Followers

Search Here...

Showing posts with label தியானம். Show all posts
Showing posts with label தியானம். Show all posts

Saturday, 23 May 2020

சோகம் நமக்கு எதிலிருந்து உண்டாகிறது? ஆத்மாவே நான். உடல் நானல்ல. இதை அனுபவத்தில் புரிந்து கொள்ள முடியுமா?

"ஆத்மாவே நீ. உடல் நீயல்ல.."
இந்த சத்யத்தையே ஹிந்து மதம் எப்பொழுதும் பேசுகிறது.
ரிஷிகள், ஞானிகள், சிவபெருமான் உட்பட இந்த தத்துவத்தை தான் பல விதத்தில் நமக்கு உபதேசம் செய்கிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு அத்தியாயம் 3ல் ஆரம்பித்து இதையே பல தர்மங்கள் வழியாக சொல்கிறார் என்று பார்க்கிறோம்.



"உடலும், மனதும் இருப்பதால் தான்", ஆத்மாவாகிய நமக்கு "சூடு, குளிர், மானம், அவமானம், நறுமணம், நாற்றம், வெற்றி, தோல்வி, சுகம், துக்கம்" என்று பல அனுபவங்கள் ஏற்படுகிறது.

"உடலும், மனதும் நீ அல்ல. ஆத்மாவே நீ. 
ஆத்மா எந்த துக்கத்தையும் அனுபவிக்கவில்லை. உடலும் மனதும் தான் இந்த அனுபவத்தை கொடுக்கிறது"
என்று ஹிந்து தர்மம் சொல்வதை நாமே அனுபவத்தில் புரிந்து கொள்ள முடியுமா?
முடியும்....
Anaesthetic injection போடும் போது உடல் மரத்து கிடக்கிறது.
"உடலை மரத்து போக செய்து விட்டால், நாம் (ஆத்மா) இந்த உடலில் இருந்தாலும், உடல் அனுபவங்கள் நம்மை தாக்குவதில்லை.
மண்டையை பிளந்து டாக்டர் பார்த்தாலும் 'உடல் வலி' ஆத்மாவுக்கு (நமக்கு) தெரியவில்லை.
தூங்கும் போது மனம் அடங்கி கிடக்கிறது.
நாம் (ஆத்மா) இந்த உடலில் இருந்தாலும், ஆழ்ந்த தூக்கத்தில், அருகில் பிணம் கிடந்தாலும் கூட, தூக்கத்தில் ஒன்றுமே நடக்காதது போல தூங்குகிறான்.
"கை கால் நொறுங்கி வலி பொறுக்க முடியாமல் அழுதவன்", தூக்கத்தில் ஒன்றுமே நடக்காதது போல தூங்குகிறான்.

"உடல் பலத்தை விட மனம் பலம் வாய்ந்தது" என்று தெரிகிறது.

மனம் ஓய்ந்து விட்டால், மனத்துயரம் மட்டுமல்ல, உடல் வலிகள் கூட தெரிவதில்லை என்று அனுபவத்திலேயே நாம் புரிந்து கொண்டு விடலாம்.

தூக்கத்தில் ஏன் மனம் ஓய்கிறது?
இதற்கான பதிலை ரிஷிகள் ஆராய்ச்சி செய்த பலனே யோகாப்யாஸம்.
மனம் எப்பொழுதும் அசைய கூடியது.
இந்த "உடல்" எத்தனைக்கு எத்தனை அசைகிறதோ, அத்தனை வேகமாக "மனம்" வேலை செய்யும்.

கோபம் அதிகமாகும் போது, உடல் அசைவு, உள்ளும் புறமும் தீவிரப்படும்.
இதனாலேயே மனம் அதி தீவிரமாக வேலை செய்யும்.
மனம் எத்தனைக்கு எத்தனை வேலை செய்கிறதோ!!.. அத்தனைக்கு அத்தனை கவலை, சுகம், வெற்றி, தோல்வி, பயம், மானம், அவமானம் என்று அனுபவங்களை இந்த உடலுக்கு கொடுக்கும்.

தூக்கத்தில் மனம் அடங்கும் ரகசியத்தை அறிந்த நம் ரிஷிகள்,
விழிப்புடன் இருக்கும் போதும் இந்த மனதை அடக்கும் வழியை தேடினார்கள்.

பதஞ்சலி "யோக சூத்திரம்" பிரசித்தம்.

'மனது' என்ற பம்பரத்தை யார் சுற்றுகிறார்கள்? என்று கவனித்த போது, அது நம் 'மூச்சு காற்றே' என்று அறிந்தார்கள்.

"இந்த பிராணன் என்ற கயிறு எப்படி வேகமாக சுற்றுகிறதோ, அதை பொறுத்து, இந்த மனம் வேகமாக அலைகிறது" என்று அறிந்தார்கள்.

பிராணனை அடக்க, பிராணாயாமம் வந்தது
தூங்குபவனுக்கு மூச்சு சீராக இருப்பது போல, பிராணாயாமம் செய்பவன் விழிப்பு நிலையிலும் மூச்சை சீராக வைத்து கொள்ள ஆரம்பித்தான். 
அதற்கு பலனாக, மனம் அடங்கி இருக்க முடிந்தது.

தூக்கத்தில், மூச்சு மட்டுமா சீராக உள்ளது?..  உடலும் அசைவின்றி உள்ளது... அல்லவா?

"எத்தனைக்கு எத்தனை உடல் அசையாமல் இருக்கிறதோ!! அத்தனைக்கு அத்தனைக்கு அத்தனை மனம் அடங்கும்"
என்ற உண்மையும் அறிந்தார்கள் நம் ரிஷிகள்.

தூக்கத்தில் ஏன் மனம் ஓய்கிறது? 
உடல் "அசையாமல்" இருப்பதாலேயே மனம் ஒடுங்கி இருக்கிறது.

"ப்ரேக் டான்ஸ் ஆடி, கண்டபடி உடலை அசைக்கும் ஆட்டங்கள் மனதுக்கு கேடு" என்று சொல்வதற்கு காரணம் இதுவே!..
வெளிநாட்டு கலாச்சாரத்தில் உள்ள இது போன்ற ஆட்டங்கள், உடலை அர்த்தமில்லாமால் அசைப்பதாலேயே "இது போன்ற ஆட்டம் ஆடாதே!" என்று சொன்னார்கள்.




நம் கலாச்சாரத்தில், இது போன்ற குத்தாட்டங்கள் கிடையாது.
நடனம் ஆடுவதற்கும் பல வித விதிகள் நம்மிடம் உண்டு.

இப்படி உடல் அசைவும், மனதை அசைய செய்கிறது என்ற உண்மையை அறிந்து நம் ரிஷிகள்,
"பிராணாயாமம் மட்டும் போதாது" என்று "ஆசனங்கள்" சொல்லி கொடுத்தனர்.

யோக ஆசனங்களை உடற்பயிற்சி போல உடலை வேகமாக அசைத்து அசைத்து செய்வதால் உண்மையான பலன் ஏற்படுவதில்லை.

வேக வேகமாக செய்தால், இதுவும் உடற்பயிற்சியே.
உடல் வலுவாகுமே தவிர, மனம் அடங்காது.
ப்ராணாயாமத்துடன், பத்மாசனம் போட்டு கொண்டு அசையாமல் ஒரு மணி நேரம் உட்கார முடிந்தாலேயே, யோகம் செய்த பலன் கிடைத்து விடும்.
உடலும் வலுவாக இருக்கும். மனமும் அடங்கி இருக்கும்.

தூக்கத்தில் தானாகவே மனம் அடங்கி விடுவதால், துக்கம் பாதிக்காமல் தூங்குகிறோம்.
விழிப்பில், ஆசனங்கள் மூலம் உடல் அசைவை குறைத்து கொண்டு பிராணாயாமம் செய்து கொண்டு இருந்தாலேயே, விழிப்பு நிலையிலும், துக்கம் நம்மை பாதிக்காமல்  பார்த்துக்கொள்ள முடியும்.

மனம் அடங்கி இருப்பவனுக்கு, துக்கம் தாக்குவதில்லை.
யோகத்தில் ஸித்தி ஆன ஜடபரதரிடம், "தலையை வெட்டி காளிக்கு பலி கொடுக்க வேண்டும்" என்று கேட்க, ஒன்றுமே சொல்லாமல் சென்றார் என்றால், அதன் ரகசியம் என்ன? என்று இப்பொழுது புரிந்து கொள்ள முடியும்.

தூக்கத்தில் மனம் அழிந்து, 
மரத்து போகும் ஊசி போட்டு உடல் இருப்பதே மறத்து போன நிலையை, யோகிகள் விழிப்பு நிலையிலேயே, கொண்டு வந்தனர்.

எத்தனை அற்புதமான தேசம் இது!!.
இந்த தேசத்தில் பிறந்த நாம், நம் பெருமையை மெச்சி கொள்ள வேண்டாமா?.

மேற்கத்திய மத சிந்தனையை ஏற்று கொள்வதே அவமானவல்லவா நமக்கு? யோசிக்க வேண்டும்...


"ஆத்மாவே நீ. உடல் நீயல்ல.." என்ற தத்துவத்தை சொல்வதே நம் ஹிந்து தர்மம்.

அதை நமக்கு திரும்ப திரும்ப சொல்ல தான், இத்தனை மஹான்கள், சாதுக்கள், அவதரித்தனர்.
இந்த ஆத்மா ... அதாவது நாம் (ஆத்மா) மோக்ஷம் அடைவதே லட்சியம் என்று காட்டினார்கள்.

இதை படிக்கும் சிலர்,
"அப்படியென்னறால், உலகம் மாயை, ஆத்மா தான் உண்மை என்றால், கடமைகளை விட்டு விடலாமா? 
நிரந்தரமில்லாத இந்த உடலில் ஏற்படும் அனுபவங்களுக்காக இத்தனை உழைக்க வேண்டுமா? குடும்பம் தேவையா?" 
என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

ஹிந்து தர்மம், கடமையை தவிர்க்க சொல்கிறதா?
என்று குழப்பமடைகிறார்கள்.
பெரும்பாலான ரிஷிகள், முனிகள், சந்யாசிகள், ஆதி சங்கரராக வந்த சிவபெருமான் உட்பட, அனைவருமே "ஆத்மா தான் நீ.. உடல் நீயல்ல" என்று சொல்வதாலும், பெரும்பாலும் இவர்களே உலகத்தில் பற்று இல்லாமல் இருப்பதாலும், ஹிந்து தர்மம் கடமையை தவிர்க்க சொல்கிறதோ? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது.

இதற்கு பதிலை பிரம்மாவையும் படைத்த நாராயணன் சொல்கிறார்.

கிருஷ்ண பரமாத்மாவாக அவதரித்த நாராயணன் (பரவாசுதேவன்), அர்ஜுனனிடம் பேசும் போது இதற்கான பதிலை சொல்கிறார்.
"ஆத்மாவே நீ. உடல் நீ அல்ல" என்று சொல்லும் கிருஷ்ணர், அர்ஜுனனை பார்த்து "அதற்காக உன் கடமையை செய்யாமல் இருக்காதே" என்று சொல்கிறார்.

தான் பரமாத்மாவாக இருந்த போதும், தானும் கடமையை செய்கிறேன் என்று காட்டுகிறார்.
எப்பொழுது எல்லாம் தர்மம் உலகில் அபாயத்தை சந்திக்குமோ, அப்பொழுதெல்லாம் தானே அவதாரம் செய்வதாக சொல்கிறார். 

"தான் பரமாத்மாவாக இருந்த போதிலும், இந்த கிருஷ்ண அவதாரத்தில், 
க்ஷத்ரியனாக அரசாளுகிறேன். என் தர்மத்தை காக்கிறேன். பாண்டவர்களான உங்களுக்கு ஏற்படும் அநீதிக்கு, நீதி கிடைக்க, உங்களுக்காக போராடுகிறேன்.

உடல் வேறு, ஆத்மா வேறு என்று தெரிந்தவன் கடமைகளை செய்யாமல் போவானா? 
இந்த அறிவு ஏற்பட்டவன் இன்னும் உற்சாகமாக மேலும் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை தானே செய்வான் !
உடலால் ஏற்படும் சோகம் எதுவும் எனக்கு இல்லை என்று தெரிந்த  ஞானி, தனக்கு விதிக்கப்பட்ட கடமையை செய்ய என்ன தடை இருக்க முடியும்? 
உடல் நீ அல்ல, ஆத்மாவே நீ என்கிற போது, க்ஷத்ரியனான நீ சண்டை போட்டு, தர்மத்தை நிலைநாட்டி, உனக்கு சேர வேண்டிய சொத்தை பெற்று கொள்ள வேண்டாமா? போரில் நீ அடிபட்டு வீழ்ந்தால், உன் உடல் தானே நாசமாகும்..  ஆத்மா இல்லையே !  நீ தோற்றாலும், ஜெயித்தாலும் உனக்கு (ஆத்மா) அதனால் ஆவது ஒன்றும் இல்லை என்கிற போது, க்ஷத்ரியனாக இருக்கும் நீ சண்டை போடுவது தானே உன் கடமை 
என்று சொல்லி அர்ஜுனனை அவன் கடமையை செய்ய உற்சாகப்படுத்துகிறார்.




"ஆத்மாவே நான். உடல் நான் அல்ல. 
இதை மனதில் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே, உனக்கு விதிக்கப்பட்ட கடமையை எனக்கா செய். என் உருவத்தையே மனதில் வைத்துக்கொண்டு, உன் கடமையை செய். 

உன் கடமையை என் நினைவோடு செய்து கொண்டிருந்தால், இந்த உடலை விட்டு பிரியும் போது,ஜீவ  ஆத்மாவாகிய உன்னை உடல் என்ற சம்பத்ததில் இருந்து நீக்கி, என்னுடன் சேர்த்து கொண்டு விடுவேன். மோக்ஷம் தந்து விடுகிறேன்" 
என்று சொல்கிறார்.

இதுவே நமக்கு பாடம்.

ரிஷிகள், ஞானிகள் இதை சொன்னாலும், தாங்கள் சன்யாசிகளாகவே வாழ்ந்தனர்.
"குடும்பத்தில் இருந்தாலும், அவரவர்கள் கடமையை ஒழுங்காக செய்து கொண்டு இருந்தாலும், ஆத்மா ஞானியாக (நான் ஆத்மா) இருப்பவனுக்கு, மோக்ஷம் கட்டாயம் கிடைக்கும்"
என்று நிரூபிக்க, தானே அவதரித்து, தன் கடமையை செய்து, வாழ்ந்து காட்டினார் பரமாத்மா நாராயணன்.


இதன் காரணத்தாலேயே பகவத் கீதத்தை அனைத்து ஹிந்துக்களின் சம்மதம் கொண்ட புனித நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வாழ்க ஹிந்து தர்மம்.

Wednesday, 4 March 2020

அஷ்டாங்க யோகம் என்றால் என்ன? இதற்கு அர்த்தம் என்ன? எதற்காக இதை செய்கிறோம்? யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி

'சம்சார ஆசைகள்' நம்மை விட்டு இயற்கையாக விலகி, மோக்ஷ பாதையில் செல்ல,
  1. "பக்தி யோகம்"
  2. "சரணாகதி" 
என்ற இரண்டு வழிகள் சொல்லப்படுகிறது.



இதில் "பக்தி யோகம்" என்ற வழியில் செல்ல ஆசைப்படுபவர்கள்,
"8 நிலையை கடந்து செல்ல வேண்டும்"
என்று வழிகாட்டுகிறது நம் சனாதன வேத தர்மம் (ஹிந்து தர்மம்).




பக்தி யோகத்தின் 8 அங்கங்கள் என்ன? என்று பார்ப்போம்.

மனதை அடக்கி தியானம் செய்வதை தான் "யோகம்" என்று சொல்கிறோம்.

'மனதை அடக்குவது' என்பது சாதாரண விஷயமில்லை.

மனதை அடக்கி, தியானம் என்ற யோகத்தை அடைய சூத்திரம் (formula) எழுதியவர் "பதஞ்சலி" முனிவர்.

"திடமான முயற்சி இருந்தால் மனதை அடக்க முடியும்" என்று சொல்கிறார் பதஞ்சலி.

பதஞ்சலி அருளிய யோகசூத்திரமே "அஷ்டாங்க யோகம்" என்று சொல்கிறோம்.

பதஞ்சலி அருளிய யோகசூத்திரமே "அஷ்டாங்க யோகம்" என்று சொல்கிறோம்.

அஷ்டாங்க யோகம், 8 அங்கங்களை கொண்டுள்ளது:
அவை,
"யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யஹாரம், தாரணை, தியானம், சமாதி"
என்பதாகும்.

அஷ்டாங்க யோகத்தால், 8 ஸித்திகள் ஏற்படும்.
அவை,
"அணிமா, லகிமா, மஹிமா, கரிமா, ஈசிதா, வசிதா, ப்ராகாம்யம், ப்ராப்தி".
இந்த ஸித்திகள் ஏற்பட்டும், இதனை ஒதுக்கி விட்டு, ஈஸ்வரனை அடைவதே லட்சியம் என்று இருக்கும் யோகி, மோக்ஷம் அடைகிறான்.

  1. யமம் -
    உலக ஆசைகள் நீங்கி, நாம் மோக்ஷம் பெறுவதற்கு, "பக்தி மார்க்கத்தில்" முதல் படியாக நமக்கு தேவைப்படுவது "புலன் அடக்கம்".
    ஸத்தியம், அஹிம்ஸை, பொறுமை முதலிய நல்லொழுக்கத்திற்கு "யமம்" என்று பெயர்.
    நல்லொழுக்கம் இல்லாதவனுக்கு யோகம் பலிக்காது.

    சூதாடிக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும், வேசி வீட்டிற்குப் போய்க் கொண்டு பொழுது போக்கும் வணிகன் வியாபாரத்தில் லாபம் காண முடியாது.
    அதுபோல,
    நல்லொழுக்கமின்றி வீண்பொழுது போக்குபவன் யோகத்திலும் பயன்பெற முடியாது.

    நமக்கு நம் புலன்களை அடக்கும் சக்தி முதலில் ஏற்பட வேண்டும். அதற்கு தயார் செய்து கொள்வதே "யமம்".

    * அஹிம்சை (பிற உயிரை கொல்லாமல் இருப்பது, மாமிசம் எக்காரணம் கொண்டும் உண்ணாமல் இருப்பது),
    * சத்தியம் (எந்த நிலையிலும் சத்தியத்தை பேசுவது),
    * பிரம்மச்சர்யம் (காம வசப்படாமல் அனைவரையும் தன் தாயாக, தன் தங்கையாக, தன் அண்ணனாக, தன் தந்தையாகவே பார்ப்பது),
    க்ஷமா (தவறு செய்தாலும் பொருட்படுத்தாமல் மன்னிப்பது),
    தயை (பணக்காரன் முதல் ஏழை வரை யாரிடத்திலும் இரக்கம் காட்டுவது, அலட்சியம் செய்யாமல் இருப்பது),
    சகிப்புத்தன்மை (பிறரின் கேலி, பொறாமை, வெறுப்பை கண்டு கொண்டும் அமைதியாக இருப்பது)

    மேல் சொன்ன 6 குணங்களையும் ஒருவன் தன் பழக்கத்தில் கொண்டு வரும் போது, அவன் புலன்கள் அவனுக்கு அடங்கி இருப்பதை அவனே உணர்கிறான்.
    அவன் இஷ்டப்படாமல், புலன்கள் அவனை தீய செயல்களில் இழுக்காது என்ற நிலையை அடைகிறான்.
    இதையே "யமம்" என்று சொல்கிறோம்.

    99% சதவீத பிராம்மணர்கள், இன்றுவரை, இந்த 6 குணங்களை கடைபிடிக்கின்றனர்.
    பிராமண சமுதாயம் என்பது 720 கோடி உலக மக்கள் தொகையில், மிஞ்சிப்போனால் 2 கோடி பேர் மட்டுமே இருக்கின்றனர்!!..
    99% சதவீத உலக மக்கள், 'மாமிசம்' உண்பவர்களாக இருக்கிறார்கள் என்று பார்க்கிறோம்.

    'அஹிம்சை'  என்ற கொள்கையே 99% சதவீத மக்களுக்கு பெரும் சவாலாக  இருக்கிறது என்று பார்க்கிறோம்.

    லட்சக்கணக்கான வருடங்களாகபரம்பரை பரம்பரையாக, 'தாய்' வழியிலும், 'தந்தை' வழியிலும் ஒருவன் கூட மாமிசம் சாப்பிடாத பரம்பரையாக, பிராம்மண சமுதாயம் இருக்கிறது.

    பல விதமான குணங்கள் கொண்ட மனிதர்களை ஒரு வட்டத்துக்குள் கொண்டு வந்து, மாமிசம் உண்ணாத பரம்பரையாக லட்சக்கணக்கான வருடங்களாக நிலை நிறுத்தி வைத்து இருப்பது பிராம்மண சமுதாயத்தின் பெரும் வெற்றி.
    பல விதமான மனித குணங்களை பார்க்கும் போது தான், "இது அசாதாரணமான கட்டமைப்பு" என்பது நமக்கு புரியும்.

    காலம் பல கடந்த, இந்த பிராம்மண சமுதாயத்தின் கட்டமைப்பே "ஒரு அசாதாரண செயல், ஆச்சர்யமான கட்டமைப்பு" என்பது புரியும் போது தான், இந்த சமுதாயத்தின் மேல் நமக்கு மரியாதை ஏற்படுகிறது.

    தன் குடும்ப பழக்கத்திலேயே இந்த 6 குணங்களை இவர்கள் பெற்று விடுவதால், பயிற்சி செய்து இந்த 6 குணங்களை பெற அவசியமில்லாமல் இயற்கையாகவே இந்த குணங்களை கொண்டு இருக்கின்றனர் பிராம்மணர்கள்.
    மற்ற ஜாதிகளில், ஒருவர் அஹிம்சை வழியில் மாமிசம் சாப்பிடாமல் இருக்க நினைத்தாலும், அவர் தாய், தந்தை, உறவினர்கள் என்று பார்க்கும் போது, பலருக்கு மாமிசம் உண்ணும் பழக்கம் இருக்கிறது.

    இது போன்ற குடும்ப அமைப்பில், "தான் மட்டும் அஹிம்சையை கடைபிடிப்பது" என்பதே பெரும் சவாலான விஷயமாகிறது..

    மோக்ஷத்தில் பேராசை, உலக ஆசைகள் மீது வெறுப்பு போன்றவை இவர்களுக்கு தேவைப்படுகிறது.

    'குடும்பமே மாமிசம் உண்டாலும், தான் அஹிம்சை தர்மத்தில் இருப்பேன்' என்று சொல்வது பெரும் சவாலான விஷயமாகிறது. பிராம்மணர் அல்லாத வீடுகளிலும், ஆன்மீகத்தை தேடி வந்த சாதுக்கள், மகான்கள் இன்று கூட காண்கிறோம். ஆனால், பிராம்மண சமுதாயத்தின் சிறப்பு என்று பார்க்கும் போது, இவர்களின் பரம்பரையே 99% சதவீதம் காய் கனிகளை மட்டுமே உண்டு, அஹிம்சையை கடைபிடித்தவர்கள் என்று அறிகிறோம்.

    பொதுவாகவே, தனியாக முயற்சி செய்யாமலேயே, பிராம்மணர்கள், பக்தி யோகத்தின் முதல் படியில் (யமம்) இருப்பதை அனைவரும் உணரலாம்..

    'அஹிம்சை, சத்தியம், பிரம்மச்சர்யம், க்ஷமா, தயை, சகிப்புத்தன்மை' போன்ற 6 குணங்களை ஒருவன் முயற்சி செய்து பழக்கத்தில் கொண்டு வரும் போது, "யமம்" என்ற முதல் படியை கடந்து விடுகிறான்.

    ப்ராம்மணர்களுக்கு இது இயற்கையாகவே பழக்கத்தில் உள்ளது. மற்ற ஜாதியினரும், வெளிநாட்டினரும் கூட, முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

    மோக்ஷம் அடைய விரும்பும் அனைவருமே "அஹிம்சை, சத்தியம், பிரம்மச்சர்யம், க்ஷமா, தயை, சகிப்புத்தன்மை " என்ற 6 குணங்களை பெற முயற்சிக்க வேண்டும்.

  2. நியமம்
    விடி காலையில் சூரியன் உதிக்கும் முன் ஸ்நானம் செய்வது,
    சந்தியா வந்தனம் (தேவ, ரிஷி தர்ப்பணம்),
    ஏகாதசி உபவாசம்,
    விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்,
    பாகவத, பகவத் கீதை பாராயணம்,
    போன்ற உடல் சம்பந்தமான தினசரி கடமைகளை செய்து கொண்டே இருப்பது, "நியமம்" என்று சொல்கிறோம்.

    இந்த நியமங்கள் மூலம், உடல் ரீதியாக, நம்மை தெய்வ சம்பந்தமான காரியங்களில் அதிக நேரம் நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம்.

    வெளி உலக காரியங்களுக்கு நேரம் செலவிடுவதை இது போன்ற நியமங்கள் இயற்கையாகவே குறைத்து விடும்.




    நியமத்தில் இருப்பவனுக்கு
    - டிவி பார்க்கவும்,
    - வீண் பேச்சு பேசுவும்,
    - தூங்கவும்,
    - ஊர் வம்பு பேசவும் நேரம் இல்லாமல் போகும்.
    நியமத்தில் இருப்பவன் லட்சியவாதியாக இருப்பான்.
    இப்படி இருப்பவர்களை "நியமமாக இருப்பவர்கள் என்று பொதுவாக நாம் சொல்வதுண்டு.
    பெரும்பான்மையான பிராம்மணர்கள், இன்று வரை, நியமமாக தான் இருக்கின்றனர். 


    "மிதமான ஆஹாரம், மிதமான நித்திரை, மிதமான பேச்சு, மிதமான உழைப்பு' இவைகளுக்கு "நியமம்" என்று பெயர்.

    நியமம் இல்லாதவனுக்கு யோகம் பலிக்காது.
    இரு கரைகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு ஆறுதான் கடலை நோக்கிச் செல்ல முடியும்.
    கரை உடைந்த ஆறு கடலை அடைய முடியாமல் சிதறிப் போய்விடும்.
    அதுபோல,
    நியமத்துடன் கூடியவன்தான் தனது யோகத்தின் லட்சியத்தைப் பெற முடியும்.
    நியமம் இல்லாதவன் யோக மார்க்கத்தில் சிதறிப் போவான்.

  3. ஆசனம்
    * பத்மாசனம் (இரு பாதங்களை இரு தொடைகளுக்கு மேல்புறத்தில் உள்ளங்கால்கள் மேலே தெரியும்படியாக தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்வது)
    ஸ்வஸ்திகாஸனம் (இரு பாதங்களையும் மடித்து இரு தொடைகளுக்கு அடியில் அடக்கி உட்கார்வது)
    ஸித்தாஸனம் (ஒரு குதிகாலை பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து, மறு குதிகாலை பிறப்புறுப்பின் மேல் வைத்து கொண்டு,
    இடது உள்ளங்கையின் மீது வலது பின்னங்கையை வைத்து தொடைகளுக்கு இடையில் வைத்து கொண்டு,
    முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, அமர்ந்து கொண்டு,
    புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்துவது),
    போன்ற பலவித முறையில் உடலை ஒரு நிலையில் வைக்க பயிற்சி கொடுப்பது "ஆசனம்" என்று சொல்கிறோம்.




    இடுப்பு, தண்டுவடம் போன்ற உடல் உறுப்புகள் பலப்படும்.
    தண்டுவடத்தில் தான் முக்கியமான சுஷும்னா நாடி உள்ளது. அதை தட்டி எழுப்ப, உடல் உறுதி மிக அவசியமாகிறது.
    அதற்கு நம்மை தயார் செய்வதே யோக ஆசனங்கள்.
    ஆசனங்கள் செய்ய செய்ய, சுறுசுறுப்பு அதிகரிக்கும். இரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படும். உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.

  4. பிராணாயாமம் 
    ஆசனங்கள் மூலம் உடல் தகுதி பெற்றவன், 'பிராணாயாமம்' என்ற மூச்சு பயிற்சி மற்றும் பிரணவ மந்திரத்தின் மூலம் சுஷும்னா நாடியை எழுப்பி, 8 விதமான ஸித்திகளை, தெய்வங்களின் அனுகிரஹத்தை, மோக்ஷத்தை அடைய முயற்சி எடுக்கிறான்.

    'பிராணாயாமம்' என்பது
    * பூரகம் (மூச்சை முறைப்படி உள் இழுத்து),
    கும்பகம் (முறைப்படி மூச்சை அடக்கி),
    ரேசகம் (மூச்சை முறைப்படி வெளியில் தள்ளி)
    போன்றவற்றின் மூலம் "நாடிகளை சுத்தி" செய்யும் பயிற்சி.

    சுஷும்னா நாடியை பிராணாயாமத்தால் எப்படி எழுப்புவது? பூணூல் ஏன் அனைவரும் அணிய வேண்டும்? தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்.

    பிராணாயாமம் செய்ய செய்ய, அங்கும் இங்கும் அலையும் மனம் ஓய்வதை உணரலாம். மகுடி ஊதி ஊதி, "கருநாகம்" அதன் அசைவால் மயங்கி இருப்பது போல, பிராணாயாம பயிற்சியால் மனம் மயங்கி இருக்கும்.
    மனம் அடங்கி மூச்சு நிதானமாக ஓடுவதை அனுபவத்திலேயே உணரலாம். எந்த நிலையிலும், பதட்டம் அடையாத நிலையில் தான் இருப்பதை அனுபவத்திலேயே உணரலாம்.

  5. ப்ரத்யாஹாரம்
    அங்கும் இங்கும் அலையும் நம் மனம், பிராணாயாம பயிற்சியால் மயங்கி இருக்க,
    நம் மனதை மெல்ல நம் இஷ்ட தெய்வத்தின் ரூபத்தை காட்டி காட்டி,
    நம் மனதை நம் இஷ்ட தெய்வத்தின் ரூபத்திலேயே 'நிலை நிறுத்த' செய்வதற்கு 'ப்ரத்யாஹாரம்' என்று பெயர்.

    மாட்டை மனதுக்கு உதாரணமாக காட்டுவதுண்டு.
    வெளியில் அலைந்து அலைந்து மேய்ந்து பழகிய மாட்டை, தொழுவத்தில் அலையாமல் நிறுத்த, அதை சாமர்த்தியமாக அழைத்து வந்து, கயிறு கொண்டு கட்டுவது போன்றது "ப்ரத்யாஹாரம்". மயங்கி இருக்கும் மனதை கட்டு படுத்தாமல் (ப்ரத்யாஹாரம்) இருந்தால், சுதாரித்து கொண்டு மீண்டும் ஓடி விடும். பிறகு, மீண்டும் பிராணாயாமம் செய்து மயக்கி, பிறகு கட்டுப்படுத்த (ப்ரத்யாஹாரம்) வேண்டியதாகி விடும்.

    மனதை கட்டி போடுவது (ப்ரத்யாஹாரம்) எப்படி? இந்த சமயத்தில் பெருமாளின் குணங்களை பற்றி சொல்லும் சாத்வீக புராணங்களான வராஹ புராணம், பாகவதம் போன்றவை படிக்க படிக்க, மனம் பெருமாளின் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கும். 


  6. தாரணை
    சாமர்த்தியமாக கட்டப்பட்ட மாடு, "தன்னை தொழுவத்தில் கட்டி விட்டான்" என்றதும் அறுத்துக்கொண்டு ஓட பார்க்கும்.
    அது போல,
    மயங்கி கிடக்கும் மனம், "நம் இஷ்ட தெய்வத்தின் ரூபத்தை பார்த்தாலும்" விஷய சுகங்கள் அனுபவித்து இருப்பதால், அறுத்துக்கொண்டு அங்கேயே ஓட பார்க்கும்.
    ஆதலால், "ப்ரத்யாஹாரம்" என்ற நிலையிலேயே இருந்து விட கூடாது.
    "தாரணை" என்ற நிலைக்கு மனதை கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.
    அதற்கு அந்த தொழுவம் பிடித்து போகும்படியாக செய்து, வெளியில் போக முடியாத படி நல்ல கயிறு கொண்டு பல நாள் கட்டிப்போட்டு விடுவது போன்றது "தாரணை"
    மனம் நம் தெய்வத்தின் ரூபத்தை காட்டி காட்டி, இஷ்ட தெய்வத்தின் ரூபத்திலேயே நிறுத்தி விட்ட நிலையே "தாரணை" என்று சொல்லப்படுகிறது.

  7. தியானம் 
    தொழுவத்தில் பலநாள் கட்டப்பட்ட மாடு, தொழுவத்திலேயே இருக்க பழகிய நிலையில், வெளியில் மேய கூட்டிக்கொண்டு போனால், ஆசையோடு நன்றாக மேயும்.
    அதே சமயம்,
    மீண்டும், தொழுவத்தில் கூட்டிக்கொண்டு வந்தாலும் அடம்பிடிக்காமல் அமைதியாக இருக்கும்.
    இதுவே தியான நிலை.
    தியானம் ஸித்தி ஆனவன், தன் மனதை "உலக விஷயங்களில் போ!" என்றால் வெளி விஷயங்களில் ஈடுபடும்.
    தியானம் ஸித்தி ஆனவன், தன் மனதை "போதும் நிறுத்து.. 4 மணிக்கு பெருமாளை தியானம் செய்!" என்றால் மனம் எதிர்க்காமல், அவன் ஆசைப்பட்ட நேரத்தில், உலக நினைவை இவனுக்கு கொண்டு வராமல், "பெருமாளை மட்டுமே தியானம் செய்யும்"
    இந்த தியான நிலையை "பரத யோகி" அடைந்து இருந்தார்.
    மனம் இஷ்ட தெய்வத்தின் ரூபத்திலேயே நின்று, உலகமே மறந்து விட்ட நிலையே "தியானம்" என்று சொல்லப்படுகிறது.

  8. சமாதி 
    'தியானம்' ஸித்தியான பரத யோகி, "சமாதி" என்ற மோக்ஷ நிலையை அந்த ஜென்மத்திலேயே அடைய முடியவில்லை.

    தொழுவத்திலேயே இருக்க பழக்கப்பட்ட மாடு, ஒரு நிலையில், வெளியில் கூட்டிகொண்டு போனாலும், மேய ஆசைப்படாமல், மீண்டும் தொழுவத்திற்கே செல்ல ஆசைப்படும். இதுவே "சமாதி" நிலை.

    சமாதி நிலையில் ஸித்தி ஆனவன், மனதை "வெளி விஷயங்களில் போ" என்றாலும், மனம் பகவானை மறக்க முடியாமல் இருக்கும்.
    உலக விஷயங்களில் இவர்கள் ஈடுபட்டாலும், ஈடுபட முடியாத நிலையில் இருப்பார்கள்.
    இந்த நிலையிலேயே ஸ்ரீ சுகர் இருந்தார்.
    இந்த நிலையிலேயே கிருஷ்ண சைதன்யர் இருந்தார்.

    மனம் இஷ்ட தெய்வத்தின் ரூபத்திலேயே நின்று, உலகமே மறந்த நிலையில், தெய்வத்தோடு ஒன்றி விட்டோம் என்றால், அதுவே "சமாதி" நிலை.


    இந்த சமாதி நிலையில் கிருஷ்ண சைதன்யர் பல முறை மூர்ச்சை ஆகி விடுவார் என்று பார்க்கிறோம்.
    பிருந்தாவனத்தில், கிருஷ்ண சைதன்யர் இந்த சமாதி நிலையை அடைந்த போது நடந்த சுவையான சம்பவத்தை அறிய இங்கே படிக்கவும்.
பக்தி யோகத்தின், இந்த 8 அங்கங்களை, பொதுவாக "அஷ்டாங்க யோகம்" என்றும் சொல்லுவார்கள்.

பரத ரிஷி (ராஜ ரிஷி) தன் முயற்சியால் பகவானை அடைய ஆசைப்பட்டார், மோக்ஷம் அடைய ஆசைப்பட்டார்.

பக்தி யோகத்தில் சொல்லப்பட்டுள்ள அஷ்டாங்க யோகத்தை எடுத்து கொண்டார்.
ராஜ்யத்தை விட்டு,
மனைவி மக்களையும் விட்டு,
ஆசைகளை, சொத்துக்களை எல்லாம் தியாகம் செய்து விட்டு,
காட்டுக்கு சென்றார்.
"யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, தியானம்" வரை அதே ஜென்மாவில் ஸித்தி ஆகி விட்டது...

தன் முயற்சியால் மோக்ஷம் அடைய நினைக்கும் தீரர்களான இவர்களுக்கு சோதனைகளும் வரும்.
பரிக்ஷைக்கு தயார் என்று சொல்பவனை பகவான் அவன் ஆசைப்படியே பரிக்ஷிக்கிறார்.

தன் மனைவி மக்களையே விட்ட இவர், ஒரு குட்டி மானை அந்த காட்டில் வளர்க்க,

அந்த குட்டி மான் வளர்ந்ததும் அவரை விட்டு ஓடிவிட, அது என்ன ஆனதோ? என்ன ஆனதோ? என்று மானை நினைத்து புலம்பிக்கொண்டே உயிரை விட்டு விட்டார்.
அடுத்த பிறவியில் மானாகவே பிறந்து விட்டார்.
அதற்கு பிறகு ஜட பரதராக, 7 யோகங்களை கடந்து, 8வது நிலையான சமாதி நிலையிலேயே பிறந்தார். 
கடைசி வரை சமாதி நிலையை விட்டு கொஞ்சமும் வராமல், வாழ்ந்து, கடைசியில் மோக்ஷம் பெற்றார். 

இந்த பக்தி யோகத்தின் வழியாக மோக்ஷம் அடையலாம் என்று நமது ஹிந்து தர்மம் வழி காட்டுகிறது.




பக்தி யோக மார்க்கம் கடினமாக இருப்பதாக தோன்றினால், "சரணாகதி" என்ற மார்க்கமும் நமக்கு காட்டப்படுகிறது. 
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கடைசி மார்க்கமாக நமக்கு "சரணாகதி" மார்க்கத்தை சொல்கிறார்.
"சர்வ தர்மான் பரித்யஜ்ய 
மாம் ஏகம் சரணம் வ்ரஜ 
அஹம் த்வா சர்வ பாபேப்யோ 
மோக்ஷ இஷ்யாமி மா சுச:" 
என்று சொல்கிறார்.

பக்தி யோகம் செய்ய நமக்கு திறன் இல்லை என்றால், நமக்கு 'மோக்ஷம் கிடையாது என்று நினைக்க வேண்டாம்'.. 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "உனக்கு விதித்த தர்மங்கள் அனைத்தையும் விடு, என்னை ஒருவனையே சரண் அடைந்து விடு. உன் அனைத்து பாவங்களையும் நான் பொசுக்கி, உனக்கு என் இஷ்டத்தால், உனக்கு மோக்ஷம் தந்து விடுகிறேன். கவலையே அடையாதே !  
என்று சரணாகதி மார்க்கத்தை கடைசியாக சொல்கிறார்.

பக்தி யோகம் செய்ய விருப்பமுள்ளவர்கள், அஷ்டாங்க யோகம் செய்து, மோக்ஷம் அடையலாம்.
நாராயணனே கதி என்று இருக்க விருப்பமுள்ளவர்கள், சரணாகதி செய்து, மோக்ஷம் அடையலாம்.

ஹிந்து தர்மம் மற்ற போலி மதங்களை போல, ஒரே வழி, ஒரே தத்துவம் என்று நம்மை கொடுமை படுத்துவதில்லை.

அவரவர் திறனுக்கு ஏற்ற வழியை காட்டி, அனைவருக்கும் தெய்வ அருள் கிடைக்க செய்து, அனைவரையும் மோக்ஷம் அடைய செய்கிறது.

வாழ்க ஹிந்து தர்மம்.
ஹிந்துவாக வாழ்வதே நமக்கு பெருமை..