Followers

Search Here...

Showing posts with label ஜீவாத்மா. Show all posts
Showing posts with label ஜீவாத்மா. Show all posts

Sunday 8 September 2019

கடவுளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன?... பரமாத்மா-ஜீவாத்மா பற்றி ஒரு அலசல்.

பரமாத்மா-ஜீவாத்மா பற்றி ஒரு அலசல். 
பரமாத்மா 'நாராயணன்' சங்கல்பித்து தான், "ப்ரம்ம தேவன்" படைக்கப்பட்டார்.
அதற்கு பின்,
"சனகாதி முனிவர்கள்" பிரம்மாவால் படைக்கப்பட்டனர்.
அதற்கு பின்,
பரவாசுதேவன் நாராயணனே, ப்ரம்ம தேவன் நெற்றியில் சம்ஹார மூர்த்தியாக  "ஏகாதச (11)ருத்ரர்களாக" அவதாரம் செய்தார். 
இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கு படிக்கவும்..



மேலும், 
ப்ரம்ம தேவன் தொடர்ந்து, "ரிஷிகள், தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள்" 
என்று பல படைப்புகள் செய்தார்.

நாராயணன் ஒருவரே "பரமாத்மா".  
மற்ற அனைவரும், "ஜீவாத்மாக்களே".
என்று வேதம் சொல்கிறது.

"ப்ரம்ம தேவன்" முதல் பூலோகத்தில் பிறக்கும் புழு பூச்சி வரை, அனைத்தும் "ஜீவாத்மாக்களே". 

அவரவர்கள் செய்த புண்ணியத்துக்கு "ப்ரம்ம பதவி, தேவ பதவி, மனித உடல், விலங்கு, பறவை, புழு, பூச்சிகளாக, மரமாக" பிறக்கின்றனர்
என்று வேதம் சொல்கிறது.

மஹா புண்ணியங்களை செய்து "ப்ரம்ம பட்டத்தில் ப்ரம்ம தேவனாக இருக்கும் ஜீவாத்மாவுக்கும்" ஆயுசு எல்லை உண்டு என்று வேதம் சொல்கிறது.
இப்பொழுது இருக்கும் "ப்ரம்ம தேவன்" காலம் முடிந்த பின், பரமாத்மா நாராயணன் மீண்டும் இன்னொரு புண்ணிய ஆத்மாவை (ஜீவன்) ப்ரம்ம பதவியில் அமர்த்தி, வேதத்தை கொடுத்து, உலகை நடத்த ஆணை இடுகிறார்.

"நாராயணனை பக்தி செய்து அவர் கருணையால் மோக்ஷம் அடையாதவரை",
செய்த புண்ணியங்களுக்கு, செய்த பாவங்களுக்கு
"மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து கொண்டே இருக்க வேண்டியது தான்"
என்றும் வேதம் சொல்கிறது.

"பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவை" புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்...

பொதுவாக,
ஜீவாத்மாவை "பரமாத்மாவின் அம்சம்" என்று சொல்வது வழக்கம்.

ஜீவாத்மா "பரமாத்மாவின் அம்சம்" என்றால் என்ன? புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
எளிதான உதாரணம் மூலம், நாம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

பரமாத்மா "பரஞ்ஜோதி ஸ்வரூபமாக இருக்கிறார்" என்று சொல்லி கேட்டு இருப்போம்.

அந்த பரமாத்மாவை (பரஞ்ஜோதியை) "ஒரு அணையா விளக்கை" உதாரணமாக கொண்டு, பார்க்கும் போது
பரமாத்மா யார்? ஜீவாத்மா யார்? 
அத்வைதம் எப்போது தெரிகிறது?
த்வைதம் எப்போது தெரிகிறது?
விஷிஷ்ட அத்வைதம் எப்போது தெரிகிறது?
என்ற புரிதல் நமக்கு ஏற்படும்.



"பரமாத்மா ஒருவனே" (பரஞ்ஜோதியை) - என்று வேதம் சொல்வதை, 
ஒரு அணையா விளக்காக பார்ப்போம்.  
ஒரே ஒரு அணையா விளக்கிள் உள்ள ஜோதியை கொண்டு, 
கார்த்திகை மாதத்தில், ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றுகிறோம் அல்லவா?!!.

அது போல, 
பரஞ்ஜோதியாக இருக்கும் பரமாத்மா வாசுதேவன், 
'தன் அம்சமாகவே' பல ஜீவஜோதிகளை (ஜீவாத்மாக்களை), தானே படைக்கிறார்.
ஆனால்,
இந்த ஜீவாத்மாக்களுக்கு, பரமாத்மாவை போல உயிரற்ற உலகங்கள், உடல்கள் ஸ்ருஷ்டி செய்ய சக்தி கிடையாது. 

பரமாத்மா வாசுதேவன், 
தன்னை போன்றே அம்சமுள்ள "ஜீவாத்மாக்களை படைக்கவும்" சக்தி உள்ளவராக இருக்கிறார், 
உயிரற்ற "உலகங்களாக தானே ஆகவும்" சக்தி உள்ளவராக இருக்கிறார்.

பூலோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித்த போது,
இதை தன் அவதாரத்தில் காட்டி, நமக்கு புரியவும் வைக்கிறார், பரமாத்மா வாசுதேவன்.

ஒரு சமயம், "ப்ரம்ம தேவன்" கோகுல சிறுவர்களை மறைத்து ப்ரம்ம லோகத்துக்கு எடுத்து சென்றுவிட்டார்.  
ப்ரம்ம தேவனின் செயலை அறிந்த பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணர், 
தானே அனைத்து கோகுல சிறுவர்களாகவும் (ஜீவாத்மாக்கள்) ஆகி, 
தானே அவர்கள் உடுத்தி இருந்த "ஆடை", 
கொண்டு வந்திருந்த "மண் சட்டி" வரை உயிரற்ற பொருளாகவும் ஆகி விட்டார். 

ஒரு வருடம் கழித்து பிருந்தாவனம் வந்து பார்த்த ப்ரம்ம தேவன், பரமாத்மாவின் சக்தியை அறிந்ததும், ஸ்ரீ கிருஷ்ணர் "பரமாத்மா" என்று உணர்ந்தார்.


"உயிருள்ள பொருளாகவும், உயிரற்ற பொருளாகவும்" ஸ்ரீ கிருஷ்ணரே ஆகி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார்.
சிறுவன் போல காட்சி கொடுக்கும் ஸ்ரீ கிருஷ்ணரை "பகவான்" என்று அறிந்து, மன்னிப்பு கேட்டார் என்று பார்க்கிறோம்.
"உயிருள்ள ஜீவாத்மாக்களை மட்டும் தான் படைக்கிறேன் என்று நினைத்து விடாதே!! 
'உயிரற்ற பொருளாகவும்' நானே இருக்கிறேன்"
என்று ஸ்ரீ கிருஷ்ணர் ப்ரம்ம தேவனுக்கு காட்டியதை,
நாம் மனதில் பதிய வைக்கும் போது தான், நமக்கு உலக படைப்பின் ரகசியங்கள் புரியும்.

பரமாத்மா வாசுதேவன்,
"தானே 14 உலகங்களாக" ஆகி இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.
14 லோகங்களில் ஒன்றான "பூலோகமாகவும்" (earth) நாராயணனே இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.

நாராயணனே "பூலோகமாகவும் இருக்கிறார்" என்று நாம் புரிந்து கொள்ளும் போது தான்,
"நமக்கு ஏன் இந்த உலக விஷயங்களில் உள்ள ஆர்வம் குறைவதே இல்லை!!" என்று புரிந்து கொள்ள முடியும்.

இந்த உலக மயக்கத்தை "மாயை" என்று சொல்கிறது வேதம்.

பரமாத்மா வாசுதேவன்,
தானே பஞ்ச பூதங்களாக இருக்கிறார் (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம்)  என்ற ரகசியம் புரியும்.

