Followers

Search Here...

Showing posts with label காலத்துக்கு. Show all posts
Showing posts with label காலத்துக்கு. Show all posts

Wednesday 22 May 2019

காலத்துக்கு மனிதன் கட்டுப்படுகிறான். கடவுள் காலத்துக்கு கட்டுப்படுகிறாரா? தெரிந்து கொள்வோமே..

எதுவுமே காலத்துக்கு கட்டுபட்டு தான் நடக்கிறது..
இயற்கையும் காலத்துக்கு அனுசரித்து தான் நடக்கிறது.
சூரியன் உதிப்பதும், மறைவதும் காலத்துக்கு கட்டுபட்டு தான் நடக்கிறது..


வசந்த காலம், மார்கழி காலம் என்று அந்தந்த மாற்றங்கள், காலத்துக்கு கட்டுப்பட்டு தான் இயற்கையே செயல் படுகிறது

மனிதன் கூட காலத்துக்கு கட்டுப்பட்டு தான் இருக்கிறான்.
எத்தனை அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டாலும் 100 வயதுக்கு மேல் மனித ஆயுளை உயர்த்த முடியவில்லை. இளமையோடு வயதாகாமல் இருக்க செய்ய முடியவில்லை.
மனிதனுக்கு இத்தனை ஆயுள் காலம் தான்,
எறும்புக்கு இத்தனை ஆயுள் காலம் தான்,
யானைக்கு இத்தனை ஆயுள் காலம் தான்,
என்று அனைத்து உயிர்களுக்கும் கால நிர்ணயம் உள்ளது.
எத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும் காலத்திற்கு கட்டுப்பட்டு இறந்து தான் ஆக வேண்டும்.



உயிர்கள் மட்டுமல்ல, அற்புதமான பெரிய கார் தயாரித்தாலும், உணவுகள் தயாரித்தாலும் அனைத்துக்கும் கால வரம்பு உண்டு. Expiry Date உண்டு.

காலத்துக்கு கட்டுப்பட்டு தான், அனைத்துமே இயங்குகிறது என்று சாதாரண அறிவுள்ளவன் கூட புரிந்து கொள்கிறான்.

முப்பத்து முக்கோடி தேவர்கள், ப்ரம்ம தேவன், ரிஷிகள் என்று நம்மை விட உயர்ந்த, சக்தியுடைய இவர்களையும் இந்த காலம் கட்டுப்படுத்துகிறது.
இவர்கள் அனைவருக்கும் கூட காலம் உண்டு. அழிவு உண்டு.


யாரையும் கட்டுப்படுத்தும் இந்த கால சக்கரத்தை இயக்குபவர் யார்? 
காலம் சுதந்திரமானதா, இல்லை காலத்தையும் கட்டுப்படுத்தும் ஈஸ்வரன் உண்டா? என்று கேள்வி எழுகிறது.
இந்த கால சக்கரத்தையும் கட்டுப்படுத்த வல்லவர்,
காலத்தை தன் ஆளுமையில் வைத்து இருப்பவர்,
இந்த கால சக்கரத்தை வைத்து உலகையே ஒரு கதியில் சுழல வைப்பவர்,
விஷ்ணுவாகிய நாராயணனே.

மகாவிஷ்ணுவின் கையில் இந்த கால சக்கரம் கட்டுப்பட்டு சுழல்கிறது. பெருமாள் தன் கையில் சங்கு, சக்கரம் வைத்து உள்ளார் என்று வேதம் சொல்லும் போது, கால சக்கரத்தை உணர்த்துகிறது.


"யாருக்கும் கட்டுப்படாத காலத்தையும், கட்டுப்படுத்த கூடியவர் பரவாசுதேவன் நாராயணனே" என்று காட்டுவதே 'விஷ்ணுவின் கையில் உள்ள சக்கரம்".

பல சமயங்களில், பிற தெய்வங்கள் தன்னை நம்பிய பக்தனை கூட கைவிட்டு விட்டனர்.
தவறு செய்தால், திருத்தாமல் இருந்தனர்.
'இது உன் கர்மா, விதி, காலம்.. நான் என்ன செய்ய முடியும்?' என்று கைவிரித்தனர் என்று பார்க்கிறோம்.
ப்ரம்ம தேவனிடம் காலத்தை மீறி, தனக்கு சாவே வரக்கூடாது என்று கேட்ட ஹிரண்யகசிபு, நாராயணன் நரசிம்மமாக வந்து கிழித்து எறிந்த போது, "உன் காலம் அவ்வளவு தான்" என்று கை விரித்து விட்டார் ப்ரம்மா.
தான் காலத்துக்கு கட்டுப்பட்டவன் என்று அமைதி காத்தார்.


ராவணன் உண்மையான சிவபக்தன். ஆனால், கர்வம் உள்ளவன்.
பக்தனான ராவணனை திருத்தி ஆட்கொள்ளவில்லை சிவபெருமான். அவன் செய்த பக்திக்கு அணுகிரஹம் செய்தாரே ஒழிய,
இவன் காலத்தை நாராயணன் முடிக்க சங்கல்பித்த போது, சிவபெருமான் தன் பக்தன் என்று பரிந்து கொள்ளவில்லை.
"இது உன் மரணத்திற்கான காலம்" என்று இருந்து விட்டார்.




வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனே, சங்கர்ஷன மூர்த்தியாக, ருத்ரனுக்கு அந்தர்யாமியாக இருக்கிறார். ஆதலால் சிவ த்வேஷம் கூடாது.
அதே பரவாசுதேவன், தானே பாற்கடலில் விஷ்ணுவாக வ்யூஹ அவதாரம் செய்தார். இது பரவாசுதேவனின் பூரண அவதாரம்.

மார்க்கண்டேயர் தனக்கு மரணம் ஏற்பட கூடாதென்று சிவ பூஜை செய்ய, மரணம் அவரை நெருங்கிய போது, சிவ பெருமான் அந்த ம்ருத்யுவை எட்டி உதைத்தார்.
மரணத்தை வர விடாமல் தடுத்த பின், மார்க்கண்டேயர் விஷ்ணு பக்தியை ப்ரதானமாக செய்ய,  சிரஞ்சீவியாக என்றுமே அழியாமல் இரு என்று காலம் எந்த நிலையிலும் இவரை நெருங்க முடியாத படி, வரம் கொடுத்து விட்டார் நாராயணன்.

விஷ்ணுவின் கையில் மட்டும் தான், அந்த கால சக்கரம் அவருக்கு கட்டுப்பட்டு சுழல்கிறது.

காலத்திற்கு அனைத்துமே அடிமை.
100 வருடங்கள் ப்ரம்ம லோகத்தில் ப்ரம்ம பட்டத்தை அனுபவித்த பின், ப்ரம்ம தேவனும் அழிவார், ப்ரம்ம லோகமும் அழியும்.

ப்ரம்ம பதவியில் இருந்த காலத்தில்
'இது பரவாசுதேவன் கொடுத்த பதவி, செய்யும் செயல்கள் யாவும் அவருடைய ப்ரீதிக்காக (சந்தோஷத்திற்கு) தான்' என்று உலக ஸ்ருஷ்டி செய்து இருந்தால், அந்த ப்ரம்ம தேவனுக்கு மோக்ஷம் கிடைக்க அருள்வார் நாராயணன்.
மாறாக,
கிடைத்த ப்ரம்ம பதவி, ப்ரம்ம பட்டம் தன் புண்ணியங்களால் கிடைத்தது, நான் தான் உலக ஸ்ருஷ்டி செய்கிறேன் என்று கர்வத்துடன், பாவ புண்ணியங்களை சேர்த்து இருந்தால், அந்த ப்ரம்ம தேவனும் அவர் பதவி முடிந்த பின், மீண்டும் பூலோகத்திற்கு வந்து பிறக்க வேண்டியது தான்.

ஒரு பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், மீண்டும் பரவாசுதேவன் ப்ரம்ம லோகத்தை ஸ்ருஷ்டி செய்து, இன்னொரு ப்ரம்ம தேவனை நியமிக்கிறார்.
ப்ரம்ம தேவனும் காலத்துக்கு கட்டுப்பட்டவர்.

இப்படி அனைத்துமே காலத்துக்கு கட்டுப்பட்டு அழிவை நோக்கி நகரும் போது, அந்த கால சக்கரத்தை கையில் ஏந்தியுள்ள, பரமாத்மா நாராயணன் அந்த காலத்துக்கு கட்டுப்பட்டு இருக்கிறாரா? என்ற கேள்வி, நமக்கு எழலாம்.

வாமன, நரசிம்ம, கூர்ம அவதாரங்களை, பரவாசுதேவன் செய்யும் போது, குறிப்பிட்ட காலத்துக்குள் வந்த காரியத்தை முடித்து விட்டு, மறைந்து விட்டார்.

அவரே ராமராக அவதாரம் செய்து நீண்ட காலங்கள் பூமியில் மனித அவதாரம் செய்த போது, மனிதனை போல, காலத்துக்கு கட்டுப்பட்டு "தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை, காலம் என்றும் விதி" என்றும் சொல்லி தைரியமாக எதிர்கொண்டார்.

ராம அவதாரம் எடுத்த போது, காலத்துக்கு கட்டுப்பட்டவர் போல பல இடங்களில் காட்டுகிறார்.


காலத்துக்கு கட்டுப்படாத பரவாசுதேவன் அவதார சமயங்களில் காலத்துக்கு ஏன் கட்டுப்படுகிறார்? 

உண்மையில், நாமும், இயற்கையும், தேவர்களும் காலத்துக்கு கட்டுப்படுவது போல, பரவாசுதேவன் காலத்துக்கு கட்டுப்படுவதில்லை.

நாம் அனைவரும் 'கட்டாயத்தால்' காலத்துக்கு கட்டுப்படுகிறோம்.
பரவாசுதேவனோ 'சுதந்திரமாக' கட்டுப்படுகிறார்.

பரவாசுதேவன், காலத்துக்கு கட்டுப்படாதவராக இருந்தாலும், சுதந்திரமாக கட்டுப்படுகிறார்.

நாமோ, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலத்துக்கு கட்டுப்படுகிறோம்.
நம் பிறப்பு நம் விருப்பத்தில் இல்லை.
நம் மரணமும் நம் விருப்பத்தில் இல்லை.
நம் வாழ்க்கையும் நாம் நினைப்பது போலவே நடப்பதும் இல்லை.

கால சக்கரத்தை தன் கையில் சுழல வைத்து கொண்டு இருக்கும் விஷ்ணு, காலத்துக்கு கட்டுப்படாதவராக இருந்தாலும், சுதந்திரமாக அவர் விருப்பப்பட்டால் கட்டுப்படுவது போல காட்டுகிறார்.

கால சக்கரத்தை கையில் வைத்து இருக்கும் நாராயணன்,  சுதந்திரமாக எப்படி கட்டுப்படுகிறார்?  இதை புரிந்து கொள்ள முடியுமா? முடியும்.

ஒரு பெரிய பணக்காரன் ஒருவன், அடுத்த நாள் காலை ஒரு ஊருக்கு செல்ல சங்கல்பம் (திட்டம்) செய்தான்.
5 மணிக்கு எழுந்து, அடுத்த நாள் காலை 7 மணிக்குள் ரயில் பிடித்து, ஊருக்கு போக வேண்டும் என்று திட்டமிடுகிறான்.
அதற்காக,
தன் வீட்டில் உள்ள கடிகாரத்தை எடுத்து அடுத்த நாள், காலை 5 மணிக்கு அலாரம் செட் செய்து கொண்டு தூங்க செல்கிறான்.

அந்த பணக்காரன் தனக்கே போட்டுக் கொண்ட திட்டம் தான் இது.
தான் வைத்து கொண்ட கால நிர்ணயம் தான் இது.
தானே அலாரம் வைத்து கொண்டு, படுக்க செல்கிறான்.

5 மணிக்கு சரியாக எழுந்திருக்க வேண்டுமே!! என்று சரியாக கூட தூங்க முடியவில்லை அந்த பணக்காரனால்.
தான் வைத்து கொண்ட காலத்துக்கு கட்டுப்பட்டு, 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமே!! காலத்திற்குள் கிளம்ப வேண்டுமே!! 7 மணிக்குள் ரயிலை பிடிக்க வேண்டுமே!! என்று கவலைப்படுகிறான்..
5 மணிக்கு சரியாக எழுந்து கொண்டு, சரியாக தான் நினைத்த படி 7 மணிக்கு ரயில் பிடித்த பின், மகிழ்ச்சி அடைகிறான்.
தான் திட்டமிட்டபடி நடந்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறான்.

இந்த மகிழ்ச்சிக்காக, இவனாகவே தனக்கே ஒரு கால வரம்பை வைத்து கொண்டு, தானே காலத்துக்கு கட்டுப்பட்டான்.

இது போல தான், கால சக்கரத்தை தன் கையில் வைத்து இருக்கும் நாராயணன், தான் சங்கல்பித்த சில காரியங்களை தானே செய்ய நினைக்கும் போது, தானே காலத்தை நிர்ணயித்து, அந்த காலத்துக்கு தானே சில சமயம் கட்டுப்பட்டு நடக்கிறார். 

காலத்துக்கு தானே கட்டுப்பட்டாலும், அவர் விரும்பினால், காலத்துக்கும் கட்டுப்படாமல் இருக்கவும் முடியும்.

அடுத்த நாள் காலை 7 மணிக்கு ரயில் பிடிக்க வேண்டும் என்று நினைத்த அந்த பணக்காரன், தான் சங்கல்பித்த காரியத்தை நடத்த வேண்டாம் என்று திடீரென்று முடிவு செய்து விட்டான்.

'ஊருக்கு போக போவதில்லை' என்று முடிவு செய்கிறான்.
இப்படி முடிவு செய்த பின், அவன் வைத்து கொண்ட அலாரம் (காலம்) அவனை கட்டுப்படுத்த முடியாமல் நிற்கிறது.
கவலையே இல்லாமல், அலாரத்தை off செய்து விட்டு, காலத்துக்கு கட்டுப்படாமல் நன்றாக தூங்கி, நிதானமாக எழுந்திருக்கிறான்..


அதே போல, பகவான் நாராயணன், காலத்துக்கு கட்டுப்படுவது போல தன்னை காட்டிக்கொண்டாலும், தேவைப்படும் போது, காலத்தையும் மீறி சுதந்திரமாக தன் இச்சையால் எதையும் செய்யத்தக்கவர்.

க்ஷீராப்தியில் இருக்கும், தன் துவார பாலகர்கள், ராவண, கும்பகர்ணனாக அவதரித்து விட்டதால், அவர்கள் தன் கையால் தான் வதம் செய்யப்பட வேண்டும் என்று பிரார்த்தித்ததால், ராம அவதாரம் செய்த பெருமாள், ராவண வதம் அவசியம் என்ற தன் சங்கல்பத்தின் காரணமாக, சீதையை தொலைத்து, கவலை படுவது போல அலைந்து, காலத்துக்கு கட்டுப்பட்டு, உதவிக்கு வானரர்களின் உதவியை கேட்டு, சரித்திரத்தை நடத்தி செல்கிறார்.
பார்ப்பதற்கு ஸ்ரீ ராமர் காலத்துக்கு கட்டுப்பட்டது போல காட்டுகிறார்.
அதே ராமர், ஜடாயு என்ற பறவை தனக்காக உயிர் விட்டது என்றதும், தன் கையால் ஈம கிரியை செய்து, யமன் வந்து கூட்டி செல்லும் முன், காலத்தையும் மீறி, ஜடாயுவின் கர்ம பலன்களையும் மீறி, சாதாரண பறவை எனபதையும் மீறி, "என் ஆணை. ஜடாயுவின் ஆத்மா வைகுண்டம் செல்லட்டும்" என்று தான் சர்வேஸ்வரன் என்று காட்டுகிறார். காலத்தையும் மீறி சுதந்திரமாக இருக்கிறார்.

அதே போல, அணை போட்டு, வானரர்களுடன் இலங்கை வந்து சேர்ந்த போது, ராவணன் அவன் அரண்மனை மாடியில் உலவி கொண்டிருப்பதை கவனித்த சுக்ரீவன், சீதையை அபகரித்தவன் என்ற தாங்க முடியாத கோபத்தில், குபீரென்று பாய்ந்து, நேராக ராவணன் முன் குதித்து, ஓங்கி ஒரு குத்து விட, இதை எதிர்பார்க்காத ராவணன் சிறிது நிலை தடுமாற, அவன் கிரீடத்தை தட்டி கொண்டு, நேராக ராமர் இருக்குமிடம் வந்து, ராவணனின் கிரீடத்தை அவர் காலடியில் வைத்தான்.
ராவணன் சுக்ரீவனை விட மகா பலசாலி.. கொஞ்சம் தவறு நிகழ்ந்து இருந்தாலும், சுக்ரீவனை கொன்று இருப்பான் ராவணன்.
தனக்காக இப்படி ஒரு காரியத்தை செய்தாலும், உயிருக்கு ஆபத்தான இது போன்ற முயற்சிகளை செய்ய வேண்டாம் என்று சொல்லி, தான் சாதாரண மனிதன் அல்ல, சர்வேஸ்வரன் என்று காட்டுவது போல "இனி இது போன்ற காரியங்கள் செய்ய வேண்டாம். எனக்கு சுக்ரீவனும் தேவை இல்லை. இந்த வானர படைகளும் தேவை இல்லை. 
ராவணனை அழிக்க என் தம்பி லட்சுமணனும் எனக்கு தேவை இல்லை.
எனக்கு இந்த காண்டீபமும் தேவை இல்லை. 
என் கை விரலில் உள்ள நகங்களை கொண்டே இந்த ராவணனை கிழித்து எறிந்து விடுவேன். தனக்காக யாரும் உயிர் துறக்க வேண்டாம்" என்று தன் பூர்வ அவதாரமான நரசிம்ம அவதார ஞாபகத்துடன் ஸ்ரீ ராமர் கர்ஜிக்க,
ஸ்ரீ ராமரின் கோபத்தை கண்டு அஞ்சி, அதற்கு பின் வானரர்கள் யாருமே அவரை மீறி எதையுமே செய்யவில்லை.


அதே போல, காலத்துக்கு கட்டுப்பட்டது போல சிறையில் அவதாரம் செய்து, சாதாரண இடையனாக பிருந்தாவணத்தில் வளர்ந்தாலும், தன் குரு சாந்தீபனி 'தன் 7 வயது மகன் கடலில் விழுந்து இறந்து விட்டான்' என்று சொல்ல,
குரு தக்ஷனையாக இறந்து போன அவர் மகனை மீட்டு தருவேன் என்று சமுத்திர தேவனை கேட்க, அவனை ஒரு அசுரன் இழுத்து கொண்டு விட்டான் என்று சொல்ல, அந்த அசுரனை தேடி பிடிக்க, அவன் தன் குரு புத்திரனை கொன்று விட்டான் என்று சொல்ல, அவனிடம் பாஞ்சசன்யம் என்ற சங்கை பிடுங்கி, அவனை கொன்று போட்டார்.
இறந்த ஆத்மா எம லோகம் சென்று இருக்கும் என்பதால், எம லோகமே சென்று தன் கையில் உள்ள பாஞ்சசன்யம் கொண்டு ஊத,
'செத்தவன் வீட்டில் ஊத வேண்டிய சங்கை, எம லோகத்தில் வந்து யார் ஊதுவது' என்று யமன் வந்து பார்க்க, ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்ததும் பரவாசுதேவன் என்று அறிந்து யமதர்மராஜன், அவர் கேட்கும் குரு புத்திரன் தன்னிடம் தான் இருப்பதாக கூறி, இன்றைய தேதியில் குரு புத்திரனுக்கு 14 வயது இருக்க வேண்டும் என்று சொல்ல, 14 வயது குரு புத்திரன் வர, எம லோகத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் தானே சர்வ சாஸ்திரங்களை உபதேசித்து, ஞானத்திலும் சிறந்தவனாக ஆக்கி, தன் குருவிடம் குரு தக்ஷிணையாக ஒப்படைத்து விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.

காலத்துக்கு கட்டுப்படுவது போல அவதாரம் செய்தாலும், தான் இஷ்டப்பட்டால் அந்த காலத்தையும் மீறி, இறந்து போன குரு புத்ரனையும் மீட்டு கொடுத்தார். 
சுதந்திரமாக கட்டுப்படுபவர் பரவாசுதேவன் நாராயணன்.
கட்டாயத்தால் கட்டுப்படுபவர்கள் நாம்.


Hare Rama Hare Krishna - listen to Bhajan
Sandhyavandanam - morning with meaning

Sandhyavandanam - afternoon with meaning



Sandhyavandanam - evening with meaning