Followers

Search Here...

Showing posts with label சென்னியோங்கு. Show all posts
Showing posts with label சென்னியோங்கு. Show all posts

Tuesday 4 February 2020

பாசுரம் (அர்த்தம்) - சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் - பெரியாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். வைஷ்ணவன் ஏன் சிவன் கோவிலுக்கு வருவதில்லை? தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பாசுரம்

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய்
உலகு தன்னை வாழநின்ற நம்பீ! 
தாமோதரா! சதிரா!
என்னையும், என் உடைமையையும்
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் 
இனி என்திருக்குறிப்பே
-- திருமொழி (பெரியாழ்வார்)

பெரியாழ்வார், திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளை பார்த்து பேசுகிறார்.




"உலகமெல்லாம் வாழும்படியாக, திருமலையில் வீற்று இருக்கும் திருவேங்கடமுடையானே !!
கற்புள்ள (பதிவ்ரதை) ஒரு பெண், 'தன் கணவனே கண் கண்ட தெய்வம்' என்று இருப்பாள், 'மனதாலும் வேறு ஒரு ஆணை ஏறெடுத்தும் பார்க்காமல்' இருப்பாள்.
அது மட்டுமில்லாது,
பிற ஆண்கள் தன்னை பார்க்க நேர்ந்தாலும், 'இவள் வேறொருவனுக்கு சொந்தமானவள்' என்று உணர, கழுத்தில் தாலியும், காலில் மெட்டியும், நெற்றி உச்சியில் குங்குமமும் அணிந்து கொள்கிறாள்.
ஒரு பதிவிரதையான பெண், எப்படி தன்னையும் (மனது), தன் உடைமையையும் (உடல்), தன் கணவனுக்கே!! என்று ஒழுக்கத்துடன் இருக்கிறாளோ,
அது போல,
பெருமாளே!! ப்ரம்ம தேவன் முதல் என் வரை அனைவரையும் படைத்தவர் தாங்கள்.
நான் உங்களுடைய சம்பந்தம் உடையவன். உங்களை சேர்ந்தவன். 
எப்படி ஒரு பதிவ்ரதை, 
மனதாலும் கணவனையே நினைத்து கொண்டிருப்பாளோ, 
மற்றவர்கள் பார்த்தாலும் இவள் மணமானவள் என்று அறிந்து கொள்ள தன் கணவன் கட்டிய தாலியை அணிந்து கொண்டே இருப்பாளோ,
அது போல,
நானும் என் மனதில் உங்களுக்கு மட்டுமே இடம் கொடுத்து,
உங்கள் சக்கரத்தையும், சங்கையும் என் உடைமையான இந்த உடலில் முத்திரை இட்டு கொண்டு, 
உங்கள் பாதுகையையே என் நெற்றி திலகமாக இட்டு கொண்டு, 
துளசி மாலை அணிந்து கொண்டு,
'ஒரு ஸதி (மனைவி), தன் பதி தன்னை காப்பார்' என்ற இருப்பது போல, 'ஸதியான நான், நாயகனான உங்கள் அருளையே நோக்கி, உங்களுக்கே ஆட்பட்டு இருப்பேன்... இது என் முடிவே" என்கிறார்.

இதையே,
என்னையும் என் உடைமையையும்
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனி என்திருக்குறிப்பே
என்கிறார் பெரியாழ்வார்.

இங்கு,
'என்னை' என்று தன் ஆத்மாவை குறிப்பிடுகிறார்.
'உடைமை' என்று தன் உடலை குறிப்பிடுகிறார்.

'ஒரு பதிவ்ரதையின் (கற்புக்கரசி) நிலையே வைஷ்ணவனின் நிலையும்' என்று காட்டுகிறார் பெரியாழ்வார்.

மனதால் கூட அந்நிய புருஷனை நினைக்க மாட்டாள் - ஒரு பதிவிரதை.

பாரத மண்ணில் மட்டுமே அத்தகைய பதிவ்ரதைகள் இன்றும் உள்ளனர்.







ஒரு பதிவ்ரதையை பார்த்து,
"இது என்ன அநியாயம்... உன் புருஷனை மட்டுமே நினைக்கிறாய்!!
உன் புருஷனை போலவே பக்கத்து வீட்டு புருஷனும் நல்லவன் தான்.. 
ஏன் நீ அந்த புருஷனை பார்க்காமல் இருக்கிறாய்?"
என்று ஒழுக்கமுள்ள ஒருவன் கேட்பானா??...
'ஒழுக்ககேட்டின்' மொத்த உருவமான ராவணன்,
பிராம்மண ரிஷி குலத்தில் பிறந்தவனாக இருந்தும்,
ஒழுக்கமே உருவான தன் தம்பி விபீஷணன் இருந்தும்,
பேடித்தனமாக ராமபிரானை அப்புறப்படுத்தி விட்டு,
சீதையை தூக்கி வந்து விட்டு,
"ராமனை நினைத்து கொண்டு இருக்கிறாயே!! 
அவனை விட பராக்ரமும், குபேர செல்வமும், அழகும் கொண்ட என்னை ஏற்றுக்கொள்" என்று வெட்கமில்லாமல் கேட்டான்.
மஹா மட்டமான ராவணனை, ஏறெடுத்தும் பார்க்க விரும்பாத சீதை, "விலங்குக்கு சமமானமான இவன் புல் திங்கட்டும்" என்று அவன் எதிரில் ஒரு புல்லை பிடுங்கி போட்டாள் என்று பார்க்கிறோம்.

பக்தியில் பதிவ்ரதைகளின் தர்மமே தலை சிறந்தது.
அதுவே வைஷ்ணவ சித்தாந்தம் கூட.

ஏன் ஒரு தீவிர வைஷ்ணவன் சிவன் கோவிலுக்கு வருவதில்லை? 
சிவன் மட்டும் தெய்வமில்லையா? சிவ த்வேஷமா?
என்று சில அறிவு குறைந்தவர்கள் கேட்பார்கள்.

'வீண் பிடிவாதத்தால் சிவன் கோவிலுக்கு வர மாட்டேன்' என்று வைஷ்ணவன் சொல்வதில்லை.
ஒரு வைஷ்ணவன் 'வேறு கோவிக்குக்கு போகாமல் இருப்பதற்கு த்வேஷம் காரணமில்லை'.
ஒரு வைஷ்ணவன் 'வேறு கோவிக்குக்கு போகாமல் இருப்பதற்கு பதிவ்ரதா தர்மமே காரணம்'.

ஒரு பதிவிரதை வேறு ஒரு புருஷனை பார்க்க கூசுவது போல,
வைஷ்ணவன் இன்னொரு தெய்வத்தை பற்றி பேச்சு காதில் விழும்போது கூசி நிற்கிறான்.
இதற்கு, த்வேஷம் காரணமில்லை. பதிவ்ரதா தர்மமே காரணம்

ஒரு பதிவிரதையை பார்த்து, இன்னொரு புருஷனை பற்றி என்ன புகழ்ந்து சொன்னாலும் எடுபடாதது போல, 
உண்மையான வைஷ்ணவன் வேறு தெய்வங்களை மனதாலும் நினைப்பதில்லை. 

ஒரு பதிவ்ரதைக்கு எப்படி கணவன் மட்டுமே உலகமோ,
அது போல,
வைஷ்ணவனுக்கு பெருமாள் மட்டுமே உலகம். 

ஒரு பதிவ்ரதை, எப்படி மற்ற புருஷர்களை தன் கணவன் இடத்தில் வைத்து பார்க்க ஆசைப்படமாட்டாளோ, அது போல, 
வைஷ்ணவன், பெருமாளை தன் மனதில் இருந்து இறக்கி விட்டு, வேறு ஒரு தெய்வத்தை ஏற்று கொள்ள மாட்டான்.

பதிவிரதைகள், 'மற்ற புருஷர்களை பற்றி தவறாகவோ, நல்லதாகவோ கூட பேச தயங்குவார்கள். தனக்கு சம்பந்தமில்லாத விஷயம்' 
என்று தன் கணவனை பற்றியே நினைத்து கொண்டிருப்பார்கள்.
அது போல,
வைஷ்ணவனும், மற்ற தெய்வங்களை பற்றி உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசுவது கிடையாது.

ராவணனை போன்ற ஒழுக்ககேடானவன், ராமபிரான் இடத்தில் தன்னை ஸ்தாபிக்க நினைத்தால், ஒப்பீடு செய்ய துணிந்தால்,
இதை கேட்க முடியாத ஆத்திரத்தில், சில சமயங்களில் பதிவிரதைகளும் பிற புருஷனை தாழ்த்தி பேசும்படியாக நேருகிறது.
அது போல,
வைஷ்ணவனிடம் சென்று பிற தெய்வத்தை பற்றி ஒப்பீடு செய்யும் போது, கூசி நிற்கும் வைஷ்ணவன், 'தன் பெருமாளோடு வேறு ஒரு தெய்வத்தை பேசுகிறானே!' என்று ஆத்திரப்பட்டு, தான் பெருமாளை சேர்ந்தவன் என்று பாடம் புகட்ட, அந்நிய தெய்வத்தை குறை சொல்லும்படியாக நேர்ந்து விடுகிறது.

அவரவர் இஷ்ட தெய்வங்களே, அவரவர்களுக்கு நாயகன்.
அதுவே உண்மையான பக்தி.
அதுவே உண்மையான திட பக்தி.




பத்வரதா தர்மமான வைஷ்ணவ தர்மத்தில், 'ஹனுமானுக்கு' உயர்ந்த ஸ்தானம் கொடுக்கப்பட்டு உள்ளது..

வைஷ்ணவர்கள், பெருமாளை வணங்குகிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.
சைவர்கள், சிவபெருமானை வணங்குகிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.
ஹனுமானுடைய பக்தி பதிவிரதை தர்மத்தில் மிக சிறந்தது.
பரமபதத்தை விட்டு, நாராயணன் ராமபிரானாக பூலோகத்தில் அவதரித்தார்.
அதே நாராயணன், ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்த போதும், 
ஹனுமான் 'ஸ்ரீ கிருஷ்ணரை ராமபிரான் இடத்தில்  ஏற்றுக்கொள்ளவில்லை'.
அது மட்டுமா!!

ராமபிரானே "நான் சாக்ஷாத் நாராயணன். வைகுண்டம் புறப்பட போகிறேன்.. வருகிறாயா?" என்று கேட்டதற்கு,
"நாராயணனே இவருக்கு அந்நிய புருஷனாக தோன்ற, நான் ராமபிரானின் தியானத்திலேயே பூலோகத்தில் இருக்கிறேன். வைகுண்டம் கூட வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்.

கணவன்,
வீட்டில் ஒரு விதமான ஆடை அணிந்து கொண்டும்,
வேலைக்கு செல்லும் போது அதற்கான ஆடைகள் அணிந்து கொண்டும் இருப்பான்.
எந்த ரூபத்தில் இருந்தாலும், மனைவிக்கு அவன் கணவன் தானே!!..
ஒரு வைஷ்ணவன் இப்படி தான் பெருமாளை பார்க்கிறான்..

தன் பெருமாள் தான் , ஸ்ரீரங்கத்தில் ஒரு ரூபத்தில், திருப்பதியில் ஒரு ரூபத்தில், தன் வீட்டில் சின்ன விக்கிரக ரூபத்தில், நாராயணனே ராமராக, கிருஷ்ணராக, நரசிம்மமாக, பரசுராமராக இருக்கிறார்
என்று அனைத்து ரூபத்தையும் சேவிக்கிறான் வைஷ்ணவன்.

ஆஞ்சநேயர் 'வைஷ்ணவர்களில் உத்தம வைஷ்ணவர்'.

சில மனைவிகள், ஆபிஸ்க்கு ஏற்ற அலங்காரத்தில் கணவன் இருந்தால், அவன் பக்கமே திரும்ப மாட்டாள். அவர் ஏதோ வேலையாக இருக்கிறார் என்று இருந்து விடுவாள்.
வீட்டில் சாதாரண உடையுடன் இருக்கும் போது மட்டுமே உரிமையுடன் பேசுவாள்.
அது போல,
'ராமபிரான் தான் கண்ணன், அவரே தான் நாராயணன்' என்று தெரிந்தாலும், ஹனுமான், பெருமாள்  ராமபிரானாக வந்தால் தான் ஏற்று கொள்வார்.

இந்த 'திட பக்தியின் காரணமாகவே, வானர ஜாதியில் பிறந்தாலும், வைஷ்ணவர்கள் இவரை ஜாதி பார்க்காமல் வைஷ்ணவர்களில் உத்தமர்' என்று கொண்டாடுகின்றனர்.

ஒரு வைஷ்ணவன்,
உடைமையான தன் உடலில் கோபியும், தோள்களில் சங்கு சக்கர முத்திரை இட்டு கொள்வதற்கு காரணம், இந்த பதிவ்ரதா தர்மமே!!

உடலில் வைஷ்ணவன் போல திருமண் காப்பு இட்டு கொண்டு, 
மனதில் வேறு தெய்வ சிந்தனை இருப்பது என்பது,
தாலி கட்டி கொண்டு, மனதில் வேறு ஒரு புருஷனை நினைப்பது எப்படியோ அது போன்றாகும்..

ஆதலால் தான், பெரியாழ்வார்
"எனக்கும்" "என் உடைமைக்கும்" என்று மனதையும், உடலையும் சொல்லி, 'இந்த இரண்டிலுமே பெருமாளின் சக்கரத்தை ஒற்றிக்கொண்டு இருக்கிறேன்' என்று திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளிடம் ஆத்ம சமர்ப்பணம் பூரணமாக செய்கிறார்.

பெருமாளின் சொத்தான நாம்,
ஜென்ம ஜென்மங்களாக பிறந்து இறந்து கொண்டு இருந்தாலும்,
இன்றுவரை மோக்ஷம் அடைய வேண்டும் என்ற நினைவே இல்லாமல்,
பெருமாளிடம் பக்தியே செய்யாமல்,
அவர் பக்கமே திரும்பி பார்க்காமல்,
எங்கோ பரதேசி போல அலைந்து கொண்டிருந்த போது,
ஒரு நாள், நம்மை எதிர்பாராவிதமாக திருமலைக்கு வர செய்து, தடுத்து நிறுத்தி, தன் திருவடியை காட்டி,
"நீ என்னை சேர்ந்தவன். எனக்கு ஆட்பட்டவன் நீ"
என்று "தான் இருப்பதை" புரிய வைத்து, தன்  சாமர்த்தியத்தால் எம்பெருமான் நம்மை பிடித்து விடுகிறார்.
பெருமாளின் இந்த சாமர்த்தியத்தை எண்ணி "சதிரா" என்று அழைக்கிறார், பெரியாழ்வார்.

"சதிரா" என்றால் சாமர்த்தியசாலி என்று பொருள்.

"தாமோதரா! சதிரா!"
என்று பெருமாளை அழைக்கிறார்.

நலகூபுர, மணிக்ரீவ என்ற தேவர்கள் சாபத்தால் மரமாக போய் விட்டார்கள்.
தான் தேவன் என்பதை மறந்து, மரமாகவே இருந்து கொண்டிருந்தார்கள்.
'தான் யார்?' என்று தெரியாமலேயே, இவர்கள் இருந்து கொண்டு இருக்க,

இவர்களை, உரலை இழுப்பது போல,
தாமோதர கண்ணன், தன் சாமர்த்தியத்தால் மரத்தை சாய்க்க,
"தேவர்கள் வெளிப்பட்டு, தான் யார் என்ற உண்மையை உணர்ந்து", தேவலோகம் சென்றனர்.

இப்படி 'தான் யார்?' என்று தெரியாமலேயே,
யார் யாரையோ எஜமானன் என்றும்,
யார் யாரையோ தெய்வம் என்றும்,
நம்பி அலைந்து கொண்டிருக்கும் நம்மையும்,
அந்த தாமோதரன் தன் சாமர்த்தியத்தால் வளைத்து பிடித்து, தன் அருகில் வைத்து கொண்டு, மோக்ஷ வரை தந்து விடுவார் என்பதால்,
"தாமோதரா சதிரா" என்று திருமலையப்பனை அழைக்கிறார்.