Followers

Search Here...

Showing posts with label புராணங்கள். Show all posts
Showing posts with label புராணங்கள். Show all posts

Wednesday 26 June 2019

புராணங்களை சொல்லி தருவது போல, மந்திரங்கள், அதன் அர்த்தங்களை சொல்லி தருவது இல்லையே!! அது ஏன்? அதற்கு என்ன காரணம்?.. ஒரு அலசல்.

'ராமாயணம், மகாபாரதம், சிவ புராணம், விஷ்ணு புராணம், கந்த புராணம், சக்தி புராணம்'  போன்ற புராணங்களில்,
  • 'தெய்வங்களின் அவதாரத்தை' பற்றியும், 
  • 'தெய்வங்களின் அவதார காரணத்தை' பற்றியும் 
தெரிந்து கொள்கிறோம்.



இந்த புராணங்களை பற்றி  மகான்களும் பெரியோர்களும், 
கோவில்களில், பொது மேடைகளில், உபன்யாசம் செய்து விவரிக்கின்றனர்.

பாகுபாடு இல்லாமல், பொது மக்கள் அனைவருக்கும் இந்த புராணங்கள் சொல்லப்படுகிறது.
இஷ்டப்பட்டவர்கள் கேட்கிறார்கள்.

அது மட்டுமில்லாது,
இந்த புராணங்கள் யாவும் மேடை நாடகமாகவும், புத்தகமாகவும், டிவி, சினிமாக்களில் காட்சியாகவும் நடித்து  காட்டப்படுகிறது.

மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களை ('இதி' - இவ்வாறு, 'ஆச' - நடந்தது) TV சீரியலாக பார்க்காத பாரத மக்கள் இருக்க மாட்டார்கள்.
பாரத நாட்டில் உள்ள கிறிஸ்தவன், இஸ்லாமியன் கூட, ஸ்ரீ ராமரை பற்றி தெரிந்து கொள்ள செய்தது.
ராமாயணம் பார்த்து,
"ராமனை போல மனிதன் வாழ வேண்டும்" என்று ஆசைப்படாத மனிதன் இருக்க முடியுமா?
  • தன் பெற்றோரை எந்த அளவுக்கு மதித்தார் ஸ்ரீ ராமர்.
  • ஜாதி பேதம் இல்லாமல், வேடுவன் குகனை நண்பன் என்றார்.
  • பலம், பராக்ரமம் இருந்தும், கர்வமே இல்லாமல் அனைவரையும் மதித்தார்.
  • எத்தனை துயரங்கள் தன் வாழ்வில் வரும் போதும் தன் தர்மத்தை விடாமல், மனம் கலங்கி சோர்ந்து விடாமல், வாழ்ந்து காட்டினார் ஸ்ரீ ராமர்.
  • சுயமாக 14000 ராக்ஷர்களை ஒருவனாக போரிட்டு அழிக்கும் பராக்கிரமம் இருந்தும், நல்லோர்களை (விபீஷணன், சுக்ரீவன்) தன்னுடன் சேர்த்து கொண்டார்.
  • கஷ்ட காலத்திலும், பலம் கொண்ட வாலி போன்ற பிறர் மனைவியை அபகரித்து தன் தம்பியை கொலை செய்ய துடிப்பவன் துணையை எதிர்பார்க்கவே இல்லை. தீயவன் பலம் கொண்டவனாக இருந்தாலும், தன் லாபத்திற்காக அவர்களுடன் துணை சேரவில்லை.
  • சீதையை மீட்க பஞ்சவடியில் (nasik) இருந்து, 2000 KM நடந்து சென்று, எதிரியை கொன்று, சீதையை மீட்டு, கடைசி வரை ஏகபத்னி வ்ரதனாகவே வாழ்ந்து மனித சமுதாயத்துக்கு வழி காட்டினார்.
  • காமத்தை ஜெயித்து, கோபத்தை ஜெயித்து, பொறாமையை ஜெயித்து. வெறுப்பை ஜெயித்து, எந்த நிலை ஏற்பட்டாலும் மனிதன் தர்மத்தில் வாழ்ந்து காட்ட முடியும் 
என்று மனிதர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார் ஸ்ரீ ராமர்.



புராணங்கள் படிப்பதன் மூலம் "தெய்வங்கள் 3 காரணங்களுக்காக அவதாரம் செய்கிறார்கள்" என்று தெரிந்து கொள்கிறோம்.
1. சனாதன (காலம் காலமாக இருக்கும்) வேத தர்மத்தை, (இன்று ஹிந்து தர்மம் என்று சொல்கிறோம்) அழிக்க நினைக்கும் தீயவர்களை ஒடுக்கவும்,

2. ஹிந்து தர்மத்தை காக்கும் சாதுக்களை, இவர்களை போன்ற தீயவர்களிடம் இருந்து காக்கவும்,

3. சனாதன (காலம் காலமாக இருக்கும்) வேத தர்மத்தை, (அதாவது ஹிந்து தர்மத்தை) அழிய விடாமல் என்றுமே நிலை நிறுத்தவும்,
தெய்வங்களின் அவதாரம் உலகில் நடக்கிறது. நடந்து கொண்டே இருக்கிறது.

