Followers

Search Here...

Showing posts with label உலகம் உண்ட பெருவாயா. Show all posts
Showing posts with label உலகம் உண்ட பெருவாயா. Show all posts

Saturday 13 October 2018

உலகம் உண்ட பெருவாயா என்று நம்மாழ்வார் ஏன் அழைக்க வேண்டும்? - திருவாய்மொழி

நம்மாழ்வார் திருவாய்மொழியில்,


"உலகம் உண்ட பெருவாயா.
உலப்பில் கீர்த்தி யம்மானே,
நிலவும் சுடர் சூழொளிமூர்த்தி.
நெடியாய். அடியேன் ஆருயிரே,
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்எம் பெருமானே,
குலதொல் அடியேன் உன்பாதம் கூடு மாறு கூறாயே"
என்று திருமலையப்பனை கண்டு கதறி சரணாகதி செய்கிறார்.
"உலகம் உண்ட பெருவாயா..." என்று நம்மாழ்வார் திருமலையப்பனை இங்கு  கூப்பிடுகிறார்.
உலகத்தை பெருமாள் எப்பொழுது உண்டார்?
"உலகம் உண்ட பெருவாயா"என்று நம்மாழ்வார் ஏன் இங்கு அழைக்க வேண்டும்? என்கிற கேள்விகள் எழுகிறது.
பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், மகா பிரளய காலத்தில், எம்பெருமான் 14 லோகங்களையும் விழுங்கி, தன் திருவயிற்றில் அடக்கி கொள்கிறார் என்பது பிரசித்தம்.
மீண்டும் ஸ்ருஷ்டி செய்யும் போது, உலகங்களை மீண்டும் படைத்து, புதிய பிரம்மாவை நியமிக்கிறார்.
இதுவும் அனைவரும் அறிந்ததே.

அவ்வளவு பெரிய உலகத்தை விழுங்க வேண்டுமென்றால், பெருமாள், சிறுவாயை கொண்டு விழுங்க முடியாதே!!
உலகம் அளவிற்கு, வாயை பெரிதாக திறந்து தானே விழுங்கி இருக்க வேண்டும்? என்று நமக்கு தோன்றும்.

அதனால் தான் நம்மாழ்வார் பெருமானை, "உலகம் உண்ட பெருவாயா" என்று அழைக்கிறார் போலும், என்றும் நமக்கு தோன்றும்.

ஆனால், நம்மாழ்வார் இந்த காரணத்தால் இப்படி சொல்லவில்லையாம்.

பொதுவாக ஜீவனாகிய நாம், மோக்ஷம் அடைய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், சம்சார வாழ்வில் கஷ்டத்தை அனுபவித்தாலும் அனுபவிப்பேன், பிறவி கடலை தாண்ட மாட்டேன், பெருமாளை காண வரமாட்டேன் என்று ஏனோதானோ என்று இருக்க,
திருமலையப்பனாக அர்ச்ச அவதாரம் செய்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள், இந்த ஜீவனை காக்க வேண்டுமே, மோக்ஷம் என்ற சொத்தை கொடுக்க வேண்டுமே என்று காத்து கொண்டு இருக்கிறார். தவித்துக்கொண்டு இருக்கிறார்.





ஜீவன் ஏனோதானோ என்று இருக்கிறான்.
ஜீவனுக்கு ஈஸ்வரனாக, இருக்கும் பெருமாளோ, தனக்கும், ஜீவனுக்கும் உள்ள சம்பந்தத்தை அறிந்தவர் என்பதால், எப்படியாவது மோக்ஷத்தை கொடுத்து விட வேண்டுமே !! என்று தவித்துக்கொண்டு, மோக்ஷம் கொடுக்க சங்கல்பித்து திருமலையில் அர்ச்ச அவதாரம் செய்து விட்டார்.
இப்படி கருணை செய்வது ஒன்றே குறிக்கோளாக, அவதாரம் செய்துள்ள திருமலையப்பன், தன்னை தரிசிக்க மலை ஏறி வரும் பக்தனை கண்டு பூரித்து போகிறார்.
இந்த ஜீவனுக்கு, மீண்டும் பிறவி இல்லாத மோக்ஷம் கொடுத்து விட வேண்டும் என்று அருள் செய்கிறார்.

