Followers

Search Here...

Showing posts with label வேங்கடாத்ரி. Show all posts
Showing posts with label வேங்கடாத்ரி. Show all posts

Monday 13 January 2020

பாசுரம் (அர்த்தம்) - பறவை ஏறும் பரம புருஷா... இரவு செய்யும் பாவக் காடு (பெரியாழ்வார்). "பாவம் செய்ய கூடாது" என்று தான் நாம் அனைவருமே நினைக்கிறோம். இருந்தாலும், "பாவம் தொடர்ந்து செய்கிறோமே!!".. ஏன்? காரணத்தை ஆழ்வார் மூலம் தெரிந்து கொள்வோமே !!

திருப்பதியில், ஆதிசேஷனே "7 மலைகளாகவும் இருக்கிறார்". 
இந்த 7 மலைகளுக்கு, பொதுவாக "திருமலை" என்றும் "சேஷாத்ரி" என்றும் "சேஷகிரி" என்றும் பெயர்.
அதில் சில மலைகள், சில பக்தர்களின் பெயர்களில் அமைந்தது.

ஏழு மலைகளின் பெயர்கள்:
1. நாராயணாத்ரி (நாராயண முனிக்கு ஸ்ரீனிவாச பெருமாள் வைகானச பூஜையை உபதேசித்த இடம் என்பதால்) ஸ்ரீனிவாச பெருமாள் இருக்கும் இடம்.
2. வேங்கடாத்ரி (பாபங்கள் பொசுங்கும் என்பதால்)
3. சேஷாத்திரி (ஆதி சேஷனை குறிக்கிறது). சிலர் நிலாத்ரி என்றும் சொல்கிறார்கள்.
4. அஞ்சனாத்ரி (ஆஞ்சநேயர் அவதரித்த இடம். அவள் தாய் அஞ்சனாவின் பெயரில்)
5. சிம்மாத்ரி ( நரசிம்ம  அவதார ஸ்தலம் என்பதால்)
6. கருடாத்ரி (கருடன் அம்ருத கலசத்தோடு இங்கு அமர்ந்ததால்)
7. வ்ருஷபாத்ரி (வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்றதால்)





பாபங்கள் பொசுங்கும் என்பதால் திருமலைக்கு வேங்கடாத்ரி என்ற பெயரும் உண்டு.

வேங்கடம் (வேம்+கடம்) என்றால் "பாவங்களை எரிப்பது" என்று பொருள்.

  • "வேம்" என்றால் பாவம் என்று தமிழில் அர்த்தம்.
  • "கடம்" என்றா எரித்து (fry) என்று தமிழில் அர்த்தம்.


பெரியாழ்வார், பெருமாளை சரணாகதி செய்யும் போது, "திருமலையப்பனை நினைத்து கொண்டு, வெங்கட்ரமனா கோவிந்தா!!  என்று கதறி அழைத்து விட்டாலே, நம் பாவங்கள் எல்லாம் எரிந்து போகும்"
என்கிறார்.
"வேங்கடம்" என்ற சொல்லுக்கு விளக்கம் போல, நமக்கு இந்த பாசுரத்தை காட்டுகிறார் - பெரியாழ்வார்.

பறவை ஏறும் பரம புருஷா!
நீ என்னை கைக்கொண்டபின்
பிறவி என்னும் கடலும் வற்றிப்  
பெரும்பதம் ஆகின்றதால்
இரவு செய்யும் பாவக் காடு
தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவையென்னும் அமுத ஆறும்
தலைப்பற்றி வாய்க்கொண்டதே! 
-  திருமொழி (பெரியாழ்வார்)

"பாவம் செய்ய கூடாது" என்று தான் நாம் அனைவருமே நினைக்கிறோம். இருந்தாலும், "பாவம் தொடர்ந்து செய்கிறோமே!!".. ஏன்?

"அஞானம் தான், நாம் பாவம் செய்வதற்கு காரணம்"
என்கிறார் பெரியாழ்வார்.

'எந்த அஞானத்தை சொல்கிறார் பெரியாழ்வார்? தெரிந்து கொள்வோமே!

"இரவு செய்யும் பாவக் காடு" என்கிறார் பெரியாழ்வார்.
இங்கு "இரவு" என்று "அஞானத்தை" சொல்கிறார் பெரியாழ்வார்.

"ஏன் இப்படி தொடர்ந்து பாவத்தை செய்கிறேன்? ஏன் பாபியாகவே இருக்கிறேன்?"
என்று ஒரு பக்தன் தன்னையே நொந்து, ராமபிரானை பார்த்து உண்மையை சொல்கிறான்.
"ராமா, நீங்கள் தர்மத்துக்காக எத்தனை, படாதபாடு பட்டீர்கள் !!
தர்மத்துக்காகவே பூமியில் நீங்கள் அவதரித்தீர்கள்..., 
நானோ தர்ம துரோகியாக இருக்கிறேன்!!

மனிதர்கள் எப்படி தர்மத்தில் வாழ வேண்டும்? என்று காட்ட, வைகுண்டத்தை விட்டு விட்டுமனிதனாகவே தானும் அவதரித்து, தாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம், தர்மத்துக்காக தானே !! 
தர்மத்தை நிலைநிறுத்துவதற்கு தானே !!
நானோ, தர்ம துரோகியாக இருக்கிறேன் !!
என்று சொல்ல,







"அப்படி என்ன, நீ அதர்ம செய்து விட்டாய்?" 
என்று ராமபிரான் பரிந்து கேட்க,

"ராமா, இப்படியா எனக்கு பரிந்து பேசுவது?
எது எதுவெல்லாம் தர்மத்துக்கு உகந்த காரியங்களோ, அது எதையுமே செய்யாதவன் நான்!
அது மட்டுமல்ல, 
எது எதுவெல்லாம் தர்மத்துக்கு எதிரானதோ, அதையெல்லாம் செய்தவன் நான்!

'இந்த அதர்மம் செய்தேன், அந்த அதர்மம் செய்யவில்லை என்று இல்லாமல்', உலகத்தில் உள்ள அனைத்து அதர்ம காரியங்களையும், 
தேடி தேடி, பார்த்து பார்த்து, ஆசைப்பட்டு ஆசைப்பட்டு செய்திருக்கிறேன்.

இப்படி பாபங்களே செய்ததற்கு காரணம் என்ன தெரியுமா?
'உடம்பே நான்' என்ற அஞானமே, நான் செய்யும் இத்தனை பாபத்துக்கும் காரணம்.
'உடம்பே நான்' என்ற அகம்பாவத்தால், இத்தனை பாவங்களும் செய்கிறேன்.
எத்தனை நாள் இப்படியே இருந்து விடப்போகிறேன்? 
ஒரு நாள் நிச்சயம் செத்து விடுவேனே!!
இவ்வளவு பாப காரியங்கள் செய்கிறேனே!! இப்படியாவது பிழைக்க வேண்டுமா? இந்த உடம்பு நிரந்தரமானதா!!
ஒரு சாண் வயிற்றுக்கு சோறு போட்டு காப்பாற்ற, இத்தனை பாபங்களை நான் செய்ய வேண்டுமா?
புலன்களுக்கு சுகம் கிடைக்க, இத்தனை பாபங்களை நான் செய்ய வேண்டுமா?

'உடம்பே நான்' என்ற அகம்பாவம் தானே, என் பாபங்கள் அனைத்துக்கும் காரணம்.
'உடம்பு நான் இல்லை, ஆத்மா தான் நான்' என்ற நினைவு கூட இல்லாமல் பாபம் செய்து கொண்டே போகிறேனே!!
அது போகட்டும்,
'ஐயோ!! இப்படி இந்த உடம்புக்காக இத்தனை பாபங்களை செய்கிறோமே!! என்று நினைத்தாவது கண்ணீர் விட்டாயா?' 
என்று கேட்டு விடாதீர்கள்.

'நான் பாபி' என்ற எண்ணம் ஒரு எள் அளவிற்காவது இருந்தால் தானே! என் கண்களில் நீர் சிந்தும்...

'நான் ஏதோ பரமபுண்ணியவான் போலவும், பாவமே செய்யாதவன் போலவும் தானே நானே என்னை பற்றி நினைத்து கொண்டு இருக்கிறேன்'.

'நான் ரொம்ப யோக்கியன். நான் நீதி தவறி நடக்க மாட்டேன்' 
என்று தைரியமாக சொல்லி கொண்டு இருப்பேனே தவிர, 
தனக்கு தானே ஒரு முறை கூட சிந்தித்து பார்த்தது கிடையாது. 
என்னை பற்றி ஒரு அனுதாபம் கூட ஏற்பட்டது கிடையாது, எனக்கு!!

நான் ஏன் சிந்தித்தது கிடையாது? என்று நீங்கள் கேட்டால், 
'ஆத்மா தான் நான்' என்ற ஞானம் இல்லாதது தான் நான் சிந்திக்காததற்கு காரணம். 
'உடம்பே நான்' என்ற அஞானம் தான் நான் சிந்திக்காததற்கு காரணம்.
என்றான் அந்த பக்தன்

பெரியாழ்வார் சொல்கிறார்,
'உடம்பே நான்' என்று இருக்கும் அஞான ஜனங்கள், 'பாபம் செய்கிறோம்' என்ற நினைவு கூட இல்லாமல், 
'புஷ்ப தோட்டம்' போடுவது போல,
தன் பாபங்களை கொண்டே அவரவர்களுக்கு ஒரு பெரிய 'பாப தோட்டம்' போடுகிறார்களாம்.

இதையே "இரவு செய்யும் பாவக்  காடு" என்று சொல்கிறார் பெரியாழ்வார்.

"தெரியாமல் இந்த பாவங்கள் செய்து விட்டாயோ?" என்று கேட்டால், "தெரிந்தே செய்த பாப காடு"  (செய்யும் பாவக் காடு) என்கிறார் பெரியாழ்வார்.

ஒரு தோட்டம் போடுவது போல, அஞானிகள், இந்த உடம்புக்காக, தெரிந்தே 'பாபம் என்ற தோட்டத்தை' அமைத்துக்கொள்கிறார்களாம்.

இப்படி அஞானிகள், 'உடம்பே நான்' என்று கஷ்டப்பட்டு, ஜென்ம ஜென்மாக ஆசையுடன் வளர்த்த இந்த பாபத்தோட்டம்,
திடீரென்று ஒரு சந்தர்ப்பம், ஒரு காட்டு தீயில் சிக்கி, அந்த காடே பொசுங்கி விட்டது!!
என்கிறார் பெரியாழ்வார்.
"திருமலையப்பா... கோவிந்தா... ரமா ரமண கோவிந்தா...வேங்கட ரமண கோவிந்தா"
என்று திருப்பதியில் இருந்து கூட வேண்டாம், இருக்கும் இடத்திலிருந்தே "திருமலையப்பா... கோவிந்தா... ரமா ரமண கோவிந்தா... வேங்கட ரமண கோவிந்தா"
என்று சொல்லிவிட்டால் கூட,
நாம் பார்த்து பார்த்து வளர்த்த இந்த பாப காடு, 
"கோவிந்தன்" என்ற பெரும் காட்டுத்தீயில் பொசுங்கி விடுமே!! 
என்கிறார் பெரியாழ்வார்.




"இப்படி நாம் வளர்த்த பாப காடு, 'கோவிந்தா' என்று சொன்னவுடனேயே பாபங்கள் பொசுங்கியது மட்டுமில்லாமல், கற்பகவருக்ஷங்களே நிறைந்த பசுமையான  காடாகவும் ஆகி விட்டது" என்கிறார் பெரியாழ்வார்.

அறிவையென்னும் அமுத ஆறும்
தலைப்பற்றி வாய்க்கொண்டதே

என்று சொல்லும் போது,
"கோவிந்தா" என்று சொன்னவுடன், அந்த வேங்கடநாதன் தன்னை கரம் பிடிக்க (நீ என்னை கைக்கொண்டபின்), 
அஞானம் என்ற இருள் விலகி, மோக்ஷம் நிச்சயமாகிவிட,
ஞானம் ஏற்பட்டு (அறிவையென்னும் அமுத ஆறும்), 
ஆத்ம ஞானம் புத்தியில் (தலைபற்றி) ஏற்பட்டு, 
பெருமாளின் கருணையை நினைத்து ஏற்பட்ட பக்தியால் 
"கோவிந்தா.. கோவிந்தா..." என்று நாமம் வாயில் வருகிறதே (வாய்க்கொண்டதே)!! 
என்கிறார் பெரியாழ்வார்.

"வேங்கடம்" என்ற சொல்லுக்கு விளக்கம் போலநமக்கு இந்த பாசுரத்தை காட்டுகிறார் - பெரியாழ்வார்.

பாபங்களை பொசுக்கும் வேங்கடாத்ரியில், வீற்று இருக்கும் ஸ்ரீனிவாசன், 'நம் பாபங்களை மட்டும் போக்குவதில்லை, பாபங்களை போக்கி, நமக்கு நல்லதையே கிடைக்க செய்து, நல்லதையே நினைக்க செய்து, தன்னிடம் பக்தி உண்டாகும் படி செய்து, மோக்ஷ வாசலையும் திறந்து விடுகிறார்'.


ஸ்ரீனிவாச பெருமாளை பக்தியுடன் சேவிப்போம்.

முழுசி வண்டாடிய - திருமங்கை ஆழ்வார் அஷ்டபூஜை பெருமாளை பார்த்து பாடிய பாசுரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வோமே..