பரமாத்மா வாசுதேவன்,
நீரிலும் பல நீர் வகையாக (sweet, salt) தன்னை காட்டுகிறார்  என்ற ரகசியம் புரியும்.

பரமாத்மா வாசுதேவன்,
காற்றிலும் பல வித காற்றாக (Hydrogen, Oxygen, etc.,) ஆகி இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.

பரமாத்மா வாசுதேவன்,
நெருப்பிலும், விளக்கில் ஒரு நெருப்பாக, சூரியனில் ஒரு நெருப்பாக பல விதங்களில் இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.
பரமாத்மா வாசுதேவன்,
நிலத்திலும் பல வித நிலங்களாக ஆகி இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.

நிலத்தின் அம்சமாக உருவாகும் மனித உடல்கள்,  மிருக உடல்கள், பறவை உடல்கள், மரங்கள், பூக்கள், அனைத்திலும்  பல ரூபங்கள் தரித்து இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.
இப்படி தானே ஆயிரக்கணக்கான ரூபங்களை எடுத்துக்கொண்டு, உயிரற்ற பொருளாகவும் ஆகி இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.


இப்படி "உயிரற்ற பொருளாக" பல கோடி ரூபங்கள் எடுத்துக்கொண்டு, "தன் அம்சமாக உருவான ஜீவாத்மாக்களுக்கு" 
தானே உடலும் கொடுத்து, வாழ தானே இடமும் கொடுத்து பிறக்க வைக்கிறார் என்ற ரகசியம் புரியும்.


வேதம் "சஹஸ்ர சீர்ஷ புருஷ:" என்று ஏன் சொல்கிறது? 
என்ற ரகசியம் புரியும்.

"சர்வம் ப்ரம்ம மயம்" (அனைத்திலும் நாராயனே தெரிகிறார்) என்று மகான்கள் ஏன் சொன்னார்கள்? 
என்ற ரகசியமும் புரியும்.
"பரமாத்மாவின் அம்சமாக" வெளிப்பட்ட ஜீவாத்மாக்கள், 
"தான் தனியாக இருப்பது போல தெரிவதால், ஜீவாத்மாக்கள் தன்னை படைத்தவன் ஒருவன் இருக்கிறான்" என்று உணர்வதில்லை.

பரமாத்மாவே மனித உடலாக இருக்கிறார்.
பரமாத்மாவே உலகங்களாகவும் இருக்கிறார் என்று ஜீவாத்மாக்கள் புரிந்து கொள்ள முடியாமல், "இயற்கை" என்று பார்த்து மயங்குகிறார்கள். 
இதையே "மாயை" என்று வேதம் சொல்கிறது.

இந்த உலகில் உள்ள உடல்களை பார்த்து ஆசை கொள்கின்றனர்.
இந்த உலகில் உள்ள நகரங்களை பார்த்து, ஆசை கொள்கின்றனர்.

உலகத்தில் பல ஆசைகளை வளர்த்து கொள்கின்றனர். 
அந்த ஆசைகள் நிறைவேற பல வித முயற்சிகள் செய்ய ஆரம்பிக்கின்றனர். 
இதனால் காமம், கோபம், பொறாமை போன்ற குணங்களை சம்பாதிக்கின்றனர். 
செய்த முயற்சியின் பலனாக புண்ணியங்களை, பாவங்களை சேர்த்து கொள்கின்றனர்.
ஆயுசு முடிந்து, கிடைத்த மனித உடலை விட்ட பின், அந்த ஜீவாத்மா மீண்டும் செய்த பாவ புண்ணிய மூட்டையை பொறுத்து, மீண்டும் உலகங்களில் பிறக்கின்றனர்.
முடிவே இல்லாத இந்த சுழலில், கோடிக்கணக்கான ஜீவாத்மாக்கள் இறந்து, பிறந்து கொண்டே இருக்கிறது.



இதை "சாட்சியாக" பார்த்து கொண்டே இருக்கும் பரமாத்மா நாராயணன், "ஏதாவது ஒரு ஜீவனாவது, உலகில் ஏற்படும் சுக துக்கங்களை கண்டு வெறுத்து, பயந்து, தனக்கு அபயம் தருபவர் எங்கே? என்று 
ஜீவாத்மா தன்னை திரும்பி பார்ப்பானா?" 
என்று காத்து கொண்டு இருக்கிறார். 
ஆனந்த மூர்த்தியான தானே "உலகமாகவும் இருப்பதால்"
உலகத்தை கண்டு ஜீவாத்மாக்கள் மோஹித்தாலும், பரமாத்மா வாசுதேவன் தவறாக நினைப்பதில்லை. 
ஆனால், 
"உலகமாகவும் (உயிரற்ற) நானே இருக்கிறேன்" என்று புரிந்து கொள்ளாமல், "இயற்கை என்றும், உடல்கள் என்றும்" சொல்லிக்கொண்டு ஆசை கொள்வதால், 
பாவ புண்ணியங்கள் அடையும் ஜீவாத்மாவின் நிலையை, கண்டு வருந்துகிறார் பரமாத்மா வாசுதேவன்.
இதற்காக, 
தானே ரிஷிகளாகவும், அவதாரங்கள் செய்தும், 
ஆதி சங்கரராகவும், ராமானுஜராகவும் வந்து, 
புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களுக்கு வழி காட்டினார்.  வழி காட்டி கொண்டே இருக்கிறார்.  
தானே அர்ச்சா அவதாரங்கள் செய்து திருமலையில், காஞ்சியில், பதரியில், பாரத தேசங்கள் முழுக்க, அர்ச்சா அவதாரங்கள் செய்து நிரந்தரமாக நமக்கு கல் ரூபத்தில் காட்சியும் கொடுக்கிறார். 

உயிரற்ற பொருளாகவும் நாராயணனே இருக்கிறார். 
தன் உடலாகவும் அவர் தான் இருக்கிறார்.
  
தானும் (ஜீவன்) "பரமாத்மாவின் அம்சம்" தான் என்று புரிந்து கொள்ளும் போது, 
"அஹம் ப்ரம்மாஸ்மி" (நாம் அனைவரும் பிரம்மமே) 
என்ற ஞானம் ஏற்பட்டு விடுகிறது. 
அப்பொழுதான் அந்த ஜீவனுக்கு "அத்வைதம்" புரிய ஆரம்பிக்கிறது. 
"இந்த அனுபவம் நமக்கு ஏற்பட வேண்டும்" என்ற கருணையின் காரணமாக தான், 
ஆதி சங்கரராக சிவபெருமானே அவதரித்து "அத்வைத" சித்தாந்தத்தை வெளிக்காட்டினார்.





ப்ரம்ம தேவன் ஆயுள் முடிந்த பின், 
பரமாத்மா நாராயணன் "உயிரற்ற உலகங்களை தன்னிடமே மறைத்து கொண்டு", "தான் படைத்த ஜீவாத்மாக்களை தன்னோடு சேர்த்து கொண்டு" தான் மட்டுமே இருக்கிறார். 
பல விளக்கில் ஏற்றப்பட்ட தீபங்கள் அந்த அணையா விளக்கில் சேர்ந்து மறைந்து விடுவது போல, 
உயிரற்ற உலகங்களும், தன் அம்சமான ஜீவாத்மாக்களையும் தன்னுடன் சேர்த்து கொண்டு விடுகிறார். 
பிரளய காலம் முடிந்து, மீண்டும் புது ப்ரம்ம தேவனை நியமித்து, 
தன்னுள் வைத்து இருந்த அனைத்து ஜீவாத்மாக்களையும் மீண்டும் பிறக்க வைக்கிறார். 
அவர்களுக்கு உடலாகவும், உலகங்களாகவும் இவரே ஆகி, மோஹிக்க செய்கிறார் பரமாத்மா.

உயிரற்ற பொருளாகவும் நாராயணனே இருக்கிறார், 
நாமும் (ஜீவனும்) அந்த பரமாத்மாவின் அம்சமே என்பதால், 
"எங்கும் பரப்ரம்மமே இருக்கிறது. ஒரே தெய்வம் தான்" 
என்று ஆதி சங்கரர் அத்வைத வேத சித்தாந்தத்தை வழிகாட்ட வேண்டிய அவசியம் அவர் காலத்தில் ஏற்பட்டது.  
வேதத்தை "கர்மமாகவே செய்யும் கர்மடர்கள்" அதிகமாகி போனதால், வேதத்தில் உள்ள இந்த "ஞானத்தை" புரிந்து கொள்ளாமல், வெறும் செயலாகவே செய்து கொண்டிருந்தனர்.  
அவர்களுக்கு "அத்வைத சித்தாந்தத்தை" வெளிக்காட்டி ஆதி சங்கரர் ஹிந்துக்களை மீண்டும் நேர் வழிக்கு திருப்பினார்.

அரேபிய இஸ்லாமியர்கள், பாரத தேசத்தில் நுழைந்து 
ஹிந்துக்கள் கொல்லப்பட, 
லட்சக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட, 
மத மாற்றம் செய்யப்பட, 
ஹிந்துக்கள் நிலை குலைந்த சமயத்தில், ஹிந்துக்களை மீண்டும் நிலை பெற செய்ய மத்வாச்சாரியார் அவதரித்தார்.



உயிரற்ற பொருளாகவும் நாராயணனே இருக்கிறார், 
கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களும் "நாராயணனின் அம்சமே" என்ற "அத்வைத ஞானம்" உண்மை தான். 
ஆனால், 
அந்த பக்குவம் அனைத்து ஜீவாத்மாவுக்கும் வருமா? 

"ஆதி சங்கரருக்கு, பிரகலாதனுக்கு, ஜடபரதருக்கு" அந்த பக்குவம் இருந்தது. அத்வைத ஞானம் இருந்தது. 
தன்னை கொல்ல வந்தாலும் "கொலை செய்ய வருபவனும் நாராயணனே" என்று இருந்தனர்.

கோவில்களை இடித்து, 
ஹிந்துக்களை கொன்று, 
மதம் மாற்றும் அரேபியர்களுக்கு இந்த ஞானம் இல்லையே ! 
இந்த பக்குவம் ஹிந்துக்களுக்கு மட்டும் புரிந்து இருப்பதால், 
வேதமே அழியும் அபாயம் ஏற்பட்டது. 

வேத தெய்வங்கள் சும்மா இருக்குமா? பொய் தெய்வங்கள் இல்லையே ! 

மனிதர்கள் உருவாக்கிய மதம் இல்லையே, ஹிந்து தர்மம்.

பிற மதங்களை காப்பது "மனிதர்கள்". 
ஹிந்து தர்மத்தை காப்பது "தெய்வங்கள்" அல்லவா.



காலத்தை அனுசரித்து, யதிராஜர் ராமானுஜர் மூலம் "விஷிஷ்டாத்வைத" சித்தாந்தம் வெளி வந்தது.

காலத்தை அனுசரித்து, மத்வாச்சாரியார் மூலம் "த்வைத" சித்தாந்தம் வெளி வந்தது.
பரமாத்மா நாராயணன், "தன் அம்சமாகவே கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களை படைத்து இருக்கிறார்" என்று பார்த்தோம்.

"தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து கொண்டு இருக்கும் ஜீவாத்மாக்கள், 
"தன்னை படைத்தவன் தான், தன் உடம்பாகவும், உலகமாகவும் இருக்கிறார்" என்று புரியாமல், மயங்கி இருக்க, 
"தான் இருப்பதை உணரும் வரை, தன்னை படைத்தவனை தேடும் வரை" மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கிறார் என்று பார்த்தோம்.

"அத்வைதம்" என்ற உண்மை நிலையை  ஒரு சிலரே அனுபவத்தில் உணர முடியும் என்பதால், "அத்வைத பக்குவம் மட்டுமே மோக்ஷம் கிடைக்க வழி" என்று சொன்னால், கோடிக்கணக்கான ஜீவனுக்கு மோக்ஷமே கிடைக்காது.

இந்த உலகமும் நாராயணனே, 
இந்த உடலும் நாராயணனே, 
தான் (ஜீவன்) நாராயணின் அம்சமே 
என்று உணர்வதற்கு, நாராயணனாக பார்த்து கருணை செய்தால் தான் வழி.  

அத்வைத நிலை நமக்கு ஏற்பட, பரவாசுதேவன் தான் ஜீவாத்மாவுக்கு  வழி காட்ட வேண்டும். 

"உலகமே நாராயணன், நாமும் அவர் அம்சமே" என்ற ஞானம் ஏற்படாத வரை, நமக்கு நாராயணன் "மோக்ஷம்" கொடுக்க போவதில்லை.  
ஜீவன் "தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து கொண்டு, 
"தன்னை படைத்தவன் ஒருவன் இருக்கிறான்" என்று நினைவே இல்லாமல், 
நாராயணனே உலகமாக இருப்பதை அறியாமல் "இயற்கை" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் வரை, பாவ, புண்ணியத்துக்கு ஏற்றவாறு மீண்டும் மீண்டும் உலகில் பிறக்க செய்கிறார்



ஜீவன், "இயற்கை" என்ற பெயரில் 'தன்னை தானே ரசிக்கிறான்' என்பதால், 
மோக்ஷம் கொடுக்க அவசியமில்லாமல் இருக்கிறார் பரமாத்மா நாராயணன்.

உலகில் சுகங்கள் கிடப்பது போல, பல துன்பங்களும் நமக்கு ஏற்படுகிறது.

உலகில் ஏற்படும் துன்பங்களை பார்த்து, மூப்பை பார்த்து, மரணத்தை பார்த்தும், 
நமக்கு அத்வைத பக்குவம் நமக்கு வரப்போவதே இல்லை.

"நம்மை நாராயணன் தான் படைத்தார். 
அவர் நினைத்தால் மட்டுமே, நமக்கு மோக்ஷம் தர முடியும்" 
என்ற அளவுக்காவது நமக்கு அறிவு இருக்க வேண்டாமா!!
பரமாத்மாவின் பரத்துவத்தை படித்து புரிந்து கொண்டாலும், அனுபவத்தில் கொண்டு வர முடியாத நம்மை போன்றவர்களுக்கு (ஜீவாத்மா), 
அந்த அத்வைத பக்குவத்தை "நாராயணனே" கொடுக்கவல்லவர். 

ஆதலால், நாம் அஞானியாக இருப்பதால், "நம்மை படைத்த நாராயணன் நம்மை காக்கிறார்" என்ற அளவுக்காவது நாம் புரிந்து கொள்ள வேண்டும். 
நம்மை படைத்தவர் மேல், நமக்கு அன்பு (பக்தி) இருக்க வேண்டும்.
ஆதலால், 
"நாம் அஞானியாக இருப்பதால், நாம் நாராயணனை பக்தி செய்ய வேண்டும். அவர் கருணையால் மோக்ஷம் அடைய வேண்டும்" 
என்று "த்வைத" சித்தாந்தத்தை மத்வாச்சாரியார் மீண்டும் வெளிக்கொண்டு வந்தார்.



அத்வைத பக்குவம் (நிலை) ஏற்படாதவரை, ஜீவாத்மா மோக்ஷம் அடைய முடியாது என்பது உண்மை என்பதால், "ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு" என்று புரிந்து கொண்டு, அந்த பரமாத்மாவிடம் பக்தி (அன்பு) செய்ய வேண்டும்.
அஞானியாக இருந்தாலும், உலகத்தை உலகமாகவே பார்த்தாலும், பக்தி செய்ய ஆரம்பித்து விட்டால், 'தன்னை பார்க்கும் ஜீவனை, தன்னை நினைக்கும் ஜீவனை', பரமாத்மா 
கருணையோடு பார்க்க ஆரம்பிக்கிறார். 
தன் மீது பக்தி வளர செய்கிறார். 
உலகத்தில் ஏற்படும் துன்பங்கள் தான் பக்தனுக்கு வராமல் செய்கிறார். பக்குவத்தை கொடுத்து, தன் கருணையால் "மோக்ஷம்" கூட கொடுத்து விடுகிறார்.

"நம்மை படைத்த நாராயணன் மீது அன்பு (பக்தி) செய்தால், அஞானியும் மோக்ஷம் அடைய முடியும்" என்ற த்வைத சித்தாந்தம் கோடிக்கணக்கான மக்களுக்கு ஏற்பு உடையதாக இருப்பதால், மத்வாச்சாரியார் த்வைத சித்தாந்தத்தை மீண்டும் வெளிக்கொண்டு வந்தார்.
ராமானுஜர் வேதத்தின் முழுமையான அபிப்ராயமான "விஷிஷ்டாத்வைதத்தை" வெளிக்காட்டினார்.

"பரமாத்மா ஒருவரே மெய்.  
உலகம் பொய்" என்கிறது அத்வைதம்.

"உலகத்துக்கும் அந்தர்யாமியாக பரமாத்மாவே இருக்கிறார். 
அதனால் உலகத்தை வெறுக்காமல், உலகத்தில் பார்க்கும் அனைத்திலும் அந்தர்யாமியாக பரமாத்மாவே இருக்கிறார் என்று பார்" 
என்று அத்வைத சித்தாந்தத்தில்  அந்தர்யாமி தத்துவத்தையையும் காட்டி '"விசேஷ அத்வைதம்" காட்டப்பட்டது. ஸ்ரீ ராமானுஜர் அவர் காலத்தில் (1017AD-1137AD) விஷிஷ்டாத்வைதம் பிரகாசம் அடைந்தது.

வாழ்க ஸ்ரீ ராமானுஜர்.
வாழ்க சங்கரர்.

நாராயணின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன் அல்லவா.. ஸ்ரீ ராமானுஜர்.
வேதம் "த்வைதம், அத்வைதம்" இரண்டையும் சொல்வதால்,
ஸ்ரீ ராமானுஜர், 
த்வைத சித்தாந்தம் சொல்லும் "பக்தியை" ஏற்கிறார், 
அத்வைத சித்தாந்தம் சொல்லும் "பரதத்துவ" ஞானத்தை ஏற்கிறார்.  



வேதத்தின் முழு அபிப்ராயமான, "விஷிஷ்டாத்வைத சித்தாந்தம்" ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் மீண்டும் வெளிப்பட்டது. 

அஞானியாக இருந்தாலும் பரவாயில்லை. 
உலக கஷ்டங்கள் விலக, பெருமாள் கருணையை பெற, "நமோ நாராயணாய" என்று அனைவரும் சொல்லுங்கள். 
"அனைவரும் ஹரியின் ஜனங்களே" என்று த்வைத சித்தாந்தமான பக்தியை செய்ய சொன்னார் ஸ்ரீ ராமானுஜர்.

பகவானின் கருணை நம் மீது திரும்பும் பொழுது, நமக்கு அத்வைத அனுபவத்தை நாராயணனே கொடுப்பதால், 
"மோக்ஷம்" என்பது உடலை விட்டு பிரிந்து பரஞ்சோதியின் சேர்ந்தால் மட்டும் தான் கிடைக்கும் என்று த்வைதம் சொல்கிறது

அத்வைத அனுபவம் நமக்கு ஏற்படும் போது, நாம் உலகில் இருக்கும் போதே, 'மோக்ஷ அனுபவம் கிடைக்கும்' என்று சொல்லும் அத்வைத சித்தாந்தத்தையும் ஏற்கிறது "விஷிஷ்டாத்வைதம்".
'பிரகலாதன், ஆதி சங்கரர், ஜடபரதர்' போன்றோருக்கு "பரமாத்மா எங்கும் உள்ளார்" என்ற அத்வைத நிலை இருந்தது. 
தன்னை கொல்ல வந்தவர்களை கூட வேறாக பார்க்க முடியாமல் இருந்தனர். 

"'பரமாத்மா எங்கும் உள்ளார்' என்ற இந்த பரதத்துவ நிலை, 
அஞானியாக இருந்து பக்தி செய்தால் கூட ஏற்படும், பகவான் நமக்கு அந்த அனுபவத்தை கொடுப்பார்" 
என்று 'வேதத்தின் ரகசியத்தை' ராமானுஜர் விஷிஷ்டாத்வைதத்தை காட்டி வெளிப்படுத்தினார்.

ஆழ்வார்கள் பாசுரங்களை பார்க்கும் போது நமக்கு இந்த உண்மை புரிகிறது. 

"பக்தியை நமக்கு ஊட்டும்" 4000 பாசுரங்களை கொடுத்த ஆழ்வார்கள், 
பல இடங்களில் 
"ஸ்ரீ ரங்க வாசமே எங்களுக்கு போதும், 
திருமலை வாசமே போதும், 
காஞ்சி வரதனே போதும், 
மோக்ஷத்தை இங்கேயே நாங்கள் அனுபவிப்பதால், பரமபதம் என்ற வைகுண்டம் கூட எங்களுக்கு வேண்டாம்" 
என்று சொல்வதை பார்க்கும் போது, அத்வைத நிலையை காட்டுகின்றனர்.




மகாத்மாக்கள் "அத்வைத நிலையிலேயே" வாழ்கிறார்கள்.  
அஞானியாக நாம் இருப்பதால், 
"உலகமே நாராயணன் தான்" என்ற அனுபவம் நமக்கு ஏற்படாததால், 
"நாம் சேர வேண்டியது அந்த பரஞ்ஜோதியான நாராயணனை தான்" என்ற உண்மை நமக்கு புரியாததால்,
"சுதந்திரமானவர்கள்" என்று நினைத்து கொள்வதால்,
சம்சார சூழலில் சிக்கி, உலக துன்பங்களை அனுபவித்து கொண்டே, மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து கொண்டே இருக்கிறோம்.

அஞானியாக இருக்கும் நமக்கும் வழி உண்டு. 
அஞானியாக இருக்கும் நமக்கும் 'மோக்ஷம்' கிடைக்க வழி உண்டு.

முதல் படியாக "நம்மை படைத்த நாராயணன் மீது அன்பை (பக்தியை) வளர்த்து கொண்டு"
நாராயணன் கருணை நம் மீது விழுந்து, அவர் கருணையாலேயே நமக்கும் அத்வைத அனுபவம் ஏற்பட்டு, நாமும் மோக்ஷம் அடையலாம். 

ஸ்ரீ ராமானுஜர் சொன்ன விஷிஸ்டாத்வைதம் நமக்கு ஏற்றது. 

மற்ற இரண்டு சித்தாந்தங்களையும் ஏற்று கொண்டு இருப்பதால், விஷிஷ்டாத்வைதம் வேதத்தின் அபிப்ராயம் கூட.

ஆதி சங்கரரை வணங்குவோம்.
மத்வாச்சாரியாரை வணங்குவோம்.
யதிராஜரான ராமானுஜரை வணங்குவோம்.

நம் பாரத பூமியில் அவதரித்த அனைத்து மகாத்மாவையும் வணங்குவோம். 



நம் குருநாதரை நமஸ்கரிப்போம்.

மோக்ஷம் அடைய வழி என்ன?  
நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு என்ன? என்று காட்டி வழிநடத்தும், 
நம் ஆன்மீக பூமியான பாரத பூமியை நினைத்து, பெருமை படுவோம்.

வாழ்க ஹிந்துக்கள்.