பக்தனை கண்டு, திருமலையப்பன் எத்தனை பூரிப்பை அடைகிறார்? என்பதை காட்டவே, நம்மாழ்வார் "உலகம் உண்ட பெருவாயா' என்ற பதத்தை பயன்படுத்தினாராம்.

உலகத்தை விழுங்க, பெருமாளுக்கு பெரு வாய் தேவைப்பட்டதா? என்று பார்த்தால், அப்படி ஒன்றும் தேவைப்படவில்லையாம்.
இதை நிரூபிக்க தான், ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்த பெருமாள், அண்ட சராசரங்களையும் தன் சிறு வாயில் யசோதைக்கு காட்டினாராம்.

யசோதை, குழந்தையாக உள்ள கண்ணனை பார்த்து, "மண்ணு தின்றாயா? மண்ணு தின்றாயா?" என்று அதட்ட,
கண்ணன் அழுது கொண்டே, "இல்லம்மா.. இல்லம்மா..." என்றான்.
"வாயை காட்டு" என்று சொல்ல, கண்ணன் தன் சிறுவாயை காட்ட, உலகங்கள் அனைத்தையும் அந்த சிறிய வாயில் கண்டு பிரமித்தாள் யசோதை.

'உலகம் உண்ட சிறுவாயை' கண்ணனிடம் கண்டாளாம் யசோதை.

'உலகத்தை காக்க, சிறுவாய் போதும்' என்ற சர்வ சக்தி உள்ளவனாக இருக்கும் பகவான் காட்டினார்.

பின் ஏன், நம்மாழ்வார் "உலகம் உண்ட பெறுவாயா" என்று சொன்னார்? "உலகம் உண்ட சிறுவாயா" என்று சொல்லி இருக்கலாமே?
என்ற கேள்வி எழும்போது தான்,
பெரியவாச்சான் பிள்ளை, நம்மாழ்வார் இதயத்தில் என்ன நினைத்தார்? என்று விளக்குகிறார்.
ஒரு பெரிய பாத்திரம் முழுவதும் இனிப்பான தின்பண்டம் இருப்பதை பார்த்து, ஒரு குழந்தை, முழுவதும் தானே சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படும்.
அந்த ஆவலில், "அனைத்தையும் எனக்கே போடு" என்று அம்மாவை கேட்டு அடம்பிடித்து, வாங்கிக்கொள்ளும்.

தேவை கொஞ்சம் தான் என்றாலும், தின்பண்டத்தை பார்த்த பூரிப்பில், தேவைக்கும்  அதிகமாக கேட்டு வாங்கிக்கொள்ளும்.
இது பொதுவாக குழந்தையிடம் பார்க்கும் குணாதிசயம்.


சர்வசக்தி உள்ள பகவான், தன் அடியார்களை கண்டு விட்டால், அந்த குழந்தைக்கு ஏற்படும் பூரிப்பை போல, தானும் அடைந்து விடுகிறார்.

தன் பக்தனை கண்டதால் ஏற்பட்ட அளவு கடந்த பூரிப்பில், இவனுக்கு மோக்ஷம் அளிக்க வேண்டுமே!! காக்க வேண்டுமே!! என்ற ஆவலில் "உலகத்தை காப்பதற்கே சிறு வாய் போதும்" என்று இருந்த பெருமாள், ஒரு பக்தனை காப்பதற்காக இவருக்கு ஏற்பட்ட பூரிப்பை பார்த்தால், சிறு உலகை காக்க பெருவாயால் உண்டது போல பூரிப்பில் இருந்தாராம்.
திருமலையப்பனுக்கு ஏற்பட்ட இந்த பூரிப்பை பார்த்து, நம்மாழ்வார் "உலகம் உண்ட பெருவாயா" என்கிறார்.

பக்தியுடன் நாம் திருமலையப்பனை தரிசித்தால், பெருமாள் நம்மிடமும் இந்த பூரிப்பு அடைகிறார்.
நம் தேவைக்கும் அதிகமாக கருணை செய்து, இகத்திலும், பரத்திலும் ஆனந்தமே கிடைக்க அருள் செய்கிறார்.

அனைவரும் திருமலை செல்வோம்.
திருமலையப்பனை பக்தியுடன் தரிசனம் செய்வோம்.