திருமங்கையாழ்வார், இதற்கு முந்திய பாசுரத்தில், த்ரிவிக்ரம அவதாரத்தை நினைத்து பாட, உடனே அவருக்கு, திருக்கோவிலூர் சென்று. பெருமாளை பார்க்க ஆசை வந்து விட்டது. உடனே பாடுகிறார்..
அலம்புரிந்த நெடுந்தடக்கை
அமரர் வேந்தன் !
அஞ்சிறை புள் தனிப்பாகன் !
அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து
அங்கு அருளில்லாத் தன்மையாளன் !
தான் உகந்த ஊரெல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழி பெண்ணை
ஈர்த்த நெடுவேய்கள் படு முத்தம் உந்த உந்தி,
புலம் பரந்த பொன் விளைக்கும் பொய்கை வேலி
பூங்கோவலூர் தொழுதும்! போது நெஞ்சே!
- திருநெடுந்தாண்டகம் (திருமங்கையாழ்வார்)
தன் நெஞ்சை பார்த்து, "திருக்கோவலூர் (பூங்கோவலூர்) த்ரிவிக்ரம பெருமாளை தொழுவதற்கு (தொழுதும்) செல்லலாமா என் நெஞ்சே? (போது நெஞ்சே!)" என்று கேட்கிறார் ஆழ்வார்.
அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன்
"அலம்" என்ற சமஸ்க்ரித சொல்லை அப்படியே பயன்படுத்துகிறார்.
அலம் என்றால் "போதும்" என்று அர்த்தம்.
பெருமாளின் நீண்ட கையை பார்க்கிறார் ஆழ்வார்.
பகவான், பலி சக்கரவர்த்தியிடம் கை நீட்டி வாங்கினாரே! பலி சக்கரவர்த்தியிடம் கை நீட்டி தானம் வாங்குவதற்காக இத்தனை பெரிய கை உள்ளதோ பெருமாளுக்கு? என்றால் இல்லையாம்.
'பகவானுக்கு நீண்ட புஜம் வாங்குவதற்காக இல்லை, கொடுப்பதற்காக' என்கிறார் ஆழ்வார்.
பலி சக்கரவர்த்தி, மூன்று அடி மண் கொடுத்தேன் என்ற போது, இரண்டே அடியில் ப்ரம்ம லோகம் வரை அளந்து விட, மூன்றாவது அடி தானம் கொடுக்க முடியாமல் தவித்தான்.
"தானம் கொடுக்கிறேன்" என்று சொன்னவன், கொடுக்க முடியாமல் திணறினான்.
பகவானோ, ப்ரம்ம லோகம் வரை, தான் வாங்கிய தானத்தை அப்படியே இந்திரனுக்கு தானம் கொடுத்து விட்டார்.
தானம் கொடுத்த பலி, இவருக்கு மூன்றாவது அடி கொடுக்க முடியாமல் தவிக்க, பகவானோ, "போதும் போதும்" என்று இந்திரன் சொல்லும் அளவுக்கு தானம் செய்து விட்டார்.
வாங்குபவன் (இந்திரன்) போதும் போதும் (அலம்புரிந்த) என்று சொல்லும் அளவிற்கு அள்ளி அள்ளி கொடுக்கும் நீண்ட கைகள் (நெடுந்தடக்கை) உடைய இந்திரனுக்கும் தலைவன் (அமரர் வேந்தன்) அல்லவா இவர்! என்று திருக்கோவிலூர் த்ரிவிக்ரம பெருமாளை நினைக்கிறார் ஆழ்வார்.
"எனக்கு பகவான் கருணை செய்ய மாட்டாரா?" என்று தாபத்தோடு வருபவன், இவரை பார்த்து விட்டால், "எனக்கு பகவான் செய்யும் கருணை தாங்கவில்லையே ! தாங்கவில்லையே!" என்று கதறும் படி, கருணையை பொழிந்து விடுவாரே த்ரிவிக்ரம பெருமாள்!
என்று கருணையை நினைத்து பார்க்கிறார்.
அஞ்சிறை புள் தனிப்பாகன்
யானையை தனக்கு வாகனமாக வைத்து இருப்பார்கள் சிலர்.
குதிரையை தனக்கு வாகனமாக வைத்து இருப்பார்கள் சிலர்.
யானையை, குதிரையை பழக்கி பாகனாகி விடலாம்.
இவரோ தனி சிறப்பு கொண்ட பாகனாக இருக்கிறாரே! என்று பெருமாளை பார்க்கிறார்.
பெருமாள் அழகிய சிறகுகள் (அஞ்சிறை) உடைய கருடனை தனக்கு வாகனமாக வைத்து, கருடனை (புள்) பழக்கி, தனக்கு வாகனமாக வைத்து இருக்கிறார் என்கிறார்.
அதையே "அஞ்சிறை புள் தனி பாகன்" என்று சொல்கிறார்.
அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து அங்கு அருளில்லா தன்மையாளன்
வஞ்சகம் செய்பவர்களை கோபத்துடன் தண்டிப்பவர் இவர். வஞ்சகனுக்கு வஞ்சகனாக இருக்கும் பெருமாள் இவர் என்று த்ரிவிக்ரம பெருமாளை பார்த்து கொண்டாடுகிறார்.
இந்திர லோகத்தை கைப்பற்றி, இந்திரனை வாழ விடாமல் செய்து விட்டான், பலி சக்கரவர்த்தி.
அடுத்தவன் சொத்தை அபகரித்த பலி சக்கரவர்த்தியை, வாமன மூர்த்தியாக வந்து, மூன்று அடி மண் கேட்டு, வஞ்சகனை, வஞ்சகத்தால் ஒடுக்கி, த்ரிவிக்ரம பெருமாளாக நின்று விட்டார்,
வஞ்சகனை வஞ்சத்தால் ஒழிப்பவர் என்று த்ரிவிக்ரம பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்கிறார் ஆழ்வார்.
தான் உகந்த ஊரெல்லாம் தன் தாள் பாடி
த்ரிவிக்ரம பெருமாளை நினைத்து இப்படி பாடி கொண்டிருந்த ஆழ்வாருக்கு, ஊர் ஊராக சென்று, ஒவ்வொரு பெருமாளையும் (தான் உகந்த ஊரெல்லாம்) சென்று, தான் பாட ( தன் தாள் பாடி) ஆசை ஏற்பட்டதாம்.
அதையே "தான் உகந்த ஊரெல்லாம் தன் தாள் பாடி" என்று தன் ஆசையை சொல்லிக்கொள்கிறார்.
இப்படி ஒரு ஆசையில், த்ரிவிக்ரம பெருமாளை சேவிக்க, திருக்கோவிலூரே வந்து விட்டார் திருமங்கையாழ்வார்.
த்ரிவிக்ரம பெருமாள் இருப்பதால், அவர் சாநித்யத்தால், திருக்கோவிலூர் பச்சை பசேல் என்று காட்சி கொடுக்க, திருக்கோவிலூரையே வர்ணிக்கிறார் ஆழ்வார்.
நிலம் பரந்து வரும் கலுழி பெண்ணை ஈர்த்த நெடுவேய்கள் படு முத்தம் உந்த உந்தி புலம் பரந்த பொன் விளைக்கும் பொய்கை வேலி பூங்கோவலூர் தொழுதும்! போது நெஞ்சே!
பெண்ணை ஆறு, இந்த திவ்ய தேசத்தில் ஓடுகிறது.
அந்த நதி ஓடும் அழகை பார்த்து வர்ணிக்கிறார்.
பெண்ணையாற்றில் ஓடும் தண்ணீரானது, வெள்ளம் (கலுழி) போல ஓடி வர, அதன் கரைகளில் உயர்ந்து வளர்ந்த மூங்கில் மரங்களில் (நெடுவேய்கள்) பூத்த முத்து போன்ற வெண் பூக்களை (படு முத்தம்) ஈர்த்து கொண்டு, கழனிகள் எங்கும் பரவி (புலம் பரந்த) உந்தி தள்ள (உந்த உந்தி), முள் வேலிக்கு பதிலாக எங்கும் நீரால் சூழ்ந்திருக்கும் (பொய்கை வேலி) வயல்களில் இந்த மூங்கில் பூக்களே உரமாகி, பொன் போன்ற அரிசியை விளைவிக்கிறது.
இப்படி திருக்கோவிலூர் என்ற இந்த திவ்ய தேசம் இருப்பதற்கு காரணம், த்ரிவிக்ரம பெருமாள் உகந்து இருப்பதால் தானே என்று நினைக்க, "நெஞ்சே! த்ரிவிக்ரம பெருமாளை தொழுவதற்கு வா போகலாம்." என்று பாடுகிறார்.