திருமங்கையாழ்வார் 30 பாடல்களை 'நெடுந்தாண்டகம்' என்ற செய்யுள் நடையில் எம்பெருமானை (திருமால்) நினைத்து பாடினார்.
அதற்கு "திருநெடுந்தாண்டகம்" என்று பெயர் கொடுக்கப்பட்டது.
திருமங்கையாழ்வார் 20 பாடல்கள் 'குறுந்தாண்டகம்' என்ற செய்யுள் நடையில் எம்பெருமானை (திருமால்) நினைத்து பாடினார். அதற்கு "திருக்குறுந்தாண்டகம்" என்று பெயர் கொடுக்கப்பட்டது.
"திருநெடுந்தாண்டகம்" என்றால் என்ன?
ஒரு பாடலில்,
- ஒவ்வொரு அடியிலும் 8 சீர் இருந்தால்,
- அந்த பாடல் தெய்வத்தை பற்றியோ, ஒரு நாயகனை பற்றியோ பாடினால்,
- ஒவ்வொரு 8 சீரிலும்,
- 1,2,5,6 ஆகிய நான்கு சீர்கள் காய்ச்சீர்களாகவும்,
- 3,4,7,8 ஆகிய நான்கு சீர்கள் இயற்சீர்களாகவும், குறிப்பாக இயற்சீர் நான்கினுள் (தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்)
- 3,7 ஆகிய சீர்கள் புளிமா, அல்லது தேமாவாக,
- 4,8 ஆகிய சீர்கள் தேமாவாக மட்டுமே அமைந்தால்,
அதற்கு "நெடுந்தாண்டகம்" என்று பெயர்.
உதாரணத்திற்கு திருமங்கையாழ்வார் பாடிய இந்த பாசுரம் எப்படி நெடுந்தாண்டகத்தில் அமைந்து இருக்கிறது? என்று பார்க்கும் போது...
பாசுரம்:
முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி
பொற்றாம ரைக்கயம்நீ ரா டப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே
இந்த பாசுரத்தில்,
ஒவ்வொரு அடியிலும் 8 சீர் இருக்கிறது.
பெருமாளை பாடுகிறார்.
ஒவ்வொரு அடியில் உள்ள 8 சீர்களும் எப்படி அமைந்துள்ளது? என்று பார்க்கும் போது...
பாசுரத்தின் முதல் அடி (உதாரணத்திற்கு):
- முற்/றா/ரா - நேர் நேர் நேர் - தேமாங்காய் (காய் சீர்)
- வன/முலை/யாள் - நிரை நிரை நேர் - கருவிளங்காய் (காய் சீர்)
- பா/வை - நேர் நேர் - தேமா (மா சீர்)
- மா/யன் - நேர் நேர் - தேமா (மா சீர்)
- மொய்/யக/லத் - நேர் நிரை நேர் - கூவிளங்காய் (காய் சீர்)
- துள்/ளிருப்/பாள் - நேர் நிரை நேர் - கூவிளங்காய் (காய் சீர்)
- அஃ/தும் - நேர் நேர் - தேமா (மா சீர்)
- கண்/டும்- நேர் நேர் - தேமா (மா சீர்)
1,2,5,6 - காய் சீராக அமைந்து இருக்கிறது.
3,7, 4,8 - மா சீராக அமைந்து இருக்கிறது.
'சீர்' என்பதை அர்த்தமுள்ள சொல் என்று நினைக்க கூடாது.
எழுத்துகள் சேர்ந்து "நேர்" அல்லது "நிரை" அசையாகும்,
அசைகள் சேர்ந்து சீராகும்,
"முற்றாரா" என்பது ஒரு சீர். இதில் இரண்டு அர்த்தமுள்ள தமிழ் சொற்கள் இருக்கிறது (முற்று ஆரா)
"மொய்யகலத் துள்ளிருப்பாள்" என்ற இரண்டு சீரில் 3 அர்த்தமுள்ள தமிழ் சொற்கள் இருக்கிறது (மொய் அதலத்துள் இருப்பாள்)
இந்த பாசுரத்தின் அர்த்தம் இங்கே தெரிந்து கொள்ளவும்.
பெருமாளை பற்றி இந்த 'நெடுந்தாண்டகம் என்ற விருத்தத்திலேயே 30 பாடல்கள் பாடுகிறார்' நம்முடைய திருமங்கையாழ்வார்.
திருக்குறுந்தாண்டகம் என்றால் என்ன?
ஒரு பாடலில்,
- ஒவ்வொரு அடியிலும் 6 சீர் இருந்தால்,
- அந்த பாடல் தெய்வத்தை பற்றி பாடினால்,
- ஒவ்வொரு 6 சீரிலும், பொதுவாக எல்லா சீர்களும் இயற்சீர்களாகவே வந்தால் (சிலசமயங்களில் காய்ச்சீரும் இருப்பதுண்டு),
- பெரும்பாலும் 1,4 ஆகிய சீர்கள் விளச்சீராகவும் (கருவிளம் or கூவிளம்),
- 2,3,5,6 ஆகிய சீர்கள் மாச்சீர்களாகவும் (தேமா, புளிமா) வந்தால்,
அதற்கு "குறுந்தாண்டகம்" என்று பெயர்.
உதாரணத்திற்கு திருமங்கையாழ்வார் பாடிய இந்த பாசுரம் எப்படி குறுந்தாண்டகத்தில் அமைந்து இருக்கிறது? என்று பார்க்கும் போது...
பாசுரம்:
வானவர் தங்கள் கோனும் மலர்மிசை அயனும் நாளும்
தேமலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மானவேல் கலியன் சொன்ன வண்டமிழ் மாலை நாலைந்தும்
ஊனம தின்றி வல்லார் ஒளிவிசும் பாள்வ ர் தாமே
இந்த பாசுரத்தில்,
ஒவ்வொரு அடியிலும் 6 சீர் இருக்கிறது.
பெருமாளை பற்றி பாடுகிறார்.
ஒவ்வொரு அடியில் உள்ள 6 சீர்களும் எப்படி அமைந்துள்ளது? என்று பார்க்கும் போது...
பாசுரத்தில் முதல் அடி (உதாரணத்திற்கு):
- வா/ன/வர் - நேர் நிரை - கருவிளம் (விள சீர்)
- தங்/கள் - நேர் நேர் - தேமா (மா சீர்)
- கோ/ணும் - நேர் நேர் - தேமா (மா சீர்)
- மலர்/மிசை - நிரை நிரை - கருவிளம் (விள சீர்)
- அய/னும் - நேர் நேர் - தேமா (மா சீர்)
- நா/ளும் - நேர் நேர் - தேமா (மா சீர்)
இங்கு,
1,4 - விள சீராக அமைந்து இருக்கிறது..
2,3,5,6 - மா சீராக அமைந்து இருக்கிறது.
திருமங்கையாழ்வாரின் கவித் திறனை பார்த்து, முருகப்பெருமானே அவருக்கு 'நாலு கவி பெருமாள்' என்று பட்டமளித்து தன் வேலையும் அவருக்குப் பரிசாக அளித்தார். (சைவர்கள், முருகப்பெருமானின் அவதாரமான ஞானசம்பந்தர் கொடுத்தார் என்று சொல்கின்றனர்)
ஆழ்வார்களில், வேல் வைத்திருக்கும் ஒரே ஆழ்வார் இவர் ஒருவரே!
தமிழை காப்பாற்ற, தமிழை வளர்க்க நினைப்பவன் "திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்" தெரிந்து கொள்ளாமல் இருப்பானா?
வாழ்க திருமங்கைமன்னன் என்ற பரகாலன் என்ற நீலன் என்ற கலியன் என்ற திருமங்கையாழ்வார் புகழ்.