Followers

Search Here...

Showing posts with label அணுகிரஹம். Show all posts
Showing posts with label அணுகிரஹம். Show all posts

Saturday 27 October 2018

திருமலையில் மட்டும் பெருமாள் தடையில்லாமல் எப்படி அணுகிரஹம் செய்கிறார்? அலர்மேல் மங்கையான மகாலட்சுமி (அலமேலு தாயார்) எப்படி நமக்கு அனுக்கிரஹம் கிடைக்க உதவுகிறாள்? தெரிந்து கொள்வோமே

அகல கில்லேன் இறையும்
என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய் உலகமூன் றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே
- நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி


"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா"

பொதுவாக, ஜனங்களோடு ஜனங்களாக இருந்தால், எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியாது.
கொஞ்சம் மாடியில் ஏறி நின்று பார்த்தால், அந்த தெருவில் போகும் எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியும்.

தனக்கு ஒரு ஏழு அடுக்கு மாடி அமைத்துக்கொண்டு, அங்கு நின்று கொண்டால், எல்லோரையும் பார்க்கலாமே என்று சங்கல்பம் செய்தார் பாற்கடலில் உள்ள எம்பெருமான்.
ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன், எம்பெருமான் சங்கல்பத்தை உணர்ந்து, ஏழு மலையாக ஆகி பூலோகத்திற்கு வந்து விட்டார்.
உன்னதமான இடத்தில் இருந்தால் தான், கருணையை அனைவருக்கும் வர்ஷிக்க முடியும் என்பதால், திருமலையின் உச்சியில் போய், எம்பெருமான் அர்ச்ச அவதாரம் செய்து நின்று விட்டார்.
கருணையே வடிவானவள் மகாலட்சுமி.
க்ஷீராப்தியில் இருந்து பெருமாள் பூலோகம் வந்து விட, தனக்கொரு இடம் தேடினாள்.

கருணையே வடிவான மகாலட்சுமி திருமலையை விட உயர்ந்த இடத்தை தேடினாள்.
திருமலையை விட உயரமான இடம், எம்பெருமானின் வக்ஷஸ்தலமே என்று, அங்கு போய் அமர்ந்து விட்டாள்.
திருமலையில் எம்பெருமான் வக்ஷஸ்தலத்தில் (பெருமாள் மார்பில்) எப்பொழுதும் பிரியாமல் இருக்கிறாள் மகாலட்சுமி.

மலர்ந்த (அலர்) தாமரைப்பூவின் மேல் அமர்ந்திருக்கும் மகாலட்சுமிக்கு "அலர்மேல் மங்கை" (அலமேலு தாயார்) என்று பெயர்.

இப்படி எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து, இனி ஒரு நொடி பொழுது (இறை பொழுதும்) கூட உங்களை விட்டு பிரிய மாட்டேன் (அகல இல்லேன்) என்று அமர்ந்தாள் அலர்மேல் மங்கையான மகாலட்சுமி.

எம்பெருமானை தனியாக வழிபடுவதை விட, தாயாரையும் சேர்த்து வழிபடும் போது தான், பெருமாள் தடையில்லாமல் அணுகிரஹம் செய்கிறார்.

"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா"
என்று நம்மாழ்வார் அழைக்கும் போது,
'தாயாரை முதலில் சொல்லி, அவளை முன்னிட்டு,  எம்பெருமானிடம் சரணாகதி' செய்கிறார்.

மகாலட்சுமி (ஸ்ரீ தேவி) எம்பெருமான் மார்பில் இருப்பதால் (நிவாசம்), வெங்கடேச பெருமாளுக்கு, "ஸ்ரீனிவாச பெருமாள்" என்றும் பெயர் வந்தது.

எப்படி பகவானை நாம் அணுக வேண்டும்?
எப்படி அணுகினால், பகவான் தடையில்லாமல் நமக்கு அணுகிரஹம் செய்வார்? என்பதை இந்த ஒரு பாசுரமே நமக்கு காட்டி விடுகிறது.

இப்படி திருமலையில், எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து விட்டாளே மகாலட்சுமி!!
இப்படி அமர்ந்தது அவள் சுகத்திற்காகவா? இல்லை பெருமாள் சுகத்திற்காகவா? என்று கேட்டால், இரண்டுமே இல்லையாம்.
நாம் அனைவரும் சுகம் பெற வேண்டும் என்பதற்காக தான், எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து விட்டாளாம் மகாலட்சுமி.

அது எப்படி?
பொதுவாக ஆழ்வார்கள், மற்ற திவ்ய தேசம் சென்று அங்கு இருக்கும் பெருமாளை சேவிக்கும் போது பிரேம பக்தியுடன் கொஞ்சி மகிழ்வார்கள்.
ஆனால் திருமலை வந்து விட்டால் மட்டும், ஆழ்வார்கள் அனைவரும், கதறி அழுது சரணாகதி செய்து விடுகின்றனர்.





நம்மாழ்வார், திருமலையப்பனிடம் வந்து,
"திருவேங்கடத்தானே !
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்று கதறி அழுது சரணாகதி செய்கிறார்.

திருமலையப்பனிடம் வந்தால் மட்டும் ஏன் இப்படி ஆழ்வார்களின் மனோபாவத்தில் கூட வித்தியாசம் தெரிகிறது?
மற்ற திவ்ய தேச பெருமாளும் இவர் தானே?
இருந்தும்,
திருமலையப்பனுக்கு மட்டும் என்ன விஷேசத்தை ஆழ்வார்கள் பார்த்தார்கள்?

பொதுவாக, திருமலையை தவிர்த்து, மற்ற திவ்ய தேசங்களில் பெருமாள் ஒரு சன்னதியில் இருப்பார். தாயார் தனி சன்னதியில் இருப்பாள்.
மற்றும் சில திவ்ய தேசங்களில் பெருமாளும் தாயாரும் ஒரே சந்நிதியில் அருகருகே கூட இருப்பார்கள்.

பொதுவாக தாய்க்கு தான், தன் பிள்ளை தவறே செய்தாலும் கூட, அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், கருணையே செய்ய தோன்றும்.
தாயுள்ளம் மகத்தானது.

பொதுவாக பெருமாள், தகப்பன் ஸ்தானத்தில், ஒரு நீதிபதி ஸ்தானத்திலும் நம்மை பார்ப்பாராம்.
பக்தனே சில சமயம் தவறு செய்தாலும்  பாரப்பட்சம் காட்ட கூடாது என்று நினைப்பாராம்.

பத்ராசல ராமதாஸர், ராமருக்கு கோவில் கட்ட இஸ்லாமிய அரசன் தானிஷாவின் வரி பணத்தை எடுத்து கட்டி விட்டார்.
இதற்கு 12 வருடம் சிறையில் தள்ளி, தினமும் சவுக்கடி கொடுக்க உத்தரவு இட்டான் தானிஷா.
உடம்பெல்லாம் ரத்தம் ஏற்பட்டு, தினமும் சிறையில் அழுது, ராமரிடம் கீர்த்தனைகள் இயற்றினார்.
ராமரோ தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார் என்று ஒரு நீதிபதி போல பேசாமல் இருந்தார்.
கடைசியில் இனி தாளாது என்ற நிலையில், ராமதாசருக்கு சீதையின் நினைவு வர,
"சீதம்மா...  இந்த ராமதாசனை காப்பாற்ற வருமாறு, நீயாவது அருகில் இருக்கும் ஸ்ரீ ராமரிடம் சொல்லம்மா..."
என்று கதற, சீதை ஸ்ரீ ராமரிடம் "இனி ஒரு க்ஷணம் தாமதிக்காமல் காப்பாற்றுங்கள்" என்று சொல்ல,
தானே ஒரு மனிதனாக வந்து, தானிஷாவை பார்த்து, தங்க கட்டிகளாக வரி பணத்தை வட்டியுடன் கட்டி, விடுதலை செய்யுமாறு செய்து மறைந்து விட்டார்.

பெருமாளை மட்டும் நாம் தனியாக பிரார்த்தனை செய்தால், நம் குற்றம் குறை அவருக்கு தெரிவதால், கட்டுப்பாடு இல்லாமல் அணுகிரஹம் செய்ய கொஞ்சம் தயங்குவாராம்.

ஸ்ரீ ரங்கம் உட்பட மற்ற திவ்ய தேச பெருமாள் கூட, தாயார் அருகில் இல்லாமல் இருப்பதால், ஆழ்வார்களுக்கு கூட தடையில்லாமல் அணுகிரஹம் செய்யாமல் இருந்தார்களாம்.

'அணுகிரஹம் குறைவில்லாமல் செய்யலாமே' என்று மற்ற திவ்ய தேச பெருமாளிடம் காரணம் கேட்டால், "இன்னும் இதயம் கணியட்டும்" என்று மற்ற திவ்ய தேச பெருமாள் எல்லோரும்  சொல்வார்களாம்.

ஒரே பெருமாள் தான் என்றாலும், அந்தந்த திவ்ய தேச மகத்துவம் பொருத்து தான் பழகுவார்களாம்.

இப்படி ஏன் அணுகிரஹம் செய்ய மற்ற திவ்ய தேச பெருமாள் எல்லோரும் தயங்குகிறார்கள்? என்று கேட்டால், நமக்காக சிபாரிசு செய்ய தாயார் கூட இல்லை என்பதால் தான்.

எம்பெருமானை நாம் தனியாக சேவிக்கும் போது, நம் தகுதி, நேர்மையை பார்ப்பாராம். இதனாலேயே அணுகிரஹம் செய்ய தயங்குவாராம்.

ஸ்ரீ ராம அவதார சமயத்தில், 'தானும் வனவாசம் வருவேன்' என்று லக்ஷ்மணன் வந்து விட்டார்.
அன்றைய இரவு பொழுதில், லக்ஷ்மணன் பார்த்து, "பொழுது விடிந்ததும் நீ வேண்டுமானால் அயோத்தி திரும்பி செல்கிறாயா?" என்று ஸ்ரீ ராமர் கேட்டு விட்டார்.
ஸ்ரீ ராமரை விட்டு நொடி பொழுது பிரிந்தாலும், உயிர் போய் விடும் என்ற நிலையில் இருந்த லக்ஷ்மணன், செய்வதறியாது ஸ்ரீ ராமரின் பாதங்களில் விழுந்து விட்டார்.
ஸ்ரீ ராமரின் சம்மதத்தை பெற, ஸ்ரீ ராமரிடம் கேட்டால் நடக்காது என்று அறிந்து, தலையை தூக்கி, அருகில் நின்று இருந்த சீதையை பரிதவிப்புடன் பார்த்து, தனக்கு சிபாரிசு செய்ய பிரார்த்தித்தார்.

லக்ஷ்மணனின் நிலையை புரிந்து கொண்ட சீதை, ஸ்ரீ ராமரை பார்த்து, " எப்படி குளத்தில் இருக்கும் மீனை வெளியே எடுத்தால் அதற்கு உயிர் தங்காதோ, அது போல லக்ஷ்மஷ்ணன் உங்கள் பிரிவை தாள மாட்டான்."
என்று சொல்ல, ராமர் மறு பேச்சின்றி அழைத்து கொண்டார்.
அதற்குப்பின், கடைசி வரை லக்ஷ்மணனை பிரிந்து ஒரு க்ஷணம் இருந்ததில்லை ஸ்ரீ ராமர்.


தாயாருக்கு அத்தனை மதிப்பு கொடுப்பாராம் பெருமாள்.

தாயாரை முன்னிட்டு, பெருமாளை சேவித்தால், நம் தகுதி பார்க்காமல் அணுகிரஹம் உடனே செய்து விடுவார்.

தனியாக தான் சந்நிதியில் இருந்தால், நமக்கு பெருமாள் அணுகிரஹம் செய்வாரோ என்னவோ என்று நினைத்த தாயார், திருமலையில் எம்பெருமான் நெஞ்சில் போய் அமர்ந்து விட்டாளாம்.

பெருமாள், தாயாரை பார்த்து, 'இப்படி என் நெஞ்சோடு அமர்ந்து விட்டாயே, உனக்கு வேண்டுமானால் தனி சன்னதி இருக்க செய்யட்டுமா?" என்று கேட்க,
"வேண்டவே வேண்டாம்" என்றாளாம்.
"சரி, அப்படியென்றால் ஒரே சந்நிதியில் அருகேயே இருக்கிறாயா?" என்று கேட்க,
"அதுவும் வேண்டாம்"
என்றாளாம் தாயார்.
மேலும்,
'எனக்கு தனி சந்நிதி கொடுத்து, ராவணன் தூக்கி போனான் என்ற அனுபவமே போதும்.
தனி சந்நிதி கொடுத்தால், மற்றவர்களை நம்ப இயலவில்லை.
உங்கள் அருகிலேயே இருந்தாலும், உங்களையும் நம்ப முடியாது.
ஒரு சமயம், கஜேந்திரன் என்ற ஒரு யானை உங்களை கூப்பிட்டான் என்றதும், அருகில் இருந்த நான் கூட முக்கியமில்லை என்று, கிளம்பி விட்டீர்களே.
இதனால் எனக்கு தனியாக இடமும் வேண்டாம், உங்கள் பக்கத்திலும் இடம் வேண்டாம்.
நான் இனி இறை பொழுது கூட அகல கில்லேன், அகல கில்லேன்,  நான் உங்கள் நெஞ்சோடு தான் இருப்பேன்.
நீங்கள் எந்த பக்தன் அழைத்தாலும், என்னையும் தூக்கி கொண்டு செல்லுங்கள்"
என்று பிடிவாதம் செய்து அமர்ந்து விட்டாளாம் தாயார்.

இப்படி, நமக்கு தடையே இல்லாமல் அணுகிரஹம் செய்ய, அலர்மேல் மங்கை தாயார் வக்ஷஸ்தலத்தில் இறை பொழுது கூட அகல கில்லேன் என்று அமர்ந்து விட்ட ஸ்ரீனிவாச பெருமாளே என்பதை தான், நம்மாழ்வார்,
"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா"
என்று சொல்கிறார்.

திருமலையில், பெருமாளுக்கு உள்ள விசேஷம் இதுவே.

திருமலையப்பனை காண நாம் மலை ஏறி செல்லும் போது, பெருமாள் பார்ப்பதற்கு முன்,  ஸ்ரீனிவாசனின் மார்பில் இருக்கும் தாயார், நம்மை முதலில் பார்த்து விடுகிறாள்.

பெருமாள் நம் பாவ புண்ணியத்தை பார்க்கும் முன், தாயார் முந்திக்கொண்டு, "நம் குழந்தை, அணுகிரஹம் செய்யுங்கள்" என்று நமக்காக சிபாரிசு செய்து விடுகிறாள்.

தாயார் பார்த்ததினாலேயே, பெருமாள், நம் தகுதி பாராமல், உடனே அணுகிரஹம் செய்து விடுகிறார் ஸ்ரீனிவாச பெருமாள்.

திருமலையப்பனுக்கு உள்ள இந்த தனித்துவம், மற்ற திவ்ய தேச பெருமாளிடம் காண இயலாது.

திருமலையில், தாயாரை தன் மார்போடு வைத்து இருப்பதால், தடையின்றி நம்மிடம் கருணையை வர்ஷிக்கிறார் பெருமாள்.

நிகரில் புகழாய்.
உலக மூன்றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

சொர்க்கத்தில் உள்ள தேவர்கள், தப லோகத்தில் இருக்கும் ரிஷிகள், பிரம்மா உட்பட ஒரு நாள் அழிந்து விடுவார்கள். ஆனால் வைகுண்டத்தில் உள்ள தேவர்களான நித்ய பார்ஷதர்கள் வைகுண்ட நாதனை போல அமரர்கள்.
வைகுண்ட நாதனை போல அவர்களும் என்றுமே இருப்பவர்கள்.
பரமாத்மாவாக இருப்பதால், வைகுண்ட நாதனுக்கு கூட, உலகத்தை ஸ்ருஷ்டி செய்ய வேண்டும், உலகத்தை ரக்ஷிக்க வேண்டும் என்ற பொறுப்பு உண்டு.
நித்ய பார்ஷதர்களான இவர்களுக்கு அந்த பொறுப்பு கிடையாது என்பதால், இவர்கள் லட்சியம் வைகுண்ட நாதனுக்கு கைங்கர்யம் செய்வதே. தேவைப்பட்டால், இவர்களே ப்ரம்ம லோகம் முதல், பூலோகம் வரை வந்து போகவும் முடியும். சுதந்திரமானவர்கள், அமரர்கள்.

அப்படிப்பட்ட அமரர்களான நித்ய பார்ஷதர்களும் (அமரர் முனிக்கணங்கள்), பூலோகத்தில் உள்ள திருமலை வந்து சேவை செய்ய விரும்பும் பெருமை உடைய திருவேங்கடத்தானே என்று
"நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே"
என்று நம்மாழ்வார் திருமலையப்பனின் புகழை நமக்கு காட்டுகிறார்.

வைகுண்டத்திலேயே எம்பெருமானை சேவிக்கும் பாக்கியம் பெற்ற நித்ய பார்ஷதர்களே திருமலை வந்து சேவிப்பார்கள் என்றால், இந்த உலகத்திலேயே உள்ள எனக்கு உன் திருவடி அடையாமல் வேறு என்ன செய்வேன்?

நித்ய பார்ஷதர்களுக்கு திருமலை இல்லையென்றால், வைகுண்டம் இருக்கிறது. அங்கு போய் உமக்கு சேவை செய்து கொள்வார்கள்.
அவர்களே வைகுண்டம் வேண்டாம், திருமலை தான் வேண்டும் என்று வரும்போது,
பூலோகத்தில் புகலிடம் இல்லாத எனக்கு, நீஙகள் ஒருவர் தானே கதி என்று,
"புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்கிறார் நம்மாழ்வார்.

வைகுண்டம் சென்று உங்கள் திருவடியை பிடிக்க இயலாத எனக்கு திருமலையில் உள்ள நீங்கள் தானே கதி. புகலிடம் இல்லாத அடியேன், உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே என்கிறார்.

இங்கு "உன் திருவடியில் புகுந்தேனே" என்று கூறாமல்,
"உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே"என்கிறார்.

இங்கு "அமர்ந்து" என்ற சொல்லை சொல்லி, சரணாகதி செய்த நம்மாழ்வார், மோக்ஷம் வேண்டினாலும், உடனே தந்து விட வேண்டாம், கொஞ்சம் திருமலையில் தங்கி (அமர்ந்து) உங்களுக்கு இங்கேயே சில காலம் சேவை செய்ய அணுகிரஹம் செய்து விட்டு, பின்னர் மோக்ஷம் கொடுங்கள் என்கிறார்.

மோக்ஷம் யாருக்கு கொடுக்கிறார் பெருமாள்?
இரண்டு விதமான நிலைக்கு, மோக்ஷம் கொடுக்கிறார் பெருமாள்.
1. "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து செய்தால், உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

2. "இனி தாளாது என்ற ஆர்த்தி (துடிப்பு) இல்லாமல்" சரணாகதி செய்து விட்டானானால், அவன் ப்ராரப்தம் முடியும் வரை உடம்போடு வாழ்ந்து தான் ஆக வேண்டும்.

ப்ராரப்த கர்மா அனுபவிக்காமல் மோக்ஷம் கொடுப்பாரா?
கோபிகைகள் போல "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து விட்டால், ப்ராரப்த கர்மாவும் பொசுங்கி, உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

ஞானியும் ப்ராரப்த கர்மாவை அனுபவிக்கிறார்கள்.


நம்மாழ்வார் திருமலையப்பனை பூரண சரணாகதி செய்தவர்.
"இனி தாளாது" என்ற ஆர்த்தியும் (துடிப்பு) உள்ளவர்.
உடனே மோக்ஷம் பெறுவதற்கு தகுதி இருந்தாலும்,
பிராரப்த காலம் முடியும்வரை, இந்த உடலோடு இருந்து, திருவெங்கட நாதனுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டாராம் ஆழ்வார்.

இதை குறிப்பதாக, "உன் திருவடியில் அமர்ந்து" என்று சொல்லி, எப்பொழுது பிராரப்த காலம் முடியுமோ, அப்பொழுது திருவெங்கட நாதனுக்கு திருமலையில் செய்த சேவையை, வைகுண்டம் சென்று செய்வோம் என்று பிரார்த்தித்தார்.