Followers

Search Here...

Showing posts with label சந்தஸ். Show all posts
Showing posts with label சந்தஸ். Show all posts

Friday 24 September 2021

ஒவ்வொரு வேத மந்திரத்துக்கும் முகம், கண், காது, மூக்கு, கை, கால்கள் உண்டு என்று சொல்லப்படுகிறது. அவை என்ன? சந்தியா வந்தனத்தில், தலை, மூக்கு, இதயம் ஏன் தொடுகிறோம்? தெரிந்து கொள்வோம்..

வேத மந்திரம் கற்றுக்கொள்ளும் முறை என்ன?

ஒவ்வொரு வேத மந்திரத்துக்கும் அங்கம் உள்ளது.  

அவை 

"வ்யாகரணம், சிக்ஷை, நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம், சந்தஸ்".


முதலில்,

வேதத்தை பூரணமாக அத்யயனம் செய்து விட வேண்டும்.

பிறகு, 

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது, ஒவ்வொரு வேத மந்திரத்தின் 

  1. முகம் எது? 
  2. மூக்கு எது? 
  3. காது எது? 
  4. கண் எது? 
  5. கைகள் எது? 
  6. கால் எது? 

என்று வேத மந்திரத்தின் 6 அங்கங்களை படித்து அறிந்து கொண்டு சொல்பவன், ப்ரம்ம லோகத்தில் பூஜிக்கப்படுவான் என்று சொல்லப்படுகிறது.





புரிந்து கொள்வதற்காக, வேத மந்திரங்கள் அனைத்துக்கும் மாதாவான காயத்ரீ மந்திரம் மட்டும் எடுத்து கொள்வோம்.

காயத்ரீ மந்திரம், 3 பாதமாக உள்ளது. மொத்தம் 24 அக்ஷரம் உள்ளது.

தத் ஸ வி து: வ ரே ணி யம் (8 அக்ஷரம்)

பர் கோ தே வ ஸ்ய தீ ம ஹி (8 அக்ஷரம்)

தி யோ யோ ந: ப்ர சோ த யாத் (8 அக்ஷரம்)

பொதுவாக, 

காயத்ரீ மந்திரம் சொல்லி அர்க்யம் விடும் போது, 24 அக்ஷரமாக சொல்ல வேண்டும்.

அதே காயத்ரீயை, 

ஜபமாக செய்யும் போது, விச்வாமித்ரர் ஜபம் செய்தது போல, "ஒரு அக்ஷரம் குறைத்து, 23 அக்ஷரமாக சொல்லவேண்டும்" என்று சொல்லப்படுகிறது.

அதனால், "நிச்ருத் காயத்ரீ" என்று சொல்லி பிறகு ஜபம் செய்வது வழக்கம்.

நிச்ருத் காயத்ரீ (3 பாதம், 23 அக்ஷரம்)

தத் ஸ வி து: வ ரேண் யம் (7 அக்ஷரம்)

பர் கோ தே வ ஸ்ய தீ ம ஹி (8 அக்ஷரம்)

தி யோ யோ ந: ப்ர சோ த யாத் (8 அக்ஷரம்)

ஒவ்வொரு வேத மந்திரத்துக்கும் "6 அங்கங்கள்" உண்டு. அவை...

1. வ்யாகரணம் (வேத மந்திரத்தின் - முகம் (face) என்று தியானிக்க வேண்டும்)

வேத மந்திரத்தின் உண்மையான அர்த்தம் என்ன? என்று சொல்லித்தருவது வ்யாகரணம்.

காயத்ரீ மந்திரம் ஜபம் செய்யும் போது, அர்த்தம் புரிந்து சொல்ல வேண்டும். 

அந்த அர்த்தமே "காயத்ரீ மந்திரத்தின் முகம்" என்று தியானிக்க வேண்டும்.


2. சிக்ஷை (வேத மந்திரத்தின் - மூக்கு (nose) என்று தியானிக்க வேண்டும்)

ஸ்வரம் மாறாமல், அக்ஷரம் தவறாமல், மாத்ரை தவறாமல், எப்படி உச்சரிப்பது? என்று சொல்லித்தருவது சிக்ஷை. 

இப்படி சொல்லித்தர இங்கு குரு அவசியமாகிறார். அவர் சிஷ்யனுக்கு உச்சரிப்பு சொல்லித்தருக்கிறார்.

காயத்ரீ மந்திரம் ஜபம் செய்யும் போது, ஸ்வரம், அக்ஷரம், மாத்ரை மாறாமல், சரியான உச்சரிப்புடன் சொல்ல வேண்டும். 

அந்த உச்சரிப்பே, "காயத்ரீ மந்திரத்தின் மூக்கு" என்று தியானிக்க வேண்டும்.





3. நிருக்தம் (வேத மந்திரத்தின் - காது (ear) என்று தியானிக்க வேண்டும்)

விஷ்ணு, ருத்ரன், இந்திரன் என்று வேத மந்திரங்கள் தேவதைகள் பெயரை சொல்கிறது. 

வேத ஒலிகளை காதால் கேட்கிறோம். அந்த நாமங்கள் எதனால் அந்தந்த தேவதைக்கு ஏற்பட்டது? என்ற ஞானத்தை சொல்லித்தருவது நிருக்தம்

காயத்ரீ மந்திரம் "ஸவிதா" என்று பரமாத்மாவை அழைக்கிறது. 

இங்கு ஸவிதா என்பது சூரியனா? நம்மிடமும்சூரியனுக்கு உள்ளிருக்கும் நாராயணனா? என்ற ஞானத்தை நிருக்தம் கொடுக்கிறது. 

காயத்ரீ மந்திரம் ஜபம் செய்யும் போது, அதை கேட்கும் நாம், 'ஸவிதா என்பது சூரியநாராயணனே!' என்று உணர்ந்து சொல்ல வேண்டும்.

எந்த தேவதையை சொல்கிறோம் என்ற ஞானமே (அறிவே),  "காயத்ரீ மந்திரத்தின் காது" என்று தியானிக்க வேண்டும்.


4. ஜ்யோதிஷம் (வேத மந்திரத்தின் - கண் (eye) என்று தியானிக்க வேண்டும்)

எந்த வேத மந்திரத்தை எந்த காலத்தில் சொல்லவேண்டும்? என்று காலத்தை கணிக்க சொல்லித்தருவது ஜ்யோதிஷம்.

காயத்ரீ மந்திரம் இந்த வேளையில் தான் சொல்ல வேண்டும் என்று விதி உள்ளது. இந்த காலவிதியை ஜோதிஷம் கணித்து சொல்லித்தருகிறது.

சரியான காலத்தில் அதற்கான வேத மந்திரத்தை சொல்லும் போது, அந்த கால நிர்ணயமே,   "காயத்ரீ மந்திரத்தின் கண்" என்று தியானிக்க வேண்டும்.





5. கல்பம் (வேத மந்திரத்தின் - கை (hand) என்று தியானிக்க வேண்டும்)

எந்த வேத மந்திரத்தை எந்த யாகத்தில் சொல்ல வேண்டும்? என்று சொல்லித்தருவது கல்பம்.

காயத்ரீ மந்திரம் தெரியும் என்பதற்காக, யாகம் செய்யும் போதெல்லாம் சொல்ல கூடாது. 

எந்த மந்திரத்தை எங்கு சொல்லவேண்டும்? என்று நமக்கு வழிகாட்ட, ஒரு "கை" போல, கல்பம் உதவுகிறது.

இந்த இடத்தில் காயத்ரீ மந்திரம் சொல்ல வேண்டும் என்பதையே, "காயத்ரீ மந்திரத்தின் கை" என்று தியானிக்க வேண்டும்.


6. சந்தஸ் (வேத மந்திரத்தின் - கால் (leg) என்று தியானிக்க வேண்டும்)

வேத மந்திரம் ஒவ்வொன்றும் எத்தனை அக்ஷரமாக சொல்ல வேண்டும்? என்கிற விதியை சொல்லித்தருவது சந்தஸ். 

இந்த வேத மந்திரத்தை காயத்ரீ சந்தஸில் சொல்ல வேண்டும், என்றால், 

உடனேயே அந்த மந்திரத்தை 3 பாதமாக பிரித்து, 8,8,8 அக்ஷரமாக பிரித்து, 24 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று புரிந்து விடும்.

ரிக் வேதத்தின் முதல் மந்திரமான ‘அக்னீமீளே’ ஸூக்தமும் காயத்ரீ சந்தஸில் தான் அமைந்துள்ளது

அக்  நி மீ ளே பு ரோ ஹி தம் 

யக் ஞஸ் ய தே வம் ருத் வி ஜம் 

ஹோ தா ரம் ரத் ந தா த மம்

அர்த்தம்

யக்ஞத்தின் தேவனும், யக்ஞத்தில் வரிக்கப்பட்டவரும், முதன்மையாக இருப்பவரும், எல்லா தேவர்களையும் கூப்பிடுபவரும், செல்வத்தை தருபவரும், ஸ்ரேஷ்டமாக இருப்பவருமான அக்னி பகவானே ! பூ: புவ: ஸுவ: என்று விராட் ரூபத்தையே நாராயணனாக பார்க்கும் போது, அவருடைய கண்களாக இருக்கும் அக்னியே உன்னை துதிக்கிறேன்


ஒவ்வொரு மந்திரத்துக்கும் உள்ள சந்தஸ் என்ன? என்று தெரிந்தால், வேத மந்திரத்தை அதற்கேற்ப சொல்ல முடியும்.

காயத்ரீ சந்தஸ் போல பல சந்தஸ் உள்ளன..

சில வேத மந்திரங்களை, "உஷ்ணிக்" சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 3 பாதமாக பிரித்து, முதல் 2 பாதத்தை 8, 8 அக்ஷரமாக, 3வது பாதத்தை 12 அக்ஷரமாக, மொத்தம் 28 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 


சில வேத மந்திரங்களை, அனுஷ்டுப் சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 4 பாதமாக பிரித்து, ஒவ்வொரு பாதத்தை 8 அக்ஷரமாக, மொத்தம் 32 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 

சில வேத மந்திரங்களை, ப்ருஹதி சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 4 பாதமாக பிரித்து, முதல் மூன்று பாதத்தை 8 அக்ஷரமாக, 4வது பாதத்தை 12 அக்ஷரமாக, மொத்தம் 36 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 

சில வேத மந்திரங்களை, ப்ங்க்தி சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 4 பாதமாக பிரித்து, ஒவ்வொரு பாதத்தை 10 அக்ஷரமாக, மொத்தம் 40 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 

சில வேத மந்திரங்களை, த்ரிஷ்டுப் சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 4 பாதமாக பிரித்து, ஒவ்வொரு பாதத்தை 11 அக்ஷரமாக, மொத்தம் 44 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 


சில வேத மந்திரங்களை, ஜகதீ சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 4 பாதமாக பிரித்து, ஒவ்வொரு பாதத்தை 12 அக்ஷரமாக, மொத்தம் 48 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 

இப்படி பல சந்தஸ் உள்ளன. 


"அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காச்யப, அங்கீரஸ"

என்ற 7 ரிஷிகள், 

"காயத்ரீ, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதீ"

என்ற 7 சந்தஸ் கொண்ட பல வேத மந்திரங்களை கொண்டு,

அக்னி, வாயு, அர்க, வாகீச, வருண, இந்த்ர, விச்வே தேவர்கள் 

என்ற 7 தேவதைகளை ஆராதனை செய்கிறார்கள்.


சந்தியா வந்தனத்தில், 

அந்த 7 ரிஷிகளின் பெயர்களை சொல்லும் போது, தலையை தொட்டு, ரிஷிகளை வணங்குகிறோம்.

