Followers

Search Here...

Showing posts with label தீய குணம் கொண்ட. Show all posts
Showing posts with label தீய குணம் கொண்ட. Show all posts

Friday 6 April 2018

நல்லவர்களுக்கு சில சமயம் தீய குணம் கொண்ட குழந்தைகள் பிறப்பது ஏன்? காரணத்தை தெரிந்து கொள்வோமே.

சொன்ன சொல் மீறாத தசரதனுக்கு, சத்ய ஸ்வரூபமாக ஸ்ரீராமர் பிறந்ததில் ஆச்சரியமில்லை. 
நல்லவர்களுக்கு நல்ல பிள்ளைகள் பிறப்பதில் ஆச்சரியமில்லை.

பிறர் மனைவியை அபகரிக்க நினைத்த ராவணனுக்கு, அவனை போன்ற கீழ் தரமான, பிள்ளையாக பிறந்தான் இந்திரஜித். 
அப்பன் செய்த தவறுக்கு தானும் உடந்தையாக இருந்து, உயிரை விட்டான். 
கெட்டவனுக்கு கெட்ட பிள்ளைகள் பிறப்பதும் ஆச்சரியமில்லை.




சில சமயங்களில், நல்ல குடும்பத்தில் ஒரு அயோக்கிய பிள்ளை பிறந்து விடுகிறான். 

அயோக்கியனுக்கு, சில சமயம் நல்ல பிள்ளை பிறந்து விடுகிறான். 
கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கு, நேர் மாறாக நாத்தீகன் பிள்ளையாக பிறந்து விடுகிறான். 

இது ஏன் நடக்கிறது? இதன் ரகசியம் என்ன? 
ஹிரண்யகசிபுவுக்கு, ;பிரகலாதன் என்ற விஷ்ணு பக்தன் எப்படி மகனாக பிறந்தான்'? 
பிரகலாதன் பிறப்பை, கவனிக்கும் போது, இதன் ரகசியம் புலப்படுகிறது.

ஹிரண்யகசிபு நாத்தீகனை விட ஒரு படி மேல். "நானே கடவுள்" என்று சொல்லிக்கொண்டான். 
சொன்னது மட்டுமல்ல, அதை நிரூபித்தும் காட்டினான். 
ப்ரம்மா, சிவன் உட்பட அனைத்து தேவர்களையும் அடக்கி, க்ஷீராப்தி என்ற பாற்கடலுக்கும் சென்று, அந்த விஷ்ணுவாகிய நாராயணனையும் அடக்கி விடலாம் என்று, தன் தவ வலிமையால் சென்று பார்த்தான். 

விஷ்ணு மறைந்து விட, தன் எதிரி 'அந்த நாராயணன் ஒருவனே, மற்ற தேவர்கள் எல்லாம் எனக்கு அடிமை' என்று உலகிற்கு காட்டி, "நான் கடவுள்" என்று நிரூபித்தே விட்டான். 



தன்னிடம் சிக்காத விஷ்ணுவுக்காக காத்திருந்தான். 
இப்படி தேவர்களும், சிவனும், பிரம்மாவும் கூட எதிர்க்க முடியாத சக்தி கொண்ட ஹிரண்யகசிபுவை, சாதாரண பூலோக ஜனங்கள் என்ன செய்து விட முடியும்? 
உலகத்தையே ஆட்டிப் படைத்தான்.

இவனே பல லட்ச வருடங்கள் "தானே கடவுள்" என்று உலகை ஆண்டு வந்தான். 
உலக மக்கள் "நாமோ நாராயணா" என்ற சொல்லை கூட மறந்து விட்டனர். 
அனைவரும்  "ஹிரண்யகசிபுவே நம:" என்று சொல்லும் அளவிற்கு, நிலைமை ஆகி விட்டது.

இப்படி எதிரிகளே இல்லாத ஹிரண்யகசிபுவுக்கு, அவன் பெற்ற பிள்ளை, இவனுக்கு நேர் எதிராக இருந்தான். 

ஹிரண்யகசிபுவை "கடவுள்" என்று சொல்ல மறுத்தான் பிரகலாதன் 

இதை விட ஆச்சர்யம், உலகமே நாராயணா என்ற சப்தத்தை கூட மறந்து இருந்த நிலையில், "நாராயணனே எங்கும் உள்ளார். அவரே பரமாத்மா" என்று தைரியமாக சொன்னான். 
இப்படி மகா கெட்டவனுக்கு, எப்படி பக்த பிரகலாதன் பிறந்தான்? 
நாரதர், பிரகலாதன் கருவில் இருக்கும் போதே, அணுகிரஹம் செய்தார் என்பது ஒரு விஷயம்.

அதற்கு முன் நடந்த சம்பவமே உண்மையை நமக்கு விளக்குகிறது.    

ஹிரண்யகசிபு, தன் சகோதரன் "ஹிரண்யாக்ஷன்" இறந்து விட்டான் என்று தெரிந்ததும், நாராயணன் மீது கடும் கோபம் கொண்டான். 

அந்த விஷ்ணுவை எப்படியாவது கண்டுபிடித்து, அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், மேலும் தவம் செய்து தன் வலிமையை கூட்டிக்கொள்ள நினைத்தான்.




அதற்காக தன் அரண்மனையை விட்டு, தவம் செய்ய காட்டுக்கு கிளம்புகிறான்.
ஏற்கனவே இவன் சம்பாதித்து உள்ள பலம் அதிகம். 

இன்னும் பலம் பெறுவானானால், இன்னும் பல லட்ச வருடம் இவனை எதிர்க்க ஆளில்லாமல் போய் விடும் என்று நினைத்த, நாரதர், தன்னுடன் பர்வத முனியையும் அழைத்து கொண்டு, இரண்டு கிளியாக மாறி ஹிரண்யகசிபு அரண்மனை வாசலில், ஒரு மரத்துக்கு மேலே, அவன் பார்க்கும் விதமாக வந்து அமர்ந்தனர். 

தவத்திற்காக அரண்மனையை விட்டு, வெளியே வந்து ஹிரண்யகசிபுவை பார்த்தவுடன், "நாராயணா, நாராயணா" என்று பறவை ரூபத்தில் இருந்து கூவினர்.

இதை கேட்ட ஹிரண்யகசிபு, மகா ஆத்திரம் வந்தது. "சீ.. இது என்ன கெட்ட சகுனம்" என்று நினைத்தான்.
"யாரை அழிக்க நினைத்தோமோ, அவன் பெயரை கேட்க நேர்ந்ததே" என்று கோபம் அடைந்தான். "சகுனம் சரி இல்லை" என்று நினைத்தான்.

"இந்த சமயத்தில் தவம் செய்ய போக வேண்டாம், நாளை போகலாம்" என்று அரண்மனை திரும்பி விட்டான்.

திரும்பி வந்த ஹிரண்யகசிபு, தன்  மனைவி "கயாது" இருக்கும் அந்தப்புரம் சென்றான். 

அந்த பறவைகள் சொன்ன, நாராயண சப்தம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க,
"இப்படி என் தவம் செய்ய முடியாமல், இந்த நாராயண சப்தம் கேட்க நேர்ந்ததே" 
என்று நினைத்து கொண்டே இருந்தான்.

இந்த நினைவு மனதை விட்டு நீங்காமல், "இப்படி பக்ஷிகள் நாராயணா என்று சொல்லி என் தவத்தை இன்று தடுத்து விட்டதே !!" என்ற நினைவுடனேயே அன்று இரவு தன் மனைவியுடன் சேர்ந்தான்.

கயாது மிக நல்லவள். 
அந்த சமயத்தில் ஹிரண்யகசிபுவும் "நாராயணா என்று சொல்லி என் தவம் கெட்டு விட்டதே!!,  நாராயணா என்று சொல்லி, என் தவம் கெட்டு விட்டதே!!" 
என்ற நாராயண நினைவுடனேயே தன் மனைவியுடன் சேர்ந்ததால், பக்த பிரகலாதன் பிறந்தான். 
அதனால் தான், நம் சாஸ்திரம் 'கணவன் மனைவி சேரும் போது கூட, நல்ல மனதுடன், தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும்' என்று வழி சொல்கிறது.

'கணவனும், மனைவியும் எந்த சிந்தனையில் அந்த சமயத்தில் இருக்கிறார்களோ, அந்த குணத்திற்கு ஏற்ற ஆத்மாக்கள் இவர்களுக்கு குழந்தையாக பிறக்கிறது' என்கிறது நம் சாஸ்திரம்.

இதன் காரணமாக தான், நல்லவர்களுக்கு கூட, சில கெட்ட பிள்ளைகள் பிறந்து விடுகின்றனர். 

ஹிந்துவாக இருப்பதால், நம்மை வழி நடத்த, நம் சாஸ்திரங்கள் ஒவ்வொரு சமயமும் நமக்காக நல் வழிகளை காட்டுகிறது. 

வாழ்க ஹிந்துக்கள்.