Followers

Search Here...

Showing posts with label பார்க்கிறார்கள். Show all posts
Showing posts with label பார்க்கிறார்கள். Show all posts

Thursday 15 August 2019

சந்தியா வந்தனத்தை, மகான்கள் எப்படி பார்க்கிறார்கள்? நாம் தெரிந்து கொள்வோமே...

சந்தியா வந்தன மந்திரங்களை,
சந்தியா வந்தனம் அமைக்கப்பட்ட க்ரமத்தை (வரிசையை),
நாம் நன்றாக கவனித்தோமானால்,
அதில் அதி அற்புதமான "ஆனந்தம்" என்ற பொக்கிஷம் உள்ளது என்று புரிந்து விடும்.


மேலும் நாம் நன்றாக கவனித்தோமானால்,
ஒரு சாதாரண மனிதன், பகவானை எந்த வழியில் அடைய முயற்சிக்க வேண்டும்? என்ற ரகசியமும் வெளிப்படையாக காட்டுகிறது என்பதும் புரிந்து விடும்.   .

ஒரு சின்ன 5 நிமிட பிரார்த்தனையில் "வேதத்தின் சாரத்தை, பேரானந்தத்தை தரக்கூடிய பொக்கிஷத்தை அடக்கி கொண்டு உள்ளது, சந்தியா வந்தனம்" என்று புரிந்து விடும்.

இந்த ஆனந்தத்தை மகாத்மாக்கள் புரிந்து இருப்பதால், சந்தியா வந்தனம் செய்வதை மிகவும் விரும்பி செய்கிறார்கள்.

சந்தியா வந்தனம் செய்யும் போது மகாத்மாக்கள் அனுபவிக்கும் அந்த ஆனந்தம் என்ன? என்று நாமும் புரிந்து கொள்வோமே!!
ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சந்தியா வந்தனம் எப்படி உள்ளது? என்று நன்றாக கவனித்து பாருங்கள்..

"அச்சுதாய நம:, அனந்தாய நம:, கோவிந்தாய நம:" என்று சொல்லும் போது,
இது "பகவானின் பெயர்கள், வேத மந்திரங்கள்" என்று மட்டும் நாம் நினைத்தால், மகாத்மாக்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது, நாம் அனுபவிக்கவும் முடியாது.
மகாத்மாக்கள் "அச்சுதா அனந்தா, கோவிந்தா" என்று பரமாத்மாவின் பல பெயர்களை சொல்ல சொல்ல,
பகவானின் பெயரை தன் வாயார சொல்லி அழைக்க, ஆனந்தமாக அனுபவிக்க கிடைத்த வாய்ப்பாக பார்க்கிறார்கள்.

ஒவ்வொரு பெயரையும் சொல்லும் போதே, பஜனை செய்த ஆனந்தத்தை மகாத்மாக்கள் அனுபவிக்கிறார்கள்.
கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, த்ரிவிக்ரமா, என்று சொல்ல சொல்ல பஜனை செய்த ஆனந்தத்தில் மகாத்மாக்கள்  திளைக்கிறார்கள்.

இதனால் மகாத்மாக்கள், சந்தியா வந்தனத்தை ஆசை ஆசையாக செய்கிறார்கள்.

தனியாக பஜனை செய்ய கூட தேவை இல்லாமல், சந்தியா வந்தனமே பரமாத்மாவை பல பெயர்கள் கொண்டு பஜிக்கும் அழகை மகாத்மாக்கள் ரசிக்கிறார்கள்.
"மமோபாத்த சமஸ்த.." என்று சொல்லி, "பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்" என்று முடிக்கும் போது,
"பரமேஸ்வரன் நான் செய்யும் சந்தியா வந்தனத்தை கண்டு ஆனந்தம் அடைகிறார். என்னை கண்டு பிரியம் கொள்கிறார்" என்று சொல்லும் போதே தான் செய்யும் சந்தியா வந்தனத்தில் பரமேஸ்வரன் ப்ரீத்தி அடைகிறாரே !! என்று மகாத்மாக்கள் மேலும் உற்சாகம் அடைகின்றனர்.


"தான் மட்டும் ஆனந்தத்தை அனுபவிக்கவில்லை. 
சந்தியா வந்தனம் செய்யும் என்னை பார்த்து பரமேஸ்வரனும் பிரியம் கொள்கிறார்" என்ற உண்மையை உணர்ந்து, மேலும் உற்சாகமாக அடைகிறார்கள்.

சந்தியா வந்தனமே, ஆரம்பம் முதல் கடைசி வரை பகவானின் பெயரை சொல்லி சொல்லி ஆனந்தத்தில் நம்மை ஆழ்த்தும், நமக்கு செய்ய கிடைத்த வாய்ப்பு என்று புரியும். 

சந்தியா வந்தனமே மகாத்மாக்களுக்கு பஜனையாக தெரிகிறது. பகவானை பஜிக்க கசக்குமா?

ஆரம்பமே பரமாத்மாவை எப்படி பஜிக்கிறது பாருங்கள்.

அச்சுதா நம (நிலையான பரமாத்மாவே, உமக்கு நமஸ்காரம்)
அனந்தாய நம (எல்லையற்று இருக்கும் பரமாத்மாவே, உமக்கு நமஸ்காரம்)

அச்சுதா, ஆனந்தா என்று சொல்லி, பரமாத்மாவை பஜிக்க கசக்குமா?
மகாத்மாக்கள் இந்த ஆனந்தத்தை அனுபவிப்பதாலேயே சந்தியா வந்தனம் செய்ய மிகவும் பிரியப்படுகிறார்கள்.

இது மட்டுமா?...
சந்தியா வந்தனம் அமைக்கப்பட்ட க்ரமத்தை (வரிசையை) நன்றாக கவனியுங்கள்.

பொதுவாக, மனிதன் தன் பக்தியை உயர்த்தி கொள்ள முயற்சி செய்கிறான்.

தான் செய்யும் தினசரி காரியங்களையே (கர்மா) 'தெய்வம் நாம் செய்யும் செயலை பார்த்து ப்ரீத்தி (சந்தோஷம்) கொள்ளட்டும். தெய்வத்துக்காக செய்கிறேன்' என்று செய்ய ஆரம்பிக்கிறான்.
அப்போது, கர்மாவையே (செயல்கள்) யோக முறையில் செய்ய ஆரம்பிக்கிறான்.
"கர்ம யோகி" ஆகிறான்.
மனிதன் தன் பக்தியை உயர்த்தி கொள்கிறான்.

கர்ம யோகத்தின் பலனாக தெய்வ சிந்தனையுடனேயே இருந்ததால், மெதுவாக தெய்வத்துக்கு என்று நேரம் ஒதுக்கி, அவரை பற்றி நினைக்கிறான்.
தெய்வத்தை பற்றிய அறிவை (ஞானத்தை) வளர்த்து கொள்ள ஆரம்பிக்கிறான்.
அப்போது, தெய்வத்தை பற்றிய அறிவு (ஞானம்) பெற, ஞான யோக முறையில் முயற்சி செய்ய ஆரம்பிக்கிறான்.
"ஞான யோகி" ஆகிறான்
மனிதன் தன் பக்தியை, மேலும் உயர்த்தி கொள்கிறான்.
தெய்வத்தை பற்றிய அறிவு (ஞானம்) பெற்றபின், "அவரை அடைந்தே தீர வேண்டுமென்றும், அவரை பார்க்க வேண்டும்" என்ற ஆர்வத்தை பெறுகிறான்.
ஆழ்வார்களை போன்றும், நாயன்மார்களை போன்றும், ஆனந்தமாக பஜிக்க ஆரம்பிக்கிறான். பகவானிடத்தில் ப்ரேம பக்தி செய்கிறான்.
"பக்தி யோகி" ஆகிறான்
மனிதன் தன் பக்தியை, மென்மேலும் உயர்த்தி கொள்கிறான்.



எல்லா திசைகளிலும், அனைத்து தேவதைகளிலும், "பரமாத்மா வாசுதேவன்" இருப்பதை பார்க்கிறான்.
யாரை பார்த்தாலும், பரமாத்மா வாசுதேவன்" இருப்பதை பார்க்கிறான்.

"அனந்தாய நம" என்ற சொற்களின் அர்த்தத்தை, அனுபவத்தை பெறுகிறான்.

இறுதியில் தெய்வ தரிசனம் பெற்ற பின்,
இனி சம்சார சூழலில் சிக்கி மீண்டும் பிறக்க ஆசைப்படாமல் இருக்க, "தான் செய்த பாவ, புண்ணியங்கள் அனைத்தையும் நாராயணின் திருவடிகளில் சமர்ப்பித்து விட", பரமாத்மா வாசுதேவன் அந்த ஜீவனுக்கு தன் இருப்பிடமான அழியாத வைகுண்டத்தில் நித்ய வாசம் செய்ய அனுக்கிரஹம் செய்து,
தன்னை எப்பொழுதும் தரிசித்து கொண்டே இருக்க அனுக்கிரஹம் செய்து, சம்சார சூழலில் இருந்து காப்பாற்றி விடுகிறார்.             

இதையே பகவத் கீதையில்,
"கர்ம மார்க்கம்" என்றால் என்ன? கர்ம மார்க்கத்தில் உள்ள  "கர்ம யோகி" எப்படி இருப்பார்?
"ஞான மார்க்கம்" என்றால் என்ன? ஞான மார்க்கத்தில் உள்ள "ஞானி" எப்படி இருப்பார்?
"பக்தி மார்க்கம்" என்றால் என்ன? பக்தி மார்க்கத்தில் உள்ள "பக்தன்" எப்படி இருப்பார்?
என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கி சொல்கிறார்.
கடைசியில், 
இந்த மார்க்கங்களை கடந்து, "மோக்ஷத்தை அடைய, அனைத்து பாவ புண்ணியங்களையும் தன் திருவடிகளில் சமர்ப்பித்து, தன் ஒருவனையே சரணடைந்து விடு" 
என்று சரணாகதி மார்க்கத்தை கடைசியில் காட்டி, மோக்ஷத்திற்கான வழியையும் காட்டுகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

பகவானை அடைய 
"கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம்" போன்ற வழிகளில் சென்று, கடைசியில் பெருமாளே கதி என்று, "உன் பாவ புண்ணியங்கள் அனைத்தையும் பெருமாளிடம் சரண் செய்து விடு" என்று சொல்லப்படும் மோக்ஷத்திற்கான வழியை
5 நிமிட சந்தியா வந்தனத்தில் அடங்கி உள்ளதை, மகாத்மாக்கள் பார்க்கின்றனர்.

சந்தியா வந்தனம் செய்யும் முறையை நன்றாக கவனித்தால்,
நாம் செய்யும் இந்த பிரார்த்தனையில் முதல் பகுதி "கர்ம யோகமாகவே" செய்வது நமக்கு புரியும்.
பகவானின் நாமத்தை சொல்லி சொல்லி,
தீர்த்தத்தை எடுத்துக்கொண்டும்,
நம் மீது புரோக்ஷித்துக்கொண்டும்,
நவ கிரஹங்களுக்கு தீர்த்தம் கொடுத்து திருப்தி (தர்ப்பணம்) செய்தும்,
வ்யூஹ அவதாரமாக உள்ள பரவாசுதேவனுக்கும் தீர்த்தம் கொடுத்து திருப்தி (தர்ப்பணம்) செய்வதையும் பார்க்க, முழுக்க முழுக்க  ஒரு கர்மாவை (செயல்) போல இருந்தாலும்,
பகவானின் பெயரை சொல்லிக்கொண்டே செய்வதால், "கர்ம யோகமாக" நாம் செய்வது புலப்படும்.


"கர்ம யோகம்" முடிந்து, "ஞான யோகம்" செல்லும் போது, நாம் செய்யும் சந்தியா வந்தனத்தை பாருங்கள்..
பகவானை மனதால் தியானித்து, ஞான அனுபவத்தை பெற,
பிரணவ ஜபம், காயத்ரி ஜபம் செய்வதை கவனித்தால்,
"ஞான மார்கத்தை" சந்தியா வந்தனம் நமக்கு காட்டுவது புரியும்.

பகவானை பற்றி ஜபத்தாலும், தியானத்தாலும், அறிவு (ஞானம்) பெற்ற பின், 
சந்தியா வந்தனம் நமக்கு, பக்தி மார்க்கத்தை காட்டுவதை கவனியுங்கள்.
"பகவானை காண வேண்டும்" என்ற ஆர்வம் ஏற்பட்டு, சூரியனை பார்த்து, சூரியனுக்கும் சூரிய நாராயணனாக, பரமாத்மா வாசுதேவன் இருக்கிறார் என்று சூரியனை கை கூப்பி வணங்குவதும்,
எல்லா திசைகளுக்கும், யமனுக்கு, அனைத்து தேவதைகளுக்கும், கடைசியில் நாராயணனுக்கும் வணங்குவதை பார்த்தால்,
பக்தி மார்க்கத்தில் ஆனந்த கூத்தாடும் பக்தனை போல நாம் இருப்பது புரியும்.
கடைசியில் சூரிய நாராயணனையே சரணம் அடைந்து,
தான் செய்த அனைத்து பாவ புண்ணியங்களை "நாராயணாயேதி சமர்பயாமி" என்று நாம் சொல்லி முடிப்பதை பார்த்தால், மோக்ஷ மார்க்கத்தை நமக்கு சந்தியா வந்தனம் காட்டுவது புரியும். 
இந்த அனுபவத்தில் சந்தியா வந்தன மந்திரங்களை சொல்லும் போது, 
"பஜனை செய்யும் ஆனந்தத்தையும்",
சந்தியா வந்தன க்ரமத்தை (வரிசையை) பார்க்கும் போது,
அதில் "ஜீவன் மோக்ஷம் வரை செல்லும் பாதை காட்டப்படுவதை" மகாத்மாக்கள் கவனிக்கின்றனர்.

சந்தியா வந்தனத்தை விரும்பி விரும்பி செய்கிறார்கள் மகாத்மாக்கள்.

மகாத்மாக்களின் இந்த அனுபவத்தை, நாம் உணரும் போது, 
நமக்கு சந்தியா வந்தனம் செய்ய ஆசை வந்தே தீரும்.




அர்த்தங்களுடன் சந்தியா வந்தனம் தெரிந்து கொள்வோமே...
அர்த்தங்கள் தெரிந்து கொள்வதின் மூலம் தான், ஸ்ரத்தை (ஈடுபாடு) நமக்கு வரும்.
நமக்கு சந்தியா வந்தனத்தில் ஈடுபாடு வர, அர்த்தங்களை புரிந்து கொள்வதும் அவசியம்.

இதோ...


Sandhya Vandanam -  Morning (With Meaning)

Sandhya Vandanam - Afternoon (With Meaning)

Sandhya Vandanam - Evening (With meaning)