Followers

Showing posts with label கோபம். Show all posts
Showing posts with label கோபம். Show all posts

Sunday, 3 January 2021

ஹனுமானுக்கு ஏற்பட்ட சோகம் (Hanuman in Stress).. கோபத்தின் விளைவை எண்ணி வருத்தப்படுகிறார்... தெரிந்து கொள்வோமே ! வால்மீகி ராமாயணம்

'சீதா தேவியை அனுப்ப முடியாது' என்று தீர்மானித்து,  ஹனுமானின் வாலில் தீ வைக்க சொல்லி ராக்ஷஸர்களுக்கு ஆணையிட்டான் ராவணன். 
ஊர் முழுக்க ஹனுமானை கட்டி இழுத்து சென்று, ஊரில் இருந்த அனைத்து ராக்ஷஸ குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் உட்பட அனைவரும் கேலியாக சிரித்தனர். 
ஹனுமான் இவர்கள் செய்யும் அட்டகாசங்கள், கேலிகள் அனைத்தையும் பார்த்தும், பொறுமையாகவே இருந்தார்.

இதற்கிடையில் ஸீதா தேவியிடம் அங்கிருந்த ராக்ஷஸிகள் 'உன்னை பார்க்க வந்த தூதன் பிடிபட்டு விட்டான். இன்று அந்த வானரன் வாலில் தீ வைத்து, ஊர் முழுக்க இழுத்து கொண்டு போகிறார்கள்" என்று சொல்ல, 
சீதா தேவி 'என் கணவனுக்கே நான் சேவை செய்தது உண்மையென்றால், நான் பதிவ்ரதை என்பது உண்மை என்றால், ராமபிரானின் ஒழுக்கம் உண்மை என்றால், ஏ அக்னியே! ஹனுமானை நீ தொடும் போது, குளிர்ச்சியாக இரு' என்று பிரார்த்தித்தாள்.
அதே சமயத்தில், வாலில் வைத்து இருந்த தீ, திடீரென்று குளிர்ந்த நீர் பட்டது போல ஆனதை உணர்ந்தார் ஹனுமான்.

உடனே உற்சாகம் அடைந்த ஹனுமான், இது வரை கேலி செய்து கொண்டிருந்த ராக்ஷஸர்களுக்கு ஒரு பாடம் புகட்ட, இலங்கையையே தீயிட்டு விட்டார்.

ஒவ்வொரு மதில் சுவராக தாவி, 
விபீஷணன் மாளிகையை மட்டும் விட்டு விட்டு, ராவணன் மாளிகை உட்பட அனைத்தையும் தீயிட்டு விட்டார்.
லங்காம் சமஸ்தாம் சந்தீப்ய லாங்கூலாக்னிம் மஹாகபி: |
நிர்வாபயாமாஸ ததா சமுத்ரே ஹரி சத்தம: ||
लङ्कां समस्तां सन्दीप्य लाङ्गूलाग्निं महाकपिः |
निर्वापयामास तदा समुद्रे हरिसत्तमः ||
இலங்கையை கொளுத்திய பிறகு, ஹனுமான் தன் வாலில் ராக்ஷஸர்கள் வைத்த தீயை கடலில் அணைத்தார்.

சந்தீப்யமானாம் வித்வஸ்தாம் த்ரஸ்தரஷோ கனாம் புரீம் |
அவேக்ஷ்ய ஹானுமான் லங்காம் சிந்தயாமாச வானர: ||
सन्दीप्यमानां विध्वस्तां त्रस्तरक्षो गणां पुरीम् |
अवेक्ष्य हानुमाँल्लङ्कां चिन्तयामास वानरः ||
இலங்கை நகரமே தீயில் கொழுந்து விட்டு ஏறிந்து கொண்டிருக்க, அலறி அடித்து ராக்ஷஸர்கள் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருப்பதை கண்ட ஹனுமானுக்கு, திடீரென்று தாங்க முடியாத சோகம் ஏற்பட்டது.
தஸ்ய அபூத் சமுஹாம் த்ராச: குத்ஸா ச ஆத்மன்ய ஜாயத |
லங்காம் ப்ரதஹதா கர்ம கிம் ஸ்வித் க்ருதம் இதம் மயா ||
तस्याभूत्सुमहांस्त्रासः कुत्सा चात्मन्यजायत |
लङ्कां प्रदहता कर्म किंस्वित्कृतमिदं मया ||
ஹனுமான் இதயத்துக்குள் பெரும் கவலை குடி கொண்டது. ஹனுமான் தன்னையே வெறுத்துக்கொண்டார். 
"சீ! இலங்கையை கொளுத்தி என்ன காரியம் செய்து இருக்கிறேன்!!

தன்யாஸ்தே புருஷ ஸ்ரேஷ்ட யே புத்தயா கோபம் உத்திதம் |
நிருன்தந்தி மஹாத்மனோ தீபதம் அக்னிமிவாம்பசா ||
धन्यास्ते पुरुषश्रेष्ठ ये बुद्ध्या कोपमुत्थितम् |
निरुन्धन्ति महात्मानो दीप्तमग्निमिवाम्भसा ||
இந்த கொழுந்து விட்டு எரியும் தீயை தண்ணீர் விட்டு அணைக்க முற்படும் அனைவரும் தன்யர்கள்.. அந்த மஹாத்மாக்களுக்கு என் நன்றி..
க்ருத்த: பாபம் ந குர்யாத் க:  க்ருத்தோ ஹன்யாத் குருநபி |
க்ருத்த: பருஷயா வாசா நர: ஸாதூனதிக்ஷிபேத் ||
क्रुद्धः पापं न कुर्यात् कः क्रृद्धो हन्यात् गुरूनपि ।
क्रुद्धः परुषया वाचा नरः साधूनधिक्षिपेत् ॥
கோபத்திற்கு ஆட்பட்ட, யார் தான் தவறு செய்யாமல் இருக்க முடியும்? கோபமடைந்தவன் தனது குருவை கூட கொல்ல துணிந்து விடுவானே!! கோபம் அடைபவன் நல்லவர்களை கூட கடும் சொற்களை பேசி அவமானப்படுத்தி விடுவானே!!

வாச்யாவாச்யம் ப்ரகுபிதோ ந விஜானாதி கர்ஹிசித் |
நாகார்யம் அஸ்தி க்ருத்தஸ்ய நாவாச்யம் வித்யதே க்வசித் ||
वाच्यावाच्यं प्रकुपितो न विजानाति कर्हिचित् ।
नाकार्यमस्ति क्रुद्धस्य नावाच्यं विद्यते क्वचित् ॥
கோபம் அடைந்தவன் என்ன பேச வேண்டும்? என்பதையும் மறக்கிறான். என்ன பேச கூடாது? என்பதையும் மறக்கிறான். 
கோபம் அடைந்தவனுக்கு எந்த செயலும்! செய்ய கூடாத செயல் இல்லை. கோபம் அடைந்தவனுக்கு எந்த வார்த்தையும்! பேசக்கூடாத வார்த்தை இல்லை.

ய: சமுத்பதிதம் க்ரோதம் க்ஷமயைவ நிரஸ்யதி |
யதோரகஸ்த்வசம் ஜீர்ணாம் ச வை புருஷ உச்யதே ||
यः समुत्पतितं क्रोधं क्षमयैव निरस्यति ।
यथोरगस्त्वचं जीर्णां स वै पुरुष उच्यते ॥
பாம்பு தன் பழைய தோலை கழட்டி விட்டு செல்லும். அது போல, யார் ஒருவன் தன் கோபத்தை கழட்டி எரிந்து விட்டு, மன்னிக்கும் குணத்தை பெறுகிறானோ! அவனே உண்மையான நாயகன்.

திகஸ்து மாம் சுதுர்புத்திம் நிர்லஜ்ஜம் பாபக்ருத்தமம் |
அசிந்தயித்வா தாம் சீதாம் அக்னிதம் ஸ்வாமிகாதகம் ||
धिगस्तु मां सुतुर्बुद्धिम् निर्लज्जम् पापकृत्तमम् |
अचिन्तयित्वा तां सीतामग्निदं स्वामिघातकम् ||
சீ! அவமானம். நான் ஒரு புத்தி கெட்டவன்! வெட்கமில்லாதவன்! பாவி! சீதாதேவியை பற்றி நினைவு இல்லாமல், இப்படி இலங்கையை கொளுத்தி விட்டேனே!! என் பிரபு கொடுத்த காரியத்தை கெடுத்து விட்டேனே!!

யதி தக்தா த்வியம் லங்கா நூனமார்யாபி ஜானகீ |
தக்தா தேன மயா பர்துர்ஹதம் கார்யம் அஜானதா ||
यदि दग्धा त्वियं लङ्का नूनमार्यापि जानकी |
दग्धा तेन मया भर्तुर्हतं कार्यमजानता ||
இந்த இலங்கை நகரம் முழுவதும் இப்போது எரிந்து சாம்பலாகி விட்டால், அதில் சீதா தேவியும் எரிந்து விடுவாளே! 
என்னுடைய முட்டாள்தனத்தால், என் பிரபு கொடுத்த காரியத்தை கெடுத்து விட்டேனே!!  செய்த அனைத்து முயற்சியும் வீணாகி போனதே! 

யதர்தம் அயம் ஆரம்ப: தத் கார்யம் அவசாதிதம் |
மயா ஹி தஹதா லங்காம் ந சீதா பரி ரக்ஷிதா ||    
यदर्थम् अयम् आरम्भ: तत् कार्यम् अवसादितम् |
मया हि दहता लङ्कां न सीता परिरक्षिता ||
நான் இலங்கையை கொளுத்துவதற்கு முன்னால், சீதா தேவியை பத்திரமாக வைத்து விட்டு செய்து இருக்கலாமே!!

ஈசத் கார்யம் இதம் கார்யம் க்ருதம் ஆஸீன் ந சம்சய: |
தஸ்ய க்ரோத அபிபுதேன மயா மூலக்ஷய: க்ருத: ||
விநஷ்டா ஜானகீ வ்யக்தம் ந ஹ்யதக்த: ப்ரத்ருஷ்யதே |
லங்காயா: கஸ்சித் உத்தேச: சர்வா பஸ்மீக்ருதா புரீ ||
யதி தத்விஹிதம் கார்யம் மயா ப்ராஞா விபர்யயாத் |
இஹைவ ப்ராண சந்யாசோ மமாபி ஹ்யதிரோசதே ||
ईषत्कार्यमिदं कार्यं कृतमासीन्न संशयः |
तस्य क्रोधाभिभूतेन मया मूलक्षयः कृतः ||
विनष्टा जानकी व्यक्तं न ह्यदग्धः प्रदृश्यते |
लङ्कायाः कश्चिदुद्देशः सर्वा भस्मीकृता पुरी ||
यदि तद्विहतं कार्यं मया प्रज्ञाविपर्ययात् |
इहैव प्राणसंन्यासो ममापि ह्यतिरोचते ||
என் பிரபு கொடுத்து அனுப்பிய காரியத்தில் பெரும்பாலான காரியங்கள் முடிந்து, இன்னும் கொஞ்சம் தானே மிச்சம் இருந்தது. என் கோபத்தால், செய்த காரியம் அனைத்தையும் அடியோடு நாசமாக்கி விட்டேனே!
என்ன செய்கிறேன் என்றே தெரியாமல், புத்தி கெட்டு, நான் வந்த காரியத்தை நானே கெடுத்து கொண்டேனே! நான் இங்கேயே சாக வேண்டும்…

கிமக்நௌ நிபதாம் யத்ய ஆஹோஸ் வித்வங்வாமுகே |
சரீரம் ஆஹோ ஸத்த்வானாம் தத்மி சாகர வாசினாம் || 
किमग्नौ निपताम्यद्य आहोस्विद्वडवामुखे |
शरीरमाहो सत्त्वानां दद्मि सागरवासिनाम् ||
இந்த தீயிலேயே விழுந்து உயிர் விட்டு விடுவோமா? என் உடலை இந்த கடல் எடுத்து கொள்ளட்டுமா?

கதம் ஹி ஜீவிதா சக்யோ மயா த்ரஷ்டும் ஹரீஸ்வர: |
தொள வா புருஷ சார்தூலௌ கார்ய சர்வஸ்வகாதினா ||  
कथं हि जीवता शक्यो मया द्रष्टुं हरीश्वरः |
तौ वा पुरुषशार्दूलौ कार्यसर्वस्वघातिना ||
இப்படி வந்த காரியத்தை நாசம் செய்து விட்டு, இனி, சுக்ரீவ மஹாராஜனையும், அந்த இரு நர ச்ரேஷ்டர்களையும் எந்த முகத்தை வைத்து கொண்டு பார்ப்பேன்? 

மயா கலு ததே வேதம் ரோஷதோஷாத் ப்ரதர்ஷிதம் |
ப்ரதிதம் த்ரிஷு லோகேஷு கபித மனவஸ்திதம் ||
मया खलु तदेवेदं रोषदोषात्प्रदर्शितम् |
प्रथितं त्रिषु लोकेषु कपितमनवस्थितम् ||
கோபம் என்ற கறையால், நான் வானர குணத்தை காண்பித்து விட்டேனே! மூவுலகத்தில் உள்ளவர்களும் வானரர்கள் நிலையில்லா புத்தி கொண்டவர்கள் என்று சொல்வதை இன்று நானும் நிரூபித்து விட்டேனே!!

திகஸ்து ராஜசம் பாவமனீஷ மன வஸ்திதம் |
ஈஸ்வரேநாபி யத் ராகான் மயா சீதா ந ரக்ஷிதா ||
धिगस्तु राजसं भावमनीशमनवस्थितम् |
ईश्वरेणापि यद्रागान्मया सीता न रक्षिता ||
சீ! அவமானம்! எனக்குள் எழுந்த இந்த ராஜஸ குணத்தால், சீதா தேவியை காப்பாற்ற வழி இருந்தும், புத்தி கெட்டு காப்பாற்றாமல் போனேனே!!

வினஷ்டாயாம் து சீதாயாம் தாவுபௌ விநசிஷ்யத: |
தயோர்விநாசே சுக்ரீவ: ச-பந்து:  விநசிஷ்யத: ||
विनष्टायां तु सीतायां तावुभौ विनशिष्यतः |
तयोर्विनाशे सुग्रीवः सबन्धुर्विनशिष्यति ||
சீதாதேவிக்கு ஆபத்து விளைவித்து, ராம லக்ஷ்மணர்களையும் நாசம் செய்து விட்டேன்! ராம லக்ஷ்மணர்கள் தங்கள் உயிரை விட்டு விட்டால், சுக்ரீவ மகாராஜனும் அவருடன் இருக்கும் அனைவரும் தங்களை அழித்து கொள்வார்கள்.
ஏததேவ வச: ஸ்ருத்வா பரதோ ப்ராத்ரு வத்சல: |
தர்மாத்மா ஸஹ சத்ருக்ன: கதம் சக்ஷ்யதி ஜீவிதும் ||
एतदेव वचः श्रुत्वा भरतो भ्रातृवत्सलः |
धर्मात्मा सहशत्रुघ्नः कथं शक्ष्यति जीवितुम् ||
சகோதர்கள் மடிந்ததை கேட்டால், பரதனும், சத்ருக்னனும் எப்படி உயிர் வாழ்வார்கள்?

இக்ஷ்வாகு வம்சே தர்மிஷ்டே கதே நாசம் அஸம்சயம் |
பவிஷ்யந்தி ப்ரஜா: சர்வா: சோக சந்தாப பீடிதா: ||
इक्ष्वाकुवंशे धर्मिष्ठे गते नाशमसंशयम् |
भविष्यन्ति प्रजाः सर्वाः शोकसन्तापपीडिताः ||
என் காரியத்தால், இக்ஷ்வாகு குலமே சோகத்தால் அழிய போகிறது. 

ததஹம் பாக்ய ரஹிதோ லுப்த தர்மார்த சங்க்ரஹ: |
ரோஷ தோஷ பரீதாத்மா வ்யக்தம் லோக விநாசன: ||
तदहं भाग्यरहितो लुप्तधर्मार्थसङ्ग्रहः |
रोषदोषपरीतात्मा व्यक्तं लोकविनाशनः ||
என்ன ஒரு துர்பாக்கியம்!! என்னிடம் படிந்த இந்த கோபம் என்ற கறையால், நல்லதையும், நல்லவர்களையும் இழக்க போகிறேன். என் கோபத்தால், பலர் அழிய போகிறார்கள்."
இதி சிந்தயதஸ் தஸ்ய நிமித்தான் யுபபேதிரே |
பூரம் அப்யு பலப்தானி சாஷாத் புனரசிந்தயத் ||
इति चिन्तयतस्तस्य निमित्तान्युपपेदिरे |
पूरमप्युपलब्धानि साक्षात्पुनरचिन्तयत् ||
இப்படி ஹனுமான் ஒடிந்து போய், சிந்தித்து கொண்டு இருக்க, மனதில் எதேச்சையாக 'சுப சகுனம்' தோன்றியது. 
"சோகத்தை அடைபவன், மேலும் மேலும் சோகத்தை மனதில் வளர்த்து கொண்டால், அது அவனை தற்கொலை வரை கொண்டு சென்று விடும்.
சோகத்தை ஒழிக்க ஒரே வழி மனதை உற்சாகப்படுத்துவதே!" என்று நினைத்து கொண்ட, ஹனுமான், மேலும் சிந்திக்கலானார்.  

அத வா சாரு சர்வாங்கீ ரக்ஷிதா ஸ்வேன தேஜஸா |
ந நிஷிஷ்யதி கல்யாணி ந அக்னிரக்னௌ ப்ரவர்ததே ||
अथ वा चारुसर्वाङ्गी रक्षिता स्वेन तेजसा |
न नशिष्यति कल्याणी नाग्निरग्नौ प्रवर्तते ||
"சீதா தேவி தன் கற்பு என்ற அக்னியுடன் இருப்பதால், நாம் தீயிட்ட இந்த அக்னியில் ஒன்றும் ஆகி இருக்க மாட்டாள். ஒரு அக்னி இன்னொரு அக்னியை கொளுத்த முடியுமா?

ந ஹி தர்மான் மனஸ்தஸ்ய பார்யாம் அமிததேஜச: |
ஸ்வசாரித்ர அபிகுப்தாம் தாம் ஸ்ப்ரஷ்டும் அர்ஹதி பாவக: ||
न हि धर्मान्मनस्तस्य भार्याममिततेजसः |
स्वचारित्राभिगुप्तां तां स्प्रष्टुमर्हति पावकः ||
இந்த அக்னி நிச்சயம் சீதாதேவியை கொளுத்தி இருக்காது. அவள் தன் நடத்தையாலேயே நன்கு பாதுகாக்கப்பட்டு இருப்பாள். எல்லையற்ற ஒளியான ராமபிரானின் பெண்மணி அவள்

நூனம் ராம ப்ரபாவேன வைதேஹ்யா: சுக்ருதேன ச |
யன்மாம் தஹன கர்மாயம் நாதஹத்தவ்ய வாஹன: ||
नूनं रामप्रभावेन वैदेह्याः सुकृतेन च |
यन्मां दहनकर्मायं नादहद्धव्यवाहनः ||
சீதாதேவியின் கற்பின் பலத்தாலும், ராமபிரானின் ப்ரபாவத்தாலும் தான் இந்த அக்னி என்னை சூடாமல் இருந்ததுஎன்று உணர்கிறேன்.

த்ரயானாம் பரதாதீனாம் ப்ராத்ருனாம் தேவதா ச யா |
ராமஸ்ய ச மன: காந்தா சா கதம் வினசிஷ்யதி ||
त्रयाणां भरतादीनां भ्रातॄणां देवता च या |
रामस्य च मनःकान्ता सा कथं विनशिष्यति ||
அருமையான பரதன் போன்ற மூன்று சகோதரர்கள் இருக்க, ராமபிரானுடைய மனதை கவர்ந்தவளாக இருக்கும் சீதா தேவி எப்படி இந்த தீயில் அழிந்து இருக்க முடியும்?

யத்வா தஹன கர்மாயம் ஸர்வத்ர ப்ரபுரவ்யய: |
ந மே தஹதி லாங்கூலம் கதம் ஆர்யாம் ப்ரதக்ஷ்யதி ||
यद्वा दहनकर्मायं सर्वत्र प्रभुरव्ययः |
न मे दहति लाङ्गूलं कथमार्यां प्रधक्ष्यति ||
அனைத்தையும் கொளுத்தி சாம்பலாக்கும் குணம் கொண்ட அக்னி என்னையே அழிக்காத போது, சீதா தேவியை எப்படி அழித்து இருக்க முடியும்?" என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்.

புன: ச சிந்தயத் தத்ர ஹனுமான் விஸ்மித: ததா |
ஹிரண்ய நாபஸ்ய கிரே: ஜல மத்யே ப்ரதர்சனம் ||
पुन: च चिन्तयत्तत्र हनुमान् विस्मित: तदा |
हिरण्य नाभस्य गिरे: जल मध्ये प्रदर्शनं ||
ஹனுமான் கடலை கடந்து கொண்டிருக்கும் போது, தான் இளைப்பாற இடம் கொடுக்க, ப்ரம்ம தேவனால் அனுப்பப்பட்ட மைனாக மலை கடலிலிருந்து வெளிவந்த ஆச்சர்யத்தை நினைத்து பார்த்தார்.

தபஸா சத்ய வாக்யேன அனன்யத் வாச்ச பர்தரி |
அபி சா நிர்தஹேதக்னி ந தாமாக்னி: ப்ரதக்ஷ்யதி ||
तपसा सत्यवाक्येन अनन्यत्वाच्च भर्तरि |
अपि सा निर्दहेदग्निं न तामग्निः प्रधक्ष्यति ||
சீதாதேவியின் தபசும், சத்தியமும், பதிவ்ரதா தன்மையுமே அக்னியை பொசுக்கி இருக்கும். அக்னி சீதையை பொசுக்கி இருக்காது."

ச ததா சிந்தயம் தத்ர தேவ்யா தர்மபரிக்ரஹம் |
சுஸ்ராவ ஹனுமான் வாக்யம் சாரனானாம் மஹாத்மனாம் ||
स तथा चिन्तयंस्तत्र देव्या धर्मपरिग्रहम् |
शुश्राव हनुमान्वाक्यं चारणानां महात्मनाम् ||
இப்படி ஹனுமான் தனக்குள் ஏற்பட்ட சோகத்தை நம்பிக்கை வார்த்தைகளால் மாற்றி கொண்டு இருக்க, அப்போது வானத்திலிருந்து தேவர்கள் பேசுவது கேட்டது.

அஹோ கலு க்ருதம் கர்ம துர்விஷஹ்யம் ஹனுமதா |
அக்னிம் விஸ்ருஜதாபீக்ஷ்னம் பீமம் ராக்ஷஸ சத்மணி ||
अहो खलु कृतं कर्म दुर्विषह्यं हनूमता |
अग्निं विसृजताभीक्ष्णं भीमं राक्षससद्मनि ||
"ஹனுமான் ராவணனின் பவனத்தை கொளுத்தி அபாரமான காரியம் செய்து விட்டார். 

ப்ரபலாயித ரக்ஷ: ஸ்த்ரீ பால வ்ருத்த சமா குலா |
ஜனகோ லோஹ லாத்மாதா க்ரந்தன்தீவாத்ரி கந்தரே || 
प्रपलायित रक्ष: स्त्री बाल वृद्ध समा कुला |
जनको लोह लाध्माता क्रन्दन्तीवाद्रिकन्दरे || 
ராக்ஷஸ பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் அனைவரும் தப்பித்து விட்டனர். இவர்கள் அனைவரும் மலை உச்சியில் பேசி கொண்டிருப்பது கேட்கிறது.
தக்தேயம் நகரீ லங்கா சாட்டப்ராகார தோரனா |
ஜானகீ ந ச தக்தேதி விஸ்மயோ அத்புத ஏவ ந: ||
दग्धेयं नगरी लङ्का साट्टप्राकारतोरणा |
जानकी न च दग्धेति विस्मयोऽद्भुत एव नः ||
இலங்கையின் மதில் சுவர்கள், நுழைவாயில் அனைத்தும் எரிந்து போனாலும், ராவணனின் மாளிகை அழிந்தும், அதற்கு உட்பட்ட அசோக வனம் பாதிப்பு அடையவில்லை. சீதா தேவி அக்னியால் பொசுக்கப்படவில்லை. இது பெரும் ஆச்சரியம்…

ச நிமித்தை: ச த்ருஷ்டார்தை: காரணை: ச மஹாகுணை: |
ருஷி வாக்யை: ச ஹனுமான் பவத் ப்ரீத மானஸ: ||
स निमित्तैश्च दृष्टार्थैः कारणैश्च महागुणैः |
ऋषिवाक्यैश्च हनुमानभवत्प्रीतमानसः ||
இதை கேட்ட ஹனுமான் உற்சாகம் அடைந்தார். தான் உணர்ந்த நல்ல சகுனத்தையும், தனக்குள் ஏற்பட்ட நல் எண்ணங்களையும், இப்பொழுது கேட்ட தேவ வாக்கினையும் நினைத்து, ஹனுமான் ஆனந்தம் அடைந்தார்.

தத: கபி: ப்ராப்த மனோரதார்தஸ்
தாமக்ஷதாம் ராஜசுதாம் விதித்வா |
ப்ரத்யக்ஷதஸ்தாம் புனரேவ த்ருஷ்ட்வா
ப்ரதி ப்ரயானாய மதிம் சகார ||
ततः कपिः प्राप्तमनोरथार्थस्
तामक्षतां राजसुतां विदित्वा |
प्रत्यक्षतस्तां पुनरेव दृष्ट्वा
प्रतिप्रयाणाय मतिं चकार ||
'சீதா தேவிக்கு ஒன்றும் ஆகவில்லை' என்று நம்பிக்கை பிறந்த பின், ஒரு முறை சீதா தேவியை பார்த்து விட்டு, கிளம்பி செல்லலாம் என்று முடிவு செய்து மீண்டும் அசோகவனம் சென்று சீதா தேவியை தரிசித்தார்.

Saturday, 23 May 2020

சோகம் நமக்கு எதிலிருந்து உண்டாகிறது? ஆத்மாவே நான். உடல் நானல்ல. இதை அனுபவத்தில் புரிந்து கொள்ள முடியுமா?

"ஆத்மாவே நீ. உடல் நீயல்ல.."
இந்த சத்யத்தையே ஹிந்து மதம் எப்பொழுதும் பேசுகிறது.
ரிஷிகள், ஞானிகள், சிவபெருமான் உட்பட இந்த தத்துவத்தை தான் பல விதத்தில் நமக்கு உபதேசம் செய்கிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு அத்தியாயம் 3ல் ஆரம்பித்து இதையே பல தர்மங்கள் வழியாக சொல்கிறார் என்று பார்க்கிறோம்."உடலும், மனதும் இருப்பதால் தான்", ஆத்மாவாகிய நமக்கு "சூடு, குளிர், மானம், அவமானம், நறுமணம், நாற்றம், வெற்றி, தோல்வி, சுகம், துக்கம்" என்று பல அனுபவங்கள் ஏற்படுகிறது.

"உடலும், மனதும் நீ அல்ல. ஆத்மாவே நீ. 
ஆத்மா எந்த துக்கத்தையும் அனுபவிக்கவில்லை. உடலும் மனதும் தான் இந்த அனுபவத்தை கொடுக்கிறது"
என்று ஹிந்து தர்மம் சொல்வதை நாமே அனுபவத்தில் புரிந்து கொள்ள முடியுமா?
முடியும்....
Anaesthetic injection போடும் போது உடல் மரத்து கிடக்கிறது.
"உடலை மரத்து போக செய்து விட்டால், நாம் (ஆத்மா) இந்த உடலில் இருந்தாலும், உடல் அனுபவங்கள் நம்மை தாக்குவதில்லை.
மண்டையை பிளந்து டாக்டர் பார்த்தாலும் 'உடல் வலி' ஆத்மாவுக்கு (நமக்கு) தெரியவில்லை.
தூங்கும் போது மனம் அடங்கி கிடக்கிறது.
நாம் (ஆத்மா) இந்த உடலில் இருந்தாலும், ஆழ்ந்த தூக்கத்தில், அருகில் பிணம் கிடந்தாலும் கூட, தூக்கத்தில் ஒன்றுமே நடக்காதது போல தூங்குகிறான்.
"கை கால் நொறுங்கி வலி பொறுக்க முடியாமல் அழுதவன்", தூக்கத்தில் ஒன்றுமே நடக்காதது போல தூங்குகிறான்.

"உடல் பலத்தை விட மனம் பலம் வாய்ந்தது" என்று தெரிகிறது.

மனம் ஓய்ந்து விட்டால், மனத்துயரம் மட்டுமல்ல, உடல் வலிகள் கூட தெரிவதில்லை என்று அனுபவத்திலேயே நாம் புரிந்து கொண்டு விடலாம்.

தூக்கத்தில் ஏன் மனம் ஓய்கிறது?
இதற்கான பதிலை ரிஷிகள் ஆராய்ச்சி செய்த பலனே யோகாப்யாஸம்.
மனம் எப்பொழுதும் அசைய கூடியது.
இந்த "உடல்" எத்தனைக்கு எத்தனை அசைகிறதோ, அத்தனை வேகமாக "மனம்" வேலை செய்யும்.

கோபம் அதிகமாகும் போது, உடல் அசைவு, உள்ளும் புறமும் தீவிரப்படும்.
இதனாலேயே மனம் அதி தீவிரமாக வேலை செய்யும்.
மனம் எத்தனைக்கு எத்தனை வேலை செய்கிறதோ!!.. அத்தனைக்கு அத்தனை கவலை, சுகம், வெற்றி, தோல்வி, பயம், மானம், அவமானம் என்று அனுபவங்களை இந்த உடலுக்கு கொடுக்கும்.

தூக்கத்தில் மனம் அடங்கும் ரகசியத்தை அறிந்த நம் ரிஷிகள்,
விழிப்புடன் இருக்கும் போதும் இந்த மனதை அடக்கும் வழியை தேடினார்கள்.

பதஞ்சலி "யோக சூத்திரம்" பிரசித்தம்.

'மனது' என்ற பம்பரத்தை யார் சுற்றுகிறார்கள்? என்று கவனித்த போது, அது நம் 'மூச்சு காற்றே' என்று அறிந்தார்கள்.

"இந்த பிராணன் என்ற கயிறு எப்படி வேகமாக சுற்றுகிறதோ, அதை பொறுத்து, இந்த மனம் வேகமாக அலைகிறது" என்று அறிந்தார்கள்.

பிராணனை அடக்க, பிராணாயாமம் வந்தது
தூங்குபவனுக்கு மூச்சு சீராக இருப்பது போல, பிராணாயாமம் செய்பவன் விழிப்பு நிலையிலும் மூச்சை சீராக வைத்து கொள்ள ஆரம்பித்தான். 
அதற்கு பலனாக, மனம் அடங்கி இருக்க முடிந்தது.

தூக்கத்தில், மூச்சு மட்டுமா சீராக உள்ளது?..  உடலும் அசைவின்றி உள்ளது... அல்லவா?

"எத்தனைக்கு எத்தனை உடல் அசையாமல் இருக்கிறதோ!! அத்தனைக்கு அத்தனைக்கு அத்தனை மனம் அடங்கும்"
என்ற உண்மையும் அறிந்தார்கள் நம் ரிஷிகள்.

தூக்கத்தில் ஏன் மனம் ஓய்கிறது? 
உடல் "அசையாமல்" இருப்பதாலேயே மனம் ஒடுங்கி இருக்கிறது.

"ப்ரேக் டான்ஸ் ஆடி, கண்டபடி உடலை அசைக்கும் ஆட்டங்கள் மனதுக்கு கேடு" என்று சொல்வதற்கு காரணம் இதுவே!..
வெளிநாட்டு கலாச்சாரத்தில் உள்ள இது போன்ற ஆட்டங்கள், உடலை அர்த்தமில்லாமால் அசைப்பதாலேயே "இது போன்ற ஆட்டம் ஆடாதே!" என்று சொன்னார்கள்.
நம் கலாச்சாரத்தில், இது போன்ற குத்தாட்டங்கள் கிடையாது.
நடனம் ஆடுவதற்கும் பல வித விதிகள் நம்மிடம் உண்டு.

இப்படி உடல் அசைவும், மனதை அசைய செய்கிறது என்ற உண்மையை அறிந்து நம் ரிஷிகள்,
"பிராணாயாமம் மட்டும் போதாது" என்று "ஆசனங்கள்" சொல்லி கொடுத்தனர்.

யோக ஆசனங்களை உடற்பயிற்சி போல உடலை வேகமாக அசைத்து அசைத்து செய்வதால் உண்மையான பலன் ஏற்படுவதில்லை.

வேக வேகமாக செய்தால், இதுவும் உடற்பயிற்சியே.
உடல் வலுவாகுமே தவிர, மனம் அடங்காது.
ப்ராணாயாமத்துடன், பத்மாசனம் போட்டு கொண்டு அசையாமல் ஒரு மணி நேரம் உட்கார முடிந்தாலேயே, யோகம் செய்த பலன் கிடைத்து விடும்.
உடலும் வலுவாக இருக்கும். மனமும் அடங்கி இருக்கும்.

தூக்கத்தில் தானாகவே மனம் அடங்கி விடுவதால், துக்கம் பாதிக்காமல் தூங்குகிறோம்.
விழிப்பில், ஆசனங்கள் மூலம் உடல் அசைவை குறைத்து கொண்டு பிராணாயாமம் செய்து கொண்டு இருந்தாலேயே, விழிப்பு நிலையிலும், துக்கம் நம்மை பாதிக்காமல்  பார்த்துக்கொள்ள முடியும்.

மனம் அடங்கி இருப்பவனுக்கு, துக்கம் தாக்குவதில்லை.
யோகத்தில் ஸித்தி ஆன ஜடபரதரிடம், "தலையை வெட்டி காளிக்கு பலி கொடுக்க வேண்டும்" என்று கேட்க, ஒன்றுமே சொல்லாமல் சென்றார் என்றால், அதன் ரகசியம் என்ன? என்று இப்பொழுது புரிந்து கொள்ள முடியும்.

தூக்கத்தில் மனம் அழிந்து, 
மரத்து போகும் ஊசி போட்டு உடல் இருப்பதே மறத்து போன நிலையை, யோகிகள் விழிப்பு நிலையிலேயே, கொண்டு வந்தனர்.

எத்தனை அற்புதமான தேசம் இது!!.
இந்த தேசத்தில் பிறந்த நாம், நம் பெருமையை மெச்சி கொள்ள வேண்டாமா?.

மேற்கத்திய மத சிந்தனையை ஏற்று கொள்வதே அவமானவல்லவா நமக்கு? யோசிக்க வேண்டும்...


"ஆத்மாவே நீ. உடல் நீயல்ல.." என்ற தத்துவத்தை சொல்வதே நம் ஹிந்து தர்மம்.

அதை நமக்கு திரும்ப திரும்ப சொல்ல தான், இத்தனை மஹான்கள், சாதுக்கள், அவதரித்தனர்.
இந்த ஆத்மா ... அதாவது நாம் (ஆத்மா) மோக்ஷம் அடைவதே லட்சியம் என்று காட்டினார்கள்.

இதை படிக்கும் சிலர்,
"அப்படியென்னறால், உலகம் மாயை, ஆத்மா தான் உண்மை என்றால், கடமைகளை விட்டு விடலாமா? 
நிரந்தரமில்லாத இந்த உடலில் ஏற்படும் அனுபவங்களுக்காக இத்தனை உழைக்க வேண்டுமா? குடும்பம் தேவையா?" 
என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

ஹிந்து தர்மம், கடமையை தவிர்க்க சொல்கிறதா?
என்று குழப்பமடைகிறார்கள்.
பெரும்பாலான ரிஷிகள், முனிகள், சந்யாசிகள், ஆதி சங்கரராக வந்த சிவபெருமான் உட்பட, அனைவருமே "ஆத்மா தான் நீ.. உடல் நீயல்ல" என்று சொல்வதாலும், பெரும்பாலும் இவர்களே உலகத்தில் பற்று இல்லாமல் இருப்பதாலும், ஹிந்து தர்மம் கடமையை தவிர்க்க சொல்கிறதோ? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது.

இதற்கு பதிலை பிரம்மாவையும் படைத்த நாராயணன் சொல்கிறார்.

கிருஷ்ண பரமாத்மாவாக அவதரித்த நாராயணன் (பரவாசுதேவன்), அர்ஜுனனிடம் பேசும் போது இதற்கான பதிலை சொல்கிறார்.
"ஆத்மாவே நீ. உடல் நீ அல்ல" என்று சொல்லும் கிருஷ்ணர், அர்ஜுனனை பார்த்து "அதற்காக உன் கடமையை செய்யாமல் இருக்காதே" என்று சொல்கிறார்.

தான் பரமாத்மாவாக இருந்த போதும், தானும் கடமையை செய்கிறேன் என்று காட்டுகிறார்.
எப்பொழுது எல்லாம் தர்மம் உலகில் அபாயத்தை சந்திக்குமோ, அப்பொழுதெல்லாம் தானே அவதாரம் செய்வதாக சொல்கிறார். 

"தான் பரமாத்மாவாக இருந்த போதிலும், இந்த கிருஷ்ண அவதாரத்தில், 
க்ஷத்ரியனாக அரசாளுகிறேன். என் தர்மத்தை காக்கிறேன். பாண்டவர்களான உங்களுக்கு ஏற்படும் அநீதிக்கு, நீதி கிடைக்க, உங்களுக்காக போராடுகிறேன்.

உடல் வேறு, ஆத்மா வேறு என்று தெரிந்தவன் கடமைகளை செய்யாமல் போவானா? 
இந்த அறிவு ஏற்பட்டவன் இன்னும் உற்சாகமாக மேலும் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை தானே செய்வான் !
உடலால் ஏற்படும் சோகம் எதுவும் எனக்கு இல்லை என்று தெரிந்த  ஞானி, தனக்கு விதிக்கப்பட்ட கடமையை செய்ய என்ன தடை இருக்க முடியும்? 
உடல் நீ அல்ல, ஆத்மாவே நீ என்கிற போது, க்ஷத்ரியனான நீ சண்டை போட்டு, தர்மத்தை நிலைநாட்டி, உனக்கு சேர வேண்டிய சொத்தை பெற்று கொள்ள வேண்டாமா? போரில் நீ அடிபட்டு வீழ்ந்தால், உன் உடல் தானே நாசமாகும்..  ஆத்மா இல்லையே !  நீ தோற்றாலும், ஜெயித்தாலும் உனக்கு (ஆத்மா) அதனால் ஆவது ஒன்றும் இல்லை என்கிற போது, க்ஷத்ரியனாக இருக்கும் நீ சண்டை போடுவது தானே உன் கடமை 
என்று சொல்லி அர்ஜுனனை அவன் கடமையை செய்ய உற்சாகப்படுத்துகிறார்.
"ஆத்மாவே நான். உடல் நான் அல்ல. 
இதை மனதில் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே, உனக்கு விதிக்கப்பட்ட கடமையை எனக்கா செய். என் உருவத்தையே மனதில் வைத்துக்கொண்டு, உன் கடமையை செய். 

உன் கடமையை என் நினைவோடு செய்து கொண்டிருந்தால், இந்த உடலை விட்டு பிரியும் போது,ஜீவ  ஆத்மாவாகிய உன்னை உடல் என்ற சம்பத்ததில் இருந்து நீக்கி, என்னுடன் சேர்த்து கொண்டு விடுவேன். மோக்ஷம் தந்து விடுகிறேன்" 
என்று சொல்கிறார்.

இதுவே நமக்கு பாடம்.

ரிஷிகள், ஞானிகள் இதை சொன்னாலும், தாங்கள் சன்யாசிகளாகவே வாழ்ந்தனர்.
"குடும்பத்தில் இருந்தாலும், அவரவர்கள் கடமையை ஒழுங்காக செய்து கொண்டு இருந்தாலும், ஆத்மா ஞானியாக (நான் ஆத்மா) இருப்பவனுக்கு, மோக்ஷம் கட்டாயம் கிடைக்கும்"
என்று நிரூபிக்க, தானே அவதரித்து, தன் கடமையை செய்து, வாழ்ந்து காட்டினார் பரமாத்மா நாராயணன்.


இதன் காரணத்தாலேயே பகவத் கீதத்தை அனைத்து ஹிந்துக்களின் சம்மதம் கொண்ட புனித நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வாழ்க ஹிந்து தர்மம்.

Friday, 1 February 2019

கும்பகோண சக்கரபாணி... சூரியன் ஏன் கோபம் அடைந்தார்?.. மக்களின் போக்கு எப்படி இருக்கிறது? தெரிந்து கொள்வோமே...

சூரிய தேவனுக்கு ஒரு சந்தர்ப்பத்தில், உலக ஜனங்களை பார்த்து, அடக்க முடியாத மஹா கோபம் வந்து விட்டது.
அதற்கு காரணம் இருந்தது.


உலக மக்களின் நடத்தையை, சாட்சியாக பார்த்து கோண்டே இருக்கும், சூரிய தேவன், ஜனங்களின் அட்டூழியங்களை கண்டு கோபத்தில்,
"நான் (சூரியன்) ஒருவன் உதிக்காது போனால், இந்த உலகில் இருப்பவர்களுக்கு பகல் தெரியுமா? மதியம் தெரியுமா? இரவு தெரியுமா?

நான் (சூரியன்) என் ஜோதி ஸ்வரூபமான கிரணங்களால் உலகை  பிரகாசப்படுத்தவில்லையென்றால் உலகமே இருண்டு கிடக்கும்.

நாள்,
ஏழு நாட்கள் சேர்ந்தால் ஒரு வாரம்,
15 நாட்கள் சேர்ந்தால் ஒரு பட்சம்.
30 நாட்கள் சேர்ந்தால் ஒரு மாசம்.
என்று காலத்தை இவர்கள் கணிப்பதே, நான் ஒருவன் இருப்பதால் தானே?

காலத்தை கணிக்கவே, நான் தானே காரணம்.
உலகத்தில் உள்ள அனைவரும்  காலத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.
நானோ காலத்தையே நிர்ணயிப்பவன்.
மற்ற க்ரஹங்கள் எல்லாம், என்னை தான் சுற்றி சுற்றி வருகிறது.
சுக்கிரன் சனீஸ்வரன் என்று அனைவரும் என்னை ஆச்ரயித்தவர்கள்.
ஞானியான ரிஷிகள், தினமும் விடியற் காலையில் எழுந்து ஸ்னானம், தியானம், அர்க்கியம் செய்வது, என் தரிசனத்திற்காக தானே!!.
என் கிரணங்களை ஒடுக்கி கொண்டு, நான் ஒருநாள் உதிக்காமல் இருந்து விடுகிறேன். பின்பு இந்த உலகம் எப்படி இருக்கிறது? என்று பார்க்கிறேன்.
நான் உதிக்காது போனால், எங்கும் இருள் சூழ்ந்து விடும்.

தினமும், அவரவர் கர்மாக்கள் (வேலை) நடப்பதற்காக அனைவரையும் எழுப்பி, அவரவர் காரியங்களை செய்வதற்கு உணர்ச்சி கொடுப்பதும் நான் தான்.
நான் அஸ்தமிக்கும் (மறையும்) போது, உலகத்தில் உள்ள அனைவரும் உணர்ச்சி அற்று போய், சோம்பேறிகள் ஆகி இருட்டில் செயலற்று படுத்து கிடக்கிறார்கள்.நான் ஒருவன் உதித்தால், உலகமே உணர்ச்சி பெறுகிறது. காரியங்கள் நடக்கிறது.

நான் ஒருவன் அந்த இடத்தை விட்டு மறைந்தால், உலகமே ஸ்தம்பித்து போய் இருட்டில் மூழ்குகிறது.

உலக காரியங்கள் நடப்பதே என்னால் தான்.

அனைவரையும், அவரவர்கள் செய்யும் பாவத்தையும், புண்ணியத்தையும் சாட்சியாக நான் பார்த்து கொண்டே இருக்கிறேன்.

என்னால் தான் இந்த ஜீவனுக்கு (செடி, விலங்கு,மனிதன் etc.,) ஆரோக்கியம் கிடைக்கிறது.

நான் என் கிரணங்களின் சக்தியை கொஞ்சம் குறைத்து கொண்டால் கூட, ஆரோக்கியம் இவர்களுக்கு கிடைக்காது.

இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஈஸ்வரன் நான் தான்.
நான் ஒருவன் இல்லையென்றால், உலகத்தில் உள்ளவனுக்கு கண் இருந்தாலும் தெரியாது.
கண் இருந்தும் குருடர்கள் போல வாழ வேண்டியது தான்.

இவர்களை பொறுத்தவரை நானே விஷ்ணு, நானே ப்ரம்மா, நானே ருத்ரன்.

நானே சர்வ தேவதையாகவும் இந்த உலகில் உள்ளவர்களுக்கு இருந்து காக்கிறேன்.

இப்படி இருந்தும், அஞானத்தினால் (மெய் அறிவு இல்லாத) இந்த உலக ஜனங்கள் என்னிடம் நன்றி இல்லாமல், என்னை அலட்சியம் செய்கின்றனர்.

என்னை, இந்த நன்றி கெட்ட ஜனங்கள் அலட்சியம் செய்வதை கூட, பொறுத்து கொண்டு போகிறேன் என்றாலும்,
இந்த கோரமான கலி யுகத்தில், இந்த ஜனங்கள் வேதத்தில் உள்ள எந்த தெய்வத்தை தான் மதிக்கிறார்கள்?
அனைத்து தெய்வங்களையும், இந்த நன்றி கெட்ட ஜனங்கள் அலட்சியம் செய்கிறார்களே?
இந்த கலியுகத்தில்,
ஒரு பிராம்மணனாவது, விடி காலையில் நான் உதிப்பதற்கே முன்பே எழுந்து, சந்தியா வந்தனம் செய்து, அர்க்கியம் கொடுக்கிறானா?

'இவன் அர்க்கியம் கொடுப்பான், பின்பு உதிப்போம்' என்று நான் காத்திருந்தால், எனக்கு விதிக்கப்பட்ட கால சக்கரம் படி, நேரத்துக்கு உதிக்க முடியுமா?

காலத்தில் சந்தியா வந்தனம் செய்து, அர்க்கியம் கொடுக்கும் ப்ராம்மணர்கள் குறைந்து விட்டனர்.

அர்க்கியம் கொடுக்கும் ப்ராம்மணனை விட, கொடுக்காதவர்கள் ஜாஸ்தி ஆகி விட்டனர்.
சந்தியா வந்தனமே செய்யாத பிராம்மணர் கூட்டம் ஜாஸ்தியாகி விட்டது. இந்த பிராம்மணன், காலை எழுந்தவுடன் தன் வயிற்றுக்கு ஏதாவது (காபி) சாப்பிடலாமா? என்று நினைக்கிறானே தவிர, ஒரு ஸ்நானம் செய்ய வேண்டும் என்று நினைப்பதே இல்லை.முதல் தீர்த்தமாக 'சூர்யஸ்ய மாமன்யுஸ்ச... ஸ்வாஹா' என்று சொல்லி, காலையில் முதலில் குடித்து விட்டு,
பிறகு வேறு எதையாவது குடிப்போம் என்று நினைப்பதில்லையே இந்த ப்ராம்மணர்கள்.

ப்ராம்மணர்கள், ப்ராம்மணர்களாக இல்லையே !!

கடமை தவறிய ப்ராம்மணர்களாக போய் விட்டார்கள் இவர்கள்.

ஒருத்தனும் சந்தியா வந்தனம் செய்வது இல்லை.
எனக்கு முன்பே எழுந்து அர்க்கியம் விட்டு, உதய காலத்தில் என்னை தரிசக்க இவர்கள் இருப்பதில்லை.

நான் உதித்தும் தூங்கி கொண்டு இருக்கின்றனர் இந்த ப்ராம்மணர்கள்.

க்ஷத்ரியனும் க்ஷத்ரியனாக இல்லை.
தான் தோன்றியாக எவன் எவனோ தன்னை ராஜா என்று சொல்லிக்கொள்கிறான்.
தர்மத்துக்காக உயிரே போனாலும் பரவாயில்லை என்று இருந்த க்ஷத்ரியர்கள் காணவில்லை.
அதர்மத்தை சமூகத்தில் கிளப்பி, புரளி புரட்சி செய்பவர்கள் இன்று க்ஷத்ரிய பொறுப்பை ஆக்கிரமிக்க போராடுகின்றனர்.

வைஸ்யனும் வைஸ்யனாக (business) இல்லை.
எந்த வியாபாரத்திலும் நேர்மை என்பதே துளியும் கிடையாது.

எங்கு பார்த்தாலும் தெய்வ நிந்தனை செய்யும் நாத்தீகர்களும், வேத ப்ராம்மணர்களை கிண்டல் செய்யும் ஜனங்களாகவே இருக்கின்றனர்.
எங்கு பார்த்தாலும் திருட்டு இருக்கிறது.
மது பானம் அருந்துவது, பொய் பேசுவது எங்கும் காணப்படுகிறது.

கொலை செய்வதும், பிறர் மனைவியை அபகரித்து அனுபவிப்பதும் மலிந்து விட்டது.
பெண்கள் தன் சுதந்திரமே லட்சியம் என்று இருக்கிறார்கள்.
'கணவனுக்கு நான் ஏன் கட்டுப்பட்டு இருக்க வேண்டும்?'
என்று கேட்கும் பெண்களே இருக்கிறார்கள்.

பெண்கள் கணவனுக்கு பணி செய்வது காணப்படவில்லை, ஆனால் வெளியில் சென்று தனத்திற்காக (பணம்) எவன் எவனுக்கோ பணி செய்கிறார்கள்.
பதி, பத்தினிக்கு சேவை செய்கிறான்.போன யுகம் வரை, அனைவருக்கும் "ஹரி" ஒருவரே லட்சியமாக இருந்தார். அனைவரின் வாயிலும் "ஹரி ஹரி" என்று நாமமே வந்தது.

இப்பொழுது உள்ள இந்த ஜனங்களுக்கோ, எப்பொழுதும் "தனம் தனம் தனம்..." என்று எப்பொழுதும் தியானம்.
"பணம் போதவில்லையே!!... போதவில்லையே!!...
எப்படி தனம் (பணம்) சம்பாதிக்கலாம்?,
எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம்?"
என்பது தான் இவர்கள் லட்சியமாக இருக்கிறது.

தனத்திற்காக பிசாசு போல அலையும் இவர்களுக்கு, அலங்காரமும் பிசாசு போல ஆகி விட்டது.
எங்கு பார்த்தாலும் தலை விரி கோலத்தில் பெண்கள் நடமாடுகிறார்கள்.
தலை முடியை வளர்த்து விரித்து வைத்தும்,
ராக்ஷஸர்கள் போல, நகத்தை வளர்த்து அதை கூர்மையாக சீவி கொண்டும், தன்னை அழகு படுத்தி கொள்வதிலேயே ஆர்வமாக அலைகிறார்கள்.
எல்லோருக்கும் 'தாடகை' போலவும், 'சூர்ப்பனகை' போலவும் வேஷம் போடுவதில் தான் ஆர்வமாக இருக்கிறார்கள்.
தாடகை வேஷம் போட்டு கொண்டு, தன் அலங்காரத்தை தானே ரசித்து கொள்கிறார்கள்.
சத்தியம் (உண்மை),

அஹிம்சை,
ஜீவ காருண்யம்,
ஏழைகளுக்கு கொடுத்து உதவுவது,
ஆசாரத்தில் (ஒழுக்கம்) திடமாக இருப்பது,
நேர்மையாக பேசுவது,
புண்ணிய கர்மங்களை செய்வது,
யாகங்கள் செய்து தெய்வங்களுக்கு நன்றி தெரிவிப்பது,
என்று எந்த நல்ல செயலும் இவர்களிடத்தில்  காணப்படவில்லையே, இந்த நன்றி கெட்ட ஜனங்களிடம் !! 

எங்கு பார்த்தாலும் சுய நலமே உருவான ஒழுக்கம் கெட்ட, தன் கடமையை மறந்த ஜனங்களாக போய் விட்டனர்.
இப்படி ஒழுக்கம் கெட்டு வாழும் இவர்கள், எப்படியாவது தர்ம வழியில் திரும்புவார்கள் என்று காத்து இருக்கும் போது,
கூரை பிய்ந்து போன குடிசையை, ஒரு யானை பிடுங்கி எறிவது போல,
வெளி மதங்கள், துர் மதங்கள் பிரச்சாரம் செய்து, வைதீக தர்மத்தை தாக்குகிறது.எல்லோரும் வைதீக ஆசாரங்களை விட்டு விலகுகிறார்கள்.
விசேஷமாக யாராவது சிகை வைத்து கொண்டு, கச்சம் கட்டிக்கொண்டு போனால், "ஓ ஹாய்..." என்று சிரித்து கேலி செய்கிறார்கள்.

அதிலும் யாராவது, நெற்றியில் திருமண் காப்பு இட்டுக்கொண்டு போனால் கேட்க முடியாத கிண்டல் கேலி செய்கிறார்கள் இந்த ஜனங்கள்.
இந்த அதர்மத்தை இனியும் என்னால் சகிக்க முடியாது...
அதனால், நான் இந்த ஜகத்தை முழுவதையும் அழிக்க போகிறேன்."
என்று கோபம் அடைந்தார் சூரிய தேவன்.

அக்ஷ ரேகையை அமைத்து,
'இந்த எல்லையை தாண்டவே கூடாது' என்று பகவான் வாசுதேவன் அனைத்து தேவர்களுக்கும் அவரவர்களுக்கு ஒரு எல்லையை விதித்து உள்ளார்.

வாயு பகவானுக்கு ஒரு எல்லையை பரமாத்மாவான வாசுதேவன் வகுத்து கொடுத்துள்ளார்.
"அதை தாண்டி வர கூடாது" என்று கட்டளை இட்டுள்ளார்.
எவ்வளவு தேவையோ, அந்த அளவு தான் காற்று வீச வேண்டும் என்று விதித்து உள்ளார்.
அதே போல,
சூரிய தேவனுக்கும் ஒரு எல்லை வகுத்து உள்ளார் பகவான்.
"பீஷோதேதி சூர்ய:" என்று வேதம் சொல்கிறது.
"சூரிய தேவன் ஜகத்காரணமான (உலகை படைத்த) பரமாத்மாவுக்கு பயந்து, தன் அக்ஷ ரேகையை தாண்டி வராமல் எப்பொழுதும் இருக்கிறார்" 
என்கிறது வேதம்.

வேதம்:
பீஷாஸ்மாத் வாதப்பவதே, பீஷோ தேதி  சூர்யா:
பீஷாத் தே அக்நி சேந்த்ரிஸ்ச மிருத்யுத் தாவதி பஞ்சம:

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பகவான் இட்ட கட்டளையை மீறியதே இல்லை சூரிய தேவன்.

நன்றி கெட்ட ஜனங்களின் நடத்தையை சாட்சியாக பார்த்து, பொறுத்து கொள்ள முடியாமல், பகவான் இட்ட கட்டளையையும் இன்று மீறி விட்டார் சூரிய தேவன்.

ஈஸ்வரன் ஆணையை மீறி விட்டார்.

இப்படி கோபம் கொண்ட சூரிய தேவன், ஒரு சங்கராந்தி அன்று, தன் அக்ஷ ரேகையை (எல்லையை) மீறி கொஞ்சம் நகர்ந்து பூமி அருகில் வந்து விட்டார்.

பூ மண்டலம் முழுவதும் ஒரே வெப்பக்காற்று வீசியது.
உதய சூரியன், அன்று எதிர்பார்க்காத வெப்பதுடன் தக தகவென்று உதித்தார்.

வெப்பம் தாங்கவில்லை. 
எங்கு பார்த்தாலும் வெயில் சுட்டெரித்தது.
ஜனங்கள் வெப்பம் தாளாமல் 'ஆஆ..: என்று பரிதவித்தார்கள்.

ஏரி குளங்கள், கிணறுகள் எல்லாம் வற்றி போனது.
காவிரி நதியே வற்றி போனது.

பசுக்கள், பக்ஷிகள், தாவரங்கள் எல்லாம் தண்ணீர் இல்லாமல் சாக ஆரம்பித்தது.

ஜனங்களின் வாழ்க்கை ஒரே நாளில் அஸ்தமிக்கும் நிலை வந்தது.
ஜனங்கள் பரிதவிப்பை ரிஷிகள் பார்த்தனர்.

ரிஷிகள் எப்பொழுதும் மத்யஸ்தர்கள்.

ஸ்ரீவத்ச கோத்திரத்தில் வந்த ஹேம ரிஷிக்கு,
பெண்ணாக மஹாலக்ஷ்மியே "கோமளவள்ளியாக" அவதாரம் செய்தாள் கும்பகோணத்தில்.
மஹாவிஷ்ணுவே ஸ்வயமாக பூலோகம் வந்து கோமளவள்ளியை திருக்கல்யாணம் செய்து கொண்டார்.
ஹேம ரிஷி 'மாப்பிள்ளையாக இங்கேயே தங்குங்கள்' என்று பிரார்த்திக்க,
சாரங்கபாணியாக கையில் வில்லுடன் ராஜாவாக வைகுண்டம் கிளம்பலாம் என்று கிளம்பியவர், கும்பகோணத்திலேயே தங்கி இருந்தார்.

சூரிய தேவனின் கோபத்தால், உலகம் அழிந்து விடும் என்று பார்த்த ரிஷிகள், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணியை சரண் அடைந்தனர்.

ரிஷிகள், சாரங்கபாணி பெருமாளை பார்த்து,
"ஹே சாரங்கபாணி !
உலகை காப்பதற்காக தானே நீங்கள் கல்யாண மூர்த்தியாக கோமளவள்ளி தாயாருடன் இங்கு வீற்று இருக்கிறீர்கள்.

சூரிய தேவன் ஜகத்தை கொளுத்தி விடுவார் போல இருக்கிறதே !!

சூரிய தேவனை எப்படியாவது நீங்கள் தான் சமாதானம் செய்ய வேண்டும்"
என்று பிரார்த்திக்க,
பகவான், சூரியனை அடக்க, உடனே தன் சக்கரத்தோடு, சக்கரராஜனாக கிளம்பினார்.

சூரியன் எதிரில் சக்கரபாணியாக  வந்ததும், தாங்க முடியாத கோபத்தில் இருந்த சூரியன் உடனே சமாதானம் அடைந்தார்.

'பகவான் ஆணையை மீறி அக்ஷ ரேகையை தான் தாண்டியது, பகவானுக்கு சம்மதம் ஆகாது'
என்று உணர்ந்த சூரிய தேவன், தன் அபராதத்தை உணர்ந்து,
கையில் சக்கரம் ஏந்திய விஷ்ணு பகவானை சரண் அடைந்தார்.

சூரிய தேவன், சக்கரபாணியான விஷ்ணுவை நமஸ்கரித்து,
"ஹே சக்கரபாணி,
உங்கள் தேஜஸுக்கு முன், என் தேஜஸ் எந்த மூலை?
சூரியனான எனக்கு முன் கற்பூரம் ஏற்றினால் ஒரு சிறு புகை போல இருக்கும்.
அது போல,
உங்கள் தேஜஸுக்கு முன்னால் நான் ஒரு சிறு கற்பூரம் போல உள்ளேன்.
உங்களை மிஞ்ச என்னால் முடியாது.

லோகத்தில் உள்ளவர்கள் அதர்ம மயமாகி விட்டார்களே!!
ஒழுக்கம் கெட்ட பாஷண்டிகள் ஆகி விட்டார்களே!!
என்று எனக்கு ஒரு கோபம் வந்து விட்டதே தவிர, உங்களுக்கு இல்லாத பொறுப்பு எனக்கு என்ன வந்து விட போகிறது? 


நீங்கள் இப்படி தான் உலகம் இருக்க வேண்டும் என்று சம்மதித்தால் நான் என்ன செய்ய முடியும்?"
என்று சூரியன் சொல்ல,
சக்கரபாணியாக உள்ள பகவான் சூரிய தேவனை பார்த்து,
"அப்படி இல்லை சூரிய தேவா!!
யார் என்ன அநியாயம் செய்தாலும், நாம் பொறுமையாக தான் போக வேண்டும்.

உலக ஜனங்கள் என்ன அதர்மம் செய்தாலும் அது நம்மை தாக்காது.
ஆனால்,
தேவர்களான நாம் சிறிது கோபம் அடைந்தாலும், உலகமே நாசமாகும்.

வாயு பகவான் சிறிது கோபம் அடைந்தால் கூட, கடுமையான புயல் கிளம்பி விடும்.

100 வருடங்கள் மேல் இருக்கும் மஹா வ்ருக்ஷங்களையும் (மரங்கள்) வேரோடு தூக்கி எறிந்து விடுவார் வாயு பகவான்.

வாழை தோட்டம், தென்னை மரங்கள் எல்லாம் வாயு பகவான் கொஞ்சம் கோபப்பட்டால் கூட ஒரு சில மணி நேரத்தில் அழித்து விடுவார்.
தேவர்கள் சீற்றம் அடைந்தால், ஜனங்கள் என்ன செய்ய முடியும்?

தெய்வங்கள் தன் எல்லையை மீறாமல் இருந்தால் தானே மக்கள் வாழ முடியும்.

காவிரி அணை உடையும் அபாயம் இருந்தால் கூட, ஆயிரம் பேர் சேர்ந்து முயற்சி செய்து அணை உடையாமல் காப்பாற்றலாம்.
கடல் பொங்கினால்? அணை போட்டா கடலை தடுக்க முடியும்?

கடல் (நீர்), காற்று, அக்னி, பூமி, ஆகாயம் என்று அனைத்தும் அதன் அதன் எல்லையில் மௌனமாக இருக்கிறது.

பஞ்ச பூதங்களுக்கு தேவதைகளான நீங்கள் அனைவரும் சர்வேஸ்வரனான என் ஆணைக்கு கட்டுப்பட்டு இருக்கிறீர்கள்.

நாம் பொறுமையாக தான் இருக்க வேண்டும்.
கோபம் நமக்கு வரத்தான் செய்யும்.
ஜனங்கள் செய்யும் அட்டூழியங்களை கண்டால், கோபம் வரத்தான் செய்யும்.
இவர்களின் அட்டூழியம் நம்மை ஒன்றும் செய்து விடாது.
ஆனால்,
நம்முடைய கோபம் அனைவரையும் நொடி பொழுதில் அழித்து விடும்.
அதனால் நாம் பொறுமையாக தான் போக வேண்டும்.

பொதுவாக இரண்டு பேர் பொறுமையாக தான் இருக்க வேண்டும்.
ஒன்று தேவர்கள்.
மற்றொருவர் பூதேவர்கள் (பூலோகத்தில் உள்ள வேத ப்ராம்மணர்கள்)

தேவர்களும் கோபம் கொள்ள கூடாது.
வேதப்ராம்மணனும் கோபம் கொள்ள கூடாது.
வேதப்ராம்மணனை கண்டால், பொறாமை கொண்ட ஜனங்கள் 'கல்லையே எரிந்தாலும், திட்டினாலும், கேலி செய்தாலும்' செய்யட்டுமே என்று இருக்க வேண்டும்.
காரணம்,
வேத ப்ராம்மணனை கேலி செய்து, "ஹே குடுமி" என்று கேலி செய்து கிண்டல் செய்தாலும், அவர்கள் கொடுக்கும் சாபம் எதுவுமே வேத ப்ராம்மணனை ஒன்றும் செய்யாது. பலிக்கவும் செய்யாது.
ஆனால்,
பூரணமாக வேதம் அத்யயணம் செய்து,
சந்தியாவந்தனம் தினம் மூன்று வேளையும் செய்து,
விஷ்ணு பூஜை தினமும் செய்து கொண்டு,
பிராம்மண லக்ஷணத்துடன் குடுமி, கச்சம் அணிந்து,
உள்ளும், புறமும் ஒழுக்கத்துடன் இருக்கும் ஒரு பிராம்மணன், கிண்டல் செய்பவனையோ, அதர்மம் செய்பவனையோ கண்டு,
மனம் குமுறி, ஏதாவது சொல்லி விட்டான் என்றால் அது நிச்சயமாக பலித்து விடும்.

பூதேவர்களான வேத பிராமணர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்பது போல, தேவர்களும் பொறுமையாக தான் போக வேண்டும்.

இருவருக்கும் பொறுமையே அழகு. பொறுமையே பூஷணம்.

ஏன் இப்படி அதர்மமாக இருக்கிறார்கள்? என்று கேட்டால், அவர்கள் மூர்க்க புத்தியே இதற்கு காரணம்.

மூடர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று தேவர்களும், பூதேவர்களும் பொறுமையாக போக வேண்டும். கருணையே செய்ய வேண்டும்.

அதர்மம் 'புத்தியில்' இருப்பதாலேயே இப்படி அதர்மம் ,
செய்கிறார்கள், கிண்டல் செய்கிறார்கள்.பூதேவர்களும், தேவர்களான நீங்களும் தர்மம் உணர்ந்தவர்கள்.

நீங்கள் தர்மத்தில் இருந்து கொண்டே, அதர்ம புத்தியை பொறுமையாலும், கருணையாலும், நல்ல உபதேசத்தாலும் திருத்தி தார்மீக வழியில் மாற்ற வேண்டும்.

கருணை செய்வதே நம் ஸ்வபாவம் என்று நீங்கள் இருக்க வேண்டும்."
என்றார் பகவான்.

சூரிய தேவன், பெருமாளை பார்த்து,
"அப்படியென்றால், நாம் பொறுமையாகவே போவோம், அவர்கள் பாபங்கள் செய்து கொண்டே இருக்கட்டும் என்று சொல்கிறீர்களா?
நாம் பொறுமையாகவே இருக்கிறோம். ஆனால் அவர்கள் பாபம் குறைய, நல்வழியில் திரும்ப வழி இல்லையா?

கலியில் உள்ள இந்த ஜனங்கள் மஹாபாபத்தை செய்கிறார்களே!!

செய்யக்கூடிய தர்ம காரியங்களை விட்டு விட்டு,
செய்ய கூடாத அதர்ம காரியங்களை தான் தோன்றி தனமாக செய்து கொண்டு, இருக்கிறார்களே!!
இதற்கு என்ன தான் பரிகாரம்?"
என்று சூரியதேவன் கேட்க,

உடனே பகவான்,
"நான் சாரங்கபாணியாக இங்கே இருப்பது போல, சூரிய தேவனான உன் நிமித்தமாக சக்கரபாணியாகவும் அர்ச்ச அவதாரமாக இங்கேயே இருக்க போகிறேன்."
என்றார் பெருமாள்.

கும்பகோணத்தில், நாராயணனே சாரங்கபாணியாகவும், சக்கரபாணியாகவும் உள்ளார்.
சூரியனுடைய கர்வத்தை அடக்குவதற்காக சக்கரபாணியாக வந்த பெருமாள்,
"சங்கராந்தி புண்ய காலத்தில், காவேரி ஸ்நானம் செய்து,
கும்பகோண க்ஷேத்ரம் வந்து, சக்கரபாணியான என்னை யார் தரிசிப்பார்களோ,
அவர்களுக்கு ப்ரம்மஹத்தி முதல் சர்வ பாபங்களும் போய் விடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக,
என் நாமத்தை சங்கீர்த்தனம் செய்பவர்களுக்கும் சர்வ பாபமும் போய் விடும்.
யார் "சாரங்கபாணே ஜகன்னாதா சங்கு சக்ர கதாதரா" என்று என் நாமத்தை சங்கீர்த்தனம் செய்வார்களோ!
அவர்களுக்கு சர்வ பாபமும் போய் விடும்.

என்னுடைய அணுகிரஹத்தால்,
அதர்மத்தில் இருந்து தானே விலகுவார்கள்"
என்று எம்பெருமான் சொல்ல, சூரிய தேவன் சமாதானம் அடைந்தார்.

இந்த எம்பெருமானிடம் ஆழ்வார்கள் மிகவும் அதிகமாக ஈடுபட்டுள்ளார்கள்.

பெரியாழ்வார் திருமொழியில், சக்கரபாணியை "பால கோபாலனாக" நினைத்து வழி படுகிறார்.
பாசுரம்:
தூநிலா முற்றத்தே போந்து விளையாட
வானிலா அம்புலீ
சந்திரா வாவென்று
நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம்
கோநிலாவக்கொட்டாய் சப்பாணி
குடந்தைக்கிடந்தானே. சப்பாணி

சிறு குழந்தைகளுக்கு, பெற்ற தாயார்,
"கிருஷ்ணா ராமா கோவிந்தா, ராமா கிருஷ்ணா கோவிந்தா" என்றும்,
"ஏழு மலையானுக்கு கோவிந்தா கோவிந்தா" என்றும்
சொல்லி கொடுத்து, கை தூக்கி, கை கொட்டி ஆனந்தமாக பஜனை செய்ய பழக்குவாள்.
ஒரு பாரத பெண்மணி இப்படி தானே தன் குழந்தையை வளர்ப்பாள்.

ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார், சக்கரபாணியை குழந்தை கண்ணனாக பாவித்து பாடுகிறார்.
சக்கரபாணி கோவிலில் ஆண்டாள் சன்னதி அருகே விசாலமான முற்றம் இருப்பதை பார்த்து, யசோதை கண்ணனை தாலாட்டியது எண்ணத்தில் உதிக்க, அதையே பாசுரமாக பாடுகிறார்.


யசோதை தன் குழந்தை,  கண்ணனை மடியில் உட்கார வைத்து கொண்டு,
கை கொட்டு சொல்லி தருகிறாளாம்.

கண்ணனோ துறு துறுவென்று இருப்பானாம். அங்கும் இங்கும் தவழ்ந்து முற்றம் முழுவதும் தூணை சுற்றி சுற்றி விளையாட போவானாம். (தூநிலா முற்றத்தே போந்து விளையாட)

உலகத்திற்கே மூலப்பொருளான பரமாத்மா, அறியா குழந்தை போல, முற்றத்தில் தெரியும் நிலாவை பார்த்து, தளிர் நடை (சப்பாணி) நடந்து, வானில் தெரியும் அம்புலியை,
சந்திரனை "வா"வென்று என்று அழைக்கிறானாம்.

அனைத்தும் அறிந்தவன், ஒன்றும் அறியாதவன் போல, தளிர் நடை நடந்து நிலாவை பார்த்து கை கொட்டி ஆனந்த படும் ஆச்சர்யத்தை, சர்வேஸ்வரன் சக்கரபாணி (சப்பாணி) பெருமாளிடம் மட்டுமே பார்க்கலாம்.
குடந்தையில் பால கோபாலனாக தளிர் நடை நடக்கும் சக்கரபாணியை காண வாருங்கள் என்று நம்மையும் அழைக்கிறார் பெரியாழ்வார். (குடந்தைக்கிடந்தானே)

கும்பகோணம் என்ற குடந்தைக்கு சென்று அனைவரும் "சாரங்கபாணியையும், சக்கரபாணியையும்" தரிசிப்போம்.

HARE RAMA HARE KRISHNA - BHAJAN


sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka  Saturday, 24 November 2018

ஞானத்தை விட அன்பு உயர்ந்தது ராமாயணத்தில் நடந்த ஒரு சம்பவம்.

தெய்வத்திடம் ஏற்படும் ப்ரேமையை (அன்பை), ஞான உபதேத்தால் வீழ்த்தவே முடியாது.
பிரேமை (அன்பு) தான் ஜெயிக்கும்.


இதற்கு சான்றாக ராமாயணத்தில் ஒரு சம்பவம் நடந்தது.

தசரத மகாராஜனை காண, விஸ்வாமித்ரர் அயோத்தி வந்தார்.

ப்ரம்ம ரிஷியான விஸ்வாமித்ரர் வருகையினால் சந்தோஷப்பட்டு,
"தங்கள் ஆணைக்கு காத்து கொண்டு இருக்கிறேன். உங்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்"
என்று சொல்லி சபைக்குள் அழைத்தார் தசரதன்.
விஸ்வாமித்ரர் மிகவும் சந்தோஷப்பட்டார்.
"தசரதா, எங்களை போன்ற ரிஷிகளுக்கு உலக தேவைகள் எதுவும் கிடையாது.
எங்களுக்கு ஏற்படும் தேவையை, ஒரு கஞ்சனிடம் சென்று கேட்கும் நிலையை ஈஸ்வரன் எங்களுக்கு கொடுப்பதில்லை.

எங்களை தரிசிக்கும் ஆவல் கொண்ட, எங்களுக்கு ஏதாவது உண்மையாக கொடுக்க ஆசைப்படுபவர்களிடம் மட்டுமே, எங்களை ஈஸ்வரன் அனுப்புகிறார்.

இந்த உலகத்திலேயே உன்னை போன்ற கொடையாளி கிடையாது என்று அறிவேன். நீ ப்ரம்மத்தை உணர்ந்தவன், சத்யம் தவறாதவன் என்றும் அறிவேன்.

இந்த நற்குணங்கள் உன்னிடம் இயற்கையாகவும், பரம்பரை பரம்பரையாகவும் உள்ளது.
மேலும் ப்ரம்ம ரிஷியான வசிஷ்டர் உனக்கு குல குருவாகவும், உன் வீட்டு புரோகிதராகவும் இருக்கிறார் என்பதும் உன் பெருமையை காட்டுகிறது.

நான் வந்த விஷயத்தை சொல்கிறேன்.
நானும், என்னோடு பல ரிஷிகளும் சேர்ந்து,  ஸித்தாஸ்ரமத்தில் யாகம் செய்கிறோம்.

பல நல்ல காரியங்களுக்காகவும், உலக நன்மைக்காகவும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ராக்ஷசர்கள் நடமாட்டம் அங்கு உள்ளது.
ராக்ஷசர்கள் நர மாமிசம் சாப்பிடுபவர்கள்.
இதனால் அங்கு இருக்கும் சாதுக்கள் நடமாட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.
இந்த கஷ்டத்தை போக்கி, அங்கு இருக்கும் சாதுக்களுக்கு உபகாரம் செய்ய வேண்டியது, தசரத ராஜனான உன் கடமை."
என்று சொல்லிக்கொண்டே, அங்குமிங்கும் கண்களால் ஒரு நோட்டமிட்ட விஸ்வாமித்ரர்,
"அதோ, அங்கு அழகான குடுமியுடன், நின்று கொண்டிருக்கும் உன் மூத்த மகன் 'ராமனை' என்னுடன் அழைத்து கொண்டு போய், யாகம் பூர்த்தி ஆனவுடன் திருப்பி உன்னிடமே கொண்டு வந்து விடுகிறேன்."
என்று சொல்லி முடித்தார்.

ராமன் என்ற பெயரை விஸ்வாமித்ரர் சொன்ன பிறகு, தசரதன் அதற்கு பிறகு அவர் சொன்னதை கவனித்தாரா? என்று கூட தெரியவில்லை.

"ஆகா ! காத்துக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு சேவை செய்ய ராமனை உடனே அனுப்புகிறேன்" என்று சந்தோஷமாக சொல்ல வேண்டாமோ?

"இந்த ராக்ஷஸர்களை நீங்களே சபித்து விடலாமே !
உலக நன்மைக்காக யாகம் செய்கிறீர்கள்.
நர மாமிசம் சாப்பிடும் இந்த ராக்ஷர்களை சபிப்பதும் கூட உலக நன்மை தானே?
உங்கள் தவ சக்தியால், வரும் ராக்ஷஸர்களை ஒவ்வொருத்தராகவோ, மொத்தமாகவோ பொசுக்கி விடலாமே?"
என்றார் தசரதர்.

"சபிப்பது பற்றி என்னை விட யாருக்கு தெரியும், தசரதா?
கோபப்பட்டு சபிப்பதில் எனக்கு இஷ்டமில்லை.
பொறுமையாகவே நான் இருக்கிறேன்.
எவ்வளவுக்கெவ்வளவு நான் பொறுமையை கடைபிடிக்கிறேனோ, அதை பார்த்து மற்றவர்கள் எனக்கு சக்தி இல்லையோ என்று நினைக்கின்றனர்.

கோபம் ஏற்படுவதால் பல தோஷங்கள் ஏற்படுகிறது.
கோபத்தை கட்டுப்படுத்தி, பொறுமையை கடைபிடிப்பதால், ஒரே ஒரு தோஷம் மட்டுமே ஏற்படுகிறது.

கோபத்தினால் பகை, அடிதடி, கொலை, என்று பல தோஷங்கள் ஏற்படுகிறது.

கோபத்தை அடக்கி பொறுமையை கடைபிடித்தால், ஒரே ஒரு தோஷம் மட்டுமே ஏற்படுகிறது.

அந்த தோஷம் எதுவென்றால், கோபமே இல்லாமல் பொறுமை காக்கும் கணவனை, 'அவன் பத்தினி கூட மதிக்க மாட்டாள்', என்பது தான்.

கோபமே கொள்ளாமல், பொறுமை காப்பவனிடம் ஏற்படும் ஒரே தோஷம் "உலகம் இவனை மதிக்காது" என்பது மட்டுமே.

கோபத்தினால் பல தோஷங்களை ஏற்றுக்கொள்வதற்கு பதில், 'மற்றவர்கள் மதிக்காமல் போனால் போகட்டுமே' என்று ஒரே ஒரு தோஷத்தை ஏற்றுக்கொண்டதால், பொறுமையை கடைபிடிக்கிறேன்.

அதுவும் தவிர,
'ப்ராம்மணனுக்கு' பொறுமையே லக்ஷணம்.
'க்ஷத்ரியனுக்கு' வீரமும், அதர்மம் செய்பவர்கள் மீது கோபமும் லக்ஷணம்.

நான் ப்ராம்மண தர்மத்தின் படி, பொறுமையை கடைபிடிக்கிறேன்.

நாங்கள் செய்யும் தவம், உலக நன்மையை நோக்கியே தவிர, சபிப்பதற்காக இல்லையே !

கோரமான தபசு செய்து, அதன் சக்தியை வேறொரு நல்ல காரியங்களுக்கு பிரயோகம் செய்ய இருக்கும் போது, அதை சபித்து விரயம் செய்ய விரும்பவில்லை.

நான் பொறுமையாக இருப்பதை பார்த்து, ராக்ஷசர்கள் 'எனக்கு சக்தி இல்லை' என்று நினைத்து அட்டகாசம் செய்கின்றனர்.

இந்த ராக்ஷர்களை சபித்து அழிக்கும் சக்தி இருந்தும், நான் ஏன் உன்னிடம் வந்து உதவி கேட்கிறேன்? என்று நினைத்தாய் என்றால், அதற்கு காரணம் உள்ளது.

யாகம் செய்வது உலக நன்மைக்காக.
அந்த பிரதேசமும் உன் ராஜ்யமாக உள்ளது.

உன் ராஜ்ஜியத்தில் 'ராக்ஷசர்கள் நடமாடும் இடமும் இருக்கிறது' என்பதை நீ கவனிக்க வேண்டாமா?

தேவர்களுக்கு அசுரர்களால் ஆபத்து என்றவுடன், சொர்க்க லோகம் சென்று உதவி செய்கிறாய்.
இந்த மனுஷ்ய லோகத்தில், உன் ராஜ்யத்தில், ராக்ஷஸர்கள் ரிஷிகளை நர மாமிசமாகவே அடித்து சாப்பிட்டு விடுகின்றனர்.

துஷ்டர்களை நிக்ரஹம் செய்வதும் (தீயவர்களை அடக்குவதும்),
சிஷ்டர்களை பரிபாலனம் செய்வதும் (நல்லவர்களை காப்பதும்) ஒரு அரசனின் கடமை.

உன் கடமையை நினைவு மூட்ட வந்தேனே தவிர, புகார் சொல்வதற்கு வரவில்லை.

ராக்ஷஸர்களை அடக்கி, ரிஷிகளை காக்க வேண்டியது உன் கடமை.

அந்த கடமையை நிறைவேற்ற நீ ராமனை என்னுடன் அனுப்பு. ராமனே இந்த காரியத்தை செய்யத்தக்கவன்.
உன் மகன் ராமன் உனக்கு எத்தனை அருமை என்று எனக்கு தெரியாதா!
பலவித ஷ்ரேயசை ராமனுக்கு செய்து அனுப்புவேன். என்னுடன் அனுப்பு."
என்றார் விஸ்வாமித்ரர்.


தசரதர் பதில் சொல்லாமல் இருந்தார். மேலும் நினைத்தார்,
"இவர் ஆஸ்ரமத்தில் என்ன சௌகரியம் இருந்து விட போகிறது?

நான் என் குழந்தையை வேளை தவறாமல் பார்த்து பார்த்து பாலும் பழமும் கொடுத்து, தாலாட்டி லாலனை செய்கிறேன்.

ஒரு வசதியும் இல்லாமல், இவர் என் குழந்தையை காட்டுக்கு அழைத்து கொண்டு போகிறேன் என்று சொல்கிறாரே?
அது மட்டுமில்லாமல், என் குழந்தையை ராக்ஷசர்களிடம் சண்டைக்கு அனுப்புவேன் என்று வேறு சொல்கிறாரே?

என் குமாரனுக்கு இவர் என்ன ஷ்ரேயஸ் (நன்மை) செய்து விட போகிறார்?
எனக்கு இல்லாத அக்கரை இவருக்கு இருக்கப்போகிறதா?"
என்று நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்தார்.

தசரதன் பேசாமல் இருப்பதை பார்த்து, விஸ்வாமித்ரர்,
"இவன் என் குழந்தை. இவனுக்கு ஒன்றும் தெரியாது என்று நீ நினைக்கலாம்.
இந்த ராக்ஷசர்களை ராமன் எதிர்க்க முடியுமா? என்று நீ யோசிக்கிறாய்.
நான் சத்தியமாக சொல்கிறேன், ராக்ஷசர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்.
அப்பேர்ப்பட்ட சக்தியுள்ளவன் உன் மகன். நீ கவலையே படவேண்டாம்"
என்றார் விஸ்வாமித்ரர்.

விஸ்வாமித்ரர் சொல்வது கொஞ்சம் கூட தசரதனுக்கு புரியவில்லை.

தசரதன் பார்வைக்கு 12 வயது ஸ்ரீ ராமன் குழந்தையாகவே தெரிந்தார்.

"ஸ்வாமி, என் குழந்தையை பற்றி உங்களுக்கு தெரியாது போல இருக்கிறது.
என் குழந்தை சாயங்காலம் விளையாடி கொண்டிருப்பான். விளையாடி விட்டு, அரண்மனைக்குள் வரும் போது, உள்ளே வரும் பாதை சிறிது வெளிச்சம் குறைவாக இருக்கும்.
இருட்டாக உள்ளதே என்று உள்ளே வர பயந்துகொண்டு, வாசலில் நின்று கொண்டே, 'அம்மா, அம்மா..' என்று துணைக்கு அழைப்பான் என் குழந்தை.
அவன் தாயார் வந்து கூட்டி கொண்டு உள்ளே செல்வாள்.
என் குழந்தையை பற்றி எனக்கு தெரியாதா?, ஸ்வாமி.
நீங்கள் ராக்ஷஸர்கள் முன் சண்டைக்கு கூட்டி சென்றால், பயப்படுவான், ஸ்வாமி"
என்றார்.

விஸ்வாமித்ரர், தசரதனை பார்த்து,
"தசரதா ! நம் குழந்தை தானே, நம் குழந்தை தானே என்று பார்க்காதே.
நீ ராமனை 'என் குழந்தை' என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறாய்.
குழந்தை என்று பார்த்தால், உனக்கு குழந்தையாக தான் தெரிவான்.
வேறு த்ருஷ்டியால் பார்த்தால் தான், ராமனின் பெருமை புரியும்.

'குழந்தையாக இருந்து உன்னை சுகப்படுத்த வேண்டும்'
என்று ராமன் சங்கல்பித்ததால் தான், உனக்கு அப்படி ஒரு அனுபவம் தோன்றுகிறது.

அப்படியே ஒன்றும் தெரியாத குழந்தை என்றாலும், எத்தனை நாள் இப்படியே வீட்டுக்குள் பூட்டி வைப்பாய்?

குழந்தைகளை நாலு பேருடன் பழக விட வேண்டும்.
துணிந்து வெளி உலகத்தை பார்க்க அனுப்ப வேண்டும்.
நாலு இடத்துக்கு போனால் தான் அந்த குழந்தைக்கும் சாமர்த்தியம் வருமே தவிர, வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்தால், மகா மக்காக ஆகி, நம் காலையே சுற்றிக்கொண்டு இருப்பான்.

உன் குழந்தை என்று நீ பார்த்தாலும், நீ அவனுக்கு வில் ஆயுதம் கற்று கொடுத்துள்ளாய். கல்வி மட்டும் போதுமா?
அதை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்தினால் தானே கல்வியின் பயனை அவன் அனுபவிப்பான்.
ராமனை என்னோடு அனுப்பு.

மேலும்,
தசரதா ! உன் பிள்ளையை பற்றி உனக்கு தெரியாது. எனக்கு தெரியும்.

ஜடா முடியுடன் இருக்கும் நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, ரத்ன கிரீடம் அணிந்து இருக்கும் நீ புரிந்து கொள்ள முடியாது.

ஞான யஞ்யம் செய்ய கூடிய நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, புத்ர காமேஷ்டி யாகம் செய்யும் நீ புரிந்து கொள்ள முடியாது.

காய்ந்த இலைகளை உண்டு, தவம் செய்யும் நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, ராஜ போஜனம் செய்யும் நீ புரிந்து கொள்ள முடியாது.

தர்பாஸனத்தில் அமர்ந்திருக்கும் நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் நீ புரிந்து கொள்ள முடியாது.

ஒரு குருவை உயர்ந்த ஆசனம் கொடுத்து, அவருக்கு கீழே அமர்ந்து உபதேசம் கேட்க வேண்டியிருக்க, வசிஷ்டர் போன்ற குருவை கீழே ஆசனம் கொடுத்து அமர செய்து, அவரை விட உயர்ந்த ஆசனத்தில் ராஜா என்று உட்கார்ந்திருக்கும் நீ புரிந்து கொள்ள முடியாது.

ராஜ யோகியான நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, ராஜ போகியான நீ புரிந்து கொள்ள முடியாது.

உன் நிலை வேறு, என் நிலை வேறு.

நீ ஊனக் கண்ணால் பார்க்கிறாய். நான் ஞான கண்ணால் (சாஸ்திர அறிவை கொண்டு) பார்க்கிறேன்.
வேதத்தின் பிரமாணத்தை கொண்டு, உன் பிள்ளை 'ராமன்' பரமாத்மா என்று தெரிந்து கொண்டேன்.
வேதமே வழிபடும் பரமபுருஷன் தான் உன் மகனாக பிறந்து இருக்கிறான் என்றும் அறிகிறேன்.

உன்னை பொறுத்தவரை, மிகவும் அழகாக இருக்கிறான் என்பதால், "ராமன்" என்று பெயர் வைத்தோம் என்று நினைத்து இருப்பாய்.

யோகிகள் எந்த பரப்ரம்மத்தை நோக்கி ரமிக்கிறார்களோ அந்த பரப்ரம்மம் தான் 'ராமனாக' அவதரித்து உள்ளார் என்று தெரிந்து கொள்.

இந்த ராமன், யோகிகளை ரமிக்க செய்கிறான் என்பது உன் சபையை பார்த்தாலே நீ புரிந்து கொள்ளலாம்.

போரில் புறமுதுகிட்டு ஓடாத, போர் திறன் மிக்கவன் ராமன் என்று உணர்த்த 'சத்ய பராக்ரமன்' என்று பெயர் வைத்து இருப்பாய்.

ஸ்ருஷ்டி (படைத்தல்),
ஸ்திதி (காத்தல்),
சம்ஹாரம் (அழித்தல்)
என்ற மூன்றும், உலகில் எப்பொழுதும் சத்தியமாக நிகழ்ந்து கொண்டே இருக்க செய்யும், பராக்ரமம் (திறமை) மிகுந்த பரம்பொருள், ராமனாக பிறந்ததால் தான், இவனுக்கு 'சத்ய பராக்ரமன்' என்றும் பெயர் உள்ளது என்று நீ அறிய மாட்டாய்.

இந்த ராமனின் பெருமையை நீங்கள் மட்டும் தான் அறிவீரோ? என்று நீ நினைத்தால், சொல்கிறேன் கேள்.
உன் சபையில் குலகுருவாக இருக்கும் 'வஷிஷ்டருக்கும்' இது தெரியும்.

தசரதா ! உன் குலகுருவாக இருக்கும் வஷிஷ்டருக்கும், எனக்கும் மட்டும் தான் தெரியும் என்று நினைத்து விடாதே.
உன் சபையில் குழுமி இருக்கும் அனைத்து ரிஷிகளுக்கும் தெரியும், ராமன் பரப்ரம்மம் என்று.

மேலும் கேள் தசரதா.
பொதுவாக, ரிஷிகள் காடுகளில் தவம் செய்து கொண்டிருப்பவர்கள் தானே?
இவர்கள் ஏன் உன் அரண்மனையில் இருக்கிறார்கள் என்று எப்பொழுதாவது யோசித்து பார்த்தாயா?தவம் செய்ய ஏற்ற இடமா அரண்மனை?
ஒரு காலத்தில் தபோவனத்தில் கால் பதிந்த இந்த ரிஷிகள், இன்று தபோவனத்தை மறந்து, உன் அரண்மனையே கதி என்று இங்கேயே இருக்கின்றனர்.

உன் அரண்மனைக்கு வந்தால், நீ ராஜ போஜனம் ஏற்பாடு செய்து கொடுப்பாய், வயிறார உணவு கிடைக்கும் என்று இந்த ரிஷிகள் வரவில்லையே.
இங்கு வந்தும் தவத்திலேயே இருக்கிறார்கள்.
நீ கொடுக்கும் ராஜ போஜனத்தை இவர்கள் எதிர்பார்க்கவில்லையே?
தாங்கள் கொண்டு வந்த காய்ந்த இலைகளை கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டு, எப்பொழுது பார்த்தாலும் உன் தர்பாரில் வந்து அமர்ந்து கொண்டு உள்ளனரே?

உன் தர்பாரில் உட்கார்ந்து இருக்கும் இந்த ரிஷிகள், உன் சபைக்கு கொண்டு வரப்படும், விவாதங்கள் எதிலும் ஈடுபடுவதில்லை.
எப்பொழுதும் கண்ணை மூடி பரப்ரம்மத்தை தியானித்து கொண்டே அமர்ந்து இருக்கின்றனர்.
நீ என்ன தீர்ப்பு வழங்கினாய்? என்ன நடந்தது? என்று கூட இவர்கள் கவனிப்பதில்லை.

நீ போடும் ராஜ போஜனம் எதையும் இவர்கள் சாப்பிடுவதில்லை.
சபையில் நடக்கும் எந்த விஷயத்திலும் இவர்கள் கலந்து கொள்வதும் இல்லை.
கண்ணை மூடிக்கொண்டு எப்பொழுதும் ஜபம் செய்து கொண்டு, கண்களில் நீர் வடிய, உன் சபையில் உட்கார்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

புஷ்டியான சரீரமில்லாமல், இளைத்த உடம்புடன், வறண்ட வாயுடன், கண்களில் இருந்து கண்ணீரும், ஒட்டிய வயிருடன், இடுப்பில் மரவுரி அணிந்து, அடிக்கடி ஆனந்த கண்ணீர் விட்டு கொண்டு, உன் சபையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்களே இவர்கள்.
எந்த சுகத்தை அனுபவிக்க இவர்கள் இங்கு வந்து அமர்ந்து இருக்கிறார்கள்? என்று எப்பொழுதாவது நினைத்தது உண்டா, தசரதா?

அவர்கள் எந்த சுகத்தை அனுபவிக்க இங்கு இருக்கிறார்கள்? என்பதை நீ அறிந்து கொண்டாலே, என்ன காரணம் என்று புரிந்து கொண்டு விடலாம்.

சபையில், நீ சில சமயம் "ராமா" என்று கூப்பிடும் போது, உன் மகன் ராமன் ஓடி வந்து "அப்பா" என்று வந்து உன் முன் நிற்கும் போதும் மட்டும், இந்த ரிஷிகள் கண்களை திறந்து ராமனை பார்க்கின்றனர்.
கல்ப காலமாய் காட்டில் தவம் செய்தாலும், தரிசனம் கொடுக்க வராத பகவான், 'தசரதன் கூப்பிட்டான்' என்றவுடன், அடுத்த நொடி தரிசனம் கொடுப்பதை அறிந்து, உன்னுடன் சேர்ந்து கொண்டு தாங்களும் பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டு, உன் சபையில் வந்து அமர்ந்துள்ளனர்.

உன் புத்திரனை பார்ப்பதற்காகவே இந்த ரிஷிகள் வந்து அமர்ந்திருக்கும் போதே தெரியவில்லையா, இவன் பரப்ரம்மம் என்று.

ஒரு சாதாரண ராஜகுமாரனை பார்ப்பதற்கா இத்தனை ரிஷிகள் உன் சபையில் அமர்ந்து இருக்கிறார்கள்?
வேறு தேசங்களில் ராஜ்குமாரர்கள் இல்லையா? அங்கு போகலாமே இந்த ரிஷிகள் !

இந்த ரிஷிகள் ஏன் இங்கு வந்து அமர ஆர்வம் காட்டுகின்றனர்? என்று நீ நிதானமாக யோசித்தாலே, உனக்கு உண்மை விளங்கும்.

சாதுக்களான ரிஷிகள் எப்பொழுதும் பரமாத்மாவை தரிசிக்கவே விரும்புவார்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.
இந்த சாதுக்கள் உன் மகன் ராமனை பார்க்கவே இங்கு அமர்ந்துள்ளனர் என்று நீ புரிந்து கொள்ளும் போது, உன் மகன் பரப்ரம்மம் என்று உனக்கு புரியும்"
என்று சொன்னார் விஸ்வாமித்ரர்.


விஸ்வாமித்ரர் சொல்வதையெல்லாம் கேட்டு, தசரதர் மூர்ச்சையாகிவிட்டார்.

பக்கத்தில் இருந்த சேவகர்கள் பன்னீர் தெளித்து, விசிறி விட்டு தசரதரை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

தசரதர் உடல் தளர்ச்சியால் மூர்ச்சை ஆகவில்லை.
ராமனை கேட்கிறாரே என்ற சோகத்தில் மூர்ச்சை ஆகி இருந்தார்.

விஸ்வாமித்ரருக்கு என்ன சொல்லி இந்த சங்கடத்தில் இருந்து தப்பிக்கலாம்? என்று யோசித்து கொண்டிருந்தார்.
திடீரென்று ஒரு மனதில் ஒரு பதில் கிடைக்க, இதை வைத்து சமாளித்து விடலாம் என்று எண்ணி, உடனே எழுந்து கொண்டு,
"ஸ்வாமி, இன்னும் என் குழந்தைக்கு வயதாகவில்லை.
எந்த காரியத்தை செய்ய வேண்டுமென்றாலும், அதற்கு தகுந்த வயது உள்ளவனா? என்று பார்க்க வேண்டி இருக்கிறது. 

வாலிபனாக ஆகும் வரை, 'இவன் இன்னாரது பிள்ளை' என்று தகப்பனை வைத்து தானே அடையாளம் காட்டுவார்கள்.

என் குழந்தைக்கு 12 வயது தான் ஆகிறது.
அவனாக ஒரு காரியத்தை செய்யும் அளவுக்கு வயது இல்லை, ஸ்வாமி.
இன்னும் 16 வயது கூட ஆகவில்லையே ஸ்வாமி, என் பையனுக்கு.

அப்படியே 12 வயது குழந்தையை அழைத்தாலும், அங்கே நாடகம், விளையாட்டு நடக்கிறது என்றா அழைக்கிறீர்கள்? யுத்தத்திற்கு அழைக்கிறீர்களே !!

அப்படியே யுத்தம் என்றாலும் அவன் வயதில் ஒரு விளையாட்டு யுத்தம் அழைத்தாலும் பரவாயில்லை. ராக்ஷசர்களோடு யுத்தம் என்று சொல்கிறீர்களே?

அப்படிப்பட்ட முரட்டு தனமான யுத்தத்திற்கு நான் குழந்தை பெறவில்லையே !!

யுத்தத்திற்காகவே என் குழந்தையை பெற்று இருந்தால், அவனுக்கு "வீரபாகு, மகாபாகு, சத்ருஞ்ஜெயன்" என்றல்லவா பெயர் வைத்து இருப்பேன்.

'அழகாக இருக்கிறான்' என் குழந்தை என்று 'ராமன்' என்றல்லவா பெயர் வைத்து இருக்கிறேன்.

அழகாக இருக்கும் என் குழந்தையை பார்த்து சந்தோஷப்படாமல், இப்படி யுத்தத்திற்கு அழைக்கிறீர்களே?

ஒரு வேளை, ராமன் ராமன் என்று தவறி இங்கு வந்து விட்டீரோ?
கையில் கோடாரியுடன் சண்டைக்காகவே இன்னொரு ராமன் அலைந்து கொண்டு இருக்கிறார். நீங்கள் அவரை பார்க்க வந்து, தவறி இங்கு வந்து விட்டீர்களோ?
இவன் 'தசரதராமன்' ஸ்வாமி. நீங்கள் தேடி வந்தது 'பரசுராமர்' என்று நினைக்கிறேன்.

என் குழந்தை ராமன் "தாமரை போன்ற கண்கள்" (ராஜீவ லோசனன்) உடையவன் ஸ்வாமி.

இதன் காரணமாகவே ராக்ஷசர்களோடு யுத்தம் செய்யும் தகுதி என் குழந்தைக்கு இல்லை."
என்று சொல்லி முடித்து விட்டார்.

பொதுவாக "தாமரை கண்ணன்" என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் கவிஞர்களுக்கு மனதில் உதிக்கும்.

தசரதன், விஸ்வாமித்ரரை பார்த்து
"தாமரை எப்படி மலர்ந்து இருக்குமோ, அதுபோல, மலர்ந்த கண்களை உடையவன் என் குழந்தை.
தாமரை எப்படி அழகாக இருக்குமோ, அதுபோல அழகான கண்களை உடையவன் என் குழந்தை.
தாமரை எப்படி குளிர்ச்சியாக (ஆர்த்ரம்) இருக்குமோ, அதுபோல குளிர்ச்சியான கண்களை உடையவன் என் குழந்தை.
தாமரையின் ஓரத்தில் எப்படி சிவப்பு இருக்குமோ, அதுபோல என் குழந்தையின் கண்களின் ஓரத்தில் சிவப்பாக இருக்கும்.
தாமரை பார்த்து எப்படி வண்டுகள் மொய்க்குமோ, அதுபோல அனைவரையும் ஆகர்ஷிக்கும் அன்பு நிறைந்த கண்களை உடையவன் என் குழந்தை."
என்ற பொதுவான அர்த்தத்தில் சொல்லவில்லையாம்.

மாறாக,
தசரதன், விஸ்வாமித்ரரை பார்த்து,
"ஸ்வாமி, தாமரையானது சாயங்காலம் ஆனது என்றால், கூம்பி விடும்.
ராத்திரியில் தாமரை மலர்ந்து இருக்காதே.
என் குழந்தை ராமன் "தாமரை போன்ற கண்கள்" உடையவன் ஸ்வாமி.
என் மகன், காலை வேளையில், வெளியே சென்று விளையாடி, சாயங்காலம் வருவான்.
அவன் தின்பதற்கு கொஞ்சம் பட்சணம் செய்து கொடுத்து சாப்பிட சொல்லி, கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்த்தால், அங்கேயே சாய்ந்து கொண்டு தூங்கி கொண்டு இருப்பான்.
அவன் தாய், கௌசல்யா அவனை ஆசையோடு உள்ளே அழைத்து கொண்டு, சூரியன் மறைந்து இரவு வருவதற்குள் தூங்க பண்ணி விடுவாள், ஸ்வாமி.

நீங்கள் யுத்தம் செய்ய சொல்வதோ, ராக்ஷஷர்களுடன்.
அவர்களோ ராத்திரியில் தான் சண்டைக்கு வருவார்கள்.
விடியும் வரை சண்டை செய்வார்களே?
என் குழந்தையோ தாமரை கூம்பி விடுவது போல, தூங்கி போய் விடுவானே, ஸ்வாமி?

இதன் காரணமாகவே, யுத்தம் செய்ய என் குழந்தைக்கு யோக்கியதை இல்லை, ஸ்வாமி"
என்று சொல்லி, தன் மகன்  யுத்தத்திற்கு லாயக்கு இல்லை என்று முடித்து விட்டார் தசரதன்.

விஸ்வாமித்ரர் மனதுக்குள் நினைத்தார்,
"இவனிடத்தில் போய் வேதாந்த ரகசியத்தை இத்தனை மணிநேரம் பேசினேனே!!
பரப்ரம்மம் தான் உனக்கு ராமனாக வந்து இருக்கிறார் என்று வெளிப்படையாக நானே சொன்ன பிறகும், ஒரே அடியாக, என் குழந்தைக்கு யுத்தம் செய்ய யோக்கியதை இல்லை என்று சொல்லி முடித்து விட்டானே!!

வேதாந்த ரகசியத்தை விருப்பம் இல்லாதவனிடம், கேட்கும் பக்குவம் இல்லாதவனிடம் சொல்ல கூடாது என்ற பொழுதும், இவனுக்கு போய் சொல்லி நேரத்தை வீணடித்து விட்டேனே!!"
என்று மனதுக்குள் நினைத்தார்.

ராமனை தன்னுடன் கூட்டி கொண்டு செல்ல முடியாததை காட்டிலும், இத்தனை நேரம் இவனுக்கு செய்த உபதேசம் வீண்  போனதே என்று 'பொறுமையே ப்ராம்மணனுக்கு பூஷணம்' என்று சொன்ன விஸ்வாமித்ரர், யாகத்தில் பூர்ணஆஹுதி விடும் போது வெளிப்படும் அக்னியை போல கோபத்தை வரவழைத்து கொண்டார்.

இவரின் கோபத்தை கண்டு, சூரியன் தன் கிரணங்களை குறைத்து கொண்டான்.
வாயு பகவான் காற்றை மந்தமாக்கினான். தேவர்கள் பயந்ததால், பஞ்ச பூதங்களும் தன் சக்தியை குறைத்து கொண்டது. உலகமே மந்தமாகி, இவர் கோபத்தின் விளைவு என்ன ஆகுமோ? என்று பயந்தது.

விஸ்வாமித்ரரின் கோபத்தை கவனித்த வசிஷ்டர், இவரை நன்கு அறிந்தவர்.

ஒரு சமயம், விஸ்வாமித்ரர் அரசனாக (க்ஷத்ரியன்) இருந்த போது, வஷிஸ்டரிடம் கோபம் கொண்டு, 'நானும் ப்ரம்ம ரிஷி ஆவேன், நானும் பிராம்மணன் ஆவேன்' என்று சபதம் செய்தார்.
சபதம் செய்தது மட்டுமில்லை, கடும் தவம் செய்து, காமத்தையும், கோபத்தையும் க்ஷத்ரியனாக இருந்ததால் பல தடவை அடக்க முடியாமல் போனாலும், விடா முயற்சியால் மீண்டும் மீண்டும் தவம் செய்து, கடைசியில் காமத்தையும், கோபத்தையும் ஜெயித்து, பிராம்மணன் ஆகி, மேலும் கடும் தவம் செய்து தேவர்கள், ப்ரம்மா உட்பட ப்ரத்யக்ஷம் ஆகி, "நீ ப்ரம்ம ரிஷி" என்று சொல்லிய பின்பும், ஒப்புக்கொள்ளாமல், வசிஷ்டர் வாயால் இறுதியில் "நீ ப்ரம்ம ரிஷி" என்று பெயர் வாங்கி தன் சபதத்தை நிறைவேற்றி கொண்டார்.

ஒரு ப்ரம்ம ரிஷி ஆவதற்கே விஸ்வாமித்ரருக்கு அத்தனை விடா முயற்சி இருந்தது என்றால், பரப்ரம்மம் ராமனாக அவதரித்துள்ள நிலையில், தசரதனால் தனக்கு ராமன் கிடைக்கவில்லை என்று சொன்னால், இவருக்கு எத்தனை கோபம் வருமோ? என்று வசிஷ்டரே சிறுது கலங்கி விட்டார்.

விஸ்வாமித்ரர் ஒரு மணி நேரம் ஞானத்தை உபதேசம் செய்தும், தசரதன் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்று உணர்ந்த வசிஷ்டர், தசரதனை பார்த்து,
"விஸ்வாமித்ரர் சொன்னது போல, உன் மகன் ராமன் 'பரப்ரம்மம்' தான். சர்வ வல்லமை உடையவன் தான்."
என்று தன் பங்குக்கு ஒரு மணி நேரம் ராமனின் பெருமையை சொல்லவில்லை. சொன்னாலும் தசரதனுக்கு புரியாது.
அதற்கு பதில், விஸ்வாமித்ரரின் பெருமையை தசரதனுக்கு சொல்லலாம் என்று தீர்மானித்தார்.

மகா புத்திசாலியான வசிஷ்டர், தசரதனிடம் "ராமனின் அவதாரத்தை, பெருமையை" சொல்லி ஒன்றும் நடக்காது என்று புரிந்து கொண்டார்.

விஸ்வாமித்ரர் "பரபிரம்மமே ராமனாக அவதரித்து உள்ளார்" என்று ஞானத்தோடு பார்த்து சொல்கிறார்.
தசரதனோ, "ராமன் என் குழந்தை" என்று பாசத்தோடு (ப்ரேமையோடு) பார்க்கிறான்.

பொதுவாக, தெய்வத்திடம் ஏற்படும் ப்ரேமையை, ஞான உபதேத்தால் வீழ்த்தவே முடியாது.
பிரேமை தான் ஜெயிக்கும்.

இங்கு இத்தனை மணி நேரம் விஸ்வாமித்ரர் செய்த ஞான உபதேசம், தசரதனின் ராம பிரேமையால் தோற்று நின்றது.

இப்பொழுது விஸ்வாமித்ரருடன் ராமனை அழைத்து செல்ல வைக்க, அந்த அன்பின் வழியிலேயே சென்றால் தான், தசரதன் அனுப்ப சம்மதிப்பான் என்று உணர்ந்த வசிஷ்டர், உடனே தசரதனை பார்த்து,
"தசரதா ! உன் குழந்தைக்கு ஒரு ஆபத்தும் வராது.
விஸ்வாமித்ரர் எப்பேர்ப்பட்ட மகாத்மா தெரியுமா?
எனக்கு ஒரு யோக்கியதை உண்டு .
உனக்கு ஒரு யோக்கியதை உண்டு.
நான் ப்ரம்ம ரிஷி, நீ ராஜ ரிஷி.
அவரோ இரண்டு யோக்கியதையும் உடையவர். இவர் முதலில் ராஜரிஷியாகி இருந்து, ப்ரம்ம ரிஷி ஆனவர்.

அவரிடத்தில் உலகில் உள்ள  ஏராளமான அஸ்திர, சஸ்திரங்கள் இருக்கிறது.
தானாகவே கண்டுபிடித்த அஸ்திர, சஸ்திரங்களும் இவரிடத்தில் இருக்கிறது.

ப்ரம்ம ரிஷியாகி போனதால், இவையெல்லாம் இவருக்கு பிரயோஜனம் இல்லை.

இவை அனைத்தையும் உன் பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
இப்படி பலவித ஷ்ரேயஸ்களை ராமனுக்கு செய்வார்.
ஒரு ஆபத்தும் ஏற்படாது. விஸ்வாமித்ரருடன் அனுப்பு"
என்றவுடன்,
தசரதன் சந்தோஷமடைந்தார்.

"விஸ்வாமித்ர ரிஷிக்கு என் குழந்தை மேல் எத்தனை கிருபை இருந்தால், அத்தனையும் என் குழந்தைக்கு கொடுக்க நினைப்பார்.
நான் அனுப்பாமல் இருந்து இருந்தால், என் குழந்தைக்கு எத்தனை பெரிய நஷ்டம் இது."
என்று நினைத்து, விஸ்வாமித்ர ரிஷியுடன் அனுப்ப சம்மதத்துடன் "ராமா" என்று அழைக்க, இந்த விவாதத்தை கேட்டு கொண்டிருந்த ராமன், கூடவே லக்ஷ்மணனுடன் வில்லும், அம்புமாக தயாராக வந்து நின்றனர்.
தசரதன் இரண்டு குழந்தைகளையும் விஸ்வாமித்ரரிடம் ஒப்படைத்தார்.

தன் வந்த காரியம் நிறைவேறிய சந்தோஷத்தில், இனி ஒரு நொடி இருந்தாலும், திடீரென்று மனம் மாறி, "அனுப்ப மாட்டேன். சுமந்திரா, உடனே சென்று ராம லக்ஷ்மணர்களை அழைத்து கொண்டு வா" என்று தசரதன் சொல்லி விடுவானோ, என்று உடனேயே அங்கிருந்து ராம லக்ஷ்மணர்களை கூட்டிக்கொண்டு வெகு தூரம் சென்று விட்டார்.
ராம லக்ஷ்மணர்கள் கையில் வில், அம்புடன் இவர் பின்னால் ஓட, வேக வேகமாக நடந்தார்.


சரயு நதி வரை நிற்காமல் வேகமாக நடந்த விஸ்வாமித்ரர் அங்கு வந்த பின் தான் கொஞ்சம் நின்றாராம்.
மேலும் சித்தாஸ்ரமம் நோக்கி வேகமாக நடக்க ஆரம்பிக்க, பரப்ரம்மமே ராமனாக தன்னை பின் தொடர்ந்து வருவதை மறந்து விடுவாரா விஸ்வாமித்ரர்?
இவர்கள் நடந்து போவதை பார்த்தால், பரமேஸ்வரன் முன்னே நடக்க, பின்னால் முருகனும், விநாயகரும் செல்வது போல இருந்தது என்கிறார், வால்மீகி பகவான்.

நீருண்ட மேகம் போல, மரகத மணியை போல இருக்கும் ராமரும், வைடூரிய மணியை போல ஜொலிக்கும் லக்ஷ்மணனும், தன் பின்னால் ராஜ அலங்காரத்துடன் கையில் வில், அம்புடன் வருவதை எண்ணி, தனக்கு கிடைத்த பாக்கியத்தை நினைத்தார்.

வேகமாக நடந்து கொண்டே, அவ்வப்போது விஸ்வாமித்ரர் ராம, லக்ஷ்மண தொடர்ந்து வரும் அழகை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே நடந்தார்.

வெளியில் பார்ப்பதற்கு விஸ்வாமித்ரர் கம்பீரமான ரிஷியாக தெரிந்தாலும்,  'பரபிரம்மம்' தன் பின்னால் வருகிறதே என்று எண்ணி பரவசம் அடைந்தார்.
விஸ்வாமித்ரர் கண்களில் நீர் வழிய, தன் மனதுக்குள் நினைத்தார்,
"இது எனக்கு கிடைக்க கூடிய நிதியா? தன் தகப்பனாரை விட்டு, இப்படி என் பின்னால் ஓடி வருகிறார்களே இருவரும் !

நான் சம்பாதித்த ஞானத்தை (அறிவு) கொண்டு, பகவானை பிடித்து விடலாம் என்றல்லவா நினைத்தேன்.

என் சாமர்த்தியத்தால் பேசி, ராமரை பிடித்து விடலாம் என்று நினைத்தேனே !

பகவானை, நான் பயின்ற ஞானத்தால் அடைய முடியாது என்று தசரதன் சபையிலேயே உணர்ந்து கொண்டேன்.
என் சாமர்த்தியம் ஒன்று கூட அங்கு செல்லுபடியாகவில்லையே !
கடைசியில் குருவான வசிஷ்டர் செய்த சிபாரிசு தானே ஜெயித்தது.

எந்த அறிவை கொண்டும், பகவானை பிடித்து விட முடியாது என்று உணர்ந்தேன்.

வசிஷ்டர் சொன்ன ஒரு சொல்லுக்கு, இப்படி ராமனாக அவதரித்த பரப்ரம்மம் என் பின்னால் ஓடி வருகிறாரே?

மேலும், 'உன் முயற்சியால் என்னை பிடிக்க முடியாது' என்று முதலில் நிரூபித்து,
பின், தானே என்னுடன் வருவதற்கு ஆசைப்பட்டு, தசரதன் மனது மாறும்படியாக செய்து, இப்படி என் பின்னால் ஓடி வருகிறாரே!!

'எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவனாக, மனதில் எப்பொழுதும் பகவத் தியானமே செய்து கொண்டிருப்பவனாக, சாதுக்களாக இருக்கும் மகாத்மாக்கள் பாத தூளி என் தலை மேல் விழாதா? என்று அவர்களை தொடர்ந்து கொண்டு, அவர்கள் பின்னால் நான் ஒடுகிறேன்'
என்று பகவான் சொல்லும் சாஸ்திரம், இன்று நிரூபணம் ஆகிறதே?"
என்று நினைத்து, தனக்கு கிடைத்த அணுகிரஹத்தை நினைத்து மேனி சிலிர்த்து ஆனந்த கண்ணீருடன், அவ்வப்போது திரும்பி திரும்பி ராம லக்ஷ்மண சகோதரர்களை பார்த்து கொண்டே, நடந்து கொண்டு இருந்தார்.

ராமருடன் இப்படியே சில மணி நேரம் நடந்து வர வர  விஸ்வாமித்ரரின் ஸ்வபாவம் மாற தொடங்கியது.

ராமர் தன்னோடு அருகிலேயே வர வர, விஸ்வாமித்ரர் இது வரை சபையில் பேசிய "ராம ப்ரபாவம், வேதாந்த தத்துவங்கள்' எல்லாம் காணாமல் போய், பிரேமை (அன்பு) அதிகமானது".

'நம் பையன், நம் குழந்தை' என்ற எண்ணம் உருவாகி, அடிக்கடி திரும்பி பார்த்து, ராமரின் தலையை வருடி விட்டார்.
வேர்வையை தன் மரவுரியால் துடைத்து விட்டார்.

மேலும் ராமனை பார்த்து,
"குழந்தாய், நடந்து நடந்து கால் வலிக்கிறதோ?
நான் வேண்டுமென்றால் கை கால் பிடித்து விடட்டுமா?
களைப்பாக இருந்தால், நாம் இங்கேயே தங்கி விட்டு, பின்னர்  செல்லலாமா?
உனக்கு பசிக்கிறதா? காலையில் அரசவையில் சாப்பிட்டது தானே. நேரம் ஆகிவிட்டதே?"
என்றெல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டார் ஞானியான விஸ்வாமித்ரர்.

ராமரோ, "அதெல்லாம் ஒன்றும் இல்லையே" என்று சொல்லியும், ராம லக்ஷ்மணர்களுக்கு பசிக்குமோ, களைத்து இருப்பாரோ, தூக்கம் வருமோ என்று தானே நினைக்க ஆரம்பித்து விட்டார் விஸ்வாமித்ரர்.

'ஆமாம் பசிக்கிறது' என்று சொன்னால் கூட, இவரிடம் கொடுப்பதற்கு போஜனம் ஏதும் இல்லை.
ஆனாலும் விஸ்வாமித்ரரிடம்,
பசியே வராமல் இருக்க,
தேவைப்பட்டால் மட்டும் தூக்கம் வர,
களைப்பே அடையாமல் இருக்க
சக்தி வாய்ந்த 'பலை அபலை' என்ற இரு மந்திரங்கள் அவரிடம் ஸித்தியாகி இருந்தது.

ராமருக்கு லக்ஷ்மணருக்கும் தான் ஸித்தியாக்கி வைத்திருந்த இந்த பலை-அதிபலை என்ற மந்திரத்தை உபதேசம் செய்து விட்டார் விஸ்வாமித்ரர்.

உபதேசம் செய்த பின், விஸ்வாமித்ரர் பெரிதும் நிம்மதி அடைந்தார்.

தன் மந்திர உபதேசத்தால், ராமன் பலம் பெற்றான் என்று எப்படி  நினைத்தார் விஸ்வாமித்ரர்? என்று நமக்கு தோன்றலாம்.

இப்படி ஒரு எண்ணம் எப்படி விஸ்வாமித்ரரிடம் வந்தது? என்றும் நமக்கு தோன்றலாம்.

சற்று முன் தான், இவர் தசரதனிடம் மணிக்கணக்கில் சபையில்
'வேதத்தின் பிரமாணத்தை கொண்டு, உன் பிள்ளை 'ராமன்' பரமாத்மா என்று தெரிந்து கொண்டேன். அவனை குழந்தை குழந்தை என்று பார்க்காதே'
என்றெல்லாம் பேசி ராமனை அழைத்து வந்தார் விஸ்வாமித்ரர் என்று பார்க்கிறோம்.


பகவான் என்று சொல்லிவிட்டு, அவருக்கு இவர் மந்திர உபதேசம் செய்து பலம் கிடைக்கட்டும் என்று எப்படி நினைத்தார்? என்று நமக்கு தோன்றலாம்.

வேதத்தில் "விஷ்ணுவின் பலத்தால் தான் இந்த உலகமே தரிக்கப்பட்டுள்ளது" என்று விஷ்ணுவின் பலத்தை சொல்கிறது.

வேத ப்ராமணமாக ராமன் அவதார புருஷன் என்று தெரிந்த விஸ்வாமித்ரருக்கு, விஷ்ணுவின் பலம் தெரியாமல் இருக்குமா?

மகா பலசாலியான விஷ்ணு அவதாரமான ராமருக்கு, இவர் உபதேசித்த "பலை அதிபலை" என்ற இரு மந்திரத்தால் தான் பலம் அதிகரித்தது என்று எப்படி விஸ்வாமித்ரர் திடீரென்று நினைத்தார்? என்று நமக்கு தோன்றலாம்.

சற்று முன் சபையில் இவர் பேசியதற்கும், இப்பொழுது இவர் பேசுவதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே?

விஸ்வாமித்திரரின் செயலில் ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கு காரணம் உண்டு.

பொதுவாக ஆரம்பத்தில் "பகவானே, என்னை காப்பாற்று !!"
என்று தனக்காக அழுவான் அஞானியான பக்தன்.

அஞானியான பக்தனுக்கும்  பகவான் அணுகிரஹம் செய்கிறார்.

பகவானின் அணுகிரஹத்தை அனுபவித்த இவன், பகவான் தன் கையில் கிடைத்தவுடன், "என்னை காப்பாற்று" என்று ஆரம்பத்தில் சொன்னவன், அன்பின் காரணமாக, "பகவானை நாம் காப்பாற்ற வேண்டுமே" என்று நினைக்க ஆரம்பித்து விடுவான்.

"என்னை காப்பாற்று" என்று சொல்லும் பக்தன், பகவானை "சர்வேஸ்வரன், சர்வ வல்லமை கொண்டவன்" என்று நினைக்கிறான்.

பகவான் தன்னை வெளிக்காட்ட வெளிக்காட்ட, தன் அருகே இருப்பதை உணரும் பக்தன்,
'யாருக்கும் கிடைக்காதவர் தனக்கு கிடைத்து விட்டாரே! அவரை நாம் தானே பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மை விட்டால் யார் பார்த்து கொள்வார்கள்?'
என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்து விடுவான்.
இதற்கு பெயர் தான் பிரேமை (அன்பு).

இந்த பிரேமை (அன்பு) அதிகமாகி அதிகமாகி, "பகவான் என்னை காப்பாற்ற வேண்டும்" என்று வந்தவன், அன்பின் காரணமாக, "பகவானை தான் காப்பாற்ற வேண்டும். அவரை தீயவர்கள் நெருங்காமல் பார்த்து கொள்ள வேண்டுமே!!" என்று நினைக்க ஆரம்பித்து விடுவான் பிரேம பக்தன்.

ராமரை மகனாக பெற்ற தசரத மகாராஜனின் பிரேம நிலை, விஸ்வாமித்ரருக்கு புரிந்தது.

இந்த அன்புக்கு அடிப்படை எது?
ஞானம் (அறிவு).

தெளிந்த அறிவு உடைய ஞானியின் அருகில், பகவான் வந்து விட்டால், பிரேம பக்தி ஆரம்பிக்கிறது.
இந்த பிரேமை என்ற அனுபவம், ஞானத்தை விட உயர்ந்தது.

விஸ்வாமித்ரர் மஹா ஞானி.
ராமர் 'பரமாத்மா' என்று நன்கு அறிந்தவர்.
சர்வ வல்லமை கொண்டவர் 'ராமர்' என்றும் அறிந்தவர்.

இப்பேர்ப்பட்ட இந்த ஞானியிடம், பகவான் ராமர் அருகில் வந்ததும், வேதாந்த தத்துவங்கள் மறந்து, ஒரு அஞானியை போல, தான் உபதேசித்த மந்திரத்தால் ராமனுக்கு பலம் என்று நினைக்கவில்லை.
மாறாக,
தான் சம்பாதித்த இந்த மந்திரத்தை அவரிடம் சமர்ப்பணம் செய்து, ராமருக்கு தன்னிடம் இருந்ததை சமர்ப்பித்து, "மங்களாசாஸனம்" செய்தார் விஸ்வாமித்ரர்.

பகவானுக்கு அஞானி தன்னிடம் பக்தி செய்வது ஆச்சரியமாக இருக்காது.
ஒரு ஞானி தன்னிடம் பக்தி செய்வதை பெருமையாக கருதுகிறார்.

விஸ்வாமித்திரர் மந்திர உபதேசமாக தனக்கு செய்யும் பூஜையை ஆசையுடன் ஏற்று கொண்டார்.

ராத்திரி பொழுதை அந்த சரயு நதி கரையிலேயே தங்கி, அதற்கு பின் சித்தாஸ்ரமம் சென்றார்.
தாடகை வதம் செய்து, யாகம் இனிதாக நடக்க செய்து, அங்கிருந்து மிதலா (நேபால்) சென்று அங்கு சிவதனுஷை நாண் ஏற்றி, வில்லை முறித்து தன் பலத்தை காட்டி, சீதையை தன் தகப்பனார் தசரதன் சம்மதத்துடன் ஏற்றுக்கொண்டு, சீதா ராம தம்பதிகளாக அயோத்தியா திரும்பினர், திவ்ய தம்பதிகள்.
ஜெய் ஸ்ரீ ராம். ஸ்ரீ ராமஜெயம்.