Followers

Search Here...

Showing posts with label தமிழ் மறை. Show all posts
Showing posts with label தமிழ் மறை. Show all posts

Wednesday 13 November 2019

4000 திவ்ய பிரபந்தத்தில் வேதம் எப்படி அடங்கியது? எந்த காரணத்தால் இப்படி சொன்னார்கள்? தமிழ் மொழியில் சொல்லப்பட்ட 4000த்தை "தமிழ் மறை" என்று ஏன் சொன்னார்கள்?

"பரமாத்மாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற ஆசையுள்ள நமக்கு, வள்ளலாக வந்தார்கள் "ஆழ்வார்கள்"..

கடல் போன்றது "வேதம்'..




வேதம், "பகவானை பற்றி மட்டும் சொல்லவில்லை, உபதேவதைகள் பற்றியும், உலக ஸ்ருஷ்டி ஆரம்பித்து, உலகத்தில் அர்த்தங்களை பெறுவதற்கான அனைத்து கலைகளையும் பற்றி சொல்கிறது..."


"4 வேதங்கள் மட்டும் வேதத்தில் அடக்கம்" என்று நினைத்து விட கூடாது...

"அர்த்தங்களை (wealth) பெறுவதற்கு பல விஷயங்களையும் சொல்கிறது" வேதம்...

  • ஆயுர்வேதம் (medicine)
  • ஸ்தாபத்யம் (engineering)
  • காந்தர்வ வேதம் (music)
  • தனுர் வேதம்(army)
  • சிக்ஷை (expert in phonetics, phonology, pronunciation)
  • கல்பம் (expert in knowing  procedures for Vedic rituals and rituals associated with major life events such as birth, wedding and death in family, as well as discussing the personal conduct and proper duties of an individual in different stages of his life)
  • வியாகரணம் (expert in grammers and linguistic analysis)
  • நிருக்தம் (expert interpretation of words and to help establish the proper meaning of the words)
  • சந்தஸ் (expert in poetic metres)
  • ஜோதிஸம் (expert in knowing Auspicious time for rituals and expert in astrology and astronomy.)
  • ஸ்ம்ருதி,
  • இதிகாசம் (knowledge about history),
  • புராணம் (knowledge about very old history) இவைகளும்,
  • காவியம்,
  • நாடகம்,
  • அலங்காரம்
  • யோகம் (expert in meditation, contemplation and liberation)
  • ஸாங்க்யம் (Expert in consciousness and matter)
  • நியாயம் (Expert in exploring sources of knowledge)
  • சௌகதம்
  • ஆர்ஹதம்
  • மீமாம்ஸா (expert in correct conduct, both ethical and liturgical)
  • பாசுபதம்
  • பாஞ்சராத்ரம் (expert in Agama rules and guiding five observances every day to lord narayana)

என்று பல வேதத்தில் அடக்கம்.

"கடல் போன்ற வேதத்தை ஒருவன் முழுமையாக படித்து, உபதேவதைகள், அர்த்தங்களை (wealth) பற்றி சொல்லும் வேத பாகங்களை தள்ளி விட்டு, குறிப்பாக பரமாத்மாவை பற்றி வேதம் என்ன சொல்கிறது?" என்று தெரிந்து கொள்வதற்கு கலியுகத்தில் நமக்கு ஆயுசு போதாது....

"பரமாத்மாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற ஆசையுள்ள நமக்கு, வள்ளலாக வந்தார்கள் "ஆழ்வார்கள்"..
ஆழ்வார்கள், "வேதத்தின் சாரத்தை, இதிகாச, புராணங்களின் சாரத்தை (essence) நமக்கு 4000 திவ்ய பிரபந்தமாக கொடுத்து விட்டார்கள்."

பகவானை பற்றி அறிய, 'வேதம் முழுவதையும் படிக்க முடியாத நமக்கு, பகவானை பற்றி வேதம் சொல்லும் விஷயத்தை' அப்படியே தமிழில், கொடுத்து விட்டார்கள் ஆழ்வார்கள்.

வேதம் என்ற "பழத்தை" பிழிந்து,
அர்த்தவாதங்கள் சொல்லும் வேத மந்திரங்களை "சக்கை" என்று தள்ளி விட்டு,
பரமாத்மாவை பற்றி மட்டுமே சொல்லும் வேத மந்திரங்களை "சாறு" போல எடுத்து,
4000 திவ்ய ப்ரபந்தமாக "தமிழில்"  நமக்கு சிரமப்படாமல் அருந்தி சுவைப்பதற்கு கொடுத்து விட்டார்கள் ஆழ்வார்கள்.
"பகவானை பற்றி அறிந்து கொள்ள, 
வேதம் முழுக்க படிக்க அவசியமில்லை, 4000 திவ்ய பிரபந்தங்களே போதும்"
என்ற அளவுக்கு தமிழ் மக்களுக்கு பெரும் நிதியாக கொடுத்து விட்டார்களே ஆழ்வார்கள்..

"4000 திவ்ய ப்ரபந்தம் புரிந்து கொண்டால், பகவானை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த ரகசியம் தெரிந்த தமிழன் திவ்ய ப்ரபந்ததை விடுவானா?.. "




பிரபந்தங்கள் தமிழனின் பொக்கிஷமாயிற்றே... தமிழ் மொழியாயிற்றே..

வேதம் "கடல் போன்றது" என்று எடுத்துக்காட்டாக சொல்வதற்கு காரணம் உண்டு..

கடல் தண்ணீரில் "உப்பு" கலந்து இருக்கும்..
பல ஜீவராசிகள் அதை சார்ந்து இருக்கிறது...
மனிதர்களாகிய நமக்கோ, கடல் முழுக்க நீர் இருந்தாலும், அதில் ஒரு சொட்டு நீர் கூட தாகத்தை தணிக்காது...
மனிதனும் நீரை நம்பி தான் வாழ்கிறான்.




மனிதனுக்கு நீர் கொடுப்பதற்காக அந்த கடலின் மேல், மேகங்கள் சென்று, அது தன் சாமர்த்தியத்தால், கடலில் உள்ள உப்பை மட்டும் விலக்கி விட்டு, நல்ல தண்ணீரை மட்டும் உறிஞ்சிக்கொள்கிறது...

கர்ப்பம் தரித்த பெண் போல, கார்மேகமாக நகர்ந்து நகர்ந்து, நம் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் வந்து, அம்ருதம் போன்ற மழையை பொழிந்து நம் தாகத்தை தீர்த்து விடுகிறது...
கடல் நீரில் (வேதம்) உள்ள
உப்பை (அர்த்தவாதங்களை) விலக்கி,
சுவையான நீரை மட்டும் (பகவானை பற்றி மட்டுமே)  எடுக்க தெரிந்த மேகங்கள் போல நமக்கு 'ஆழ்வார்கள்' கிடைத்தார்கள்.

வேதத்தில், சாரம் இல்லாத  சாஸ்திரங்களை விலக்கி, சாரத்தை மட்டும் எடுக்கும் சக்தி நமக்கு கிடையாது..

எம்பெருமான் அருள் பெற்ற, அருள் பெற்றதால் ஞானத்தை அடைந்த
ஆழ்வார்கள்,
12 கருமேகங்களாக நம் தமிழகத்தில் உதித்து,
வேத நாயகனான நாராயணனின் பரத்துவத்தை, குணங்களை சொல்லும் வேத பாகங்களை, "மேகம்" சுத்தமான நீரை மட்டும் உறிஞ்சுவது போல உறிஞ்சி,
நம்மை போன்ற சாமானிய ஜனங்களும் "கோவிந்தனின் நாமத்தை, அவர் மகிமையை, அவர் குணங்களை, அவர் கருணையை அறிந்து கொள்ளும்" படியாக,
"4000 திவ்ய ப்ரபந்தங்கள்" என்ற அம்ருத மழையாக பொழிந்து விட்டனர்..

அதனால்,

  1. பெரியாழ்வார் அருளிய "திருப்பல்லாண்டு, திருமொழி"
  2. ஆண்டாள் அருளிய "திருப்பாவை, நாச்சியார் திருமொழி"
  3. குலசேகராழ்வார் அருளிய "பெருமாள் திருமொழி"
  4. திருமழிசையாழ்வார் அருளிய "திருச்சந்தவிருத்தம்", "நான்முகன் திருவந்தாதி"
  5. தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய "திருமாலை, திருப்பள்ளி எழுச்சி"
  6. திருப்பாணாழ்வார் அருளிய "அமலனாதிபிரான்"
  7. மதுரகவியாழ்வார் அருளிய "கண்ணிநுண்சிறுத்தாம்பு"
  8. திருமங்கையாழ்வார் அருளிய "பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்"
  9. பொய்கை ஆழ்வார் அருளிய "முதல் திருவந்தாதி"
  10. பூதத்தாழ்வார் அருளிய "இரண்டாம் திருவந்தாதி"
  11. பேயாழ்வார் அருளிய "மூன்றாம் திருவந்தாதி"
  12. நம்மாழ்வார் அருளிய "திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி"
    திருவரங்கத்தமுதனார் அருளிய "இராமானுச நூற்றந்தாதி"

ஆகிய 4000த்தில் சொல்லப்பட்டு இருக்கும் அனைத்தும், வேதத்தின் சாரமான "பரமாத்மாவின் குணங்களையே, தத்துவத்தையே பேசுகிறது"...

சர்வ சாஸ்திரங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது.
நம்மாழ்வார் "ரிக், யஜுர், சாம, அதர்வண" ஆகிய 4 வேதங்களின் சாரத்தை பிழிந்து,
"திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி" என்ற "தமிழ் மறை"களாக நமக்கு கொடுத்தார்.

திருமங்கையாழ்வார், "சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஸம்" ஆகிய 6 சாஸ்திரங்களின் சாரமாக,
"பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்" என்ற "தமிழ் சாஸ்திரங்களாக" நமக்கு கொடுத்தார்.




ஆறு சாஸ்திரத்தின் சாரமும், பெரிய திருமொழியில் இருப்பதை நாம் காணலாம். 
திவ்ய தேசம் பற்றி சொல்லும் போது, அந்த திவ்ய தேசத்தில் உள்ள வீதிகளை வர்ணிக்கும் போதே, தான் கற்ற சாஸ்திர ஞானத்தை பிரபந்தத்தில் காட்டி விடுகிறார்.
நாம் உலக விஷயமான சாஸ்திரங்களை கற்றாலும், அதன் மூலமாகவும் நமக்கு மேலும் பகவத் பக்தி ஏற்பட செயது கொள்ள வேண்டும் என்று காட்டுகிறார் திருமங்கையாழ்வார்.

தான் கற்ற 6 சாஸ்திரங்களையும் திருமங்கையாழ்வார், உலக விஷயங்களுக்கு பயன்படுத்தாமல், எம்பெருமானுக்கே பயன்படுத்தினார்.

உலக சாஸ்திரங்களை கற்றாலும், அதன் மூலம் பகவத் பக்தியை உயர்த்தி கொள்ளவே நாம் முயற்சிக்க வேண்டும் என்று காட்டுகிறார்.. திருமங்கையாழ்வார்.

அது போல, 2 இதிகாசங்கள், புராணங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது..

ஸ்ரீ ராமாயணத்தை ராமபிரானை பற்றி அறிய, குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழியே போதுமானது...
வால்மீகி ராமாயணத்தின் சாரமாக, நமக்கு ராமபிரானின் குணத்தை நமக்கு காட்டுகிறார்..

"பாகவதம்" போன்ற சாத்வீக புராணங்களின் சாரமாக, பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் நாச்சியார் போன்றவர்கள் அருளிய பிரபந்தங்களே நமக்கு பகவத் பக்தி அனுபவத்தை கொடுத்து விடுகிறது..

"விஷ்ணு தர்மத்தை" அறிய, தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய திருமாலை, திருப்பள்ளி எழுச்சி போன்றவைகளே அந்த சாரத்தை நமக்கு தந்து விடுகிறது..

இப்படி "மோக்ஷத்துக்கு வழி சொல்லும் புராணங்கள், இதிகாசங்கள், சாஸ்திரங்கள், 4 வேதம் உட்பட அனைத்தும்" 4000 திவ்ய பிரபந்தத்தில் அடங்கி விடுகிறது..

தமிழர்களுக்கு "பொக்கிஷம்" அல்லவா திவ்ய பிரபந்தங்கள்..
அர்த்தங்கள் பொதிந்த, பக்தியை தரக்கூடிய, 'தமிழ் மறை' அல்லவா திவ்ய பிரபந்தங்கள்..

4 வேதங்களையும், புராணங்களையும், சாஸ்திரங்களையும் முழுவதாக படித்து இருந்தவர்களால் தானே, இவையெல்லாம் 4000த்தில் அடங்கி இருப்பதாக சொல்லி இருக்க முடியும்!!..

4000த்தில் இவையாவும் அடங்கி உள்ளது!! என்று சொன்னவர்கள் யார்? என்றும் நாம் கவனிக்க வேண்டாமா?

சர்வ சாஸ்திரங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது என்று  யார் சொன்னார்கள்? 
என்று கவனிக்கும் போது தான், திவ்ய பிரபந்தத்தின் பெருமை நமக்கு புரியும்..

சம்ஸ்க்ரிதம் தெரியாதவன், இதையாவது தெரிந்துகொள்ளட்டும் என்று கொடுக்கப்பட்ட சாதாரண புத்தகம் இல்லையே, 4000 பிரபந்தங்கள்...
வெறுமனே தமிழ் கற்று கொள்வதற்காக, ஏற்பட்ட நூல் இல்லையே 4000 பிரபந்தங்கள்...
சர்வ சாஸ்திரமும், வேதமும், புராணங்கள், இதிகாசங்கள் உட்பட அனைத்தும் கரைகண்ட,
பெரியவாச்சான் பிள்ளை, தேசிகர், ராமானுஜர் போன்ற ஆச்சாரியர்கள் வாக்கியத்தால் நமக்கு 4000த்தின் பெருமை தெரிகிறது..

சர்வ சாஸ்திரமும் கரை கண்ட பெரியவாச்சான் பிள்ளை, போன்ற மகான்கள், கடைசியாக '4000த்தை கையில் எடுக்கும் போது, அதில் உள்ள பிரபந்தங்களோடு வேத சாஸ்திரங்களை, புராண, இதிஹாசங்களை காட்டி விளக்கம் கொடுக்கும் போது, நமக்கு 4000த்தின் பெருமை தெரிகிறது..'

தேசிகர் போன்று சாஸ்திரத்தில் கரை கண்டவர் கிடையாது...
அவர் சம காலத்தில் சிம்மமாக இருந்த மகா பண்டிதர்கள் எல்லாம், இவர் வித்வத்தை பார்த்து பெருமதிப்பு கொண்டிருந்தனர்..

சர்வ சாஸ்திரமும் அறிந்த தேசிகர், கடைசியில் 4000த்தை கையில் எடுத்து வாசிக்க வாசிக்க, "தெளியாத மறை நிலமெல்லாம் தெளிகிறது" என்று சொல்கிறார்..

யார் இப்படி சொல்கிறார்? என்பதை கவனிக்க வேண்டும்..
"தான் கற்ற வேதங்களில், புரியாத சில வாக்கியங்கள், 4000 திவ்ய பிரபந்தத்தை படிப்பதால், புரிந்து விடுகிறது என்று யார் சொல்கிறார்? என்று பார்க்க வேண்டும்..
அப்பொழுது தான், நமக்கு 4000த்தின் மகத்துவம் புரியும்.

"தான் வேத சாஸ்திரம் படித்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள இயலாத இடங்களை கூட 4000 திவ்ய பிரபந்தத்தில் பார்க்கிறேன்" என்று சொல்கிறார் தேசிகர்..

அற்புதமான திவ்ய பிரபந்தத்தை, தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்..

இதன் உண்மையான ஆழ்ந்த அர்த்தங்களை, ஞானத்தில் உயர்ந்த, பரமாத்மாவிடம் திட பக்தி உள்ள, மகான்களிடம் கேட்டு மனதில் உள்வாங்கி, அனுபவிக்க வேண்டும்..  




திவ்ய பிரபந்தங்களே நமக்கு பரமாத்மாவை பற்றிய ஞானத்தை, பக்தியை தரும்.
தமிழனாக பிறந்ததற்கு பெருமை படுவோம்.

வாழ்க 4000 திவ்ய பிரபந்தம்.
வாழ்க ஆழ்வார்கள்.   வாழ்க நாயன்மார்கள். 
வாழ்க நம் பாரத மண்ணில் உதிக்கும் மகான்கள்.