Followers

Search Here...

Showing posts with label நாரதர். Show all posts
Showing posts with label நாரதர். Show all posts

Saturday 23 April 2022

குணவான் என்றால் என்ன? வீர்யவான் என்றால் என்ன? ராமரே 'குணவான்', ராமரே 'வீர்யவான்' என்று தமிழரான வால்மீகி 'ராமாயணம்' காட்டுகிறார். தெரிந்து கொள்வோம்.

'குணவான்' என்றால் என்ன? வீர்யவான் என்றால் என்ன? '

நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கலாம். அதற்காக நம்மை குணவான் என்று சொல்லிவிட முடியாது.

'சரணாகதி செய்த பிறகு, பிறருடைய குற்றத்தை அறிந்தும், மன்னிப்பது' என்பது உயர்ந்த குணம்.


'தன்னை நம்பியவர்கள் செய்யும்/செய்த குற்றங்களை மன்னிக்கும் குணம் யாரிடம் இருக்குமோ!' அவர்களை 'குணவான்' என்று சொல்கிறோம்.

எப்படிப்பட்ட எதிரியானாலும், எதிர்த்து வெற்றி கொள்ளும் மஹாவீரனை, "வீர்யவான்" என்று சொல்கிறோம்.

'எதிரியை தண்டிக்கும் மஹாவீரனாக இருந்தும், இப்படி ஒரு குணவான், என் சமகாலத்தில் வாழ்கிறாரா? எதிரி என்று தெரிந்தும், குற்றவாளி என்று தெரிந்தும், தண்டிக்கப்படவேண்டியவன் என்று தெரிந்தும், தன்னை சரணமடைந்தால் மன்னிக்கும் குணம் கொண்டவன் உலகில் இப்பொழுது இருக்கிறாரா?' என்று அன்பில் என்ற தேசத்தில் அவதரித்த வால்மீகி, நாரதரை கேட்கிறார்.

कोन्वस्मिन् सांप्रतम् लोके 

गुणवान् कः च वीर्यवान् |

- வால்மீகி ராமாயணம்

40000 ராக்ஷஸ படையோடு, கர-தூஷணன் ராமபிரானை கொல்ல வந்தான். தனி ஒருவனாக ராமபிரான் மட்டுமே நின்று, 40000 பேரையும் ஒழித்து காட்டினார்.

ராவணன் 'பேடித்தனமாக' ராமபிரான், லக்ஷ்மணன் இல்லாத சமயத்தை ஏற்படுத்தி, சீதாதேவியை கடத்தி சென்றான்.


ராமபிரான் பஞ்சவடியில் இருந்து சீதையை காப்பாற்ற இலங்கை வந்து போர் செய்து சீதையை மீட்க நின்றார்.


'சீதாதேவியை ராமபிரான் இல்லாத சமயத்தில் கடத்தி, இங்கே கொண்டு வந்தது மிகப்பெரிய தவறு' என்று சொன்ன விபீஷணனை, ராவணன் எட்டி உதைத்து வெளியேற்றிய பிறகு, ராமபிரானை சரணாகதி செய்ய வருகிறான். 

சுக்ரீவன், 'ராக்ஷஸனான விபீஷணன், போர் நடக்க போகும் சமயத்தில், எதிரி பக்கத்தில் இருந்து வந்து இருக்கிறான். மஹா ஆபத்து' என்றான்.

ராவணனை நேருக்கு நேர் போர் செய்து வீழ்த்தும் மஹாவீரனாக இருந்தும், 'என்னிடம் சரணம் என்று ஒருவன் வந்தால், அவனுக்கு அபயம் கொடுப்பது எனக்கு விரதம். விபீஷணனை மட்டுமல்ல, அவனோடு அந்த ராவணனே வந்து இருந்தால் (रावणः स्वयम्) அவனையும் மன்னித்து விடுவேன்" என்றார்.

आनयैनं हरिश्रेष्ठ

दत्तमस्याभयं मया ।

विभीषणो वा सुग्रीव

यदि वा रावणः स्वयम्

- வால்மீகி ராமாயணம்

தன்னை அண்டியவன் செய்த குற்றத்தை மன்னிக்கும் குணம் கொண்ட ஒரு மனிதனை பார்ப்பதே அரிது. ராமபிரானுக்கோ, கடல் போன்ற குணங்களில் இதுவும் ஒரு குணமாக இருந்தது.


இந்த இடத்தில் சாதாரண மனிதன் எவன் இருந்திருந்தாலும், "ராவணன் செய்த ஒரு குற்றத்துக்கு, தண்டனை ஒன்றே வழி. மன்னிப்புக்கு இடமே இல்லை" என்று சொல்லி இருப்பான்.


சீதாதேவியை தொலைத்து, பஞ்சவடியில் (மஹாராஷ்டிரா) இருந்து நடந்து, ராமேஸ்வரம் வரை வந்து, 5 நாளில் வானரர்கள் பாலம் அமைக்க, கடும்கோபத்துடன் போருக்கு தயாராக இருந்த சமயத்தில், விபீஷணன் என்று ஒருவன் சரணாகதி செய்ய வருகிறான் என்றதும், "அவனோடு, ராவணன் வந்திருந்தாலும் அபயம் கொடுக்கிறேன்" என்று சொல்வதை பார்க்கும் போது, ராமபிரான் "குணவான்" என்று தெரிகிறது.  


சீதாதேவியை கடத்தினான் என்ற குற்றத்துக்கு தண்டனை கொடுக்க வந்த ராமபிரான், ராவணனை மன்னிக்க அப்பொழுதும் தயாராக இருந்தார் என்று பார்க்கும் போது தான், "பதித பாவன சீதாராம்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிகிறது.


குணவானாக இருக்கும் ராமபிரான் சரித்திரத்தை, அன்பில் என்ற இடத்தில் அவதரித்த தமிழன் வால்மீகி, கவி நடையாக எழுதுகிறார்.


நல்ல மனிதனாக வாழ நினைக்கும் எந்த மனிதனும், இந்த உயர் பண்பை கொண்ட ராமபிரானை வணங்குவார்கள்.

What are the Qualities of Ram? ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்? ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.


Monday 25 June 2018

ஜம்மு (JAMMU) என்ற பெயர் யாரை கொண்டு ஏற்பட்டது?

ஜம்மு (JAMMU) என்ற பெயர் யாரை கொண்டு ஏற்பட்டது?

பரம பாகவதரான அக்ரூரர் (Akrura), கிருஷ்ண அவதார காலத்தில் இருந்தவர்.

கம்சன் அரண்மனையில் வேலை பார்த்து வந்தார் அக்ரூரர்.





ஸ்ரீ கிருஷ்ணரை கொலை செய்யும் நோக்கில், கம்சன், அக்ரூரரிடம், ஸ்ரீ கிருஷ்ணரை மதுராவுக்கு அழைத்து கொண்டு வர சொன்னான்.

பிருந்தாவனத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் பாத தூளி கண்டு, அந்த மண்ணில் புரண்டு எழுந்த பரம பக்தர், ப்ரேமிகர் இந்த அக்ரூரர்.

இவர்தான் ஸ்ரீ கிருஷ்ணரை மதுராவுக்கு பிருந்தாவனத்தில் இருந்து அழைத்து வந்தார்.

பின்னர் கம்ச வதம் ஆகி, தன் தாத்தா, பெற்றோர் என்று அனைவரையும் சிறையில் இருந்து விடுவித்து, ஸ்ரீ கிருஷ்ணர் தன் தாத்தாவை முடி சூட்டி, பின்னர் மதுராவில் இருந்து அனைவரையும் துவாரகைக்கு மாற்றி, ஆட்சி புரிந்து வந்தார்.

துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்ய, ஸ்ரீ கிருஷ்ணரின் பாதுகாப்பில் அக்ரூரரும் இருந்து வந்தார்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அக்ரூரர் மேல் பிரியம் உண்டு. அக்ரூரருக்கும் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் பக்தி உண்டு.
துவாரகையில் அக்ரூரர் சௌக்கியமாக இருந்து வந்தார்.

பொதுவாக யாதவர்களுக்கு, ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து, "இவன் ஏதோ நம்மை விட புத்திசாலியாக இருக்கிறான். சாதாரணமாக இருந்தவன் தான், அதிர்ஷ்டத்தினால் முன்னுக்கு வந்துவிட்டான்" என்ற எண்ணம் இருந்தது.

மனிதர்களுக்கு மனிதனாக தெய்வம் பழகினால் இப்படி எல்லாம் பேசுவார்கள் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தெரியாதா?

வராஹ அவதாரம் எடுத்த போது, உலகையே மகா பிரளய ஜலத்தில் இருந்து எடுத்த பகவானை பார்த்து, சாதாரண பன்றியாக உள்ள ஜீவன்களுக்கு நம் ஜாதி தானே என்று தோன்றியதாம்.

மேலும் சில யாதவர்கள் நினைத்தார்கள்,
"ஸ்ரீ கிருஷ்ணனும் நம்மை போன்று சாதாரண ஆள் தான். அவன் பிறக்கும் போதே அவன் அம்மாவும், அப்பாவும் ஜெயிலில் கிடந்தார்கள்.
இவன் எங்கேயோ மாடு மேய்த்து கொண்டிருந்தான்.
திடீரென்று ஏதோ அதிர்ஷ்டம் அடித்து விட்டது இவனுக்கு, இப்பொழுது நம்மை எல்லாம் விட பெரிய ஆளாகி விட்டான்.
நாமெல்லாம் இவனை விட நல்ல குடும்பத்தில் பிறந்தும், சாமர்த்தியம் போதாததால் இப்படி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம்."
என்று பேசினர்.

ஸ்ரீ கிருஷ்ணர், இதையெல்லாம் தெரிந்து தானே உலகத்தில் அவதாரம் செய்து இருக்கிறார்.
மனிதர்கள் பல. இப்படியும் பேசும் கூட்டம் இருக்கதானே செய்யும்.

பகவானை உலக மக்களுக்கு புரியாது. உலகத்தை பற்றி பகவானுக்கு தெரியுமே !

இப்படி தான் உலகம் இருக்கும் என்று தெரிந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இப்படி பொறாமை படும் சில யாதவர்களை பற்றி துளியும் கவலைப்படவில்லை.
மந்தஹாசத்துடன் ஆட்சி செய்து வந்தார்.

இப்படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து, சிலர் பக்தி உள்ளவர்கள் போலவும் இருக்கிறார்கள், பக்தி இல்லாதவர்கள் போலவும் இருக்கிறார்கள், குறை சொல்பவர்கள் போலவும் இருக்கிறார்கள், நிறை சொல்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இப்படி வித விதமாக இருந்தார்கள் இந்த யாதவர்கள் யாவரும்.

இப்படி பலவித அபிப்ராயம் கொண்ட யாதவர்கள், திடீரென்று ஒரு நாள் அனைவரும் சேர்ந்து அரண்மனை வாசல் வந்து ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து,
'ஹே நாராயணா ! சங்கு சக்கர கதாதரா ! கோவிந்தா ! யது நந்தனா !!"
என்று பரவசத்துடன் கூப்பிட்டனர்.

திரௌபதி போல உண்மையான  பக்தி இருந்தால், துவாரகையில் இருந்து கொண்டே, ஹஸ்தினாபுரத்தில் "கோவிந்தா" என்று இவள் அழைத்தாலும் ஸ்ரீ கிருஷ்ணன் கேட்பான்.

இன்று பக்தி பரவசத்தில் அழைக்கும் இவர்கள், நாளை இடையன் என்றும் பேசுவார்கள் என்று அறிந்த பகவான், இவர்கள் பேசுவதை காதில் போட்டு கொள்ளவே இல்லை.

இன்று திடீரென்று பக்தி பரவசமாகி ஏதோ காரணத்தால்  அழைக்கின்றனர் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மந்தஹாசத்துடன், அவர்களை பார்த்து,
"என்ன இங்கு வந்துள்ளீர்கள்? என்ன நடந்தது?
என்றார்.

யாதவர்கள், ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து,
"நீங்களே நாராயணன் அல்லவா? ஆபத்பாந்தவன் இல்லையா?
எங்களை ரக்ஷிக்க வைகுண்டத்தில் இருந்து வந்துள்ளீர்கள் அல்லவா?" என்று சொல்ல,
ஸ்ரீ கிருஷ்ணர்,
"என்ன விஷயமாக வந்துள்ளீர்கள். அதை சொல்லுங்கள்" என்றார்.

யாதவர்கள்,
"உங்களை பார்க்க சூரியனே வந்து கொண்டிருக்கிறார்"
என்று பரவசத்துடன் சொன்னார்கள்.

"பார்த்தாயா என்னை பார்க்க சூரியனே வருகிறார். நான் பகவான் என்று இப்போது புரிந்ததா?"
என்று ஸ்ரீ கிருஷ்ணரும் சொல்லவில்லை.

வந்தது சூரியன் இல்லை என்று தெரிந்தால், அடுத்த கணமே இந்த யாதவர்கள் 'இடையன்' என்றும்  சொல்வார்கள்.
இவர்களின் திடபக்தி எத்தனை என்று தெரியாதா ஸ்ரீ கிருஷ்ணருக்கு.

சூரியன் வருகிறார் என்று யாதவர்கள் சொன்னதை கேட்ட ஸ்ரீ கிருஷ்ணர் மந்தஹாசத்துடன் அமைதியாகவே இருந்தார்.

அந்த சமயம், யாதவர்களில் ஒருவன் சத்ரார்ஜித் என்பவன் தான் கிருஷ்ணரை பார்க்க வந்து கொண்டிருந்தான்.
வருவது சூரியனும் அல்ல, தேவனும் அல்ல என்று அனைவரும் தெரிந்து கொண்டனர்.

சத்ரார்ஜித் சூரிய உபாசனை செய்து ஸித்தி பெற்று, சூரிய தேவனிடம் "ஸ்யமந்தகம்" என்ற மணியை வாங்கி தன் கழுத்தில் போட்டிருந்தான். அந்த மணியின் ஒளி தான், இந்த யாதவர்களுக்கு, வருவது சூரியன் என்ற பிரமையை உருவாக்கிவிட்டது.

இத்தனை நேரம் நாராயணா, கோவிந்தா என்று சொன்ன இந்த யாதவர்கள், ஸ்ரீ கிருஷ்ணனை பார்க்காமல், வந்திருந்த சத்ரார்ஜித்தையும் அவன் கழுத்தில் இருந்த மணியையுமே பார்த்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீ கிருஷ்ணன், சத்ரார்ஜித்தை பார்த்து,
"என்ன சத்ரார்ஜித், என்ன கழுத்தில் அணிந்து இருக்கிறாய்?"
என்று கேட்டார்.

சத்ரார்ஜித், ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து,
"நான் சூரிய உபாசனை செய்து, சூரிய தேவன் சன்மானமாக எனக்கு இதை கொடுத்தார். இதற்கு ஸ்யமந்தகம் என்று பெயர்.

இந்த மணி எந்த தேசத்தில் இருக்குமோ, அந்த தேசத்தில் தானியங்கள் குறைவில்லாமல்  கிடைக்கும்.
மழை காலத்தில் பெய்து, பஞ்சம் ஏற்படாது.
இது யாரிடத்தில் இருக்கிறதோ, அவன் அல்ப ஆயுசூடன் இறந்து விட மாட்டான். நோய் வராது. அவனது குழந்தைகள் சௌக்கியமாக இருப்பார்கள்.
அவனுடைய ஊரில் உள்ள ஆடு மாடுகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்..."
என்று சொல்லிக்கொண்டே போனான்.

இதை கேட்டுக்கொண்டிருந்த அனைத்து யாதவர்களும், இவன் ஏதோ ஒரு புராணத்தை படித்தால் பலஸ்ருதி சொல்வதை போல சொல்லிக்கொண்டு இருக்கிறானே என்று சாதாரணமாக தான்  கேட்டுக்கொண்டிருந்தனர்.

இப்படி சொல்லிக்கொண்டிருந்த சத்ரார்ஜித்,
"இந்த மணியை வைத்து இருப்பவனுக்கு, இந்த மணி, தினமும் 8 சேர் தங்கம் தரும்" என்று சொல்ல, அடுத்த நொடி, எல்லா யாதவனும் சேர்ந்து ஒரே சமயத்தில், "ஆஆ..." என்று வாய் பிளந்தனர்.

அதுவரை சாதாரணமாக கேட்டுக்கொண்டிருந்த யாதவர்கள் மத்தியில் பெரும் கூச்சல், ஆரவாரமானது.

பகவான் யாதவர்களின் மனநிலையை கவனித்தான். இனி இவன் க்ஷேமமாக இருக்க முடியாது.
இவனை யாதவர்கள் எப்படியாவது கொன்று அந்த மணியை அபகரிப்ப நினைப்பார்கள் என்று உணர்ந்தார்.

நிலைமையை உணர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணர், சத்ரார்ஜித்தை பார்த்து,
"சத்ரார்ஜித், உன்னிடம் இந்த ஸ்யமந்தக மணி இருப்பது பாதுகாப்பில்லை. உன்னிடம் இதை பாதுகாக்க இடம் இல்லாமல், உன் கழுத்திலேயே போட்டுக்கொண்டு இருப்பது உனக்கும் பாதுகாப்பில்லை.

நான் இந்த ஸ்யமந்தக மணியை பாதுகாப்பாக இரும்பு பெட்டியில் வைத்து இருக்கிறேன். தினமும் இந்த ஸ்யமந்தக மணி தரும் 8 சேர் தங்கத்தை உனக்கு நிருத்து அப்படியே தந்து விடுகிறேன்."
என்றார்.




சத்ரார்ஜித்,
"நான் சூரியனை உபாசனை செய்து வரமாக வாங்கிய இந்த மணியை எப்படி உங்களுக்கு தர முடியும்?"
என்று கேட்க,
"சரி, நீயே வைத்துக்கொள்" என்று சொல்லிவிட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.

விலையுயர்ந்த பொருட்களை பூட்டி வைத்து இருந்தால் கூட பாதுகாப்பு இல்லை என்று இருக்க, சத்ரார்ஜித் இந்த மணியை தன் கழுத்தில் போட்டு கொண்டே இருந்தான்.

சாதாரணமாக இருந்தவன் தான் இந்த சத்ரார்ஜித்.
ஆனால், தினமும் 8 சேர் தங்கம் கிடைத்தால் என்ன ஆகும்?
இதை வைத்துக்கொண்டே பெரிய மாளிகை கட்டிக்கொண்டான். நிலங்கள் வாங்கினான். பெரும் பணக்காரன் ஆகிவிட்டான்.

கொஞ்சம் பணம் சேர்ந்தாலே மனிதனுக்கு கர்வம் வந்து விடுவது இயற்கை. இவனுக்கோ தினமும் தங்கம் வந்து கொண்டே இருக்க, இப்பொழுதெல்லாம் யாரிடமும் சரியாக பேசுவது கூட கிடையாது இவன். இவன் அருகில் தெரிந்தவர்கள் போனாலும் தெரியாதது போல தான் நடந்து கொள்வான்.




இவனின் திடீர் செல்வாக்கு, மற்ற யாதவர்களுக்கு பொறாமையை உண்டாக்கியது.

சத்ரார்ஜித்தின் தம்பி "ப்ரசேனன்" என்பவனுக்கு கூட, தன் அண்ணனின் இந்த திடீர் சுகபோக வாழ்க்கை பொறாமையை விதைத்தது.

ஒரு சமயம், ப்ரசேனனின் பிறந்த நாளில், "அண்ணா, நீங்களே இந்த ஸ்யமந்தக மணியை போட்டுக்கொண்டு இருக்கிறீர்களே! எனக்கு இன்று ஒரு நாள் மட்டும் போட்டு விடலாமே?" என்றான்.

தன் தம்பி தானே என்று, நல்ல மனநிலையில் இருந்த சத்ரார்ஜித் அவனுக்கு போட்டு விட்டான்.

இவனாவது ஸ்யமந்தக மணியை கழுத்தில் கட்டிக்கொண்டு வீட்டோடு இருந்து இருக்கலாம்.

வேட்டை ஆடலாம் என்று புறப்பட்டான்.  நான்கு வீதியையும் தாண்டி போகும்போது, அங்கு பார்த்த யாதவர்கள், இன்னும் பொறாமைப்பட்டனர்.
"அடடா..  சத்ரார்ஜித் மட்டும் தான் ஸ்யமந்தக மணியை வைத்து கொண்டிருக்கிறான் என்று நினைத்தால், அவன் தம்பி "ப்ரசேனனும்" "வைத்து இருக்கிறானே?"
என்று மனம் புழுங்கினர்.

இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு, பெருமை பட்டான் மனதுக்குள்.
இப்படியே வேட்டைக்கு காட்டுக்குள் போனவன் தான், திரும்பவே இல்லை.

ஒரு நாள் ஆனது, இரண்டு நாள் ஆனது, மூன்று நாள் ஆனது..  ப்ரசேனன் திரும்பி வரவில்லை என்றதும் சத்ரார்ஜித்துக்கு இடி தலையில் விழுந்தது போல ஆனது.

தம்பி வராததை விட, ஸ்யமந்தக மணியை தொலைத்து விட்டோம் என்று பதறினான். அழுதான்.

ஸ்யமந்தக மணியோடு சென்ற ப்ரசேனன் திரும்ப வில்லை என்ற விஷயம் பரவ, யாதவர்கள் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி பேச ஆரம்பித்தனர்.

யாதவர்களில் சிலர், "கிருஷ்ணன் தான் ப்ரசேனனை கொன்று, ஸ்யமந்தக மணியை எடுத்து கொண்டிருப்பான்.
ஏற்கனவே கிருஷ்ணன், இந்த மணியை எனக்கு கொடு என்று கேட்டான். இதை எப்படியாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து, அவன் தான் செய்திருப்பான்" என்று புரளி பேச ஆரம்பித்தனர்.

ஸ்யமந்தக மணியை தொலைத்த சத்ரார்ஜித் இதை நம்பினான்.

இப்படியே இந்த புரளி கிளம்ப, ஸ்ரீ கிருஷ்ணர் எங்கு போனாலும், இந்த யாதவர்கள் தங்களுக்குள் காது ஓரமாக புரளி பேச தொடங்கினர்.

இப்படி நடப்பதை கவனித்த ஸ்ரீ கிருஷ்ணர், நம்மை பற்றி தான் ஏதோ பேசுகிறார்கள் என்று அறிந்து, ஒரு நாள், ஒரு யாதவனை கூப்பிட்டு,
"என்ன நடக்கிறது இங்கே? என்னை பார்த்தால் முறைக்கிறார்கள். ஏதோ காதுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
என்னை பற்றி என்ன பேச்சு நடக்கிறது?" என்று கேட்க,
"உங்களை பற்றி நாங்கள் ஒன்றும் பேசவில்லையே!!"
என்று அந்த யாதவன் சமாளிக்க,
"என்னை பற்றி தான் பேசுகிறீர்கள். என்ன விஷயமாக பேசுகிறீர்கள்?
தவறான விஷயமாக இருந்தால் திருத்தி கொள்வேன். சரியான விஷயமாக இருந்தால், அதை நானே விளக்க வேண்டிய கடமையும் உள்ளது. ஆகவே உண்மையை சொல்" என்று பகவான் கேட்க,
"நாங்கள் ஒன்றும் உங்களை பற்றி குறை சொல்லவில்லை.
சத்ரார்ஜித் தான், உங்களை பற்றி ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறான்.
அன்று ஒருநாள், சத்ரார்ஜித் ஸ்யமந்தக மணியை உங்களுக்கு காட்ட வந்த போது, நீங்கள் அதை வைத்துக்கொள்வதாக கேட்டுக்கொண்டீர்களே !
இன்று அந்த ஸ்யமந்தக மணியை காணவில்லை. மேலும் அவன் தம்பி "ப்ரசேனனையும்" காணவில்லை.
அவன் தம்பியை கொன்று விட்டு, ஸ்யமந்தக மணியை நீங்கள் தான்  திருடி விட்டீர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறான்" என்று அந்த யாதவன் சொன்னான்.

உண்மையில் இவனை போன்ற யாதவன் தான் இப்படியெல்லாம், புரளி கிளப்பி, சத்ரார்ஜித் வரை நம்ப வைத்தது.

ஸ்ரீகிருஷ்ணருக்கு பயந்து, முழு பழியை சத்ரார்ஜித் மீது போட்டான்.

ஸ்ரீ கிருஷ்ணரின் கீதை மட்டும் நமக்கு உபதேசம் அல்ல.
அவர் சரித்திரம் முழுவதுமே நமக்கு பாடம்.
எப்படி இந்த உலக மக்களோடு பழக வேண்டும், எப்படி பழக கூடாது என்று அனைத்தையும் காட்டுகிறார்.

ஒருவர் வீட்டுக்கு நாம் சென்றால் அவர் வீட்டில் ஏதாவது பொருளையோ, நகையையோ பார்த்து, "அடடே..  இது ரொம்ப அழகா இருக்கே. எங்கே வாங்கினீர்கள் என்று உடனே கேட்டு விட கூடாது".
ஒரு வேளை நாம் பேசி முடித்து பின், அந்த பொருள் தொலைந்து விட்டாலோ, உடைந்து விட்டாலோ, அதை பற்றி பேசிய காரணத்திற்காகவே நம் மீது குற்றம் பேசிவிடுவார்கள்.

"இவன் தான் இந்த நகையை பற்றியே விஜாரித்தான்.  இப்போது நகையை காணவில்லை. இவன் தான் எடுத்து இருப்பான் என்று திருட்டு பட்டம் கூட சாட்டிவிடுவார்கள்".

இப்படி இன்னொருவர் வீட்டில் போய், "இது நன்றாக இருக்கே? எங்கு வாங்கினீர்கள்?" என்று கேட்பது கூட நமக்கு கௌரவ குறைச்சல் தானே ?

உலக விஷயங்களில் ஜாக்கிரதையாக பழக வேண்டும் என்பதை காட்ட, எப்படி பழக கூடாது என்று பகவான் செய்த லீலை இது.

தான் அந்த ஸ்யமந்தக மணியை பாதுகாப்பாக வைத்து இருக்கிறேன் என்று என்றோ ஒரு நாள் சொன்னதற்கு, தொலைந்து போனதும் ஸ்ரீ கிருஷ்ணர் தான் திருடி விட்டார் என்று சொல்லும் அளவுக்கு யாதவர்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மக்கள் பலவிதமாக தான் இருப்பார்கள் என்று தெரிந்து தான் அவதாரம் செய்கிறார்.
இப்படி தன் மீது சிலர் பாராட்டுவதும், சிலர் திருட்டு பழி போடுவது, என்று எதையும் சமமாக தான் பார்க்கிறார்.
இதை லட்சியம் செய்ய கூட தேவையில்லை.

இருந்தாலும், உத்தவன் போன்ற பக்தர்கள், பகவானுக்கு இப்படி ஒரு பழி வந்து விட்டதே என்று கண் கலங்கினர்.

பக்தன் மனம் வருந்த கூடாது என்பதால், ஸ்ரீ கிருஷ்ணர் தான் அதை எடுக்க வில்லை என்று நிரூபணம் செய்ய, ப்ரசேனன் என்ன ஆனான்? அவன் வைத்து இருந்த ஸ்யமந்தக மணி என்ன ஆனது என்று பார்க்க தானே காட்டுக்குள் நுழைந்தார்.

துவாரகை குஜாராத்தில் உள்ளது.
அடர்ந்த காட்டில் பல நாட்கள் அலைந்து எங்கு போனான் ப்ரசேனன் என்று தேடினார்.

ஒரு இடத்தில் இவன் சடலம் கிடந்தது.
உண்மையில், இவனை காட்டில் ஒரு சிங்கம் அடித்து கொன்று போட்டு இருந்தது.
இவன் கழுத்தில் ஸ்யமந்தக மணி இல்லாமல் இருக்க, அந்த சிங்கம் கவ்விக்கொண்டு எங்காவது போட்டு விட்டதா என்று மேலும் பல இடங்களில் தேட ஆரம்பித்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

ஒரு இடத்தில் ஒரு சிங்கம் அடிபட்டு இறந்து கிடந்தது. அங்கு ஒரு கரடியின் கால் தடம் தெரிந்தது.

கரடியுடன் இந்த சிங்கம் சண்டை போட்டு இறந்துள்ளது என்று ஊகித்த கிருஷ்ணர், அந்த கரடி இந்த சிங்கத்தை அடித்து கொன்று இருக்க வேண்டும், மேலும் ஸ்யமந்தக மணியை எடுத்து சென்று இருக்க வேண்டும் என்று, மேலும் தேடலானார்.

இப்படியே அலைந்து தேடி கொண்டிருக்க, ஒரு பெரிய குகை தென்பட்டது.
குகைக்குள் தான் கரடி இருக்க வேண்டும் என்று உணர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணர் தன் படைகளை ஊருக்கு திரும்ப சொல்லி, தான் உள்ளே சென்று பார்த்து வருவதாக சொன்னார்.

அனைவரையும் அனுப்பியதற்கு காரணம் இருந்தது.
த்ரேதா யுகத்தில், ஸ்ரீ ராமராக தான் அவதாரம் செய்ய போவதாக தேவர்களுக்கு அபயம் கொடுத்த பின், தேவர்கள் அனைவரும் வானரர்களாக, ஜாம்பவானாக அவதாரம் செய்தனர்.

சிரஞ்சீவியாக பூலோகத்தில் இருக்க ஹனுமானுக்கு ஸ்ரீ ராமர் அணுகிரஹம் செய்து விட்டார்.
இவருடன், தேவ அவதாரமான ஜாம்பவானும் ஸ்ரீ ராமரின் அடுத்த அவதாரத்தை பார்க்க பூலோகத்திலேயே இருந்தார்.

இவர் தான் கரடியாக அவதாரம் செய்தவர். தேவைப்பட்டால் கரடி ரூபம் எடுத்து வெளி உலகிற்கு தெரிவார்கள். தேவைப்பட்டால் மனித ரூபம் எடுத்துக்கொள்வார்கள்.
இவர் குகைக்குள் தான் ஸ்ரீ கிருஷ்ணர் நுழைந்தார்.

தன் தரிசனம் கிடைக்க ஆசைப்பட்டு காத்து இருக்கும் ஜாம்பவானுக்காக தானே வந்தார்.

ஜாம்பவான் தங்கி இருந்த அந்த இடம் தான், இப்போது ராணாவாவ் (Ranavav, Gujarat).

ராமாயண காலத்தில், ஜாம்பவான் தங்கி தியானம் செய்த இடம் தான் இப்போது அவர் பெயரிலேயே  ஜம்மு என்று இப்போது அழைக்கிறோம். ஜம்மு (Jammu)
ஜம்முவில் "PEER Kho Cave Temple" (Jamwant Cave) என்ற இடத்தில் இவருக்கு ஒரு கோவில் உள்ளது.




அந்த குகைக்குள் (ராணாவாவ் (Ranavav, Gujarat)) நுழைந்த ஸ்ரீ கிருஷ்ணர், உள்ளே ஒரு அரண்மனை இருப்பதை கண்டார்.
அரண்மனை உள்ளே ஒரு சிறுவன் கையில் அந்த ஸ்யமந்தக மணி இருந்தது. அதை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தான்.
அவன் அருகில் ஒரு பெண் இருந்தாள். வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை.

"சரி, இங்கு ஒன்றும் போருக்கு அவசியமில்லை. அந்த பெண் அந்த சிறுவனை விட்டு சிறிது அங்கு இங்கு விலகி சென்றாலும், அமைதியாக அந்த மணியை எடுத்துக்கொண்டு சென்று விடுவோம்" என்று தீர்மானித்து, ஸ்ரீ கிருஷ்ணர் ஓரமாக மறைந்து நின்று கொண்டார்.

எத்தனை நேரம் தான் ஒளிந்து நின்று கொண்டே இருப்பது?
ஒரு காலை இன்னொரு காலில் போட்டு ஸ்டைலாக நின்றே பழக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர், தன் ஒரு காலை தூக்கி மாற்றி வைக்க, அவர் சரணத்தில் (காலில்)  அணிந்திருந்த நூபுரம் கலீர் என்று ஓசை எழுப்ப, அந்த பெண் என்ன சத்தம் என்று திரும்பி பார்த்து விட்டாள்.

யாரோ ஒருவர் நீல ஜ்வாலையாக ஒளிந்து நிற்பதை பார்த்து, பதறி
உடனே,
"அப்பா.. அப்பா..  இங்கே யாரோ நிற்கிறார்கள்" என்று கூற, அங்கு கரடி ரூபத்துடன் வந்து விட்டார் ஜாம்பவான்.
அதிகம் வயதான கரடி, மகா குண்டனாக இருந்தார்.
ஒளிந்து இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து,
"யாரடா நீ?" என்று கேட்க
"இந்த மணி என்னுடையது. அதை எடுத்து போகவே வந்தேன்"
என்றார் பகவான்.

"நீ யார் என்று முதலில் சொல்" என்று குரலை உயர்த்த,
"நான் துவாரகாதீசன். கிருஷ்ணன்" என்றார்.

உடனே கோபத்தில்,
"நான் கரடி. ஒரு பெரிய சிங்கத்திடம் சண்டையிட்டு அதன் வாயை பிளந்து இந்த மணியை கொண்டு வந்து இருக்கிறேன்.
க்ஷத்ரியனான நீ, வீரமாக சண்டையிட்டு வாங்கி செல்லாமல், ஒளிந்து நின்று எடுத்து போக பார்த்தாயா?
என்று கேட்க,
பவ்யத்துடன்,
"அப்படியானால், தேவரீரை அடித்து மணியை எடுத்து கொண்டு செல்லலாமா?"
என்றார் ஸ்ரீ கிருஷ்ணன்.

முடிந்தால் ஜெயித்துப்பார் என்று ஜாம்பவான் சண்டைக்கு கிளம்ப, ஸ்ரீ கிருஷ்ணருக்கும், ஜாம்பவானுக்கும் பெரிய யுத்தம் உண்டானது.

யுத்தம் நடக்க ஆரம்பிக்க, இது ஒரு கிழ கரடி என்று நினைத்தால், கிழ கரடியாகவே யுத்தம் செய்யவில்லை.

ராமாயண காலத்தில் என்ன பலத்துடன் சண்டை போட்டாரோ அது போல, மரத்தையும், மலையையும் தூக்கி அடித்து சண்டை போட தொடங்கினார் ஜாம்பவான்.
7வயதில் கோவர்த்தன மலையையே தூக்கிய கிருஷ்ணரும் சளைக்காமல் யுத்தம் செய்தார்.

அங்கு இருந்த மரம், மலைகள் எல்லாம் உடைந்து போக, ஒன்றும் கிடைக்காத நிலையில் இருவரும் மல்யுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.

இரவு பகல் பாராமல், ஓய்வே இல்லாமல் 28 நாட்கள் தொடர்ந்து சண்டை நடந்து கொண்டே இருந்தது. இருவருமே சளைக்காமல் யுத்தம் செய்தனர்.
28வது நாளில், ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு குத்து விட, அவர் உடம்பு களைத்து, சலைத்து விட்டது.

"எவர் தன் புருவத்தையே வில் போல வளைத்து, கண்ணையே அம்பு போல குறிவைத்து, சமுத்திரத்தை ஒரு பார்வை பார்த்ததும், அந்த சமுத்திர அரசனே ஸ்ரீ ராமரிடம் வந்து சரணாகதி செய்தானோ,

எவர் ஆச்சர்யமான சேது (பாலம்) நிர்மானித்தாரோ.

எவர் கோதண்டபாணியாக இருந்து, பன மரத்தில் உள்ள பனம் பழங்களை உதிர்ப்பது போல ராவணனின் பத்து தலைகளையும் கீழே உதிர்த்தாரோ,

அத்தகைய கோதண்டபாணியான என் பிரபு "ஸ்ரீ ராமர்" காட்டிய பல பராக்ரமத்தை போல, இப்படி சளைக்காமல் என்னுடன் யுத்தம் செய்யும் நீ யார்?"
என்று கேட்க,
நீல மேகமாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணர், கோதண்டபாணியாக தரிசனம் கொடுத்தார்.

ஸ்ரீ ராமராக தரிசனம் கிடைத்ததும், ஜாம்பவான் உடனே ஸ்ரீ கிருஷ்ணர் சரணத்தில் விழுந்தார்.

கண்ணீருடன்,
"ஸ்வாமி ! இது ஒரு திருவிளையாடலா?
என்னோடு சண்டை போடுவதற்கு என்று வந்தீரா?
ஏன் இப்படி யுத்தம் செய்ய சங்கல்பித்தீர்?"
என்று கேட்க,
"ஜாம்பவான் ! ராமாயண யுத்தத்தில் உங்களுக்கு பெரும்பாலும் யுத்தம் செய்ய வாய்ப்பு இல்லாமல் இருந்தது.
அது ஒரு குறையாக இருந்தது உங்களுக்கு.
அந்த சமயத்தில், நான் உமக்கு சொன்னேன், உமக்கு சமமான வீரன் நான் ஒருவன் மட்டுமே, ஆதலால், வேண்டுமானால், நீரும் நானும் கொஞ்சம் யுத்தம் செய்வோம் வாரும்! என்று அழைத்தேன்.

ஆனால் நீங்களோ, "தேவரீரோடு யுத்தம் செய்வதாவது?" என்று மறுத்து விட்டீர்.

நீர் போனாலும்,உங்களோடு ஒரு முறையாவது யுத்தம் செய்யவேண்டும் என்று ஆசை இருந்தது.

ராம அவதாரத்தில் இதை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைக்காமல் போக, இந்த அவதாரத்தில் விளையாட்டாக யுத்தம் செய்யலாமே என்று யுத்தம் செய்தேன். இப்பொழுது உங்களை ஜெயித்து விட்டேன். இந்த மணி இனி என்னுடையது தானே?" என்று மந்தஹாசத்துடன் கேட்டார்.

ஜாம்பவான், தன்னிடம் இருந்த ஸ்யமந்தக மணியை ஸ்ரீ கிருஷ்ணருக்கு சமர்ப்பித்தார்.
அங்கு இருந்த தன் பெண் "ஜாம்பவதியை" ஸ்ரீ கிருஷ்ணருக்கு மணம் முடித்து கொடுத்தார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஜாம்பவதியுடன், ஸ்யமந்தக மணியோடு துவாரகை திரும்பினார்.

ஸ்யமந்தக மணியை சபை கூட்டி, ஸ்ரீ கிருஷ்ணர், எல்லோர் முன்னிலையில் சத்ரார்ஜித்தை அழைத்து,
"சத்ரார்ஜித் ! க்ஷத்ரிய தர்மப்படி, யார் ஒரு பொருளை கைப்பற்றுகிறானோ, அவனுக்கு அது சொந்தமாகிவிடும்.
நீ ஸ்யமந்தக மணியை தொலைத்து விட்டாய்.
நடந்ததை கேள். உன் தம்பியை காட்டில் ஒரு சிங்கம் அடித்து விட்டது. அந்த சிங்கத்தை ஜாம்பவான் அடித்து விட்டார். அவரிடம் இருந்து நான் யுத்தம் செய்து வாங்கி வந்தேன்.
க்ஷத்ரிய தர்மப்படி, இரண்டு காரணங்களால் எனக்கு இது சொந்தம்.
ஜாம்பவதியை மணந்து கொண்டதால், அவளுடைய சீதனமாகவும் எனக்கு வந்து இருக்கிறது.
நான் சம்பாதித்த தனமாகவும் இது வந்து இருக்கிறது.

இப்படி க்ஷத்ரிய தர்மப்படி எனக்கு சொந்தம் என்று ஆனாலும், நீ இதை சூரிய உபாசனை செய்து பெற்றதால், உன் உபாசனைக்காக இந்த ஸ்யமந்தக மணியை உனக்கே தருகிறேன். வாங்கிக்கொள்!"
என்று தந்து விட்டார்.




சத்ரார்ஜித் ஸ்யமந்தக மணியை வாங்கி கொண்டு, அரண்மனை விட்டு வெளியே நடக்க, அதுவரை ஸ்ரீ கிருஷ்ணன் தான் திருடி விட்டான் என்று  பேசிக்கொண்டிருந்த அதே யாதவர்கள், சத்ரார்ஜித்தை பார்த்து,
"ஸ்ரீ கிருஷ்ணர், பகவான் என்று தெரியாதா?
அவரை போய் திருடன் என்று குறை சொன்னாயே !!
உறுப்புடுவாயா நீ? "
என்று அப்படியே மாற்றி பேச ஆரம்பித்தனர்.

சத்ரார்ஜித் இந்த யாதவர்களை பார்த்து திகைத்தான்.
இப்படி ஸ்ரீ கிருஷ்ணன் பக்கம் பேச ஆரம்பித்து விட்டார்களே !!
துவாரகாதீசன் ஸ்ரீ கிருஷ்ணன் கூட இந்த விஷயத்தை மறந்தாலும், இந்த யாதவர்கள் விட மாட்டார்களே !!
தன் மனைவியிடம் போய் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தான்.

அவன் மனைவி,
"ஸ்ரீ கிருஷ்ணனுக்கு, நம் பெண் 'சத்யபாமா'வை கல்யாணம் செய்து கொடுத்து விடுவோம்.
பின்னர், அவருக்கு மாமனார் என்ற அந்தஸ்து உங்களுக்கு வந்து விடும். பின்னர் இந்த யாதவர்கள் ஒன்றும் செய்து விட முடியாது." என்றாள்.

இவள் யோசனை சரியாகபடவே, உடனே ஸ்ரீ கிருஷ்ணரை பார்க்க சென்றான்.

"என் குழந்தை "சத்யபாமா"வை உங்களுக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். ஏற்று கொள்ள வேண்டும்" என்றான்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சம்மதம் என்றார்.
உயர்ந்த குணமும், அழகும் உடையவளாக இருந்தாள் சத்யபாமா.

சத்யபாமாவை மணம் செய்து கொண்டார் ஸ்ரீ கிருஷ்ணன்.
சீதனமாக சத்ரார்ஜித் ஸ்யமந்தக மணியை கொடுக்க வர, "வேண்டாம். அது உன்னிடமே இருக்கட்டும். நீர் எனக்கு மாமனார் ஆகி போனதால், என்னிடம் இருந்தால் என்ன, உங்களிடம் இருந்தால் என்ன. நீரே வைத்துக்கொள்ளும்" என்று சொன்னார்.


Thursday 13 April 2017

ஸனாதன தர்மம், யாரையும் அயோக்கியன் என்று சொல்வதில்லை. ஆச்சர்யமான பரந்த எண்ணம் கொண்டது நம் தர்மம்.

நம் ஸனாதன தர்மம், யாரையும் "அயோக்கியன்" என்று சொல்வதில்லை.
உண்மையில் யாருமே இந்த உலகத்தில் அயோக்கியன் இல்லை என்று கூட சொல்கிறது.


இந்த ஸ்லோகம் படிக்கும் போதே, எப்படி மனிதனை உயர்த்தி சொல்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

अयोग्यः पुरुषो नास्ति योजकस्तत्र दुर्लभः॥

அயோக்கிய: புருஷோ நாஸ்தி |
யோஜக தத்ர துர்லப: ||
யாருமே இந்த உலகத்தில் அயோக்கியன் இல்லை. 
அந்த அயோக்கியனிடமும் ஒளிந்து உள்ள  ஈஸ்வரனை, நல்ல குணத்தை, வெளியே கொண்டு வர அவனுக்கு ஒரு குரு இல்லாததே இவன் அயோக்கியன் போல தென்படுவதற்கு காரணம் என்று சொல்கிறது.

தன்னிடம் ஒளிந்து உள்ள நல்ல எண்ணங்களை வெளிப்படுத்த உதவி செய்யும், ஞானிகள் (குரு) கிடைப்பதே அரிது என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.

அப்படிப்பட்ட ஞானத்தில் உயர்ந்த ஒரு குரு, ஒரு அயோக்கியனை பார்க்கும் போது, அவனும் தான் புண்ணிய ஆத்மாவே என்று உணர்வான், திருந்துவான்.

அயோக்கியனுக்கு, அவனிடம் உள்ள நல்லதை எடுத்து காட்டும், உண்மையான குரு கிடைப்பதே அரிது.
வேடுவனாக கொலை கொள்ளை என்று வாழ்ந்த ருக்ஷன், நாரதரை தரிசித்த பின், வால்மீகி ரிஷி ஆனார் என்று பார்க்கிறோம்.

ஸனாதன தர்மம், யாரையும் அயோக்கியன் என்று சொல்வதில்லை. ஆச்சர்யமான பரந்த எண்ணம் கொண்டது நம் தர்மம்.


There no person who is worthless, but,
Rare indeed is the nourisher of talents.

Explained by சாரதா பீட புது ஆச்சர்யாள்.
sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka