Followers

Search Here...

Showing posts with label வெங்கடேச பெருமாள். Show all posts
Showing posts with label வெங்கடேச பெருமாள். Show all posts

Thursday 25 October 2018

திருமலையாக இருக்கும் ஆதிசேஷன் எத்தனை நீளமாக படுத்துள்ளார். ஆதிசேஷன் மேல் வெங்கடேச பெருமாள் எங்கு இருக்கிறார்?

ஆதிசேஷன் எம்பெருமானுக்கு எப்படி எல்லாம் சேவை செய்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமான் பரவாசுதேவனாக இருந்தால், இவர் அமர்வதற்கு தானே சிம்மாசனம் ஆகி விடுகிறார்.



பாற்கடலில் எம்பெருமான் வ்யூஹ அவதாரம் செய்து மகாவிஷ்ணுவாக இருந்தால், இவர் படுத்தால், தானே பஞ்சுபடுக்கை ஆகி விடுகிறார்.
எம்பெருமான் நடந்து சென்றால், தானே அவருக்கு குடையாகி விடுகிறார்.
(கிருஷ்ண அவதாரம் செய்த போது யமுனையை கடக்கும் போது குடையானார்)
எம்பெருமான் நின்றால், தானே அவர் திருவடிக்கு பாதுகை ஆகி விடுகிறார்.
(திருமலையப்பன் நிற்க  சேஷாத்திரி (திருமலை) ஆனார்)

இப்படி
சர்வ தேச (எந்த இடத்திலும்),
சர்வ கால (எந்த சமயத்திலும்),
சர்வ அவஸ்தைகளிலும் (எந்த நிலையிலும்)
எம்பெருமானுக்கு சர்வ கைங்கர்யமும் (எந்த சேவையும்) செய்யக்கூடியவராக இருக்கிறார் ஆதிசேஷன்.

எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதில், ஆதிசேஷனை போல ஆசையோடு செய்ய வேண்டும்.

ஏழுமலைகளாக எந்த யுகத்திலோ தோன்றிவிட்ட ஆதிசேஷன் "சேஷாத்ரி" என்ற பெயருடன் எம்பெருமான் அவதாரத்திற்கு காத்து கொண்டிருந்தார்.

ஆதிசேஷன் "சேஷாத்ரி" என்ற 7 மலையாக ஆகி இருந்தார். காலப்போக்கில் ஒவ்வொரு மலைக்கும் தனி பெயர் ஏற்பட்டது.
1. சேஷாத்ரி (உண்மையான பெயர்)
2. நாராயணாத்ரி
3. வ்ருஷபாத்ரி (வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்ற மலை)
4. அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த மலை)
5. கருடாத்ரி
6. வெங்கடாத்ரி (வெங்கடேச பெருமாள் இருக்கும் இடம். பாவங்கள் பொசுங்கும் மலை)
7. சிம்மாத்ரி


"அத்ரி" என்றால் மலை என்று அர்த்தம்.

ஆதிசேஷன் எத்தனை நீளமாக படுத்தார்? என்று பார்க்கும் போது,
காளஹஸ்தி என்ற இடத்தில் ஆதிசேஷனின் தலை (சிரசு) ஆரம்பித்து,
அந்த பாம்பின் வளைந்து இருக்கும் தலையின் உச்சத்தில் அவர் தரித்து இருந்த நாக ரத்தினத்தின் உச்சத்தில், வெங்கடேசபெருமாள் ஆனந்த விமானத்தில் தன்னை வெளிக்காட்டி, அந்த சிரசையே "வெங்கடாத்ரி" என்ற ஒரு மலையாக ஏற்று வீற்றிருக்கிறார்.
ஆதிசேஷனின் இதய பகுதியில் உருவான க்ஷேத்ரமே "அஹோபிலம்".
ஸ்ரீசைலம் என்ற இடத்தில் ஆதிசேஷனின் வால் பகுதி முடிகிறது.

காளஹஸ்தி ஆரம்பித்து, ஸ்ரீசைலம் வரை ஆதிசேஷன் படுத்தார் என்றால், ஏழு மலைகளின் நீளம் நமக்கு புரியும்.

வைகுண்டத்தை பூலோகத்தில் கொண்டு வந்து விட்டார் ஆதிசேஷன், பகவான் கருணையின் காரணமாக.




இப்படி அதி ஆச்சர்யமாக எம்பெருமான் வருவதற்காக படுத்து விட்டார் ஆதிசேஷன்.
இதை பார்த்த கங்கை, இந்த திருமலைக்கு ஒரு வெள்ளை கொடி பறக்க விடுவது போல, "ஆகாச கங்கை"யாக பொழிய ஆரம்பித்தாள்.

கங்கையே வந்தவுடன், ஏழு மலையையும் சூழ்ந்து கொண்டு அனைத்து புனிதமான தீர்த்தங்களும் ஆங்காங்கே உருவானது.

மலையே செழிப்பு நிறைந்து, பூக்களும், மரங்களும் நிறைந்த பசுமையான சோலை ஆனது திருமலை, எம்பெருமானை வரவேற்க.

மலையாக பார்க்காமல், ஆதிசேஷனாக பார்க்கும் போது தான், பக்தன் எப்படி எல்லாம் கைங்கர்யம் செய்கிறான் என்பது புரியும்.

காற்றில் மரங்கள் யாவும் அசைவதை பார்த்தால், ஆதிசேஷனின் ஆயிரம் தலைகள் அசைவது போல தோன்றுமாம் பக்தனுக்கு.

ஏழு மலையையும்,  வெண்மையான மேகங்கள் சூழ்ந்து வருவதை பார்த்தால், க்ஷீராப்தியில் இருந்த பாற்கடல் ஆதிசேஷனும் கிளம்பி விட்டார், எம்பெருமானும் கிளம்பி விட்டார் என்று அறிந்து, இனி வைகுண்டத்தில் என்ன வேலை என்று திருமலைக்கு வந்து விட்டதோ என்று தோன்றுமாம் பக்தனுக்கு.

வைகுண்டத்தில் இருந்து ஆதிஷேஷனே திருமலையாக வந்து விட்டார் என்று உணர்ந்த ரிஷிகள், தங்கள் ஆஸ்ரமங்களை விட்டு விட்டு, திருமலை வந்து பகவத் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

மயில்களும், குயில்களும் ஆனந்தமாக கானம் செய்து விளையாடியது. பெருமாளின் வருகைக்கு
காள என்றால் "சிலந்தி",
ஹஸ்தி என்றால் "யானை".
இந்த ஸ்தலத்தில் யானையும், சிலந்தியும் சிவ பூஜை செய்த காரணத்தால், இந்த இடத்திற்கு பிற்காலத்தில் "காளஹஸ்தி" என்ற பெயர் உண்டானது. இன்று வரை சிவ ஸ்தலமாகவும் உள்ளது.
பெருமாளும், சிவனும் பிரித்து பார்த்து வழிபடும் பழக்கம் இருந்ததில்லை என்பது இதிலேயே தெரிகிறது.

ஸ்ரீசைலம் என்பதும் மற்றொரு சிவக்ஷேத்ரம். இந்த சிவக்ஷேத்ரத்தில், மருத மரமாக (அர்ஜுன மரம்) சிவபெருமானே இருக்கிறார்.  பார்வதி தேவி இங்கு மல்லிகை கொடியாக ஆகி, அந்த மருத மரத்தை சுற்றிக்கொண்டு இருக்கிறாள்.
இதனால் இங்கு சிவபெருமானுக்கு "மல்லிகார்ஜூன்" என்றும் பெயர்.

இயற்கையில் தோன்றியது இந்த மலை அல்ல, இங்கு வசிக்கும் எந்த மிருகமும், மனிதர்களும், பறவைகளும் என்ன பிரார்த்தனை செய்து இப்படி திருமலையில் வாசம் செய்கிறார்களோ நமக்கு தெரியாது.


மகான்கள், ஆழ்வார்கள் எல்லோரும் இந்த கண்ணோட்டத்தில் தானே திருமலையை பார்த்தனர். பார்க்கின்றனர்.

ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் 'அனந்தாழ்வார்' திருமலையில் பூ கைங்கர்யம் ராமானுஜரின் உகப்புக்கு செய்து கொண்டிருந்தார்.
ஒரு சமயம், அனந்தாழ்வார் தன் சிஷ்யர்களுடன் மேல் நாட்டு திவ்ய தேசங்கள் ஆரம்பித்து, அனந்த பத்மநாபன் வரை சேவிக்க புறப்பட்டார்.

பயணத்திற்கு திருமலை பிரசாதமே எடுத்துக்கொள்ளலாம் என்று ஒரு மூட்டையில் பிரசாதம் எடுத்துக்கொண்டு, கிளம்பினார்கள்.

கிளம்பி வெகுதூரம் சென்ற பின், சரி சாப்பிடலாம் என்று நினைத்து, பிரசாத மூட்டையை அவிழ்க்க, அதில் எறும்புகள் இருப்பதை பார்த்தார் அனந்தாழ்வார்.
அவர் சிஷ்யர்கள், "எறும்பை தட்டி விட்டு சாப்பிடலாமா? இல்லை அப்படியே பிரசாதத்தை வைத்து விட்டு பயணத்தை தொடரலாமா?"
என்று யோசிக்க,
அனந்தாழ்வார், "இந்த எறும்புகள் எல்லாம் திருமலையில் இருந்தே வந்திருக்கிறது.
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ" (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் செய்த பிரார்த்தனை, இந்த எறும்புக்கு கிடைத்துள்ளதே.
திவ்யதேச வாசம் செய்த எறும்புகளை இப்படி ஏதோ ஒரு கிராமத்தில் விட்டு விட கூடாது. இவையெல்லாம் எந்த ஜீவனோ நமக்கு தெரியாது.
திருமலை வாசம் பெற்ற இந்த ஜீவனை, நாம் மீண்டும் திருமலை சென்று, அங்கேயே இந்த பிரசாதத்தை வைத்து விட்டு நம் பயணத்தை மீண்டும் தொடர்வோம்" என்று சொல்லி அவர்கள் யாத்திரையை நிறுத்து விட்டு, மீண்டும் திருமலையில் ஏறி, அந்த எறும்புகளை மீண்டும் ஸ்வாமி புஸ்கரணி தீர்த்தம் அருகே,  திருமலையிலேயே விட்டு விட்டு, மீண்டும் யாத்திரையை தொடர்ந்தனர்.
நம் பூர்வ ஆச்சாரியர்கள் எப்படி திருமலையை பக்தியுடன் பார்த்தனர், அங்குள்ள ஜீவராசிகளை எப்படி மதித்து உள்ளனர் என்று புரிகிறதே.

திருமலையை மற்ற  இயற்கையாக தோன்றிய மலை போலவா ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.
ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும். 
அந்த பக்தி நமக்கு வர வேண்டாமா?

ஆதிசேஷனே ஏழு மலையாக இருக்கும் போது, பரவாசுதேவனே திருமலையப்பனாக நின்று கொண்டு இருக்கும் போது, இங்கு வசிக்கும் விலங்குகளும், பறவைகளும் மட்டும் சாதாரணம் என்று நினைக்க தோன்றுமா ஒரு பக்தனுக்கு?.
ஆழ்வார்கள் போன்று நமக்கும் பக்தி வர ஆசைப்பட வேண்டுமே.

எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ" (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் பாடும் பொழுது, இங்கு இருக்கும் செடி, கொடிகளுக்கு கூட மங்களாசாசனம் செய்து விட்டாரே. இங்கு இருக்கும் ஈ, எறும்பு கூட எந்த மகானோ என்றல்லவா நமக்கு தோன்ற வேண்டும்.

ஆயிரம் நாக்கு உடைய ஆதிஷேஷனே திருமலையின் மகத்துவத்தை சொல்ல முடியாத போது 18 புராணங்களும் திருமலையின் மகத்துவத்தை சொல்வது ஆச்சர்யமில்லையே.


ஆதிஷேஷனே, கலியில் ஸ்ரீ ராமானுஜராக 1017ல் அவதாரம் செய்தார்.
ஒரு சமயம், யதிராஜனாக (சந்நியாசி) ஆன பின்பு, திருமலையில் ஒரு மாதம் தங்கி, அவர் பூர்வ க்ருஹத்தில் மாமாவான "திருமலைநம்பி"யிடம் ராமாயண காலட்சேபம் கேட்கலாம் என்ற ஆசையோடு திருமலை வந்தார்.

"எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ" என்ற ஆழ்வார் பாசுரத்தை எண்ணி, திருமலையில் எப்படி கால் வைத்து போவேன்? என்று தயங்கி, தன் இரு கால்களையும் மடக்கி இருக்க கட்டி, தன் முழங்காலால் நடக்க ஆரம்பித்தார்.
ஸ்ரீ ராமானுஜர் முழங்கால் தேய திருமலை ஏறிக்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்ட திருமலை நம்பி, கீழே இறங்கி ஓடி வந்தார்.
அதற்குள் ராமானுஜர் முதல் கோபுரம் வரை வந்து விட்டார்.

தன் மருமகன் தான் 'ராமானுஜர்' பூர்வ ஆஸ்ரமித்தில் என்றாலும், யதிராஜராக ஆகி விட்ட ராமானுஜரை சேவித்துக்கொண்டே,
"ஏன் இப்படி வர வேண்டும்?" என்று கேட்க,
"தங்களை சேவிக்கலாம் என்று தான் வந்து கொண்டிருந்தேன்"
என்றார் ராமானுஜர்.

"யதி ராஜர் இப்படி முட்டுக்கால் தேய வந்தால் இது சாத்தியமா?
சாதாரணமாக காலால் நடந்து வந்து பெருமாளை திருமலை ஏறி வந்து தரிசிப்பதே ஜனங்களுக்கு கடினமாக இருக்கும் போது, தாங்கள் ஆதிசேஷனாக இருக்கும் திருமலை மேல் கால் படக்கூடாது என்று இப்படி கால்களை கட்டிக்கொண்டு, ஏறி வந்தால், யதிராஜரே கால் வைக்க தயங்கினார் என்று தெரிந்தால், ஒருத்தர் கூட திருமலை வந்து எம்பெருமானை தரிசிக்க மாட்டார்களே!!

நீங்கள் திருமலையில் கால் வைத்து நடப்பது தோஷமில்லை.
ஒரு தாயார் தன் மடி மீது குழந்தை வைத்து கொள்ளும் போது, சில சமயம் தன் சின்ன காலால், தாயை உதைத்தாலும், அது அவளுக்கு ஏற்பு உடையதாக இருக்கும்.
அதை அவள் அபசாரம் என்று நினைப்பதில்லை.
அதுபோல, திருமலையில் கால் வைத்து ஏறினாலும், அது பெருமானுக்கு ஏற்புடையதாக இருக்குமே தவிர அபசாரமாக இருக்காது. கால் வைத்து வாருங்கள் என்று இதை சொல்ல தான் ஓடிவந்தேன்"
என்றார் திருமலை நம்பி.

"இதை சொல்வதற்கு யாராவது சிறுவனை அனுப்பி இருக்க கூடாதோ. நான் ஏற்று இருப்பேனே. இதற்கு தேவரீர் தானே புறப்பட்டு வர வேண்டுமா?" என்று ராமானுஜர் கேட்க,

"திருமலை முழுவதும் தேடி பார்த்து விட்டேன். அடியேனை தவிர சிறுவன் இங்கு கிடைக்கவில்லை. யாரை பார்த்தாலும் இவர் என்ன பாக்கியம் செய்து திருமலையில் வாசம் செய்கிறாரோ என்று மனதில் தோன்றுகிறது.
'எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ' என்ற ஆழ்வார் பாடிய பிறகு, இங்கு பிறந்த ஈ, எறும்பு கூட என்ன பாக்கியம் செய்ததோ என்று தான் தோன்றுகிறது.
யாரை பார்த்தாலும் பெரியவாளாக தோன்றுகிறது."
என்றார்.

ராமானுஜர் பிறகு, திருமலை ஏறி, பெருமானை தரிசித்தார்.

திருமலையை மற்ற  இயற்கையாக தோன்றிய மலை போலவா ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.
ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும்.

திருமலை ஏறி சென்று, ஆதிசேஷனின் தலை உச்சியில் இருக்கும் ரத்தினத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கும் வெங்கடேச பெருமாளை தரிசிப்போம்.