனாக உள்ள "சஞ்சயனுக்கு" இந்த ஞான திருஷ்டியை அளிக்கிறேன்.
"சஞ்சயன் தன் ஞான தருஷ்டியில் பார்த்து உனக்கு நடந்ததை சொல்வான்" என்றார் வியாசர்.
இதற்கு சம்மதித்தான் த்ருதராஷ்டிரன்.

போர் ஆரம்பம் ஆகியது.
சஞ்சயன் தானே குருக்ஷேத்ரம் சென்று பார்த்து வர சென்றான்.

அங்கு இருந்து கொண்டே, தன் ஞான தருஷ்டியில் என்ன நடக்கிறது என்று பார்த்தான்.
10 நாட்கள் போரை குருக்ஷேத்ரத்தில் இருந்து கொண்டே பார்த்தான்.
பத்தாவது நாள் (10th Day), 
யாராலும் தோற்கடிக்க முடியாத பீஷ்மர் வீழ்ந்தார். 
இந்த 10 நாள் யுத்தத்தில் பாதி படைகள் அழிந்து விட்டன.



பீஷ்மர் வீழ்ந்த பின், 'கௌரவர்கள் இனி ஜெயிக்க முடியாது' என்பது நிச்சயமானது.

இனியாவது, த்ருதராஷ்டிரன் தன் தவறை உணர்வானோ!! என்று எண்ணி, குருக்ஷேத்ரம் விட்டு, 11வது நாள், சஞ்சயன் த்ருதராஷ்டிரனை பார்க்க சென்றான்.

'பீஷ்மர் வீழ்ந்து விட்டார். இனி பாண்டவர்கள் ஜெயிப்பது நிச்சயம். இனியாவது போரை நிறுத்த சொல்வானா?'
என்ற நப்பாசையில் சஞ்சயனும் முயன்றான்.

இப்படி வியாசர், விதுரர், ஸ்ரீ கிருஷ்ணர், சஞ்சயன் சொல்லியும், 
'போர் நடந்தே ஆக வேண்டும்' என்று முடிவு கட்டி விட்ட கௌரவர்கள் மீதும், த்ருதராஷ்டிரன் மீதும் குறை இருக்க, தன் மீது கோபப்படுவது வீண்"
என்றார் ஸ்ரீ கிருஷ்ணர்.
உதங்கர் உண்மை அறிந்து சமாதானம் அடைந்தார்.
10 நாள் போருக்கு பின்னர் வந்திருக்கும் சஞ்சயன்,
என்ன சொல்ல போகிறானோ? 
நாம் ஜெயித்தோமா? இல்லை பாண்டவர்கள் ஜெயித்து விட்டார்களா? 
என்ற பதட்டத்தில்,
சஞ்சயனை பார்த்து த்ருதராஷ்டிரன் கேட்கும் முதல் கேள்வியே, "பகவத் கீதை"யின் முதல் ஸ்லோகமாக அமைத்தார் வியாசர்.

திருதராஷ்டிரன் கேட்கிறான்:
சஞ்ஜயா, அற நிலமாகிய குரு நிலத்தில் போர்செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும், பாண்டவரும் என்ன செய்தனர்?

धृतराष्ट्र उवाच
धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः।
मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय ॥१॥

த்⁴ருதராஷ்ட்ர உவாச
த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ​:|
மாமகா​: பாண்ட³வாஸ்²சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ||1-1||



த்⁴ருதராஷ்ட்ர உவாச = திருதராஷ்டிரன் சொல்லுகிறான்;
த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே = அற நிலமாகிய குரு நிலத்தில்,
ஸமவேதா: = ஒன்று கூடி;
யுயுத்ஸவ: = போர்செய்ய விரும்பித் திரண்ட;
மாமகா: = நம்மவர்களும்;
பாண்ட³வா: = பாண்டவரும்;
கிம் அகுர்வத = என்ன செய்தனர்?

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Morning with meaning

Sandhya Vandanam - Afternoon with meaning




Sandhya Vandanam - Evening with meaning