Followers

Search Here...

Showing posts with label மரியாதை. Show all posts
Showing posts with label மரியாதை. Show all posts

Friday 20 March 2020

மரியாதை சொற்கள் பற்றி தெரிந்து கொள்வோமே...

தெய்வத்துக்கு சமமாக பூஜிக்க  தகுந்த மாகாத்மாக்களை கண்டால், "தேவரீர்" என்று அவரை சொல்கிறோம்.
நர்குணங்கள் நிரம்பிய இவர்களை காணும் போது,
நம்மை "தாசன்" என்றும், "இவன்" என்றும், "இது" என்றும் கூட சொல்லிக்கொள்கிறோம்.

"தாசன், இவன், இது" என்று நம்மை சொல்லிக்கொள்வது, நம்மை தாழ்த்திக்கொள்வதற்காக அல்ல.
நம்மை தாழ்த்தி, அவரை உயர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையால், குருநாதரின் உயரிய குணத்தால், இப்படி சொல்கிறோம்.

ஹனுமான் ராமபிரானை விட வயதில் மூத்தவர். நன்கு படித்தவர், ஞானம் உடையவர்.
இருந்தாலும், ராமபிரானின் எல்லையில்லா நற்குணங்கள் இவரை "தாசன்" என்று சொல்லிக்கொள்ள செய்தது.

பூஜிக்க தக்கவர்களிடம், கர்வத்தை காட்டும் படியாக  "நான்" என்று கூட சொல்லிக்கொள்வதில்லை.

வைஷ்ணவர்கள், தன்னை
"அடியான்" என்றும்,
"தாசன்" என்றும்
பெருமாளை பார்த்தும்,
ஆச்சாரியனை பார்த்தும், மற்ற வைஷ்ணவர்களை பார்த்தும், இப்படி தன்னை சொல்லிக்கொள்வார்கள் என்று பார்க்கிறோம்.

அடுத்த நிலையில், மரியாதைக்கு உரியவர்களை, "தாங்கள்" என்று சொல்லி அழைக்ககிறோம்.
இவர்களிடம் "நீங்கள்" என்ற சொல் கூட மரியாதை குறைவான சொல் என்று தோன்றும். ஆதலால், "தாங்கள்" என்று சொல்லி அழைக்ககிறோம்.

இவர்களிடம் பேசும் போது, "தாங்கள் நம் வீட்டுக்கு வர வேண்டும்" என்று விண்ணப்பம் செய்வோமே தவிர,
"நீங்கள் என் வீட்டுக்கு வர வேண்டும்" என்று சொல்வது கூட, அதிக பிரசங்கி தனமோ என்று கூட நமக்கு தோன்றும்.




அதற்கும் கொஞ்சம் கீழ் உள்ளவர்களிடம் பழகும் போது, "நீங்கள்" என்று சொல்கிறோம்.
நம்மைவிட வயதில் மூத்தவர்களை "நீங்கள்" என்று பொதுவாக சொல்வது வழக்கம்.

அதற்கும் கீழ் உள்ளவர்களிடம் பழகும் போது, "நீர்" என்று சொல்கிறோம்.

அதற்கும் கீழ் உள்ளவர்களிடம் பழகும் போது, "நீ" என்று சொல்கிறோம்.
நண்பர்களை "நீ" என்று பொதுவாக சொல்வது வழக்கம்.

பொதுவாக இவை அனைத்துமே குணத்தை வைத்து ஏற்பட்ட மரியாதை சொற்கள்.

அவரவர் யோக்யதைக்கு தக்கபடி, இப்படி பல வித மரியாதை சொற்களை பயன்படுத்துகிறோம்.

Saturday 6 October 2018

ராமபிரானுக்கு "மரியாதை ராமன்" என்று ஏன் பெயர் ஏற்பட்டது? நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? - காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்ஸர்யம்

மரியாதை ராமன்

மரியாதை என்ற சமஸ்கரித சொல்லுக்கு "எல்லை" (Boundary) என்று பொருள்.

தன் எல்லைகளை உணர்ந்தவனை, "மரியாதை தெரிந்தவன்" என்று பொதுவாக சொல்வோம்.



  1. காம, 
  2. க்ரோத, 
  3. லோப, 
  4. மோக, 
  5. மத, 
  6. மாத்ஸர்யம்


என்ற 6 விஷயங்களில் மனிதன் எல்லை தாண்ட கூடாது. இப்படி எல்லை தாண்டாதவன் தன் மரியாதையை காத்துக்கொள்கிறான்.
பரவாசுதேவன் நாராயணன், ஸ்ரீராமராக மனித அவதாரம் செய்து, இந்த 6 விஷயங்களில் எல்லை தாண்டாமல், வாழ்ந்து காட்டினார். இதனாலேயே ராமரை, மரியாதை ராமன், மரியாதா புருஷன் என்று அழைக்கிறோம்.

1. காமத்தை ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
சூர்ப்பனகை ஒரு அழகான பெண் வடிவம் எடுத்து, ஸ்ரீ ராமரை மயக்க நினைத்தாள்.
ஆனாலும், ஸ்ரீ ராமர் அவளிடம் மயங்கவில்லை. தான் மணமானவன் என்றும் சொல்லி விலகினார்.
அவளே வந்து மயக்க நினைத்த போதும், "இம்மையில் இரு மாதரை சிந்தையிலும் தொடேன்" என்று எல்லை தாண்டாமல் இருந்தார் ஸ்ரீராமர்.
காமத்தை ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

2. க்ரோதத்தை (கோபத்தை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
தன் மனைவியை ஒரு அசுரன் காக்கை வடிவில் வந்து தீண்ட பார்த்ததற்கே, ஒரே ஒரு ராம பாணத்தில் ஏழு லோகங்கள் ஓடியும் அவனை துரத்தி காலில் விழ வைத்தார்.
தன் மனைவியை இலங்கை தூக்கி சென்று விட்ட ராவணனை, நின்ற இடத்திலேயே ராம பாணத்தால் கொல்லும் சக்தி இருந்தும், கோபத்தை ஒரு  எல்லைக்குள் கட்டுப்படுத்தி, வானர சேனை உருவாக்கி, வானரர்கள் துணை கொண்டு சேது அமைத்து, இலங்கை சென்று, ராவணனுக்கு எச்சரிக்கை கொடுத்து, போரில் ஒரு முறை அவனை மன்னித்து, கடைசியில் அவனை கொன்று சீதையை மீட்டார்.
க்ரோதத்தை (கோபத்தை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.






3. லோபத்தை (பண பேராசை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
கைகேயி 24 வயது ஸ்ரீராமரை பார்த்து, "உன் அரச பதவியை பரதனுக்கு கொடுத்து விட்டு, நீ காட்டுக்கு போ" என்று சொல்ல,
கொஞ்சம் கூட சலனமில்லாமல்,
"இருக்கட்டுமே. என் தம்பிக்கு தானே கொடுக்கிறேன். பரதனே ஆளட்டும்" என்று தாராள மனதோடு காட்டுக்கு சென்றார்.
ஒரே தாய் வயிற்றில் பிறந்த அண்ணன், தம்பி, தங்கை, அக்காக்களே இன்றைய காலத்தில் சொத்து என்றதும் சண்டை போட்டு கொள்ளும் அலங்கோலத்தை நாம் பார்க்கிறோம்.
பரதன் வேறு தாய்க்கு பிறந்தாலும், பணத்தில் பேராசை இல்லாமல் இருந்தார் ஸ்ரீ ராமர்.
லோபத்தை (பண பேராசை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

4. மதம் (ஆணவத்தை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
ஆண்மை, வீரம், கல்வி, எல்லையில்லா நற்குணங்கள் என்று அனைத்தும் இருந்தும், ஸ்ரீ ராமர், மஹரிஷிகளை எங்கு பார்த்தாலும், ஆணவமே இல்லாமல், உடனே அவர்களை வணங்கி, பாத சேவை செய்வார்.
தான் அரசன் மகன் என்ற ஆணவம் துளி கூட காட்டமாட்டார்.
மதம் என்ற ஆணவத்தை ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

5. மோகத்தை (விருப்பம்) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
வனவாசம் முடிந்து, ராவணனிடம் அகப்பட்ட சீதையை மீட்டு, ராம பட்டாபிஷேகம் செய்து கொண்டு, பல ஆண்டுகள் ஆட்சி செய்து கொண்டு வந்தார் ஸ்ரீராமர்.
ஒரு சமயம், ஒரு சலவை தொழிலாளி "ராவணன் தூக்கி சென்ற சீதையை ஸ்ரீ ராமர் ஏற்றுக்கொண்டார். நானாக இருந்தால் ஏற்றுக்கொண்டு இருக்க மாட்டேன்" என்று சீதையை தரம் தாழ்த்தி பேசி விட்டான்.
இந்த செய்தி ஸ்ரீராமருக்கு எட்டியது.
தான், தன் குடும்பம், என்ற  மோகத்தை (விருப்பத்தை) விட, மக்களின் மனம் கோணக்கூடாது என்று இருப்பவர் ஸ்ரீராமர்.



அரசன் எடுக்கும் நல்ல முடிவுகளை புரிந்து கொள்ளாமல், மக்கள் தவறான அபிப்ராயம் கொண்டிருந்தால், அரசன் அதன் நியாயங்களை சொல்லி புரிய வைக்க வேண்டும்.

அரசன் எடுத்த தவறான முடிவை மக்கள் கண்டித்தால், அரசன் அதை ஆராய்ந்து, எடுத்த தவறான முடிவுகளை சரி செய்ய  வேண்டும்.

இன்னும் சில சமயங்களில்,
அரசன் எடுக்கும் நல்ல முடிவை கூட புரிந்து கொள்ளாமல், மக்கள் தவறான அபிப்ராயம் கொண்டிருந்தால், அரசன் அதன் நியாயங்களை சொல்லி புரிய வைப்பது சாத்தியமில்லை என்று தெரிந்தால், அது நல்ல முடிவாக இருந்தாலும் மக்களின் மனம் கோணாமல் இருக்க, நல்ல முடிவுகளையும் கைவிட வேண்டும்.

சீதை கலங்கமற்றவள், என்று இலங்கையில் வானரர்கள், விபீஷணன் முன்னிலையில் அக்னி பிரவேசம் செய்து நிரூபித்தாள்.

ஆனால், அயோத்தியில், சீதையின் மேல் சொல்லப்பட்ட அவதூருக்கு, மீண்டும் அக்னி பிரவேசம் செய்து காட்டு என்று சொன்னால், இது போன்று வேறு யாராவது சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள்.
ஒவ்வொரு முறையும் சீதையை அக்னி பிரவேசம் செய் என்று சொல்ல முடியாது. இது சீதைக்கு இழைக்கும் அநியாயம்.

மக்களை பற்றி கவலையில்லை என்று அரசனால் இருக்க முடியாது. ஸ்ரீ ராமரோ அயோத்திக்கு அரசர்.
இதற்கு நிரந்தர நியாயம் வழங்க முடியாது. இதற்கு ஒரே வழி, அரசனான தன் மோகத்தை (ஆசையை) தியாகம் செய்வது ஒன்றே என்று
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் காலம் தாமதிக்காமல், சீதையை தியாகம் செய்து காட்டுக்கு அனுப்பினார். மீதி காலங்களை சீதை வால்மீகி ஆஸ்ரமத்தில் கழித்தாள் சீதை.

அரசனாக இருப்பதால், தன் தனிப்பட்ட மோகத்தை (விருப்பத்தை) கூட எல்லையில் வைத்தார் ஸ்ரீ ராமர்.
மோகத்தை (விருப்பம்) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

6. மாத்ஸர்யம் (பொறாமை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
கைகேயி தசரதனிடம் வாங்கிய இரண்டு வரங்களை கொண்டு, தன் மகன் பரதன் நாட்டை ஆள வேண்டும், ஸ்ரீ ராமன் காடு செல்ல வேண்டும் என்று கேட்க, ஸ்ரீ ராமர், நாட்டை பரதனே ஆளட்டும் என்று ஏற்று, தான் காட்டுக்கு புறப்பட்டார்.

விஷயம் அறிந்து சிந்து தேசம் சென்றிருந்த பரதன் அழுது, வனத்தில் இருக்கும் ஸ்ரீ ராமர் இருக்கும் இடத்திற்கு வந்து அரசாட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்க வந்தான்.
ஸ்ரீ ராமர், இன்றைய நிலையில் பரதன் அரசனாக இருப்பான் என்பதால்,
"தசரத சக்கரவர்த்தியின் குமாரனான இன்றைய சக்கரவர்த்தியே என் வணக்கம்" என்று உள்ளம் உகந்து, துளி கூட மாத்ஸர்யம் (பொறாமை) இல்லாமல் வரவேற்று பேசினார் ஸ்ரீராமர்.



ஸ்ரீ ராமரின் இந்த குணத்தை கண்டு, துக்கத்தில் நெஞ்சம் வெடித்து விடும் நிலையில் பரதன் இருந்தார். தன்னை பற்றி துளி கூட பொறாமையோ, கோபமோ இல்லாமல் இருக்கிறாரே ஸ்ரீராமர் என்று அழுதார் பரதன்.
மாத்ஸர்யம் (பொறாமை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

இப்படி காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்ஸர்யம் என்ற 6 விஷயங்களில் ஒரு மனிதன் எல்லை தாண்ட கூடாது, என்று தன் வாழ்வில் நடத்தி காட்டிய ஸ்ரீராமரை "மரியாதை ராமன்" என்று தானே சொல்ல வேண்டும்.

ஸ்ரீ ராமரை வெறுப்பவன், மனித நற்குணங்களை வெறுக்கிறான். அப்படிப்பட்டவர்களை  விலங்குக்கும் கீழ்நிலை குணம் உடையவர்கள் என்று ஒதுக்குவதே சிறந்தது.

ஸ்ரீ ராமர் வாழ்க. மரியாதை ராமன் வாழ்க.