Followers

Search Here...

Showing posts with label திருநின்றவூர். Show all posts
Showing posts with label திருநின்றவூர். Show all posts

Monday 2 March 2020

பாசுரம் (அர்த்தம்) - ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை - திருமங்கையாழ்வார் திருக்கண்ணமங்கை பெருமாளுடன், திருநின்றவூர் பெருமாளை சேர்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருமங்கை ஆழ்வார், திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது,
அதே பெயரில் திருநின்றவூரில் இருக்கும் பக்தஜீவன பெருமாளின் நினைவு வர, அவரையும் சேர்த்து இங்கு மங்களாசாசனம் செய்தார்.




இரண்டு திவ்ய தேசங்களை சேர்த்து கொண்டு மங்களாசாசனம் செய்கிறார்.

பாசுரம்:
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை!
இம்மையை மறுமைக்கு மருந்தினை!
ஆற்றலை அண்டத் அப்புறம் உய்த்திடும் ஐயனை!
கையில் ஆழி ஒன்று ஏந்திய கூற்றினை!
குரு மாமணிக் குன்றினை!
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை!
காற்றினை!
புனலை!
சென்று நாடிக் கண்ணமங்கையுள் 
கண்டு கொண்டேனே!
- (பெரிய திருமொழி)
என்று திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாளை பார்க்கும் போது பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.




திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணமங்கையில் எழுந்தருளி இருக்கும் பக்தவத்சல பெருமாளை பார்க்கும் போது, திருநின்றவூரில் எழுந்தருளி இருக்கும் பக்தஜீவனன் என்ற பெயருடைய பெருமாள் ஆழ்வாருக்கு வலுவில் வந்து தரிசனம் தர,
'நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை'
என்று இந்த திவ்ய தேச பெருமாளை கொஞ்சி மங்களாசாசனம் செய்கிறார்.

பரமபதத்தில் (வைகுண்டம்) எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறார்.
க்ஷீராப்தியிலும் (பாற்கடல்) எம்பெருமான்  எழுந்தருளி இருக்கிறார்.
யாரும் எளிதில் போக முடியாத இமயமலையில் பதரிநாத் போன்ற திவ்ய தேசங்களிலும் எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறார்.
நம்மால் அத்தனை தூரம் வர முடியுமோ!! என்று கருணை கொண்டு, அதே எம்பெருமான், மஹாலக்ஷ்மி ஸ்திரமாக நிற்கும் திருநின்றவூருக்கு நமக்காக வந்து நிற்கிறாரே!!
என்று பகத்ஜீவனனாக இருக்கும் எம்பெருமானை கொஞ்சி மகிழ்கிறார், திருமங்கை ஆழ்வார்.
திருநின்றவூரில் நிற்கும் எம்பெருமான், 'ஒரு முத்து குவியல் போல' பேரழகுடன், குளிர்ந்த திருமேனியுடன் கண் எதிரே தரிசனம் தர, "குரு மாமணிக் குன்றினை" என்று கொஞ்சுகிறார்.




இங்கு "நித்தில தொத்தினை" என்று திருநின்றவூர் எம்பெருமானை என்று அழைக்கிறார்.
"நித்தில தொத்து" என்றால் "பவள கொத்து" என்று அர்த்தம்..
பவளத்திற்கு இயற்கையாகவே ஒரு குளிர்ச்சி உண்டு.
பவள மணியை, மாலையாக கழுத்தில் போட்டு கொண்டால், உடல் குளிர்ச்சியாகும்.

இங்கு, "பவள கொத்து" என்று திருநின்றவூர் எம்பெருமானையே சொல்லி கொஞ்சுகிறார் திருமங்கை ஆழ்வார்.

ஒரு முத்து குவியல் போல பேரழகுடன், குளிர்ந்த திருமேனியுடன் இருக்கும் திருநின்றவூர் பெருமாளை பார்த்ததுமே, 'பெருமாளையே ஒரு பவள மாலையாக ஆக்கிக்கொண்டு, தன் கழுத்தில் போட்டு கொண்டு விட வேண்டும்' என்று ஆசை உண்டாகி விட்டது ஆழ்வாருக்கு.

வெயிலில் வாடி, வியர்த்து போன ஒருவனுக்கு, தென்றல் காற்று வீசினால் எப்படி சுகமாக இருக்குமோ!  அது போல, உலகத்தில் ஏற்படும் பலவித சிரமங்களால் துக்கப்பட்டு துவண்டு போகும் நமக்கு, இவர் தரிசனமே குளிர்ந்த காற்று வீசுவது போல சுகத்தை தருகிறதே!! என்றதும் "காற்றினை" என்று கொஞ்சுகிறார்.

வெயிலில் வாடி, உடம்பில் தண்ணீர் வற்றி, உயிர் போய் விடும்!! இனி தாளாது!! என்று தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு, சுவையான நீர் கிடைத்தால் எத்தனை சுகம் அடைவானோ, அது போல, தாபத்தோடு வரும் பக்தனுக்கு, தாபத்தை போக்கும் புனல் (தண்ணீர்) போல திருநின்றவூர் எம்பெருமான் தரிசனம் தருகிறாரே!! என்றதும் "புனலை" என்று கொஞ்சுகிறார்.

திருக்கண்ணமங்கையில் பக்தவத்சல பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது,
திருநின்றவூர் பக்தஜீவனன்  (பக்தவத்சல என்றும் சொல்கிறார்கள்) என்ற எம்பெருமான், வலிய இடையில் புகுந்து கொண்டு, திருமங்கை ஆழ்வாரிடம் தனக்கும் ஒரு மங்களாசாசனம் வாங்கி கொண்டு விட்டார்.