Followers

Search Here...

Showing posts with label அத்வைத. Show all posts
Showing posts with label அத்வைத. Show all posts

Sunday 29 December 2019

விசிஷ்டாத்வைதம் என்றால் என்ன? 'நானும், ஈஸ்வரனும் வேறல்ல' என்று சொல்லும் அத்வைத ஞானி ஆதி சங்கரர், பஜகோவிந்தம் இயற்றி, "அந்த பரந்தாமனை ஜீவன் பஜிக்காமல் போனால், மோக்ஷம் உனக்கு கிடைக்காது" என்று அத்வைத விரோதமாக ஏன் சொன்னார்? ஆதி சங்கரர் எண்ணத்தை அறிந்து கொள்ள வேண்டாமா?

விசிஷ்ட (விஷேச) அத்வைதம் என்றால் என்ன?
விசிஷ்டாத்வைதம்அத்வைதம் + அதில் சொல்ல மறந்த ரகசியமான, கூடுதலான ஒரு 'விசேஷ தத்துவத்தை' சேர்த்து சொல்கிறது.

தெரிந்து கொள்வோம், இதன் 'விசேஷ தத்துவ' ரகசியத்தை. 
தெரிந்து கொள்வோம், ஆதி 'சங்கரர்' எண்ணத்தை.
தெரிந்து கொள்வோம், 'விசிஷ்டாத்வைத' தத்துவத்தை



"சரீரமே நான்" என்று நினைப்பது அஞானம் (அறிவீனம்).

இறந்த பின், உடல் மறைந்து விடுவதில்லை. பிரேத உடல் கண்ணனுக்கு எதிரே கிடக்கிறது.
ஆனால் "அதனுள் இதுநாள் வரை பிரவேசித்து இருந்த ஏதோ ஒன்று வெளியேறி விட்டது" என்று மட்டும் நமக்கு புரிகிறது.

உடலில் இதுநாள் வரை பிரவேசித்து இருந்த அந்த ஒன்றுக்கு தான் "ஆத்மா" என்று பெயர் சொல்கிறது வேதம்.
பொதுவாக "ஜீவாத்மா" என்று சொல்வோம்.

"உடல் தான் நான்" என்றால், 'இது நாள் வரை பேசிக்கொண்டு இருந்த இந்த உடல், இறந்தபின் எழுந்திருக்கவில்லையே!!' என்ற கேள்வி எழுகிறது.

கொஞ்சம் புத்தி உள்ளவன் கூட, மரணத்தை பார்த்த பின்,
"சரீரமே நான்" என்று நினைக்க மாட்டான்.

நம் சனாதன வேதம், "சரீரம் நான் அல்ல, உள்ளிருக்கும் ஆத்மாவே நான்" என்று தெளிவை நமக்கு முதலில் கொடுக்கிறது.
மேலும்,
"ஜீவனும், ஈஸ்வரனும் வேறல்ல... உடலுக்குள் இருந்த ஜீவாத்மாவும், எங்கும் நிறைந்த பரமாத்மாவும் உண்மையில் ஒன்று தான்" என்ற அத்வைத சித்தாந்தத்தை 'ஆதி சங்கரர்' உலகுக்கு வேதத்தை கொண்டு வெளிப்படுத்தினார்.

"நான் பகவானுடைய தாஸன்" என்ற ஞானம் இல்லாமல், "நான் ஒரு தனித்த தத்துவம். நான் சுதந்திரமானவன்" என்று நினைப்பதே உண்மையான ஞானத்துக்கு (மெய்அறிவுக்கு) விரோதம் தான்.

"நான் பகவானுடைய தாஸன்" என்று உணர்வதே உண்மையான ஞானம் (அறிவு).

வேதத்தின் அத்வைத சித்தாந்தத்தை உலகத்துக்கு காட்டிய ஆதி சங்கரர்
"நான் சரீரம் அல்ல, ஆத்மாவே நான் என்ற அத்வைத நிலையிலேயே இருந்தார். 
உள்ளிருக்கும் ஜீவாத்மாவும், பரமாத்மாவும் உண்மையில் ஒன்று தான் என்று அத்வைத சித்தாந்தத்தை பல உதாரணங்கள் கொடுத்து விளக்கினார்".


ஆதி சங்கரர், "ஜீவனும், பரமாத்மாவும் ஒன்று தான்" என்று சொன்ன போதிலும், "மோக்ஷம் அடையவேண்டுமானால் பரமாத்மாவாகிய ஸ்ரீ கிருஷ்ணனை பஜிக்க வேண்டும் என்று பஜ கோவிந்தம் பாடினார்" என்று பார்க்கிறோம்.

பஜ கோவிந்தம் 'ஜீவனையும், பரமாத்மாவையும் பிரித்து காட்டுகிறது'. மேலும்,
'ஸ்ரீ கிருஷ்ணரை வணங்காமல், ஜீவனுக்கு மோக்ஷம் (பிறவாநிலை) கிடைக்கபோவதே இல்லை' என்று முடிவாக சொல்கிறார் ஆதி சங்கரர்.
இதை கவனிக்க வேண்டும்.

ஏன் அத்வைத விரோதமாக ஆதி சங்கரர் இப்படி சொன்னார்? என்ற ரகசியத்தை நாம் அறியாதவரை, ஆதி சங்கரர் 'அத்வைதத்தை மட்டும் தான் வெளிப்படுத்தினார்' என்றே சொல்லிக்கொண்டு இருப்போம்.

ஆதி சங்கரர் வேதத்தை முழுதும் அறிந்தவர்.. சிவபெருமான் அவதாரம்.
ஆதி சங்கரர் உண்மையில் அத்வைதம் மட்டுமே சொன்னாரா? இல்லை, வேதத்தின் முழு முடிவான விசிஷ்டாத்வைத மார்க்கத்தை தான் கடைபிடித்தாரா? என்ற ரகசியம், பஜ கோவிந்தம் ஏன் பாடினார்? என்ற ஆராய்ச்சியில் மட்டுமே நமக்கு விளங்கும்.

பஜகோவிந்தம் அர்த்தத்துடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்

ஆதி சங்கரர் இதயத்தை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள்,
"பரமாத்மாவும் தானும் ஒன்று தான்" என்று ஆதி சங்கரர் சொன்ன அத்வைதத்தை மட்டும் எடுத்து கொண்டு, அங்கேயே நின்று விடுகிறார்கள். 
"ஈஸ்வரனையும், ஜீவனையும் பிரித்து, பஜ கோவிந்தம் ஏன் பாடினார்?" என்ற காரணத்தை இவர்கள் அறிந்து கொள்ள போவதில்லை.

இப்படி நின்று விடுவதால், "ஈஸ்வரனும் நானும் வேறல்ல. இரண்டும் ஒன்று தான். நானும் கடவுள் தான்" என்று நினைத்து விடுகிறார்கள்.
"தான் சுதந்திரமான ஆத்மா" என்று நினைத்து விடுகிறார்கள்.

இப்படி அரைகுறையாக ஆதி சங்கரர் சொன்னதை  புரிந்து கொண்டவர்கள்,
"ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று தான்" என்று சொன்ன ஆதி சங்கரர்,
"பின்பு ஏன் பரமாத்மாவையும் ஜீவாத்மாவையும் பிரித்து, த்வைதமாக காட்டி, ஜீவாத்மாவாகிய நாம் மோக்ஷம் அடைய அந்த பரந்தாமனை பஜிக்க வேண்டும் என்று பாடினார்?"
என்பது புரிந்து கொள்ள முடியாத விஷயமாகவே போகிறது.



இது ஆதி சங்கரர் பிழை அல்ல.
அத்வைத நிலையில் உள்ள ஆதிசங்கரர், "எந்த இடத்தில் அத்வைதத்துக்குள் த்வைதம் இருப்பதை கண்டார்?" என்றும் சரியாக புரிந்து கொள்ள முடியாததே காரணம்..

"பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று தான்" என்ற அத்வைத சித்தாந்தம் சத்தியம் என்றாலும்,
"எந்த இடத்தில் அத்வைதத்தில் த்வைதம் தெரிகிறது?" என்ற ரகசியத்தை விளக்கி சொல்ல வந்ததே "விசிஷ்டாத்வைதம்".

விசிஷ்டாத்வைதமே உண்மையில் 'ஆதி சங்கரர்' காட்டினார்.
அவர் "அத்வைதத்தில் விசேஷ தத்துவமாக த்வைதம் இருப்பதை கண்டதால் தான்" பஜ கோவிந்தம் நமக்கு கொடுத்தார்.

இந்த ரகசியம் பலருக்கு புரியாமல் இருந்த சமயத்தில், 
'ஆதி சங்கரர் காட்டிய விசிஷ்டாத்வைத மார்க்கத்தை', 
'வேதத்தின் உண்மையான அபிப்பிராயத்தை', 
பிற்காலத்தில் அவதரித்த "ஸ்ரீ ராமானுஜர்" தன் அவதார காலத்தில் வெளிப்படுத்தினார்.

ரகசிய அர்த்தத்தை அறிந்து கொள்வோம்:

அத்வைதம் "பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று தான்.. இரண்டும் வேறல்ல" என்று காட்ட, சில உதாரணங்களை நமக்கு காட்டி விளக்குகிறது.

1. "கடலும், அலையும் போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று" என்று சொல்கிறது அத்வைதம்.
"கடல் தான் அலையாக தெரிகிறது" என்பதால், 'அலை வேறு, கடல் வேறு' என்று அறிவுள்ளவர்கள் நினைக்க மாட்டார்கள்.
அது போல,
"பரமாத்மாவே தான் ஜீவாத்மாவாக தெரிகிறார்" என்பதால், 'ஜீவன் வேறு, பரமாத்மா வேறு' என்று ஞானிகள் நினைக்கமாட்டார்கள் என்கிறது அத்வைதம்

2. "பிம்பமும் (object) பிரதிபிம்பமும் (mirror image) போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று" என்று சொல்கிறது அத்வைதம்.
ஒரு கண்ணாடி முன் நிற்கும் போது, நம்முடைய பிம்பமே, பிரதிபிம்பமாக தெரிகிறது..
நகர்ந்து விட்டால், பிரதிபிம்பமும் மறைந்து விடும்.

"பிம்பம் தான் பிரதிபிம்பமாக தெரிகிறது" என்பதால், 'பிம்பம் வேறு, பிரதிபிம்பம் வேறு' என்று அறிவுள்ளவர்கள் நினைக்க மாட்டார்கள்.
அது போல,
"பரமாத்மாவே தான் ஜீவாத்மாவாக தெரிகிறார்" என்பதால், 'ஜீவன் வேறு, பரமாத்மா வேறு' என்று ஞானிகள் நினைக்கமாட்டார்கள் என்கிறது அத்வைதம்

3. "அதிஷ்டானமும் (real) ப்ரமையும் (illusion) போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று" என்று சொல்கிறது அத்வைதம்.
கயிறை பார்த்து, சில சமயம் பாம்பு என்று நினைக்கிறோம்.
கவனித்து பார்த்தால்,  அது பாம்பு(illusion) அல்ல, கயிறு (real) தான் என்று அறிந்து கொள்கிறோம்.
"அதிஷ்டானம் தான் ப்ரமையை போல காட்சி கொடுத்தது" என்பதால், 'அதிஷ்டானம் வேறு, ப்ரமை வேறு' என்று அறிவுள்ளவர்கள் நினைக்க மாட்டார்கள்.
அது போல,
"பரமாத்மாவே தான் ஜீவாத்மாவாக தெரிகிறார்" என்பதால், 'ஜீவன் வேறு, பரமாத்மா வேறு' என்று ஞானிகள் நினைக்கமாட்டார்கள் என்கிறது அத்வைதம்

4. "மஹாகாசமும், கடாகாசமும் போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று" என்று சொல்கிறது அத்வைதம்.
எங்கும் இருக்கும் ஆகாசமே, ஒரு ஒரு குடத்துக்குள், சிறு ஆகாசமாக தன்னை காட்டி கொள்கிறது.
அந்த குடம் உடைந்து போனால், குடத்துக்குள் இருந்த ஆகாசம் (கடாகாசம்), எங்கும் உள்ள ஆகாசத்தில் (மஹாகாசத்தில்) கலந்து விடுகிறது.

"மஹாகாசம் தான் கடாகாசமாக தெரிகிறது" என்பதால், "கடாகாசம் வேறு, மஹாகாசம் வேறு" என்று அறிவுள்ளவர்கள் நினைக்க மாட்டார்கள்.
அது போல,
"எங்கும் நிறைந்த பரமாத்மாவே, இந்த உடல் என்ற குடத்துக்குள் ஜீவாத்மாவாக தெரிகிறார்" என்பதால், 'ஜீவன் வேறு, பரமாத்மா வேறு' என்று ஞானிகள் நினைக்கமாட்டார்கள் என்கிறது அத்வைதம்






இப்படி மேற்சொன்ன உதாரணங்களை காட்டி, "பரமாத்மாவும், ஜீவாத்மாவும் வேறு போல தோன்றினாலும், உண்மையில் ஒன்று தான்" என்று விளக்குகிறது அத்வைதம்.

அஞானிக்கு அத்வைத சித்தாந்தம் "நானும் கடவுளே" என்ற சிந்தனையை விதைக்கிறதோ? என்று தோன்றலாம்.

"ஈஸ்வரனும் ஜீவனும் வேறல்ல" என்று அத்வைதம் காட்டி அருளிய ஆதி சங்கரர், "ஜீவாத்மாவாகிய நாம் மோக்ஷம் அடைய அந்த பரந்தாமனை பஜிக்க வேண்டும் என்று த்வைதமாக ஏன் பாடினார்? என்ற காரணத்தை தெரிந்து கொள்வோம்.

உண்மையில், மேற்சொன்ன அத்வைத உதாரணத்திலேயே, பேதம் ஒளிந்து இருக்கிறது...
அத்வைதத்தில் த்வைதம் ஒளிந்து இருக்கிறது.

அத்வைதத்தில் த்வைதம் விசேஷமாக ஒளிந்து இருப்பதை கண்டதால் தான், 
ஆதி சங்கரர் "நாமும் பரமாத்மாவும் ஒன்று தான் என்றாலும், ஜீவாத்மாவாகிய நாம் பரந்தாமனை வணங்கினால் தான் மோக்ஷம் கிடைக்கும்" 
என்று பஜ கோவிந்தம் இயற்றி நமக்கு கொடுத்து பேருபகாரம் செய்தார் என்று புரியும்.

"பரமாத்மாவும் நாமும் ஒன்று தான்" என்றாலும், "மோக்ஷம் அடைய நாம் பரமாத்மாவிடம் பக்தி செய்தே ஆக வேண்டும்" என்ற விசேஷ அர்த்தத்தை, 
ஆதி சங்கரரின் உண்மையான அபிப்ராயத்தை, வெளிக்காட்ட, பிற்காலத்தில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர்,
"விசிஷ்ட  அத்வைதம்" என்ற வேதத்தின் முழுமையான அபிப்பிராயத்தை ஸ்ரீ ராமானுஜர் உலகுக்கு வெளிப்படுத்தினார்.

விசிஷ்ட அத்வைதம் என்ன சொல்கிறது? என்று கவனிக்கும் போது, அத்வைத சித்தாந்தத்தை வெளிக்காட்டிய ஆதிசங்கரர், ஏன் த்வைதமாக பஜ கோவிந்தம் பாடி, பக்தி செய்ய சொன்னார்? என்று புரிந்து கொள்ள முடியும்.

