Followers

Search Here...

Showing posts with label பீஷ்மர். Show all posts
Showing posts with label பீஷ்மர். Show all posts

Friday 28 July 2023

பீஷ்மர் - 8 வஸுக்களின் அம்சமாகவே பிறந்தார். பீஷ்மரின் பிறப்பு ரகசியம் தெரிந்து கொள்வோமே! - வ்யாஸ மஹாபாரதம்

வியாஸரின் சிஷ்யர் "வைஸம்பாயனர்", ஜனமேஜயனுக்கு அவன் குடும்ப கதையை சொல்கிறார்.

சத்தியம் தவறாத, தோல்வியே அடையாத "மஹாபிஷக்" என்று பெயர் பெற்ற இக்ஷ்வாகு அரசன் ஒருவர் இருந்தார்.

इक्ष्वाकुवंशप्रभो राजासीत्पृथिवीपतिः।

महाभिषगिति ख्यातः सत्यवाक्सत्यविक्रमः।।

- வியாசர் மஹாபாரதம்

அவர் 1000 அஸ்வமேத யாகம் செய்து, 100 ராஜசூய யாகம் செய்து தேவேந்திரனை திருப்தி செய்து இருந்தார்.

அந்த அரசன் பூலோகத்தில் தேகத்தை விட்டு பிரிந்த பிறகு,  மேலுலகில் இருந்தார்.

सोऽश्वमेधसहस्रेण राजसूयशतेन च।

तोषयामास देवेशं स्वर्गं लेभे ततः प्रभुः।।

- வியாசர் மஹாபாரதம்


ஒரு சமயம் தேவர்கள் ப்ரம்ம லோகம் சென்று ப்ரம்ம தேவனை தரிசித்தனர்.

அங்கே ராஜ ரிஷிகளும் இருந்தனர். இந்த மஹாபிஷக் என்ற அரசரும் இருந்தார்.

ततः कदाचिद्ब्रह्माणमुपासांचक्रिरे सुराः।

तत्र राजर्षयो ह्यासन्स च राजा महाभिषक्।।

- வியாசர் மஹாபாரதம்


அப்பொழுது, நதிகளில் சிறந்தவளான கங்கை ப்ரம்மதேவனை தரிசிக்க வந்தாள்.

அப்போது, சந்திரன் போன்ற நிறத்தில் அவள் அணிந்திருந்த பட்டாடை சிறிது காற்றில் சிறிது விலகியது.

अथ गङ्गा सरिच्छ्रेष्ठा समुपायात्पितामहम्।

तस्या वासः समुद्धूतं मारुतेन शशिप्रभम्।।

- வியாசர் மஹாபாரதம்


உடனே அங்கிருந்த தேவர்கள் அனைவரும் தலை குனிந்து கொண்டனர்.

மஹாபிஷக் என்ற இந்த ராஜரிஷி மட்டும் கங்கையை பார்த்து கொண்டே இருந்தார்.

ततोऽभवन्सुरगणाः सहसाऽवाङ्मुखास्तदा।

महाभिषक्तु राजर्षिरशङ्को दृष्टवान्नदीम्।।

- வியாசர் மஹாபாரதம்

இதை கண்ட ப்ரம்ம தேவர், மஹாபிஷக்கை கடிந்து கொண்டார்.

பிரம்மதேவர், "நீ மனிதனாக பிறந்து, பிறகு மீண்டும் நல்ல லோகங்களை அடைவாய்.

மூடனே!  எந்த கங்கையை கண்டு உன் மனம் மயங்கியதோ, அதே கங்கையானவள் மனித லோகத்தில் உனக்கு பிடிக்காததை செய்ய போகிறாள்.

அவள் செயலை கண்டு உனக்கு எப்போது உனக்கு கோபம் வருமோ, அப்பொழுது நீ சாபத்திலிருந்து விடுபடுவாய்." என்று கடிந்து சொன்னார்.

सोपध्यातो भगवता ब्रह्मणा तु महाभिषक्।

उक्तश्च जातो मर्त्येषु पुनर्लोकानवाप्स्यसि।।

यया हृतमनाश्चासि गङ्गया त्वं हि दुर्मते।

सा ते वै मानुषे लोके विप्रियाण्याचरिष्यति।

यदा ते भविता मन्युस्तदा शापाद्विमोक्ष्यते।।

- வியாசர் மஹாபாரதம்


இப்படி சபித்ததும், மனுஷ்ய லோகத்தில் உள்ள ராஜ ரிஷிகளையும், அரசர்களையும் பார்த்த மஹாபிஷக், அங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கும் "பிரதீபன்" என்ற அரசனை தனக்கு தகப்பனாக ஏற்றார்.

स चिन्तयित्वा नृपतिर्नृपानन्यांस्तपोधनान्।।

प्रतीपं रोचयामास पितरं भूरितेजसम्।

- வியாசர் மஹாபாரதம்


மனதை கட்டுப்படுத்த முடியாமல் தன்னையே பார்த்து கொண்டிருந்த மஹாபிஷக்கை நினைத்து கொண்டே கங்கை திரும்பி சென்றாள்.

सा महाभिषजं दृष्ट्वा नदी दैर्याच्च्युतं नृपम्।।  

- வியாசர் மஹாபாரதம்

ஜனமேஜயா! 

அவள் செல்லும் போது, சொர்க்க லோகத்தில் தேவர்களில் ஒருவர்களான 8 வஸுக்கள் உடல் பொலிவு குன்றி, அறிவு கலங்கி நிற்பதை கண்டாள். உடனே அவர்களை பார்த்து, "ஏன் இப்படி நிறம் மாறி காணப்படுகிறீர்கள்? நீங்கள் நலம் தானே?" என்று விஜாரித்தாள்.

तमेव मनसा ध्यायन्त्युपावृत्ता सरिद्वरा।

सा तु विध्वस्तवपुषः कश्मलाभिहतान्नृप।।

ददर्श पथि गच्छन्ती वसून्देवान्दिवौकसः।

तथारूपांश्च तान्दृष्ट्वा प्रपच्छ सरितां वरा।।

किमिदं नष्टरूपाः स्थ कच्चित्क्षेमं दिवौकसाम्।

- வியாசர் மஹாபாரதம்


தேவர்களாகிய வசுக்கள், கங்கையை பார்த்து, "மஹா நதியே! நாங்கள் விளையாட்டாக வஸிஷ்டருக்கு செய்த சிறு தவறினால் இப்படி ஆகி இருக்கிறோம்.

முன்பு, நான் அறியாமல் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த வஸிஷ்டருக்கு இடைஞ்சல் செய்தோம்.

உடனே அவர் கோபத்தினால், "நீங்கள் மானிட உலகத்தில் கர்ப்பவாசம் செய்வீர்கள்" என்று சபித்து விட்டார்.

வேத வாக்குள்ள அவர் என்ன சொன்னாலும் பலிக்கும். அதை மாற்றவும் இயலாது.

கங்கா தேவியான நீயே பூலோகத்தில் எங்களை புத்திரர்களாக பெற வேண்டும். மனித பெண் கர்ப்பத்தில் நாங்கள் வசிக்க மாட்டோம்." என்றனர். இப்படி 8 வஸுக்களும் கேட்டு கொண்டதும், "அப்படியே ஆகட்டும்" என்றாள் கங்காதேவி.

तामूचुर्वसवो देवाः शप्ताः स्मो वै महानदि।।

अल्पेऽपराधे संरम्भाद्वसिष्ठेन महात्मना।

विमूढा हि वयं सर्वे प्रच्छन्नमृषिसत्तमम्।।

सन्ध्यां वसिष्ठमासीनं तमत्यभिसृताः पुरा।

तेन कोपाद्वयं शप्ता योनौ संभवतेति ह।।

न तच्छक्यं निवर्तयितुं यदुक्तं ब्रह्मवादिना।

त्वमस्मान्मानुषी भूत्वा सूष्व पुत्रान्वसून्भुवि।।

न मानुषीणां जठरं प्रविशेम वयं शुभे।

इत्युक्ता तैश्च वसुभिस्तथेत्युक्त्वाऽब्रवीदिदम्।।

- வியாசர் மஹாபாரதம்


"மனிதர்களில் எந்த புருஷன் உங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.

मर्त्येषु पुरुषश्रेष्ठः को वः कर्ता भविष्यति।

- வியாசர் மஹாபாரதம்


அதற்கு வஸுக்கள், "ப்ரதீபனுடைய பிள்ளையாக சாந்தனு என்னும் அரசன் பிறந்து பெரும் புகழ் பெறுவான். மனித லோகத்தில் அவன் மூலம் நாங்கள் வர நினைக்கிறோம்" என்றனர்.

प्रतीपस्य सुतो राजा शान्तनुर्लोकविश्रुतः।

भविता मानुषे लोके स नः कर्ता भविष्यति।।

- வியாசர் மஹாபாரதம்

உடனே கங்கை, "தேவர்களே! நீங்கள் என்னிடம் என்ன சொன்னேர்களோ, அதற்கு நான் சம்மதிக்கிறேன். அந்த அரசனுக்கும், உங்களுக்கும் விருப்பமான காரியத்தை நான் செய்வேன்" என்று சொன்னாள்.

ममाप्येवं मतं देवा यथा मां वदथानघाः।

प्रियं तस्य करिष्यामि युष्माकं चेतदीप्सितम्।।

- வியாசர் மஹாபாரதம்


உடனே வஸுக்கள், "மூன்று லோகங்களும் செல்பவளே! நீண்ட காலம் இந்த சாபத்தை நாங்கள் அனுபவிக்க விரும்பவில்லை. ஆதலால், உனக்கு பிறந்த பிள்ளைகளை பிறந்தவுடனே ஜலத்தில் போட்டு விட வேண்டும். புத்தியில்லாத நாங்கள் வஸிஷ்டர் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்த போது, அவருடைய பசுவை பிடிக்க விரும்பி முயற்சி செய்ய, அந்த ப்ரம்மரிஷியால் சபிக்கப்பட்டு இருக்கிறோம். அப்படி சபிக்கப்பட்ட எங்களை நீ உடனே விடுவித்து விட வேண்டும்" என்று கேட்டு கொண்டனர்.

जातान्कुमारान्स्वानप्सु प्रक्षेप्तुं वै त्वमर्हसि।

यथा नचिरकालं नो निष्कृतिः स्यात्त्रिलोकगे।।

जिघृक्षवो वयं सर्वे सुरभिं मन्दबुद्धयः।

शप्ता ब्रह्मर्षिणा तेन तांस्त्वं मोचय चाशु नः।।

- வியாசர் மஹாபாரதம்


இதை கேட்ட கங்காதேவி, "அப்படியே செய்கிறேன். ஆனாலும், (சாந்தனு) அரசனுக்கு பிள்ளையில்லாமல் செய்ய கூடாது. அவருக்கு ஒரு பிள்ளையாவது நிறுத்த வேண்டும். என்னிடம் புத்திரனை எதிர்பார்த்து சேர்ந்த அந்த அரசன் வீண் போக கூடாது" என்றாள்.

एवमेतत्करिष्यामि पुत्रस्तस्य विधीयताम्।

नास्य मोघः सङ्गमः स्यात्पुत्रहेतोर्मया सह।।

- வியாசர் மஹாபாரதம்


அதற்கு அந்த வஸுக்கள், "நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் சக்தியில் 4ல் ஒரு பாகத்தை கொடுக்கிறோம். அந்த சக்தியுடன் உங்களுக்கும் அந்த அரசனுக்கும் பிரியமான புத்திரன் ஒருவன் நிலைப்பான். ஆனால், அவன் மனித லோகத்தில் சந்ததியை உருவாக்க மாட்டான். அதனால், உன்னுடைய வீரமிகு புத்திரனுக்கு புத்திரன் உண்டாக மாட்டான்" என்று சொன்னார்கள். இவ்வாறு கங்கா தேவியுடன் உடன்படிக்கை செய்து கொண்டு, வஸுக்கள் சென்றனர்.

तुरीयार्धं प्रदास्यामो वीर्यस्यैकैकशो वयम्।

तेन वीर्येण पुत्रस्ते भविता तस्य चेप्सितः।।

न संपत्स्यति मर्त्येषु पुनस्तस्य तु सन्ततिः।

तस्मादपुत्रः पुत्रस्ते भविष्यति स वीर्यवान्।।

- வியாசர் மஹாபாரதம்

Tuesday 28 June 2022

ஹிந்துக்கள் பயன்படுத்த தவறிய ராஜ தர்மம். அந்நியர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ராஜ தர்மம். அது என்ன...அறிவோம். ஒரு எதிரியை சமாளிப்பது எப்படி? ஒரே சமயத்தில், இரண்டு எதிரிகளை சமாளிப்பது எப்படி? அறிவோம் ராஜ தர்மம்.

பிரித்து ஆளும் கொள்கை (பேத நீதி) 

 • ஹிந்துக்கள் பயன்படுத்த தவறிய ராஜ தர்மம்.
 • ஹிந்துக்கள் மீது அந்நியர்கள் பயன்படுத்தி இன்று வரை வெற்றி காணும், ராஜ தர்மம்.

ராஜ தர்மத்தில் "சமாதானம், தானம், பேதம், தண்டனை" என்ற 4 நீதிகள் உண்டு. 

'இந்த வரிசையில் தான் எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும்' என்பது விதி.


'தண்டனை நீதி, மற்ற மூன்று நீதியும் பயனற்று போகும் போது தான் செயல் படுத்தப்பட வேண்டும்' என்பது விதி.


ராஜ தர்மமான இந்த பேத நீதி கொள்கையை ஹிந்துக்கள் பயன்படுத்திய வரை, பாரத தேசம் அந்நியர்களுக்கு அடிபணியவில்லை

அதை சரியாக பயன்படுத்தாமல் போனதும், ஹிந்து தேசமான பாரத தேசம் பல துன்பங்களை எதிர்கொண்டது.

அந்நியர்கள் ஹிந்துக்கள் மீதே பேத நீதியை பயன்படுத்தி சக ஹிந்துக்களிடம் குழப்பத்தை, பொறாமையை ஏற்படுத்தி பிரித்தார்கள். 

'எட்டப்பன்' போன்ற ஹிந்துவை பேத நீதியை கொண்டு பிரித்து, வீரபாண்டிய கட்டபொம்மனை கொன்றார்கள். 

வெற்றி கண்டார்கள். இன்று வரை பேத நிதியை பயன்படுத்தி ஹிந்துக்களை பிரிக்கிறார்கள்.

எதிரிகளிடமிருந்து காத்து கொள்ள, பிரித்து ஆளும் கொள்கையை ஆழமாக புரிந்து கொள்வது அவசியம். 

ஹிந்துக்கள் ராஜ தர்மமான பேத நீதியை புரிந்து, பயன்படுத்த வேண்டும்.


இது சம்பந்தமாக, பீஷ்மரிடம் யுதிஷ்டிர மஹாராஜன் கேட்ட போது, இவ்வாறு பீஷ்மர் சொன்னார்.

क्षेत्रस्थेषु च सस्येषु शत्रॊर उपजपेन नरान

विनाशयेद वा सर्वस्वं बलेनाथ सवकेन वै

- மஹாபாரதம் (வியாசர்)

பல வழிகளை பயன்படுத்தி, எதிரியின் பக்கமுள்ள ஜனங்களை பிரிக்க (பேதம்) வேண்டும். இப்படி பிரிக்கப்பட்ட எதிரியின் மக்கள் கூட்டத்தை கொண்டே,  எதிரிகளை அழிக்க வேண்டும். தேவைப்பட்டால், சேனையையும் சேர்த்து கொண்டு அழிக்க வேண்டும்.

नदीषु मार्गेषु सदा संक्रमान् अवसादयेत्

जलं निस्रावयेत् सर्वम् अनिस्राव्यं च दूषयेत्

- மஹாபாரதம் (வியாசர்)

எதிரிகள் தேசத்துக்குள் நுழைய நதியில் போட்ட பாலங்களை உடைத்து விட வேண்டும். தாக்க வரும் எதிரிகளுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத படி, குளங்களை உடைத்து, அதில் உள்ள நீரை  ஓட செய்ய வேண்டும்.

तदात्वेनायतीभि: च विवदन् भूम्यनन्तरम्

प्रतीघातः परस्याजौ मित्र काले अपि उपस्थिते

- மஹாபாரதம் (வியாசர்)

நமது எதிரியிடம் பகை உள்ளவன் யார்? என்று தெரிந்து கொண்டு, நமது எதிரியை வெல்லத்தக்கவன் யார்? என்று தெரிந்து கொண்டு, அவர்களிடம் நாம் நட்பு செய்து கொண்டு வசிக்க வேண்டும்.


வியாசரின் மஹாபாரதம் படிக்கும் போது நமக்கு ராஜதர்மத்தின் வழிகள் தெரிந்து விடும். 

1.

நமக்கு ஒரே ஒரு எதிரி இருந்தால், எப்படி சமாளிக்க வேண்டும்? 

தண்ட நீதி முடிந்தவரை எடுக்க கூடாது. அது இரு பக்கமும் அழிவை தரும்.

முதலில் சமாதானம் பேசியும், தானம் செய்தும், பார்க்க வேண்டும். 

எதிரி அப்பொழுதும் அடங்கவில்லையென்றால், பிரித்து ஆளும் கொள்கையை ஹிந்துக்கள் கட்டாயம் நடைமுறை படுத்தவேண்டும். 

பேத நீதியை பயன்படுத்தாமல், தண்ட நீதியில் இறங்கவே கூடாது. 

இது ராஜதர்மம்.


எதிரியின் பக்கம் இருக்கும் மக்களை, பொறாமை, வெறுப்பு, ஏற்றத்தாழ்வு என்று பல வழிகள் மூலம் எதிரியின் மக்களை பிரித்து விட வேண்டும். 


இந்த நீதியை ஹிந்துக்கள் பயன்படுத்தாத காரணத்தால், இன்று தன்னை எதிர்ப்பவர்களை சமாளிக்க வழி புரியாமலும், ஹிந்துக்களிடையே ஒற்றுமையை பிறர் சீர்குலைப்பதை பார்த்து கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது. 


இந்த ராஜ தர்மத்தை, நம் மீது அந்நியர்கள் பயன்படுத்துகிறார்கள். நாம் நம்முடைய ராஜ தர்மமான பேத நீதியை பயன்படுத்துவதில்லை. 

இதை ஹிந்துக்கள் கவனிக்க வேண்டும்.


ஜாதி வித்யாசம் சொல்லி, தீண்டாமை சொல்லி, கல்வி மறுப்பு என்ற புரளியை கிளப்பி, பிராம்மண வெறுப்பை உண்டாக்கி, ஹிந்து தெய்வத்தை கேலி செய்து - மேலும் பல வழிகளை பயன்படுத்தி ஹிந்து மக்களை பிரித்து ஆளும் கொள்கையை இன்று வரை செய்கின்றனர். 

பீஷ்மர் காட்டிய அற்புதமான பேத நீதியை ஹிந்துக்கள் கடைபிடிப்பதில்லை. அந்நியர்கள் கடைபிடிக்கின்றனர்.

இதை கவனிக்க வேண்டும். 

இதை ஹிந்துக்கள் சரிவர திரும்ப பயன்படுத்தும் போது, எதிரியின் பலம் தானாக குறையும்.

2.

ஒரே சமயத்தில் இரண்டு எதிரிகள் நம்மை எதிர்த்தால் என்ன செய்வது? எப்படி பிரித்து ஆளும் கொள்கையை (பேத நீதி) பயன்படுத்த வேண்டும்?

இரண்டு எதிரிகள் சேர்ந்து நம்மை தாக்கும் போது, இருவரையும் நாம் தண்ட நீதி கொண்டு தாக்குவது என்பது சரியான வழி அல்ல.

முதலில் எதிரிகள் இருவரையும் பிரிக்க வேண்டும்.

அவர்கள் நட்பாக விடாமல், பிரித்து ஆளும் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.


ஒரு எதிரியிடம் மற்றொரு எதிரியின் எதிர்மறையான கொள்கையை காட்டி, அவர்களிடம் இருக்கும் பொறாமை, வெறுப்பை காட்டி உணர்ச்சியை தூண்ட வேண்டும். எதிரிகளுக்குள்ளே வெறுப்பை உண்டாக்க வேண்டும். 


இப்படியே இருவருக்கும் உள்ள பகையை வளர்த்து, அவர்களுக்குள் சண்டை ஏற்பட செய்ய வேண்டும்.


இப்படி சரியாக பேத நீதியை கையாளும் போது, நாம் சண்டையிட அவசியமில்லாமல், இவர்களே அடித்து கொண்டு மடிவார்கள்.


மஹாபாரத போர் முடிவான போது,

ஸ்ரீ கிருஷ்ணர்,

- சமாதானம் பேசி சண்டையை தடுக்க தூது சென்றார். பலிக்கவில்லை.

- 'தானமாக 5 கிராமம் மட்டும் கொடு, சண்டை வேண்டாம்' என்கிறார். அதுவும் பலிக்கவில்லை.

- துரியோதனனின் பக்கம் இருந்த கர்ணனிடம், 'அவன் தாய் யார்?' என்று சொல்லி பேதம் செய்ய முயற்சித்தார். துரியோதனன் பலத்தை குறைக்க பார்த்தார். அதுவும் பலிக்கவில்லை.

- இறுதியாக தண்ட நீதி எடுத்து பாண்டவர்கள் போர் செய்தனர். சாம, தான, பேத தர்மம் முயற்சி செய்த பிறகு போருக்கு வந்ததால், தெய்வமே பாண்டவர்கள் பக்கம் இருந்து, காப்பாற்றி, யுதிஷ்டிரனை அரசனாக்கினார்.

பேத நீதியை அதற்கு பிறகு ஹிந்துக்கள் கவனிக்காமல் விட்டனர்.

அந்நியர்கள் அனைவரும் இன்று வரை ஹிந்துக்கள் பேத நீதி பயன்படுத்தி, பிரித்து ஆளுகின்றனர்.


ஹிந்துக்கள் பேத நீதியை கையில் எடுக்கும் போது, எதிரிகள் தானாக குறைவார்கள்.  

Wednesday 11 November 2020

உத்தராயண காலத்தை எதிர்பார்த்து காத்திருந்த, பீஷமரின் ஹ்ருதயம் என்ன? பீஷ்மர் என்ன ஆசைப்பட்டார்?

உத்தராயண காலத்தை எதிர்பார்த்து காத்திருந்தார், பீஷ்மர்.

மற்றவர்களுக்கு இப்படி ஒரு காரணத்தை காட்டினாலும், மனதில் வேறு ஒரு ஆசையுடன் காத்து இருந்தார்.
கோடியில் ஒரு சில மகாத்மாக்களுக்கு தான், 'பிராணன் போகும் சமயத்தில், பகவானின் நினைவு' வரும்.

பிராணன் போகும் சமயத்தில், 'பகவத் தரிசனம் கிடைப்பது' என்பது அதை விட மஹா பாக்கியம்.

ப்ரம்மச்சர்யத்துடன் வாழ்ந்த பீஷ்மருக்கு, போர் சமயத்திலேயே இந்த பாக்கியம் கிடைத்தும், கை நழுவி போனது


'பீஷ்மர் பெண்ணுடன் போர் புரியவதில்லை' என்று கொள்கை கொண்டவர். 

அதே சமயம், 

ஸ்ரீ கிருஷ்ணர், 'பாரத போரில் ஆயுதம் எடுக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்து இருந்தார்.

9 நாட்கள் பாரத போரில், இரு பக்கமும் பேரிழப்பு ஏற்பட்டது. இருந்தாலும், "பாண்டவர்களில் ஒருவர் கூட கொல்லப்படாமல் இருப்பதற்கு காரணம் பீஷ்மரே" என்று குறை கூறினான், துரியோதனன்.


பீஷ்மர் துரியோதனனிடம் 'நாளைய போரில் பாண்டவர்களை கொல்வேன், என் போர் தடைப்படாமல் இருக்குமானால்!" என்று சபதம் செய்தார்.


அதே சமயம், 'பாண்டவர்கள் ஐவரை காப்பேன்' என்று வாக்கு கொடுத்து இருந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.


ஸ்ரீகிருஷ்ணர் 'பாண்டவர்களை காப்பாற்ற "சிகண்டியை" முன் நிறுத்தி பீஷ்மரின் போரை பங்கம் செய்வேன்' என்றார்.


இப்படி சாமர்த்தியம் செய்யும் ஸ்ரீ கிருஷ்ணர், 'எப்படி இருந்தாலும் 10வது நாள் போரில் தன்னை வீழ்த்தி விடுவார்' என்று புரிந்து கொண்டார் பீஷ்மர்.


ஆனால், 'சிகண்டி போன்றவர்கள் கையால் தான் வீழ்த்தப்பட கூடாது' என்று நினைத்தார். 

'நாளை வீழ போவது நிச்சயம் என்கிற போது, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் கையால் சாக வேண்டும். அவர் நினைவோடு, அவர் தரிசனத்தோடு உயிர் விட்டு விட வேண்டும்' என்று நினைத்து கொண்டார்.


உடனே பீஷ்மர், "கிருஷ்ணனை நாளைய போரில் ஆயுதம் எடுக்க வைப்பேன்" என்று சபதம் செய்தார்.


10வது நாள் போரில், பீஷ்மர் கிருஷ்ணனை ஆயுதம் எடுக்க வைத்து உயிரை விடுவதற்கு, படு பயங்கரமாக போர் புரிந்தார்.

10வது நாள் போரில், பாண்டவர்கள் பக்கம் பெரும் நாசம் ஏற்பட்டது..

ஆயிரக்கணக்கான போர் வீரர்கள், யானை படை, குதிரை படை நாசமானது.


பாண்டவர்கள் பக்கம் நடக்கும் பெரு நாசத்தை கண்டு, ஸ்ரீ கிருஷ்ணர் தன் ரதத்தை பீஷ்மரை நோக்கி செலுத்தினார்.

உத்வேகத்துடன் இருந்த பீஷ்மரை எதிர்க்க முடியாமல், அர்ஜுனனே திணறி போனான். 

சாரதியாக அமர்ந்து இருந்த கிருஷ்ணரை நோக்கி, சரமாரியாக அம்புகளை செலுத்தினார் பீஷ்மர்.

'அன்று பீஷ்மர் செய்த போரில், பார்த்தசாரதியின் மேல் பட்ட காயங்களை தான், திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி காட்டுகிறாரோ!' என்பது போல, அவர் திருமேனி உள்ளது.


அம்புகள் பட்டு ஸ்ரீ கிருஷ்ணர் திருமேனியில் ரத்தம் வழிய, அர்ஜுனன் 'ரதத்தை திருப்பு' என்று சொல்ல, 

'பீஷ்மரை இனியும் உயிரோடு விட்டால் பேராபத்து' என்று கடும் கோபம் கொண்டு, தன் சுருள் சுருளான முடிந்த கேசம் அவிழ்ந்தது கூட கவனிக்காமல், 'இனியும் பொறுக்க முடியாது' என்ற கடும் கோபத்துடன், சத்தியமே ஸ்வரூபமான, சத்தியத்தை மீறாத பரமாத்மா, தன் பக்தனாக இருக்கும் பீஷ்மர் செய்த சபதத்தை காக்க, தன் சத்தியத்தை மீறினார்.


தன் மேல்-அங்கவஸ்திரத்தை தான் சாரதியாக அமர்ந்து இருந்த இடத்தில் போட்டு விட்டு, நீல ஜோதியாக, கையில் சக்கரத்தை ஏந்தி, தேரிலிருந்து குதித்து பீஷ்மரை நோக்கி கடும் கோபத்துடன் ஓடி வந்தார். 

பீஷ்மரான தன் சபதத்தை காக்க, தன் சபதத்தை விட்டு கொடுத்த ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்தார். 

"நீல ஜோதியாக தன்னை நோக்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணரின் கையால் இன்று உயிரை விடும் பாக்கியம் கிடைத்ததே!" 

என்று பேரானந்தம் அடைந்த பீஷ்மர், தன் ஆயுதங்களை கீழே வைத்து, தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் வீழ்த்தட்டும் என்று நின்றார்.


அதற்குள், அர்ஜுனன் ஓடி வந்து ஸ்ரீ கிருஷ்ணரின் காலை பிடித்து கொண்டு, "கிருஷ்ணா! நீ இப்படி செய்ய கூடாது. ஆயுதம் எந்த மாட்டேன் என்று சபதம் செய்து இருக்கிறாய். பீஷ்ம தாத்தாவை கொல்லாதே! வா.. என்னுடன்.  தேரில் ஏறு.. நானே போர் செய்கிறேன்

என்று கட்டி பிடித்து இழுத்துக்கொண்டு தேரில் போய் அமர செய்தான்.


'தன் சத்தியத்தை காக்க, சத்ய ஸ்வரூபியான பரமாத்மா, தன் சத்தியத்தை கூட விட்டு விட துணிந்தாரே!!' என்று கண்ணீர் விட்டார் பீஷ்மர்.


அதே சமயம், "உயிர் போகும் சமயத்தில் பகவத் தரிசனம் என்ற வாய்ப்பை இழந்தோமே!" என்று ஒரு பக்கம் வருந்தினார்.

அன்றே, சிகண்டியை முன் நிறுத்தி, பீஷ்மரின் போரை பங்கம் செய்ய, அர்ஜுனன் பீஷ்மரை கீழே சாய்த்தான்.

அம்பு படுக்கையில் வீழ்ந்து கிடந்த பீஷ்மர், உயிரை விட சமயம் எதிர்பார்த்து காத்து இருந்தார்.

'ஸ்ரீ கிருஷ்ணர் கையால் வீழ்த்தப்பட்டு, கடைசி மூச்சு விடும் பாக்கியம் கிடைக்காமல் போனதே!! 

விரும்பிய போது மரணம் என்ற வரம் கொண்ட எனக்கு, மீண்டும் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் கிடைக்குமா?

என்று எதிர்பார்த்து காத்து இருந்தார்.


18 நாள் போர் முடிந்து, பங்காளிகள் அனைவருக்கும் தர்மபுத்ரரரே காரியங்கள் செய்து முடித்தார்.


தர்மபுத்ரர் பெரும் சோகத்தில் மூழ்கி, "ஐயோ! இந்த உடலால் மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்க, இப்படி லக்ஷகணக்கான வீரர்களை கொல்ல காரணமாகி விட்டேனே! இந்த பாவத்துக்கு மீள முடியாத நரகம் தானே எனக்கு கிடைக்கும்" என்று புலம்ப ஆரம்பித்தார்.


'ராஜ தர்மம், ஸ்திரீ தர்மம், வைஸ்ய தர்மம், ப்ராம்மண தர்மம் என்று பல தர்மங்களை பீஷம தாத்தாவிடம் கேட்டு தெரிந்து வேண்டும்' என்று தர்மபுத்ரர் கிளம்ப, அவர் கூடவே ரிஷிகள், சகோதரர்கள் கிளம்ப, அர்ஜுனன் தேரில் தானும் ஏறி அமர்ந்து கொண்டார் கிருஷ்ண பரமாத்மா.

பீஷ்மர், தர்மபுத்ரருக்கு பல வித தர்மங்களை உபதேசித்தார்.

கூடவே வந்து இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்தவுடனேயே, இந்த பக்வத் தரிசனத்தை பார்த்துக்கொண்டே உயிர் விட தயாராகி விட்டார்.
சஹஸ்ர நாமத்தால் ஸ்ரீ கிருஷ்ணரை ஸ்தோத்திரம் செய்து, 'இனியும் கிடைத்த வாய்ப்பை விட கூடாது', என்று முடிவு செய்து, கிருஷ்ண பரமாத்மாவை தரிசித்து கொண்டே உடலை விட்டு பிரிந்தார் பீஷ்மர்.


உத்தராயணத்துக்காக காத்து இருந்தார் பீஷ்மர் என்பது போல வெளி உலகுக்கு காட்டினாலும், 

பீஷ்மருக்கு "தன் பிராணன் விடும் சமயத்தில் கிருஷ்ண பரமாத்மா வேண்டும்" என்று ஆசைப்பட்டார்.

பக்தனின் அந்தரங்க ஆசையையும், ஸ்ரீ கிருஷ்ணர் நிறைவேற்றி கொடுத்தார்.

Tuesday 21 March 2017

உத்தராயணம் தஷிணாயனம் - 12 மாதங்கள் பற்றிய விளக்கம். தெரிந்து கொள்வோமே !


மகா பாரத போரில், பீஷ்மர் வீழ்ந்தார்.
மகா பாரத போர் நடந்த சமயம் "தஷிணாயன" காலம்.
தான் விரும்பிய பொழுது சாகும் வரத்தை பெற்றவர் பீஷ்மர்.
"உத்தராயண" காலம் வரும் வரை, அம்பு படுக்கையில், யுத்த களத்திலேயே உயிரை விடாமல் யோகத்தில் இருந்தார்.
நம் பூமியில் ஒரு வருடம் என்பது, சொர்க்கலோகத்தில் இருக்கும் தேவர்களுக்கு "ஒரு நாள்".

இது அனைவருக்கும் தெரிந்ததே.
இதுவரை தெரியாது என்றால், இப்பொழுது தெரிந்திருக்கும்.

