Followers

Search Here...

Showing posts with label மேல்கோட்டை. Show all posts
Showing posts with label மேல்கோட்டை. Show all posts

Saturday 2 December 2017

நாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார். மேல்கோட்டை செல்லப்பிள்ளை சம்பந்தமாக ராமானுஜர் வாழ்வில் நடந்த சம்பவம்.

கைங்கர்யம், செல்லப்பிள்ளை



ஸ்ரீ ராமானுஜர், வரதராஜனுக்கு காஞ்சியில் சேவை செய்து கொண்டிருந்தார்.

பின்னர், ஸ்ரீரங்கநாதர், இங்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு அழைக்க, கடைசி வரை ஸ்ரீரங்கநாதருக்கே சேவை செய்து கொண்டு ஸ்ரீ ரங்கத்திலேயே இருந்தார்.

ஸ்ரீ ராமானுஜருக்கு, பெருமாளுக்கு முன் தான் 'தாஸன்' என்ற மனோபாவம் உண்டு. அவரே புருஷன் என்பதால், அவருக்கு ஸ்திரீ ஆகிறான்.

இதனால், ஸ்ரீ ராமானுஜருக்கு, தான் ஸ்திரீ என்ற நிலையில், காஞ்சிபுரம் இவருக்கு பிறந்த ஊராக மனோபாவம்.
காஞ்சி வரதனே இவரின் 'தந்தை'.

காலத்தில் ஒரு தகப்பன் நல்ல வரன் பார்த்து, தன் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து அனுப்புவது போல,
இவரை ஸ்ரீ ரங்கநாதருக்கு சேவை செய்ய அனுப்பி விட்டார்.

இதனால், ஸ்ரீ ராமானுஜருக்கு, தான் ஸ்திரீ என்ற நிலையில், ஸ்ரீரங்கம் இவருக்கு புகுந்த ஊராக மனோபாவம்.
ரங்கநாதரே இவரின் 'கணவன்'. கம்பீரமானவர்.

சோழ அரசன் "கிருமி கண்ட சோழன்" சைவ வெறி தலைக்கு ஏறி, ஸ்ரீ ரங்கத்தையே கலவர பூமியாக்கினான்.

ஸ்ரீ ராமானுஜர் கலவரத்தால் வெளியேறி, 12 வருடங்கள் கர்நாடகாவில் உள்ள திரு நாராயணாபுரம் என்ற மேல்கோட்டையில் வாசம் செய்தார்.
அங்கு இவருக்காகவே, செல்லப்பிள்ளையாக பெருமாள் கிடைத்தார். அங்கேயே தங்கி, செல்லப்பிள்ளைக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.

12 வருடங்கள் ஆகி விட்டதால், ஸ்ரீரங்க பெரிய பெருமாளுக்கு, ஸ்ரீ ராமானுஜர் மேல் கோட்டையிலேயே இருந்து விடுவாரோ!! என்று கூட தோன்றி விட்டது.
அதனால், பெரிய பெருமாளே, ராமானுஜரை உடனே  திரும்பி வர சொல்லி விட்டார்.

ராமானுஜருக்கோ நிலை கொள்ள முடியாத நிலை.
ஸ்ரீ ரங்கம் சென்றால், செல்லப்பிள்ளையை விட்டு பிரிய வேண்டும்.

அப்பொழுது தான் யதியாக (சந்யாசி) இருக்கும் ஸ்ரீராமானுஜருக்கு ஒரு தாய், தன் பிள்ளையை விட்டு பிரிய வேண்டும் என்கிற நிலையில், எத்தனை மனத் துயரம் அடைவாள் என்ற அனுபவம் கிடைத்ததாம்.

தன் பிள்ளை வேலைக்காக எங்கோ சென்று வாழ்கிறான்.
வயதான கணவனோ தான் இருக்கும் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று அடம் பண்ணுகிறார்.

பிள்ளை ஒழுங்காக சாப்பிட்டானோ?!! 
நல்ல உடை உடுத்திக் கொள்கிறானோ?!! 
என்று கவலைப்பட்டு, ஒரு வாரம் அவனோடு இருக்கலாம் என்று தன் பிள்ளையுடன் தங்கினாள்.

ஒரு வாரம் ஆனதும், தானும் வர மாட்டேன் என்று இருக்கும் கணவன் ஞாபகமும் வர, அவர் என்ன சமைத்தாரோ!! உடம்புக்கு ஏதாவது வந்தால் யார் பார்த்துக் கொள்வார்கள்? என்று இரக்கமும் வந்து, பிள்ளையையும் பிரிய முடியாமல் தவித்தாள்.

பிள்ளைக்கு தேவையான அனைத்து பக்ஷணம், வீட்டுக்கு தேவையான அனைத்தும் வாங்கி கொடுத்து, அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் போய், தன் பிள்ளைக்கு ஒன்றும் தெரியாது, கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு, பிள்ளையை பிரிய முடியாமல் ஒரு தாய், தன் கணவன் இருக்குமிடம் திரும்பிச்  செல்கிறாள்.



அதே மனநிலையில் இருந்த ஸ்ரீ ராமானுஜர், தனக்காக கிடைத்த "செல்லப்பிள்ளை"யான நாராயணனை தான் பெற்ற பிள்ளையாக 12 வருடம் ஆசையோடு வளர்த்து வந்தார்.

பெரிய பெருமாள் கூப்பிட, அவருக்கு தன்னை விட்டால் யார் ஒழுங்காக  பார்த்துக்கொள்வார்கள் என்று மனைவி நினைப்பது போன்று, ஸ்ரீ ராமானுஜர் ஒத்துக்கொண்டு, மேல்கோட்டையில், பெரிய பெருமாளுக்கு என்ன என்ன உத்ஸவங்கள் உண்டோ, பூஜை உண்டோ அனைத்தையும் ஏற்பாடு செய்து, வைஷ்ணவர்களை குடி அமர்த்தி, ஒரு குறையும் தன் செல்ல பிள்ளைக்கு வந்து விடக்கூடாது என்று எல்லாவிதமான ஏற்பாடுகளும் செய்து விட்டு திரும்பி புறப்படுகிறார்.

கிளம்பும் போது, அங்கு இருந்த வைஷ்ணவர்களை பார்த்து, யதிராஜர், தானே ஒரு தாயாகி, கண்களில் கண்ணீர் ததும்ப,
"செல்லப்பிள்ளையை கிணத்தடி பிள்ளைபோல கவனித்து கொள்ளுங்கள்" என்றாராம்.

"கிணற்றுக்கு அருகில் அம்மா துணி தோய்த்து கொண்டிருந்தாலும், குளித்து கொண்டிருந்தாலும் கூட, தன் பிள்ளை அந்த கிணற்றுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தால், கவனிக்காமல் தவறி விழுந்து விட போகிறதே என்ற பயத்தில் ஒரு கண் தன் பிள்ளை மீதே வைத்துக்கொண்டு தன் காரியங்களை செய்வது போல, வைஷ்ணவர்களாகிய நீங்களும் உங்கள் காரியத்தை செய்து கொண்டிருந்தாலும், செல்லப்பிள்ளையை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்" என்றாராம் ஸ்ரீ ராமானுஜர்.

எப்படி ராமானுஜர் செல்லப்பிள்ளையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னாரோ, அதே போல தான், நம்மிடமும் சொல்லிவிட்டு சென்றார் என்று உணரும் போது, நமக்கும் அரச்சா அவதாரத்தில் பக்தி வரும்.

பெருமாளிடம் என்ன வரம் வாங்கலாம்? என்ற எண்ணத்தை விட, நமக்காக இங்கேயே தங்கி விட்டாரே!! இவருக்கு நாம் என்ன சேவை செய்யலாம்? என்று எண்ணம் தோன்றும்.
இதுவே பக்தி.

நமக்காக வைகுண்டத்தை விட்டு ஸ்ரீ ரங்கநாதனாகவும், திருமலையப்பனாகவும், வரதராஜனாகவும், பத்ரி நாதனாகவும், அர்ச்ச அவதாரம் தாங்கி சேவை செய்வதற்கு வாய்ப்பு தருகிறார் பக்தனுக்கு.

நாம் சாப்பிடும் உணவில், தினமும் ஒரு கைப்பிடி அரிசியாவது, அருகில் தீபம் கூட ஏற்றாமல் இருக்கும் கோவிலில் சென்று கொடுக்கலாம்.

தன் வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று ஒரு தீபம் ஏற்றலாம்.

சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பு இது !! என்று உணர்ந்தால், நமக்காக பெருமாள் அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார் என்பது புரியும்.

நாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்தால், ஒரு உண்மையான பக்தனுக்கு, சேவை செய்யாமல் எப்படி இருக்க முடியும்?



இந்த உணர்வு, ஹிந்துக்களுக்கு வந்தாலே, அரசாங்கமும் தேவை இல்லை, கோவில் நிர்வாகமும் தேவை இல்லை.
அனைத்து கோவில்களிலும் தீபம் எரியும்.

நமக்காக அல்லவோ அர்ச்ச அவதாராமாக நிற்கிறார் என்ற 'உணர்வு' வந்தாலே போதும், நமக்கு சேவை செய்ய வேண்டும் என்ற புத்தி வந்து விடும்.

சக்கரவர்த்தியாக இருந்த அம்பரீஷன், தன் மனைவி கோவிலில் கூட்டி பெருக்க, தான் பெருமாளுக்கு தீவெட்டி பிடிப்பாரராம்.

அவர் மாளிகையில், அவருக்கு பணிவிடை செய்ய 100 வேலைக்காரர்கள் உண்டு.
பின்பு ஏன் இப்படி செய்கிறார்?
கோவிலை பெருக்க ஆள் போடலாமே?
தீவெட்டி பிடிக்க ஆள் போடலாமே?
என்றால், அம்பரீஷன் சொல்கிறார்,
"நான் இந்த தேசத்துக்கு சக்கரவர்த்தி, ஆனால் எம்பெருமானோ அகிலத்துக்கும் சக்கரவர்த்தி ஆயிற்றே.
அவர் அர்ச்ச அவதாரம் எடுத்து இருக்கும் போது, இந்த சந்தர்ப்பத்த்தில்  நானே சேவை செய்யாமல் எப்படி இருக்க முடியும்?.
மேலும் நான் இந்த சேவையை என் வேலைகாரனிடம் கொடுத்து செய்ய சொன்னால், அது புண்ணியமாகி போகும். கர்மாவாகிவிடும்.
நானே செய்தால்,பெருமாளுக்கு நான் செய்யும் சேவையாகி விடும். மோக்ஷத்திற்கு வழி செய்யும். நான் அதையே விரும்புகிறேன்" என்றார்.

நம்மால் முடிந்த அளவு சிறிது அரிசி, பூ, தீபம் ஏற்றினால் கூட அர்ச்ச அவதாரமாக இருக்கும் பகவான் நம் சேவையை பரிபூரணமாக ஏற்று, அணுகிரஹிக்கிறான்.

வீட்டில் இருக்கும் விக்ரஹமும், நாம் எந்த அளவு சேவை செய்ய ஆசையோடு இருக்கிறோம் என்று தான் காத்துக் கொண்டு இருக்கிறார்.

நாம் பூஜை செய்யாமல், அழுக்காக விக்ரஹ ரூபத்தில் உள்ள தெய்வங்களை அவமதித்திக்க கூடாது.
என்றாவது ஒரு நாள் இவன் நமக்கு சேவை செய்வானா?
இவனுக்கு அதன் பலனாக மோக்ஷமும் கொடுத்து விடலாமா?
என்று நமக்காகவே நம் வீட்டிலும், கோவிலிலும் அர்ச்சா திருமேனியுடன் நாம் செய்யும் அபச்சாரங்களை சகித்துக்கொண்டு, சேவை செய்வானா? என்று காத்துக்கொண்டு இருக்கிறார்.

பெருமாளின் சேவையே பக்தி. பெருமாளின் சேவையே மோக்ஷத்திற்கு வழி.

Hare Rama Hare Krishna - Bhajan
Sandhya Vandanam - Morning




Sandhya Vandanam - Evening

Sandhya Vandanam - Afternoon