Followers

Search Here...

Showing posts with label ஆசைப்பட்டார். Show all posts
Showing posts with label ஆசைப்பட்டார். Show all posts

Sunday 28 April 2019

கண்ணன், மாடு மேய்க்க ஏன் ஆசைப்பட்டார்? நெய்வேத்தியம் காட்டிவிட்டு சாப்பிட்டால் குறைந்து விடுவோமா? நன்றி உணர்ச்சி என்றால் என்ன? தெரிந்து கொள்வோமே..





அனைத்து உலகங்களையும், ஜீவராசிகளையும்  'வைகுண்ட'த்தில் இருந்து மேய்த்துக்கொண்டு இருக்கும் ஸ்ரீமந் நாராயணன்,
ப்ரம்மா முதல் சிறு ஜீவராசிகள் வரை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறார்.
'உலகையே ஆளும் சர்வேஸ்வரன்' என்ற பெருமையை காட்டிலும்,
தன்னை ஒரு மாடு மேய்க்கும், ராஜகோபாலனாக அடையாளப்படுத்தி கொள்ளவே மிகவும் விரும்பினாராம் பரமாத்மா. அது ஏன்?
மக்களையும், உலகங்களையும் மேய்க்கும் எம்பெருமான், தேவர்களும், ரிஷிகளும் வியக்க, ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் செய்யும் போது, 'தான் மாடு மேய்க்கலாம்' என்று வந்து விட்டார்.



பரமாத்மா மாடு மேய்க்க ஆசைப்பட்டார் என்றால், பசுமாட்டுக்கு அப்படி என்ன விசேஷத்தை பரமாத்மா கண்டார்?
உலகையே மேய்க்கும் சக்தி வாய்ந்த பரமாத்மா நாராயணனுக்கு, மாட்டின் மேல் மட்டும், அத்தனை தனிப்பட்ட பிரியம், ஏன் உண்டாயிற்று?

"நாராயணா..., வாசுதேவா..."
என்ற பெயர்கள் சொல்லி அழைப்பதை விட,
"கோவிந்தா.., கோபாலா..."
என்று தன்னை பக்தர்கள் அழைப்பதையே விரும்பினாராம். ஏன்?
திருப்பதியில் அனைவரின் வாயிலும் "கோவிந்த" நாமமே எங்கும் ஒலிக்கிறது.



மாடு மேய்ப்பதை மனமுவந்து ஏற்று, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்தார். மாடு மேய்க்கும் கண்ணனாக இருந்தார்.

உலகையே காத்து ரக்ஷிக்கும் எம்பெருமானிடம்,
"நம்மை பகவான் நாராயணன் அல்லவோ ரக்ஷிக்கிறார்!!"
என்ற 'நன்றி உணர்வு இல்லாமல்' நாம் இருக்க,
எம்பெருமான் உலகையே மேய்ப்பதை காட்டிலும், ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் தன் தனிப்பட்ட விருப்பமாக மாடு மேய்க்கலாம் என்று அவதாரம் செய்ய வந்து விட்டாராம்.

மாட்டுக்கு ஒரு "விசேஷ குணம்" உண்டு.
ஜீவனுக்கு 'உடல்' கொடுத்து,
'புத்தி' கொடுத்து,
திடமான 'மனம்' கொடுத்து,
வாழ்வதற்கு 'பூமி'யும், 'ஆகாரமும்' கொடுத்து,
பேராபத்துக்கள் வராமல் இருக்க பஞ்ச பூதத்துக்கு அதிபதியான இந்திரன், வருணன், அக்னி, வருணன் போன்ற தேவர்களையும், தன் ஆணையால் எல்லை தாண்ட விடாமல் செய்து,
ரக்ஷித்து (மேய்த்து) கொண்டும் இருக்கும் "பரமாத்மா நாராயணனை", 
6 அறிவு இருந்தும், நன்றியோடு நினைப்பதில்லை துர்புத்தி உள்ள மனிதர்கள்.






அதே சமயம், எஜமானன், புல் மேய விட்டாலும், அந்த மாடு, மாட்டை மேய்ப்பவனை ஒரு கண்ணால் நன்றியோடு பார்த்து கொண்டே புல் மேயும்.
தன்னை ரக்ஷிக்கும் அந்த இடையனை நன்றியுடன் பார்க்கும்.

தன் எஜமானன் தன்னை ரக்ஷித்து உணவு கொடுக்கிறான் என்ற நன்றி மட்டுமில்லாமல், தன் பாலையே தன் எஜமானனுக்கு திருப்பி தரும்.