பாரத் தேசத்தின் காலப்படி, தேவர்களின் கால நேரம் எப்படி உள்ளது? ஒரு அலசல்.

உத்தராயணம் :

 • தை (சொர்க்கலோகத்தில் 6AM-8AM), 
 • மாசி (சொர்க்கலோகத்தில் 8AM-10AM), 
 • பங்குனி (சொர்க்கலோகத்தில் 10AM-12 Noon), 
 • சித்திரை (சொர்க்கலோகத்தில் 12 Noon-2PM), 
 • வைகாசி (சொர்க்கலோகத்தில் 2PM-4PM), 
 • ஆனி (சொர்க்கலோகத்தில் 4PM-6PM), 

ஆகிய ஆறு மாதங்களும் "உத்தராயண" காலமாகும்.

தேவர்களுடைய ஒரு பகல் பொழுது "உத்தராயண" காலமாகும்.

உத்தராயண காலத்தில் தை மாதத்தில் நாம் பொங்கல் வைத்து சூரியனை வணங்குவது இப்பொழுது ஏன்?
என்று இப்போது புரிந்திருக்கும்.

தேவர்களுக்கு இந்த 6 மாதங்கள், சொர்க்கத்தில் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை போல என்று எடுத்துக்கொள்ளலாம்.

சித்திரை வெயில் கொளுத்துவது ஏன்?
என்று கேள்விக்கும் இதை வைத்து அனுமானிக்கலாம்.
தேவ லோகத்தில், நடு பகல் 12 மணியில் ஆரம்பிக்கிறது சித்திரை மாதம்.

பூமிக்கு மேலே உள்ள சொர்க்கத்தில் தேவர்களும்,
அவர்களுக்கும் மேல் உள்ள மஹ, ஜன, தப லோகத்தில் உள்ள ரிஷிகளும்,
அதற்கும் மேல் உள்ள சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்மாவும் 
"உத்தராயண" காலத்தில் விழித்து இருப்பார்கள்.

இதன் காரணமாக, பீஷ்மர் "உத்தராயண" காலம் வரும் வரை காத்திருந்து, ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து "விஷ்ணு சஹஸ்ரநாமம்" முதன் முதலில் சொல்லி, பின் தன் உடலை குருக்ஷேத்ர மண்ணில் விட்டு விண்ணுலகம் சென்றார்.

தை மாத அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் "மகா நவராத்திரி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
"தை மாதம்" தேவர்களுக்கு, சொர்க்கலோகத்தில் 6AM to 8AM என்று அனுமானிக்கலாம்.

மாசி மாதக் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதி அன்று, அமாவாசைக்கு முந்திய நாள் "சிவராத்திரி" உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.
மாசி மாதம் தேவர்களுக்கு 8AM to 10AM என்று அனுமானிக்கலாம்.

பங்குனி மாத அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் "வசந்த நவராத்திரி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
பங்குனி மாதம் தேவர்களுக்கு 10AM to 12PM என்று அனுமானிக்கலாம்.
பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - மகா விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமனின் பிறந்த நாள்.
இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் "ஸ்ரீ ராம நவமி" என்று பூமியில் கொண்டாடுகின்றோம்.
பங்குனி மாதம் தேவர்களுக்கு 10AM to 12PM என்று அனுமானிக்கலாம்.

ஆனி மாத அமாவாசைக்குப் பின்னர் வரும் ஒன்பது நாட்கள் "ஆஷாட நவராத்திரி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
ஆனி மாதம் தேவர்களுக்கு 4PM to 6PM என்று அனுமானிக்கலாம்.


தஷிணாயனம் :

 • ஆடி (சொர்க்கலோகத்தில் 6PM-8PM தேவர்கள் வழிபடும் காலம்), 
 • ஆவணி (சொர்க்கலோகத்தில் 8PM-10PM), 
 • புரட்டாசி (சொர்க்கலோகத்தில் 10PM-12AM),
 • ஐப்பசி (சொர்க்கலோகத்தில் 12AM-2AM),
 • கார்த்திகை (சொர்க்கலோகத்தில் 2AM-4AM),
 • மார்கழி (சொர்க்கலோகத்தில் 4AM-6AM தேவர்கள் வழிபடும் காலம்), 
ஆகிய ஆறு மாதங்களும் "தஷிணாயனம்" காலமாகும்.
இந்தக் காலம் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படுகிறது.

தேவர்களுக்கு இது இரவு பொழுது என்பதால், அவர்களுக்கு மேல் உள்ள துர்க்கை, சிவ, விநாயகர் போன்ற தெய்வங்களை வணங்கி நம்மை காத்துக்கொள்ள வேண்டிய காலம் இது.

அனைத்து தெய்வங்களுக்கும் மேல், முழு முதற் கடவுளான பெருமாளை வணங்குவது நம்மை காத்துக் கொள்ள சரியான வழி.

பொதுவாக,
மனிதர்கள் இறை வழிபாடு செய்ய வேண்டிய காலம் இது.

தேவர்களுக்கு இந்த 6 மாதங்கள், மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிவரை போல என்று எடுத்துக்கொள்ளலாம்.

தேவர்களுடைய காலப்படி, மாலை 6 மணி முதல் 8 மணி வரை, தேவர்கள் தன்னை படைத்த நாராயணனை வழிபடுகின்றனர்.
இதே சமயத்தில், பூமியில் ஆடி மாதத்தில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல், மனிதர்களும் இதே சமயத்தில் தேவர்களோடு, சிவ விஷ்ணு வழிபாடு செய்கின்றனர்.

இதே போல,
தேவர்களுடைய காலப்படி,
விடி காலை 4 மணி முதல் 6 மணி வரை, தேவர்கள் தன்னை படைத்த நாராயணனை வழிபடுகின்றனர்.
தேவர்களுக்கு இது ப்ரம்ம முகூர்த்தம். தியானமும், விரதமும், தெய்வ வழிபாடும் செய்ய ஏற்ற காலம்.
இதே சமயத்தில்,
பூமியில் மார்கழி மாதத்தில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல், மனிதர்களும் இந்த மாதத்தில் தெய்வங்களை வழிபடுகின்றனர். பெருமாளுக்கு உகந்த மாதம் "மார்கழி".

ஆவணி மாத அமாவாசைக்குப் பின் நான்காவது நாள் வரும் சுக்ல பட்ச சதுர்த்தி நாடெங்கும் "விநாயக சதுர்த்தி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமானின் செல்ல குழந்தை விநாயகரை மனிதர்கள் வழிபடுகின்றனர்.
ஆவணி மாதம் தேவர்களுக்கு 8PM to 10PM என்று அனுமானிக்கலாம்.
ஸ்ரீ மகாவிஷ்ணு, ஆவணி மாதம், ரோஹிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில், ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்தார்.
இந்நாள் "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேவர்களுக்கு 8PM to 10PM என்று அனுமானிக்கலாம்.

மகாவிஷ்ணு, ஆவணி திருவோணத்தில் ஸ்ரீ வாமனராக அவதாரம் எடுத்து மகாபலி என்ற அரக்க அரசனின் ஆணவத்தை அடக்கிய நாளே " ஓணம் " பண்டிகை ஆகும்.
ஆவணி மாதம் தேவர்களுக்கு 8PM to 10PM என்று அனுமானிக்கலாம்.

புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின்வரும் ஒன்பது நாட்கள் "சாரதா நவராத்திரி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதம் தேவர்களுக்கு 10PM to 12AM என்று அனுமானிக்கலாம்.

புரட்டாசி மாத அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறையில் தொடங்கிப் பத்து நாட்கள் "துர்கா பூஜை" பூமியில் கொண்டாடப்படுகின்றது.
புரட்டாசி மாதம் தேவர்களுக்கு 10PM to 12AM என்று அனுமானிக்கலாம்.

காரணம் இல்லாமல் எந்த ஒரு பண்டிகையும், எந்த ஒரு கட்டுப்பாட்டையும் விதிக்காதது நம் தர்மம்.

இந்த ஸனாதன மதத்தில் இன்னும் என்ன என்ன ஆச்சர்யங்கள் உண்டோ !! என்று எண்ணத்தோன்றுகிறது.

மனிதனுடைய காலத்தை மட்டுமில்லாது,
 • தேவர்கள் காலம் என்ன? 
 • பிரம்மாவின் இன்றைய வயது என்ன? 
 • இன்னும் எத்தனை காலம் உள்ளது? 
என்று  பதில் சொல்லிக்கொண்டே பறந்து விரிந்து செல்கிறது நம் தர்மம்.


5000 வருடத்திற்கு முன்,
 • மனிதர்கள் காட்டு மிராண்டிகளாக இருந்தனர் என்று உளறி, 
 • 2012ல் உலகம் அழியும், 
 • இதோ வந்து விட்டார், அதோ பாருங்கள் 
என்று ஊரை ஏமாற்றாமல்,
 • பிறவிக்கு என்ன காரணம்?
 • துன்பத்திற்கு என்ன காரணம்?
 • உலகத்தின் வயது என்ன?
 • உலகம் என்ன ஆகும்?
என்று அடுக்கிக் கொண்டே போகும் கேள்விகள் அனைத்துக்கும் நம் சனாதன தர்மம் பதில் சொல்கிறது.

சரியான கேள்வியை, சரியான பெரியோர்களிடம் கேட்டாலே, சனாதன தர்மத்தின் மகத்துவம் புரியும்.

நாம் இந்த தர்மம் உள்ள குடும்பத்தில் பிறந்து இருக்கிறோமே என்று நம்மையே பார்த்து மெச்சிக் கொள்ள தோன்றும்.

சோமாலியாவிலோ, சீனாவிலோ, அமெரிக்காவிலோ இந்த சனாதன தர்மம் தெரியாத குடும்பத்தில் பிறந்து இருந்தால்...
 • நம் மூதாதையர்கள் மடையர்கள் எனவும், ஆடை அணியாது அலைந்த ஆதாம் ஏவாள் என்றும்,
 • மறு பிறவி இல்லை அதனால் எதுவும் செய்யலாம் என்றும்,
 • பிறப்பிலேயே ஏழையாக, குறையோடு பிறந்ததற்கு கடவுளை காரணம் காட்டியும்,
 • தினமும் தின்றோம், தூங்கினோம், ஏதோ ஒரு கடவுள் இருக்கிறார் என்று நம்பி, கடைசியில் செத்தோம்
என்று வாழ்க்கை வீணாகியிருக்கும்.

நல்ல வேளையாக, நாம் முன் ஜென்மங்களில் செய்த பல நல்ல காரியங்களால்...
 • மனித பிறவியும் கிடைத்து,
 • இந்தியாவில் பிறக்கவும் செய்து,
 • ஹிந்துவாகவும் பிறக்க செய்து, 
 • அறிவும் கொடுத்து,
 • கேள்விகள் எழ செய்து, அதற்கு சரியான பெரியோர்களையும் காட்டி தெளிவு படுத்தி,
இன்னும் நம்மை உயர்த்தி கொண்டே போக, ஹிந்துவாக பிறந்தோம்.

சனாதன தர்மம் என்றும் நிலைத்து இருக்கும்.

ஹிந்துவாய் பிறந்ததே பல கோடி புண்ணியத்தின் பலன் என்று நமக்கு புரிந்து விடும்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka