Followers

Search Here...

Showing posts with label வேதனை. Show all posts
Showing posts with label வேதனை. Show all posts

Saturday 20 April 2019

மரண வேதனையில் இருந்து தப்பிக்க வழி என்ன? மரண வேதனை எப்படி இருக்கும்? தெரிந்து கொள்வோமே!!

நமது உடலில் உள்ள 'நாடிகள்' சரியான நிலையில் ஓடும் வரை,
நமது 'மனம்' திடமாக இருக்கும் வரை,
நம்முடைய வாழ்க்கை ஒழுங்காக ஓடுகிறது.


ஒழுங்காக ஓடும் வரை, 'அதை வாங்குவேன், இதை சாதிப்பேன், அவனை ஒழிப்பேன்' என்று அலைகிறோம்.
நமக்கு உடம்பு சரியில்லை என்றால், டாக்டரை பார்க்க ஒடுகிறோம்.
அவர் நம் கையை பிடித்து, நாடி ஒழுங்காக ஒடுகிறதா? என்று  பார்க்கிறார்.
நாடி ஒழுங்காக ஓடினால் 'பயமில்லை' என்கிறார்.
நாடி தாறுமாறாக ஓடினால்?
மனம் பேதலித்து போனால்?
நமக்கு உண்மையான பிரச்சனை அங்கு தான் ஆரம்பிக்கிறது.

மரண சமயத்தில், உடம்பில் உள்ள நாடிகளும், மனமும் தாறுமாறாகி விடும். எதற்கும் கட்டுப்படாமல் போகும்.
மனம் தாறுமாறாக போன நிலையில்,
எதுவுமே புரியாத நிலையை ஏற்பட்டு விடும்.

மரண படுக்கையில் கிடக்கும் போது, யார் யாரோ மனதுக்குள், வந்து வந்து நிற்பார்கள்.
இத்தனை காலம் மனதில் எழுந்த தோற்றங்கள், எண்ணங்கள், விஸ்வரூபம் எடுத்து, தாறுமாறாக நம் மனதில் வந்து நிற்கும்.

பலரின் நினைவு ஒரே சமயத்தில் வருவதால், குழப்பத்தை ஏற்படுத்தி, 'யார்? யார்? யார்?' என்று கேட்க வைத்து, கண்கள் அகன்று பேய் முழி முழிக்க வைக்கும்.
மனமும், நாடிகளும் கட்டுப்பாட்டை இழந்து, மரண சமயத்தில் சிலருக்கு, யார் தன்னை பார்க்க வந்து இருக்கிறார்? என்று தெரியும். ஆனால் பேச விடாமல் வாய் இழுத்து விடும்.
'பேரன்' தான் வந்து இருக்கிறான் என்று தெரியும்.
பேசலாம் என்று தோன்றும். ஆனால் வாக்குக்கான நாடி செயல்படாமல் இழுத்து விடும். வாக்கு எழாது.
வாக்கு இழுத்த நிலையில், மனமும் தாறுமாறாக போன நிலையில், பேச முடியாமல் செய்வதறியாது கண்கள் அகன்று முழிக்க வைக்கும்.

சில பேருக்கு, மரண சமயத்தில் யார் வந்து இருக்கிறார்? என்பது கூட தெரியாமல் போய் விடும்.
தன் மகனே வந்தாலும், யார் வந்தார்கள்? என்று புரிந்து கொள்ள முடியாமல், மனது அலை பாயும்.
"யாரு? யாரு?..." என்று கேட்டுக்கொண்டே செய்வதறியாது முழிப்பார்கள்.


இது மரண காலத்தில் அனைவருக்கும் ஏற்பட போகும் அவஸ்தை.
மறுக்க முடியாத உண்மை.

இப்படி ஒரு மரண வேதனையை, ஒவ்வொரு ஜீவனும் கட்டாயம் அனுபவிக்கிறார்கள். அனுபவிக்க போகிறார்கள்.
யோகிகளுக்கும் இந்த மரண வேதனை உண்டு.

மரண சமயத்தில், மனமும் நாடியும் தாறுமாறாக போவதால்,
வாய் இழுத்து விடும்,
கண்களை போட்டு சுழற்றும்,
உடம்பே வீங்கி விடும்,
வயிற் உப்பி விடும்.
மனம் கட்டுப்பாட்டை இழந்ததால், நாடிகள் தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பிக்க, படுத்த படுக்கையிலேயே மலம் மூத்திரம் தானாகவே வெளியேறி விடுகிறது. 
மரண சமயத்தில் இவன் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறான்? என்று சொந்தங்களையே பேச வைக்கும்.

மரண வாசலில் படுத்து இருக்கும் போது, உடம்பில் ஈ மொய்க்கும். எறும்பு கடிக்கும்.
தன் மேல் கடிக்கும் எறும்பை, தன் கையால் எடுத்து ஏறிய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

ஒரு கல்லை போன்று, கட்டையை போன்று, போட்டது போட்டபடி மரண சமயத்தில் கிடக்கிறான்.
ஆரோக்கியமாக இருந்த காலத்தில், ஒரு கொசு கடித்தால் கூட தாங்க முடியாமல் புரண்டு புரண்டு படுப்பவன், தன் மரண சமயத்தில்,100 தேள் ஒரே சமயத்தில் கடித்தால் ஏற்படும் தாங்க முடியாத வலியை ஒருசேர, உடல் முழுவதும் அனுபவிக்கிறான்.
மரண காலத்தில் என்ன அனுபவம் பெறுகிறோம்? என்று கருட புராணத்திலும் காட்டப்படுகிறது.

இப்படி ஒரு மரண வேதனை நமக்கு முன்னால் இருப்பது தெரிந்தும், அந்த மரண வேதனையில் இருந்து தப்பிக்க வழி தேடிக்கொள்ளாமல் இருப்பானா ஒரு விவேகி? 

மரண வேதனையில் இருந்து தப்பிக்க, இன்றே "நாராயணனிடம் பக்தி செய்" என்று நமக்கு பாசுரங்கள் அருளி இருக்கிறார்கள் ஆழ்வார்கள்.

இப்படிப்பட்ட மரண வேதனையை அனுபவித்து கொண்டு, நம் சொந்தங்கள் 'எப்போ இவன் உயிர் போகுமோ?' என்று கேட்கும் அவமானத்தை கேட்டு கொண்டு, "கொர்...  கொர்..." என்று இழுத்துக்கொண்டு, உயிர் ஊசலாடி கொண்டு இருக்கும்.

இந்த நிலையை பார்த்து விட்டு, நம்முடைய சொந்தங்கள் எல்லோரும் "இன்னும் பத்து நிமிடத்தில் உயிர் போய் விடும்" என்று சொல்லிக்கொண்டு, செய்வதறியாமல் கையை பிசக்கிக்கொண்டு சுற்றி உட்கார்ந்து இருப்பார்கள்.


இப்படி ஒரு நிலை நமக்கும் உண்டே.. மறுக்க முடியுமா?...
தர்மபுத்திரரான யுதிஷ்டிரரிடம், யக்ஷ ராஜன் (யமன்)
"எது ஆச்சர்யம் ?"
என்று கேட்ட பொழுது, தர்மபுத்திரர் அற்புதமான பதிலை சொன்னார் என்று பார்க்கிறோம்.
"இந்த சரீரத்தில் ஒன்பது த்வாரங்கள் இருந்தும், ஆத்மா வெளியே செல்லாமல் இருக்கிறதே!! இதுவே ஆச்சர்யம்."
என்றார்.

இதை கேட்ட யக்ஷன்,
"இதையும் விட ஆச்சர்யம் எது?"
என்று மேலும் கேட்க,
"உலகில், பலர் தினமும் இறந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதை கண் கூடாக பார்த்தும்,
தான் மட்டும் ஏதோ சாகாமல், சாஸ்வதமாக (நிரந்தரமாக) இருந்துகொண்டே இருக்கப்போவதாக நினைத்து வாழ்கிறார்களே!! இவர்களே மிகப் பெரிய ஆச்சர்யம்"
என்று பதில் சொன்னார் என்று பார்க்கிறோம்.

மரண வேதனை நம் அனைவர் முன்னாலும் காத்து கொண்டு நிற்கிறது.
மரண வேதனை தவிர்க்க முடியாதது.
'மோக்ஷம் என்ற வைகுண்டம்' அடையாது போனால், நமக்கு மறுபிறவி உண்டு.
ஒவ்வொரு பிறவியிலும் இந்த மரண வேதனை நம்மை விடாது.
மரண வேதனைக்கு பயந்தாவது, நாராயணனை பற்றி கொள் என்கிறார்கள் ஆழ்வார்கள்.

நாம் செய்த புண்ணியங்களுக்கு, சொர்க்கத்தில் சில நிமிடங்கள் இருந்து விட்டு,
நாம் செய்த பாவங்களுக்கு நரகத்தில் தண்டிக்கப்பட்டு,
மீண்டும் மீண்டும் பூமிக்கு அனுப்பப்பட்டு, பிறந்து கொண்டே இருக்கிறோம்.
கடைசி மூச்சு விடும் சமயத்தில், என்ன நினைவு ஏற்படுகிறதோ? அது சம்பந்தமாகவே அடுத்த பிறவி எடுக்கிறான் என்று வேத சாஸ்திரம் 'மறுபிறவி ஏற்படுவதற்கான காரணத்தை' சொல்கிறது.


பகவத்கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் ,
யம் யம் வாபி ஸ்மரண் பாவம்
த்யஜத் யந்தே கலேவரம் !
தம் தமேவைத்தி கௌந்தேய
சதா தத் பாவ பாவித !! 
(Chapter 8, Sloka 8)
என்று சொல்லும்போது,
"எவனெவன் சாகிற காலத்தில், எதை எதை நினைத்து சாகிறானோ, அது சம்பந்தமாகவே அடுத்த பிறவி எடுத்து விடுகிறான்." என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, வேத வாக்கை ஊர்ஜிதப்படுத்துக்கிறார்.
'கடைசி மூச்சு விடும் சமயத்தில், நாராயணனை ஸ்மரணம் செய்து கொண்டே உயிர் பிரிந்தால் மட்டுமே மோக்ஷம் கிடைக்கும்' என்று வேத சாஸ்திரம் சொல்கிறது.

ராமாயண காலத்தில் சபரியும், சரபங்க ரிஷியும் யோகிகளாக வாழ்ந்தனர்.
தன் யோக வலிமையால் ஸ்ரீ ராமரை தரிசித்துக்கொண்டே, வேறு நினைவுகள் ஏற்படாத வண்ணம் மனதை நிலை நிறுத்தி, ஜீவன் உடலை விட்டு பிரிவதை தைரியமாக எதிர்கொண்டு, மோக்ஷம் அடைந்தார்கள்.
அதே போல, கடைசி நிமிடத்தில், ஸ்ரீ கிருஷ்ணனை தரிசித்து கொண்டே, விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி, கிருஷ்ண த்யானத்தோடு, தைரியமாக உயிரை பிரித்து கொண்டார் பீஷ்மர்.

யோகீஸ்வரர்களான இவர்களால், உயிர் பிரிவதை, ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மரண சமயத்தில் இருந்தது.
பகவானை எதிரில் நிறுத்தி, அவர் த்யானத்துடன் உயிரை பிரித்துக்கொள்ளும் சாமர்த்தியம் கொண்டிருந்தனர்.

யோகிகள் எல்லோரும் மோக்ஷம் அடைவார்களா? என்று கேட்டால், 'இல்லை' என்றும் தெரிகிறது.

யோகீஸ்வரரான பரத முனிக்கே மோக்ஷம் அந்த ஜென்மத்தில் கிடைக்கவில்லையே !!
பரத யோகீஸ்வரருக்கு, அவருடைய மரண சமயத்தில் "ஐயோ நான் வளர்த்த மான் என்ன ஆகுமோ?"
என்று மான் நினைவு ஏற்பட்டு விட்டது.
தன் வாழ்நாள் முழுவதும், தன் யோக பலத்தால், பகவத் தியானமே செய்தார் பரத யோகி.
கடைசி காலத்தில்,
பகவான் நாராயணன் நினைவு அவருக்கே வரவில்லை.


அத்தனை கடும்முயற்சி செய்து யோகீஸ்வரரான பரதர், மரண சமயத்தில் மான் நினைவோடு உயிரை விட்டதால், மறு ஜென்மத்தில் மானாகவே பிறந்து விட்டார்.
யோக பயிற்சிகள் அவரை கைவிட்டு விட்டதே !!
அப்யாச 'யோக'த்தால் செய்த தியானம் அவரை கைவிட்டது.
ஒரு மானிடம் ஏற்பட்ட 'ஆசை' அவரை கவிழ்த்து விட்டதே!!

யோகத்தால் தியான ஸித்தி ஏற்படலாம்.
8 ஸித்திகளும் கை கூடலாம்.
கடைசி நிமிடத்தில்  பகவத் தியானம் ஏற்படுமா? என்பது சந்தேகம் என்று பரத ரிஷி வாழ்க்கையை பார்த்தாலே தெரிகிறதே!!

மோக்ஷம் அடைய, யோக சாதனைகள் ப்ரயோஜனப்படாது என்று தெரிகிறதே.

யோக சாதனைகளை, மோக்ஷம் அடையும் வழியாக நம்ப இயலவில்லை.

கடைசி நிமிடத்தில் யோகிகள் கூட  பகவத் தியானம் செய்ய முடியாமல் போகுமென்றால், சாதாரண ஜனங்களான நம்மை போன்ற மனிதர்கள், யோக சாதனைகளை செய்து, மோக்ஷம் அடைவது என்பது நடக்காத காரியமே.

கடைசி மூச்சு விடும் சமயத்தில் 'ஹரி' நாமம் வராது போனால், மோக்ஷம் கிடைக்காது.
மோக்ஷம் அடையாது போனால், நமக்கு மறுபிறவி நிச்சயம். 
மறுபிறவி இருப்பதாலேயே, மரண வேதனையும் நிச்சயம்.

இன்றைய பொழுதில் நமக்கு உடலும் அனுகூலமாக உள்ளது. மனதும் விகாரப்படாமல் அடங்கி இருக்கிறது.
இந்த நல்ல நிலையில் கூட, நம் வாயில் "ராம ராம ராம..." என்று பகவன் நாமா வரவில்லையே !!
காபி சாப்பிடவும்,
புரளி பேசவும்,
சினிமா பார்க்கவும்
அங்கும் இங்கும் அலைய ஆசை இருக்கிறதே தவிர,
வரப்போகும் மரணத்தை பற்றிய எண்ணமில்லையே !!
மறுபிறவி கூடாது, மோக்ஷம் வேண்டும் என்ற முயற்சி இல்லையே!!




உடலும், மனமும் நன்றாக இருக்கும் இன்றைய நிலையிலேயே "நாராயணா" என்று வாயில் வராத போது,
மரகட்டை போல கிடக்கும் நிலையில், உடலும் மனமும் கட்டுப்பாட்டை இழந்த நிலையில்,
100 தேள் ஒரே சமயத்தில் கொட்டும் வேதனையை தரும் மரண காலத்திலா,
நமக்கு "நாராயணா..." என்று வர போகிறது?

மரண காலத்திற்கு இப்பொழுதே தயார் செய்து கொள்ள வேண்டாமா?
மரண வேதனை ஏற்படாமல் இருக்க வேண்டிய முயற்சி செய்து கொள்ள வேண்டாமா?

யோகிகளும் ஜெயிக்க முடியாத மரண வேதனையை, சாதாரண ஜனங்கள் ஜெயிக்க முடியுமா?
மரண வேதனையை மறந்தால் தானே, பகவத் தியானம் செய்ய முடியும்?
பகவான் நாராயணனோ, கடைசி மூச்சு விடும் சமயத்தில்
'யார் என்னை நினைக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே மோக்ஷம் கொடுக்கிறேன். மற்றவர்களுக்கு அவர்கள் செய்த புண்ணியத்துக்கு ஏற்ற சொர்க்க வாசமோ, ப்ரம்ம லோக வாசமோ, கைலாய வாசமோ, அதல, சுதல, பாதாள லோகங்களில் வாசமோ செய்ய செய்து,
பாவத்துக்கு நரக லோகத்தில் ஏற்ற தண்டனை கொடுக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் பூ உலகில் மரமாகவோ, விலங்காகவோ, பறவையாகவோ, மனிதனாகவோ பிறக்க செய்கிறேன்' என்கிறார் !!

மரண வேதனையை சாதாரண ஜனங்களால் ஜெயிக்கவே முடியாதே!!
ஒரு கொசு கடித்தாலேயே, உடலை துச்சம் என்று நம்மால் நினைக்க முடிவதில்லை.
மரண வேதனையை அனுபவிக்கும் சமயத்தில், உடலை மறந்து, சாதாரண ஜனங்களால் பகவத் தியானம் செய்யவே முடியாதே!!
அவர்களுக்கு மோக்ஷமே கிடையாதா??
இந்த கவலை ஒரு முறை ஸ்ரீ ராமனுஜருக்கே வந்து விட்டது!!
எய்ப்பு என்னை வந்து நலியும் போது
அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப்பள்ளியானே !!
இது பெரியாழ்வார் அருளிய 'திருமொழி'
'ரங்கப்ரபோ... உடலும் மனதும் கட்டுப்பாட்டை இழந்து,
100 தேள் ஒரே சமயத்தில் கொட்டும் மரண வேதனையை அனுபவிக்கும் சமயத்தில்,
அந்த மரண வேதனையை தாங்க முடியாமல் "ஐயோ... அம்மா.." என்று கதறும் என்னிடம் போய், 'என்னை மரண சமயத்தில் தியானம் செய்தாயா?' என்று கேட்காதீர்கள்.
மரண வேதனையை அனுபவிக்கும் நான், அந்த சமயத்தில், உறுதியாக உங்களை நினைக்கவே மாட்டேன்.

மரண காலத்தில் உங்களை நினைக்க துப்பு இல்லாதவன் என்பதை உணர்வதால், குழந்தையாக இருக்கும் போதே, இளமையுடன், ஆரோக்கியத்துடன் இருக்கும் இப்போதே 'ரங்கப்ரபோ.. ரங்கப்ரபோ..." என்று இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப்பள்ளியானே'
என்று திருமொழியில் பெரியாழ்வாரே இந்த பாசுரத்தில், உறுதியாக சொல்கிறார்.
பகவானோ 'மரண சமயத்தில் என் தியானம் வராவிட்டால், மோக்ஷம் கிடையாது' என்று உறுதியாக, தீர்மானமாக சொல்கிறார்.

பெரியாழ்வாரோ 'மரண சமயத்தில் மரண வேதனை எழும்பி, பகவத் தியானம் வரவே வராது' என்று உறுதியாக சொல்கிறார்.

இளமை காலத்திலேயே, உடலும் மனமும் நம் சொல்பேச்சு கேட்கும் சமயத்திலேயே, பகவத் பக்தி செய்து பழகி விட்டோம் என்றால், அந்த பழக்கமே, நம் கடைசி காலத்தில் பகவத் தியானத்தை சுலபத்தில் கொடுக்கும் என்று நம்பினால், ஆழ்வார் அதற்கும் உத்திரவாதம் இல்லை என்கிறார்..
மேலும்,
பெரியாழ்வாரே "அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்" என்று 'கடைசி நிமிடத்தில் பகவத் தியானம் நான் செய்ய மாட்டேன்' என்று வேறு சொல்கிறார்.

எப்படிப்பட்ட எண்ணங்களுடன் ஒருவன் தன் வாழ்நாளை செலவழிக்கிறானோ, அப்படிப்பட்ட எண்ணங்களே மரண சமயத்தில் எழும்பி, அந்த எண்ணங்களே காரணமாக ஆகி மறுபிறவி அமைந்து விடுகிறது.

உலக எண்ணங்களுடனேயே ஒருவன் தன் வாழ்நாளை செலவழித்தால், அது சம்பந்தமான எண்ணங்களே மரண சமயத்தில் எழும்பி, அந்த எண்ணங்களே காரணமாக ஆகி மறுபிறவி அமைந்து விடுகிறது.
எப்படிப்பட்ட எண்ணங்களுடன் வாழ்கிறோமோ, அது சம்பந்தமான எண்ணங்களே மரண சமயத்தில் எழும்புவதால், 'மோக்ஷம் அடைய வேண்டும்' என்று ஆசைப்படுபவர்கள் (முமுக்ஷுக்கள்),
தன் வாழ்நாளை பகவத் தியானம், பகவத் கைகர்யம் செய்து கொண்டே கழிக்கின்ற்னர்.
அது சம்பந்தமான பகவத் எண்ணங்கள் மட்டுமே மரண காலத்திலும் அவர்களுக்கு ஏற்பட்டு, மோக்ஷத்திற்கு வழி செய்யும் என்று புரிந்து இருந்தார் ராமானுஜர்.

யோகிகள் கூட, மரண வேதனையை ஜெயிக்க முடியாமல், மனதின் எண்ணத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர்..
பகவத் தியானமே தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்த பரத யோகீஸ்வரருக்கு, கடைசி நொடியில் பகவத் தியானம் மறந்து போய், எங்கேயோ மனதில் ஒட்டியிருந்த மானின் எண்ணம் ஏற்பட்டு, உயிர் பிரிந்து விட்டது. அந்த ஜென்மத்தில் அவருக்கு மோக்ஷம் கிடைக்கவில்லை. அடுத்த பிறவி அமைந்து மானாகவே பிறந்து விட்டார்.

யோகிகள் கூட மோக்ஷம் கிடைக்காமல் தோற்று போனார்கள் என்பதால், பெரியாழ்வார் 'இளமையிலேயே பகவத் பக்தி செய்து, பகவத் பக்தி செய்து, வாழ்ந்தாலும், மரண சமயத்தில் மரண வேதனையை மீறி, பகவத் சிந்தனை நமக்கு ஏற்படும் என்று சொல்வதற்கில்லை' என்று சொல்ல, ஸ்ரீ ராமானுஜருக்கே ஒரு சமயம் கலக்கம் ஏற்பட்டு விட்டது.

நன்றாக இருக்கும் காலத்திலேயே பகவத் தியானம் இந்த ஜனங்களுக்கு வரவில்லையே !! மரண வேதனையை அனுபவிக்கும் சமயத்திலா சாதாரண ஜனங்களுக்கு 'நாராயணன்' நினைவு வரப்போகிறது?

மரண வேதனை நிச்சயமாக நமக்கும் இருக்கிறது, என்று தெரிந்து கொண்டே,
வீண் பொழுது போக்கி,
நன்றாக இருந்த சமயத்தில்
தூங்கியும், சாப்பிட்டும்,
தூங்கியும், சாப்பிட்டும்,
தூங்கியும் தானே பொழுது போனது...
இப்படி வாழ்க்கை வாழ்ந்தால், கடைசி நிமிடத்தில் எப்படி பகவத் தியானம் ஏற்படும்?


பெரியாழ்வார் சொன்னபடி, இளமை காலத்திலேயே பக்தி செய்தோம் என்றாலும், கடைசி மூச்சு விடும் சமயத்தில் பகவத் தியானம் ஏற்படுவது சுலபம் இல்லை என்கிறாரே?
தாங்க முடியாத மரண வேதனையை மீறி, பகவத் தியானம் ஏற்படுமா?.. சாத்தியமில்லையே..

'பகவத் தியானம் செய்தால் தான் மோக்ஷம் தருவேன்' என்று பெருமாள் சொல்கிறாரே!!

பெரியாழ்வார் 'சொன்ன சொல்லும் பொய் போகாது'.
பெருமாள் 'சொன்ன சொல்லும் பொய் போகாது'.

"இளமை காலத்திலிருந்தே பகவத் கைகர்யம் செய்கிறேன். அதனால் மரண காலத்தில் பகவத் தியானத்தை எதிர்பார்க்காதீர்கள்" என்று ஆழ்வார் சொல்கிறாரே?
"மரண காலத்தில் பகவத் தியானம் செய்தவர்களுக்கு மட்டுமே மோக்ஷம்" என்று பெருமாள் சொல்கிறாரே?

இருவர் வாக்கும் பொய் போகாது என்று புரிந்தாலும், இருவர் சொல்வதும் எதிர் எதிராக இருப்பது போல தெரிய, ஸ்ரீ ராமனுஜருக்கு மனதில் கலக்கம் ஏற்பட்டது.
பெருமாளோ ஸ்ரீ ராமானுஜரிடம் அர்ச்ச மூர்த்தியாகவே (சிலையாகவே) பேசுவார்.
தன் வருத்தத்தை காஞ்சி வரதராஜ பெருமாளிடமே விண்ணப்பித்து கொண்டார் ஸ்ரீராமானுஜர்.
(இன்று காஞ்சிபுரம் போனாலும் ராமனுஜரிடம் பேசிய வரதராஜ பெருமாளை, பேரருளாளனை நாமும் நம் கண்ணால் தரிசித்து ஆனந்த படலாம்)

வராஹ அவதாரம் செய்த போது பூமி தேவியுடன் பேசிய அதே பதிலை, இப்பொழுது காஞ்சி வரதன், ஸ்ரீ ராமனுஜருக்கு ஞாபகப்படுத்தினார்.

காஞ்சி வரதன் என்ற பேரருளாளன், ஸ்ரீ ராமானுஜரை பார்த்து, அர்ச்ச அவதாரமாக இருந்து கொண்டே பேசினார்,
"என்னுடைய அடியாருக்கு, அந்திம காலத்தில் என்னுடைய நினைவு வர தேவையில்லை" என்றார்.
'இது என்ன தேவரீர், இப்படி சொல்லிவீர்டீர்கள்!
சாஸ்திரம் அந்திம காலத்தில் உங்கள் ஸ்மரணம் வேண்டும் என்று சொல்கிறதே?'
என்று ராமானுஜர் கேட்க,
'என்னை சரணம் அடையாத யோகீஸ்வரர்களுக்கு அப்படி ஒரு விதி சொல்லப்பட்டது.
யோக அப்யாசத்தால் சுய முயற்சியால் மனதை நிறுத்தி, மரண காலத்தில் என்னை தியானிக்க சக்தி உள்ளவர்களுக்கு 'என்னை தியானம் செய்தால்' மோக்ஷம் கொடுக்கிறேன் என்றேன்.
ஆனால்,
என் அடியார்களுக்கு இத்தனை கடும் முயற்சிகள் தேவையில்லை.
என் அடியார்கள், அந்திம காலத்தில் 'ஐயோ அம்மா..' என்று மரண வேதனையில் அலறிக்கொண்டு இருந்தாலும் மோக்ஷம் கிடைக்க செய்கிறேன்.

காஷ்டபாசமாக (கல்லும் கட்டையும் போல) மரண வாசலில் என் பக்தன் கிடக்கும் போது, அவனால் என்னை நினைக்க முடியாது என்று அறிவேன்.
மனமும், உடலும் தாறுமாறாக போன நிலையில் அவனால் என்னை தியானிக்க முடியாது என்று அறிவேன்.
என் பக்தன் என்னை அப்பொழுது தியானிக்க முடியாது போனாலும்,
அவனை நான் நினைக்கிறேன்.



அவன் 'கால்' நன்றாக இருக்கும் பொழுது, ஓடி ஓடி வந்து 'என் சன்னதி' முன் நிற்பானே!!
'இன்று ரங்கநாதன் புறப்பாடு,
இன்று திருவெங்கடமுடையான் புறப்பாடு', என்று வந்து வந்து நிற்பானே!!
'கண்' நன்றாக தெரியும் போது, ஓடி ஓடி வந்து 'பெருமாள் சேவை இன்று எப்படி அழகாக இருந்தது!!',  என்று பார்த்து கொண்டு ரசிப்பானே!!

'காது' நன்றாக கேட்கும் பொழுது, ஓடி வந்து ஓடி வந்து 'அங்கு பாகவத உபன்யாசமாம்', 'அங்கு ராமாயண உபன்யாசமாம்' என்று காது குளிர கேட்டு ஆனந்த படுவானே!!
'வாய்' நன்றாக இருக்கும் காலத்தில், 'நாராயணா...கோவிந்தா... ராமா...ரங்கப்ரபோ...வரதா' என்று என் திருநாமத்தை எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பானே!!

'கை' நன்றாக இருந்த காலத்தில், என் அடியார்களுக்கு வேண்டிய தொண்டுகள் அலுக்காமல் சலிக்காமல் செய்வானே!!

ஒரு மனிதன், தனக்கு அன்பு காட்டியவனிடத்தில் நன்றி கெட்டு நடந்து கொள்ள வாய்ப்பு உண்டு.
ஆனால் எனக்கு, ஒரு ஜீவன் ஒரு 'துளசி' சமர்ப்பித்தால் கூட வீண் போகாது.
ஒரு பிடி 'அவல்' கொடுத்தாலும் கூட, குபேரன் ஆக்கி விடுவேன் என் பக்தனை.
ஒன்றுமே கொடுக்கவில்லை, வாயால் 'கோவிந்தா...' என்று ஒரு முறை சொன்னால் கூட அபயம் தருவேன்.
திரௌபதி 'கோவிந்தா' என்று கூப்பிட்ட ஒரு சொல்லுக்கு அவள் குடும்பத்துக்கே அடிமையாக கூட இருந்து காப்பேன் என்று தானே, அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினேன்.

என்னையே சரணம் அடைந்து, என்னையே சுற்றி சுற்றி வந்தவனுக்கு நான் அல்லவோ உண்மையான ஆதம் உறவு.

இன்று மரண வாசலில் என் பக்தன் கிடக்கிறானே... அவனுடைய சரீர பந்துக்கள் எல்லோரும் வந்து போகிறார்களே.
நான் அவனுடைய ஆத்ம பந்துவாயிற்றே.. நாம் சென்று பார்க்க வேண்டாமா..

என் பக்தன் மரண படுக்கையில் கிடக்கும் போது, மரண வேதனையில் தவிக்கும் போது, நான் அவனுக்கு மரண வேதனையை மறைத்து, என் தியானத்தை கொடுப்பேன்.



சரீர பந்துக்கள்
'அப்பா... அப்பா.. என்னை தெரிகிறதா?....',
'அண்ணா.. என்னை தெரிகிறதா?...',
என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது,
ஆத்ம பந்துவான நான், என் அபய ஹஸ்தத்தை காட்டி, பிரசன்னமான முகத்துடன் 'என்னை தெரிகிறதா?...' என்று கேட்க, சரீர பந்துக்கள் அழைப்பது எல்லாம் என் பக்தனுக்கு மறந்தே போய் விடும்.
மரண வேதனையும் மறைந்து விடும்.

நானே வலிய வந்து, என் பக்தனுக்கு, என் நினைவை கொடுப்பேன்.
தரிசனம் பெற்ற என் பக்தனுக்கு வேறு நினைவு ஏற்படாத வண்ணம் செய்து, என் பக்தன் கடைசி மூச்சு விடும் சமயத்தில் 'என்னை நினைத்து விட்டான்' என்று வேத சாஸ்திரத்தையும் மீறாமல் இருக்க செய்து, நானே அவனை மோக்ஷத்திற்கு அழைத்து சென்று விடுவேன்"
என்றார் அர்ச்ச அவதாரமாக இருந்த காஞ்சி வரதன்.
ஸ்ரீ ராமானுஜர் பேரருளாளன் பதிலால், பேரானந்தம் அடைந்தார்.

இளமை காலத்திலேயே பகவத் பக்தி நிறைய செய்து வந்தால், பகவான் நம்மை கண்டு பிரியம் கொள்கிறார்.
'என் பக்தன்' என்று கவனிக்கிறார்.

மரண காலத்தில், மரண வேதனை அனுபவித்தாலும்,
நம்மால் பெருமாளை தியானிக்க முடியாமல் போனாலும்,
நாம் அவரிடம் காட்டிய 'பக்தி என்ற அன்பு'க்கு வசமாகி, நமக்கும் திவ்ய காட்சி கொடுத்து, பகவத் தியானத்தை தானே கொடுத்து, மோக்ஷம் கிடைக்க செய்கிறார்.
பெருமாள் தன் கருணையின் காரணமாக தன் பக்தன், பிறவி கடலை கடக்க செய்கிறார்.

காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு 'பேரருளாளன்' என்ற சொல்வதன் மகத்துவம் ஸ்ரீ ராமனுஜருக்கே புரியக்கூடியது.
உலகம் பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பூமா தேவி, பெருமாளிடம் பிரார்த்தனை செய்தாள்.
பூமியை வராஹ அவதாரம் செய்து தூக்கி, அதன் நிலையில் நிறுத்தினார் பெருமாள்.

அப்பொழுது, நம்மை எல்லாம் பெற்று, தாங்கி கொண்டு இருக்கும் பூமி தாயார், தன் கணவனான, நம் தகப்பனாரான பெருமாளிடம், 'இப்படி நம் குழந்தைகள் (ஜீவன்கள்) பிறந்து இறந்து, பிறந்து இறந்து கொண்டே இருக்கிறார்களே!! இவர்களுக்கும் மோக்ஷம் கிடைக்க வழி சொல்லுங்கள்' என்று கேட்க,
வராஹ அவதாரத்துடன் இருந்த பெருமாள், பிற்காலத்தில் 1037AD சமயத்தில், காஞ்சி வரதனாக ஸ்ரீராமனுஜருக்கு உபதேசித்ததை, அன்று பூமா தேவிக்கு உபதேசம் செய்தார்.

பெற்றோருக்கு, தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டுமே என்ற கவலை எப்பொழுதும் உண்டு.
நாம் அனைவருக்கும் தாயான பூமா தேவியும், பூமா தேவியின் கணவனும், நம் தந்தையுமான நாராயணனும், நம் நலத்திற்காக பேசிக்கொள்ளும் அற்புதமான புராணம் வராஹ புராணம்.


வராஹ புராணம் படிப்பதாலேயே நமக்கு சாத்வீக புத்தி வளரும். சாத்வீக பக்தியும் வளரும். சாத்வீக குணங்களே வளரும். சாத்வீக தெய்வமான நாராயணன் மீதே பிரியம் ஏற்படும். மோக்ஷமும் உண்டாகும்.

நாம் மோக்ஷம் அடைய,
சக்கரவர்த்தியான 'ராமபிரான்' சொல்லாத ஆறுதல் வார்த்தையை,
கீதாச்சாரியன் 'ஸ்ரீ கிருஷ்ணர்' சொல்லாத ஆறுதல் வார்த்தையை,
'வராஹ பெருமாள்' நமக்கு சொல்கிறார்.

ஒவ்வொரு அவதாரமும் ஒரு காரணத்திற்காக பெருமாள் செய்தார்.
வராஹ அவதாரம் செய்து பூமியை மீட்டு, நாம் வாழ இடமும் கொடுத்து, மோக்ஷமும் கிடைக்க வழியை சொல்லி, வைகுண்டம் அழைத்து கொண்டு போவேன்' என்று சொல்லும் அவதாரமாக உள்ளது வராஹ அவதாரம்.

ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த பெருமாள், "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று சொல்லும்போது, "என்னை சரணம் அடை. மோக்ஷமும் கொடுக்கிறேன்." என்கிறார்.

ஸ்ரீ ராமராக அவதாரம் செய்த பெருமாள், "குற்றமே செய்தாலும், என்னை சரணம் அடைந்தவனை காப்பேன்" என்கிறார்.

ராம, கிருஷ்ண அவதாரத்தில் "சரணம் அடை" என்று உத்தரவு போடுகிறார் பகவான்.

ஆனால், பகவான் வராஹ அவதாரம் செய்த போது, 'என்னை சரணம் அடை. மோக்ஷம் கொடுக்கிறேன் என்று மட்டும் சொல்லவில்லை. வைகுண்டதுக்கு நானே அழைத்து கொண்டே போவேன்' என்று ராம, கிருஷ்ண அவதாரத்தில் சொல்லாத ஆறுதல் வார்த்தையை சொல்கிறார்.

நமக்கு மோக்ஷம் கிடைப்பதற்கு, நம்மை சுமக்கும் தாயான பூமி தேவி, நமக்கு தந்தையான நாராயணனிடம் மோக்ஷத்திற்கான வழியை கேட்டாள்.

தாயும் தந்தையும் தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டுமே..என்று பேசிக்கொண்ட அருமையான உரையாடல் வராஹ புராணம்.
"யார் ஒருவன், தன்னுடைய நாடிகள் ஒழுங்காக ஓடிக்கொண்டு இருக்கும் போதும், மனதும் திடமாக இருக்கும் போதும்,
என்னை பஜிக்கிறானோ, அவனின் மரண கால சமயத்தில், அவன் நாடிகள் தாறுமாறாக போன நிலையில், மனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், என்னை நினைக்க முடியாத சமயத்தில், நான் அவனை நினைத்து கொள்வேன்.

சம்சார சூழலில் இருந்து அந்த ஜீவனை மீட்டு, மீண்டும் பிறக்க விடாமல், அந்த ஜீவனை வைகுண்டம் கூட்டி செல்வேன்"
என்று நமக்கு ஆறுதல் வாரத்தையை சொன்னார் வராஹ மூர்த்தியாக இருந்த நாராயணன்.

பூமி தேவி, நாராயணனை பஜிக்கும் ஜீவனான நம்மை கண்டு பேரானந்தம் அடைகிறாள். ஒரு ஜீவன் மோக்ஷத்திற்கு செல்ல போகிறது என்று ஆனந்தம் அடைகிறாள்.

நாராயணனை துவேசிக்கும், வெறுக்கும் ஜீவனை கண்டு வெறுப்பு கொள்கிறாள்.
'இப்படியும் ஒரு பிள்ளையை பெற்றோமே' என்று வெறுப்பு கொள்கிறாள் பூமா தேவி.

ஒரு தாய்க்கு நல்ல குழந்தையும் பிறக்கும், கெட்ட குணங்கள் கொண்ட குழந்தையும் பிறக்கும்.
தாய்க்கு இரண்டு குழந்தைகளிடமும் பாசம் உண்டாகும். கெட்ட குணம் கொண்ட குழந்தையாக இருந்தாலும், விட்டு விட மாட்டாள்.
தன்னை அடித்தால் கூட பொறுத்துக்கொள்வாள் தாய்.
ஆனால்,
தன் கணவனை கேலி பேசும், திட்டும் பிள்ளையை அடியோடு வெறுப்பாள் தாய்.
இது இயற்கையான தாயுள்ளம்.
இந்த குணம் பூமி தாயாருக்கும் உண்டு.


பூமியில் நல்லவர்கள், கெட்டவர்கள் பிறக்கிறார்கள். அனைவரையும் அணைத்து கொண்டு பூமி தேவி இடம் கொடுக்கிறாள். உணவு தருகிறாள்.
தன்னையே மிதித்தாலும், வெட்டினாலும் பொறுமை காக்கிறாள்.
எதையும் பொறுத்து கொள்வதாலேயே பூமிக்கு 'க்ஷமா' என்றும் பெயர் சொல்வதுண்டு.

இப்படிப்பட்ட பூமா தேவியும், நம்மை கண்டு கோபம் கொள்வது ஒரேயொரு சமயத்தில் தான்.

தன் கணவனான நாராயணனை வெறுப்பவர்களை, அடியோடு வெறுக்கிறாள்.

வராஹ அவதாரம் செய்து பூமியை நிலை நிறுத்தினார் பகவான் நாராயணன்.

க்ருத, த்ரேதா யுகம் முடிந்து, துவாபர யுகம் முடியும் சமயத்தில், பூமி பாரம் தாங்க முடியாமல் பூமா தேவி நாராயணனை சரணம் அடைந்தாள்.
எத்தனை கோடி ஜனங்கள் இருந்தாலும் தாங்க கூடிய பூமா தேவி, பாரம் தாங்க முடியாமல் தவித்தாள் என்று சொல்லப்படும் போது, பூமாதேவியே அதற்கு விளக்கம் தருகிறாள்.
துவாபர யுகம் முடியும் சமயத்தில், பூமா தேவியும் மனம் வெறுக்கும் அளவிற்கு, திடீரென்று நாராயணனை துவேசிக்கும் அசுரர்கள் உலகெங்கும் பிறந்து விட்டனர்.
தன் பிள்ளைகள் தான் என்றாலும், கணவனை வெறுக்கும் பிள்ளைகளை வெறுத்தாள் பூமா தேவி.
இவர்கள் அனைவரையும் ஒடுக்கி, தன் வேதனையை போக்க வேண்டும் என்று பிரார்த்திக்க, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்து, பிறந்த நாள் முதலேயே சம்ஹார மூர்த்தியாக, ஆனால் கோபமே இல்லாத ஆனந்த மூர்த்தியாக இருந்து, உலகில் இருந்த ஒட்டு மொத்த நாராயண விரோதிகளையும் ஒரே இடத்தில் போர் என்று இழுத்து வேரோடு சாய்த்து, பூமா தேவிக்கு நிம்மதி வழங்கினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

ஸ்ரீ கிருஷ்ண, ஸ்ரீ ராம அவதாரங்களில் கூட ராஜஸ (போர்) குணங்கள் வெளிப்படுகிறது.
மோக்ஷம் மட்டுமே குறிக்கோள் என்று நினைப்பவர்கள், ராஜஸ குணம் துளியும் சேர கூடாது என்று நினைப்பார்கள்.
வராஹ அவதாரம் சுத்தமான சாத்வீக புராணம் என்று பெரியோர்கள் அறிகிறார்கள்.

மோக்ஷ்ம் மட்டுமே வாழ்நாள் லட்சியம் என்று நினைப்பவர்கள், சாத்வீக கிரந்தமான வராஹ புராணம் படிப்பதை தான் விரும்புவார்கள். அல்லது சாத்வீக கிரந்தமான பாகவதம் படிக்க விரும்புவார்கள்.

மஹாபாரதம் எழுதிய பின் வ்யாஸருக்கே மனம் சஞ்சலமாக போய் விட்டது. அதற்கு பின், ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தையும், அதற்கு முன் செய்த அவதாரத்தையும் மட்டுமே 'பாகவதம்' என்ற சாத்வீக கிரந்தமாக எழுதி மன சாந்தி அடைந்தார் வியாசர்.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம்.
சொர்க்கம், நரகம் என்று நிறுத்திக்கொண்டு விட்டன உருவாக்கப்பட்ட பொய் மதங்கள்.
சொர்க்கத்துக்கும் மேல், மகர லோகம், ஜன லோகம், தப லோகம், ப்ரம்ம லோகம், பாற்கடல், கைலாயம் என்று சொல்லிக்கொண்டே போகிறது நம் ஹிந்து வேத தர்மம்.
இவை அனைத்தும் அழிய கூடியது என்று சொல்லி, வைகுண்டம் என்ற மோக்ஷத்தை பற்றியும் சொல்கிறது ஹிந்து வேத தர்மம்.
அந்த வைகுண்டநாத பெருமாள்,
மோக்ஷத்திற்கான வழியாக என்ன சொன்னார் என்று சொல்லி தருகிறது..


ஹிந்துவாக பிறப்பதே மகா புண்ணியம்...
போலி மதங்களில் தவறி போனாலும்,
போலி மதங்களில் பிறந்து விட்டாலும், நாராயணா பக்தி அனைவரும் செய்யலாம்.
ஹிந்துவாக வாழ்வதாலேயே நமக்கு பல வாழ்க்கை ரகசியங்கள் தானாக விளங்கி விடும்.
வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ஹிந்து வேத தர்மம்.

Hare Rama Hare Krishna - Bhajan

Sandhya Vandanam - Evening Prayer (with meaning)



Sandhya Vandanam - Afternoon Prayer (with meaning)

Sandhya Vandanam - Morning Prayer (with meaning)