1. கடலும், அலையும் போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று என்று சொல்கிறது அத்வைதம். இது சத்தியம் தான்.
ஆனாலும், இந்த உதாரணத்தோடு நிறுத்தி விடுவதால், 'கடலும், அலையும் வேறல்ல, இரண்டும் ஒன்று தான்' என்ற அத்வைதம் மட்டும் நமக்கு வெளிப்படுகிறது.
இதில் ஒரு உண்மை ரகசியமாகவே உள்ளது.
"கடலும் அலையும் வேறல்ல" என்பது உண்மைதான்.
ஆனால்,
"கடல் அலையை உருவாக்கியதா? அலை கடலை உருவாக்கியதா? 
கடலுக்கு அலை ஆதாரமாக உள்ளதா? அலைக்கு கடல் ஆதாரமா?
ஆதாரம் எது? கடலா? அலையா?"
என்று மேலும் ஒரு கேள்வி கேட்கும் போது தான்,
ஆதி சங்கரர் ஜீவாத்மாவாகிய நம்மை ஏன் பக்தி செய்ய சொன்னார்? என்பது விளங்கும்.

அலைக்கு ஆதாரம் கடல். ஆனால் கடலுக்கு ஆதாரம் அலை அல்ல.
இந்த உண்மையை கவனிக்கும் போது, "அலையை உருவாக்க காரணமாக இருந்தது கடல்" என்ற உண்மை விளங்கும்.
அது போல,
"பரமாத்மாவாகிய கடல், ஜீவாத்மாவாகிய அலைக்கு ஆதாரமே தவிர,
ஜீவாத்மாவுக்கு ஆதாரம் பரமாத்மா இல்லை" என்ற உண்மை வெளிப்படும்.
"ஜீவாத்மாவுக்கு ஆதாரம் பரமாத்மா இல்லை" என்ற உண்மை புலப்படும் போதே "ஜீவாத்மாவை உருவாக்க காரணமாக இருந்தது பரமாத்மாவே" என்ற உண்மை விளங்கும்.

இந்த உண்மை அறியப்படும் போது, "அலை போன்ற நம்மை உருவாக்காமல் இருக்க, தன்னையும் கடலோடு சேர்த்து கொள்ள, கடல் போன்ற பரமாத்மாவிடம் பக்தி செய்வது ஒன்றே வழி. 
அலைக்கு ஆதாரமான கடல் நினைத்தால், அலை இல்லாமல் செய்ய முடியும் (ராமேஸ்வரத்தில் அலை கிடையாது). 
அது போல, 
பரமாத்மா என்ற கடல் நினைத்தால், ஜீவாத்மாவாகிய நம்மை பிரித்து அலையாக காட்டாமல், தன்னோடு சேர்த்து கொள்ள முடியும்" என்பது நமக்கு புரியும்.

அத்வைத நிலையை நாம் அடைய, பரமாத்மாவின் கருணை நமக்கு அவசியமாகிறது.

ஈஸ்வரன் என்ற கடல், நமக்கு கருணை செய்யாதவரை, நாம் அலை போல தெரிந்து கொண்டே தான் இருப்போம்.  பிறவி கடலை தாண்டவே முடியாது.



அவர் நமக்கு கருணை செய்ய, அவர் நம்மிடம் பக்தியை (அன்பை) எதிர்பார்க்கிறார். 
தன்னிடம் கடலோடு கடலாக சேர ஆசைப்படுகிறானா? என்று பக்தியை எதிர்பார்க்கிறார். 
நமக்கு அந்த ஆவல் (பக்தி) உண்டானால், 
பரந்தாமன் நமக்கு ஆதாரமாக இருக்கிறார் என்ற ஞான உண்டானால், 
அலை போன்ற உருவத்தை மறைத்து, கடலோடு கடலாக ஆக்கி கொண்டு விடுகிறார் (அத்வைதம்).


"அத்வைத நிலையை (ஈஸ்வரனோடு கலந்து விட்ட நிலை) அடைய, ஜீவனாக இருக்கும் வரை, நாம் பக்தி செய்தே ஆக வேண்டும்!!" என்ற தீர்ப்பை, ஆதி சங்கரர் பஜகோவிந்தத்தில் காட்டி விடுகிறார்.

பஜகோவிந்தம் அர்த்தத்துடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்
"அலை போன்று தனியாக இருக்கும் நம்மை, கோவிந்தன் என்ற கடலுடன் சேர்த்து கொள்ள, த்வைத நிலையில் உள்ள நாம் அந்த பரந்தாமனை பக்தி செய்வது ஒன்றே வழி" 
என்ற விஷேச ரகசியத்தை ஆதி சங்கரர் அறிந்ததால் தான், "பஜ கோவிந்தம்" இயற்றி, ஜீவாத்மாவாகிய நம்மை பக்தி செய்து, பரமாத்மாவின் கருணையை பெற்று மோக்ஷம் அடைய வழி காட்டினார்.

ஆதி சங்கரர் உண்மையில் காட்டிய வழி "விஷிஷ்ட அத்வைதமே"

அதே போல,
2. பிம்பமும் (object) பிரதிபிம்பமும் (mirror image) போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று என்று சொல்கிறது அத்வைதம்.

"பிரதிபிம்பத்துக்கு பிம்பம் ஆதாரமா? பிம்பத்துக்கு பிரதிபிம்பம் ஆதாரமா?ஆதாரம் எது?" என்ற கேள்வி எழும் போது, பிரதிபிம்பத்துக்கு ஆதாரம் பிம்பமே என்ற உண்மை நமக்கு புரிகிறது.
பிரதிபிம்பம் தெரிவதற்கு காரணமே, பிம்பம் இருப்பதால் தான் என்ற உண்மை புரிகிறது.
பிரதிபிம்பம் இல்லாமல் போனாலும், பிம்பம் இருக்கும் என்ற உண்மையும் புரிகிறது.

இந்த உதாரணத்தின் படி பார்த்தால்,
ஆதாரம் எது? என்ற கேள்வி ஏழும் போது தான், நமக்கு ரகசியங்கள் விளங்குகிறது.
பிம்பம் (ஈஸ்வரன்) மாயை என்ற கண்ணாடி முன் நிற்காமல் இருந்தால், பிரதிபிம்பம் (ஜீவன்) உருவாகாது என்ற உண்மை புரிகிறது.
ஜீவனாகிய நம்மை உருவாக்காமல் இருக்க வேண்டும் என்றால், அவர் நினைத்தால் மட்டுமே சாத்தியம்.
அவர் நம்மை உருவாக்காமல் இருக்க செய்ய வேண்டுமென்றால், நாம் அவரிடம் பக்தி செலுத்துவது ஒன்றே வழி. 
இதை அறிந்த ஆதி சங்கரர், "ஜீவாத்மாவாகிய நாம் பரந்தாமனை வணங்கியே ஆக வேண்டும்" என்று பாடுகிறார்.

அதே போல,
3. அதிஷ்டானமும் (real) ப்ரமையும் (illusion) போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று என்று சொல்கிறது அத்வைதம்.

ப்ரமைக்கு அதிஷ்டானம் ஆதாரமா? அதிஷ்டானத்துக்கு ப்ரமை ஆதாரமா?ஆதாரம் எது? என்ற கேள்வி எழும் போது, "ப்ரமைக்கு ஆதாரம் அதிஷ்டானமே" என்ற உண்மை நமக்கு புரிகிறது.
கயிறு இல்லாமல், இந்த ப்ரமை கூட ஏற்படாது..
இல்லாத ஒன்றை (ஜீவன்) இருப்பதாக காட்டுவதும் பரமாத்மாவே.

இந்த ரகசியத்தை அனுபவத்தில் கொண்டவர், ஆதி சங்கரர்.

இந்த உண்மை அறியப்படும் போது, ப்ரமை போன்ற நம்மை உருவாக்காமல் இருக்க, அதிஷ்டானம் போன்ற பரமாத்மாவிடம் பக்தி செய்வது ஒன்றே வழி என்று புரிந்து விடும்.
புலன்களை கொடுத்து (மாயை), ப்ரமை போன்ற நம்மை உருவாக்கி லீலை செய்பவரும் அவர் தான் என்ற உண்மை புரியும்.

அதே போல,
4. மஹாகாசமும், கடாகாசமும் போலே, ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று என்று சொல்கிறது அத்வைதம்.

மஹாகாசத்திற்கு கடாகாசம் ஆதாரமா? கடாகாசத்திற்கு மஹாகாசம் ஆதாரமா? ஆதாரம் எது? என்ற கேள்வி எழும் போது, கடாகாசத்துக்கு ஆதாரம் மஹாகாசமே என்ற உண்மை நமக்கு புரிகிறது.
வெளியில் எங்கும் உள்ள ஆகாசம் (பரமாத்மா) தான், பானைக்குள்ளும் சிறிய ஆகாசம் (ஜீவன்) போல தெரிகிறதே தவிர, 
பானைக்குள் இருக்கும் ஆகாசம், வெளி ஆகாசத்தை உருவாக்கவில்லை.

இந்த உடம்புக்குள் புகுந்த சிறிய ஜோதியே ஜீவன்.
இந்த உடம்பு என்ற பானை உடையும் போது, தான் ஜீவனல்ல என்ற உண்மையை உணர்கிறான்.



இந்த உடம்பை கொடுத்து ஜீவனாக தெரிய செய்வது அந்த பரமாத்மாவே.
நமக்கு (கடாகாசம்) ஆதாரமான பரந்தாமனை (மஹாகாசம்) பக்தி செய்யாமல், அவரிடம் சேர்ந்து விட ஆசை இல்லாமல் இருக்கும் வரை, நம்மை மனித உடலிலோ, மிருக உடலிலோ, மரங்களிலோ புகுத்தி ஜீவனாக பிரித்து காட்டி லீலை செய்கிறார்.

நாமும் அவரும் வேறல்ல என்ற அத்வைத நிலையை நாம் அடைய, மோக்ஷத்தை அடைய, 
"அந்த பரந்தாமனை பக்தி செய்வது ஒன்றே வழி" என்பதால், ஆதி சங்கரர் பஜகோவிந்தம் இயற்றி நம்மிடம் தந்து விட்டார்.

பிற்காலத்தில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர், விஷிஷ்ட அத்வைதத்தை ப்ரகாசப்படுத்தி, "நாம் அத்வைத நிலையை (அலைகள் ஒடுங்கி கடலுடன் அடங்க) அடைய, முதலில் அந்த பரந்தாமன் நாராயணனை பஜித்து, அவர் கருணைக்கு பாத்திரமாக வேண்டும். அவர் கருணையின் மூலமே நம்மை மீண்டும் பிறக்க செய்யாமல் தன்னுடன் சேர்த்து கொள்வார்" என்ற ரகசியத்தை உலகுக்கு வெளிப்படுத்தினார்.

கடல் போன்ற "பரந்தாமன்", அலை போன்ற "நம்மை" படைக்கிறார்.
கடல் தான் அலையை உருவாக்குகிறது.

கடல் போன்ற பரந்தாமனும், அலை போன்ற தானும் ஒன்று தான் என்று அத்வைத அறிவுடன் இருந்து, அலையாக இருக்கும் வரை எது நடந்தாலும் வைராக்யத்தோடு இருந்து விட்டால் மட்டும், அலை (சம்சாரம்) ஓய்ந்து விடாது.

அத்வைத ஞானத்தில், அலை போன்று இருக்கும் நாம், அத்வைத அறிவுடன் இருக்க வேண்டுமே தவிர அத்வைத அனுபவத்துடன் இருந்தால், இந்த உலகில் உள்ள மற்ற அலைகளுடன் வாழ முடியாது.
இது தேவையற்ற துயரமே..
சுகப்ரம்மம் போன்ற சில ஞானிகள் மட்டுமே இப்படி வாழ்ந்தனர். வாழ முடியும்.

அத்வைத அனுபவம் நமக்கு தேவையே இல்லை.
அலை போன்ற ஜீவனாக பிறந்து இருக்கும் நாம், அத்வைத அறிவுடன் (ஞானம்) இருந்தாலேயே போதுமானது.

இந்த அலையை ஓய வைத்தால், அலையும் கடல் ஆகி விடுகிறது. ராமேஸ்வரத்தில் காணும் கடல் போல.
இது அத்வைத அனுபவம்.
இந்த அத்வைத அனுபவம் நமக்கு மோக்ஷம் கிடைத்த பிறகே உண்மையில் கிடைக்கும்.

கடல் மனது வைத்தால் தான் அலை ஏற்படுத்தாமல் இருக்க முடியும்.

மோக்ஷம் கொடுக்க, கடல் போன்ற பரந்தாமன் மனம் குளிர வேண்டும்.
நம்மை மீண்டும் மீண்டும் அலையாக உருவாக்காமல், அலை ஓயவேண்டும் என்றால், அவர் நம் மீது கருணை செய்தே ஆக வேண்டும்.

அவர் கருணை செய்ய, அலை போன்ற நாம் "அலை போன்ற இந்த பிரிந்த உருவத்தை, மாய உருவத்தை வெறுக்க வேண்டும். சம்சாரத்தில் அலையாக அடி வாங்குவதை வெறுக்க வேண்டும்.
இந்த அலையை ஓய வைக்கும் சக்தி, அந்த கடல் போன்ற பரந்தாமனுக்கே உண்டு என்ற உண்மையை உணர வேண்டும்.

இந்த உண்மை அறியப்படும் போது, ஜீவன் பக்தி செய்ய முடிவு செய்கிறான். பரமாத்மாவின் கருணையை எதிர்பார்க்கிறான்.

அலை போன்று வாழும் வாழ்க்கையை எதிர்கொள்ளவும் தயாராகிறான்.
அத்வைத அறிவு உள்ள இவனின் நோக்கம், அத்வைத அனுபவத்தை மோக்ஷத்தில் பெறுவதே என்றாலும், அலை போன்ற தன்னை ஓய செய்ய தன்னால் ஆகாது என்று தெளிவு பெறுகிறான்.
வாசுதேவ கிருஷ்ணனை சரண் அடைகிறான்.

இந்த நிலையில் ஆதி சங்கரர், "கோவிந்தனை பஜித்து, அத்வைத அனுபவத்தை தரும் மோக்ஷத்தை அவர் கருணையால் பெற்று கொள்" என்று பஜ கோவிந்தம் நமக்கு கொடுத்தார்.

ஆதி சங்கரரை வெறும் அத்வைதி என்று மட்டும் நினைப்பதை விட, அவர் விஷிஷ்டாதவைத் தத்துவத்தை தான் நமக்கு காட்டினார் என்று புரிந்து, கிருஷ்ண பக்தி செய்வோம்.

ஸ்ரீ ராமானுஜர் சொன்ன விசிஷ்டாத்வைதமே, ஆதி சங்கரரும் சொல்கிறார். 
ஆதி சங்கரரை "அத்வைதி" என்று மட்டும் சொல்வதை தவிர்த்து, பஜகோவிந்தம் அளித்த ஆதி சங்கரரும் விசிஷ்டாத்வைதமே (அத்வைதம் + விஷேச தத்துவம்) சொல்கிறார் என்ற உண்மையை அறிவோம்.
கிருஷ்ண பக்தி செய்வோம். 
அவர் கருணையால், மோக்ஷம் அடையும் போது, அத்வைத நிலையில் பரந்தாமனுடன் இரண்டற கலந்துவிடுவோம்.

வாழ்க ஸ்ரீ ராமானுஜர் புகழ், வாழ்க ஆதி சங்கரர் புகழ்.
வாழ்க ஹிந்து தர்மம். 

வாழ்க ஹிந்துக்கள்.