Followers

Search Here...

Showing posts with label ரிதகும். Show all posts
Showing posts with label ரிதகும். Show all posts

Monday 26 August 2019

யாருக்கு தெய்வம் தரிசனம் கொடுக்கிறார்? ரிதகும் சத்யம்... என்ற பிரார்த்தனை இதற்கு பதில் சொல்கிறது. உள்அர்த்தம் தெரிந்து கொள்வோமே...

யாருக்கு தெய்வம் தரிசனம் கொடுக்கிறது?

'சத்தியம்' என்றால் "உண்மை" என்று பொருள்.

"சத்தியம்" ஒரு இடத்தில் மட்டும் இருந்தால் போதாது. இரண்டு இடத்தில் இருக்க வேண்டும். 
1. சத்தியம் உள்ளுக்குள்ளும் இருக்க வேண்டும். (அதாவது மனத்திலும் இருக்க வேண்டும்).
2. சத்தியம் வெளியிலும் இருக்க வேண்டும். (அதாவது பேச்சிலும் இருக்க வேண்டும்.)

பகவான் "சத்தியத்துக்கு மட்டும் தான்" கட்டுப்படுகிறார். 

* யாரிடம் உள்ளும் புறமும் சத்தியம் இருக்கிறதோ! அவருக்கு மட்டுமே, தெய்வம் கட்டுப்படுகிறார்.
* யாரிடம் உள்ளும் புறமும் சத்தியம் இருக்கிறதோ! அவருக்கு மட்டுமே, தெய்வம் இருப்பது புரிகிறது. 
* யாரிடம் உள்ளும் புறமும் சத்தியம் இருக்கிறதோ! அவருக்கு மட்டுமே, தெய்வ தரிசனம் கிடைக்கிறது.

உள்ளுக்குள் என்ன நினைக்கிறாமோ, அதையே பேச வேண்டும்.




நாம் "சத்தியத்தில்" இருக்க வேண்டும். இதுவே, தெய்வத்தை பார்க்க முதல் தகுதி

உள்ளும் புறமும் சத்யம் இருந்தால், அதற்கு பெயர் "ஆர்ஜவம்" என்று சமஸ்க்ரிதத்தில் சொல்கிறோம்.

உள்ளுக்குள் "தெய்வநம்பிக்கையுடன்" இருந்து கொண்டு,
வெளி உலகில் "நாத்தீகன் போல பேசுபவனுக்கு"
தெய்வ தரிசனம் கிடைக்கவே கிடைக்காது.

அதேபோல,
உள்ளுக்குள் "நம்பிக்கை இல்லாமல்",
வெளியில் நம்பிக்கை உள்ளவனை போல நடிப்பவனுக்கும்,
தெய்வ தரிசனம் கிடைக்கவே கிடைக்காது.

மனிதன் மனிதனை ஏமாற்றி விடலாம். தெய்வத்தை ஏமாற்ற முடியுமா?

நம் உள்ளுக்குள் இருக்கும் சத்தியத்தை தான், சமஸ்க்ரிதத்தில், "ரிதகும்" என்று சொல்கிறோம்.

இந்த சத்தியம் மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதால் "கிருஷ்ண" என்று சொல்கிறோம்.

நாம் வெளிப்படையாக பேசும் சத்தியத்தை தான், சமஸ்க்ரிதத்தில், "சத்யம்" என்று சொல்கிறோம்.

இந்த சத்தியம் பேசும் போது மற்றவர்களுக்கு தெரிவதால், "பிங்களம்" என்று சொல்கிறோம்.

"உள்ளும் புறமும் நாராயணனே இருக்கிறார்" என்று பார்த்த பிரகலாதனை, ஹிரண்யகசிபு மிரட்டினான்.
வெளியில் இருக்கும் தூணை காட்டி "இதில் நாராயணன் இருக்கிறானா?" என்று கேட்க, 

"என் உள்ளில் இருக்கும் நாராயணன் வெளியிலும் இருக்கிறார்" என்று தன் பிஞ்சு விரலை காட்டி சொல்ல, யாரிடம் சத்தியம் உள்ளும் வெளியும் இருக்கிறதோ, அவனுக்கு கட்டுப்படும் பகவான், பிரகலாதன் காட்டிய தூணிலிருந்து வெளிப்பட்டு விட்டார்.

இதையே இந்த மந்திரம் நமக்கு சொல்கிறது. 
"நீயும் சத்தியமாக இரு. உள்ளும் புறமும் சத்யமாகவே இரு. அப்படி இருந்தால், உனக்கும் தெய்வ அனுக்கிரஹம், தரிசனம் கிடைக்கும்" 
என்று சொல்கிறது இந்த அருமையான மந்திரம்...




சந்தியா வந்தனத்தில் உள்ள அற்புதமான பிரார்த்தனை இதோ:



Rithagum sathyam
para brahma purusham
Krishna pingalam,
Oordhwareytham
viroopaksham
Viswa roopaaya vai nama

பரப்ரம்மத்தையே 
மனதில் நினைத்து (ரிதகும்) கொண்டு,   
வாக்கினாலும் அவரை பற்றியே பேசி (சத்யம்) கொண்டு  நீ வாழ ஆரம்பித்தால்,
தன்னை மறைத்து (கிருஷ்ண) கொண்டு இருக்கும் பரப்ரம்மம், தன்னை வெளிக்காட்டி (பிங்களம்) தரிசனம் தந்து விடுகிறார்.
உள்ளும் புறமும் உண்மையுடன் பரப்ரம்மத்தையே தியானிக்கும் அப்படிப்பட்ட யோகிகள், உலகையே தாங்கும் (விரூபாக்ஷ) பரவாசுதேவனை,
தங்கள் யோக பலத்தால், நெற்றியில் (ஊர்த்வரேதம்) தரிசித்து நமஸ்கரிக்கிறார்கள்.
இங்கு புருஷம் என்ற சொல்லை கொண்டு பரப்ரம்மத்தை குறிக்கும் போது, யார் அந்த புருஷன்? என்ற கேள்விக்கு வேதமே பதில் சொல்கிறது..
தெரிந்து கொள்ள இங்கு படிக்கவும்.

"ரிதகும் சத்யம் பரப்ரம்ம புருஷம்..." என்ற பிரார்த்தனையை நாம் தினமும் செய்யும் போது,
"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல், எண்ணமும், பேச்சும் ஒன்றாக, சத்யத்தில் இருந்தால், நமக்கும் தெய்வம் தரிசனம் தருவார்"
என்று ஞாபகப்படுத்தும் பிரார்த்தனை இது.

பகவான் அனைவருக்கும் தன் தரிசனத்தை காட்டி கொள்ள பிரியப்படுவதில்லை.


நாராயணன் மட்டுமல்ல, பொதுவாக தேவர்கள் கூட, மனிதர்கள் கண்களுக்கு தெரியாமல், மறைந்து இருப்பதில் தான் பிரியப்படுகின்றனர்.

சில மதங்களில் "இறைவன் அரூபமாகவே இருக்கிறார். ஒரு பொழுதும் உருவம் ஏற்க மாட்டார்" என்று இறைவனை பற்றி நினைக்கிறார்கள்.

"எல்லாம் வல்ல இறைவனுக்கு, உருவம் ஏற்க முடியாது" என்று தெய்வத்தின் பெருமையை குறைத்து சொல்வதை ஹிந்து தர்மம் ஏற்பதில்லை.
"எல்லாம் வல்லவனுக்கு, ஏதுவும் முடியும்" என்று சொல்வதே ஹிந்து தர்மம்.

உலகில் உள்ள 'நம்மை போன்றவர்களுக்கு மட்டும் தான் பெருமாளின் தரிசனம் எளிதில் கிடைப்பதில்லை' என்று நாம் நினைத்து விட கூடாது...

மேல் லோகமான சொர்க்கத்தில் உள்ள தேவர்களுக்கு கூட அவ்வளவு எளிதில் பகவான் தரிசனம் தருவதில்லை.

"ஹிரண்யாகஷன், ராவணன், கம்சன்" போன்ற அசுரர்கள், ராக்ஷசர்கள் தேவர்களை துன்புறுத்திய போது,
பாற்கடல் சென்று பார்த்தும், மஹா விஷ்ணு தேவர்களுக்கு தரிசனம் தரவில்லை.
ப்ரம்ம தேவனிடம் சென்று தன் கஷ்டங்களை சொல்ல,
பிரம்மாவிடம் மட்டும்,
'தான் அவதாரம் செய்து தேவர்களுக்கு அபயம் தருவேன்'
என்று சொல்லி விட்டார் பரவாசுதேவன் நாராயணன்.
'நாம் செய்யும் அனைத்து  பிரார்த்தனைகளுக்கும் கட்டாயம் பலன் தந்து விடுவார்' நாராயணன்.


புத்ர பாக்கியம் வேண்டும்,
எதிரி அழிய வேண்டும், 
கல்யாணம் நடக்க வேண்டும்,
வேலை கிடைக்க வேண்டும்,
என்று நாம் செய்யும் எந்த  பிரார்த்தனைக்கும்
மறைந்து (கிருஷ்ணனாக) இருந்தே பலன் கொடுத்து விடுகிறார் நாராயணன்.

அர்ச்சா அவதாரத்தில் தரிசனம் தரும் பகவான், நேரிடையாக தன்  வ்யூஹ தரிசனம் தருவதில்லை.
வ்யூஹ "தரிசனம்" மட்டும் அத்தனை எளிதில் தருவதில்லை.
தன் தரிசனத்தை 'வெளிப்படையாக' (பிங்களம்) காட்டுவதற்கு, 
பகவான் நம்மிடம் முக்கியமான ஒன்றை எதிர்பார்க்கிறார்.

"நம் எண்ணமும் (ரிதகும்), செயலும் (சத்யம்) 
ஒன்றாக இருக்கிறதா? என்னை பார்க்க வேண்டும் என்று உண்மையில் நினைக்கிறானா? விரோதமாக இருக்கிறதா?"
என்று பார்க்கிறார் பகவான்.
"சார், உங்களை தான் நம்பி இருக்கேன்" என்று பெரிய வேலையில் இருக்கும் மனிதனை பார்த்து ஒருவன் சொல்கிறான்.

"இவன் உண்மையிலேயே மனதில் இப்படி தான் நினைக்கிறானா?" என்று அறிந்து கொள்ள முடியாத அவர், அவன் தேன் ஒழுக பேசும் பேச்சை நம்பி விடுகிறார்.

உலகில் பெரும்பாலான மக்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களாக தான் உள்ளனர்.


"உண்மையில் மனதுக்குள் என்ன நினைக்கிறான்?" என்று கண்டுபிடிக்க முடியாததால், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அழகான பேச்சினால் ஏமாற்றி விடுகிறான்.
ஆனால்,
இதயத்தின் எண்ணங்களையும் கவனிக்கும், பரமாத்மாவை ஏமாற்ற முடியுமா?

"நாராயணனே கதி",
"நமோ நாராயணா" என்று சொன்னாலும்,
"எனக்கு கடவுளை காட்டு" என்று பிடிவாதம் செய்தாலும்,
பகவான் கேட்பவனின் வாக்கை (சத்யம்) மட்டும் கவனிப்பதில்லை, அவன் நெஞ்சில் உள்ள எண்ணத்தையும் (ரிதகும்) கவனிக்கிறார்.

திருப்பதி ஏழுமலையானை பார்த்து "நாராயணா... என்னை காப்பாற்று" என்று சொல்லி விட்டு,
இன்னொரு கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் தெய்வத்தையும் பார்த்து "நீயே கதி... என்னை காப்பாற்று" என்று சொல்லும்,
திட விசுவாசம் இல்லாதவர்கள் தான்உலகில் அதிகம் காணப்படுகின்றனர்.

"ஒரே தெய்வம்", அவரிடம் மட்டுமே "சரணாகதி" என்று செய்பவனே உண்மையான பக்தன்.
ஹனுமான் "ஸ்ரீ ராமரே கதி" என்று இருந்தார், இருக்கிறார்..
அவருக்கு சிவபெருமான், இந்திரன் போன்றவர்கள் மீது வெறுப்பு கிடையாது.. அவர்களுக்கான மரியாதை செய்வார்...
ஆனால்,
"சரணாகதி" என்று வரும் போது,
"என் தெய்வம்" என்று வரும் போது,
ஸ்ரீ ராமரை தவிர, வேறு யாருக்கும் அவர் மனதில் இடம் கிடையாது..


சிவபெருமானுக்கு மரியாதை தருவார், ஆனால் மனதில் இடம் கிடையாது என்பதில் ஆச்சரியமில்லை...
நாராயணனே ஸ்ரீ ராமராக வந்தார். 
நாராயணனே பிறகு ஸ்ரீ கிருஷ்ணராகவும் வந்தார்.
கிருஷ்ணருக்கும் பெருமாள் என்ற மரியாதை உண்டே தவிர, அவரிடம் கூட சரணாகதி செய்ய மாட்டேன் என்று இருந்தார் ஹனுமான்.
அத்தகைய சரணாகதியே உண்மையானது, சுத்தமானது...

"உள்ளும் (ரிதகும்), புறமும் (சத்யம்), ராமரே கதி" என்று இருக்கும் ஹனுமான் போன்ற பக்தர்களுக்கு, ஸ்ரீ ராமர் ப்ரத்யக்ஷம் ஆகி காட்சி தருகிறார்.
  • விதண்டாவாதிக்கும்,
  • 'இந்த தெய்வத்தையும் கும்பிடுவோம்' எதற்கும் 'அந்த தெய்வத்தையும் கும்பிடுவோம்' என்று அலைபவர்களுக்கும்,
  • வேறு பலன்களுக்கு ஆசைப்பட்டு பிரார்த்திப்பவனுக்கும்,

     பலன்களை தரும் பகவான், தன் தரிசனத்தை தருவதில்லை.
எந்த மகாத்மாவுக்கு, எண்ணத்திலும், வாக்கிலும் நாராயணனே நிரம்பி உள்ளாரோ, அத்தகைய மகாத்மாவுக்கு மறைந்து (கிருஷ்ண) இருக்கும் பரமாத்மா, தன் தரிசனத்தை வெளிக்காட்டுகிறார் (பிங்களம்).

நாராயணனிடம் பக்தி இல்லாமல் போனாலும், நாம் செய்யும் செயல்கள் உள்ளும் புறமும் ஒன்றாக இருந்தால், நம்மை கண்டு பரமாத்மா நாராயணன் சந்தோஷப்பட்டு, தன் மீது பக்தி ஏற்பட செய்து, தன் தரிசனத்தையும் கொடுத்து விடுவார்.

"சத்யமே" வடிவான பெருமாள், நம்மிடம் எதிர்பார்ப்பதும் "சத்யமே"..

உள்ளும் புறமும் சத்யமாக இருப்பவர்கள், இறை தரிசனம் பெறுகிறார்கள்.

"தசரதர்" அத்தகைய ஒரு மகாத்மா என்று பார்க்கிறோம்.
எந்த நிலையிலும், சத்தியம் மீறாதவர் தசரதர்.
தேவர்களுக்கு சார்பாக போர் செய்த போது, தசரதரின் தேரோட்டி அடிபட்டு விட, தக்க சமயத்தில் கைகேயி தேர் ஒட்டி உதவினாள்.
இவளுக்கு 2 வரங்களை கொடுப்போம் என்று எண்ணினார்.
"என்ன கேட்டாலும் தருகிறேன்" என்று சத்தியம் செய்தும் கொடுத்து விட்டார்.

எண்ணமும், செயலும் மாறுபடாத தசரதரிடம், மகன் ராமனை 14 வருடம் காட்டுக்கு செல்லுமாறு வரமாக கேட்டு விட்டாள் கைகேயி..
"ராமரை விட்டு பிரிந்தால், உயிரே பிரிந்து விடும்" என்று தெரிந்தாலும், உள்ளும் (ரிதகும்), புறமும் (சத்யம்) சத்தியத்துக்காக வாழும் தசரதர், கைகேயி கேட்ட வரத்தை கொடுத்தார்.
சத்தியத்துக்காக உயிரையே கொடுத்தார் தசரதர்.

தாய் தந்தை அற்ற பரமாத்மா, தனக்கு ஒரு தந்தை வேண்டுமே!! என்று தேடி கண்டுபிடித்த உத்தமர் அல்லவா தசரதர்.

எண்ணத்திலும், செயலிலும் சத்தியத்துக்காக வாழும் தசரதரை தன் தந்தையாக ஏற்றார் பரமாத்மா.
தசரதர் பெருமை மகத்தானது!!


அதே போல, மற்றொரு உத்தமர் "வசுதேவர்".
தன் தங்கை தேவகியின் 8வது குழந்தை, தன் மரணத்துக்கு காரணம் ஆகும் என்ற அசரீரி கேட்டதும்,
வெளியில் தன் தங்கைக்காக தானே ரதம் ஓட்டி வருவது போல நடித்த கம்சன், தன் உயிருக்கு இவள் மூலம் ஆபத்து என்று தெரிந்தவுடன் வாளை தூக்கி வெட்ட வந்தான்.
அன்று தான் தாலி கட்டி மனைவியாக ஏற்று கொண்டிருந்தார் வசுதேவர்.
தன் மனைவி என்ற உறவு இருப்பதால், கம்சன் காலில் விழுந்து, மன்றாடினார்.

"அசரீரி சொன்னது நடக்குமோ, நடக்காதோ என்று கூட தெரியாத பட்சத்தில் தங்கையை வெட்ட வேண்டாம்" என்று கெஞ்சினார்.

"தன் சுகமே முக்கியம்" என்ற அசுர குணம் கொண்ட கம்சனுக்கு, வசுதேவர் சொன்ன எதுவும் காதில் விழவில்லை.

தேவகியை எப்படியாவது அந்த சமயத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த வசுதேவர், தனக்கு பிறக்கும் குழந்தைகளை கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல, சமாதானம் அடைந்தான் கம்சன்.

இருந்தாலும் நம்பிக்கை இல்லாததால், கல்யாணம் ஆன அன்றே இருவரையும் ஜெயிலில் தள்ளி சிறைப்படுத்தி விட்டான்.
"பிறக்கும் குழந்தைகளை கொடுத்து விடுகிறேன்" என்று எண்ணத்தில் தோன்றி, வாக்கு கொடுத்து விட்ட வசுதேவர், தனக்கு பிறந்த முதல் குழந்தையை நேராக கம்சனிடம் கொடுக்க,
சிறிதும் யோசிக்காமல், தன் மருமகன் என்ற பாசம் கூட இல்லாமல், அங்கு இருந்த கருங்கல்லில் குழந்தையை அடித்து கொன்று விட்டான்.


இது போன்று 6 குழந்தைகள் தேவகி பெற, கம்சன் கொன்று விடுவான் என்று தெரிந்தும், வசுதேவர் தன் குழந்தைகளை சத்தியத்துக்காக கம்சனிடம் கொடுத்தார்.
மனதால் கொடுத்த வாக்குக்காக, தன் குழந்தையை தியாகம் செய்ய துணிந்த வசுதேவருக்கு, மகனாக பரமாத்மா வர ஆசைப்பட்டதில் ஆச்சரியமில்லையே...

எண்ணமும், வாக்கும் ஒன்றாக இருக்கும் போது, பரமாத்மாவின் தரிசனம் நிச்சயமாகிறது.

தெய்வ தரிசனம் பெற்ற மகான்கள் இன்றும் இந்த பாரத நாட்டில் உள்ளனர்.
கோடியில் ஒருவர் மட்டுமே, மனதில் நினைப்பதையே செயலிலும் காட்டுகின்றனர்.
அத்தகைய மகான்களுக்கு தெய்வ தரிசனம் கிட்டுகிறது.

வாழ்க ஹிந்துக்கள்.

ஹிந்து தர்மத்தில் இல்லாத விஷயங்கள் பிற போலி மதங்களில் இல்லை.

பிற மதங்களை "மனிதர்கள்" முயற்சி செய்து காக்கின்றனர்.
1000 வருடங்கள் வெளி மதங்கள் உள்ளே புகுந்து ஆள நினைத்தாலும், ஹிந்து தர்மத்தை "தெய்வங்களே அவதாரம்" செய்து காக்கின்றனர்.

ஹிந்துவாக வாழ்வதே நமக்கு பெருமை.




Afternoon Sandhya Vandanam: 

Morning Sandhya Vandanam: 



Evening Sandhya Vandanam