Followers
Search Here...
Thursday 31 December 2020
லக்ஷ்மணனுக்கு 7 ஸ்லோகங்களால் ஸ்தோத்திரம். சீதாதேவியே செய்தது என்பது கவனிக்கத்தக்கது. தெரிந்து கொள்வோமே! - வால்மீகி ராமாயணம்
சீதாதேவி உண்மையை சொல்ல மறுத்த தருணம். தர்ம சூக்ஷ்மம் தெரிந்து கொள்வோம். வால்மீகி ராமாயணம்
'பொய் பேச கூடாது' என்று தர்மம் பொதுவாக சொல்கிறது.
உண்மையை சொல்வதால், 'தர்மத்துக்கு ஆபத்து ஏற்படுமானால்' அந்த உண்மையை கூட மறைக்கலாம் என்று தர்மம் சூக்ஷ்மமாக சொல்கிறது.
இந்த தர்ம சூக்ஷ்மத்தை தான் ' ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பாரத போரில் செய்து காண்பித்தார்.
த்ரேதா யுகத்திலேயே, சீதா தேவியே இந்த தர்ம சூக்ஷ்மத்தை செய்து காட்டி இருக்கிறாள்.
இதை பார்க்கும் போது, 'தர்மத்தில் இருப்பவர்களை, நாம் எக்காரணம் கொண்டும் ஆபத்தில் சிக்க வைத்துவிட கூடாது'
என்று தெரிகிறது..
இதை ஹிந்துக்கள் கவனிக்க வேண்டியது மிக அவசியம்.
தேவைப்பட்டால், தர்மத்தை காக்க, தர்மத்தில் உள்ளவர்களை காக்க, பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், 'உண்மையை மறைக்கலாம்' என்று தர்ம சூக்ஷ்மத்தை விளக்கும் நிகழ்வை அறிந்து கொள்வோம்.
ஹனுமான் கடலை தாண்டி,
யாரும் பார்க்க முடியாதபடி, கட்டை விரல் ரூபத்துடன் சீதாதேவியை தரிசித்து பேசி,
சமாதானம் செய்து,
ராமபிரானின் அடையாளங்களை சொல்லி,
ராம தூதன் என்ற நம்பிக்கையும் பெற்று,
ராமபிரான் கொடுத்த மோதிரத்தை காண்பித்து,
சீதா தேவியை சந்தித்ததற்கு அடையாளமாக சூடாமணியையும் பெற்று,
சீதாதேவியிடம் விடைபெற்று கிளம்ப தயாரானார்.
கடலை கடந்து ராமபிரானை பார்ப்பதற்கு முன், ராவணனின் ராக்ஷஸ படை பலத்தை அறிய நினைத்தார் ஹனுமான். முடிந்தால் ராவணனை பார்த்து விட்டு கூட செல்லலாம் என்று முடிவு செய்தார்.
தான் இருந்த அசோகவனத்தின் ஒரு பகுதியை நாசம் செய்து ராக்ஷஸிகளின் கவனத்தை தன்னிடம் திருப்பினார்.
மரங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு, குளங்கள் கலங்கி, மலைகள் பொடி பொடியாகி கிடக்க, அங்கு இருந்த விலங்குகளும், பறவைகளும் சிதறி ஓட, அதிகாலை உறக்கத்தில் இருந்த ராக்ஷஸிகள் எழுந்தனர்.
அசோக வனமே தரைமட்டமாகி கிடக்க, அங்கே மலை போல ஒரு வானரன் நிற்பதை பார்த்தனர்.
ஹனுமான் உயிர் பறிக்கும் பயங்கர பெரிய ரூபத்துடன் காட்சி கொடுக்க, ராக்ஷஸிகள் சீதா தேவியிடம்
"யார் இவன்? யாரால் அனுப்பட்டவன்? இப்பொழுதே சொல்!
இவனிடம் நீ என்ன பேசினாய்? பயப்படாமல் சொல்.."
என்று கேட்க,
அத அப்ரவீத் ததா சாத்வீ
சீதா சர்வாங்க சோபனா |
ரக்ஷஸாம் காம ரூபானாம்
விஞானே மம கா கதி: ||
- வால்மீகி ராமாயணம்
अथ अब्रवीत् तदा साध्वी सीता सर्वाङ्ग शोभना |
रक्षसां कामरूपाणां विज्ञाने मम का गतिः ||
- वाल्मीकि रामायण
இப்படி ராக்ஷஸிகள் கேட்க, சாத்வீகமே உருவான சீதாதேவி, "ராக்ஷஸர்களை பற்றி எனக்கு என்ன தெரியும்?
யூயம் ஏவ அஸ்ய ஜானீத
யோயம் யத்வா கரிஷ்யதி |
அஹிரேவ அஹே: பாதான்வி
ஜானாதி ந சம்ஸய: ||
- வால்மீகி ராமாயணம்
यूयम् एव अस्य जानीत योऽयं यद्वा करिष्यति |
अहिरेव अहेः पादान्विजानाति न संशयः ||
- वाल्मीकि रामायण
ராக்ஷஸர்களில் யார் என்ன செய்வார்கள் என்று உனக்கு தானே தெரியும். பாம்புக்கு தானே எலி போன பாதை தெரியும்.
அஹம் அப்யஸ்ய பீதாஸ்மி
நைனம் ஜானாமி கோன்வயம் |
வேத்மி ராக்ஷஸமேவைனம்
காமரூபினம் ஆகதம் ||
- வால்மீகி ராமாயணம்
अहमप्यस्य भीतास्मि नैनं जानामि कोऽन्वयम् |
वेद्मि राक्षसमेवैनं कामरूपिणम् आगतम् ||
- वाल्मीकि रामायण
எனக்கும் இவர் யார் என்று தெரியாது. நானும் இவரை பார்த்து பயப்படுகிறேன். இவரும் ஒரு ராக்ஷஸனோ, உருமாறி வந்து இருக்கிறாரோ என்று தான் நான் நினைக்கிறேன்."
என்று சீதாதேவி சொல்ல,
ஹனுமானின் பெரிய ரூபத்தை கண்டு பயந்த ராக்ஷஸிகள், அலறியடித்து கொண்டு நாற்புறமும் அங்குமிங்கும் ஓடினார்கள்.
சிலர், ராவணனிடம் விஷயத்தை சொல்ல ஓடினார்கள்.
இப்படி சீதா தேவி, தர்மத்துக்காக கடல் கடந்து வந்த ஹனுமானை காக்க, உண்மையை சொல்ல மறுத்து, தர்ம சூக்ஷ்மத்தை நமக்கு காட்டினாள்.
Monday 28 December 2020
ராமர் பார்க்க எப்படி இருப்பார்? (How Ram actually looked?) அற்புதமான 22 ஸ்லோகங்களால் ராம வர்ணனை - அவர் அடையாளம் எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே!
Thursday 24 December 2020
திருமலையின் நீளம் என்ன? திருப்பதி பெருமாள் எதற்காக வந்தார்? என்ன சொன்னார்? கைங்கர்யம் செய்பவர்கள், ஆதிசேஷனை போல கைங்கர்யம் செய்ய வேண்டும்.
"ஞானம் அடைந்த ஜீவன் மட்டுமே வைகுண்டம் (மோக்ஷம்) அடைய முடியும்.
ஞானம் அடையாதவரை, மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்."
இது பரவாசுதேவன் நியமித்த விதி (சட்டம்).
வைகுண்டத்தில் உள்ள அனைத்து ஜீவனும், பிறப்பு இறப்பில் இருந்து முக்தி அடைந்தவர்கள்.
மீண்டும் இவர்கள், பூலோகத்திலோ, சொர்கத்திலோ, மகர லோகத்திலோ, ஜன, தப, ப்ரம்ம லோகத்திலோ, பாதாள லோகங்களிலோ பிறவி எடுப்பதில்லை.
இவர்களாக ஆசைப்பட்டால், பெருமாளை போன்று அவதாரம் கூட செய்ய முடியும்.
அணுகிரஹம் செய்ய முடியும்.
மோக்ஷம் என்ற பேரானந்தமும், பரவாசுதேவனின் தரிசனமும் இவர்களுக்கு நிரந்தர சொத்து.
வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுக்கு
- உலகங்களை படைக்க, காக்க, அழிக்க என்று பல கடமைகள் உண்டு.
ஆனால்,
வைகுண்டத்தில் இருக்கும் முக்தி அடைந்த ஜீவனுக்கு,
- எந்த உலக பொறுப்பும் கிடையாது.
- இவர்கள் அனுபவிப்பது நிரந்தரமான ஆனந்த அனுபவம் மட்டுமே.
- இவர்களும் பரவாசுதேவனை போல சுந்திரமானவர்கள்,
- எங்கும் செல்ல கூடியவர்கள். (அஜாமிளனை எம தூதர்களிடமிருந்து மீட்க இவர்களே வந்தார்கள்.)
- நாராயணனை போலவே சங்கு சக்கரம் உள்ளவர்கள்..
- திவ்ய ரூபம் உடையவர்கள்.
- அவர்களுக்கும் பரவாசுதேவன் அனுபவிக்கும் ஆனந்தம் உண்டு.
வைகுண்டத்திற்கு முக்தி அடையாத ஜீவன் வர முடியாது என்பதால், பரவாசுதேவன் தானே விருப்பப்பட்டு, அவர்கள் இருக்கும் லோகங்களில் அவதாரங்கள் செய்கிறார்.
'மோக்ஷம் கொடுக்க வேண்டும் என்ற கருணையின் காரணமாக' அவதாரம் செய்கிறார்.
'மோக்ஷத்தில் நமக்கு ஆசை வருவதற்காகவும்' அவதாரம் செய்கிறார்.
'தன்னை புரிந்து கொள்ளவும்' அவதாரம் செய்கிறார்.
ப்ரம்ம லோகத்தில் இருக்கும் ப்ரம்மாவும் "வைகுண்டம்" சென்று பெருமாளை பார்க்க முடியாது.
பெரிய பெரிய முனிவர்கள், ரிஷிகள், தேவர்கள், ருத்ரன் உட்பட யாரும் வைகுண்டம் சென்று பார்க்க முடியாது.
தேவர்கள், ரிஷிகள், ப்ரம்மா, சிவன் என்று அனைவரும் பார்க்க வேண்டும் என்பதால், வைகுண்டத்தில் இருந்து கொண்டே, க்ஷீராப்தி என்ற பாற்கடலில், "மகாவிஷ்ணு"வாக வ்யூஹ அவதாரம் செய்து, தரிசனம் கொடுக்கிறார்.
வைகுண்டத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் ஆதிசேஷன், க்ஷீராப்தியிலும் கூடவே அவதாரம் செய்தார்.
அவரவர் தகுதிக்கு ஏற்ப தரிசனம் கொடுக்க, ஆங்காங்கு ஒரு காரியாலயம் (office) அமைத்துக்கொள்வதை போன்று தேவ, ப்ரம்ம, ருத்ரன், ரிஷி, கிண்ணரர்கள் என்று அனைவருக்காகவும், க்ஷீராப்தியில் அவதாரம் செய்து, தரிசனம் கொடுத்து, அபயம் தருகிறார் பெருமாள்.
க்ஷீராப்தி என்ற பாற்கடலில், 1000 தலைகள் கொண்ட ஆதிசேஷன் மேல், விஷ்ணு என்ற பெயருடன் பரவாசுதேவன் பள்ளி கொண்டு இருக்கிறார்.
வைகுண்டத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் மகாலட்சுமி,
விஷ்ணு பத்னியாக இதே பாற்கடலில், தேவர்களும் அசுரர்களும் அம்ருதம் கடையும் போது தோன்றினாள்.
ஆதிசேஷனின் 1000 தலைகளிலும் நாக ரத்தினங்கள் ப்ரகாசித்தன.
பெருமாளின் பிம்பம் இந்த ஆயிரம் நாகரத்தினங்களிலும் பிரகாசிப்பதை பார்த்து ரசித்து கொண்டே, பெருமாளின் திருவடியை பிடித்து விட்டுக்கொண்டு இருந்தாள், மகாலட்சுமி.
அந்த சமயம், பரவாசுதேவனை பார்ப்பதற்கு, நாரதர் திருபாற்கடல் வந்தார்.
பாற்கடலில் ஜெய விஜயர்கள் அனுமதி இன்றி, பெருமாளை பார்க்க யாரும் உள்ளே போக முடியாது.
சனகாதி முனிவர்களையே ஒரு முறை ஜெய விஜயர்கள் தடுத்து விட்டனர்.
நாரதர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
த்ரிலோகமும் சுற்றும் நாரதரை மட்டும் யாருமே தடுப்பது இல்லை.
இவரின் முகவெட்டு அப்படி.
இவரை பார்த்தால் கம்சனுக்கு, ஹிரண்யகசிபுவுக்கு கூட, வரவேற்க தோன்றுமாம்.
நாராயண நாமத்தை எப்பொழுதும் சொல்லும் நாரதருக்கு, எங்கு சென்றாலும் வரவேற்பு, மதிப்பு.
கம்சன் போன்றவர்களே நாரதரை வரவேற்பார்கள் என்றால், நாரதரை ஜெய விஜயர்கள் தடுப்பார்களா?..
நாரதர் வீணா கானம் செய்து கொண்டே திருபாற்கடல் வருகிறார்.
அடிக்கடி இங்கு வந்து பெருமாளை சேவிப்பது இவருக்கு வழக்கமும் கூட.
எம்பெருமான் நாரதர் வருவதை கண்டதும், சந்தோஷமாக எழுந்து கொண்டு, ஆசையோடு வரவேற்றார்.
பவள பேழையில் முத்துக்களை கோர்த்து வைத்தது போல, எம்பெருமானின் உதடும், பற்களும் இருந்ததாம்.
தேவர்களுக்கும் தேவனான எம்பெருமான், பீதாம்பரம் உடுத்தி, சங்கு சக்கரம் ஏந்திய கரங்களுடன், கண்ணுக்கு ஆனந்தம் தரக்கூடிய திவ்ய மங்கள வ்யூஹ ரூபத்தை உடையவராய் இருந்தார்.
எம்பெருமானை பார்த்து, கை குவித்து நாரதர் துதிக்கலானார்.
"நாம (name) ரூபங்களை (figure) கடந்து,
எல்லா இடத்திலும் அகண்டமாக இருந்து கொண்டு,
'ஸத்'தாய், 'சித்'தாய், ஆனந்தமாய்,
சத்தியத்தின் சொரூபனாய் இருக்கக்கூடிய நீங்கள்,
பக்தர்களுக்காக திவ்ய மங்கள (மஹாவிஷ்ணு) ரூபத்தை (Figure) ஏற்கிறீர்கள்.
சாமான்ய தேவர்கள், பரதெய்வமான உங்கள் பெருமைக்கு அருகில் கூட வர முடியாது.
கர்ம தாஸர்களாக இருப்பவர்கள் தேவர்கள்.
ஒருவன் செய்யும் கர்மாவுக்கு (செயலுக்கு) தகுந்த பலனை கொடுப்பவர்கள் தேவர்கள். அவ்வளவு தான்.
தானாக ஒருவனுக்கு கிருபை செய்ய தேவர்களுக்கு சக்தியும் கிடையாது.
'நீ ஏன் என்னை காப்பாற்றவில்லை?' என்று இந்திரனை கேட்டாலும்,
'வாஸ்தவம் தான். நீ தினமும் கோவிலுக்கு வந்தாய், என்னை பூஜை செய்தாய்.
இருந்தாலும் உன் பூஜா பலன் அவ்வளவு தான், உன் நம்பிக்கைக்கு அவ்வளவு தான்
பலன் கொடுக்க முடியும்'
என்று கை விரித்து விடுகின்றனர்.
ஆனால் நீங்கள் ஒருவர் மட்டுமே, "உன் கால பலன் அவ்வளவு தான். உன் கர்ம பலன் அவ்வளவு தான்"
என்று சால்ஜாபுகள் சொல்லாமல், பிறர் யோக்கியதை பார்த்து அனுக்கிரகம் செய்யாமல், தீனர்களுக்கும் அனுக்கிரகம் செய்கிறீர்கள்.
மற்ற தெய்வங்களுக்கும் புராணம் உள்ளது.
உங்களுக்கும் புராணம் உள்ளது.
ஆனால் உங்களை போன்று வேறு எந்த தெய்வமும் உதவி செய்ததாக தெரியவில்லை.
எது தர்மம்? என்பதை தெரிந்து கொள்ள 'சப்த ப்ரம்மமாகிய வேதத்தை பார்த்து தெரிந்து கொள்கிறோம்'
அப்படிப்பட்ட வேதமே ஒரு சமயம், பிரளய ஜலத்தில் போய் விட்டது.
மது கைடபர்கள் வேதத்தை எடுத்து கொண்டு சென்று விட்டனர் என்ற பொழுது, மற்ற தெய்வங்கள் எல்லாம் எங்கே போனார்கள்?
பேசாமல் இருந்து விட்டனரே!!
இப்படி மற்ற எந்த தெய்வங்களும் முன் வராத போது, நீங்கள் தானே மத்ஸ்ய அவதாரம் எடுத்து பிரளய ஜலத்தில் நீந்தி வேதத்தை மீட்டீர்கள்.
ஒரு சமயம், பிரளய ஜலத்தில் பூமியே மூழ்கி விட, பூமி தேவியை காப்பாற்ற, ஒரு தேவனும் முயற்சி செய்யவில்லையே? அப்பொழுதும் சும்மா இருந்தார்களே!!
எல்லா தெய்வங்களுக்கும் கோவில் உள்ளது.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் பக்தர்கள் உண்டு. புராணங்கள் உண்டு.
'பூமியே மூழ்கி விட்டது' என்றதும் இவர்கள் யாருமே ஒரு முயற்சியும் செய்யவில்லையே!!
உமக்கோ, உடம்பு பறக்கிறது.. உடனே 'வராஹ அவதாரம்' செய்து பூமியை பிரளய ஜலத்தில் இருந்து மீட்டு காப்பாற்றினீர்கள்.
இப்படி பூமியையே காப்பாற்றி, பூமிக்கே ஆதாரமாக இருக்கும் உங்களை, இவர்கள் நன்றியுடன் நினைத்து பார்க்காமல் இருக்கிறார்கள்.
ஒரு சமயம் தேவர்களுக்கு 'அம்ருதம் வேண்டும்' என்று ஆசைப்பட்டு உங்களிடம் வந்து சரணாகதி செய்தார்கள்.
நீங்களே இவர்களுக்காக 'மந்திர மலையை தூக்கி கொண்டு வந்து,
பாற்கடலில்' கடையுமாறு சொன்னீர்கள்.
கடையும் பொழுது மலை கடலில் உட்கார்ந்து விட, உடனே கூர்ம அவதாரம் செய்து மலையை முதுகில் தாங்கி, கடையுமாறு சொன்னீர்கள்.
'பெருமாளுக்கு முதுகு வலிக்குமே!! இப்படி கடைந்தாவது அம்ருதம் நாம் சாப்பிட வேண்டுமா?'
என்று ஒரு தேவனுக்காவது தோன்றியதா? இல்லையே !!
அம்ருதம் வருகிறதா?... அம்ருதம் வருகிறதா?..
என்று தானே பார்த்து கொண்டு இருந்தனர்.
இவ்வளவு கிருபை செய்கிறீர்களே.
யாருக்காவது நன்றி இருக்கிறதா?
'ரூபத்தை கடந்த பரவாசுதேவனான நீங்கள், திருமேனி எடுத்து கொள்வதே, பிறருக்கு உதவி செய்வதற்கு தான்' என்று அறிகிறேன்.
ஹிரண்யகசிபு 14 லோகங்களையும் (ப்ரம்ம லோகம் முதல் பாதாளம் வரை) தன் தவ வலிமையாலும், உடல் வலிமையாலும் கைப்பற்றி விட்டான்.
யாரும் இவனை ஒன்றுமே செய்ய முடியாத அளவுக்கு சக்தி பெற்று இருந்தான்.
இவன் ஒருவனே 71 சதுர் யுகம் ஆட்டி வைத்தானே.
எந்த தேவனுக்காகவாவது சக்தி இருந்தால், ஹிரண்யகசிபுவை எதிர்த்து இருக்கலாமே?
ப்ரம்மா முதல் அனைத்து தேவர்களும் பொட்டி பாம்பாக அடங்கி இருந்தார்களே, இவனிடம்.
பிரகலாதன் வரும் வரை, தேவர்கள் அனைவரும் "ஹிரண்யன் அடிப்பானே!" என்று பயந்து
"ஹிரண்யாய நம: ஹிரண்யாய நம:"
என்று சொல்லிக்கொண்டு அமைதியாக இருந்தனரே !!
இப்படி ஒருவனும் ஹிரண்யனை அடக்க புறப்படவில்லை.
அங்கும், நீங்கள் தானே, கடைசியில் பிரகலாதனுக்காக நரசிம்மமாக வந்து, ஹிரண்யனை வதம் செய்து, தேவர்களையும் வாழ வைத்தீர்கள்.
புராணங்களை எடுத்து பார்த்தால், ஆதியில் இருந்து அந்தம் வரை உங்கள் புகழ் தானே தெரிகிறது.
'உலக நிர்வாக பொறுப்பை' நீங்கள் அல்லவோ வைத்துள்ளீர்கள்.
திடீரென யாராவது வந்து, நான் ஈஸ்வரன் என்று சொல்லி விட முடியுமா?
பிரகலாதன் பேரன் பலி சக்கரவர்த்தியும் அவன் ஆட்சி காலத்தில் பூலோகம் முதல் ப்ரம்ம லோகம் வரை கைப்பற்றி விட்டான்.
தேவர்கள் மீண்டும் வாழ இடம் இல்லாமல் தவித்தனர்.
இந்திரனுக்கு அழ கூட தெம்பு இல்லாமல், அவன் தாய் 'அதிதி' உங்களிடம் வந்து அழுது பிரார்த்தித்தாள்.
அப்பொழுதும் நீங்கள் தானே வாமன மூர்த்தியாக அவதாரம் செய்து பலி சக்கரவர்த்தியையும் தன் பக்தனாக்கி, உலகை மீட்டு, இந்திரனுக்கு மீண்டும் சொர்க்க லோகத்தை கொடுத்தீர்கள்.
மண்ணை தானமாக பலி சக்கரவர்த்தியிடம் தானமாக பெற்று, அதற்கு பதிலாக, தன்னையே அவனுக்கு கொடுத்து விட்டீர்களே!!.
'சுதலம்' என்ற பாதாள லோகத்தில், அவனுக்கு இடம் கொடுத்து, அவன் மாளிகையில் நீங்களே கதையை வைத்துக்கொண்டு 'கதாதரனாக' காவல் காத்து கொண்டு இருக்கிறீர்களே?
வயலில் பயிர் செய்த தானியங்களை, ஆடு மாடுகள் மேய்ந்து விடாமல் இருக்க, வேலி அமைப்பது வழக்கம்.
ஆனால் வேலியே பயிரை நாசம் செய்வது போல, ஒரு சமயம், மக்களை காப்பாற்ற
வேண்டிய க்ஷத்ரியர்கள் (armed protection force) வலுத்து போய், அவர்களே
வீடுதோறும் புகுந்து, கொள்ளை அடித்து, மக்களை கொன்று, அராஜகம்
செய்கிறார்கள் என்றதும்,
நீங்களே 'பரசு-ராமராக' அவதாரம் செய்து, அதர்மம் செய்யும் க்ஷத்ரியர்கள் அனைவரையும் 21 தலைமுறைகள் நிர்மூலமாக்கி, அவர்கள் கொட்டத்தை அடக்கி, மீண்டும் அவர்களை, அவர்கள் தர்மத்தில் இருக்க செய்தீர்கள்.
சாதுக்களான மக்களை காப்பாற்றவும் நீங்கள் தானே வர வேண்டி இருக்கிறது.
'கோடாலி, சூலம்' என்று எத்தனை தெய்வங்கள் வைத்து உள்ளன.
அதை வைத்துக்கொண்டு, உலகத்தில் அதர்மம் தலைவிரிக்கும் போதும், பயன்படுத்தாமல், ஒன்றும் செய்யாமல் இருந்தனரே.
கோடாலி எடுத்து, நீங்கள் வந்து தானே மக்களை காப்பாற்ற வேண்டி இருக்கிறது.
தர்மம் வீழ்ச்சி அடையும் போது, எந்த தெய்வமும் "தர்மம் இப்படி பட்டு போய் விட்டதே!!" என்று கவலை படுவதாக கூட தெரியவில்லையே!!
அதே சமயம் "இந்திராய ஸ்வாஹா"
என்று தர்ம ரீதியாக யாராவது ஆஹுதி கொடுத்தால் மட்டும், அதை பெற்று கொள்ள வருகின்றனர்.
'தர்மம் அழிந்து போகிறதே! காப்பாற்ற வேண்டுமே!' என்றால் மட்டும், நீங்கள் தான் வர வேண்டி இருக்கிறது. வேறு எவரும் வருவதில்லை.
இப்படி எதற்கும் தாங்களே வந்து காப்பாற்ற வேண்டி இருக்க, பிற தேவதைகளையும் தன் இஷ்ட தெய்வமாக வழிபடுகின்றனரே!! ஜனங்கள்.
அப்படி என்ன தான் இந்த தெய்வங்கள் இவர்களுக்கு அனுக்கிரகம் செய்து விட்டனரோ? என்று தெரியவில்லை.
மற்ற தெய்வங்களை வணங்கும் இவர்களுக்கு, பரதெய்வமான உங்களின் குண விசேஷங்கள் என்ன?
மற்ற தெய்வங்களின் குண விசேஷங்கள் என்ன? என்பது தெரியவில்லையே!
இப்படி மற்ற தெய்வங்களையும் வழிபடும் இவர்கள், நீரே இவர்களின் ஆத்மாவுக்கு சொந்தக்காரன் என்று அறிந்து கொள்ளவில்லையே!!
காம்யார்த்தமான (பலனை எதிர்பார்த்தே) பக்தி செய்பவர்களாகவே பெரும்பாலும் இருக்கின்றனர்.
"அந்த தேவதையை வழிபட்டால் உடனே பலித்து விடும்" என்று கேள்விப்பட்டால் கூட, அந்த தெய்வத்தின் பக்கம் ஓடி விடுகின்றனர்.
எனக்கு இக லோக சௌக்கியங்கள் எதுவும் வேண்டாம்.
எனக்கு 'உங்கள் சரணத்தில் பக்தியே நிலைக்குமாறு' செய்யுங்கள்.
என்னிடத்தில் தியான யோகமும் இல்லை, கர்ம யோகமும் இல்லை, ஞான யோகமும் இல்லை.
தகுதி பார்க்காமல், நீங்கள் யாரையும் ஏற்றுக்கொள்வீர்கள்! என்றும் மட்டும் அறிவேன்.
உங்கள் பெருமை அறியாமல், நீங்களே இந்த ஜீவனுக்கு (ஆத்மாவுக்கு) சொந்தக்காரர் என்றும் தெரியாமல், பிற தெய்வங்களையும் வழிபடுபவர்களை நான் குறையாக சொல்லவில்லை.
அவரவர் பக்குவத்தை பொறுத்து, அவரவர்கள் பக்தி செய்கின்றனர் என்று அறிகிறேன்.
ஏதோ ஒரு அல்ப பலனுக்காக, ஏதோ ஒரு தெய்வத்திடம் பக்தி செய்கின்றனர்.
என்னை பொருத்தியவரை ஆதி தேவனான உங்களை தவிர, வேறு தெய்வம் எனக்கு தெரியாது.
என்னுடைய கண் பார்வை கூட வேறு ஒரு தெய்வத்திடம் திரும்புவதில்லை."
என்று சொல்லி, கை குவித்து நின்று கொண்டிருந்தார் நாரதர்.
பொதுவாக, ஜனங்களோடு ஜனங்களாக இருந்தால், எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியாது.
கொஞ்சம் மாடியில் ஏறி நின்று பார்த்தால், அந்த தெருவில் போகும் எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியும்.
'பூலோகத்தில் தனக்கு ஒரு ஏழு அடுக்கு மாடி அமைத்துக்கொண்டு, அங்கு நின்று கொண்டால், எல்லோரையும் பார்க்கலாமே'
என்று சங்கல்பம் செய்தார் பாற்கடலில் உள்ள எம்பெருமான்.
கண் மலர்ந்து பார்த்த, எம்பெருமான், ஆதிசேஷன் மேல் சாய்ந்து கொண்டே பேசலானார்,
"நாரதா ! பூலோகத்தில் அவதாரம் செய்து கொஞ்சம் விளையாடி விட்டு வரலாம் என்று நினைக்கிறேன்.
எனக்கு பூலோகத்தில் ஒரு தகுந்த இடம் பார்த்து சொல்.
எல்லோரும் காம்யார்த்த பக்தியே செய்து கொண்டு, என்னிடம் பக்தி செய்வதை கூட விட்டு விட்டு, ஏதேதோ தெய்வங்களை வழிபடுகிறார்கள் என்று குறைபட்டு கொண்டீர்கள்.
அவர்கள் மேல் தோஷம் இல்லை. அது என் தோஷம் தான், நாரதா!
காரணம், நான் பொதுவாக காம்யார்த்த (பலனை எதிர்பார்த்து) பக்தி செய்பவர்களிடம் முகம் கொடுக்காமலேயே இருக்கிறேன்.
அதனாலேயே அவர்களும் வேறு தெய்வங்களிடம் சென்று விடுகின்றனர்.
காம்யார்த்த பக்தி, பிரார்த்தனைக்கு முகம் சுளிக்காமல், எப்பொழுதும் பிரசன்னமாக இருந்து கொண்டே இருந்தால், என்னிடமே இவர்கள் அனைவரும் திரும்பி வருவார்கள்.
ஆதலால், நீங்களே ஒரு ஏற்ற இடத்தை பூலோகத்தில் கண்டுபிடித்து சொல்வீர்கள் என்றால், அங்கேயே நான் அவதாரம் செய்ய நினைத்துள்ளேன்.
எனக்கு வைகுண்டம், க்ஷீராப்தி கூட முக்கியமில்லை.
நான் நிரந்தரமாக பூலோகத்திற்கு வர சங்கல்பித்து உள்ளேன்.
நான் பூலோகத்திற்கு வந்த பிறகு, இந்த சம்சார கடலில் தத்தளிக்கும் ஜனங்கள், என்னை பார்த்ததும், 'என்ன செய்கிறார்கள்?' என்று பார்க்க போகிறேன்.
'கோவிந்தா... கோவிந்தா...'
என்று அனைவரின் வாயிலும் என் நாமத்தை வரவழைத்து, காம்யார்த்த பலனையும் கொடுத்து, மோக்ஷமும் கிடைக்க அனுக்கிரகம் செய்கிறேன்."
என்றார் வைகுண்டபதி.
நாரதர், "என்னை போய் பூலோகத்தில் தகுந்த இடம் எது என்று சொல்ல சொல்கிறீர்களே?" என்றார்.
மகாவிஷ்ணு, சிரித்து கொண்டே, "நீர் மூன்று உலகங்களிலும் சுற்றுபவர் ஆயிற்றே. உமக்கு தெரியாத இடங்களே கிடையாது.
பூலோகத்துக்கு வந்து விட போகிறேன். உம்மை கேட்காமல் யாரிடம் கேட்பது?" என்றார்.
நாரதர், "பாற்கடலில் இருக்கும் இந்த திவ்ய ரூபத்துடன் இப்படியே பூலோகம் வர சங்கல்பித்து உள்ளீர்களா?" என்று ஆச்சரியம் பொங்க கேட்க,
மகாவிஷ்ணு, "நான் இங்கு பாற்கடலில் இருப்பதை போலவே பூலோகத்திற்கு வர போவதில்லை.
பூலோகத்திற்கு ஏற்ற, அர்ச்சா திருமேனியுடன் அவதாரம் செய்ய சங்கல்பித்து உள்ளேன்.
க்ஷீராப்தியில் என் வ்யூஹ அவதாரத்தை, ஞானியான ரிஷிகளும், ப்ரம்மா, ருத்ரன், தேவர்கள், கிண்ணரர்கள் மட்டுமே பார்க்க முடியும்.
அஞானிகள், பூலோகவாசிகள் இங்கு வந்து பார்க்க முடியாது.
'அஞானிகள் கூட என்னை பார்க்க வேண்டும்' என்பதால், அர்ச்சா திருமேனியுடன் பூலோகத்தில் அவதரிக்க உள்ளேன்" என்றார்.
இதை கேட்ட நாரதர் மேனி சிலிர்த்து எம்பெருமானின் கருணையை நினைத்து கண்ணீர் விட்டார்.
நாரதர் பேசலானார்,
"உங்கள் கிருபைக்கு எல்லையில்லை.
நீங்கள் மத்ஸ்ய, கூர்ம அவதாரங்கள் செய்த போதே, ஏன் இப்படி பெருமாள் தன்னை வருத்தி கொண்டு தானே அவதாரம் செய்கிறார்? என்று கூட வருந்துவேன்.
இப்படி இருக்க, 'ஒரு விக்ரஹம் போல அர்ச்ச அவதாரம் செய்து வருவேன்' என்று சொல்கிறீர்களே?
வைகுண்டத்தையும் விட்டு விட்டு, இந்த ஆனந்த ஸ்வரூபனான மஹாவிஷ்ணு ரூபத்தையும் விட்டு விட்டு, ஒரு அசேதனமான (அசையாத) கல் போன்று அவதாரம் செய்வேன் என்கிறீர்களே?"
என்று வருத்தப்பட்டார்.
உடனே பகவான்,
"நாரதா ! நான் கொஞ்சம் சைதன்யம் இருக்கும்படியாக வந்தால் கூட, எவ்வளவு
தான் பொறுமையாக இருந்தாலும், சாஸ்திரத்தை மீறி என் முன்னே நடக்கும்
அபசாரங்களை, மன்னிக்க முடியாமல் போய் விடும்.
நான் கொஞ்சம் சைதன்யம் தெரியும் படியாக வந்தாலும், உணர்ச்சி என்பது ஏற்படுமல்லவா?
எந்த அபசாரங்கள் செய்தாலும், 'அபசாரங்களுக்கு தண்டனை என்னும் உணர்ச்சி கூட என்னில் வெளிப்பட கூடாது' என்பதால், என்னை கல்லாக்கி கொண்டு பூலோகத்தில் அவதாரம் செய்வேன்.
'கருணை ஒன்றே' செய்ய வேண்டும்.
அபசாரங்கள் செய்தாலும், அதை பொருட்படுத்தாமல் இருக்க, அர்ச்சா திருமேனியே சிறந்தது.
அர்ச்சா திருமேனியாக இல்லாமல், நான் விபவ அவதாரமாகவே செய்தால், எல்லையில்லாமல் செய்யும் அபசாரங்களை பொறுத்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது.
விபவ அவதாரம் செய்து வந்தால், அபசாரத்தை கண்டு கொஞ்சமாவது கோபம் வந்து விடும்.
ஆதலால், நான் ஒரு சிலா மூர்த்தியாக என்னை ஆக்கிக்கொண்டு கலியில் அவதாரம் செய்வேன்.
அதற்காக சிலையாகவே இருந்து விடாமல், சிலை ரூபத்திலிருந்து கொண்டே அனைவரையும் பார்த்து, அணுகிரஹம் செய்து கொண்டே இருக்க போகிறேன்.
நான் பார்க்க கல் போல அவதாரம் செய்தாலும், அளவு கடந்த கருணையை வழங்குவேன்.
கல் போல நான் அவதாரம் செய்வதற்கு காரணமே, ஜனங்களின் அபசாரங்களை சகித்து கொள்ளத் தான்.
என் மீதோ, என் எதிரோ எத்தனை அபசாரங்கள் நடந்தாலும், அதை பொருட்படுத்தாமல் கருணை செய்ய, துளிகூட உணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டும் என்பதாலேயே, நான் அர்ச்ச அவதாரம் செய்ய சங்கல்பித்தேன்.
அர்ச்ச அவதாரமாக இருந்தும் அளவு கடந்த கருணையை பொழிவேன்."
என்று பகவான் சொல்ல,
"பூலோகத்தில், 'சுவர்ணமுகி' என்ற
நதிக்கரை ஓரம், கிழக்கு பாரத கடலுக்கு அருகே மேற்கு பாகத்தில் உள்ள
பிரதேசம் ஏற்ற இடமாக உங்கள் திருவிளையாடலுக்கு இருக்கும்."
என்று பகவான் அவதாரத்துக்கு ஏற்ற இடத்தை நாரதர் சொன்னார்.
பெருமாள் அவதரிக்க இப்படி இடத்தை சொன்னதை கேட்ட ஆதிசேஷன், "தனக்கு ஏதாவது இதில் கைங்கர்யம் உண்டா?"
என்று எதிர்பார்க்க,
பகவான் தான் படுத்திருக்கும் ஆதிசேஷனை பார்த்து,
"எல்லா விதத்திலும் எனக்கு ஆட்பட்டவன் நீ.
நீ முதலாக பூலோகத்துக்கு சென்று, அங்கு பர்வதமாக (மலையாக) இரு. நான் அங்கு வந்து திருவிளையாடல் செய்கிறேன்."
என்று ஆதிசேஷனை பூலோகத்திற்கு அனுப்பினார் பகவான்.
ஒரு பாம்பு நெளிந்து நெளிந்து, பார்ப்பதற்கு மேடு பள்ளம் போல தோன்றுவது போல, ஒரு மலையாக தோன்றிய ஆதிசேஷன், நெளிந்து நெளிந்து ஏழு மலைகளாக ஆகி, சேஷாத்ரி (ஆதிசேஷன் மலை) என்ற பெயருடன், எம்பெருமான் அவதார காலத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
சர்வ விதமான கைங்கர்யத்தையும் செய்பவர் என்பதாலேயே இவருக்கு 'ஆதிசேஷன்' என்று பெயர்.
'தான் ஸ்வாமி இல்லை, தான் எம்பெருமானின் சொத்து'
என்று இருப்பதால் இவருக்கு "சேஷன்" என்று பெயர்.
இவரே எம்பெருமானின் முதன்மையான சொத்தாக இருப்பதால், இவரை "ஆதிசேஷன்" என்கிறோம்.
ஆதிசேஷன் எம்பெருமானுக்கு எப்படி எல்லாம் சேவை செய்கிறார்? என்று பார்க்கும் போது, ஆதிசேஷனின் பெருமை நமக்கு புரியும்.
"ஸ்ரீவைகுண்டத்தில்" எம்பெருமான் பரவாசுதேவனாக இருந்தால், இவர் அமர்வதற்கு தானே 'சிம்மாசனம்' ஆகி விடுகிறார்.
"பாற்கடலில்" எம்பெருமான் வ்யூஹ அவதாரம் செய்து மகாவிஷ்ணுவாக இருந்தால், இவர் படுத்தால், தானே 'பஞ்சுபடுக்கை' ஆகி விடுகிறார்.
எம்பெருமான் நடந்து சென்றால், தானே அவருக்கு 'குடையாகி' விடுகிறார்.
(கிருஷ்ண அவதாரம் செய்த போது யமுனையை கடக்கும் போது குடையானார்)
எம்பெருமான் நின்றால், தானே அவர் திருவடிக்கு 'பாதுகை' ஆகி விடுகிறார்.
(ஸ்ரீனிவாசனாக பெருமாள் நிற்க சேஷாத்திரி (திருமலை) ஆனார்)
இப்படி
- சர்வ தேச (எந்த இடத்திலும்),
- சர்வ கால (எந்த சமயத்திலும்),
- சர்வ அவஸ்தைகளிலும் (எந்த நிலையிலும்)
எம்பெருமானுக்கு சர்வ கைங்கர்யமும் (எந்த சேவையும்) செய்யக்கூடியவர் ஆதிசேஷன்.
எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்கள், ஆதிசேஷனை போல ஆசையோடு செய்ய வேண்டும்.
ஏழுமலைகளாக 'முதல் யுக'த்திலேயே தோன்றிவிட்ட ஆதிசேஷன், "சேஷாத்ரி" என்ற பெயருடன் எம்பெருமான் அவதாரத்திற்கு கலியுகம் வரை காத்து கொண்டிருந்தார்.
ஆதிசேஷன் "சேஷாத்ரி" என்ற 7 மலையாக ஆகி இருந்தார்.
காலப்போக்கில் ஒவ்வொரு மலைக்கும் தனி பெயர் ஏற்பட்டது.
1. சேஷாத்ரி (உண்மையான பெயர்)
2. வ்ருஷபாத்ரி (வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்ற மலை)
3. சிம்மாத்ரி (நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த இடம்)
4. அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த மலை)
5. கருடாத்ரி (அம்ருத கலசம் கருடன் கொண்டு வந்த போது, அமர்ந்த மலை)
6. வெங்கடாத்ரி (பாவங்களை பொசுக்கும் மலை, வெங்கடேச பெருமாள் இருக்கும் மலை)
7. நாராயணாத்ரி (நாராயண பட்டருக்கு வைகானச முறைப்படி பூஜை செய் என்று உபதேசத்த மலை)
"அத்ரி" என்றால் மலை என்று அர்த்தம்.
ஆதிசேஷன் எத்தனை நீளமாக படுத்தார்? திருமலையின் நீளம் என்ன?
ஆதிசேஷனின் தலை (சிரசு) ஆரம்பிக்கும் இடத்தில், 'காளஹஸ்தி' என்ற க்ஷேத்ரம் உள்ளது.
ஆதிசேஷனின் இதய பகுதியில் அமைந்த க்ஷேத்ரமே "அஹோபிலம்".
ஸ்ரீசைலம் என்ற இடத்தில் ஆதிசேஷனின் வால் பகுதி முடிகிறது.
அந்த பாம்பின் வளைந்து இருக்கும் தலையின் உச்சத்தில் ஆதிசேஷன் தரித்து இருந்த
நாக ரத்தினத்தின் உச்சத்தில், வெங்கடேசபெருமாள் தன்னை வெளிக்காட்டி, அந்த
சிரசையே "வெங்கடாத்ரி" என்ற ஒரு மலையாக ஏற்று வீற்றிருக்கிறார்.
காளஹஸ்தி ஆரம்பித்து, ஸ்ரீசைலம் வரை ஆதிசேஷன் படுத்தார் என்றால், ஏழு மலைகளின் நீளம் நமக்கு புரியும்.
பூலோகத்திற்கு கொண்டு வந்து விட்டார் ஆதிசேஷன்.
இப்படி அதி ஆச்சர்யமாக எம்பெருமான் வருவதற்காக படுத்து விட்டார் ஆதிசேஷன்.
இதை பார்த்த கங்கை, இந்த திருமலைக்கு ஒரு வெள்ளை கொடி பறக்க விடுவது போல, ஆகாச கங்கையாக பொழிய ஆரம்பித்தாள்.
கங்கையே வந்தவுடன், ஏழு மலையையும் சூழ்ந்து கொண்டு அனைத்து புனிதமான தீர்த்தங்களும் ஆங்காங்கே உருவானது.
மலையே செழிப்பு நிறைந்து, பூக்களும், மரங்களும் நிறைந்த பசுமையான சோலை ஆனது. திருமலையே, எம்பெருமானை வரவேற்க காத்திருந்தது.
மலையாக பார்க்காமல், ஆதிசேஷனாக பார்க்கும் போது தான், பக்தன் எப்படி எல்லாம் கைங்கர்யம் செய்கிறான்? என்பது புரியும்.
காற்றில் மரங்கள் யாவும் அசைவதை பார்த்தால், ஆதிசேஷனின் ஆயிரம் தலைகள் அசைவது போல தோன்றுமாம் பக்தனுக்கு.
ஏழு மலையையும், வெண்மையான மேகங்கள் சூழ்ந்து வருவதை பார்த்தால், க்ஷீராப்தியில் இருந்த பாற்கடல், 'ஆதிசேஷனும் கிளம்பி விட்டார், எம்பெருமானும் கிளம்பி விட்டார், இனி வைகுண்டத்தில் எனக்கு என்ன வேலை?'
என்று திருமலைக்கு வந்து விட்டதோ! என்று தோன்றுமாம் பக்தனுக்கு.
'வைகுண்டத்தில் இருந்து ஆதிஷேஷனே திருமலையாக வந்து விட்டார்' என்று உணர்ந்த ரிஷிகள், தங்கள் ஆஸ்ரமங்களை கலைத்து விட்டு, திருமலை வந்து பகவத் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.
மயில்களும், குயில்களும் ஆனந்தமாக கானம் செய்து விளையாடியது.
காள என்றால் சிலந்தி,
ஹஸ்தி என்றால் யானை.
இந்த ஸ்தலத்தில் யானையும், சிலந்தியும் சிவ பூஜை செய்த காரணத்தால், இந்த இடத்திற்கு பிற்காலத்தில் "காளஹஸ்தி" என்ற பெயர் உண்டானது.
காளஹஸ்தி 'சிவ' ஸ்தலமாகவும் உள்ளது.
ஸ்ரீசைலம் என்பதும் மற்றொரு சிவக்ஷேத்ரம். இந்த சிவக்ஷேத்ரத்தில், மருத மரமாக (அர்ஜுன மரம்) சிவபெருமானே இருக்கிறார்.
பார்வதி தேவி இங்கு மல்லிகை கொடியாக ஆகி, அந்த மருத மரத்தை சுற்றிக்கொண்டு இருக்கிறாள்.
இதனால் இங்கு சிவபெருமானுக்கு "மல்லிகார்ஜூன்" என்றும் பெயர்.
இயற்கையாக தோன்றிய மலை அல்ல திருமலை. ஆதிசேஷனே மலையாக இருக்கிறார்.
இங்கு வசிக்கும் மிருகமும், மனிதர்களும், பறவைகளும் என்ன பிரார்த்தனை செய்து இப்படி திருமலையில் வாசம் செய்கிறார்களோ? நமக்கு தெரியாது.
மகான்கள், ஆழ்வார்கள் எல்லோரும் இந்த கண்ணோட்டத்தில் தானே திருமலையை பார்த்தனர். பார்க்கின்றனர்.
ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் 'அனந்தாழ்வார்' திருமலையில் பூ கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.
ஒரு சமயம், அனந்தாழ்வார் தன் சிஷ்யர்களுடன் 'மேல் நாட்டு திவ்ய தேசங்கள் ஆரம்பித்து, அனந்த பத்மநாபன் வரை சேவிக்கலாம்' என்று புறப்பட்டார்.
'பயணத்திற்கு, திருமலை பிரசாதமே எடுத்துக்கொள்ளலாம்!' என்று ஒரு மூட்டையில் பிரசாதம் எடுத்துக்கொண்டு, கிளம்பினார்கள்.
கிளம்பி வெகுதூரம் சென்ற பின், 'சரி சாப்பிடலாம்' என்று நினைத்து, பிரசாத மூட்டையை அவிழ்க்க, அதில் எறும்புகள் இருப்பதை பார்த்தார், அனந்தாழ்வார்.
அவர் சிஷ்யர்கள்,
"எறும்பை தட்டி விட்டு சாப்பிடலாமா? இல்லை அப்படியே பிரசாதத்தை வைத்து விட்டு பயணத்தை தொடரலாமா?"
என்று கேட்க,
அனந்தாழ்வார்,
"இந்த எறும்புகள் எல்லாம் திருமலையில் இருந்தே வந்திருக்கிறது.
'எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ?' (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் செய்த பிரார்த்தனை, இந்த எறும்புக்கு கிடைத்துள்ளதே!
இது நாள் வரை, திவ்யதேச வாசம் செய்த எறும்புகளை, இப்படி ஏதோ ஒரு கிராமத்தில் விட்டு விட கூடாது.
இவையெல்லாம் எந்த ஜீவனோ நமக்கு தெரியாது.
திருமலை
வாசம் பெற்ற இந்த ஜீவனை, நாம் மீண்டும் திருமலை சென்று, அங்கேயே இந்த
பிரசாதத்தை வைத்து விட்டு நம் பயணத்தை மீண்டும் தொடர்வோம்"
என்று சொல்லி அவர்கள் யாத்திரையை நிறுத்து விட்டு, மீண்டும் திருமலையில் ஏறி, அந்த எறும்புகளை பிரசாத மூட்டையுடன், மீண்டும் ஸ்வாமி புஸ்கரணி தீர்த்தம் அருகே, திருமலையிலேயே விட்டு விட்டு, மீண்டும் யாத்திரையை தொடர்ந்தனர்.
நம் பூர்வ ஆச்சாரியர்கள் எப்படி திருமலையை பக்தியுடன் பார்த்தனர்? அங்குள்ள ஜீவராசிகளை எப்படி மதித்து உள்ளனர்? என்று புரிகிறதே.
திருமலையை மற்ற இயற்கையாக தோன்றிய மலை போலவா ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.
ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும்.
அந்த பக்தி நமக்கும் வரும்.
ஆதிசேஷனே ஏழு மலையாக இருக்கும் போது,
பரவாசுதேவனே திருமலையப்பனாக நின்று கொண்டு இருக்கும் போது,
இங்கு வசிக்கும் விலங்குகளும், பறவைகளும் மட்டும் சாதாரணம் என்று நினைக்க தோன்றுமா? ஒரு பக்தனுக்கு.
ஆழ்வார்கள் போன்று நமக்கும் பக்தி வர ஆசைப்பட வேண்டும்.
"எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ?" (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் பாடும் பொழுது,
இங்கு இருக்கும் செடி, கொடிகளுக்கு கூட மங்களாசாசனம் செய்து விட்டாரே! என்று தோன்றுகிறது.
இங்கு இருக்கும் ஈ, எறும்பு கூட, எந்த மகானோ! என்றல்லவா நமக்கு தோன்ற வேண்டும்.
ஆயிரம் நாக்கு உடைய ஆதிஷேஷனே திருமலையின் மகத்துவத்தை சொல்ல முடியாத போது, 18 புராணங்களும் திருமலையின் மகத்துவத்தை சொல்வது ஆச்சர்யமில்லையே.
ஆதிஷேஷனே, கலியில் ஸ்ரீ ராமானுஜராக 1017CEல் அவதாரம் செய்தார்.
ஒரு சமயம், யதிராஜனாக (சந்நியாசி) ஆன பின்பு, திருமலையில் ஒரு மாதம் தங்கி, அவர் பூர்வ க்ருஹத்தில் மாமாவான "திருமலை நம்பி"யிடம் ராமாயண காலட்சேபம் கேட்கலாம் என்ற ஆசையோடு திருமலை வந்தார்.
"எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ"
என்ற ஆழ்வார் பாசுரத்தை எண்ணி,
'திருமலையில் எப்படி கால் வைத்து போவேன்?'
என்று தயங்கி, தன் இரு கால்களையும் மடக்கி, வாழைத்தண்டால் இருக்க கட்டி கொண்டு, தன் முழங்காலால் நடக்க ஆரம்பித்தார்.
'ஸ்ரீ ராமானுஜர் முழங்கால் தேய திருமலை ஏறிக்கொண்டு இருக்கிறார்' என்று கேள்விப்பட்ட திருமலை நம்பி, கீழே இறங்கி ஓடி வந்தார்.
அதற்குள் ராமானுஜர் முதல் கோபுரம் வரை வந்து விட்டார்.
பூர்வ ஆஸ்ரமித்தில் தன் மருமகன் தான் 'ராமானுஜர்' என்றாலும், யதிராஜராக ஆகி விட்ட ராமானுஜரை சேவித்துக்கொண்டே,
"ஏன் இப்படி வர வேண்டும்?" என்று கேட்க,
"தங்களை சேவிக்கலாம் என்று தான் வந்து கொண்டிருந்தேன்"
என்றார் ராமானுஜர்.
"யதிராஜர் இப்படி முட்டுக்கால் தேய வந்தால் இது சாத்தியமா?
சாதாரணமாக காலால் நடந்து வந்து பெருமாளை திருமலை ஏறி வந்து தரிசிப்பதே
ஜனங்களுக்கு கடினமாக இருக்கும் போது, தாங்கள் ஆதிசேஷனாக இருக்கும் திருமலை
மேல், கால் படக்கூடாது என்று இப்படி கால்களை கட்டிக்கொண்டு, ஏறி வந்தால்,
யதிராஜரே கால் வைக்க தயங்கினார் என்று தெரிந்தால், ஒருத்தர் கூட திருமலை
வந்து எம்பெருமானை தரிசிக்க மாட்டார்களே!!
நீங்கள் திருமலையில் கால் வைத்து நடப்பது தோஷமில்லை.
ஒரு தாயார் தன் மடி மீது குழந்தை வைத்து கொள்ளும் போது, சில சமயம் தன்
சின்ன காலால், தாயை உதைத்தாலும், அது அவளுக்கு ஏற்பு உடையதாக இருக்கும்.
அதை அவள் அபசாரம் என்று நினைப்பதில்லை.
அதுபோல,
திருமலையில் கால் வைத்து ஏறினாலும், அது பெருமானுக்கு ஏற்புடையதாக இருக்குமே தவிர அபசாரமாக இருக்காது.
கால் வைத்து வாருங்கள் என்று சொல்ல தான் ஓடிவந்தேன்"
என்றார் திருமலை நம்பி.
"இதை சொல்வதற்கு யாராவது சிறுவனை அனுப்பி இருக்க கூடாதோ.
நான் ஏற்று இருப்பேனே. இதற்கு தேவரீர் தானே புறப்பட்டு வர வேண்டுமா?"
என்று ராமானுஜர் கேட்க,
"திருமலை முழுவதும் தேடி பார்த்து விட்டேன். அடியேனை தவிர சிறுவன் இங்கு கிடைக்கவில்லை.
யாரை பார்த்தாலும் என்னை விட பெரியவராகவே தெரிகிறது.
இவர் என்ன பாக்கியம் செய்து திருமலையில் வாசம் செய்கிறாரோ என்று மனதில் தோன்றுகிறது.
இங்கு பிறந்த ஈ, எறும்பு கூட என்ன பாக்கியம் செய்ததோ என்று தான் தோன்றுகிறது.
யாரை பார்த்தாலும் பெரியவாளாக தோன்றுகிறது."
என்றார்.
ராமானுஜர் பிறகு, திருமலை ஏறி, பெருமானை தரிசித்தார்.
திருமலையை மற்ற இயற்கையாக தோன்றிய மலை போலவா, ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.
ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும்.
இப்படி ஆச்சர்யமாக ஆதிஷேஷனே ஏழு மலைகளாக ஆகி, எம்பெருமான் வரவுக்காக காத்திருந்தார்.
கலியுகம் ஆரம்பித்த சமயத்தில், பூலோகத்தில் எல்லாம் தயார் நிலையில் இருக்க, க்ஷீராப்தியில் இருக்கும் பரமபத நாதன், திருமலைக்கு புறப்பட தயாரானார்.