Followers

Search Here...

Showing posts with label கோவிலுக்கும் செல். Show all posts
Showing posts with label கோவிலுக்கும் செல். Show all posts

Saturday 30 September 2017

கடவுள் எங்கும் உள்ளார் என்று சொல்லும் நம் சாஸ்திரம், "கோவிலுக்கும் செல்" என்று ஏன் செல்ல வேண்டும்?


கடவுள் எங்கும் உள்ளார் என்று சொல்லும் நம் சாஸ்திரம், "கோவிலுக்கும் செல்" என்று சொல்வதற்கு என்ன காரணம் ?


பொதுவாக,
நாமாக தெய்வத்தை வழிபட்டு, "தெய்வ சாந்நித்யம் பெறுவதை" காட்டிலும்,
"தெய்வம் தன் சாந்நித்யத்தை எப்பொழுதும்  வெளிப்படுத்தும் இடங்களுக்கு சென்று வழிபடுவது" நமக்கு சுலபமாக பலனை தரும்.

தெய்வ சாந்நித்யம் நிறைந்த இடங்களுக்கு (கோவில், தீர்த்தங்கள்) சென்று,
நாம் ஒரு அல்ப பலனுக்காக ஆராதனை செய்தாலும் சரி, அல்லது
பகவானையே நாம் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன்  ஆராதனை செய்தாலும் சரி,
செய்த பிரார்த்தனை, பலன் தரும்.

நாமாக முயற்சி செய்யும் போது, நம் தபசு, பக்தி, ஒழுக்கம் பொருத்து, தெய்வ சாநித்யம் இருக்கும்.

ஸ்ரீ ரங்கம், திருமலை போன்ற க்ஷேத்ரங்கள் எப்பொழுதும் தெய்வ சாநித்யத்தோடே இருப்பதால், நாம் அங்கு சென்று பிரார்த்தனை செய்யும் போது,
நாம் தகுதி உடையவர்களா?, பக்தி உடையவர்களா? என்று கூட பார்க்காமல், தெய்வ அனுக்கிரகம் கிடைக்கிறது.

பரவாசுதேவன் இப்போது உள்ள திருமலை இருந்த இடத்தை தேர்ந்தெடுத்து, அர்ச்ச அவதாரமாக பூமியில் வர இருப்பதாக திருவுள்ளம் கொண்டு நாரதரிடம் சொல்ல, ஆதிஷேஷன் 7 மலைகளாக ஆகி, தனக்காக காத்து இருக்குமாறு கூறினார்.
பெருமாள் பிற் காலத்தில் தன்னை அர்ச்ச அவதாரமாக வெளிக்காட்டுவதற்கு முன்னரேயே, ஆதிசேஷன் அவர் அமர்வதற்காக, தானே ஏழு மலையாக ஆனார்.

பெருமாள் இல்லாத அந்த சமயத்தில் கூட திருமலை சாநித்யத்தோடு இருந்தது. ரிஷிகள் கூட்டம் அலை மோதியது.

அதனால் தான் ஆஞ்சநேயர் போன்ற பக்தர்கள், ரிஷிகள், வெங்கடேச பெருமாள் தன்னை அர்ச்ச அவதாரமாக வெளிக்காட்டும் முன்னரேயே திருமலையில் வாசம் செய்தனர், அவதரித்தனர்.

பிருந்தாவனம் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம் செய்வதற்கு முன்பிலேயே, ஸ்ரீ கிருஷ்ண சாநித்யத்தோடு தான் இருந்தது.

அதனால் தான், துருவன் பெருமாளை பார்க்க வேண்டும், என்று புறப்பட்ட போது, நாரதர், துருவனை, "தெய்வ சாந்நித்யம் உள்ள பிருந்தாவனம் சென்று தியானம் செய், நாராயணரின் தரிசனம் சுலபமாக  கிடைக்கும்" என்று அனுப்பி வைத்தார்.

அதனால் தான், நம் சாஸ்திரம்,
"கடவுள் எங்கும் உள்ளார் என்று சொன்ன போதிலும், எங்கு தெய்வ சாந்நித்யம் அதிகம் உள்ளதோ, அங்கு நாம் ஆசையோடு போய் பார்க்க வேண்டும், பிரார்த்தனைகளும் பலிக்கும்"
என்று சொல்கிறது.

இப்படி சாந்நித்யம் உள்ள இடங்கள் தான், நாம் பார்க்கும்  திவ்ய க்ஷேத்ரங்கள், புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம்.

எந்த காலத்திலேயோ, எந்த காரணத்துக்காகவோ, ஒவ்வொரு க்ஷேத்ரத்திலும் பகவான் சாந்நித்யத்தோடு இருக்கிறார்.

சில கோவில்கள், சில தீர்த்தங்கள் சில ஊர்கள் ரிஷிகளே அமைத்தது. அவர்கள் நமக்காக பகவானிடம் வேண்டி எப்பொழுதும் சாந்நித்யம் குறையாது இருக்குமாறு செய்து விட்டு சென்றனர்.

ப்ருகு, மார்க்கண்டேயர் போன்ற ரிஷிகள், தவம் செய்தார்கள். பகவானை தரிசனம் செய்தார்கள் என்று சில கோவில்களின் சரித்திரத்தை பார்க்கிறோம்.

விழுப்புரம் அருகே உள்ள திருக்கோவிலூர் போன்ற ஊர்களில், மார்க்கண்டேய ரிஷிக்கு, வாமன அவதாரத்தில் உலகை அளந்து காட்டிய பெருமாள், அதே தரிசனத்தை காட்ட, அங்கே ரிஷியினால் கோவில் அமைக்கப்பட்டு, பகவானின் சாந்நித்யம் எப்பொழுதும் இருக்குமாறு வரமும் வாங்கி, அமைக்கப்பட்டது தான் நாம் காணும் "உலகளந்த பெருமாள்" கோவில்.

சில கோவில்கள், சில தீர்த்தங்கள் சில ஊர்கள் தேவர்களே அமைத்தது. 
அவர்கள் பகவானிடம் எப்பொழுதும் சாந்நித்யம் குறையாது அங்கே இருக்குமாறு செய்து விட்டு சென்றனர்.
ஸ்ரீ ரங்கம் போன்ற கோவிலில் உள்ள ரங்கநாதர், ப்ரம்மா  வழிபடுவதற்காக க்ஷீராப்தியில் (பாற்கடலில்) ஸ்வயமே உருவானார்.
பின்னர், ப்ரம்மா, இக்ஷ்வாகு மன்னனுக்கு ஆராதனை செய்ய கொடுத்தார். பிறகு சூரிய வம்ச அரசர்கள் ஆராதித்து, ஸ்ரீ ராமரே ஆராதனை செய்து, பின்னர் விபீஷணன் இலங்கை கொண்டு செல்லும் பொழுது,
ஸ்ரீ ரங்கத்தில் பெருமாள் தங்கி விட்டார்.




ஸ்ரீ ரங்கநாதர், ஸ்வயம் ப்ரம்மாவே வழிபட்ட மூர்த்தி. 
பரவாசுதேவன் ஸ்ரீ ராமராக அவதரித்து, அவரே வழிபட்ட மூர்த்தி.
ஸ்ரீ ரங்கம் சென்று நாம்  பிரார்த்திக்கும் போது, சுலபமாக நம் பிரார்த்தனை பலிக்கிறது.

சில கோவில்கள், சில தீர்த்தங்கள் சில ஊர்கள் பக்தர்களால் அமைக்கப்பட்டு, அவர்கள் பகவானிடம் எப்பொழுதும் சாந்நித்யம் குறையாது அங்கே இருக்குமாறு செய்து விட்டு சென்றனர்.

ஓடிசாவில் இருக்கும் பூரி ஜெகன்னாத் போன்ற கோவில்கள், ஒரு பக்தனால் அமைக்கப்பட்டது.
பக்தனுக்காக பெருமாள் இங்கு எப்பொழுதும் சாந்நித்யம் குறையாது இருக்கிறார்.

இப்படி பல விதமான காரணங்களால், பக்தனுக்காகவும், தேவர்களுக்காகவும், ரிஷிகளுக்காகவும், சாதாரண ஜனங்கள் கட்டியதாகவும் கோவில்களில் இந்த பாரத மண்ணில் காணப் படுகின்றன.

இதை எல்லாம் விட, தன் விருப்பத்தால், தன்னை வெளிப்படுத்திய சில அர்ச்ச அவதார மூர்த்திகளும் உண்டு.
பகவானே தன்னை அர்ச்ச அவதாரமாக காட்டி கோவில் அமைந்ததையும் நாம் பார்க்கும் பாக்கியம் ஹிந்துக்களுக்கே உண்டு.

ஒரு சிற்பியினால் செய்யப்படாத படி, தானே அர்ச்ச அவதாரமாக வந்த திருமேனி தான், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வெங்கடேச பெருமாள்.

திருமலையில், தொண்டைமான் சக்கரவர்த்திக்கு தன்னை வெளிக்காட்டி, பின்னர் இப்பொழுது நாம் காணும் கோவிலை அமைத்துக்கொண்டார்.
அதேபோல,
ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள வராஹ ஸ்வாமியும் ஸ்வயமாகவே தோன்றினார்.
வானமாமலை எம்பெருமாளும் ஸ்வயமாகவே தோன்றியவர்.
பத்ரிநாத்தில் நாராயணரும் ஸ்வயமாகவே தோன்றியவர்.
சாளக்கிராம மூர்த்தியாகவும் தானே தோன்றினார்.

இப்படி ஸ்வயமாகவே தானே அர்ச்ச அவதாரம், பாரதம் முழுவதும் எடுத்து நமக்காக, நம்மை கரையேற்ற நிற்கிறார் நம் பெருமாள்.

இப்பொழுது நாம் பார்க்கும் படியாக இருக்கும் நம் பெருமாள், தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பேயே, ரிஷிகளுக்கு தெரிந்து, பதரிநாத், ஸ்ரீ ரங்கம், திருமலை, போன்ற திவ்ய தேசங்களில் வந்து, த்யானம், யோகம் செய்து கொண்டிருந்தனர்.

ஆகையால், பொதுவாக, பகவான் எங்கும் இருந்தாலும், தானே அர்ச்ச அவதாரம் எடுத்து நிற்கும் திருமலை போன்ற க்ஷேத்ரங்களுக்கு நாம் ஆசையோடு செல்ல வேண்டும்.
தானே உருவான திருமேனியை தரிசிக்கும் பாக்கியத்தை நாம் பெற வேண்டும்.
அனுக்கிரகம் செய்வதற்காகவே வந்த பகவான் என்று அறிய வேண்டும்.
ஆகையால் தான்,
இன்றும் திருமலையில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

அதே பெருமாள் போன்று,  மஹாபாலிபுரத்தில் சிற்பி செதுக்கி வைத்துள்ளான். பார்ப்பதற்கு ஆள் இல்லை.
ஹிந்துக்கள் கல்லை கும்பிடவில்லை என்று இதை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

தேவர்களும், ரிஷிகளே உருவாக்கிய விக்ரஹங்கள், கோவில்கள் அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுகிறது.
அங்கு இருக்கும் தெய்வ சாந்நித்யம், அந்த ரிஷியின் வரத்திற்கு ஏற்ப அனுக்கிரகம் தருகிறது.
அதனால் தான்,
இந்த கோவிலுக்கு போனால், ஜாதக தோஷம் விலகும், கல்யாணம் நடக்கும், குழந்தை பிறக்கும் என்று சொல்லி கேள்விப்படுகிறோம்.

இந்த கோவிலுக்கு நாம் பக்தியுடன் போனால், ரிஷிகள் நமக்காக வாங்கிய வரத்திற்காக, தெய்வங்கள் அனுக்கிரகம் செய்யும்.

திருப்பதி, ஸ்ரீ ரங்கம் போன்ற கோவில்களில், ஸ்வயமே பெருமாள் அர்ச்ச அவதாரமாக வந்து காட்சி கொடுப்பதால்,
வருபவன் துஷ்டனாக இருந்தாலும், அவனையும் கருணையுடன் பார்த்து, இவன் கேட்கும் வரம் அனைத்தையும் நல்லதா, கெட்டதா என்று பார்த்து, நல்லதை மட்டும் கிடைக்குமாறு செய்து கருணை செய்வார்.

பத்ராசல ராமதாசர், பூரி ஜகநாத் கட்டிய அரசன் போன்ற பக்தர்கள் கட்டிய கோவில்களிலும், பக்தனின் ஆசைக்காக, நிரந்தரமாக பகவான் சாநித்யத்தோடு அருள் கொடுக்கிறார்.

இப்படி பக்தர்களால், ரிஷிகளால், தேவர்களால், ஸ்வயம் தானே விரும்பியும் உருவான கோவிலகளுக்கு நாம் சென்று பிரார்த்தனை செய்யும் போது, சுலபமாக நமது பிரார்த்தனைகள் நிறைவேறுகிறது.

தானே முயற்சி செய்து, தெய்வத்தை நம் பக்கம் திருப்பி, அவர் அனுக்கிரகம் பெறுவதற்கு நமக்கு தவமும் போதாது, ஒழுக்கமும் கிடையாது.
ஞானமும் கிடையாது, யோகமும் கிடையாது.


தகுதி இல்லாத நம்மை போன்றவர்களுக்காக, உண்மையான பக்தர்களும், ரிஷிகளும், தேவர்களும் நமக்காக பிரார்த்தனை செய்து, பெருமாளை சாநித்யத்துடன் கோவிலில் இருக்க செய்து விட்டனர்.

இதுவும் போதாதோ என்று, தானே இறங்கி, அர்ச்ச அவதாரம் தரித்து, திருமலையிலும், ஸ்ரீ ரங்கத்தில் வந்து கோவில் அமைத்து கொண்டார் பெருமாள்.

கருணை செய்யும் லட்சியத்துடனேயே தன் சாநித்யத்தை வெளிப்படுத்தும்  கோவிலுக்கு சென்று, நம் பிரார்த்தனைகள் செய்வோம். நலம் பெறுவோம்.

குருநாதர் துணை

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 





sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka