Followers

Search Here...

Showing posts with label புருஷ சூக்தம். Show all posts
Showing posts with label புருஷ சூக்தம். Show all posts

Thursday 7 December 2017

புருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? யார் ஒருவரே புருஷன்?

புருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?

"புருஷன்" என்ற சொல்லுக்கு "ஆண்" என்று அர்த்தம்.


பொதுவாக வேதம்,
"சஹஸ்ர சீர்ஷ: புருஷ:" 
என்று பரப்ரம்மமான ஈஸ்வரனை "புருஷன்" என்று மட்டும் சொல்லி அழைக்கிறது.

வேதம், பரப்ரம்மான ஈஸ்வரனை "சஹஸ்ர சீர்ஷ: புருஷ:" என்று சொல்லும் போது, பரப்ரம்மத்தை "புருஷன்" என்று மட்டும் சொல்வதால்,
அவர்
  • இந்திரனா? 
  • அக்னியா? 
  • ருத்ரனா? 
  • விஷ்ணுவா? 
  • ப்ரம்மாவா? 

என்ற சந்தேகம் எழுந்து விடுகிறது.

'அனைத்து உலகத்திற்கு காரணமானவன், காணும் அனைத்துமாகவும் இருக்கும் புருஷன் எவரோ, அவரே பரப்ரம்மம்"
என்று  மட்டும் வேதம் சொல்கிறது.

"சஹஸ்ர சீரஷ: புருஷ:"
என்ற இடத்தில் மட்டுமல்ல,
வேதம் பல இடங்களில் இந்த "புருஷ" என்ற சொல்லை மட்டும்  பயன்படுத்துகிறது.

"புருஷயம் புருஷ மீக்ஷதே"
என்று வேதம் இன்னொரு இடத்தில் சொல்கிறது.
அதாவது,
"எல்லாருடைய இதயத்திலும் ஒரு புருஷன் அந்தர்யாமியாக இருக்கிறார். அந்த புருஷனை உள்ளுணர்ந்து பார்"
என்கிறது வேதம்.

இந்த வேத வாக்கியத்தின் அர்த்தத்தை ஒத்த தமிழ் சொல் தான் "கடவுள்".
"கடவுள்" என்ற சொல்லுக்கு
"கடந்து உள்ளே பார், உனக்குள்ளும் அந்தர்யாமியாக உள்ள புருஷன் தெரிவான்" என்று பொருள்.

இன்னொரு இடத்தில்,
"பூர்வமேவா: இஹா சமிதி, தத் புருஷஸ்ய புருஷத்வம்"
என்று வேதம் சொல்கிறது.
அதாவது,
"எல்லா படைப்புகளுக்கும் முன், யாராலும் படைக்கப்படாத அந்த புருஷன் மட்டுமே இருந்தார்" என்றும் வேதம் சொல்கிறது.

'புருஷன்', 'புருஷன்' என்று மட்டும் வேதம் பல இடங்களில், அந்த பரப்ரம்மத்தை சொல்வதால்,
வேதத்தில் கூறப்பட்ட "ப்ரம்மா, ருத்ரன், விஷ்ணு மற்றும் பிற தேவதைகளிடத்தில்" பக்தி உள்ளவர்கள்,
வேதத்தில் கூறப்பட்ட அந்த "பரப்ரம்மம்", அந்த "புருஷன்", அந்த "ஈஸ்வரன்",
"நாங்கள் வழிபடும் தெய்வமே" என்று பயன்படுத்துகின்றனர்.

"புருஷயம் புருஷ மீக்ஷதே"
என்ற வேத வாக்கின் படி, "அந்த புருஷன், எல்லாருடைய இதயத்திலும் அந்தர்யாமியாக இருக்கிறான்" என்பதால்,
"அந்த பரமாத்மா தேவதைகளுக்கு உள்ளும் இருக்கிறான்" என்பதால், பரப்ரம்மமாகிய புருஷனுக்கு இது ஒன்றும் குறையில்லை.

இதன் காரணமாக,
ருத்ரனையோ, ப்ரம்மாவையோ, "புருஷன், ஈஸ்வரன், பரமாத்மா என்று வணங்காதே" என்று கட்டுப்பாடு விதிக்கவில்லை நம் தர்மம்.
ஆனால் உண்மையான பரப்ரம்மம் யார்?

"புருஷன் என்று தானே வேதம் சொல்லி இருக்கிறது. அது எங்கள் தெய்வத்தை தான் சொல்கிறது"
என்று பக்தனாய் இருப்பவன், தன் தன் இஷ்ட தெய்வத்துக்கு "புருஷாய நம:" என்ற சொல்லை, "ஈஸ்வரன்" என்ற சொல்லை பயன்படுத்திக் கொள்கிறான்.

வேதம் எந்த இடத்திலாவது, யார் அந்த புருஷன்? என்று சொல்லி இருக்கிறதா? என்று கவனித்தால்,
வேதத்தின் உண்மையான அபிப்ராயத்தை கண்டுபிடிக்க முடிகிறது.

புருஷ சூக்தத்தில், யார் அந்த புருஷன்? என்று வேதம், ஒரு இடத்தில் தெளிவாக சொல்கிறது.
" ह्रीश्च॑ ते ल॒क्ष्मीश्च॒ पत्न्यौ॓"
என்று சொல்கிறது.
"ஹ்ரீஸ்சம் தே லக்ஷ்மீஸ்ச பத்ன்யௌ"
என்று சொல்லும் போது, வேதம் "அந்த புருஷனின் பத்னி லட்சுமி" என்று சொல்கிறது.




"லட்சுமி பத்னி" என்றதும், மற்ற தெய்வங்கள் "நான் அல்ல" என்று விலகினர்.
"ஹ்ரீஸ்சம் தே லக்ஷ்மீஸ்ச பத்ன்யௌ"
என்று சொல்லும் போது,
வேதம் "யாராலும் படைக்கப்படாத அந்த புருஷன் யார்?"
என்ற கேள்விக்கு, விடை கொடுத்து விடுகிறது.

"அந்த பரப்ரம்மம், அந்த புருஷன் விஷ்ணுவே தான்"
என்று வேதம் ஊர்ஜிதப்படுத்துகிறது.

மேலும், வேதம், "ஸ ஏக புருஷ:" என்றும் சொல்கிறது.
அதாவது, "அவர் ஒருவரே புருஷன்" என்று சொல்கிறது.

"அவர் ஒருவரே புருஷன்" என்று வேதம் சொல்வதால்,
ஆண் வர்க்கத்தில் உள்ள "தேவதைகள், மனிதர்கள், விலங்குகள் எல்லாம்", அந்த புருஷனான விஷ்ணுவுக்கு முன்னால், "ஒரு பெண் போல" என்று அர்த்தமாகிறது.

விஷ்ணுவே புருஷன்.
"விஷ்ணு ஒருவரே புருஷன்" என்பதை மகாலட்சுமி, விஷ்ணுவை மணந்த போது நடந்த நிகழ்ச்சியை கண்டே புரிந்து கொள்ளலாம்.

"பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்துக்கொள்ளுங்கள்"
என்று தேவர்களுக்கு விஷ்ணு பகவான் சொல்ல,
அதை கடைந்த போது
முதலில் ஆலகால விஷம் வர, அதை சிவபெருமான் குடித்து "நீலகண்டன்" என்றும், அமிர்தம் சாப்பிடாமல் விஷத்தை சாப்பிட்டாலும் "தான் அமரன்" என்று காட்டினார் தேவர்களுக்கு.
அதன் பின்பு
  • ஐராவதம் என்ற யானை,
  • காமதேனு என்ற பசு,
  • கற்பக விருட்சம்,
  • புஷ்பக விமானம்,
  • பாரிஜாத மரம் 

என்று ஒவ்வொன்றாக தோன்றின.
இவைகளை தேவர்களும், அசுரர்களும் பங்கு போட்டுக்கொண்டனர்.

அதன் பின்,
ஸ்ரீமகாலட்சுமி கையில் செந்தாமரை மலருடன் எழுந்தருளினாள்.
தேவர்களும், அசுரர்களும் "தனக்கு மாலை இடுவாள்" என்று நினைத்து வரிசையில் நின்றனர்.


விஷ்ணு பகவான், இதில் கலந்து கொள்ளாமல் தள்ளி நிற்பதை பார்த்தாள், மகாலட்சுமி.

மகாலட்சுமிக்கு, பரம புருஷனான விஷ்ணுவை பார்த்த பிறகு, அங்கு கூடி இருந்த முப்பது முக்கோடி தேவர்கள், அசுரர்கள் என்று யாரைப் பார்த்தாலும் பெண்களாகவே தோன்ற,
ஆண்கள் கூட்டத்தில், ஒரு வித தயக்கமும் இல்லாமல், நடந்து சென்று, விஷ்ணுவின் கழுத்தில் மாலை இட்டாள்.
வேதம் "புருஷன்" என்று சொல்லும் போது, விஷ்ணு மட்டுமே புருஷன் என்று சொல்லிவிட்டது.

மற்றவர்கள் எல்லாம், அவருக்கு எதிராக பெண்ணை போன்றவர்கள் என்று சொல்வதற்கு காரணம் உண்டு.

பொதுவாக, உலக வழக்கில், பெண் என்பவள் பிறந்தது முதல்,
  • பெற்றோர்களாலும்,
  • தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களாலும்,
  • கல்யாணம் ஆகி கணவனாலும்,
  • பின் குழந்தைகளாலும் 

பாதுகாக்கப்படுகிறாள்.

இவர்கள் சொல்படி. அந்தந்த காலங்களில் கேட்டு நடக்கிறாள். பாதுகாக்கப்படுகிறாள்.

சட்டம் இல்லாத, ஒழுங்கீனமான தேசங்களில் கூட, ஆண்கள் எப்படியும் வாழ்ந்து விட முடியும்.
ஆனால் பெண்ணுக்கு பாதுகாப்பு வீட்டில் இவர்களாலும், சமுதாயத்தில் சட்டம் ஒழுங்கு போன்றவற்றாலும் கட்டாயம்  தேவைப்படுகிறது.

ஒரு ஆணுக்கு இந்த பயமில்லாததால், "பெண்" என்ற இனத்தை வைத்து பார்க்கும் போது, உலக ரீதியில் இவர்கள் "ஆண்" என்ற தகுதியை பெற்றனர்.

ஆனால், வேதம்
"விஷ்ணுவே புருஷன்"
என்று சொல்லிவிட்டு, புருஷன் என்ற சொல்லின் தகுதி என்ன?
என்றும் சொல்கிறது.

விஷ்ணு ஒருவனே புருஷன் என்று சொல்வதற்கு காரணம் என்ன? என்று கேட்டால், அவருடைய "நித்ய ஸ்வாதந்த்ரியமே" காரணம் என்கிறது வேதம்.

'நித்ய ஸ்வாதந்த்ரியம்' என்றால்,
"எப்பொழுதும் யாருக்கும் கட்டுப்பட்டவன் அல்ல"
என்று பொருள்.

"எப்பொழுதும், யாருக்கும் கட்டுப்படாதவனே, புருஷன்" 
என்று சொல்லும் வேதம், அந்த "புருஷனின் பத்னி லட்சுமி" என்கிறது.


"நாம் அனைவரும் அவருக்கு எதிரே 'நானும் புருஷன்' என்று நிற்க முடியாது" என்கிறது வேதம்.
"விஷ்ணுவுக்கு முன்னால், தேவர்களும் கைகூப்பி பாதுகாப்பு கேட்டனர்" 
என்று பார்க்கிறோம்.

'எப்பொழுதும், யாருக்கும் கட்டுப்படாதவனே, புருஷன்'
என்ற பெருமை விஷ்ணுவை தவிர மற்ற யாருக்கும் இல்லை என்று சொல்லும் போது,
மற்றவர்கள் அனைவரும் எப்பொழுதோ, யாருக்கோ கட்டுப்படுவார்கள் என்று புரிகிறது.
கட்டுப்படுவதாலேயே இது புருஷ லக்ஷணம் இல்லை என்கிறது.

சாதாரண ஜனங்களாக இருக்கும் நாம்,
  • தேசத்தால் அடிமைப்படுகிறோம்.
  • பசி போன்றவைகள் இருப்பதால், நம் உடம்புக்கே அடிமைப்படுகிறோம்.
  • நம் புலன்களுக்கு அடிமைப்படுகிறோம்.
  • விதிக்கு அடிமைப்படுகிறோம்.
  • செய்த கர்மத்துக்கு அடிமைப்படுகிறோம்,
  • காலத்துக்கு அடிமைப்படுகிறோம்,
  • தெய்வத்துக்கு அடிமைப்படுகிறோம்,
  • இயற்கைக்கு அடிமைப்படுகிறோம்,
  • பிற மனிதர்களுக்கு அடிமைப்படுகிறோம்.
  • குடும்பத்துக்கு அடிமைப்படுகிறோம்,
  • மனைவியாக இருந்தால் கணவனுக்கு அடிமைப்படுகிறோம்,
  • மனைவிக்கு கணவன் அடிமை,
  • இரண்டு பேரும் சேர்ந்து குழந்தைக்கு அடிமை.
  • பிள்ளைகள், அப்பா அம்மாவுக்கு அடிமை
  • எல்லோரும் சேர்ந்து அரசனுக்கு அடிமை.

இப்படி சார்ந்து வாழ வேண்டி இருப்பதாலேயே, வேதம், 
"விஷ்ணுவுக்கு முன்னால், அனைவரும் ஒரு ஸ்திரீயே" என்கிறது.

இப்படி எதற்கோ, யாருக்கோ அடிமைப்பட்டு இருப்பவர்களை, "புருஷன்" என்று எப்படி சொல்ல முடியும்?

யார் காலத்துக்கு அடிமை இல்லையோ !
யார் கர்மாவுக்கு அடிமை இல்லையோ !
யார் இயற்கைக்கு அடிமை இல்லையோ !
யார் தேசத்துக்கு அடிமை இல்லையோ !
யார் மனசுக்கு அடிமை இல்லையோ !
யார் யாருக்கும் அடிமை இல்லையோ !
யாருக்கு மேல் ஒரு தெய்வமும் இல்லையோ !
அவனே "புருஷன்"
என்கிறது வேதம்.



அவரே "விஷ்ணு" என்று அறிந்து "அவரிடம் பக்தி செய்" என்கிறது வேதம்.

"அவர் அபயம் (பயப்படாதே) என்று நமக்கு அணுகிரஹம் செய்துவிட்டால், உலகமே முயற்சி செய்தாலும், நம்மை அழிக்க முடியாது" என்கிறது வேதம்
"புருஷன்" என்று அவரவர் கணவனை அழைத்தாலும் கூட, 
மற்ற தேவதைகளை "புருஷன்" என்று அழைத்தாலும் கூட, 
புருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் ஸித்திக்கும் படியாக இருப்பது, 
அந்த பரப்ரம்மமான விஷ்ணுவே" 
என்று தீர்மானமாக சொல்கிறது வேதம்.

வேதம், "லட்சுமிபதி யாரோ அவரே புருஷன்" என்று சொல்லிவிட்டதால், புருஷன், பரமேஸ்வரன் "விஷ்ணுவே தான்" என்று ஊர்ஜிதப்படுத்துகிறது.
வாசுதேவனான "விஷ்ணுவே புருஷன்".
அவரே அவதாரம் செய்த விபவ அவதாரங்களில் மிகவும் நமக்கு நெருக்கமான அவதாரங்கள் "நரசிம்ஹ, ராம, கிருஷ்ண" அவதாரங்கள்.
ஸ்ரீ கிருஷ்ணரின் வாக்கில் இருந்து வந்த உபதேசம் "கிருஷ்ண கீதை" என்று சொல்லப்படாமல், "பகவத் கீதை" என்று குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம், "அவரே வாசுதேவன், அவரே பகவான், அவரே புருஷன்" என்பதால் தான்.

அவருடைய சரிதத்தை சொல்லும் போது, "கிருஷ்ண சரித்திரம்" என்று சொல்லாமல், பகவான் என்ற சொல்லை கொண்டு "பாகவதம்" என்று சொல்லப்படுகிறது.

வேதத்தை புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், மனிதனாக பிறந்தவன், ஸ்ரீ கிருஷ்ணன் சொன்ன "கீதையை தினமும் ஒரு ஸ்லோகம் உள்ளுணர்ந்து படித்தாலே, வேதத்தின் சாரம் புரியும்".
இந்த பகவத் கீதையிலும், ஸ்ரீ கிருஷ்ணன் "புருஷன்' என்ற சொல்லுக்கு அர்த்தத்தை சொல்கிறார் அர்ஜுனனுக்கு.
உத்தம புருஷஸ்த்வன்ய:
பரமாத்யேத் யுதாஹ்ருத: |
யோ லோகத்ரயம் ஆவிஷ்ய
விபர்த்தவ்யய ஈஸ்வர: ||
Chapter 15. 17th ஸ்லோகம்.
அதாவது,
அர்ஜுனா! உலகத்திற்கும், ஜீவன்களுக்கும் அப்பாற்பட்டு,  'சித்-அசித்'(ஜீவன், இயற்கை) என்ற அனைத்தையும் "நிர்வாகம் செய்யக்கூடிய, நிர்வாகம் செய்யும் திறனுடைய" புருஷோத்தமனாக 'நானே' இருக்கிறேன்.
என்று வேதத்தின் புருஷ சப்தத்தின் சாரத்தை கூறுகிறார்.


பரம புருஷனான வாசுதேவனை, ஸ்ரீ கிருஷ்ணனை ஆராதிப்போம்.
அவர் அபயம் கிடைக்க, பக்தி செய்வோம்.