Followers

Search Here...

Showing posts with label குழந்தைகளுக்கு. Show all posts
Showing posts with label குழந்தைகளுக்கு. Show all posts

Wednesday 27 March 2019

குழந்தைகளுக்கு ராமன், கிருஷ்ணன், என்று ஏன் ஹிந்து பெயர் வைக்க வேண்டும்? கட்டுமரம் (wood), இடி(thunder) என்று இயற்கை பெயர்களை உண்மையான ஹிந்துக்கள் வைத்துக்கொள்வதில்லையே, ஏன்?

'க்ஷத்ரபந்து' என்று ஒருவன் இருந்தான். பிறப்பால் ஒரு "பிராம்மணன் அவன். 
இருந்தாலும், "ஆத்ம ஞானத்தை" சம்பாதிக்க நாட்டம் இல்லாமல் இருந்தான்.
"தெய்வ சிந்தனை இல்லாமல்", வாழ்க்கையை செலவழித்து கொண்டிருந்தான்.


"பரப்ரம்மத்தை" உபாசிக்காமல், அவனுடைய செயல்கள் "க்ஷத்ரிய" ஸ்வபாவத்திலேயே இருந்தது.

ஒரு க்ஷத்ரியனை போல, 'சண்டை செய்வதிலும், வேட்டை ஆடி பிராணிகளை ஹிம்சை செய்வதிலும்', ஆர்வம் இருந்ததால்,
இவன் 'ப்ரம்ம பந்து'வாக இல்லாமல், க்ஷத்ரியர்களின் பந்துவாக (உறவு) இருந்ததால், இவனுக்கு "க்ஷத்ர பந்து" என்று பெயர் அமைந்தது.

பிராம்மணனாக பிறந்தும், பிராம்மணனுக்கு உரிய காரியங்கள் இவனிடத்தில் இல்லை.
க்ஷத்ரியனை போல வாழ்ந்து கொண்டிருந்த இவனுக்கு, நாளைடைவில் மதுபானம் செய்வது, மாமிசம் உண்பது போன்ற பழக்கங்களும் ஏற்பட, பாவங்கள் அவனுடன் சேர்ந்து கொண்டன.

நரகத்திற்கு சென்று, செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவித்தால் தான், இவன் செய்த பாவ காரியங்கள் தொலையும், மறு ஜென்மம் கிடைக்கும் என்ற அளவுக்கு இவன் வாழ்க்கை இருந்தது.

ஒரு சமயம் வேட்டையாட, காட்டில் அலைந்து கொண்டிருந்தான் க்ஷத்ர பந்து.

அப்போது வழியில் "சௌனகர்" என்ற ரிஷியை எதேச்சையாக பார்த்து விட்டான்.
சாதுக்களை தரிசித்தாலேயே, நம் சித்தம் ஸுத்தி ஆகி விடும் என்கிறது சாஸ்திரம்.
இது சாதுக்களின் பெருமை.

தீய எண்ணம் கொண்டவனுக்கும் ஒரு சாதுவை கண்டால் 'மன மாற்றம் ஏற்படும்'. நல்வழியில் செல்ல ஆர்வம் ஏற்படும்.

சௌனக ரிஷியை பார்த்த 'க்ஷத்ரபந்து', மனதுக்குள் நினைத்துக்கொண்டான்,
"இவரும் ப்ராம்மணன். நானும் ப்ராம்மணன்.
நான் எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்?. இவர் எப்படி வாழ்கிறார் !!
எப்பொழுதும் நாராயணனை மனதில் தியானம் செய்து கொண்டு இருக்கிறாரே இவர் !!
நாமோ இப்படி ஒரு வாழ்க்கை வாழ்கிறோமே!!
ஐயோ !! நாமும் அவரை போல வாழ்ந்து இருக்க கூடாதா?"
என்று தன்னை தானே வெறுத்துக்கொண்டான்.

இப்படி நினைத்து கொண்டே, தன் கையிலிருந்த வில், அம்பை முறித்து தூக்கி எறிந்தான்.

நேராக சௌனக ரிஷியின் அருகில் வந்து, சரணத்தில் விழுந்து,
"எனக்கு சன்மார்க்கத்தை (நல்வழியை) காட்டுங்கள்" என்று பிரார்த்தித்தான்.

சௌனக ரிஷி, க்ஷத்ரபந்துவை பார்த்து,
"இனி மது மாமிசம் சாப்பிடுவதை விடு. வேட்டையாடுவதை விடு.
இதுநாள் வரை செய்த பாபங்களுக்கு பிராயச்சித்தம் செய்து கொள். தபசு செய்ய இப்பொழுதே கிளம்பி விடு"
என்று சொல்ல,



க்ஷத்ரபந்து,
"நான் என்னை நம்புவதற்கு இல்லை.
உறைந்து போன நெய்யை, வெயிலில் காட்டும் போது, உருகுவது போல உருகும்.
சரி, உருகி விட்டதே என்று உள்ளே எடுத்து வைத்தால், மீண்டும் உறைந்து விடும்.
அதுபோல,
என் மனதில் ஏதாவது ஒரு உருக்கம் ஏற்பட்டது என்றால், அது உங்கள் ப்ரபாவத்தால் ஏற்பட்டதே தவிர, என் ஸ்வபாவம் இல்லை.
என்னை தனியாக போய் தவம் செய் என்று சொல்கிறீர்கள்.
உங்களை விட்டு சிறிது விலகி சென்றாலும், என் ஸ்வபாவம் மேலோங்கி விடும்.
உருகிய உள்ளத்தோடு இருக்கும் நானே, உங்களை விட்டு விலகி சென்றால், மீண்டும் உறைந்து விடுவேன்.
இரக்கமற்ற வாழ்க்கை மீண்டும் வாழ ஆரம்பித்து விடுவேன். என்னை நானே நம்புவதற்கு இல்லை.
அதனால், என்னை நீங்கள் அதை செய், இதை செய் என்று சொல்லக்கூடாது.
எதற்கும் தகுதி அற்றவன் நான்.
உங்கள் கருணையினால் தான் என்னை நீங்கள் காப்பாற்றவேண்டும்"
என்று சொல்ல,

சௌனக ரிஷி,
"சரி. நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
என்று கேட்க,
"நான் இந்த காட்டில் தான் அலைந்து கொண்டிருப்பேன். ஏதோ கிடைத்ததை வேட்டையாடுவேன்.
கையில் பணம் வேண்டுமென்றால், யார் வீட்டிலாவது புகுந்து கொள்ளையடிப்பேன்.
மற்ற நேரங்களில், நான் வீட்டில் மாடு வைத்து இருக்கிறேன். நேரம் போக, அந்த மாட்டை கவனித்து கொண்டு இருப்பேன்."
என்றான் க்ஷத்ரபந்து.
சௌனக ரிஷ,
"மாட்டை நீ இல்லாத சமயத்தில் பார்த்து கொள்ள வேறு யாரையாவது வைத்து இருக்கிறாயா?"
என்று கேட்க,
"ஆமாம், ஒரு சின்ன பையன் இருக்கிறான். அவன் மாட்டை பார்த்து கொள்கிறான்"
என்று சொன்னான்.
"அவன் பெயர் என்ன?"
என்று சௌனக ரிஷி கேட்க,
"அவன் பெயர் கோவிந்தன்" 
என்று க்ஷத்ரபந்து சொல்ல,
"சரி.. நீ தவம் செய்ய செல்ல வேண்டாம். அடிக்கடி அந்த இடையன் பெயரை கூப்பிட்டு கொண்டே இரு. போ"
என்று அணுகிரஹம் செய்து அனுப்பினார்.





அன்றிலிருந்து, அடிக்கடி
"கோவிந்தா.. மாட்டுக்கு தீனி வைத்தாயா?
கோவிந்தா... மாட்டுக்கு தண்ணீர் கொடுத்தாயா?"
என்று அடிக்கடி அவன் பெயரை சொல்லி சொல்லி கூப்பிட்டு கூப்பிட்டு, "கோவிந்த" நாமத்தை அவன் ஆவர்த்தி செய்து கொண்டே வாழ்ந்து வந்தான்.

மரண காலம் அவனை நெருங்கி விட்டது.
யாருக்கு என்ன கவலை இருக்குமோ, அதை பற்றிய எண்ணம் தான் சாகிற சமயத்திலும் வரும்.

கடைசி மூச்சு போகும் சமயத்தில்
"மாட்டுக்கு தண்ணீர் வைத்தானோ இந்த கோவிந்தன்?" என்று கோவிந்தனின் நினைவு வர,
"கோவிந்தா... மாட்டுக்கு தண்ணீர் வைத்தாயா?.." என்று கேட்க வாயெடுத்த க்ஷத்ரபந்து, "கோவிந்தா..." என்று சொல்லும் போதே உயிர் பிரிந்து விட்டது.
கடைசி நேரத்தில் கோவிந்த நாமத்தை சொன்ன பலனாக, மோக்ஷத்தை கொடுத்துவிட்டார் எம்பெருமான் நாராயணன்.
"கத்திர பந்து மன்றே
பராங்கதி கண்டு கொண்டான்" 
என்று தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலையில், 
'பாவங்களையே செய்து வாழ்ந்த க்ஷத்திர பந்துவும் கடைசி மூச்சு விடும் சமயத்தில் "கோவிந்தா" என்று சொன்னதால் நற்கதியான மோக்ஷம் அடைந்து விட்டான்' என்கிறார்.

'க்ஷத்ரபந்து' 'நாராயணனை' நினைத்து, கோவிந்த நாமத்தை சொல்லவில்லை
அந்த இடையனை நினைத்து தான் அழைத்தான். 
ஆனால் பகவன் நாமம் அவனை காப்பாற்றி விட்டது.

பகவானின் நாமத்தை அடிக்கடி சொல்லி சொல்லி, நாக்கும் மனசும் பழகி போக, கடைசி மூச்சு விடும் சமயத்தில், அந்த நாமமே க்ஷத்ரபந்துவை காப்பாற்றிவிட்டது.
அஜாமிளன் போன்று, பகவானின்  நாமத்தை உயிர் போகும் சமயத்தில் சொல்லியதால், மோக்ஷம் அடைந்தான் 'க்ஷத்ரபந்து'


பகவானின் நாமத்தை அடிக்கடி நாம் சொல்லிக்கொண்டு இருந்தால், நம் மரண காலத்திலும், அந்த பகவன் நாமமே நம்மை மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுக்கும்.

"கோவிந்தா... கோவிந்தா..." என்று அடிக்கடி கூப்பிட்டு கூப்பிட்டு பழகி போன, 'க்ஷத்ரபந்து' மரண சமயத்திலும் "கோவிந்தா..." என்று அழைக்க, அந்த 'கோவிந்தன்' என்ற பெயரின் நிஜமான உரிமையாளன், திவ்ய காட்சி கொடுத்து, "பரம் என்ற வைகுண்டம்" கூட்டி சென்றார்.
பாவங்களையே சம்பாதித்த 'க்ஷத்ரபந்து', பகவன் நாமாவை கடைசி மூச்சு விடும் சமயத்தில் சொல்லி மோக்ஷம் அடைந்து விட்டான்.

'அடிக்கடி பகவன் நாமாவை நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்' என்று பெரியோர்கள் சொல்வதற்கு காரணமும் இது தான்.

நாம் எதை அடிக்கடி வாக்காலும், மனதாலும் செய்கிறோமோ, அதே எண்ணங்கள் தான் மரண சமயத்தில் ஞாபகத்துக்கு வரும்.
'ராம... ராம... ராம..' என்று எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பவர்கள், இறுதி மூச்சு விடும் போதும் "ராம" நாமத்தை சொல்லிக்கொண்டே உடலை விட்டு பிரிகிறார்கள்.

பகவன் நாமாவை சொல்லாமல், உலக, குடும்ப விஷயங்களிலேயே அடிக்கடி எண்ணம் உடையவர்கள், அது போன்ற விஷயங்களை நினைத்துக்கொண்டே உயிர் விடுகிறார்கள். அது சம்பந்தமாகவே மறு பிறவி எடுக்கின்றனர்.
"பரத ரிஷி", கடைசி மூச்சு விடும் சமயத்தில், தான் வளர்த்த 'மானை இனி யார் காப்பாற்றுவார்களோ?' என்று மான் நினைவுடனேயே உயிரை விட்டார். மறு ஜென்மத்தில் மானாக பிறந்து விட்டார்.

"நாராயணா, ராமா, கோவிந்தா' என்று உயிர் பிரியும் சமயத்தில் சொல்லும் பாக்கியவான்கள், வைகுண்டம் அடைந்து விடுகிறார்கள்.

நாமும் மறு பிறவி எடுக்காமல் "வைகுண்டம்" அடைய, அடிக்கடி பகவன் நாமாவை சொல்ல வேண்டும்.

உலக வாழ்க்கையில் துக்கமே அதிகம்.
உலக வாழ்க்கை நிரந்தரமற்றதும் கூட. இளமையும் நிரந்தரமில்லை.

உலகம் நிரந்தரமற்றது, துக்கமே நிறைந்தது என்று அறிந்து, மறு பிறவி எடுக்காமல், மோக்ஷத்திற்கு ஆசை பட வேண்டும் என்று மகான்கள் நமக்கு வழி காட்டுகிறார்கள்.


பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர்
"அநித்யம் அசுகம் லோகம், இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்"  (9 Chapter, 33 sloka)
என்று சொல்லும் போது,
'இந்த உலகம் உன்னை பொருத்தியவரை  'நிரந்தரமற்றது, துக்கம் நிறைந்தது' என்று அறிந்து, உலகத்தின் மீதான  பற்றை விட்டு விட்டு, என் நாமத்தை எப்பொழுதும் பஜித்து ( சொல்லி) கொண்டிரு' 
என்கிறார்.

"ராம நாம ஜபம் தினமும் 2 மணி நேரமாவது செய்" என்று சொன்னாலும், கலியில் உள்ள மனிதர்களால் முடிவதில்லை.

"உடல் அளவில், மனதளவில் உறுதி இல்லாதவர்களாக" கலியில் பிறக்கிறோம்.

ஒரு நாள் ஏகாதேசி அன்று மட்டும் 'பட்டினி இரு' என்று சொன்னால், கலியில் உள்ள நம்மால், ஒரு வேளை கூட சாப்பிடாமல் இருக்க முடிவதில்லை. 

கடந்த யுகங்களில், ரிஷிகள் பல நாட்கள் தவம் செய்தது ஆச்சர்யமில்லை.
அசுரன், ராக்ஷஸர்கள் கூட, பல நாட்கள் சாப்பிடாமல் தவம் செய்து தெய்வங்களிடம் வரம் வாங்கினர் என்று பார்க்கிறோம்.
சிலர், தெய்வங்களையே அடைக்கவும் முயற்சித்தனர் என்றும் பார்க்கிறோம்.

பகவன் நாமாவை தொடர்ந்து சொல்ல கூட முடியாத நிலையில் துர்பலமாக இருக்கும் நமக்கு, ஆழ்வார்கள் வழி காட்டுகிறார்கள்.

வெறுமனே "ராம ராம ராம..." என்று சொல்லும் போது, ஆரம்பத்தில் தூக்கம் கூட வர வாய்ப்பு உண்டு.
ராம நாமம் அடிக்கடி சொல்லி சொல்லி பழகியவர்களுக்கு, அந்த நாமமே ருசிக்க ஆரம்பித்து விடும்.
அடிக்கடி பகவன் நாமத்தை நம் நாக்கு சொல்ல பழக்க வேண்டும்..
ஆரம்ப நிலையில், வெறும் நாமமாக சொன்னால் தூக்கம் வருகிறது.
"அடிக்கடி நம் வாயில் பகவானின் நாமம் வருவதே முக்கியம்" என்பதால்,
நம் குழந்தைகளுக்கு "கோபால்", "கோவிந்தன்" "ராமன்" என்று பெயர் வைத்து, குழந்தைகளை பெயர் சொல்லி அழைத்து கொண்டே இருங்கள், என்று பக்தியை நமக்கு சுலபமாக்கி கொடுத்தார்கள் ஆழ்வார்கள் .

குழந்தைக்கு பகவானின் நாமாவை பெயராக வைத்து கூப்பிட்டு கொண்டே இருங்கள். குழந்தையை அழைக்கும் போதெல்லாம் பகவான் நாமாவை அடிக்கடி சொல்லி சொல்லி பழக, நம் உயிர் போகும் தருவாயில், அந்த நாமத்தின் உரிமையாளன் "நாராயணன்" நமக்கு காட்சி கொடுத்து பரலோகமான வைகுண்டம் அழைத்து செல்வான் என்கிறார் பெரியாழ்வார்

நம் பிள்ளைக்கு "கோபால்" என்று பெயர் வைத்து விட்டால், பிள்ளையை கூப்பிடும் சாக்கில், "கோபாலா.. கோபாலா..." என்று கூப்பிடலாம்.
தாய் தகப்பனுக்கு மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள அனைவருமே, பகவானின் நாமாவை பஜனை செய்த புண்ணியத்தை பெறுகின்றனர்.
ஹிந்து குழந்தைகளுக்கு ஹிந்து தெய்வங்களின் பெயர் வைப்பது அவசியம். அதன் மூலமாக நாம் அனைவரும் அவன் நாமத்தை அடிக்கடி உச்சரிக்கும் பாக்கியத்தை பெறுகிறோம்.

ஹிந்துக்கள் செய்யும் எந்த காரியமும் காரணம் இல்லாமல் இல்லை.

Hare Rama Hare Krishna - Bhajan

Sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

Sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka



Sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka