Followers

Search Here...

Showing posts with label ஆஞ்சநேயர். Show all posts
Showing posts with label ஆஞ்சநேயர். Show all posts

Wednesday 11 October 2017

ஸ்ரீ ராமரை பற்றி ஆஞ்சநேயர்


ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமரை பற்றி:
ஒருவர் சிறந்த
1. புத்திசாலியாகவும்,
2. மிகுந்த பலசாலியாகவும்,
3. சுறுசுறுப்பாகவும்,
4. மிகவும் புகழ் பெற்றவராகவும்,
5. புலன்களை அடக்கியவராகவும்,
6. மகா தைரியசாலியாகவும்,
7. பயம் அறியாத சுத்த வீரனாகவும்,
8. ஆரோக்யம் உடையவராகவும்,
9. சிறந்த கல்வி தேர்ச்சி பெற்றவராகவும்,
10. சிறந்த பேச்சுத்திறமை உள்ளவராகவும்
ஒரு சேர காண முடியாது.



இதில் நமக்கு, ஏதாவது ஒன்று இரண்டு இருந்தாலே, கர்வம் தலைக்கு மேல் ஏறி விடும்.

இவை அனைத்தையும் ஒரு சேர கொண்டவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்,

ஆனால் இவரோ, "ராமருக்கு நான் தாசன்" என்று கர்வமே இல்லாமல், கை குவித்து நிற்கிறார்.
ஸ்ரீ ராமரை அந்த பரவாசுதேவன் "நாராயணன்" என்று உணர்ந்து இருந்தார்.

இத்தனைக்கும் ஸ்ரீ ராமர், தான் ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவன். அயோத்தி அரசர், தசரதனின் மகன். ஒரு மனிதன் என்று சொல்லிக்கொண்டார்.
இது போதாது என்று, ஸ்ரீ ஆஞ்சநேயரை துணைக்கு வேறு அழைத்துக்கொண்டார்.


வயதிலும் மூத்தவரான, ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமரை பகவான் என்று எப்படி உணர்ந்தார்?

மாயாஜாலம், மருத்துவம், பலம்  இவற்றையெல்லாம் வைத்து, யாரையும் பகவான் என்று சொல்ல கூடாது. சாஸ்திரம் பகவானின் குணங்கள் என்ன என்று சொல்கிறது.

நோய் தீர்ப்பவர் கடவுள் என்று நினைத்தால், எல்லா மருத்துவரும் கடவுள் என்று சொல்ல வேண்டியது தான்.

கடவுளை பலத்தாலோ, மாயாஜாலத்தாலோ, கண்டு பிடிக்கமுடியாது. கண்டு பிடிக்கவும் கூடாது.
போலி மதங்கள் இப்படி ஏமாற்றியே தான் மக்களை ஏமாற்றி வளர்ந்தன. ஏமாற்றுகின்றன.

சாதாரணமாக, ஒரு மனிதன் தன்னை தாழ்த்தி கொள்ள, "நான் நாய் போன்று நன்றியுடன் இருப்பேன்" என்று சொல்லுவான்.
கொஞ்சம் உயர்வாக தன்னை எண்ணும் போது "நான் கடவுள்" என்பான்.

மனிதர்களை விட உயர்ந்தவர்கள் தேவர்கள். தேவர்களை பொறுத்தவரை, மனித பிறவியே தாழ்ந்த பிறவி.
தேவர்களையும் விட உயர்ந்த லோகத்தில் இருப்பவர்கள், ரிஷிகள்.
அவர்களுக்கும் மேல் லோகத்தில் இருப்பவர் ப்ரம்மா.
இவை அனைத்தையும் படைத்தவர் பரவாசுதேவன்.

மனிதர்களில் சிலர் "நான் கடவுள்" என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுவது போல, பரவாசுதேவன், ஸ்ரீ ராமனாக அவதாரம் செய்து, "நான் மனிதன்" என்று சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டார். மனிதனாக தர்ம வழியில் வாழ்ந்து காட்ட, அவதாரம் செய்ததால், யார் கேட்டாலும், "நான் மனிதன்" என்று சொல்லிக்கொண்டார்.

முடிந்தவரை, தான் மனிதனாகவே இருக்க முயற்சி செய்தார். ஆனாலும், இவரின் வேடம் யாரிடமும் பலிக்கவில்லை.

ஸ்ரீ ஆஞ்சநேயரிடமோ, சீதையிடமோ, சகோதரர்களிடமோ, சபரியிடமோ, பெற்றோர்களிடமோ, விஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகத்தியர், போன்ற ரிஷிகளிடமோ, மாரீசன், கும்பகர்ணன் விபீஷணன் போன்ற அரக்கர்களிடமோ கூட  பலிக்கவில்லை. இன்று வரை இவர் சரித்திரம் நமக்கு தேவைப்படுகிறது.

இவர் "நான் மனிதன்" என்று சொன்னாலும் இவர்கள் யாவரும் இவரை அந்த பரவாசுதேவன் என்று அனைவரும் உணர்ந்து இருந்தனர்.

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்களை விஷ்ணு புராணம் சொல்கிறது.
1. பூர்ணமான ஐச்வர்யம்
2. பூர்ணமான தர்மம்
3. பூர்ணமான புகழ்
4. பூர்ணமான ஸ்ரீ
5. பூர்ணமான வைராக்யம்
6. பூர்ணமான மோக்ஷம்
ஸ்ரீ ஆஞ்சநேயர் இந்த லக்ஷணங்களை ஸ்ரீ ராமரிடத்தில் கண்டார்.

ஸ்ரீ ஆஞ்சநேயரிடம், "ஸ்ரீ ராமர் பகவான் என்று தெரிந்தும், நீங்கள் மட்டும், அவரிடம் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீ ராமர் எப்படி இருப்பார்? எப்படி பழகுவார்?" என்று கேட்டால்,

ஸ்ரீ ஆஞ்சநேயர் சொல்கிறார்,
"ஸ்ரீ ராமரை பார்க்கும்போதே பகவான் என்று நமது ஆத்மா உணரும். அவரின் கண்கள் கருணை என்ற குளிர்ச்சியை வர்ஷிக்கும். நமக்கு பார்க்கும் போதே குளிர்ச்சியாக இருக்கும்.
பார்க்கும் போதே நம் மனம் சாந்தி அடையும்.
பேதம் பார்க்காமல் அனைவரிடமும் சமமாக  பழகுவார்.
நம் குறையே அவர் கண்ணுக்கு தெரியாது.
நம்மில் இருக்கும் ஒரு சிறு நிறையையும் பெரிதாக நினைத்து அன்போடு பழகுவார். கருணையே வடிவமாக கொண்டிருப்பார்.
நீல வர்ணமாக இருக்கும் ஸ்ரீ ராமரை பார்த்தாலே, அனைவருக்கும் அவரிடம் போய் பேசலாமா? பழகலாமா? என்று ஆசை வரும்.
அவரும் நம்மிடம் ஆசையாக பழக முன் வருவார். ஆனால், நான் அவரிடம் நெருங்கி பேசலாம் என்று முயற்சி செய்யும் போது, அவரின் எண்ணிலடங்கா பகவத் குணங்கள் என்னை ஒரு ஜீவன் என்று உணர்த்தி விடுகிறது.
பரமாத்மாவிடம் நெருங்கும் ஜீவன், தன்னை தாசன் என்று உணர்வது போல, ஸ்ரீ ராமரை நெருங்கும் போதெல்லாம் நான் தாசன், அவர் பரவாசுதேவன் என்ற நினைவு வந்து விடுகிறது. நான் ராம தாசன் ஆகி விடுகிறேன்.

ஒருவேளை நமக்கு தெரிந்த 1000 நற்குணங்கள் யாவும் ஸ்ரீ ராமரிடம் உள்ளதா என்று பார்க்க முயற்சித்தால், அதைவிட அதிகமான நற்குணங்கள் கொண்டு இருப்பார். குணக்கடலாக இருக்கிறார்.



பொதுவாக கடலை காணும் போது, மனிதர்களுக்கு ஏதோ புரியாத சந்தோஷம் உருவாகிறது.
சிலருக்கு பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் நீந்தலாம் என்றும் தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் பயணம் செய்யலாம் என்று தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் முங்கி குளிக்கலாம் என்று தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் உள்ளே சென்று முத்து எடுக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆனால் யாருமே, கடலை முழுவதும் அறிந்தவர்கள் இல்லை.

அதே போல, ஸ்ரீ ராமரின் குணம் என்ற கடலை கண்டு ஆனந்தப்பட்டு அருகில் வருபவன், கடல் அருகே வந்து அதன் கம்பீரத்தை, பலத்தை பார்த்து, அப்படியே கரையில் நின்று விடுவது போல, அவர் அருகில் சென்ற பிறகு  அமைதியாக நின்று விடுகிறேன்.
பார்ப்பதற்கு கடல் போல குளிர்ச்சியாக இருக்கிறார். அவரின் தரிசனம் மட்டுமே திருப்தி அளிக்கிறது" என்றார் ஹனுமான்.