இதை பரமாத்மா வாசுதேவன், ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, தெளிவாக சொல்கிறார்.
பரித்ராநாய சாதுனாம்
வினாசாய ச துஶ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்த்தாப னார்தாய ஸம்பவாமி யூகே யூகே

தர்மத்தை காக்கும் 'சாதுக்களை காக்கவும்',
தர்மத்தை அழிக்க நினைக்கும் கொடியவர்களை அழிக்கவும்,
தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும்,
ஒவ்வொரு யுகத்திலும் நான் தோன்றுகின்றேன்
என்று ஸ்ரீ கிருஷ்ணர், தெய்வங்களின் அவதார ரகசியத்தை தெளிவாக சொல்கிறார்.
ஹிந்து தர்மத்துக்காக வாழ உறுதி கொள்ளும் போது,
'தெய்வம் நமக்கு துணை நிற்கும்' என்ற உண்மை, புராணங்களை படிப்பதன் மூலம் நமக்கு புரிய ஆரம்பிக்கும்.

புராணங்களை படிப்பதன் மூலம்,
"ஹிந்து தர்மத்தில் திடமான நம்பிக்கையுடன் வாழ்ந்தால், நம்மை தெய்வங்கள் காக்கும்" என்ற தெளிவு, நாளடைவில், நமக்கு உண்டாகி,
ஒரு இறை உணர்வை நமக்குள் உண்டாக்குகிறது.


புராணங்களை படிப்பதன் மூலம்,
"கடவுள் காப்பாற்றுவார்" என்ற தைரியமும் நமக்கு கிடைக்கிறது. உலகை தைரியமாக சந்திக்க மனோதிடம் உண்டாகிறது.

புராணங்களை படிப்பதன் மூலம்,
"வாழ்வில் துயரங்கள் வந்தாலும், இறைவனின் கருணையை பற்றி கொண்டு, தாண்டி விடலாம்" என்ற நம்பிக்கை நமக்கு கிடைக்கிறது.

புராணங்கள், இதிஹாசங்கள் பற்றி தெளிவாக தெரிந்து, புரிந்து கொள்வதால், வாழ்வில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. 
தெய்வத்தை பற்றிய ஒரு புரிதல், ஓரளவுக்காவது உண்டாகிறது.
ஆன்மீக வளர்ச்சிக்கு நம்மை உந்துகிறது.

'தர்மத்தில் நின்று, தர்மத்தில் இருக்கும் சாதுக்களை கேலி செய்யாமல் இருந்தால்', நம்மை நிச்சயமாக தெய்வங்கள் காக்கும்
என்று புராணங்களை படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அற்புதமான புராணங்கள், இதிஹாசங்கள் அனைவருக்கும் ஜாதி பேதமின்றி பொது மக்கள் அனைவருக்கும் சொல்லப்படுகிறது.

புராணங்களை அனைவருக்கும் சொல்லி தருவது போல, மந்திரங்கள், அதன் அர்த்தங்களை அது போல சொல்லி தருவது இல்லையே. அது ஏன்? அதற்கு என்ன காரணம்?

மாந்த்ரீகம் செய்பவர்கள் சில மந்திரங்களை உச்சாடனம் செய்கிறார்கள். "ஓம் ஹ்ரீம் க்லீம் ..." என்று சொல்லி கேட்டு இருப்போம்.

இந்த மந்திரங்கள் பீஜ (seed) மந்திரங்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த மந்திரங்கள் ஸித்தி ஆனவர்கள், நமக்கு உபதேசம் செய்தால், நமக்கும் அந்த மந்திரங்கள் பலன் அளிக்கும். 

"மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை" என்று சொல்லப்படுகிறது.
அர்த்தம் புரிந்து கொண்டு, மந்திரங்களை பல லட்சம் தடவை உச்சரிக்கும் போது, இந்த மந்திரங்கள் தரும் பலன், சக்தி வாய்ந்தது.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு சில முக்கிய 'காரணங்கள்' உண்டு.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்: 
காமம், கோபம், பொறாமை குணம் கொண்டவர்கள், தகுதி இல்லாதவர்கள், சில மந்திரங்களின் அர்த்தங்கள் புரிந்து கொள்வதால், அதை தெய்வ அனுக்கிரஹம் கிடைக்க பயன்படுத்தாமல்,  தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
க்லீம் என்ற பீஜ மந்திரத்தை, ஒரு குரு மூலம் உபதேசம் பெற்று,
ஜபம் செய்ய செய்ய,
'எந்த தெய்வத்தை நினைத்து ஜபம் செய்கிறோமோ, அந்த தெய்வங்கள் நமக்கு சப்படுவார்கள்'. சில சமயம் தெய்வங்களின் ஆவேசம் கூட நமக்குள் ஏற்படலாம்.



க்லீம் என்ற பீஜ மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று, ஜபம் செய்ய செய்ய, 'யாரை நினைத்து ஜபம் செய்தோமோ, அவர் நம்மை விரும்ப ஆரம்பிப்பார்' என்று பொதுவாக பலன் சொல்லப்படுகிறது.
இந்த பலனை, ஆன்மீக தேடல் இல்லாத ஒருவன், நாத்தீகன், மாந்த்ரீகம் செய்பவன், காமம், கோபம், பொறாமை குணம் கொண்டவன் அறிந்து கொள்ளும் போது,
தெய்வத்தை வசியம் செய்ய முயற்சிக்காமல், பெண்களை வசியம் செய்ய பயன்படுத்த ஆரம்பிக்கிறான். 
சிவபெருமான் தன் மனைவியான பார்வதியை மணந்த பின்னும், கைலாயத்தில் தியான யோகத்திலேயே இருந்தார்.
தான் இருப்பதே நினைவில்லாமல் இருக்கும் சிவபெருமானின் கடாக்ஷத்தை பெற, 
பார்வதி தேவி காஞ்சிக்கு வந்து, காஞ்சி வரதனாக இருக்கும் பரவாசுதேவனிடம் வழி கேட்டாள்.

காஞ்சி வரதன் பார்வதிக்கு "க்லீம்" என்ற பீஜ மந்திரத்தை உபதேசம் செய்து, சிவபெருமானை நினைத்து ஜபம் செய்ய சொன்னார். (திருக்கார்வானம் கள்வபெருமாள்)

சிவபெருமானை நினைத்து 'க்லீம்' என்ற பீஜ மந்திரத்தை ஜபம் செய்து தான், சிவபெருமானின் கடாக்ஷத்தை பெற்றாள் பார்வதி தேவி. 
காஞ்சியில், காமாக்ஷி என்ற பெயர் பெற்றாள் பார்வதி. 

"கணவன் மனைவியிடையே பரஸ்பரம் அன்பு இல்லாமல் இருப்பவர்கள்" காஞ்சி காமாக்ஷி கோவிலுக்கு சென்று, காமாட்சியை தரிசித்தால், "தம்பதிகளுக்குள் அன்பு உண்டாகும்" என்று லன் சொல்லப்படுகிறது.

'தெய்வத்தை குறித்து சொல்லும்' சக்தி வாய்ந்த மந்திரங்களை, மாந்த்ரீகம், வசியம் செய்ய பயன்படுத்துவார்கள் என்பதால், மந்திரங்களை, மந்திரங்களின் அர்த்தங்களை சொல்லாமல் இருந்தனர் பெரியோர்கள். 

இது போன்ற ஆபத்துகள் இருப்பதால்,
மந்திரங்கள் அனைவருக்கும் சொல்லப்படாமல், தகுதியும், பக்குவமும் அடைந்தவர்களுக்கே, உபதேசமும், அதன் அர்த்தங்களையும் விளக்கினர்.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம்: 
"தெய்வங்கள் மூன்று காரணங்களுக்காக அவதாரம் செய்கிறார்கள்", என்று புராணங்களை படிக்கும் போது தெரிந்து கொள்கிறோம் என்று பார்க்கிறோம்.
  1. வேத தர்மத்தை காக்கும் சாதுக்களை காக்கவும்
  2. வேத தர்மத்தை அழிக்கும் துஷ்டர்களை அழிக்கவும்,
  3. வேத தர்மத்தை காக்கவும்,
தெய்வங்களின் அவதாரம் நடந்து கொண்டே இருக்கிறது.


'தர்மத்தை காப்பதற்கே' தெய்வங்களின் அவதாரம் நடக்கிறது.

"தர்மத்தை விட்டு விட கூடாது" என்று தெய்வங்கள் ஆசைப்படுகிறார்கள்.
"தர்மத்தை நிலை நிறுத்தத்தான்" தெய்வங்கள் அவதாரமே செய்கிறார்கள் என்று பார்க்கும் போது
ஹிந்துக்களாகிய நாம் "நம் தர்மத்தில் இருக்க வேண்டுமா?" என்று நினைப்பது கூட தவறு.

தர்மத்தை காக்க, கலியில், தெய்வங்கள் தெய்வங்களாக அவதாரம் செய்வதில்லை. சாதுக்களாக அவதாரம் செய்கின்றனர்.

947ல் இருந்து 1947 வரை பாரத பூமியில், அந்நிய மதங்கள் நுழைந்து
வேத தர்மத்தை காக்கும் சாதுக்களை அழிக்கவும், 
வேத தர்மத்தையே அழிக்கவும், 
1000 வருடங்கள் தொடர்ந்து, கடுமையான முயற்சி செய்தனர்.

கலி யுகத்தின் ஆரம்பத்தில் இருந்து, இந்த 1000 வருட இருண்ட காலம் வரை ஹிந்துக்களாகிய  நாம் கொஞ்சம் நிதானத்தோடு கவனித்தால், ஹிந்து மதத்தை யார் காப்பாற்றினார்கள் என்று புரியும்.
பரவாசுதேவனே, கிருஷ்ண சைதன்யராகவும், ராமகிருஷ்ணராகவும் தானே அவதாரம் செய்தார்.
சிவபெருமானே, ஆதி சங்கரராகவும், விவேகானந்தராகவும் அவதாரம் செய்தார்.
பிரகலாதனே, ஸ்ரீ ராகவேந்திரராக அவதாரம் செய்தார்.
நாரதரே, புரந்தர தாசராகவும், தியாகராஜராகவும் அவதாரம் செய்தார்.
ஆதிசேஷனே, திருப்பதியில் உள்ள 7 மலைகளாவும், ராமானுஜராகவும் அவதாரம் செய்தார்.
ஆஞ்சநேயரே, ஸமர்த்த ராமதாசராக அவதாரம் செய்தார்.




யோகிகள், ரிஷிகள், ஞானிகள் அனைவரும் கலியில்,
சூர தாஸ், கபீர் தாஸ், துளசி தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பத்ராச்சல ராமதாஸ், மீரா 
என்று பாரத தேசம் முழுவதும் சாதுக்களாக அவதரித்து,  .
அந்நிய மதங்கள்,

  • கோவிலை இடித்தும்,
  • ஹிந்துக்களை கொன்றும்,
  • மதம் மாற்றியும்,

எத்தனை முயற்சி செய்தும், பாரத தேசத்தில் உள்ள
ஹிந்துக்களை அழிக்க முடியவில்லை, 
ஹிந்து தர்மமும் அழியவில்லை என்று இன்று நிரூபணமாகி உள்ளது.
இன்றும், சங்கரன், விஷ்ணு, லலிதா, லீலா, ருக்மிணி என்ற ஹிந்து பெயர்கள் கொண்ட 80 கோடிக்கும் மேல் உள்ள ஹிந்துக்கள் தன்மானத்தோடு வாழ்கிறோம். மேலும் பல கோடி
ஹிந்துக்கள் உலக நாடுகளில் ஹிந்துக்களாகவே வாழ்கின்றனர்.

பிற மதங்களை 'மனிதர்கள் உருவாக்கினார்கள்'.
அதனால், மனிதர்கள் முயற்சி செய்து பிற மதங்களை காப்பாற்றி வருகிறார்கள்.

வேத தர்மம் என்ற ஹிந்து தர்மத்தை, 'தெய்வங்களே உருவாக்கியதால்', இங்கு தெய்வங்களே அவதரித்து ஹிந்துக்களை, ஹிந்து தர்மத்தை காக்கின்றனர். 

ஹிந்துக்களாகிய நாம் நம் ஹிந்து தர்மத்தை காக்கும் போது தான், தெய்வங்கள் நம்மை கண்டு சந்தோஷப்படுவார்கள்.

ஹிந்து தர்மத்தை காக்கும் நம்மை, அழிக்க நினைக்கும் கூட்டம் அதிகரிக்கும் போது, 
ரிஷிகளை, முனிவர்களை அவதாரம் செய்ய வைக்கிறார் பரவாசுதேவன். 
இதுவும் போதாது என்றால், 
விஷ்ணுவாகிய தானே அவதாரம் செய்து, ஹிந்து தர்மத்தை மீண்டும் ஸ்தாபிக்கிறார்.

தர்மத்தை காப்பதற்கு, தெய்வங்களே அவதாரம் செய்கின்றனர்.


ஹிந்து தர்மத்தில் இருப்பது ஹிந்துக்களுக்கு அவசியம். 
ஹிந்து தர்மத்தை நாமே விட்டு விட்டால் என்ன செய்வது? 

சில மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ளும் போது, 
ஆன்மீக பக்குவம் இல்லாத நிலையில் நாம் இருந்தால், நம் ஹிந்து தர்மத்தை கூட விட்டு விட வாய்ப்பு உள்ளது. 
நாம் செய்து கொண்டிருக்கும் கொஞ்சம் ஹிந்து தர்மம் கூட, கெட்டு போகும் என்பதால்,
சில மந்திரங்கள், அதன் அர்த்தங்களை சொல்ல தயங்கினர். 
பிராம்மண குலத்தில் பிறந்து, சந்யாச தர்மத்தையும் ஏற்று கொண்டு, யதிராஜராக ஆகி,
ஸ்ரீ ரங்கதிற்கு மடத்தின் பொறுப்பை ஏற்று, 
கோவில் கைங்கரியமே செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ ராமனுஜருக்கு,
திரு அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும் அறிந்து கொள்ள ஆர்வம் உண்டானது.

திருக்கோஷ்டியூர் நம்பிக்கு, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தின் ரகசிய அர்த்தம் தெரியும் என்று அறிந்து கொண்டார் ராமானுஜர்.

திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் பெற்று, அதன் உட்பொருளை அறிந்து கொள்ள, யதிராஜராக இருந்த ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ ரங்கத்தில் இருந்து சுமார் 100KM நடந்து, திருக்கோஷ்டியூரை அடைந்தார்.

பிராம்மண குலத்தில் பிறந்து, சன்யாசமும் பெற்று, ரங்கநாதருக்கே தொண்டு செய்யும் ராமானுஜர் வந்தும் கூட,  திரு கோஷ்டியூர் நம்பி திருப்பி அனுப்பி விட்டார்.
ப்ராம்மணனாக பிறந்தால் 'மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ளலாம் என்பது கிடையாது' என்று தெரிகிறது.
ராமானுஜருக்கே சொல்ல தயங்கினார் என்று பார்க்கிறோம்.

மந்திரங்களின் அர்த்தங்களை தெரிந்து கொள்ள, "சில தகுதிகளை எதிர்பார்த்தார்கள்" என்று தெரிகிறது. .

இது போல 17 தடவை, ஸ்ரீ ரங்கத்தில் இருந்து சுமார் 100KM நடந்து நடந்து, திருக்கோஷ்டியூர் வந்து, நம்பியின் வீட்டிற்கும் முன் நிற்பார்.
ஒவ்வொரு தடவையும், ராமானுஜரை திருப்பி அனுப்பி விடுவார்.

உண்மையில், 'திரு அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும் சொல்ல தயங்கினார், பயந்தார்' திரு கோஷ்டியூர் நம்பி.

ஏன் பயம்? எதனால் தயக்கம் ஏற்பட்டது?
'தகுதி இல்லாதவர்களுக்கு சொல்லிவிட கூடாது' என்ற தயக்கமும்,
'தகுதி இல்லாதவர்கள், இதன் அர்த்தத்தை தெரிந்து கொண்டு, அவர்கள் செய்யும் கொஞ்சம் தர்மமும், தன்னால் தடைபடுமோ!!' என்ற பயமும் தான், இவரை தடுத்தது.

17 தடவை 'நம்பி' திருப்பி அனுப்பியும்,
அர்த்தத்தை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்ட ராமானுஜர், மீண்டும் மீண்டும் சளைக்காமல், கோபப்படாமல், பொறாமைப்படாமல் நம்பியை பார்க்க வர,
கடைசியாக 18வது முறையாக வந்த போது, ஸ்ரீ ராமானுஜருக்கு பரம சந்தோஷத்துடன்  உபதேசித்தார் என்று பார்க்கிறோம்.

'நான்' என்ற கர்வமே இல்லாமல், "'பெருமாளே கதி' என்று இருக்கும்  யதிராஜருக்கே "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை உபதேசம் செய்வதற்கு, அத்தனை தயக்கம் காட்டினார்கள் என்று பார்க்கிறோம்.

மந்திரங்களை, அதன் உட்பொருளை உலகத்திற்கு சொல்ல ஏன் தயக்கம் காட்டினார்?

ஏன் மந்திரங்களை ரகசியமாக வைத்து இருந்தார்கள்?
எதற்காக பயந்தார்கள்?

மந்திரங்கள் ரகசியமாகவே இருக்க வேண்டும், யாருக்கும் தெரிய கூடாது என்று நினைக்கவில்லை.
மந்திரங்களின் வீரியமும், அதன் அர்த்தமும் எல்லோருக்கும் தெரிந்தால், விபரீதமாக முடிந்து விடுமோ என்று பயந்தார்கள்.

யதிராஜரான ராமானுஜரையே 18 தடவை (18×200= 3600KM) நடக்க வைத்த பின்பு தான்,
திருக்கோஷ்டியூர் நம்பி, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து, அதன் அர்த்தம் சொன்னார் என்றால்,
மந்திரங்களை வெளி படுத்தவோ, அதன் அர்த்தங்களை சொல்ல கூடாது என்று நினைக்கவில்லை என்று தெரிகிறது.
ஆனால், மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தகுதி இல்லாதவர்களுக்கு சொல்லி விட கூடாதே!! என்று பயந்தார்கள் என்று தெரிகிறது.

சில வேத மந்திரங்கள் உலகிற்கு தெரிந்தாலும், நமக்கே காதில் விழுந்தாலும், அதன் அர்த்தங்கள் வெளி உலகிற்கு வருவதில்லை.

மந்திரங்களின் அர்த்தத்தை சொல்ல, ஏன் பயந்தார்கள்?


பொதுவாக,
மக்களின் இறை பக்குவம், மூன்று நிலைகளில் இருக்கிறது.
1. கடவுள் இருக்கிறார். அவர் நம்மை காப்பாற்றுகிறார் என்று நினைப்பது, முதல் நிலை.
2. கடவுள் நிச்சயமாக உள்ளார் என்று அனுபவத்தில் உணர்ந்து, அவர் யார்? நமக்கும் அவருக்கும் என்ன உறவு? என்று பரமாத்மா வாசுதேவனை பற்றி நினைப்பது, இரண்டாவது நிலை.
3. தனக்கும் பரமாத்மாவாகிய நாராயணனுக்கு உள்ள சம்பந்தம் தெரிந்து கொண்டதால், பிறவிக்கு காரணம் புரிந்ததால், உலக ஆசையை விட்டு, இந்த ஜென்மத்திலேயே தெய்வத்தை அடைய வேண்டும் என்ற பேராவல் உண்டாகி, காதல் கொண்டு உருகுவது, மூன்றாவது நிலை.

நம்மை கடவுள் காப்பற்றுவார் என்ற நம்பிக்கையை, 'புராணங்கள், இதிகாசங்கள்' படிப்பதன், கேட்பதன் மூலம் நாம் பெறுகிறோம்.
அதனால் தான், புராணங்களை, இதிகாசங்களை பொது மேடைகளில், கோவில்களில் மகான்கள், சந்யாசிகள், பெரியோர்கள் என்று அனைவரும், பொது மக்கள் அனைவருக்கும் எடுத்து சொல்லி,
நமக்கு ஆன்மீக வளர்ச்சியும், தர்மத்தில் இருந்தால் கடவுள் காப்பற்றுவார் என்ற நம்பிக்கையையும் வளர்க்கின்றனர்.

"இறைவன் இருக்கிறார்" என்று திடமாக அனுபவத்தில் உணர்ந்தவன்,
புராணங்கள், இதிகாசங்கள் கேட்டு கேட்டு,
"தன்னை,  கடவுள் காப்பற்றுகிறார்", "நாம் ஹிந்து தர்மத்தில் இருக்க வேண்டும்" என்ற அளவில் ஆன்மீக சிந்தனை பெற்ற ஒருவன், தொடர்ந்து புராணங்களை, இதிகாசங்களை கேட்க கேட்க, படிப்படியாக உயர்ந்து,
"தனக்கு கடவுள் என்ன செய்வார்?" என்ற கேள்வியுடன் நிற்காமல்,
'அவர் எப்படி இருப்பார்? 
அவருக்கும் நமக்கும் என்ன உறவு? 
அவர் எப்படியெல்லாம் நம்மிடம் உறவாடுகிறார்?' என்று பல கேள்விகள் உருவாகி,
அவரை தெரிந்து கொள்ள ஒரு கட்டத்தில் ஆர்வம் பெறுகிறான். 

முதல் நிலையிலிருந்து, இரண்டாவது நிலைக்கு முன்னேறுகிறான்.

இந்த ஆர்வத்தை பெற்றவன், மகான்களின் துணையை தேடுகிறான். 
"ஸத் சங்கத்தில்" தன்னை சேர்த்து கொள்கிறான்.
"நாம் ஹிந்து தர்மத்தில் இருக்க வேண்டும்" என்று ஆசைப்பட ஆரம்பிக்கிறான்.

ராம நாமத்தை, பிரணவ மந்திரத்தை, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஒரு ஆத்ம குருவிடம் உபதேசம் பெற்று, அதை எப்பொழுதும் ஜபம் செய்ய ஆசைப்பட ஆரம்பிக்கிறான்.

ஆர்வம் அதிகமாகி, மந்திரங்களின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ள ஆசைப்படுகிறான்.
அததற்கு அதிகாரியான, குருவை தேடி அலைந்து, மந்திரங்களின் உட்பொருளை அறிந்து கொண்டு, அர்த்தம் புரிந்து கொண்டு, மந்திரங்களை ஜெபிக்க ஆரம்பிக்கிறான். 
இது இரண்டாவது நிலை.


யதிராஜரான ராமானுஜர், அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் பெற்று, அதன் அர்த்தம் தெரிந்து கொள்ள, 18 தடவை (18×200= 3600KM) நடந்து நடந்து, கடைசியில் தான் நம்பி, அஷ்டாக்ஷர மந்திரத்துக்கு அர்த்தம்  சொன்னார் என்று பார்க்கிறோம்.
  • இறை எண்ணமே இல்லாத நாதீகர்கள்
  • புராணங்கள், இதிகாசங்கள் கேட்டு, ஆன்மீக எண்ணம் உடையவர்கள், 'தன்னை கடவுள் காக்கிறார்' என்ற ஞானம் உடையவர்கள், ஆனால், கடவுளை பற்றி அறிந்து கொள்ள தாகம் இல்லாதவர்கள், 
மந்திரங்களை பற்றியோ, அதன் உள் அர்த்தங்களை பற்றியோ அறிந்து கொள்வது, பெரும் ஆபத்தை தந்து விடும் என்ற பயத்தாலும், தயக்கத்தாலும், மந்திரங்களை, அதன் அர்த்தங்களை ரகசியமாக வைத்தனர்.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை சொல்ல கூடாது என்பதற்காக ரகசியமாக வைத்து கொள்ளவில்லை.
இதை தெரிந்து கொள்ள தகுதி உள்ளவர்களாக உள்ளார்களா? என்பது தான் கேள்வியாக உள்ளது.

அஷ்டாக்ஷர மந்திரத்தை ராமானுஜருக்கு சொல்ல ஏன் தயங்கினார்?
"ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தின் ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்தையும் பார்த்தோம் என்றால்,
"ஜீவனாகிய நாம் சுதந்திரமானவன் இல்லை, நாம் பரமாத்மா நாராயணனுக்கு கட்டுப்பட்டவன். 
அதனால், அவரே கதி என்று சரணாகதி செய்து, 
நான் என்ற கர்வத்தை விட்டு, "பெருமாள் இஷ்டம்" என்று இருக்க வேண்டும்" என்று சொல்கிறது.

திரு அஷ்டாக்ஷர மந்திரத்தின் சாரத்தையே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,
சர்வ தர்மான் பரித்யஜ்ய
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாப்யோ
மோக்ஷ இஷ்யாமி மா சுச:
என்று தெளிவாக சொல்கிறார்.
அதாவது,
அனைத்து (சர்வ) தர்மத்தையும் விட்டு,
என்னை ஒருவனையே சரண் அடைந்து விடு,
நான் உன் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து,
நீ உலகத்தில் வாழும்வரை காப்பாற்றி, உனக்கு பிறவா நிலையான மோக்ஷமும் தருகிறேன்
என்று தெளிவாக சொல்கிறார்.


"கடவுள் என்னை காப்பாற்றுகிறார்" என்ற அளவில் மட்டும் ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள்,
"தெய்வம் எனக்கு என்ன செய்யும்?" என்ற அளவில் ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள்,
"கடவுளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற தாகம் இல்லாதவர்கள்,
திருஅஷ்டாக்ஷர மந்திரத்தின் அர்த்தத்தை, தெரிந்து கொண்டால்,
பகவத் கீதையில் கடைசியாக ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதை புரிந்து கொண்டால்,
"நான் பெருமாளிடம் சரண் அடைந்து விட்டேன். அவர் நான் செய்த பாவங்களை எப்படி இருந்தாலும் மன்னித்து விடுவார். அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்.
என் தர்மத்தை விட்டாலும், அவர் என்னை காப்பாற்றுகிறார்"
என்று பேச ஆரம்பித்து விடுவான்.

பிராம்மணன், "பெருமாளை  சரண் அடைந்து விட்டேன், நான் சந்தியா வந்தனம் செய்ய தேவையில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

வியாபாரி, "பெருமாளை சரண் அடைந்து விட்டேன், நான் வியாபாரத்தில் ஏமாற்றினாலும் பரவாயில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

சூத்திரன் (வேலைக்கு செல்பவன் (employee)), "பெருமாளை சரண் அடைந்து விட்டேன், நான் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி ஏமாற்றினாலும் பரவாயில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

இன்னும் சிலர்,
"ராம" என்ற தாரக மந்திரத்தின் பொருளே "சம்சார சாகரத்தில் இருந்து கடக்க (தாரக) செய்யும்" என்பது தான்.   
"ராம ராம ராம..." என்று தாரக மந்திரத்தை சொன்னாலேயே போதும், பூஜை, ஆசாரம், அனுஷ்டானம் செய்ய வேண்டிய தேவையில்லை." என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

மந்திரங்களின் அர்த்தங்களை,
நாத்தீகர்கள்,
ஆன்மீக நிலையில் முதல் நிலையில் உள்ளவர்கள்,
காமம் கோபம் பொறாமை குணம் கொண்டவர்கள் தெரிந்து கொள்வதால்,
"தன் தர்மத்தை விட்டாலும், மோக்ஷம் கிடைத்து விடும்" என்று ஆரம்பிப்பார்கள்.
"தர்மத்தை காக்க தான், தெய்வங்களே அவதாரம் செய்கிறார்கள்" என்பதை மறந்து பேசுவார்கள்.

தெய்வங்களை குறித்து ஜபம் செய்ய வேண்டிய சில மந்திரங்களை, பெண்களை மயக்க பயன்படுத்துவார்கள்.

இப்படி பக்குவம் இல்லாத நிலையில் 80% சதவீத மக்கள் இருப்பதால், பொதுவாகவே மந்திரங்கள், அதன் அர்த்தங்கள் பொது மேடைகளில் சொல்லப்படுவதில்லை.

திருக்கோஷ்டியூர் நம்பி, 18 முறை வந்த ஸ்ரீ ராமானுஜர், கோபத்தை, பொறாமையை ஜெயித்தவர் என்று அறிந்து,
"திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தின் பொருளை சொன்னாலும், மோக்ஷம் கிடைக்கும் என்றாலும்,
தன் தர்மத்தை விட்டு விட மாட்டார் என்று நம்பிக்கை கொண்டார்.

"தனக்கு மோக்ஷம் நிச்சயம்" என்றாலும், ஸ்ரீ ராமானுஜர், கடைசி வரை தன் தர்மங்களை விடவில்லை.



தன் தர்மத்தை விட்டு, "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை சொல்லி மோக்ஷம் அடைய ஆசைப்படுபவன், பகவானை ஏமாற்றுகிறான்.
பகவான் தன்னை ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும், மோக்ஷ வாசலை திறந்து விடுகிறார், கருணையின் காரணத்தால். 
ஆனால்,
உண்மையான பக்தன், தெய்வம் விரும்பும் படியாக உலகில் தர்மத்தில் வாழ்ந்து, பிறகு மோக்ஷம் அடையவே விரும்புவான்.

ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ ராமானுஜர்,  "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை உபதேசம் பெற்றதும், 
கோவிலின் உச்சிக்கு சென்று, அங்கு கூடி இருந்த அனைவருக்கும்
"ஓம் நமோ நாராயணாய! என்று சொல்லுங்கள், உங்கள் அனைவருக்கும் மோக்ஷம் நிச்சயம்" என்று சொல்லி விட்டார்.

ஓம் நமோ நாராயணனாய மந்திரத்தின் விளக்கம் இதோ

திருக்கோஷ்டியூர் நம்பி,
தகுதி உள்ளவர்களுக்கே சொல்ல வேண்டும், 
தகுதி இல்லாதவர்களுக்கு சொன்னால், "சரணாகதி செய்து விட்டேன் ! தர்மத்தை விட்டாலும், எனக்கு பகவான் நிச்சயம் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்றெல்லாம் பேச ஆரம்பித்து கலி யுகத்தில் அனைவரும் தர்மத்தை விட்டு விடுவார்களே !! என்று பயந்தார்.

"தன்னால் உலகம் அதர்மத்தில் வீழ்ந்தது" என்று ஆகி விட கூடாது என்று பயந்தார்.

பரவாசுதேவனின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷனே, ஸ்ரீ ராமானுஜர்.

"தர்மத்தில் இருக்காமல், மோக்ஷம் கிடைத்து விடும் என்று சொல்லி, ஆஸ்தீகர்கள் கூட மந்திரங்களை தவறாக பயன்படுத்தி விடுவார்கள். அதனால், 
இது போன்ற மந்திரங்களை தகுதி இல்லாதவர்களுக்கு சொல்ல கூடாது என்பது தவறில்லை. 
ஆனால், 
இப்படியே மறைத்து வைத்து இருந்தாலும்,
கலியின் ஆக்கிரமிப்பில், சுய நலம் அதிகமாகி, பெரும்பாலான  மக்கள் இனி வரும் காலங்களில், அவர்களே அவரவர்கள் தர்மத்தை விட்டு, பெருமாளையும் அறிந்து கொள்ளாமல், மிலேச்ச மதங்களில், பொய் மதங்களில், பொய் தெய்வங்கள் தனக்கு சொர்க்கம் கொடுக்கும், நன்மை செய்யும் என்று நம்பிக்கொண்டு போய்  விடுவார்கள்'
என்று அறிந்து இருந்தார் ஸ்ரீராமானுஜர்.

'கலியில், 
பெரும்பாலான மக்கள், தங்கள் சுய நலத்தால், எப்படி இருந்தாலும், தர்மத்தை விட்டு விடுவார்கள்' 
என்று அறிந்த நம் ராமானுஜர்,
"தர்மத்தை விட்டாலும் பரவாயில்லை, ஓம் நமோ நாராயணாய!! என்று சொல், பகவான் உன்னை ரக்ஷித்தது, மோக்ஷமும் கொடுப்பார்"
என்று பெரும் கருணை கொண்டு,
மறைத்து வைத்திருந்த திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை அனைவருக்கும் கொடுத்து விட்டார்.
"தெய்வம் வந்து இந்த மந்திரத்தை அனைவருக்கும் சொல்லட்டும், தானாக சொல்ல கூடாது" 
என்று இருந்த திருக்கோஷ்டியூர் நம்பி,
கலியில் உலக மக்கள் யாவரும் தர்மத்தை விட்டு, கதி இன்றி இருக்க போகிறார்கள் என்று உணர்ந்து,
திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை அனைவருக்கும் அள்ளி கொடுத்த, ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ ராமானுஜரை கண்டு மனம் மகிழ்ந்தார்.


"ஓம் நமோ நாராயணாய" என்று கூட சொல்லாமல் இருக்கிறார்கள் பலர்.
"இவர்களுக்கும் ஒரு வழி காட்ட வேண்டுமே" என்று, பரவாசுதேவன் நாராயணனே "ஸ்ரீ கிருஷ்ண சைதன்யராக" அவதாரம் செய்து, மிகவும் சுலபமான மந்திரமாகவும் இருக்க வேண்டும், கேட்பதற்கும் இசையாக இருக்க வேண்டும் என்று,
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
என்று ராம என்ற தாரக மந்திரத்தையும், தன் பிற அவதாரங்களான நரசிம்ம (ஹரே), கிருஷ்ண மந்திரத்தையும் சேர்த்து தொடுத்து, ஒரு இசை மாலையாக கொடுத்து விட்டார்.
இந்த மந்திரத்தை இன்று பாடாத மனிதன் இல்லை. 
ஆன்மீக எண்ணமே இல்லாதவர்களை கூட, இந்த இசை இழுக்கிறது.
வெளிநாட்டினர் பலர், இந்த மந்திர மாலைக்கு மயங்கி கிடக்கின்றனர்.

ஹிந்துவாக பிறந்ததில், பெருமை கொள்வோம்.

மந்திரங்களை அதன் அர்த்தங்கள் புரிந்து கொண்டு, ஜபம் செய்ய செய்ய, இரண்டாம் நிலையில் இருந்து, நாளடைவில், குருவின் துணையால் மூன்றாம் நிலையை அடைகிறோம்.

இந்த மூன்றாம் நிலை அடைந்தவர்களே, நம் பாரத தேசத்தில் வாழ்ந்த மகான்களும், வாழும் மகான்களும்.

ஆழ்வார்கள் பாடிய சில பாசுரங்களை படித்து அர்த்தம் புரிந்து கொண்டால், "தான் ஒரு பெண் போலவும். பெருமாள் தன்னை எப்பொழுது மணந்து கொள்வார்?" என்பது போலவும் பாசுரங்களை பார்க்கிறோம்.

இது போன்ற பாசுரங்களை ஒரு நாத்தீகனோ, ஆன்மீக வளர்ச்சியில் முதல் நிலையிலோ, இரண்டாம் நிலையிலோ இருக்கும் ஆஸ்தீகர்கள் கூட,
"ஏன் இப்படி ஆழ்வார் பாடுகிறார்? ஏன் தன்னை பெண் என்று சொல்லி கொண்டு, பாடுகிறார்?"
என்றெல்லாம் கேட்க தோன்றும்.

4000 திவ்ய பாசுரங்கள், நாயமார் பதிகங்கள், மீராவின் பாட்டுக்கள், மகான்களின் ஸ்லோகங்கள் படிப்பதற்கே, நமக்கு ஒரு தகுதி தேவைப்படுகிறது.

ஆழ்வார்கள் பாசுரத்தை படித்து, இது என்ன காமம் கலந்து இருக்கிறது? என்று கூட சொல்லி விடுவான் நாத்தீகன்.

இறை நிலையில் மூன்றாம் நிலையில் உள்ள இவர்கள்,
உலக நினைவே இல்லாமல், 
மோக்ஷம் வேண்டி கதறி அழும், பாசுரங்கள் உண்டு, காதல் கொண்டு, தன்னை சேர்த்து கொள்ள பிரார்த்திக்கும், பாசுரங்கள் உண்டு.

மோக்ஷத்தை இந்த ஜென்மத்தோடு பெற வேண்டும் என்று மூன்றாம் நிலையில் உள்ள மகான்களால் மட்டுமே, ஆழ்வார்கள் பாடிய  பாசுரங்களை, உண்மையில் புரிந்து கொள்ள முடியும்.


குருவின் கிருபையை பற்றி கொண்டு,
நாமும் புராணங்களை கேட்டு, புரிந்து கொண்டு, படிப்படியாக முன்னேறி, நாம் தர்மத்தில் இருந்தால், பகவான் காப்பாற்றுவார் என்ற பக்குவத்தை பெற்று,
பகவானை பற்றி அறிய "மந்திரங்கள் அதன் அர்த்தங்களை" புரிந்து கொண்டு ஜபம் செய்து,
மேலும் நம் ஆன்மீக நிலையை வளர்த்து கொண்டு,
மோக்ஷம் என்ற பிறவா நிலையை அடைய, நாராயணனை சரண் அடைவோம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ராமானுஜர்.
வாழ்க ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்,
வாழ்க நம் பாரத பூமியில் வாழும் மகான்கள்.

தர்மத்தை காப்பதற்கு தான், தெய்வங்களே அவதாரம் செய்கின்றனர்.
ஹிந்துக்கள் அவரவர்கள் தர்மத்தில் இருப்பது, ஹிந்துக்களுக்கு அவசியம்.

Sandhya Vandanam is a Key Dharma for Brahmin

Sandhya Vandanam - Morning (With meaning)



Sandhya Vandanam - Afternoon (With meaning)

Sandhya Vandanam - Evening (With meaning)