Followers

Search Here...

Showing posts with label சொற்பொழிவாளர்கள். Show all posts
Showing posts with label சொற்பொழிவாளர்கள். Show all posts

Thursday 7 November 2019

ஆன்மீக சொற்பொழிவு செய்பவர்கள் எப்படி பேச வேண்டும்? தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஆன்மீக சொற்பொழிவு செய்பவர்கள் எப்படி பேச வேண்டும்?



உலகத்தில் உள்ள எதை பற்றியும், நம் எச்சில் வாயால் பேசி விடலாம், பேசலாம்...
ஆனால்,
நம்மை படைத்த பகவானை பற்றி நம் எச்சில் வாயால் பேசலாமோ? பேச முடியுமா?..

சொல்லுக்கும் அப்பாற்பட்டவர் அல்லவா "பகவான்"!
"பரமாத்மாவின் பெருமையை சொல்" என்று சப்த ப்ரம்மமாகிய வேதத்தை கேட்டால்,
"பகவானின் பரத்துவத்தை பற்றி சொல்ல இயலாது" என்று வேதமே  தயங்கி பேசுகிறது...

பகவானின் பெருமையை பற்றி சொல்ல, ஏன் மகான்கள் கூட தயங்கினார்கள்?...
"வாக்கு தூய்மை இல்லை" என்று பெரியாழ்வார், இந்த கேள்விக்கு பதில் சொல்கிறார் என்று கவனிக்க வேண்டும்.
"வாக்கில் தூய்மை இல்லாததால், எம்பெருமான் பெருமையை உரைக்கவும்,
எம்பெருமான் நாமத்தை சொல்லவும் கூட, அஞ்சுகிறேன்"
என்று பெரியாழ்வார் சொல்கிறார்..
யார் இப்படி சொல்கிறார்? என்று இங்கு கவனிக்க வேண்டும்..

பகவானின் பெருமையை நினைக்கும் போது, பெரியாழ்வார் போன்ற ஆழ்வார்கள்,
எம்பெருமான் பெருமையை தன் வாயால் பேச முயற்சித்து, "தன் எச்சில் பேச்சால், எம்பெருமானை  களங்கம் செய்து விடுவோமோ!!"
என்று அஞ்சினார் என்றால், 'நாம் எத்தனை நிதானத்துடன் பேச வேண்டும்' என்று புரியும்.

"எப்பேற்பட்டவர் பெரியாழ்வார்" என்று கவனிக்க வேண்டும்..
யார் இப்படி சொல்கிறார்? என்று கவனிக்க வேண்டும்..
"ஆண்டாளை மகளாக பெற்றவர்" என்ற பெருமையை உடையவர்,
எம்பெருமானை நேரில் தரிசித்து "பல்லாண்டு..." பாடியவர்,
ஆழ்வார்களில் ஒருவர்,
இப்படி அஞ்சினார் என்றால்,
நாம் எத்தனை கவனத்துடன் பகவானை பற்றி பேச வேண்டும், 
என்று கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்..

வாக்குத்தூய்மை இல்லாமையினாலே
மாதவா!! உன்னை வாய்க்கொள்ளமாட்டேன்
என்று பாசுரம்.
இங்கு திருமொழியில் 'பெரியாழ்வார்',
"எம்பெருமான் பெருமையை, தன் எச்சில் வாயால் பேசுவதாவது?
என்று அஞ்சுகிறார்.

"இந்த பாசுரத்தின் கனத்தை (weight) நாம் உள் உணரும் போது தான், 
நாம் பகவானை பற்றி பேசும் போது, எத்தனை கவனத்துடன் பேச வேண்டும்" என்று புரிந்து கொள்ள முடியும்..
"பகவானின் பெருமையை நம்மால் பாட முடியாது, பேச முடியாது.. 
அவர் வாக்குக்கும் அப்பாற்பட்டவர்"
என்று வேதம் சொல்கிறது...

இதே விஷயத்தை மற்ற மதங்கள் கூட சொல்வதை கவனிக்கலாம். அதோடு நின்று விடுகிறது மற்ற மதங்கள்.



சப்த ப்ரம்மமாகிய அதே வேதம்,
"வாக்குக்கு எட்டாதவர் தான் பரமாத்மா, 
மனசுக்கு அப்பாற்பட்டவர் தான் பரமாத்மா..
அதற்காக, 
அவர் பெருமையை பேசாமல், நினைக்காமல் இருந்து விடாதே!!....
வேத சாஸ்திரம் எப்படி எம்பெருமானை பேசுகிறதோ, அது போலவே பேசு!!
புராணங்கள், சாஸ்திரங்கள் எப்படி பரமாத்மாவை காட்டுகிறதோ, அது போலவே நினை!!
நீயாக கற்பனை செய்து!! 
உன் புத்தியை கொண்டு பேசி, 
எம்பெருமான் பெருமையை நீ தாழ்த்தி பேசாதே"
என்று பகவானை பற்றி 'பேசு, நினை' என்ற அனுமதியை நம் அனைவருக்கும் கொடுத்து,
முக்கியமாக உபன்யாசகர்கள், பௌராணிகர்கள், பேச்சாளர்களை பார்த்து ஜாக்கிரதை படுத்துகிறது...

"பகவான் பெருமையை பேச முடியாது... 
இருந்தாலும் சும்மா இருந்து, வீண் பொழுது போக்கி விடாதே!!  
கிடைத்த வாழ்க்கையை வீண் செய்யாதே!
மனித பிறவி கிடைப்பது மிகவும் அரிது!! 
ஆதலால் உன் வாயால் பகவான் பெருமையை எப்பொழுதும் பேசு, 
உன் மனதால் அவரை எப்பொழுதும் நினைத்து கொண்டே இரு" 
என்று வேதம் அனுமதி கொடுக்கிறது.

"வாக்குக்கு அப்பாற்பட்ட பகவானை பேசு என்றால்,எப்படி பேச வேண்டும்?"
என்ற கேள்வி நமக்கு எழலாம்..
"தீது இல்லா மொழிகள் கொண்டு"  பகவானை பேசு
என்று 'தொண்டரடிபொடி ஆழ்வார்' அதற்கு பதில் சொல்கிறார்..

"நம் புத்திக்கு எட்டிய அளவில், 
அருவெறுக்க தக்க உதாரணங்களையும், 
அருவெறுக்க தக்க சொற்களையும், 
கற்பனையான கதைகளையும், 
நமக்கு தெரிந்த படி பிதற்றி, 
'பெருமாளுடைய பெருமையை', 
நம் எச்சில் வாயால் குறைத்து பேசி விட கூடாது..."
என்பதை உணர்த்த,
"தீது இல்லா மொழிகள் கொண்டு, எம்பெருமான் பெருமையை பேசு" 
என்று தொண்டரடிபொடி ஆழ்வார் நமக்கு வழி காட்டுகிறார்..

"வாக்குக்கும், மனதுக்கும் அப்பாற்பட்டவர் பகவான்" என்று உபநிஷத் சொல்லிவிட்டு,
இருந்த போதிலும், "வாக்குக்கு எட்டாத அந்த பரமாத்மாவை பற்றி நீ பேசு", "மனதுக்கு எட்டாத அந்த பரமாத்மாவை பற்றி நீ தியானம் செய்" என்று நம்மை பேச உற்சாகப்படுத்துகிறது..

"வாக்குக்கும், மனதுக்கும் அப்பாற்பட்ட பரமாத்மாவை எப்படி பேச முடியும்? எப்படி தியானிக்க முடியும்?"
இதற்கு ஸ்ரீ கிருஷ்ணரே நமக்கு கீதையில் பதில் சொல்கிறார்.




"பகவானை பற்றி பேசவேண்டும் என்று நீ நினைத்தால், 
உன் சொந்த 'புத்தியால்' பேசாதே!!..
ஆழ்வார்கள் எப்படி பேசி இருக்கிறார்களோ!,
ஆழ்வார்களின் ஸ்ரீ ஸூக்திகளுக்கு எப்படி வ்யாக்யானம் (விளக்க உரை) செய்து இருக்கிறார்களோ!
மகரிஷிகளான வியாசர், வால்மீகி போன்றவர்கள் எப்படி பேசி இருக்கிறார்களோ!!  அது போல பேச கற்றுக்கொள்.

பகவானை பற்றி அறிந்து கொள்ள, ஒரு தகுந்த (ஞான பூர்ணனான) ஆச்சார்யாரிடம் பணிந்து இருந்து கேட்டு, 
அவர் சொன்ன உபதேசங்களை மனதில் வாங்கி கொண்டு, 
அந்த விஷயங்களின் அர்த்தங்களை தான் முதலில் அனுபவித்து, பகவானிடம் தான் முதலில் பிரேமை (அன்பு) கொண்டு,, 
பிறகு, பகவானை பற்றி பேச போகிறோமே என்ற பக்தியுடன் (தெய்வத்திடம் ஆசை), உன்னுடைய மனதை பகவத் அனுபவத்தில் உயர்த்திக்கொண்டு பகவானை பற்றி சொல்வாயானால், உனக்கும் பிரயோஜனம் உண்டு.. கேட்பவருக்கும் பிரயோஜனம் உண்டு.."

தத் வித்தி ப்ரணி  பாதேன 
பரி பிரஷ்னேன சேவையா 
உபதேக்ஷ்யந்தி  தே  ஞானம்
ஞானிநஸ் தத்வ தர்ஷின:
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (Chapter 4:  Sloka 34)

"பகவானை பற்றி அறிந்த ஞான குருவிடம் பணிந்து, குருவுக்கு சேவை செய்து, அவர் உபதேசத்தை பெற்று, அவர் உபதேசத்தை மனதில் உள் வாங்கி கொண்டு, அந்த அர்த்தங்களை தான் முதலில் அனுபவித்து, பிறகு பகவான் மீது களங்கம் ஏற்படாத புண்ணிய சொற்களை கொண்டு, பக்தியுடன் சொல்" 
என்பதை ஸ்ரீகிருஷ்ணா பரமாத்மாவே நமக்கு சொல்லி வழிகாட்டுகிறார்.

"எம்பெருமான் பெருமையை கேட்க வேண்டும்"
என்று ஆசையோடு வரும் பக்தர்கள் அனைவரும், சொல்ல வந்த பௌராணிகரை (உபன்யாசம் செய்பவர்) தானே நம்பி வருகிறார்கள்!!..
ஆன்மீக சொற்பொழிவாளர்கள் நினைத்து பார்க்க வேண்டும்..

எம்பெருமானை பற்றி, பலர் முன்னிலையில் பேசுபவர்கள், ஜாக்கிரதையாக சொல்ல வேண்டாமோ?...

"நம் எச்சில் வாயால், 
எம்பெருமான் பெருமையை குறைத்தோ,
எம்பெருமான் பெருமையை தவறாகவோ,
எம்பெருமானை மரியாதை குறைத்தோ பேசி விட கூடாதே!!"
என்று அச்சம் வேண்டாமா?...

எம்பெருமானை பேசுவதற்காகவே ஏற்பட்ட மங்களமான, பவித்ரமான, உயர்ந்த சொற்களை பயன்படுத்து பேச வேண்டாமா?...

எம்பெருமான் பெருமையை குறைத்து விடாமல், உயர்ந்த சொற்களை கொண்டு பேசினால் தானே, கேட்பவர்களுக்கும் எம்பெருமான் மீது பக்தி உண்டாகும்... 
அப்படித்தானே மஹான்கள் வழி காட்டுகின்றனர்.
"எம்பெருமான் பெருமையை", உயர்ந்த சொற்கள் கொண்டு பேசினால் தானே, நாம் பேசியதற்கே பிரயோஜனம்.
அப்படி பேசினால் தானே,
உபன்யாசம் செய்பவருக்கும், எம்பெருமான் பெருமையை பேசிய ஆத்ம திருப்தி கிடைக்கும்...



பெருமாள் பெருமையை பேசும் போது, "தீது இல்லா மொழிகள் கொண்டு  எம்பெருமான் பெருமையை பேசு"
என்று நம்மை நிதானிக்கிறார் தொண்டரடிபொடி ஆழ்வார்..

மேலும்,
மற்ற மதங்கள் "மனிதர்களால் உருவானவை"...
அவர்கள் உருவாக்கி வழிபடும் தெய்வத்தை,
"உருவாக்கிய மனிதர்களே", கடுமையான பிரச்சாரம் மூலமாகவும், மிரட்டியும், தன் தெய்வத்தை மக்கள் மத்தியில் நிலை நாட்ட முயல்கின்றனர்...
இது போன்ற மதங்கள் பல ஆயிரம் உருவாகி, கால வெள்ளத்தில் அழிந்து விட்டன...

காலம் கணக்கிட முடியாத படி ("சனாதன" என்று சமஸ்கரித சொல்) என்றுமே இருப்பது, சப்த ப்ரம்மாகிய வேதம்..
சப்தத்திலேயே கலந்து இருக்கிறது வேதம்..
அதனால் தான், வேதத்துக்கே "சப்த பிரம்மம்" என்று பெயர்.

வேதத்தை அறிந்து கொண்டு தான் ப்ரம்ம தேவனே,
"ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம்" என்று வரிசையாக படைத்தார்..
உலக ஸ்ருஷ்டி ஆரம்பித்தார்..
"ப்ரம்ம தேவனையும் படைத்து, அவருக்கு வேதத்தையும் சொல்லி கொடுத்தவர்" பரவாசுதேவன் நாராயணன் என்று நம் ஹிந்து தர்மம், பரமாத்மா பரவாசுதேவன் ஆரம்பித்து, உலக சிருஷ்டியை சொல்கிறது...
வேதத்தில் சொல்லப்படும் அனைத்து தெய்வங்களும் நிஜமானவை.
அனைத்து தெய்வங்களுமே நம்மை விட அதிபலசாலிகள்.. நம்மை விட உயர்ந்தவர்கள்.. செய்த புண்ணியங்களால் தேவ பதவிகளை பெற்றவர்கள்..

ப்ரம்மா உட்பட அனைத்து தேவர்களுக்கும், சர்வேஸ்வரன் "பரவாசுதேவன் நாராயணன்".
இதனால் தான்,
மற்ற மதங்களை போல, நம் சனாதன தர்மம் எந்த நிலையிலும் அழியாமலேயே உள்ளது... அழிக்கவும் இயலாதது..

இதனால் தான்,
1000 வருடங்கள் அரேபியர்கள் நுழைந்து இஸ்லாமிய ராஜ்யமே கடுமையாக இந்த பாரத மண்ணில் நடத்தியும்,
200 வருடங்கள் ஐரோப்பிய கிறிஸ்தவ ஆட்சியே கடுமையாக நடத்தியும், இன்றும் பாரத நாடு ஹிந்துக்களால் நிரம்பி உள்ளது...

அது போதாதென்று, உலகத்தில் இன்று எங்கு சென்றாலும்,
ஹிந்து தர்மத்தில் ஈர்க்கப்பட்டு, ராமரையும், கிருஷ்ணரையும் பக்தி செய்பவர்கள் அதிகரிக்கின்றனர்.
எங்கு சென்றாலும் "ஒரு ஹிந்துவை காணலாம்" என்ற அளவுக்கு உலகம் நிரம்ப இன்று இருப்பதை காண முடிகிறது..

மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களை, மனிதர்களே பிரச்சாரம் செய்து காக்க முயற்சிக்கின்றனர்..
ஆனால்,
நம் சனாதன தர்மம் அசைக்கப்படும் போது, தெய்வங்களே தன்னை அவதரித்து கொண்டு காக்கிறது..
இதற்கு அத்தாட்சியே,
1200 வருட அந்நிய ஆதிக்கத்தையும் தாண்டி, இன்றும் ஹிந்து தர்மம் என்று சொல்லப்படும் சனாதன தர்மம் நிற்பதற்கு காரணம்.

சுயமே ஹிந்து தர்மத்தை காக்கும் பொறுப்பை தெய்வங்களே கொண்டுள்ளது நம் தர்மத்தில்..
அப்படி இருக்கும் போது,
'நாம் தெய்வங்களை பற்றி பேசுவதால் தான், எம்பெருமான் நாராயணன் பெருமை, மற்ற தெய்வங்களின் பெருமை உலகில் நிற்கிறது' என்று கர்வபட்டு விட கூடாது...

சுயமே பிரகாசமாக உள்ள சூரியனை, ஒரு அகல் விளக்கு கொண்டு ப்ரகாசப்படுத்தி விட்டதாக,
பௌராணிகர்கள் (ஆன்மீக சொற்பொழிவாளர்கள்) நினைக்க கூடாது... கர்வ பட கூடாது..



ப்ராம்மணன், "சூரியன் உதிக்கும் முன் எழுந்து, ஸ்நானம் செய்து, காயத்ரி மந்திரத்தை தான் ஜபித்ததால் தான், சூரியன் உதிக்கிறார்" என்று நினைத்தால், அது எத்தனை மடத்தனமோ! அத்தனை மூடத்தனம்
"தன் பேச்சால் தான், மக்கள் மனதில் பக்தி நிலைக்கிறது"
என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் நினைப்பதும்..
இந்த கர்வம் கூடவே கூடாது...

ப்ராம்மணன், "காயத்ரி மந்திரம் சொல்லாமல் போனாலும், தேவ தர்ப்பணம் செய்து க்ரஹங்களை, வ்யூஹ மூர்த்தியான பரமாத்மாவை திருப்தி செய்யாமல் போனாலும்"
சூரியன் எப்படியும் "தக தகவென்று உதிக்க" தான் போகிறார்!!

"என்னால் தான் சூரியன் உதிக்கிறார்" என்று நினைக்காமல்,
"தனக்கும் அந்தர்யாமியாக உள்ள, சூரியனுக்கும் அந்தர்யாமியாக உள்ள பரமாத்மாவை, நானும் வழிபட மனித பிறவி கிடைத்ததே"
என்று தனக்கு கிடைத்த பாக்கியத்தை ப்ராம்மணன் நினைத்து பார்த்தால், கர்வம் இல்லாமல் சந்தியா வந்தனம் செய்வான்..
அப்படி கர்வமில்லாமல், ஈஸ்வர பக்தியுடன், சந்தியா வந்தனம் செய்து வாழும் ப்ராம்மணனை, உலகமும் மதிக்குமே...

அது போல,
"நான் பகவானை பற்றி 10 வார்த்தைகள் சொன்னதால் தான், உலகத்தில் பக்தி பிரச்சாரம் ஆகிறது... நாராயணனை எல்லோரும் ஏற்று கொள்கிறார்கள்"
என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் நினைக்க கூடாது...

மாறாக,
"நம்முடைய பிரச்சாரம் தேவையே இல்லை... 
வேதத்தின் நாயகனான எம்பெருமான் அவர் பெருமையாலேயே ப்ரகாசிக்கிறார்.. அத்தகைய பெருமை உடையவர்"
என்றே ஒவ்வொரு ஆன்மீக சொற்பொழிவாளர்களும் நினைக்க வேண்டும்.

"நான் ராமாயண பிரச்சாரம் செய்கிறேன்.. கிருஷ்ணரை பற்றி பிரச்சாரம் செய்கிறேன்..."
என்று தன் அனுபவத்துக்கு தோன்றியபடி,
நாமாக ஒன்றை கற்பனை செய்து கொண்டு,
உலகத்தில் கேட்க தகாத, அருவெறுப்பான சம்பவங்களை சொல்லி,
எம்பெருமானை பற்றி நம் எச்சில் வாயால் பேசினோம் என்றால்,
கேட்கும் ஜனங்கள் ஏளனமாக சிரிக்க போகிறார்களே தவிர,
"ராமாயணம், பாகவதம் கேட்ட பலனாக அவர்களுக்கு தான் பக்தி வந்து விட போகிறதா?... இல்லை சொற்பொழிவு செய்தவருக்கு பக்தி உண்டாக போகிறதா?.."
பகவானை பற்றி பேச அமர்ந்து விட்டு, 
ஏளனமாக, மரியாதை குறைந்த ஈன சொற்களை பயன்படுத்தி பேசும் போது, 
ஆசையாக பகவான் பெருமையை கேட்க வரும் சாதாரண ஜனங்களுக்கு கூட, ரசிக்காதே!!.

"பெருமாளை போய் இப்படி தரம் குறைந்த வார்த்தைகளால் பேசுகிறாயே.. நியாயமா?"
என்று சொற்பொழிவை கேட்பவர்கள் கேள்வி கேட்காததால் தானே, இப்படி தரம் தாழ்ந்த ஆன்மீக சொற்பொழிவுகளும் ஆங்காங்கே நடப்பதை காண்கிறோம்.

"யாரை பற்றி பேசுகிறோம்?"
என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கவனிக்க வேண்டும்...
"ஆழ்வார்கள் எப்படிபட்ட உயர்ந்த பவித்ரமான சொற்களையே பயன்படுத்தி, தன் வாக்கால் பகவானின் பெருமையை தரம் தாழ்த்தி விட கூடாதே என்று பயந்தார்கள்!!"
என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கவனிக்க வேண்டும்...

"நம் சொற்பொழிவினால், நமக்கும் பக்தி உயர வேண்டும்... கேட்பவருக்கும் பக்தி உயர வேண்டுமே"
என்று உயர்ந்த பதங்களை கொண்டே பேச வேண்டும்..

எம்பெருமானை பற்றி நாம் சொல்ல, கேட்பவன் பக்தி உயர்வதை பார்க்க ஆசை பட வேண்டும்..

"ராமரும், கிருஷ்ணரும் நம் தெய்வம், என் பெருமாள், நம் பெருமாள்"
என்று ஹிந்துக்கள் யாவரும் பரம்பரை பரம்பரையாக வளர்ந்து இருக்கிறோம்..

இப்படி வளர்க்கப்பட்ட நாம்,
ஈன சொற்கள் கொண்டு பேசப்படும் இது போன்ற ஆன்மீக சொற்பொழிவை கேட்கும் போது வேதனை படுகிறோம்..

ஹிந்துக்கள் பொதுவாகவே சாத்வீக குணத்துடனேயே இருப்பதால்,
இது போன்ற சொற்பொழிவுகளை அப்போதே திருத்தி கண்டிக்காமல்,
"தன் வரையிலாவது காதில் விழ வேண்டாமே" என்று ஒதுங்கி விடுகின்றனர்...
இது கேட்பவர்களின் குற்றம் அல்ல.. ஆன்மீக சொற்பொழிவாளர்களின் குற்றமே..



ஆன்மீக சொற்பொழி செய்பவர்கள், 
தன் அறிவை காட்டி எம்பெருமான் பெருமையை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை...
"அப்படி பேசினால் தான் கூட்டம் வரும்" என்று நினைப்பதும் தவறு...

"ஆழ்வார்கள்" பாடிய பாசுரங்களை,
அதற்கு விளக்கம் கொடுத்த "பெரியவாச்சான் பிள்ளை. தேசிகர், ராமானுஜர்" போன்ற அவதார புருஷர்கள் பயன்படுத்திய உயர்ந்த சொற்களையே பயன்படுத்தி மக்களுக்கு எளிய தமிழில், 'அவன், இவன்' என்று பகவானை தரம் குறையாமல் பேசி  புரிய வைக்க முடியும்.

நம் எச்சில் வாயால நம் புத்தியை கொண்டு ஏன் எம்பெருமான் பெருமையை குறைக்க வேண்டும்?...

ஆன்மீக சொற்பொழிவாளர்கள்,
ஹிந்துக்களின் பக்தியை உயர்த்த,
தன் பக்தியையும் உயர்த்த,
அவதார புருஷர்கள் பயன்படுத்திய உயர்ந்த சொற்களை கொண்டே பேச வேண்டும்.. மக்கள் மனதில் பக்தியை பெருக்க வேண்டும்..
அப்படி உயர்ந்த சொற்களால் பக்தியை வளர்க்கும் ஆன்மீக பெரியோர்கள் இன்றும் இருக்கிறார்கள். 
அவர்கள் அனைவரையும் ஹிந்துக்களாகிய நாம் கவுரவிக்க வேண்டும். அவர்களை அவர்கள் தர்மத்தில் வாழ முடிந்த உதவிகளை  நாம் செய்ய வேண்டும்.

வாழ்க ஹிந்துக்கள்...
வாழ்க நம் பாரத தேசத்தில் வாழும் அவதார புருஷர்கள்..