Followers

Search Here...

Showing posts with label வரதராஜன். Show all posts
Showing posts with label வரதராஜன். Show all posts

Friday 21 June 2019

ப்ரம்மாவின் பெருமை ஈடு இணை இல்லாதது. பிரம்மாவின் கருணையாலேயே, நமக்கு ரங்கநாதர் கிடைத்தார், காஞ்சியில் வரதராஜன் கிடைத்தார். பிரம்மா கேட்டதால் தான் பரமாத்மா வாசுதேவன் அவதாரங்கள் செய்தார்.

ஸ்ரீ பாகவதம், யார் சிறந்த பாகவதன்? என்று சொல்லும்போது 'ப்ரம்மாவை' தான் முதலில் சொல்லுகிறது.

ப்ரம்மாவின் பெருமை ஈடு இணை இல்லாதது.



பரவாசுதேவன் முதன் முதலாக படைத்ததே ப்ரம்மாவை தான்.

தன் திருவாயாலேயே ப்ரம்ம தேவனுக்கு "ப்ரம்ம வித்யை"யை உபதேசம் பண்ணினார் பகவான்.

"உலக ஸ்ருஷ்டி செய்யும் பொழுதும், எப்பொழுதும் என் இதயத்தில் ஹரியையே நான் தியானம் செய்து கொண்டிருக்கிறேன்"
என்று சொல்கிறார் ப்ரம்மா.

"மது-கைடபர்கள் வேதத்தை கொண்டு போய் விட்டார்கள்" என்ற பொழுது, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள் அவருக்காக மத்ஸ்ய அவதாரம் எடுத்தார்.

"தேவர்கள் அசுரர்களால் துன்பப்படுகிறார்கள்" என்றதும், அவர்கள் பிரம்மாவிடம் ஓடி வழி கேட்க, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள், அவருக்காக கூர்ம அவதாரம் எடுத்தார்.

"பூமி பிரளய ஜலத்தில் மூழ்க", ஸ்வாயம்பு மனு பிரம்மாவிடம் சென்று முறையிட, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள், அவருக்காக பிரம்மாவின் ஹ்ருதயத்தில் இருந்தே வெளிவந்து வராஹ அவதாரம் எடுத்தார்.

ஹிரண்யகசிபுவுக்கு ப்ரம்மா தான் வரம் கொடுத்தார். பின் 'இவன் அட்டகாசம் தேவர்களை துன்புறுத்த', அவர்களுக்காக, க்ஷீராப்தி வந்து ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காக, பெருமாள் நரசிம்ஹ அவதாரம் எடுத்தார்.
ராம அவதாரமும், ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காகவே நடந்தது.

பூமி தேவி துஷ்டர்கள் பெருகியதால் "பூபாரம் தாங்க முடியாமல்", ப்ராம்மாவிடம் பிரார்த்திக்க, மீண்டும் ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காக, பெருமாள் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் எடுத்தார்.

ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில், பிருந்தாவனத்திற்கு வந்து, "இங்கு புல்லாய் இருக்கவாவது அனுமதி கொடு. எனக்கு இந்த ப்ரம்ம பதவி கூட வேண்டாம்"
என்று பிரார்த்திக்கிறார் ப்ரம்மா.
"நீ ஆதிகாரி புருஷன். நீ உன் பதவியில் போய் இரு"
என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்ல, வேறு வழி இல்லாமல் திரும்ப செல்கிறார் ப்ரம்ம லோகத்துக்கு.



இப்படி விபவ அவதாரங்கள், இந்த பூமியில் நிகழ செய்தது மட்டும் இல்லாமல், 
இந்த அவதாரங்கள் நிகழ்ந்த சமயத்தில் இல்லாத நமக்கும் அணுகிரஹம் செய்ய, 
ப்ரம்ம லோகத்தில் தான் வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதரை, உலக ஸ்ருஷ்டி செய்து,  ஸ்வாயம்பு மனுவை பதவியில் அமர்த்தி, 
அவர் பூமியில் வழிபட தான் வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதரை வழங்கி விட்டார் ப்ரம்மா.

அந்த ரங்கநாதரை இக்ஷ்வாகு குலத்தில், ஸ்ரீ ராமராக அவதாரம் செய்து, தன் குல தெய்வமாக ஸ்ரீ ராமரே வழிபட்டு,
ராவண வதம் முடிந்து, விபீஷணனுக்கு தன் அடையாளமாக, ஸ்ரீ ரங்கநாதரை கொடுக்க,
ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீரங்க க்ஷேத்ரத்தை தானே தேர்ந்தெடுத்து இன்று வரை நாமும் காண முடியும் என்கிற அளவுக்கு கருணை செய்தார்.

பிரம்மாவின் கருணையாலேயே, நமக்கு ஸ்ரீ ரங்கநாதர் கிடைத்தார்.

'அவரே ப்ரம்ம லோகத்தில் வழிபட்ட தெய்வம்' என்று நாம் பார்க்கும் போது தான், ஸ்ரீ ரங்கநாதரை பற்றியும் புரியும், பிரம்மாவின் கருணையும் புரியும்.
அதே ப்ரம்ம தேவன், இப்பொழுது காஞ்சியில் அஸ்வமேத யாகம் செய்து, நமக்காக, காஞ்சியில் வரதராஜனாக பெருமாளை வெளிப்படுத்தினார்.

இதை உணரும் போது,
பிரம்மாவை விட, சிறந்த பக்திமான் யார் இருக்க முடியும்?