Followers

Search Here...

Showing posts with label விஷிஷ்டாத்வைதம். Show all posts
Showing posts with label விஷிஷ்டாத்வைதம். Show all posts

Thursday 13 September 2018

த்வைதம், அத்வைதம், விஷிஷ்டாத்வைதம் பற்றி ப்ருகு முனிவர் என்ன சொல்கிறார்? தெரிந்து கொள்வோமே...

இக்ஷ்வாகு என்ற சூரிய வம்சத்தில், "முசுகுந்தன்" என்ற சக்கரவர்த்தி ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
இவர் க்ருத யுகத்தில் இருந்தவர்.
"ஸ்ரீ ராமர்" அவதாரத்துக்கும் முன் இருந்தவர் முசுகுந்த சக்கரவர்த்தி.
3102 BCல் கலியுகம் ஆரம்பித்தது.
கலியுகத்துக்கு முன், துவாபர யுகம் 8,64,000 வருடங்கள்.
இதற்கும் முன் த்ரேதா யுகம். த்ரேதா யுகம் 12, 96,000 வருடங்கள்.
இதற்கும் முன் க்ருத யுகம் 17,28,000 வருடங்கள்.


ஆக குறைந்த பட்சம், 20 லட்ச வருடங்கள் முன் இருந்தவர் "முசுகுந்த சக்கரவர்த்தி" என்று நாம்  அனுமானிக்கலாம்.

ஸ்வபாவத்திலேயே இவர் தார்மீகர்.
இயற்கையாகவே அடக்கம் உள்ளவர்.
விஷ்ணு பக்தி உடையவர்.
தன் மக்களை சிறப்பாக தர்ம வழியில் பரிபாலித்து வந்தார்.
சத்யம் மீறாதவர்.
சூர்யவம்ச அரசர்கள் யாவரும் சத்தியத்துக்காக உயிரையும் தியாகம் செய்ய துணிந்தவர்களாக இருந்தனர்.
மகா வீரர்.
இதனால் தான் பிற்காலத்தில், இந்த பரம்பரையில் ஸ்ரீ ராமராக அவதரிக்க திருவுள்ளம் கொண்டார் பரவாசுதேவன்.

ஒரு சமயம், அயோத்யாவில் இருந்து, தீர்த்த யாத்திரையாக தன் பரிவாரங்களுடன், ஒவ்வொரு க்ஷேத்ரமாக சென்று சேவிக்கலாம் என்று புறப்பட்டார்.

அயோத்தியில் இருந்து, மதுரா, மாயா, கயா, வாரணாசி போன்ற க்ஷேத்ரங்கள் தரிசித்து, தென் பாரதம் முழுக்க ஒவ்வொரு க்ஷேத்ரமாக தரிசித்து, ஒரு சமயம், நம் தமிழகத்துக்கு வந்தார். 
காஞ்சிபுரத்திற்கு வந்து தங்கினார்.

காஞ்சியில், "ஹேம சரஸ்" என்ற பொற்றாமரை குளம் இருந்தது.
அங்கேயே தங்கி இருந்தார்.
அந்த சமயம், ரிஷியான "ப்ருகு" முனிவரை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றார்.

(தமிழ் நாட்டில் நடந்த சரித்திரம் என்று கவனிக்கும் போது, நம் பெருமை நமக்கு புரியும்)

பொதுவாக, நாம் ஒவ்வொருவருக்கும் மனதில், சில விடை தெரியாத கேள்விகள் எழுவது உண்டு.

'விடை தெரியாத கேள்விகளுக்கு, பதிலை அறிய, நாம் சரியான பதில் தெரிந்தவர்களிடம் சென்று, கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்' என்று சாஸ்திரம் சொல்கிறது.

ப்ருகு ரிஷியை பார்த்த முசுகுந்த சக்கரவர்த்தி, நமஸ்கரித்து, ஆர்வத்தோடும், அடக்கத்தோடும், ஸ்ரத்தையோடும் தன் மனதில் இருந்த நெடுநாள் சந்தேகத்தை கேட்டார்,

"உங்களை தரிசித்த பாக்கியம் பெற்றேன்.
வேதம், பொதுவாக பல தெய்வங்களை பற்றி பாடுகிறது.
வேதத்தில் ப்ரம்ம ஸூக்தம் இருக்கிறது.
ருத்ர ஸூக்தம் இருக்கிறது.
இது போன்று
இந்திரன், வருணன், அஸ்வினி குமாரர்கள், அக்னி, சூரியன், 
யமன், சோமன், வாயு, ப்ரம்மனஸ்பதி, விஸ்வேதேவர்கள், 
மருத்து, ரிபுக்கள், ஸாத்யர்கள், பித்ருக்கள்,  விஷ்ணு 
என்று எல்லா தெய்வங்களுக்கும் வேத மந்திரங்கள் உள்ளது.

வேத வாக்கும் சத்தியம். இவர்கள் கற்பனையான தெய்வங்களும் இல்லை.
இவர்கள் அனைவரும் நிஜமாகவே இருக்கிறார்கள் என்றும் வேதம் சொல்கிறது.
இவ்வளவு தெய்வங்களுக்குள்ளே, யார் உயர்ந்தவர்? ச்ரேஷ்டமானவர்?

யாரை ஆராதித்தால், கோரமான ஸம்ஸாரத்தில் இருந்து கரையேற முடியும்?

'மோக்ஷம்' என்ற ஐஸ்வர்யம் யாரை ஆராதித்தால் கிடைக்கும்?

தெய்வங்களுக்குள்ளே பேதம் (வேற்றுமை) உண்டா? அபேதமா?

இதில் உமக்கு எது சம்மதம்?

சிலர் 'தெய்வங்களுக்குள்ளே பேதம் உண்டு' என்று சொல்கிறார்கள்.
சிலர் 'தெய்வங்களுக்குள்ளே பேதம் இல்லை' என்று சொல்கிறார்கள்.

எனக்கு உள்ள இந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டும்.

நீங்கள் சர்வஞர், அனைத்தையும் உண்மையாக அறிந்தவர்.

தெய்வங்களுக்குள்ளே பேதம் இருக்கிறதோ, இல்லையோ, எப்படி இருந்தாலும், நான் ஆராதனை செய்ய வேண்டிய தெய்வம் எது?

நீங்கள், இதை நிர்ணயம் செய்து எனக்கு சொல்ல வேண்டும்.
எனக்கு எது பாதை? என்று சொல்ல வேண்டும்."
என்று கேட்டார் முசுகுந்த சக்கரவர்த்தி.

ப்ருகு பேசலானார்,
"முசுகுந்த சக்கரவர்த்தி! தெய்வங்களை, மனிதர்களை பார்ப்பது போன்ற கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. அனுமானம் செய்ய கூடாது.

மனிதர்கள் பஞ்ச பூதங்களில் "நிலத்தில்" இருந்து உருவானவர்கள். கண்ணால் பார்க்கும் படியாக, உருவம் தரித்தவர்கள்.

வேதத்தில் உள்ள தெய்வங்கள் மனிதர்களின் கண்களுக்கு  அரூபமானவர்கள்.

மனிதன் ஒரு விஷயத்தை நம்புவதற்கு, கண், காது, நாக்கு, மூக்கு, ஸ்பரிசம் போன்ற உறுப்புகளே ஆதாரமாக உள்ளது.

மனிதன் பார்க்க முடியாத விஷயங்களும் உலகில் இருக்கிறது.
அதை உணருவதற்கும், நம்புவதற்கும், இந்த உறுப்புகள் மட்டும் போதாது.

கண்ணுக்கு தெரிந்த விஷயங்களுக்கு சாஸ்திரத்தின் தேவை இருக்காது. நாமே தெரிந்து கொள்ளலாம்.

ஒரு யானையை சாஸ்திரம் கொண்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. கண் இருந்தாலே போதுமானது.

உலகத்தில் கண்ணுக்கு தெரியாத விஷயத்தை ஒருவன் எப்படி தான் தெரிந்து கொள்ள முடியும்?
வேத சாஸ்திரமே கதி"
என்றார் ப்ருகு முனிவர்.

இதையே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்  துவாபர யுகத்தில் அவதாரம் செய்த போது,
"தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே"
என்று
"சாஸ்திரத்தை கொண்டு தான் நாம் செய்யும் செயல், தர்மமா? அதர்மமா?"
என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

ப்ருகு மேலும் பேசலானார்,
"பரமாத்மா யார்? அவர் எப்படி இருப்பார்? என்ற நமக்கு அப்பாற்பட்ட கேள்விக்கு, பதிலை சாஸ்திரத்தின் துணை கொண்டே பெற முடியும். சாஸ்திரமே கதி.


நாமாக பரமாத்மா இப்படி தான் இருப்பார் என்று உருவாக்கி, ஏமாற்ற கூடாது.

வான்வெளியில் என்ன நடக்கிறது?
நம் உடம்புக்குள்ளே என்ன நடக்கிறது?
வெளிநாடுகள் எப்படி இருக்கிறது?
என்ற பல கேள்விகளுக்கு, அதனை பற்றி ஆராய்ச்சி செய்த ஞானிகள், விஞ்ஞானிகள், சொல்லும் வார்த்தைகளும், அவர்கள் அனுபவத்தில் எழுதி வைத்த புத்தகங்களுமே (சாஸ்திரமே) நமக்கு ப்ரமாணம் ஆகிறது அல்லவா?

அந்த புத்தகங்கள் (சாஸ்திரம்) என்ன சொல்கிறதோ அதன் படி நடந்து, நாமும் சென்றால், நாமும் வெளிநாடு இருப்பதை காண முடிகிறது.

நம்மாலும், உடலுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று கணிக்க முடிகிறது.

விண் வெளியில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆக, ஐந்து புலன்களால், நாம்  அறிய முடியாத விஷயங்களும் உண்டு என்பதை மனிதன் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐந்து புலன்களால், அறிய முடியாத விஷயங்களையும் நாம் உணர்ந்து கொள்ள, அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஞானிகள், வழியில் சென்று பார்த்தால், நமக்கும், புரியாத பல விஷயங்கள் புரியும்.

மனிதர்கள், கண்ணால் காண முடியாத விஷயங்களும், இருப்பதை உணர்வதற்கு தேவையான அடிப்படையான தகுதிகள் :
1. அந்த விஷயங்களை ஆராய்ச்சி செய்த ஞானிகள், விஞ்ஞானிகள் மேல் நம்பிக்கை.
2. அவர்கள் எழுதிய புத்தகத்தின் (சாஸ்திரம்) படி முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம்.

எப்படி உலகத்தில், காண முடியாத விஷயங்களை, உணர்வதற்கே, நாம் ஒரு விஞ்ஞானியின் ஆராய்ச்சியை, அவன் எழுதிய புத்தகத்தை (சாஸ்திரத்தை) நம்புகிறோமோ,
அதுபோல,
உலகத்திற்கும் மேல், கண்ணால் காண முடியாத தேவர்களை உணர, தேவர்களை நேரில் பார்த்த ரிஷிகளையும், அவர்கள் கொடுத்த வேத சாஸ்திரத்தையும்  நம்ப வேண்டாமா?

தேவர்களை பொறுத்தவரை, மனிதன் மிகவும் 'அற்ப பிறவி'.
மனிதன் பூமியில் நிரந்தரமாக, வாழ முடியாதவன். 
மரணம் நிச்சயம் உடையவன்.
மோக்ஷம் அடையும் வரை,  மீண்டும் பிறந்து, இறந்து பூமியில் சுழன்று கொண்டே இருப்பவன்.
தேவர்களை பொறுத்தவரை, மனிதன் அற்பமானவன் என்று சொல்வதற்கு காரணம் உண்டு.

தன் வீட்டின் சுவற்றிக்கு பின்னால் என்ன நடக்கிறது? என்று தானே அறிய முடியாதவன்.
நாளை என்ன நடக்க போகிறது?  என்றும் தெரியாதவன்.
5 வயதில் என்னென்ன செய்தோம்? என்பதை மறந்தவன்.
படித்த பல விஷயங்கள் மறந்து போய், சில விஷயங்கள் மட்டும் தான் ஞாபகத்தில் வைத்து உள்ளவன்.
எத்தனையோ பேரை வாழ்நாள் முழுதும் பார்த்தும், சிலர் மட்டும் தான் ஞாபகத்தில் வைத்து உள்ளவன்.
எப்பொழுது தனக்கு மரணம்? என்றும் அறியாதவன்.

நம் புத்தி அற்பமானது என்று நமக்கே புரிகிறதே !!
இந்த அற்ப புத்தியை கொண்டு, 'தேவர்களை பற்றி எப்படி நம் புத்தியை கொண்டு  அனுமானிக்கலாம்?'

நம் புத்தியை கொண்டு தெய்வம் 'இப்படி தான் இருக்கும்' என்றால், 
யார் வேண்டுமானாலும் கற்பனையாக தெய்வங்களை உருவாக்கி விடலாமே?

இப்படி பொய் மதங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுமே? அது எப்படி உண்மையாகும்?
அது எப்படி தெய்வமாகும்?


இப்படி மனித புத்தி கொண்டு உருவாக்கப்படும் எந்த தெய்வமும் தெய்வமில்லை, எந்த சாஸ்திரமும் சாஸ்திரமில்லை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.
சிலர் சங்கிலியை கட்டி, இதோ தெய்வம் என்பர்.

மனிதனால் புதிதாக பெயர் கொடுத்து உருவாக்கப்பட்ட தெய்வங்கள் 'உண்மையான தெய்வங்கள் இல்லை'.
அங்கு ஏற்படும் அலைகள் யாவும் மன வியாதியே.
பலர் சேர்ந்து "இது தெய்வம், இது தெய்வம்" என்று சொல்லி, ஒரு மன வியாதியை உருவாக்கிவிடலாம்.

கண்ணால் காண முடியாத தெய்வங்களை, ரிஷிகள் பார்த்து, நமக்கு வேத சூக்தங்களாகவும், புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் அருளினர்.

வேத சாஸ்திரங்கள் சொல்லும் வழியில் நாமும் சென்று, அதன்படி செய்யும் போதுதான், தெய்வங்களை நாமும் உணர முடியும்.
தெய்வங்களை நேரில் பார்த்த ரிஷிகள் கொடுத்த வேதத்தை கொண்டே தெய்வத்தை கண்டு பிடிக்க வேண்டும்.

ரிஷிகளின் வாக்கில் வந்த வேதத்தில் 'இந்திரன், வருணன், ருத்ரன், விஷ்ணு, யமன்' என்று பல தேவதைகளின் பெயர் சொல்லப்படுகிறது.

இந்த தேவதைகள் அனைவரும் "உண்மை" என்பதை நீ வேதத்தின் வாக்கினாலும், ரிஷிகளின் சுய அனுபவத்தாலும் நம்பலாம்.

வேத சாஸ்திர படி, வருண ஜெபம் செய்தால், மழை பெய்யும். 
இதை நீயும் அனுபவத்தால் உணரலாம். 
வருண தேவன் உண்மையில் தேவனே என்று உணர்வாய்.

வேதத்தில் சொல்லாத, மனிதன் கற்பித்த தெய்வங்களை, தெய்வங்கள் என்று நம்பி விடாதே.

மெய் ஞானிகளான (உண்மையை அறிந்த) ரிஷிகள் அளித்த வேதத்தில் என்ன சொல்லி உள்ளதோ அதுவே ப்ரமாணம் என்று உணர்வாயாக. 
அதில் உள்ள தேவதைகளே உண்மையான தெய்வங்கள்.

தனக்கு தோன்றிய தேவதைகளை மனிதர்கள் உருவாக்கி கஷ்டப்படுகிறார்கள். தன்னையே ஏமாற்றி கொள்கிறார்கள்.

தெய்வங்களுக்குள்ளே பேதம் (உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு) உண்டா? என்ற உன்னுடைய கேள்விக்கு, 
"பேதம் இல்லை" என்பதாக சில இடங்களில் வேத வாக்கியம் இருக்கிறது.

ச ப்ரம்மா சசிவஸ்தேதிஹ்ய
வேத ஸ்ருதி வாக்ய:
என்று வேதம் சொல்லும் போது, 
'அவனே ப்ரம்மா, அவனே சிவன், அவனே விஷ்ணு 
அவனே எல்லாமுமாக இருக்கிறார்'
என்று அபேதமாக சொல்கிறது.

அபேதம் தெரிவதால், 'அத்வைத' சித்தாந்தமும் வேதத்தில் சொல்லப்படுகிறது."
என்றார் ப்ருகு.

முசுகுந்த சக்கரவர்த்தியை பார்த்து, மேலும் ப்ருகு சொன்னார்,
"தெய்வங்களுக்குள்ளே பேதம் (உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு) உண்டா? என்ற உன்னுடைய கேள்விக்கு, 'பேதம் உண்டு' என்பதாகவும் சில இடங்களில் வேத வாக்கியம் இருக்கிறது.
'இந்திரன், விஷ்ணு, ருத்ரன் போன்ற தெய்வங்கள் இருக்கிறார்கள்' என்று வேதமே பிரித்து காட்டுகிறது.


இப்படி பிரித்து சொல்வதாலேயே, தெய்வங்களுக்குள்ளே  'பேதம்' இருப்பது தெரிகிறது.

யார் ச்ரேஷ்டமான தெய்வம்?
யாரை வணங்கினால் எனக்கு மோக்ஷம் கிடைக்கும்?
சம்சார சாகரத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்? என்று கேட்டாய்.

அக்னிர் தேவானாம் அவம:
விஷ்ணு பரம:
என்று வேத வாக்கியம் இருக்கிறது.

'விஷ்ணு' முதல் தெய்வமாகவும், 
'அக்னி' கடைசி தெய்வமாகவும் இருக்க, 
வேதத்தில் சொன்ன அனைத்து 'பிற தேவதைகளும்' இவர்களுக்கு அந்தர்கதமாக இவர்களுக்கு 'இடையில் இருக்கின்றனர்' 
என்கிறது வேதம்.
இதன் காரணமாக தான், ப்ரம்மத்தை உபாஸிக்கும் ப்ராம்மணர்கள், அக்னி வளர்த்து, விஷ்ணுவை ஆராதனை செய்கிறார்கள்.

'அக்னியையும், விஷ்ணுவையும் பூஜித்தால், இவர்களுக்கு இடையில் இருக்கும் அனைத்து தேவர்களையும் பூஜித்ததாகும்' 
என்று வேதமே அங்கீகரிக்கிறது.
விஷ்ணு: பரம:
என்று வேத ஸ்ருதி சொல்கிறது.
'விஷ்ணுவே பரப்ரம்மம்'
என்று சொல்லும் வேதம், மற்ற தெய்வங்களுக்குள்ளே, அனைத்திலும் அந்தர்யாமியாக விஷ்ணுவே இருக்கிறார் என்று சொல்கிறது.

இப்படி, அக்னி, விஷ்ணு, இந்திரன் என்று வேதமே பிரித்து காட்டுவதால், 'பேதம்' தெளிவாக தெரிகிறது.
பேதம் தெரிவதால், 'த்வைத' சித்தாந்தமும் வேதத்தில் சொல்லப்படுகிறது.

மேலும், 
'தெய்வங்களில் ச்ரேஷ்டமான தெய்வம் யார்?' 
என்று நீ கேட்ட கேள்விக்கு, வேதமே பதில் சொல்கிறது.
நம் புத்தியால் சொல்லக்கூடாது.

வேதமே, விஷ்ணுவாகிய "நாராயணனே" முதல் தெய்வம் என்று சொல்கிறது.
'நீ அவரை உபாசித்தால், உனக்கு மோக்ஷம் கிடைக்கும்' என்பதில் சந்தேகமில்லை"
என்றார் ப்ருகு ரிஷி.

முசுகுந்த சக்கரவர்த்தியை பார்த்து, மேலும் ப்ருகு சொன்னார்,
"தெய்வங்களுக்கு உள்ளே பேதம் உண்டா, இல்லையா? என்று நீ கேட்ட கேள்விக்கு, வேதம் இரண்டுமே உண்மை தான் என்று சொல்கிறது.


சில வேத வாக்கியங்கள்,
'தெய்வங்களுக்கு உள்ளே பேதம் உண்டு' என்று, த்வைதமாக சொல்கிறது.
சில வேத வாக்கியங்கள்,
'தெய்வங்களுக்கு உள்ளே பேதம் இல்லை' என்று, அத்வைதமாகவும் சொல்கிறது.

வேதமே பேதத்தையும் (த்வைதம்), அபேதத்தையும் (அத்வைதம்) சொல்லுவதால், இரண்டுமே உண்மை தான்.
வேதம் பொய் பேசுவதில்லை.

'தெய்வங்கள் வெவ்வேறு' என்று பேதத்தை சொல்லும் வேத ஸ்ருதியை மட்டும் எடுத்துக்கொண்டு முடிவு எடுக்க கூடாது.
அதேபோல,
அனைத்தும் 'ஒருவனே' என்ற அபேதத்தை சொல்லும் வேத ஸ்ருதியை மட்டும் எடுத்துக்கொண்டும் முடிவு எடுக்க கூடாது.

வேதத்தின் உட்பொருளை உணரும் போது, வேதத்தின் உண்மையான அபிப்ராயம் என்ன? என்று புரிந்து விடும்.

தெய்வங்களுக்குள்ளே பேதமா, அபேதமா? அதில் உமக்கு எதில் சம்மதம்? என்று கேட்டாய்.
வேதத்திற்கு எது சம்மதமோ, அதுவே என் சம்மதம்.

'வேதம் ஒரு இடத்தில் அபேதமாக இருக்கிறார் என்றும், மற்றொரு இடத்தில் பேதமாக இருக்கிறார் என்று சொல்வதே' எனக்கும் சம்மதம்.
'அத்வைதமும் உண்மை, த்வைதமும் உண்மை' என்பதால், இரண்டையும் சேர்த்து ஏற்று கொள்ளும் விஷிஷ்ட அத்வைதமே வேதத்தின் உண்மையான அபிப்ராயமாக உள்ளது.

இதுவே என் அபிப்ராயமும் கூட.

(947 AD முதல் 1947 AD வரை, பாரத தேசத்தில், ஹிந்துக்களுக்கு வர இருக்கும் பெரும் ஆபத்தில் இருந்து சமாளிக்கும் தெம்பு கொடுக்க, த்வைதம், அத்வைதம், விஷிஷ்ட அத்வைதம் போன்ற சித்தாந்தத்தை பாரதத்தில் நிலை நிறுத்த “ஆதிசங்கரர்”, “ஸ்ரீ ராமானுஜர்”, “மத்வ ஆச்சாரியார்” அவதாரம் செய்து, ஹிந்துக்களின் மனதில் ஹிந்து தர்மத்தின் மேன்மையை விளக்கி, பொய் மதங்களில் வீழ்ந்து விடாமல் தடுத்தனர் . Further read - http://www.proudhindudharma.com/2018/05/947-1947.html )

வேதம் அபேதமாக பேசும் போது, பரப்ரம்மமாக இருக்கும் அந்த லட்சுமி பதியான விஷ்ணுவே, மற்ற அனைத்து ஜீவனிடத்திலும், அனைத்து உலகத்திலும் பரவி இருக்கிறார் என்கிறது.
அவரே பரப்ரம்மம்.
அவர் ஒருவரே பரமாத்மா. 
அவர் ஒருவரே என்றும் இருப்பவர். 
அவரே அனைத்துமாக இருக்கிறார் என்று சொல்கிறது.
இதுவே உண்மை.
வேதம் 'பேதமாக' பேசும் போது, 
சிவன், யமன், இந்திரன், என்று பல தெய்வங்களை பெயர் குறிப்பிட்டு சொல்கிறது.

நாராயணனே பரவாசுதேவன் என்று சொல்லும் வேதம், அக்னி தேவனை உயர்த்தியும்  ஸ்தோத்திரம் செய்கிறது.


வேதம் 'அபேதமாக' சொல்லும் போது, வேதம் அந்த நாராயணனின் விராட் ஸ்வரூபத்தை பார்த்து துதிக்கிறது.
விஷ்ணுவாக அனைத்தும் நானே என்று இருக்கும் பரப்ரம்மத்தை பார்த்து, அவன் கண்களே அக்னி தேவனாக இருப்பதை கண்டு, அவன் கண்களுக்கு ஜெய கோஷம் போடுகிறது வேதம்.

வெளியோட்டமாக பார்க்கும் போது, அக்னி தேவனை வேதம் துதிப்பதாக தோன்றும்.

வெளியோட்டமாக பார்க்கும் போது, தெய்வங்களுக்குள்ளே பேதம் இருப்பது போல தோன்றும்.

ஞானிகளுக்கு, வேதத்தில் அக்னியை குறித்து வரும் வேத மந்திரங்களை கேட்கும் போது, அந்த நாராயணனின் அங்கமாக இருக்கும் அவன் கண்களுக்கு பூஜை செய்யும் உண்மை புலப்படும்.

இப்படி இந்திரனை குறித்து வரும் வேத மந்திரங்கள் விராட் ஸ்வரூபமாக இருக்கும் நாராயணனின் புஜங்களை குறித்து பாடுகிறது என்று புரியும்.

இப்படி பேதமாக வரும் அனைத்து வேத மந்திரங்களும், அந்த விராட் ஸ்வரூபமாக இருக்கும் நாராயணனுக்கு செய்யும் அங்க பூஜை என்று ஞானிகள் உணர்கின்றனர்.

நாராயணனின் அங்கங்களில் தேவதைகள் அடக்கம்.
அக்னி தேவன் அவர் கண் ஒளியாக இருக்கிறார்.
அல்ப ஆசைகளை நாடுபவன், அக்னியை குறிக்கும் வேத மந்திரங்களை சொல்லும் போது, அக்னி தேவனை மட்டுமே தியானிக்கிறான்.
அக்னி தேவன் கண் பார்வை தருகிறார். ஆரோக்கியம் தருகிறார்.

மோக்ஷத்தை விரும்புபவன், அக்னியை குறிக்கும் வேத மந்திரங்களை சொல்லும் போது, அக்னி தேவனை நினைக்காமல், நாராயணனின் கண்களாக  தியானிக்கிறான்.
அக்னி தேவன் கண் பார்வை தருகிறார். ஆரோக்கியம் தருகிறார்.
மேலும், 
நாராயணன் மகிழ்ச்சி அடைந்து, தன்னையே தருகிறார். பக்தி தருகிறார். பிறவி கடலில் இருந்து மீட்டு, மோக்ஷமும் தந்து விடுகிறார்.

ஒரே வேத மந்திரம் தான். 
அல்ப ஆசை உள்ளவன் அல்ப பலன்களை பெறுகிறான்.

அதே வேத மந்திரத்தை சொல்லி, ஒரு ஞானி அல்ப பலன்களையும் பெறுகிறார், மோக்ஷத்தையும் பெறுகிறார்.

இப்படி அபேதமாக வரும் அனைத்து வேத மந்திரங்களும், அந்த விராட் ஸ்வரூபமாக இருக்கும் நாராயணனையே பூஜை செய்கிறது என்றும் ஞானிகள் உணர்கின்றனர்.

இப்படி வேத மந்திரங்கள் எதையும் விலக்காமல், அதன் உண்மையான நோக்கத்தையும், அர்த்தத்தையும் உணர்ந்து, இரண்டு சித்தாந்தமும்  ஒவ்வொரு விதமாக அந்த நாராயணனை தான், பூஜை செய்கிறது என்பதால், இந்த விஷிஷ்ட அத்வைதமே எனக்கும் சம்மதம்"
என்றார் ப்ருகு முனிவர்.

சந்தேகம் தீர்ந்த, முசுகுந்த சக்கரவர்த்தி மேலும் கேட்டார்,
"நாராயணனே பரப்ரம்மம். அவரே அனைத்துமாக இருக்கிறார். அபேதமாக இருக்கிறார் என்ற உண்மை புரிந்து கொண்டேன்.

'தான் ஒருவனே தெய்வம்' என்று இருக்காமல், தன் அங்கங்களாக இருக்கும் பல தெய்வங்களை நியமித்து, பேதமாக காட்டி கொள்வது ஏன்?"
என்று கேட்டார்.


ப்ருகு சொன்னார்,
"ஜனங்களுக்கு பல வித பலன்களில் ஆர்வம் இருப்பதால், நாராயணன் தன்னை பேதமாக காட்டிக்கொள்கிறார்.
மகா கருணை உடையவர் நாராயணன்.

'தன்னை நேரிடையாக வணங்கினால் தான்' அல்ப பலன்களாக இருந்தாலும் கொடுப்பேன் என்று பிடிவாதம் செய்வதில்லை.

எப்படி ஒரு மருத்துவன் (டாக்டர்) வரும் நோயாளிக்கு 'ஒரே மருந்து' என்று கொடுக்காமல், 
அந்தந்த வியாதிக்கு அதற்கு தகுந்த மருந்து அளிப்பானோ,
அது போல, சர்வேஸ்வரனான நாராயணன், 
அக்னி தேவனை வழிபட்டால் இந்த பலன், 
ருத்ரனை வழிபட்டால் இந்த பலன், 
பிரம்மாவை வழிபட்டால் இந்த பலன்,
சாக்ஷாத் பரவாசுதேவனான தன்னையே வழிபட்டால் 'மோக்ஷம்' என்று, பிரித்து, 
அததற்கு ஆசைப்படும் ஜனங்களுக்கு அந்தந்த தெய்வங்களிடம் பிரியம் வளர செய்கிறான்.

நாராயணனுக்கு, பல வித ஆசைகள் கொண்ட ஜனங்களுக்காக பல வித தெய்வங்களை நியமித்தார்.
'படைத்தல், காத்தல், அழித்தல்' என்ற மூன்று காரியங்களுக்கு, நாராயணன்,
ப்ரம்மாவை 'படைக்கும்' தொழிலை செய்யுமாறு படைத்தார்.
சிவபெருமானை பிரளய காலத்தில் 'சம்ஹாரம்' என்ற அழிக்கும் பொறுப்பை செய்யுமாறு படைத்தார். 
இவர்களுக்குள்ளே அந்தர்யாமியாக தானே இருக்கிறார். பார்க்க பேதமாக தெரிகிறார்.
தானே 'காக்கும்' தொழிலை ஏற்று, விஷ்ணுவாக வ்யூக அவதாரம் செய்கிறார்.

'தான் படைத்த எந்த பிறப்பும் கீழானது இல்லை' என்று காட்ட, மகா கருணை கொண்டு, தானும் கூடவே அவதாரம் செய்கிறார்.

முப்பத்து முக்கோடி தேவர்களை நியமித்து, தானும் ஒரு தேவன் என்று அவதாரம் செய்து கொள்கிறார்.
இந்திரனின் தம்பி 'உபேந்திரன்' என்று அவதாரம் செய்கிறார்.

மற்ற தேவர்களுக்கு, 'இவரும் ஒரு தேவன் தானே' என்று நினைக்கும் அளவுக்கு தன்னை சுலபமாக்கி கொண்டு தேவர்களுடன் பழகுகிறார்.

தேவர்களிடம் மட்டுமா!!, திடீரென்று, 'மீனாகவும், பன்றியாகவும்' தன்னை அவதாரம் செய்து கொண்டு விடுகிறார்.

ரிஷிகளுக்கு நடுவே ஒரு 'ரிஷி'யாகவும் அவதாரம் செய்து விடுகிறார்.

மனிதர்களுக்கு நடுவே தானும் ஒரு 'மனிதனாகவும்' அவதாரம் செய்து விடுகிறார்.

'தான் ஒருவனே தேவன்' என்ற கர்வமே இல்லாமல், மகா கருணை கொண்டு அவதாரம் செய்து விடுகிறார்.

'உபேந்திரனும்' தன்னை போன்ற ஒரு தேவன் தான் என்று தேவர்கள் நினைப்பது போல,
வராக அவதாரம் செய்த போது, பன்றிகளாக உள்ள ஜீவன்கள் இவரும் தன் ஜாதி தான் என்று நினைத்தனவாம்.

மனிதனாக அவதாரம் செய்தாலும், மனிதர்கள், இவரும் மனிதன் தானே என்று பேசுவர்.

இவர் பரவாசுதேவன் என்ற உண்மையை, இவரின் குணத்தாலும், சரித்திரத்தாலும் மட்டுமே கண்டு கொள்ள இயலும்.

ப்ரம்மா, சிவனுக்கு நடுவில், தானும் ஒரு தொழிலை செய்யும் தெய்வம் என்று சொல்லிக்கொண்டு 'விஷ்ணுவாக' வ்யூஹ அவதாரம் செய்து கொண்டார்.


மஹாவிஷ்ணு சாஷாத் அந்த பரம்பொருளே என்று பிரம்மாவும், சிவனும் உணர்ந்து இருந்தனர்.

ஒரு முறை நாரதர், தன் பிதா ப்ரம்மாவிடம்,
'வேதமே உங்களால் தான் கொடுக்கப்பட்டது என்ற பொழுது, தாங்களே பரப்ரம்மம் என்று சொல்லி கொள்ளலாமே?' என்று கேட்டார்.

அதற்கு ப்ரம்மா, 'யார் வேண்டுமானாலும் தன்னை பரம்பொருள் என்று சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால், வேதத்தின் அபிப்ராயம் அப்படி இல்லையே.

வேத வாக்கியம், நாராயணன் மட்டுமே பரப்ரம்மம் என்று சொல்கிறதே. அப்படி இருக்க, நான் பரப்ரம்மம் என்று எப்படி சொல்லிக்கொள்ள முடியும்'
என்று பதில் சொன்னார்.

(புருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?
யார் ஒருவரே புருஷன்? Click Here to Read )

இப்படி பல தெய்வங்களை படைத்து, அனைவருக்கும் தானே அந்தர்யாமியாகவும் இருந்து, அவர்களுக்குள்ளே தானும் அவதாரம் செய்து பழகி, அனைவரையும் தன் மீது பக்தி செய்ய செய்து மோக்ஷம் கொடுக்கும் வரை கூடவே இருக்கிறார் நாராயணன்.

பிரகலாதன் இந்த ஞானத்துடன் இருந்ததால் தான், நாராயணனே எங்கும் வியாபித்து உள்ளார் என்று பார்த்தான்.
தன்னை சூலத்தால் குத்த வரும் அசுரர்களை பார்த்து, பிரகலாதன் சொல்கிறான்,
'என்னை குத்த வரும் உங்களிடத்திலும் நாராயணனே இருக்கிறார். என்னிடத்திலும் நாராயணனே இருக்கிறார்.
நீங்கள் குத்த வைத்திருக்கும் சூலத்திலும் நாராயணனே இருக்கிறார். உங்களை இங்கு அனுப்பிய என் தந்தையிடத்திலும் நாராயணனே இருக்கிறார்.' என்றான்.

பேதமாக உலகம் தெரிந்தாலும், ஞானிக்கு அபேதமாகவே உலகம் தெரிகிறது.
அனைத்தும் நாராயண ஸ்வரூபமாகவே தெரிகிறது. 
அஞானியாக இருந்தால் உலகம் பேதமாக தெரிகிறது. 
இரண்டும் உண்மையாக பக்குவத்தை பொறுத்து தெரிகிறது.
இதுவே விஷிஷ்ட அத்வைதம்.

இந்த ஞான நிலையில் பிரகலாதன் நாராயணனை பக்தி செய்தான்.
நாராயணனின் கருணைக்கு பாத்திரமானான்.
நரசிம்மமாக தரிசனம் பெற்றான். மோக்ஷத்திற்கு தகுதி பெற்றான்.

மோக்ஷத்திற்கு என்ன வழி என்று நீ கேட்டாயே? எனக்கு எது பாதை என்று கேட்டாயே?
நாராயண பக்தி செய்வதே, மோக்ஷத்திற்கு வழி.

நீயும் அந்த நாராயணனிடம் பிரகலாதனை போன்று திடமான பக்தியை செய். 
உனக்கும் தரிசனம் கிட்டும். 
மோக்ஷத்திற்கும் வழி கிடைக்கும்"
என்று ப்ருகு முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தியை பார்த்து அணுகிரஹம் செய்து, ஆசிர்வாதம் செய்தார்.சந்தேகம் தெளிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, காஞ்சியில் உள்ள அந்த “ஹேம சரஸ்” என்ற அந்த பொற்றாமரை குளக்கரையிலேயே நரசிம்மமாக வந்த நாராயணனை தரிசனம் செய்ய, பக்தி யோகமாக, தவம் செய்தார்.

ப்ருகு முனிவரின் ஆசி பெற்ற, குரு கடாக்ஷம் பெற்ற முசுகுந்த சக்கரவர்த்திக்கு, காஞ்சியில் வரதராஜனாக இருக்கும் நாராயணன், இவருக்கு "யோக நரசிம்மமாக" (அழகிய சிங்க பெருமாள்) காட்சி கொடுத்தார்.