ஆனால், இந்த மனிதனோ, தான் மேய்வதற்காக போட்ட தீனியையே 'கபக்..கபக்..' என்று வாயில் போட்டுக் கொண்டு, மேய்ப்பவனை நினைத்து பார்க்காமல் இருக்கிறான்.
"கோவிந்தா" என்று சொல்லி வாயில் போட்டுக்கொண்டால் என்ன?
ஒரு ஐந்து அறிவு பசுவுக்கு இருக்கும் நன்றி உணர்வு, ஆறு அறிவுள்ள மனிதனிடம் இல்லையே!!

தனக்கு இந்த உணவை கிடைக்க செய்தவனை ஒரு க்ஷணம் நினைத்து பார்ப்பதும் இல்லையே!!, நன்றியும் இல்லையே!!.



ஆனால், மாடு அப்படியில்லையே. நன்றியுடன் இருக்கிறதே !!
மாடு, தனக்கு தீனி வைப்பவன் வந்தாலேயே ஆர்வத்தோடு "மா..." என்று தீனி போட்டவனிடம் நன்றி காட்டும்.

அன்னத்தை ஸ்ருஷ்டி செய்த நாராயணன், அந்த அன்னத்தை போட்டுக்கொள்ள நமக்கு 'வாயை'யும், வயிற்றையும் படைத்தார். 
'சுவை'யும் அவர் தானே கொடுத்தார். 
'பசி'யையும் ஸ்ருஷ்டி செய்தார், 
வாயில் போட்டு கொள்ள 'கை'யையும் அவர் தானே ஸ்ருஷ்டி செய்து நமக்கு கொடுத்தார்.
ஒரு மாட்டிடம் காணப்படும் நன்றி உணர்வு, இந்த மனிதனுக்கு இல்லையே? என்று வயிற் எரிய சொல்கிறார் ஆழ்வார்.
"கோவிந்தா...கோவிந்தா..." என்று சொல்லிக்கொண்டே இந்த மனிதர்கள் நன்றி உணர்வோடு தனக்கு கிடைத்த உணவை வாயில் போட்டுக்கொண்டால் என்ன?


ஒருவன் ஒரு கையால் சாப்பிடுகிறான்..
ஒருவன் இரண்டு கையாலும் சாப்பிடுகிறான்.
ஒருவன் பாய்ந்து கொண்டு சாப்பிடுகிறான்.
இப்படி சோற்றுக்கு பாய்ந்து பாய்ந்து சாப்பிடும் இவர்கள், கொடுத்தவனை ஒரு முறை நினைத்து "அரங்கா..." என்று சொல்லிவிட்டு சாப்பிட்டால் குடியா முழுக போகிறது? 
அரங்கனை நன்றியோடு நினைக்கும் அடியவர்கள், "ரங்கா...ரங்கா.." என்று சொல்லிக்கொண்டே நன்றி உணர்வோடு சாப்பிடுகிறார்கள்.


6 அறிவு இருந்தும், நன்றி இல்லாத இவர்களுக்கு "கோவிந்தா..." என்ற நாமம் வாயில் வரவில்லையே!!
பசுக்களை தானே மேய்க்க, பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்ய, பசு மாடுகள் கண்ணனை பார்த்து விட்டால், தனக்கு மிகவும் பிடித்தமான புல் மேய கிடைத்தாலும் கூட, புல் மேய்வதை மறந்து கண்ணனையே பார்த்து கொண்டு இருக்குமாம்.
பசு மாடு நன்றியுடன் இருப்பது ஆச்சரியமில்லை...
அதன் கன்று குட்டி, ஆசையோடு தன் தாய் பசுவிடம் பால் குடிக்க ஓடும் போது, அங்கு கண்ணனை பார்த்து விட்டால், தாய் பசுவின் மடியில் வாய் வைத்து, பால் சுரந்து கொண்டு இருக்கும் போதும், அந்த பாலை குடிக்க கூட நினைவில்லாமல், தன் எஜமானன் கண்ணனை நன்றியுடன் பார்த்து கொண்டு இருக்குமாம். 
தனக்கு மிகவும் பிடித்த உணவை, தன் தாயின் பாலையும் குடிக்க மறந்து தன் எஜமானனான குட்டி கண்ணனையே பார்த்து கொண்டு இருக்குமானால் நன்றி விசுவாசம் என்றால் என்ன என்று புரிகிறது.

ஆனால் 6 அறிவு உள்ள மனிதனோ, தனக்கு கிடைத்த உணவை, சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுகிறானே ஒழிய, இதை கிடைக்க செய்தவன் அந்த கோவிந்தன் தானே என்று ஒரு நன்றி விசுவாசம் காட்டுவதில்லையே!! 

இப்படி நன்றி கெட்டு சாப்பிடும் ஜனங்களை, உலகை மேய்க்கும் தொழில் விட, தான் ஒரு இடையன் என்று சொல்லிக்கொண்டு, இந்த நன்றியுள்ள மாடுகளை மேய்க்க தயாராகி விட்டாராம். 
உலக நிர்வாகம் ஒரு கடமையாக என்று நிர்வகிக்கும் பரவாசுதேவன், தானே இந்த பசுக்களை மேய்க்க ஒரு தனி அவதாரமாக கோபாலனாக வந்து விட்டார். 
நமக்கு உணவு கிடைக்க செய்வதே பகவான் தான். பசுவுக்கு புல் கிடைக்க செய்தவரும் அவர் தான். நமக்கு சாப்பிட உணவு கொடுத்ததும் அவர் தான். அவர் நம் உணவை சாப்பிட போவதில்லை. ஆனால் பசுவுக்கு தன் எஜமானன் மீது உள்ள நன்றியை போல, இந்த மக்கள் தன்னிடம் நன்றியை காட்டுகிறானா என்று தான் பார்க்கிறார். 
"நெய்வேத்தியம் செய்து சாப்பிட்டால் என்ன குறைந்து விடும்?" ஹிந்துக்களின் பழக்கம் அல்லவா.. 
அத்தனை நன்றி கெட்டு போய் விட்டானா மனிதன்?
எஜமானனுக்கு நன்றி காட்டும் குணம் 5 அறிவுள்ள நாயிடம், பசுக்களிடம் உள்ளதே. அந்த நன்றி நமக்கு வேண்டாமா.. ஈஸ்வரனிடம் ஒரு நன்றி உணர்ச்சி, நாம் சாப்பிடும் போது காட்ட வேண்டாமா? நெய்வேத்தியம் காண்பித்து, 'கோவிந்தா... கோவிந்தா..' என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டால் என்ன குறைந்து விடும் மனிதனுக்கு?
பசுவை தங்கள் உயிராக ஹிந்துக்கள் நினைப்பதில் காரணம் இல்லாமல் இல்லையே. எஜமானனிடம் நன்றி காட்டும் குணம் அல்லவா பசுவிடம் உள்ளது.

ஹிந்துக்கள் செய்யும் எந்த காரியத்திலும் காரணம் உண்டு.



எம்பெருமான் திருநாமம் சொல்லாமல் சாப்பிடும் நன்றி கெட்டவர்களை பார்த்து ஆழ்வார் கடிந்து கொள்கிறார்.

இலைக்கு முன் போட்ட சோற்றை, 'கோவிந்தா' என்று சொல்லாமல், ஒரு கையை ஊன்றி கொண்டு, இலைக்கு முன் உடகார்ந்து கொண்டு "கபக்.. கபக்.." என்று போட்டுக்கொள்ளும் நன்றி கெட்டவர்களை பார்த்து, 'அந்த சோற்றை நாய்க்கு போட்டாவது கொஞ்சம் நன்றியுடன் இருக்குமே' என்கிறார்.
தெய்வத்துக்கு நெய்வேத்தியம் காட்டாமல், நன்றி கெட்டு சாப்பிடுவதை காட்டிலும், அந்த சோற்றை ஒரு நாய்க்கு கொடுத்தால், அது கூட நன்றி உணர்ச்சியை காட்டுமே என்று, நெய்வேத்தியம் காட்டாமல், கோவிந்தா என்று சொல்லி உண்ணாத நன்றி கெட்டவர்களை பார்த்து கடிந்து கொள்கிறார் தொண்டரடிபொடியாழ்வார்.

நாய்க்கு, ஒரே ஒரு நாள், இலையில் ஓரமாக கொஞ்சம் உணவு வைத்தாலும், சோறு போட்டவனுக்கு நன்றியுடன் இருக்குமே. இப்படி வயிற் நிறைய சாப்பிட்டும், 'ஆமாம்.. என்ன பெரிதாக கொடுத்து விட்டார்?' என்று அகம்பாவம் கொண்டு தெய்வத்தை நிந்தனை செய்கிறானே!! நன்றி இல்லாது சாப்பிடுபவர்களை ஆழ்வார் கடிந்து கொள்கிறார்.
திருமாலையில், 'கோவிந்தா' என்று சொல்லாமல் நன்றிகெட்டு உண்ணும் நம்மை கடிந்து கொள்ளும் பாசுரம்...
அணி திருவரங்க மென்னா, 
மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை 
விலக்கி நாய்க்கு இடுமி னீரே !!
-----  தொண்டரடிப்பொடியாழ்வார்.
மேய்ப்பவனை நன்றியுடன் நினைக்கும் ஸ்வபாவம் கொண்ட சாத்வீக குணம் கொண்ட பசுவை மேய்க்க, பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்தார்.



நாமும் நன்றி மறவாமல், நாராயணன் மீது அன்பு செலுத்துவோம்.

Hare Rama, Hare Krishna - Bhajan

Sandhya vandanam - Morning
Sandhya vandanam - Evening



Sandhya vandanam - Afternoon