அவர்கள் வேத மந்திரங்களை 7 சந்தஸை கொண்டு ஸ்வரம், அக்ஷரம், மாத்திரை மாறாமல் சொன்னார்கள் என்பதை நாமும் தியானிக்க, மூக்கை தொடுகிறோம்.

அந்த 7 ரிஷிகள் வழிபட்ட தேவதைகளை நாமும் இதயத்தில் வழிபடுவதாக நினைத்து இதயத்தை தொட்டு கொள்கிறோம்.


இவ்வாறு, ரிஷிகளை, தேவதைகளை தியானிக்கும் பாக்கியத்தை சந்தியா வந்தனம் நமக்கு தருகிறது.


Wednesday 27 September 2017

சந்தியா வந்தனத்தில், தலை, மூக்கு, இதயம் தொட்டு செல்லும் ஆவாஹன மந்திரத்தின் பொருள் என்ன? நிச்ருத் காயத்ரி சந்தஸ் என்றால் என்ன?




நிச்ருத் காயத்ரி சந்தஸ் என்றால் என்ன?
சந்தியா வந்தனத்தில்,
ஜபம் செய்யும் முன் தலை, மூக்கு, இதயம் தொட்டு செல்லும் ஆவாஹன மந்திரத்தின் பொருள் என்ன?

ஓம் என்ற ப்ரணவ மந்திரமே, மற்ற அனைத்து மந்திரத்துக்கும் மூல காரணம்.

பிரபஞ்சத்தில் உள்ள ஒலி அலைகளை தியானத்தில் கவனித்து, மந்திரங்களை கண்டுபிடித்து கொடுத்தவர்கள் நம் ரிஷிகள்.

உருவாக்கப்பட்ட பிற மதங்கள் "நாங்கள் ஆடை இல்லாத, அறிவு இல்லாத ஆதாம், ஏவாள் மூலம் வந்தோம்" என்று பெருமிதமாக சொல்கின்றனர்.

சனாதன தர்மத்தில் இருக்கும் நாம், "வேத மந்திரங்கள் கொடுத்த பிரமிக்க தக்க அறிவாளிகளாக இருக்கும் ரிஷிகளின் பரம்பரை என்று இன்று வரை எந்த ரிஷியின் கோத்திரத்தில் வருகிறோம்" என்று சொல்கிறோம்.

நம் ரிஷிகள் கண்டுபிடித்ததே வேத மந்திரங்கள்.





இவர்கள் கண்டுபிடித்த
ஒவ்வோரு மந்திரமும், ஒவ்வொரு சந்தஸ் (a measure) கொண்டதாக இருக்கிறது.
ஒவ்வொரு மந்திரமும் ஒரு தேவதையை குறித்ததாக உள்ளது.

நாம் தினமும் செய்யும் சந்தியா வந்தனத்தில்,
ப்ராணாயாம மந்திரம் சொல்லும் முன்,
காயத்ரி மந்திரம் சொல்லும் முன்,
நாம்
காயத்ரி மந்திரத்தை கொடுத்த ரிஷியின் பெயரை சொல்லி தலையை தொட்டு,
காயத்ரி மந்திரத்தின் சந்தஸை நினைவில் கொள்ளும் போது  மூக்கை தொட்டும்,
காயத்ரி மந்திரம் வணங்கும் தேவதையை நினைவில் கொள்ளும் போது இதயம் தொட்டு ஆவாஹன செய்கிறோம், பாவிக்கிறோம்.

சந்தியா வந்தனத்தில்,
ப்ரணவ ஜபம் செய்யும் முன்:
ப்ரணவஸ்ய ருஷிர் ப்ரஹ்ம,
தேவீ காயத்ரீச் சந்த:
பரமாத்மா தேவதா !
என்று நாம் சொல்லும் போது, தலை, மூக்கு, இதயத்தை முறையே தொடுகிறோம்.
இதற்கு ப்ரணவ ந்யாஸம் என்று பெயர்.
இங்கு பரவாசுதேவனை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.

விளக்கம்:
ப்ராணாயாம மந்திரம் சொல்லும் முன்னர்,
இந்த மந்திரத்தை எந்த ரிஷி கண்டுபிடித்தார்?
எப்படி சொல்ல வேண்டும்?
யாரை குறித்து இந்த மந்திரம் துதிக்கின்றது ?
என்று தியானிக்கிறோம்.
பரவாசுதேவனை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.

1. ப்ரணவஸ்ய ருஷிர் ப்ரஹ்ம
இங்கு, நம் தலையை தொட்டு "ப்ராணாயாம மந்திரத்திற்கு ப்ரம்மாவே ரிஷி" என்று சொல்கிறோம்.

வேத ஸ்வரூபியான ஸ்வயம் ப்ரம்மாவே, ப்ராணாயாம மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் என்று உணர்ந்து, அவர் பாதம் நம் தலையில் பட்டு நமக்கு இந்த ப்ராணாயாம மந்திரம் ஸித்தி ஆகட்டும் என்று பாவனை செய்து தலையை தொடுகிறோம்.

2. தேவீ காயத்ரீச் சந்த:
பின்னர், மூக்கை தொட்டு ப்ராணாயாம மந்திரத்தின் சந்தஸ் "தேவீ காயத்ரீ சந்தஸ்"ல் என்று உள்ளது என்று சொல்கிறோம்.


ஸ்வயம் ப்ரம்மாவே, ப்ராணாயாம மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் என்று உணர்ந்து, ப்ராணாயாம மந்திரத்தை, காயத்ரி சந்தஸ் முறையில் சொல்ல வேண்டும் என்று நம் மனதில் நிறுத்த, நமக்கு எப்படி மூச்சு முக்கியமோ, அது போல,
மந்திரங்களுக்கு அதன் சந்தஸ் (உச்சரிப்பு) முக்கியம் என்று உணர்ந்து, பாவனையாக மூக்கை தொடுகிறோம்.

3. பரமாத்மா தேவதா
பின்னர், இதயத்தை தொட்டு, நாம் சொல்லப்போகும் இந்த ப்ராணாயாம மந்திரம், மூல பொருளான அந்த பரமேஸ்வரனை, பரவாசுதேவனை, பரப்ரம்மத்தை துதிக்கின்றது என்று சொல்கிறோம்.

ஸ்வயம் ப்ரம்மாவே, "இந்த ப்ராணாயாம மந்திரத்தின் மூலம் பரவாசுதேவனை துதித்தார்" என்று உணர்ந்து, "ப்ராணாயாம மந்திரம்" நாம் ஜெபிக்கும் போது, அந்த பரமாத்மாவாகிய பரவாசுதேவன், நம் இதயத்தில் வந்து தங்கி, நமக்கு அனுக்கிரகம் செய்யட்டும் என்று பாவனை செய்து நம் இதயத்தை தொடுகிறோம்.

முக்கியமாக 7 சந்தஸ் உண்டு:
ப்ராணாயாம மந்திரம், காயத்ரி மந்திரம் போன்றவை, "காயத்ரீ சந்தஸில்" உள்ளன.

பெரும்பாலான நம் இதிஹாசங்களும், புராணங்களும் "அனுஷ்டுப் சந்தஸில்" உள்ளன.

"அனுஷ்டுப் சந்தம்" என்பது "மொத்தம் 32 சொல்லுடன் கூடியது".
நான்கு அடிகள், ஒர் அடிக்கு 8 சொல்.
மொத்தம் 32 சொல்.

"காயத்ரி சந்தம்" என்பது "மொத்தம் 24 சொல்லுடன் கூடியது".
மூன்று அடிகள், ஒர் அடிக்கு 8 சொல். 
மொத்தம் 24 சொல்.

காயத்ரி மந்திரத்தை, அர்க்ய ப்ரதானம் செய்யும் போது, 24 சொல்லுடன் "காயத்ரி சந்தஸில்" சொல்ல வேண்டும்.
தத் வி துர் ரே னி யம்
பர் கோ தே ஸ்ய தீ ஹீ !
தி யோ யோ ந: ப்ர சோ யாத் !!

இப்படி சொல்லும் போது, காயத்ரீ சந்தஸ் முழுமையாக 24 சொல்லுடன் இருக்கிறது.

ஆனால், அர்க்யமாக செய்யாமல், காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்யும் போது 23 சொல்லாக மனதில் ஜபிக்க வேண்டும்.

காயத்ரீ சந்தஸ் முழுமையாக இல்லாமல் 23ஆக இருப்பதால், "நிச்ருத் காயத்ரி" என்று சொல்லி, பின்னர் ஜபம் செய்கிறோம்.

நிச்ருத் காயத்ரி மந்திரமாக சொல்லும் போது,
தத் வி துர் ரே ன்யம்
பர் கோ தே ஸ்ய தீ ஹீ !
தி யோ யோ ந: ப்ர சோ யாத் !!
என்று 23ஆக மனதில் ஜபிக்க வேண்டும்.

நிச்ருத் காயத்ரி மந்த்ரத்தை மனதால் மட்டுமே சொல்ல வேண்டும்.

ஒம்காரமே காயத்ரி மந்திரமாக இருப்பதால், ஒம் பூர் புவஸ் ஸூவ: ! என்று  எப்பொழுதும் காயத்ரி மந்திரத்துடன் சேர்த்து சொல்ல வேண்டும்.

நிச்ருத் காயத்ரி மந்த்ரத்தை சொல்லும் முன்,
ஸாவித்ர்யா ருஷிர் விச்வாமித்ர: ! 
நிச்ருத் காயத்ரீச் சந்த: ! 
ஸவிதா தேவதா !!
என்று சொல்லி, "தலை, மூக்கு, இதயத்தை" தொடுகிறோம்.
இங்கு காயத்ரி தேவையான வேத மாதாவை, நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.

ப்ராணாயாம மந்திரத்துக்கு முன் சொன்ன பரவாசுதேவனை ஆவாஹனம் செய்தது போல, நிச்ருத் காயத்ரி மந்திரம் சொல்லும் முன், காயத்ரி தேவியை ஆவாஹனம் செய்கிறோம்.

"ஓம்" என்ற மந்திரத்தின் மறு உருவான, "காயத்ரி மந்திரத்தை" கண்டுபிடித்து, வேத மாதாவாகிய காயத்ரி என்ற சாவித்ரி என்ற சரஸ்வதி தேவியை உபாஸனை செய்து, தரிசனமும் செய்த விச்வாமித்ர ரிஷியை தியானித்து, அவர் பாதம் நம் தலையில் படட்டும் என்ற பாவனையில் நாம் தலையை தொடுகிறோம்.

"காயத்ரி மந்திரம் 24ஆக இல்லாமல், ஒன்று குறைந்து 23ஆக இருப்பதால், காயத்ரீ சந்தஸ், நிச்ருத் காயத்ரீ சந்தஸ் ஆக சொல்ல வேண்டும்" என்று மனதில் நிறுத்தி, நமக்கு எப்படி மூச்சு முக்கியமோ, அதை போன்றது காயத்ரி மந்திரத்துக்கு சந்தஸ் என்று குறிக்க, மூக்கை தொடுகிறோம்.




காயத்ரி மந்திரத்தை ஜபிக்கும் முன், "காயத்ரீ தேவியாகிய சாவித்ரி தேவியை மனதில் த்யானிப்போம்" என்று இதயத்தை தொடுகிறோம்.
இங்கு காயத்ரீ வேத மாதாவை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.

இந்த ஞானத்தோடு, காயத்ரி ஜபத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டு செய்யும் பொழுது, விஸ்வாமித்திர ரிஷியின் ஆசியும், காயத்ரீ தேவியின் அணுகிரஹமும் கிடைக்கிறது.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka