Followers

Search Here...

Showing posts with label ராவணன். Show all posts
Showing posts with label ராவணன். Show all posts

Sunday 20 December 2020

ராவணன் என்ன பேசினான்? சீதா தேவி என்ன சொன்னாள்? ஹனுமானின் கேட்டுக்கொண்டு இருக்கிறார். வால்மீகி ராமாயணம் தெரிந்து கொள்வோமே!

மரத்தில் ஒளிந்து இருக்கும் ஹனுமானை குளிர்விக்க, சந்திரன் (நிலவு ) தன் மிதமான  குளிர்ச்சியை அந்த இரவில் கொடுத்து கொண்டு இருந்தார்.

அப்பொழுது, ஹனுமான், அளவுக்கு மீறிய சுமையை சுமந்து கொண்டு, கடலில் தத்தளிக்கும் படகு போல, தாளமுடியாத சோகத்தை சுமந்து கொண்டு இருக்கும், சீதையை தரிசித்தார்.

(ச ததர்ச தத: சீதாம் பூர்ண சந்திர நிபணனாம் | சோக பாரைர் இவ ந்யஸ்தாம் பாரைர் நாவம் இவாம்பஸி || - வால்மீகி ராமாயணம்)




அந்த வாயு புத்ரன் ஹனுமான், சீதா தேவியோடு, பயங்கர ரூபத்துடன் சூழ்ந்து இருக்கும் ராக்ஷஸிகளை பார்த்தார்.


அந்த ராக்ஷஸிகளில் சிலர் 

  • ஒரு கண்ணுடன் இருந்தார்கள்.
  • சிலர் ஒரு காதுடன் இருந்தார்கள், 
  • சிலர் துருத்திக்கொண்டு இருக்கும் காதுகளோடு இருந்தார்கள், 
  • சிலருடைய காது மாட்டின் காதுகள் போல இருந்தது.
  • சிலருடைய காது யானை காதுகள் போல இருந்தது,
  • சிலருக்கு காதுகளே இல்லை.
  • சிலருக்கு பெரிய காது இருந்தது.
  • சிலருடைய கால்கள் யானை காலாக இருந்தது,
  • சிலருக்கு குதிரை போன்ற காலாக இருந்தது.
  • சிலருக்கு மாட்டு கால் போன்று இருந்தது.
  • சிலருடைய கால்கள் நெளிந்து பல முடிச்சுக்களோடு இருந்தது. 
  • சிலருக்கு ஒரே ஒரு கண் இருந்தது. 
  • சிலருக்கு ஒரே கால் இருந்தது. 
  • சிலருக்கு கால் மிக நீளமாக இருந்தது.
  • சிலருக்கு கால்களே இல்லை.
  • சிலருக்கு தலை பெரிதாக இருந்தது.
  • சிலருக்கு கழுத்து நீண்டு இருந்தது.
  • சிலருக்கு மார்பகம் பெரிதாக இருந்தது.
  • சிலருக்கு வயிறு பெறுத்து இருந்தது 
  • சிலருக்கு முகம் மட்டும் அகண்டு இருந்தது.
  • சிலருக்கு மூக்கு நீண்டு இருந்தது.
  • சிலருக்கு நாக்கு நீண்டு வெளியில் தொங்கி கொண்டு இருந்தது.
  • சிலருக்கு நாக்கே இல்லை.
  • சிலருக்கு மூக்கே இல்லை.

  • சிலருக்கு சிங்கம் போன்ற முகம் இருந்தது.
  • சிலருக்கு மாடு போன்ற முகம் இருந்தது.
  • சிலருக்கு பன்றி போன்ற முகம் இருந்தது.

(ஹஸ்தி-பாதா மஹா-பாதா கோ-பாதா பாதசூடிகா | அதிமாத்ர சிரோ-க்ரீவா அதிமாத்ர குசோதரீ || - வால்மீகி ராமாயணம்)

மயிர் கூச்சரியும் படி, இப்படி பயங்கரமான ரூபத்தில் இருக்கும் ராக்ஷஸிகளை, மரத்தின் மேல் அமர்ந்து இருக்கும் ஹனுமான் பார்க்கிறார்.

பயங்கரமான ராக்ஷஸிகள் சூழ்ந்து இருக்க, மரத்துக்கு அடியில், தேவியும், ராஜகுமாரியுமான அப்பழுக்கற்ற சீதை அமர்ந்து இருப்பதை ஹனுமான் தரிசித்தார்.

பெரும் சோகத்தில் இருந்த சீதையின் நீண்ட கேசம் புழுதி மண்ணால் படர்ந்து இருந்தது.


வானில் ஜொலிக்கும் நக்ஷத்திரம் தன் புண்ணியங்கள் முடிந்ததால், ஒருவேளை பூமியில் வந்து விழுந்து விட்டதோ?

இந்த தேவி அலங்கார ஆபரணங்கள் இல்லாமல் இருக்கிறாளே !

அவளுக்கு இப்பொழுது ஆபரணமாக இருப்பது அவள் கணவனின் மீது உள்ள அன்பும், அக்கரையும் தான் என்று தெரிகிறதே!!


ஒரு தாமரை தனியாக இருந்தாலும், மண்ணில் விழுந்தாலும் அதன் பொலிவு குறையாதது போல, இந்த தேவியின் மேல் புழுதி படர்ந்து இருந்தாலும் பொலிவு குறையாமல் இருக்கிறாளே!

ராக்ஷஸ தலைவன் இவளை சிறைபிடித்து, இவளை தன் சொந்தங்களுடன் இருக்க விடாமல் செய்து விட்டானே!

இந்த தேவியை பார்த்தால், யானை கூட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, சிங்கத்தின் கூட்டத்தில் அகப்பட்ட யானை போல இருக்கிறாளே!

(வியூதாம் சிம்ஹ சம்ருத்தாம் பத்தாம் கஜ வதூம் இவ | - வால்மீகி ராமாயணம்)

நிலவின் கிரணங்களை மேகங்கள் மறைத்து விடுவது போல தேவி இருந்தாள்.

வெகு நாட்கள் வாசிக்கப்படாத வீணை, போல இருந்தாள் தேவி.


இவள் தன் பதிக்கு சேவை செய்ய வேண்டியவள், ராக்ஷஸிகளால் சிறைபிடிக்கப்பட வேண்டியவள் இல்லை.

இந்த அசோக வனத்தின் மத்தியில், சோகம் என்ற பெரும் கடலில் மூழ்கி இருக்கிறாள்.

ரோஹிணி நக்ஷத்திரத்தை க்ரஹங்கள் பிடித்து இருப்பது போல துன்பப்படுகிறாள்.

ஹனுமான் இந்த தேவியை பூக்கள் இல்லாத கொடி போல பார்த்தார்.


புழுதி படர்ந்து இருந்தாலும், நிலவு போன்ற இந்த தேவி, புழுதியை மீறி கொண்டு பேரழகுடன் ஜொலித்தாள்.

அந்த தேவியின் ஆடைகளும் புழுதி படர்ந்து இருந்தது.

மான் போன்ற விழி கொண்ட அந்த தேவி கம்பீரமாகவும், அதே சமயம் மிகவும் மெலிந்து காணப்பட்டாள்.

அதே சமயம், தன் கற்பை திடமாக காத்து கொண்டு இருப்பவளாக காணப்பட்டாள்.


பெரும் பயத்துடன் அந்த மான் விழியாள் அங்கும் இங்கும் பார்த்து கொண்டிருந்தாள்.

(தினமும் ராவணன் வருவான். வந்து விடுவானோ? என்ற பயத்தில் சீதை சிங்கத்திடம் சிறைப்பட்ட மான் போல தவித்து கொண்டிருந்தாள்)


அவள் விடும் பெரு மூச்சில் வெளிப்பட்ட அக்னி காற்று, சுற்றி இருக்கும் இலைகளை எரித்து சாம்பலாக்கி விடுமோ

இவள் சோகத்தின் மறு உருவமோ?

இந்த தேவியின் சோகம், திடீரென்று பல மடங்காக அதிகரித்து காணப்படுகிறதே! 

ஆஹா! இந்த நிலையிலும், பொறுமையை இழக்காமல் இருக்கிறாளே ! 

அலங்காரம் ஆபாரணம் இல்லாமல் போனாலும், இந்த தேவி பொலிவுடன் இருக்கிறாளே!

(தாம் க்ஷமாம் சுவி பக்தாங்கி வின ஆபரண ஷோபிணீம் | - வால்மீகி ராமாயணம்)

ஹனுமான், தான் கண்டு கொண்டு இருப்பது, தான் தேடி வந்த சீதா தேவி தான் என்று உணர்ந்து கொண்டு, எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார்.

கண்களில் கண்ணீர் பெருக, தன் இதயத்தால் ராம, லக்ஷ்மணர்களை தியானத்தார்.




தான் பார்ப்பது சீதை தான் என்றாலும், அவசரப்பட்டு விடாமல், மரத்திலேயே ஒளிந்து தகுந்த சமயம் எதிர்பார்த்து இருந்தார் ஹனுமான்.

இரவு முடிய இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது.

இரவு கொஞ்சம் கொஞ்சமாக வில ஆரம்பிக்க

வேதமும், வேத அங்கங்களும் அறிந்த ஹனுமான் காதில், 'வேத மந்திரங்கள்' கேட்டது.

(சடங்க வேத விதுஷாம் க்ரது ப்ரவர யாஜினாம் | சுஸ்ராவ ப்ரஹ்ம கோஷாம் ச வி-ராத்ரே ப்ரஹ்ம ராக்ஷஸாம் || - வால்மீகி ராமாயணம்)

அதை தொடர்ந்து, மங்கள இசை வாசிக்கப்பட

நீண்ட கைகள் கொண்ட வலிமைமிக்க ராவணன் தன் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.


கலைந்து இருந்த மாலைகள், கேசங்களுடன் இருந்த ராவணனுக்கு, எழுந்தவுடனேயே சீதையின் நினைவு வந்தது.

சீதையை அடையும் ஆசையை அடக்க முடியாமல் இருந்தான் ராவணன்.

உடனே, 

தன்னை அலங்காரம் செய்து, ஆபரணங்களை அணிந்து கொண்டு, பூக்களும், பழங்களும் பூத்து குலுங்கும், தாமரை தடாகங்கள், பல விட பறவைகள் சூழ்ந்து இருக்கும் அசோக வனம் நோக்கி புறப்பட்டான்.


அவன் வந்து கொண்டிருந்த  சாலைகளில், நவரத்தினங்கள் பதித்து இருந்த தோரணங்களை பார்த்து கொண்டே, அசோக வனத்திற்குள் நுழைந்தான்.


நூற்றுக்கணக்கான தேவதை போன்ற பெண்கள் ராவணனை தொடர்ந்து வந்தனர்.

இப்படி வரும் ராவணனை கண்டால், 'இவன் தான் இந்திரனோ!' என்று தோன்றியது.


சிலர் தங்கத்தால் ஆன விளக்கை ஏந்தி கொண்டு இருந்தனர்.

சிலர் ராவணனுக்கு விசிறி கொண்டே வந்தனர்.

சிலர் தங்க பாத்திரத்தில் குளிர்ந்த நீரை கொண்டு வந்தனர்.

இன்னும் சிலர், ராவணன் அமர இருக்கைகளை தூக்கி கொண்டு வந்தனர்.

சிலர் ரத்தினங்கள் பதித்த குவளையில் மதுபானம் சுமந்து கொண்டு வந்தனர்.

இன்னும் சிலர், ராவணனுக்கு தங்கத்தால் ஆன நிலவு போன்ற குடையை எடுத்து கொண்டு வந்தனர்.


இன்னும் தூக்கம் களையாத பெண்களின் மத்தியில் ராவணன், மேக கூட்டத்தில் மிளிரும் மின்னல் போல அசோக வனத்திற்குள் நுழைந்தான்.

ராவணனோடு கூடவே நடந்து வந்த இந்த பெண்கள் வியர்த்து இருந்தனர்.

ஆனாலும் ராவணன் மீது இருந்த காதலாலும், மரியாதையாலும் கூடவே வந்தனர்.


சீதையின் நினைவை சுமந்து கொண்டே, தீய எண்ணத்துடன், காமத்துடன் வரும் ராவணன், சீதை இருக்குமிடம் அருகில் வந்ததும், மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

மரத்தில் சமயம் எதிர்பார்த்து காத்து இருந்த ஹனுமான் காதில், இந்த பெண்கள் அணிந்து இருந்த ஒட்டியானங்கள், வளையல்கள் எழுப்பும் சத்தம் கேட்டது.

இந்த சத்தம் வரும் திசையை பார்த்த ஹனுமான், அளக்க முடியாத வீரமும், ஆண்மையும் கொண்ட ராவணன் வந்து கொண்டிருப்பதை பார்த்தார்.

எண்ணெய் விளக்கை பல பெண்கள் ஏந்தி கொண்டு இருக்க, அதன் நடுவில் ராவணன் ஜொலித்துக்கொண்டு இருந்தான்.

காமத்துடன், சுய பெருமையுடனும், அகம்பாவத்துடன் காணப்பட்டான் ராவணன்.

அவன் கண்கள் சிவப்பாக இருந்தது. அதே சமயம் ஆண் அழகன் போல காணப்பட்டான்.


ஹனுமான் அப்பொழுதும் மரத்திலேயே ஒளிந்து கொண்டு இருந்தார்.

அருகில் வர வர, ஹனுமான் ராவணனை நன்றாக பார்த்தார். 

கூடவே வந்து கொண்டிருந்த இளமையையும் அழகும் குடி கொண்டிருந்த பெண்களையும் பார்த்தார்.


இவர்களோடு, ராவணன் பறவைகளும் மான்களும் துள்ளி விளையாடும் சீதை சிறைபிடித்து வைத்து இருக்கும் இடத்திற்குள் நுழைந்தான்.


ஜொலிக்கும் நக்ஷத்திரங்களுக்கு நடுவே சந்திரன் ஜொலிப்பது போல, ராவணன் காணப்பட்டான்.


"அரண்மனையில் தூங்கி கொண்டிருந்த அதே ராவணன் தான், இங்கு வந்து இருக்கிறான்" என்று புரிந்ததும், 'வந்து இருப்பது நிச்சயம் ராவணன் தான்' என்று புரிந்து கொண்டார் ஹனுமான்.


மேலும் என்ன நடக்கிறது? என்று பார்க்க ஏதுவான திசையில் இருக்கும் கிளைக்கு தாவினார்.


ராவணனுடைய தேஜஸை பார்க்கும் போது, வீரத்தில்-பலத்தில்-அறிவில் மேன்மையுடைய ஹனுமானுடைய தேஜஸ் (பொலிவு) அன்று குறைவாக தெரிந்தது.

(ச ததாப்ய உக்ர தேஜா: சந்நி: தூத: தஸ்ய தேஜஸா | பத்ர குஹ்யாந்தரே சக்தோ ஹனுமான் சம்வ்ருதோ பவத் || - வால்மீகி ராமாயணம்)

மரத்தின் இலைகளுக்கு நடுவே அமர்ந்து கொண்டு ஹனுமான் நடப்பதை கவனித்து கொண்டு இருந்தார்.




கருமையான கூந்தலும், அழகான உடல் அமைப்பும் கொண்ட சீதா தேவியின் அருகில் வந்து நின்றான் ராவணன்.

(இப்படி தினமும் வந்து வந்து நிற்பான் ராவணன்.. கண்டபடி பேசுவான்…)


இளமையும், அழகும், ஆபரணங்கள் அணிந்து ஜொலிக்கும் ராவணனை, அப்பழுக்கற்ற சீதை தலை நிமிர்ந்து பார்த்தாள்.

வாழை மரம் புயல் காற்றால் அசைந்து பரிதவிப்பது போல, சீதை பரிதவித்தாள்.

உடனே சீதா தேவி, தன் கால்களை குறுக்கி தன் வயிற்று பகுதியை மறைத்து கொண்டு, இரு கைகளால் தன் மார்பை மறைத்து கொண்டு, அழ ஆரம்பித்தாள்.


சூறாவளி காற்று நடு கடலில் உள்ள கப்பலை நிலை குலைய செய்வது போல, ராவணன் சீதையை நிலைகுலைய செய்தான்.

சீதாதேவி வெறும் தரையில் அமர்ந்து இருந்தாள்.

தன் சபதத்திலிருந்த நுழுவாத பெண் போல காணப்பட்டாள் சீதை.

உயர்ந்து வளர்ந்த மரத்தில், முறிந்து விழுந்த கிளையோ? என்பது போல காணப்பட்டாள்.

மண்ணில் வீழ்ந்த தாமரை தன் பொலிவை மறைத்து கொண்டாலும் அழகை மறைக்க முடியாதது போல காணப்பட்டாள்!

சீதையின் மனம் என்ற குதிரை, வேகமாக ராமபிரானை நோக்கி சென்றது.

சீதாதேவி காய்ந்து போன இலை போல ஆகி விட்டாள்.

ராமபிரானோடு மனதில் ஐக்கியமாகிவிட்ட சீதை, கண்ணீரில் நனைந்தாள்

தனக்கு ஏற்பட்ட சோகத்தை அமைதியுடன் எதிர் கொண்டாள்.

சீதையின் சோகத்திற்கு முடிவும் தெரியவில்லை.

ஆனாலும், சீதையின் மனது அந்த ராமபிரானை தொடர்ந்து கொண்டு இருந்தது.


சீதா தேவி தன்னை கவ்வி உள்ள இந்த சோகத்தால், பல நாட்கள் பட்டினியால், ராம தியானத்தால், ராவணன் மேல் உள்ள பயத்தால் ஒடுங்கி இருந்தாள்.


உயிரை தரிக்க மட்டும் சிறிது உண்டாள். 

தன் கற்பே தன் சொத்து என்று கட்டி காத்து கொண்டிருந்தாள்.


'ராவணன் ஒழிய வேண்டும், ராமபிரானோடு சேர வேண்டும்' 

என்று கை குவித்து கொண்டு எப்பொழுதும் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தாள் சீதா தேவி.

(ஆயாசமானாம் துக்கார்தாம் ப்ராஞ்லிம் தேவதாம் இவ | பாவேந ரகு முக்யஸ்ய தச க்ரீவ பராபவம் || - வால்மீகி ராமாயணம்)

தன் மரணத்தை தானே வரவழைத்து கொள்ள, ராவணன் சீதையிடம் ஆசை வார்த்தை பேசி மயக்க நினைத்தான்.


தன் எதிரே நிற்கும் ராவணனை பார்க்க சகிக்காமல், அப்பழுக்கற்ற சீதாதேவி அங்கும் இங்கும் ராமபிரானை எதிர்பார்த்து கொண்டு, தனியாக அழுது கொண்டே இருந்தாள்.


சீதாதேவியே கற்புக்கரசி

அவளுடைய ஒழுக்கமே இன்று அவளை பரிதவிக்க செய்கிறது.

ராவணன் சீதாதேவியிடம் பேசலானான்…

"என்னை பார். எதற்காக உன்னை மறைத்து கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய்?

நான் உன்னை விரும்புகிறேன், நீண்ட கண்கள் உடையவளே!

என்னை மதித்து கொஞ்சம் பார், என் அன்பே !


உன் அங்கங்கள் ஒவ்வொன்றும் எத்தனை அழகாக இருக்கிறது.

அனைவரது இதயத்தையும் இந்த அழகு பேதலிக்க செய்து விடும்.


மனிதர்களோ, தேவைக்கு ஏற்றபடி உருவத்தை மாற்றும் சக்தியுள்ள ராக்ஷஸர்களோ! இங்கு இல்லை.

என்னை கண்டு பயம் கொள்ளாதே!


பயந்த பெண்ணே! கடத்தி செல்வதும், மணமான பெண்ணை அணுகுவதும் ராக்ஷஸ தர்மம். 


நீ என்னை விரும்பி ஏற்றுக்கொள்ளாத வரை நான் உன்னை தொட மாட்டேன்.

நான் உனக்காக காத்து கொண்டு இருப்பேன்.

அது வரை, என் காமம் என்னுடனேயே கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஆதலால் பயப்படாதே! 

என்னிடம் பரஸ்பர நம்பிக்கை கொள். என்னை விரும்பு.

சோகப்படாதே!

(ராவணன் ஏன் சீதையை நெருங்க பயந்தான்? என்று அவனே பிறகு சொல்கிறான். இதை தெரிந்து கொள்ள இங்கே படியுங்கள்.)

முடிந்து கொள்ளாத கூந்தலுடன், தரையில் அமர்ந்து கொண்டு, ராமனையே நினைத்துக்கொண்டு, அழுக்கு ஆடையுடன், தேவையே இல்லாமல் பட்டினி இருந்து கொண்டு இருப்பது உனக்கு பொருத்தமே இல்லை.


என்னை ஆனந்தப்படுத்து. 

அற்புதமான ஆடைகள், சந்தனம் கலந்த நறுமண திரவியங்கள், பல வித தேவலோக ஆபரணங்கள், உயர்ந்த ரக பானங்கள், கட்டில்கள், இருக்கைகள், நீ கேட்க அருமையான இசைகள் நாட்டியங்கள், வாத்தியங்கள் இருக்கிறது. அனைத்தும் எடுத்துக்கொள்.


நீ பெண் வர்க்கத்திலேயே ரத்தினம் போன்றவள். இப்படி இருக்காதே!

உன் அங்கங்களில் அழகான ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து கொள்.


என்னை விரும்பிய பிறகு, உனக்கு எந்த குறையும் ஏற்பட வாய்ப்பில்லை.

ஓடும் நதி எப்படி திரும்பாதோ, அது போல, உன்னுடைய உள்ள இளமை போனால் திரும்பாது

அழகானவளே! 

மூன்று உலகத்திலும் ஈடில்லாத உன் அழகை அந்த ப்ரம்ம தேவன் படைத்து விட்டு சோர்ந்து போய் இருப்பான் என்று நினைக்கிறேன்.

உன் அழகை பார்த்து, ஒரு வேளை 'ஆண் மகனாக இருந்தால்', ப்ரம்ம தேவனும் மதி மயங்கி இருப்பான் என்று நினைக்கிறேன்.

நான் உன் அங்கத்தில் உள்ள எந்த இடத்தை பார்த்தாலும், என்னால் அந்த இடத்தை விட்டு, என் கண்ணை எடுக்கவே முடியவில்லை.

(யத்யத் பஸ்யாமி தே காத்ரம் சீதாம்சு ஸத்ருஸானனே | தஸ்மிம் தஸ்மிந் ப்ருது ஸ்ரோனி சக்ஷு: மம நிபத்யதே || - வால்மீகி ராமாயணம்)

உன் அறியாமையை விட்டு விட்டு, எனக்கு மனைவியாக ஆகி விடு.

உன்னையே இந்த அனைத்து பெண்களுக்கும் மேல் அமர்த்தி பட்டத்து மகிஷி ஆக்குகிறேன்.

உனக்கே முதன்மை கிடைக்க செய்கிறேன்.

இந்த உலகங்களில் போர் செய்து, என்னென்ன செல்வங்கள் நான் கைப்பற்றினோ அனைத்தும் உனக்குத் தான்.

இந்த ராஜ்யமே உனக்கு தான்.

அது மட்டுமல்ல, நானே உனக்கு உரியவன் தான்.


வேண்டுமென்றால் சொல்.. 

உனக்காக இந்த உலகத்தை அடிமை படுத்தி, அனைத்தையும் உன் தந்தை ஜனகருக்கு உனக்காக தருகிறேன்.


குழந்தை போல விளையாடி பிடிவாதம் செய்பவளே! 

எந்த உலகத்திலும் என்னை எதிர்க்க ஆள் இல்லை.

என் வலிமை போர்க்களத்தில் அளவிடமுடியாதது.




சொர்க்கத்தில் உள்ள தேவர்களும், அசுரர்களும் கூட என்னால் விழ்த்தப்பட்டு, அவர்கள் வெற்றி கொடிகள் ஒழிக்கப்பட்டு விட்டது. அவர்களாலும் என் எதிரில் நிற்க முடியாது.

இந்த உயர்ந்த ஆபரணஙகள் உன்னை அலங்கரிக்கட்டும்.

உன் அனுமதியோடு, இந்த வேலையாட்கள் உனக்கு புது ஆடைகளும், ஆபரணங்களும் அணிவிப்பார்கள்.


அழகிய முகம் கொண்டவளே! நான் உன்னை சர்வ ஆபரணங்களோடு, புது ஆடைகள் அணிந்து பார்க்க ஆசைப்படுகிறேன்.

சந்தோஷத்தை அனுபவி. 

என்ன வேண்டுமோ பருகி கொள். நீ விருப்பப்பட்ட படி விளையாடு.

உன் உறவினர்கள் அனைவருக்கும் என்ன கொடுக்க ஆசைப்பட்டாலும் கொடு.

எனக்கு நீ ஆணை இடு.

என்னிடம் கூச்சமில்லாமல் விளையாடு.


என்னால் உன் உறவினர்கள் அனைவருமே இனி ஆனந்தமாக வாழ போகிறார்கள்.

என்னுடைய புகழையும், செல்வத்தையும் பார்.

மரத்தின் பட்டையை ஆடையாக அணிந்து கொண்டு அலையும் அந்த ராமனை வைத்து கொண்டு என்ன செய்ய போகிறாய்?

அவன் வெற்றியையும் தொலைத்தவன். செல்வத்தையும் தொலைத்தவன்.

அவன் கேவலம் ஒரு வனவாசி.

தரையில் படுத்து உறங்குபவன்.

செல்வமில்லாத ஏழை. 

அவன் உயிரோடு இன்னும் இருக்கிறானோ என்பதே எனக்கு சந்தேகம் தான்.

ராமன் இனி உன்னை பார்க்கவே இயலாது 

மின்னல் போன்ற நீ, மழை மேகங்கள் போன்ற என்னால் சூழப்பட்டு இருக்கிறாய்.

ராமன் உன்னை திருப்பி கொண்டு செல்லவே முடியாது.

உன் சிரிப்பு எத்தனை அழகானது.

உன் பல் வரிசையும் அழகு. 

உன் கண்கள் அழகு.

உன் விளையாட்டு குணமும் அழகு. 

எப்படி கருடனுக்கு நாகங்களை கண்டால் ஒரு ஈர்ப்பு வருமோ, அது போல, நீ என் இதயத்தை ஈர்க்கிறாய்.

(மனோ ஹரசி மே பீரு சுபர்ண: பன்னகம் யதா || - வால்மீகி ராமாயணம்)

நீ புழுதி படிந்து இருந்தாலும், உன்னை பார்த்தாலேயே, என் மனைவிகளின் மீது உள்ள ஆசை கூட மறைந்து போய் விடுகிறது.

(க்லிஷ்ட கௌசேய வசனாம் தன்வீமப்யன் அலங்கருதாம் | தாம் த்ருஷ்ட்வா ஸ்வேஷு தாரேஷு ரதிம் நோபலபாம்யஹம் || - வால்மீகி ராமாயணம்

என்னுடைய அந்தப்புரத்தில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் நீயே தலைவியாக இரு. அனைத்து செல்வங்களையும் நீயே பெற்றுக்கொள், ஜானகீ !

(அந்தபுர நிவாசின்ய: ஸ்திரிய: சர்வ குணான்விதா: | யாவந்த்யோ மம சர்வாஸாம் ஐஸ்வர்யம் குரு ஜானகி || - வால்மீகி ராமாயணம்

மூவுலகிலும் உள்ள அழகிய பெண்கள் அனைவரும், என் அரண்மனையில் உள்ளனர்.

இவர்கள் அனைவரும், லஷ்மிக்கு பணிவிடை செய்வது போல, உனக்கு பணிவிடை செய்வார்கள்.


குபேரனின் செல்வமும், தேவர்களின் செல்வமும் உனக்கு தான். எடுத்துக்கொள்.

அனைத்தையும் என்னோடு அனுபவி.


தவத்திலும், அழகிலும், வலிமையிலும், செல்வத்திலும், பொலிவிலும், புகழிலும், ராமன் எனக்கு நிகரில்லை.

(ந ராம தபஸா தேவி ந பலேன ந விக்ரமை: | ந தனேன மயா துல்ய தேஜஸா யக்ஷஸ்சாபி வா || - வால்மீகி ராமாயணம்)

விருப்பப்பட்டபடி எது வேண்டுமோ அருந்து, விளையாடு, ஆனந்தமாக இரு.


உனக்கு என் செல்வம் அனைத்தையும், ராஜ்யத்தையும் தருகிறேன்.

என்னை விரும்பு. என்னை குதூகலப்படுத்து.

ஏ அழகானவளே! உன் உறவினர்கள் அனைத்து ஆனந்தமும் அடையட்டும்.

உன்னை இந்த ஆபரணங்களால் அலங்கரித்து கொள்.

என்னோடு ஆனந்தமாக மரங்கள் நிறைந்த இந்த தோட்டத்தில் விளையாடு."

இப்படி வாய்க்கு வந்தபடி, பேசிய ராவணனை பார்த்து, துன்பம் நிறைந்த குரலோடு சீதா தேவி பேச தொடங்கினாள்..

மனதில் ராமபிரானையே நினைத்து கொண்டு, கற்புக்கரசியான சீதா தேவி, ஒரு புல்லை பிடுங்கி ராவணன் முன்பாக வைத்து விட்டு, சிரித்து கொண்டே பேசத் தொடங்கினாள்.


சீதா தேவி ராவணன் முன் வைத்த புல் பல அர்த்தங்களை தோற்றுவித்தது...


* ஒரு பெண் அமர்ந்து இருக்க, ஒரு ஆண் நின்று கொண்டு பேச வேண்டாமே! என்று நினைத்து, ராவணனுக்கு புல் ஆசனம் போட்டது போல இருந்ததாம்..


* மற்ற ஆண்களிடம் பேசும் போது கோஷா நியமத்துடன் பேசும் சீதாதேவி, ராவணனிடம் பேச வேண்டும் என்பதற்காக, இந்த புல்லையே தனக்கு திரையாக போட்டு கொண்டது போல இருந்ததாம்


* ராவணா! 'நீ என்னிடம் இப்போது பேசியது இந்த புல்லுக்கு சமமாக இருந்தது' என்பது போல இருந்ததாம்.


* ராவணா! 'விலங்குக்கு தான், தன் மனைவி, பிறர் மனைவி என்ற தர்மமே கிடையாது. நீயும் ஒரு விலங்காக இருப்பதால், இத்தனை நேரம் கத்தியதற்கு இதோ புல் போடுகிறேன்... சாப்பிடு' என்பது போல இருந்ததாம்.


* ராவணா! நீ உன்னை பராக்கிரமசாலி என்று சொல்லி கொள்கிறாயே! ராமரையும் லக்ஷ்மணனையும் அப்புறப்படுத்தி விட்டு என்னை கடத்திய போதே உன் பராக்கிரம் என்ன என்று தெரிந்து விட்டது.. உன் பராக்கிரம் இந்த புல்லுக்கு சமமாக இருந்தது' என்பது போல இருந்ததாம்.


* ராவணா! நீ வைத்திருக்கும் ஐஸ்வர்யம் அனைத்தும், என்னை பொறுத்தியவரை இந்த புல்லுக்கு சமம்' என்பது போல இருந்ததாம்.


* ராவணா! ராஜரிஷியாக இருக்கும் என் தகப்பனார் ஜனகருக்கும், நீ வைத்திருக்கும் ஐஸ்வர்யம் அனைத்தும், இந்த புல்லுக்கு சமம்' என்பது போல இருந்ததாம்.


* ராவணா! 'எனக்கு துணை யாருமில்லை என்று நினைக்காதே! என்னை தீண்ட நினைத்த காகாசுரனை தண்டிக்க, அருகில் இருந்த ஒரு புல்லை எடுத்து தான், ப்ரம்மாஸ்திரமாக ப்ரயோகம் செய்தார் ஸ்ரீ ராமர். அன்று ராமர் புல்லையே ஆயுதமாக தொடுத்தார். அந்த புல்லை உனக்கு ஞாபகபடுத்தி எச்சரிக்கிறேன்' என்பது போல இருந்ததாம்.


* ராவணா! 'ராமபிரான் மட்டும் தான் புல்லை அஸ்திரமாக விட முடியும் என்று நினைத்து விடாதே! என் கற்பு என்ற அக்னியால், இன்று நான் உன் முன் வைக்கும் புல்லே உன்னை பொசுக்கிவிடும்..ஜாக்கிரதை' என்பது போல இருந்ததாம்.


* ராவணா! 'எனக்கு இங்கு துணை யாருமில்லை என்று நினைக்காதே! அன்று தூணில் இருந்து வெளிப்பட்டு ஹிரண்யகசிபுவை கொன்றார். இன்று இந்த புல்லிலிருந்தே வெளிப்பட்டு உன்னை கிழித்து எறிந்து விடுவார்..ஜாக்கிரதை' என்பது போல இருந்ததாம்.


இப்படி பல அர்த்தங்கள் ராவணன் மனதில் தோற்றுவிப்பது போல ஒரு புல்லை எடுத்து வைத்து விட்டு, சிரித்து கொண்டே பேச தொடங்கினாள் சீதாதேவி...


"என் பற்றிய நினைவை நிறுத்து. உன் சொந்தங்கள் நன்றாக இருக்க அவர்களின் மீது உன் கவனத்தை திருப்பு.

பாவ காரியங்கள் செய்பவனுக்கு ஒரு போதும் தெய்வீக அனுபவங்கள் கிடைக்காது. அது போல நீ என்னை ஒருபோதும் நெருங்க முடியாது.

நல் ஒழுக்கமுள்ள நான், உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, உயர்ந்த குடும்பத்தில் உள்ளவரை மணம் செய்து கொண்டு, எந்த கீழ்த்தரமான காரியமும் செய்வேன் என்று எதிர்பார்க்காதே!" 

என்று சொல்லிக்கொண்டே சீதாதேவி, ராவணனை பார்க்க விருப்பமில்லா சீதை அவனுக்கு எதிர் திசையில் திரும்பி கொண்டு, மேலும் பேச ஆரம்பித்தாள்.

"நான் வேறொருவரின் ஒழுக்கம் மீறாத மனைவி. உன்னுடையவள் அல்ல. 

நீ தர்மத்தில் ஒழுக்கமாக வாழ்பவர்களை கொஞ்சம் பார்.

அவர்களை போல நாமும் வாழ்வோமே! என்று முயற்சி செய்.


உன் மனைவிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீ  நினைப்பது போல தானே மற்றவர்கள் மனைவி பாதுகாக்கப்பட வேண்டும்?

மற்றவர்கள் எண்ணத்தை புரிந்து கொள்ள கற்று கொண்டு, நீ உன் மனைவிகளுடன் திருப்தி கொள்.


எவன் ஒருவன் தன் மனைவி போதாது என்று திருப்தி கொள்ளாமல், புலன்கள் அடங்காமல், காம புத்தியுடன் இருக்கிறானோ, அவன் மற்றவர்களின் மனைவிகளால் பெரும் அவமானத்திற்கு உள்ளாவான்.

இங்கு ஒரு நல்லவன் கிடையாதா?

அல்லது, நீ அப்படிப்பட்ட நல்லவர்கள் சொல்வதை கேட்கும் பழக்கமே கிடையாதா?

அல்லது, நல்லவர்கள் இருந்தும்,  உன்னுடைய புத்தி இப்படி கீழ்த்தரமானதாகவே உள்ளதா?

(இஹ சந்தோ ந வா சந்தி சதோ வா ந அனுவர்தசே | வசோ மித்யா ப்ரநீத ஆத்மா பத்யமுக்தம் விசேக்ஷனை: || - வால்மீகி ராமாயணம்

நீ நல்லவர்கள் சொல்வதை கேட்காமல், முட்டாள்கள் பேச்சை கேட்டு கொண்டு, உன் ராக்ஷஸ இனத்தையே அழிக்க போகிறாய்.

ஒழுக்கமில்லாத அரசனால், செல்வ செழிப்பு உள்ள நகரமும், நாடும் கூட அழிந்து போகும்.

அது போல, 

உன்னை போன்ற ஒரே ஒருவன் செய்யும் தவறால், இந்த செல்வ செழிப்பு மிக்க இலங்கை வேகமாக அழியப்போகிறது.

குறுகிய புத்தி கொண்ட நீ, இதுவரை செய்த கீழ்த்தரமான செயலால் அழிய போவதை கண்டு, நல்லவர்கள் ஆனந்தம் அடையப் போகிறார்கள்.


'பாவி' என்ற உன்னை உலகம் சொல்லப்போகிறது.

நீ கஷ்ட காலத்தை சந்திக்கும் போது 'நல்லவேளையாக ராவணன் ஒழியப்போகிறான்' என்று பேச போகிறார்கள்.

உன்னுடைய சக்தியாலோ, செல்வத்தாலோ என்னை மயக்க முடியாது.

சூரியனையும் அதன் கிரணங்களையும் பிரிக்க முடியாதது போல, நான் என் ராகவனை விட்டு பிரியாதவள்.

ஒரு ஒழுக்கமுள்ள பெண் தன் கணவனை விட்டு, வேறொருவன் கைகளை தலையணையாக வைத்து உறங்குவாளோ?

(உபதாய புஜம் தஸ்ய லோகநாதஸ்ய ஸத்க்ருதம் | கதம் நாமோ பதாஸ்யாமி புஜ மன்யஸ்ய கஸ்ய சித் || - வால்மீகி ராமாயணம்)

ஒழுக்கம் உள்ளவன் ஞானத்தை கொண்டு இருப்பது போல, நான் ராகவனுக்கு சொந்தமானவள்.

ஒரு பெண் யானையை, அதனுடைய ஆண் யானையிடம் சேர்ப்பது போல, என்னை ராமபிரானிடம் அனுப்பி விடு.


நீ வெகு நாள் அழிக்கப்படாமல் வாழ நினைத்தால், ராமபிரானோடு நட்பு கொள்.

ராமபிரான் தன்னை அண்டியவர்களை, ஒரு தந்தை போல பார்த்து கொள்வார் 

உயிர் வாழ ஆசை இருந்தால், அவரோடு நட்பு கொள்.

அவருக்கு முன்னால் என்னை அனுப்பி, அவரை மகிழ்ச்சி படுத்து.

இதுவே உனக்கு நலன். இல்லையேல் நீ மரணித்து போவாய்.

இந்திரன் கூட தன் வஜ்ராயுதத்தை கீழே போடலாம். 

எமன் கூட நீ நீண்ட நாள் வாழ வழி விடலாம்.

ஆனால், 

உலகத்திற்கே தலைவனான ராகவனின் கோபத்தில் இருந்து நீ தப்பிக்க முடியாது.

(த்வத்விதம் ந து சங்க்ருத்தோ லோகநாத: ச ராகவா | - வால்மீகி ராமாயணம்)

சீக்கிரத்தில், நீ ராகவனின் வில்லிலிருந்து புறப்படும் இடி போன்ற சத்தத்தை கேட்க போகிறாய்.

அந்த கோதண்டத்தில் இருந்து அம்பு மழை பொழிய போகிறது.


ராம, லக்ஷ்மணர்களின் அம்பு மழையில் இந்த நகரத்தில் உள்ள ராக்ஷஸர்கள் வீழப்போகிறார்கள்.

உன்னுடைய கோட்டையை ஒரு அங்குலம் கூட விடாமல் அம்புகளால் நிரப்பி விடுவார்கள்.

ராகவன் என்ற கருடன் வந்து, இங்கு இருக்கும் பாம்பு போன்ற ராக்ஷஸர்களை கொத்தி பறக்கப் போகிறது.


விஷ்ணு ஒரே நொடியில் மூன்றடியில் ப்ரம்ம லோகம் வரை அளந்து அசுரர்களிடமிருந்து கைப்பற்றியது போல, ராகவன் என்னை உடனே எடுத்து சென்று விடுவார்.


14000 ராக்ஷஸர்களை ஜநஸ்த்தானத்தில் ஒரே ஆளாக ஒழித்த ராகவனிடம் நேரிடையாக போர் புரிய இயலாதவன் நீ. அதனால் தானே இந்த பெரிய குற்றத்தை செய்தாய்.




அற்பனே!  சிங்கம் போன்ற சகோதரர்கள் ஆசிரமத்தில் இல்லாத சமயத்தில் தானே என்னை கடத்தினாய்.

ராம, லக்ஷ்மண சகோதரர்களை தீண்டிய காற்று உன் மீது பட்டால் கூட உன்னால் ஸ்திரமாக நிற்க முடியாது.

ராமபிரானோடு நீ பகை கொள்வது உனக்கு நல்லதல்ல.

(ந ஹி கந்தம் உபாக்ராய ராம லக்ஷ்மண யோஸ் த்வயா | சக்யம் சந்தர்சன ஸ்தாதும் சுனா சார்தூலயோ: இவ || - வால்மீகி ராமாயணம்)

இந்திரன் கையிலிருந்து புறப்பட்ட ஆயுதம், வ்ருத்ராசுரன் கையை அறுத்தது போல, ராமபிரானால் ஒழிக்கப்பட போகிறாய்.


சூரியன் தன் அக்னி கிரணங்களால் தண்ணீரை உறுஞ்சி விடுவது போல, ராம லக்ஷ்மணர்களிடமிருந்து புறப்படும் அம்புகள் உன் உயிரை உறிஞ்சி விடும்.


நீ குபேரனிடம் தஞ்சம் புகுந்தாலும் சரி, வருணனிடம் தஞ்சம் அடைந்தாலும் சரி, ராம பானத்திலிருந்து நீ எங்கு ஓடினாலும் தப்பிக்க முடியாது.

பெரிய இடியால் பெரிய மரம் கருகி சாய்வது போல, நீ அழிக்கப்பட்டு விடுவாய்." என்று கர்ஜித்தாள் சீதை.

(கிரிம் குபேரஸ்ய கதோ தவாலயம் சபாம் கதோ வா வருணஸ்ய ராஞ: | அஸம்சயம் தாசரதேர்ந மோக்ஷ்யசே மஹாத்ரும: கால ஹதோ சனேரிவ || - வால்மீகி ராமாயணம்)

சீதாதேவியின் கடுமையான சொற்களை கேட்டு, ஆண்மகனான ராவணன் கடும் கோபத்துடன் பேசலானான்…

"எத்தனைக்கு எத்தனை சாந்தமாக ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணிடம் பேசுகிறானோ! அத்தனைக்கு அத்தனை அவன் அவளுக்கு அடி பணிந்து போவான்.

எத்தனைக்கு எத்தனை கனிந்த வார்த்தை பேசுவானோ! அத்தனைக்கு அத்தனை அவளால் அவமானப்படுத்தப்படுவான்.

(யதா யதா சாந்த்வயிதா வஸ்ய" ஸ்த்ரீனாம் ததா ததா |

யதா யதா ப்ரியம் வக்தா பரிபூத: ததா ததா || - வால்மீகி ராமாயணம்)

அடங்காத குதிரையை தேரோட்டி அடக்குவது போல, எனக்குள் ஏற்படும் அடங்காத கோபத்தை, உன் மீது உள்ள ஆசையின் காரணத்தால் அடக்கி கொண்டு இருக்கிறேன்.

நாம் விரும்புபவர்கள் மீது பொதுவாக இரக்கம் ஏற்படும்.

அதன் காரணத்தாலேயே, காட்டில் வனவாசியாக வாழும் ஒருவனை நினைத்து கொண்டு, என்னை அவமதித்த உனக்கு, மரண தண்டனை கொடுக்காமல் இருக்கிறேன். 

நீ பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் உனக்கு மரண தண்டனை கொடுத்து இருக்க வேண்டும்."

இப்படி பேசிய ராவணன், மேலும் சீதாதேவியை பார்த்து பேசலானான்..

"இன்னும் 2 மாதங்கள் தான் உனக்கு அவகாசம்.

அதற்கு பிறகும் நீ என் படுக்கைக்கு வர மறுத்தால், என் சமயலறையில், உன்னை துண்டு போட்டு, காலை உணவாக சாப்பிட்டு விடுவேன்." என்று சொன்னான்.

(த்வெள மாசௌ ரக்ஷிதவ்யோ மே யோ வதிஸ்தே மயா க்ருத: |

தத: சயனம் ஆரோஹ மாமா த்வம் வர வர்ணினி || ஊர்த்வம் த்வாம்யாம் து மாசாப்யாம் பர்தாரம் மாம் அனிச்சதீம் |

மம த்வாம் ப்ராத ராசார்தம் ஆரபந்ததே மஹானஸே || - வால்மீகி ராமாயணம்

சீதையிடம் ராவணன் இப்படி பேச, ராவணனின் மனைவிகளாக இருந்த கந்தர்வ பெண்கள், சீதையின் நிலை கண்டு வருந்தினர்.

அவர்களின் முக பாவனையால், சீதைக்கு சமாதானம் செய்தனர்.

இதை கவனித்த சீதை, தன்னை நிதானப்படுத்தி கொண்டு, ராவணனை பார்த்து பேசலானாள்

"நீ நன்றாக வாழ வேண்டும் என்று இந்த நகரத்தில் நினைப்பவர்கள் யாரும் இல்லை என்று நிச்சயமாக தெரிகிறது. 

யாரும் உன்னுடைய கீழ்த்தரமான வேலையை தடுக்க மாட்டார்கள்.

சசி தேவி இந்திரனுக்கு எப்படியோ, அது போல, நான் தர்மமே உருவானவரின் மனைவி. 

கீழ் தரமான உன்னை தவிர, யார் என்னை மனதால் ஆசைப்படபோகிறார்கள்?.

கீழ்த்தர புத்தி கொண்ட ராக்ஷஸனே! 

எல்லையில்லா பெருமை கொண்ட ராமபிரானின் பத்னியான என்னிடம் கடும் சொற்களை பேசி விட்டு, எப்படி உன் பாவத்தை கழிக்க போகிறாய்?


ராமபிரான் மதம் கொண்ட யானை போன்றவர். அவருக்கு முன்னால் நீ ஒரு முயல்.

மதம் கொண்ட யானைக்கு முன் போர் செய்ய முயல் ஆசைப்படுமா?

(யதா த்ருப்தஸ்ச மாதங்க: சசஸ் ச சஹிதொள வனே |

ததா த்விரதவத்ராம் ஹஸ்த்வம் நீச சசவத்ஸ்ம்ருத: || - வால்மீகி ராமாயணம்

ஒரு முறை கூட நேரில் ராமபிரானை சந்திக்காமல், அவரை பற்றி கீழ் தரமாக பேசுகிறாயே! உனக்கு வெட்கமாக இல்லை?

(ச த்வம் இக்ஷ்வாகு நாதம் வை க்ஷிபன் இஹ ந லஜ்ஜசே |

சக்ஷுஷோ விஷயம் தஸ்ய ந தாவத் உப கச்சசி || - வால்மீகி ராமாயணம்

என்னை பார்க்கும் உன்னுடைய இந்த குரூரமான அசிங்கமான கண்கள் ஏன் இன்னும் கீழே விழவில்லை?

தசரதரின் மருமகளான என்னை பற்றி தரம் தாழ்த்தி பேசிய உன்னுடைய நாக்கு இன்னும் துண்டு துண்டாகவில்லையே !


நான் பதிவ்ரதை என்ற தபசில் இருப்பதால், ராமபிரானின் அனுமதி இல்லாததால், உன்னை என்னுடைய பாதிவ்ரதத்தால் பொசுக்காமல் இருக்கிறேன்.

என்னை ராமபிரானை விட்டு கடத்தவே முடியாது. 

இது நடந்து இருக்கிறது என்பதாலேயே, விதி உன் மரணத்தை தீர்மானித்து விட்டது என்று உணர்கிறேன்.




நீ உன்னையே பலவான் என்றும், சூரன் என்றும் சொல்லிக்கொள்கிறாய்.

அடுத்தவன் வீட்டில் புகுந்து, அந்த வீட்டில் உள்ள புருஷன் வெளியே இருக்கும் போது, அவனுடைய மனைவியை கடத்துவது தான் வலிமையா? உனக்கு வெட்கமாக இல்லை?"

என்று மீண்டும் கர்ஜித்தாள்.


சீதா தேவியின் பேச்சை கேட்ட ராவணனுக்கு, கோபம் பீறிட்டு கண்களில் தெரிந்தது.


கருமையான மேகம் போல, நீண்ட கைகளுடைய, உறுதியான கழுத்து கொண்ட ராவணன், சிங்கம் போல அங்கும் இங்கும் நடந்தான்.

அவன் கண்களும், நாக்கும் ஜொலிக்க, அவன் கிரீடம் அசைந்தது.

உயரமானவனாக இருந்தான். 

மிகவும் அழகான ஆபரணங்கள், கைக்கு காப்பு அணிந்து இருந்தான்.

அவனது இடுப்பில் அலங்காரமாக  சுற்றிக்கொண்டு இருக்கும் ஆபரணத்தை பார்த்தால், மந்திர மலையை கட்டி இருக்கும் வாசுகியை போல இருந்தது.

இவன் இரு கைகள் தான் மந்திர மலையோ? என்று தோன்றியது.

இவன் காதுகளில் அணிந்து இருந்த குண்டலங்கள் உதய சூரியனோ? என்பது போல இருந்தது.

ராவணனை பார்த்தால், எதை கேட்டாலும் கொடுக்கும் கற்பக வ்ருக்ஷமோ? என்று தோன்றியது.

இத்தனை ஆபரணங்கள் அணிந்து அலங்கரித்து கொண்டு இருந்தாலும், ராவணன் 'சுடுகாட்டு நிலம் போல' பயங்கரமாக காணப்பட்டான்.


சீதையை பார்க்க பார்க்க அவன் கண்கள் சிவந்தது.

அவளை தன் வசம் திருப்ப முடியாததால் பெருமூச்சு விட்ட ராவணன், மேலும் பேசலானான்…

"நீ இன்னும் அந்த ப்ரயோஜனமில்லாத, செல்வத்தை தொலைத்து நிற்கும் ராமனையா நினைத்து கொண்டு இருக்கிறாய்?

எப்படி சூரியன் இருளை விரட்டுமோ, அது போல, இப்பொழுதே உன்னை கொன்று விடுகிறேன்"

என்று சொன்ன ராவணன், ஒரு கண், ஒரு காது, யானை கால், நீண்ட மூக்கு என்று இருக்கும் பலவிதமான பயங்கரமான ராக்ஷஸிகளை பார்த்து கட்டளை இட்டான்.

"இந்த சீதையை எந்த முயற்சி செய்தாவது வெகு சீக்கிரத்தில் என் ஆளுமைக்கு கொண்டு வர வேண்டும்.

பயமுறுத்தி பார். சமாதானம் செய்து பார். 

என்ன கேட்கிறாளோ கொடுத்துப் பார். 

கடும் சொற்களால் இவளை வேதனைப்படுத்து"

என்று ராக்ஷஸிகளுக்கு கட்டளை இட்டு கொண்டு இருக்க, தன்யமாலினி ராவணனின் அருகில் வந்து பேச தொடங்கினாள்..

"பேரரசே! என்னுடன் விளையாடுங்கள். சீதையை ஏன் கொடுமைப்படுத்துகிறீர்கள்?

அவளே சோகத்தினால் வெளுத்து போய் இருக்கிறாள்.

அவளை பார்க்கவும் பரிதாபமாக இருக்கிறது.


இவள் ஒரு சாதாரண மனித பிறவி. நீங்களோ ராக்ஷஸர்களின் அரசன். மனிதர்களை விட உயர்ந்தவர்கள் ராக்ஷஸர்கள்.

உங்கள் கைகளில் படுத்து உலக செல்வத்தை அடையும் பாக்கியம் அவளுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.


விருப்பமில்லாத பெண்ணிடம், காமத்தோடு ஒரு ஆண்மகன்  உறவாடினால், அவன் உடல் பாரமே அவளுக்கு வேதனை தரும்.

இருவரும் விருப்பப்பட்டு உறவாடினால், இருவருமே திருப்தி கொள்வார்கள்" என்று பேசினாள்.

(அ-காமம் காமயானஸ்ய சரீரம் உபதப்யதே |

இச்சந்தீம் காமயானஸ்ய ப்ரீதி: பவதி சோபனா || - வால்மீகி ராமாயணம்)

இதை கேட்ட ராவணன், இடி இடிப்பது போல சிரித்து விட்டு, தன் அரண்மனைக்கு திரும்பினான்.

கூடவே வந்த கந்தர்வ பெண்களும், நாக கன்னிகைகளும், ராவணனோடு அரண்மனைக்கு திரும்பினர்.

Wednesday 7 October 2020

சீதாதேவி அக்னி பிரவேசம். ராவணன் கொல்லப்பட்டான். யுத்தம் முடிந்த பிறகு பட்டாபிஷேகம் வரை என்ன நடந்தது? சீதாதேவி என்ன நினைத்தாள்? ராமபிரான் என்ன பேசினார்? பிரம்மா, சிவன், அக்னிதேவன், இந்திரன் என்ன சொன்னார்கள்? பட்டாபிஷேகம் வரை நடந்த நிகழ்வை தெரிந்து கொள்வோமே... வால்மீகி ராமாயணம்

ராவணனின் தலையை கொய்து எறிந்தும், மீண்டும் அவன் தலை பழையது போலவே வளர்ந்தது. இப்படியே '101 தடவை தலையை கொய்து எறிந்தும்' சாகாமல் இருந்தான் ராக்ஷஸ தலைவன் ராவணன்.


"கர தூஷர்களை, வாலியை, 7 சால வ்ருக்ஷத்தை ஒரே அம்பினால் சாய்த்த தன் ராம பானம் ராவணனை சாய்க்க முடியாமல் இருக்கிறதே!
என்று ஆச்சரியப்பட, 
இந்திரன் கொடுத்த தேரை ஒட்டும் 'மாதலி' என்ற சாரதி, ராமபிரானை பார்த்து, 
'தேவ ரகசியம் தெரியாதது போல இருக்கிறீர்களே!! ப்ரம்மாஸ்திரம் மட்டுமே இவனை கொல்லும் சக்தி உடையது என்று உங்களுக்கு தெரியாதா? அதை இப்பொழுதே செலுத்துங்கள்" என்றார்.

மாதலியின் வாக்கை ஏற்று கொண்ட ராமபிரான், ப்ரம்மாஸ்திரத்தை ராவணன் மார்பை நோக்கி செலுத்த, அவன் மார்பில் இடி போல விழுந்தது.

ராவணன் ஒழிந்தான். 




ராவணன் ஒழிந்த பின், தான் கைப்பற்றிய இலங்கையை, அப்படியே விபீஷணனுக்கு கொடுத்து, அவரையே இலங்கைக்கு அரசனாக்கினார் ராமபிரான்.
ராமபிரான், ஹனுமானிடம்
"இலங்கை அரசர் விபீஷணன் அனுமதியுடன், இலங்கை நகருக்குள் பிரவேசித்து, ராவணன் இருந்த இடத்திற்கு செல்லுங்கள்.
 
அங்கு சீதையிடம், சுக்ரீவன் மற்றும் லக்ஷ்மணனோடு சேர்ந்து நான் பெற்ற வெற்றி செய்தியை சொல்லுங்கள். 

மைதிலியிடம், ராவணன் எப்படி அழிக்கப்பட்டான்? என்றும் விவரித்து சொல்லுங்கள். 

ஓ ஜெய ஹனுமான்! என் வெற்றியை விவரமாக சொல்லி, சீதை எனக்கு சொல்லும் சேதியை என்னிடம் வந்து சொல்லுங்கள்."
(ப்ரியமே தத் உதாஹ்ருத்ய மைதில்யாஸ்த்வம் ஹரீஸ்வர | ப்ரதிக்ருஹ்ய ச சந்தேஷம் உபாவர்திதும் அர்ஹசி || - வால்மீகி ராமாயணம்)
என்றார்.

ராமபிரானின் ஆணையை ஏற்று, விபீஷணன் அனுமதியுடன் ஹனுமான் ராவணன் இடத்திற்கு சென்றார்.

அங்கு சோகமே உருவான சீதா தேவி, அசோக மரத்தின் அடியில், ராக்ஷஸிகள் சூழ அமர்ந்து இருந்தாள்.

ஹனுமான் சீதா தேவியின் அருகில் வந்து கைக்குவித்து நின்றார்.

ஹனுமானை பார்த்த சீதை முக மலர்ச்சி கொண்டாள். ஆனால் அமைதியாகவே இருந்தாள்.
சீதா தேவியின் முக மலர்ச்சியை பார்த்த ஹனுமான், ராமபிரான் சொன்ன விஷயங்களை தெரிவிக்கலானார்.
"ராமபிரானும், சுக்ரீவ, லக்ஷ்மண, விபீஷண மற்றும் அனைத்து வானரர்களும் நலமாக இருக்கிறார்கள்.

உங்கள் நலனை (குசலம்) பற்றியும் ராமபிரான் விஜாரிக்க சொன்னார். 
ராமபிரானின் எதிரிகள் அனைவரும் அழிக்கப்பட்டு விட்டனர்.
(குசலம் சாஹ சித்தார்த்தோ ஹத சத்ருரரின்தம: || - வால்மீகி ராமாயணம்)

மிகவும் மகிழ்ச்சியுடன் உங்களிடம் இதை தெரிவிக்க சொன்னார்.
(அப்ரவீத் பரம ப்ரீத: க்ருதார்த்தேன அந்தராத்மா| - வால்மீகி ராமாயணம்)

தர்மம் அறிந்த உங்களை, ராமபிரான் வரவேற்கிறார். 
நல்ல வேளையாக நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள். 
பெரும் வெற்றியை அடைந்து இருக்கிறார் ராமபிரான்.
சோகத்தை விட்டு விட்டு, மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

ராவணன் என்ற பகைவன் இன்று ஒழிக்கப்பட்டான். 
ராமபிரானுடைய தூக்கமில்லா கடுமையான போரட்டத்தால், இலங்கை நகரம் இன்று கட்டுக்குள் வந்து விட்டது.

'என் சபதம் நிறைவேறியது' என்றும் ராமபிரான் தெரிவித்தார்.

உங்களுக்காக சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது.

'ராவணனின் மாளிகையில் இருக்கிறோமே!!' என்று நீங்கள் துளியும் கவலைப்பட தேவையே இல்லை.
இலங்கை மொத்தமும் இன்று விபீஷணன் ஆளுமையில் உள்ளது.

ஆதலால், நம்பிக்கையுடன் சாந்தம் அடையுங்கள்.
இதுவும் உங்கள் சொந்த வீடு.

விபீஷணன் உங்களை வரவேற்க வந்து கொண்டு இருக்கிறார்'
என்றார்.

நிலவு போன்ற முகம் கொண்ட சீதா தேவி, ஆனந்தத்தில் பேச முடியாமல், தழு தழுக்க இருந்தாள்.

சீதா தேவியிடம் ஹனுமான் மேலும் பேசலானார்,
"தாயே! நீங்கள் ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறீர்கள்? 
நீங்கள் என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்?"
என்று கேட்க,

தர்மத்தை மீறாத சீதா தேவி ஆனந்தத்தில், தழு தழுக்க பேசலானாள்,
"என் கணவர் பெற்ற வெற்றி செய்தியை கேட்டு, நான் பெரும் ஆனந்தத்தில் திளைத்து இருக்கிறேன்.
எனக்கு இந்த சுப செய்தியை சொன்ன உமக்கு என்ன பதில் செய்ய முடியும்? என்று திகைக்கிறேன்.




இந்த சுபசெய்திக்கு பதில் செய்ய, இந்த உலகத்தில் இதற்கு நிகரான எதுவும் எனக்கு தெரியவில்லையே.

நீங்கள் இப்பொழுது சொன்ன செய்திக்கு, எத்தனை பொன்னும் மணியும் கொடுத்தாலும் நிகரில்லையே.

இந்த மூன்று உலகத்தின் ராஜ்யமே உங்களுக்கு கொடுத்தாலும், நீங்கள் சொன்ன இந்த சுப செய்திக்கு ஈடு இல்லை.
(ஹிரண்யம் வா சுவர்ணம் வா ரத்னானி விவிதானி ச | ராஜ்யம் வா த்ரிஷு லோகேஷு நைதத் அர்ஹதி பாஷிதும் || - வால்மீகி ராமாயணம்)"
என்று சீதா தேவி ஹனுமானை கண்டு ஆனந்தப்பட்டாள்.

கைக்குவித்து நின்ற ஹனுமான், சீதா தேவியை பார்த்து பேசலானார்.
"தன் கணவனுக்கு எது நலன் தருமோ, அதையே ஆசைப்படும்,  அவருடைய வெற்றியையே எதிர்பார்க்கும் தேவி!  
(பர்து ப்ரிய ஹிதம் யுக்தே பர்து: விஜய காங்க்ஷினி: |- வால்மீகி ராமாயணம்)
நீங்கள் மட்டுமே இத்தகைய பாசமுள்ள வார்த்தையை சொல்ல முடியும்.
(தவை தத் வசனம் சௌம்யே சாரவத் ஸ்நிக்தம் ஏவ ச | - வால்மீகி ராமாயணம்)

நீங்கள் சொன்ன வார்த்தைக்கு இந்த பொன்னும், மணியும், இந்த மூன்று லோகங்களும் கூட ஈடாகாது. 

தேவ லோகத்தின் பெரும் செல்வத்தை விட, சத்ருவை ஒழித்து நிற்கும் விஜய ராமனை பார்ப்பதற்கே அடியேன் ஆசைப்படுகிறேன்." என்றார்
(அர்தஸ்ச மயா ப்ராப்தா தேவ ராஜ்யாத்யோ குணா: |ஹத சத்ரும் விஜயினம் ராமம் பஸ்யாமி சுஸ்திதம்|| - வால்மீகி ராமாயணம்)

இதை கேட்ட சீதா தேவி ஹனுமானை பார்த்து,
"உங்கள் பேச்சு கேட்பதற்கு இனிமையாகவும், நீங்கள் நன்கு படித்தவர் என்பதையும் காட்டுகிறது.
(அதி லக்ஷண சம்பண்ணம் மாதுர்ய குண பூஷிதம்| - வால்மீகி ராமாயணம்)

இப்படி அழகாக நீங்கள் மட்டுமே பேச முடியும். நீங்கள் வாயு புத்திரன் என்ற பெருமை உடையவரல்லவா! 
தர்மத்தில் நாட்டமுள்ளவரல்லவா நீங்கள்.

இதனோடு உங்களிடம் ஆச்சர்யமான வலிமையும், வீரமும், ஞானமும், திறமையும், சிறப்பும், சகிப்புத்தன்மையும், தைரியமும், பணிவும் சேர்ந்து கொண்டு மேலும் பிரகாசிக்கிறீர்கள்." என்று சீதா தேவி ஹனுமானை கண்டு ஆனந்தப்பட்டாள்.
(பலம் சௌர்யம் ஸ்ருதம் சத்வம் விக்ரமோ தாக்ஷ்யம் உத்தமம் | தேஜ க்ஷமா த்ருதி தைர்யம் வினீதத்வம் ந சம்சய: || - வால்மீகி ராமாயணம்)

சீதாதேவியே பாராட்டியும், அதனால் கர்வம் கொண்டு விடாமல், விநயமாகவே இருந்த ஹனுமான், சீதா தேவியிடம் கைக்குவித்து அனுமதி கேட்டார்,
"தாயே! நீங்கள் அனுமதித்தால், உங்களை இது நாள் வரை திட்டிய இந்த ராக்ஷஸிகளை ஒழிக்க ஆசைப்படுகிறேன்.
(இமாஸ்து கலு ராக்ஷஸ்யோ யதி த்வம் அனுமன் யசே| ஹந்தும் இச்சாம்யஹம் சர்வா யாபிஸ்த்வம் தர்ஜிதா புரா || - வால்மீகி ராமாயணம்)

கண்களில் க்ரூரமும், பயங்கரமான ரூபத்துடன் இருக்கும் இந்த ராக்ஷஸிகள், 'கணவனே தெய்வம் என்று இருக்கும் உங்களை', அசோக வனத்தில் சிறைவைத்து வேதனையுற்ற சமயத்தில் பெரும் தொந்தரவு செய்தனர்.

நான் இவர்களை அடித்து ஒழிக்கட்டுமா? நீங்கள் இந்த வரத்தை தாருங்கள்.

இவர்களை என் முஷ்டியாலும், கைகளாலும், கால்களாலும் ஓங்கி அடித்து, என் பற்களால் இவர்களை கிழித்து, தலை முடியை பிடுங்கி, இவர்கள் மீது பாய்ந்து, இவர்களை தூக்கி எறிந்து, இவர்கள் கன்னம், கழுத்து, தோள், விலா எலும்பை உடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

உங்களிடம் அத்துமீறி கொடுமையான வார்த்தைகளே பேசிய இவர்களை நான் கொல்ல ஆசைப்படுகிறேன்.

இவர்கள் எப்படி எல்லாம் உங்களை துன்புறுத்தினார்களோ, இவர்கள் அனைவரையும் அனைத்து விதத்திலும் தண்டிக்க ஆசைப்படுகிறேன்." என்று ஆத்திரம் தாங்கமுடியாமல் அனுமதி கேட்டார் .
(நிபாத்ய ஹந்தும் இச்சாமி தவ விப்ரிய காரினி | - வால்மீகி ராமாயணம்)
தர்மமே உருவான சீதாதேவி, ஹனுமானை பார்த்து பேசலானாள்.
"ராஜ கட்டளைகளை நிறைவேற்ற இப்படியெல்லாம் இவர்கள் செய்தார்கள்.
இவர்கள் அனைவருமே ராவணன் கட்டளைக்கு கீழ் படிந்தவர்கள் தானே!!
(ராஜ சம் ஸ்ரய வசயானாம் குர்வந்தீனாம் பராக்யயா | விதேயானாம் ச தாசீனாம் க: குப்யேத் வானரோத்தம|| - வால்மீகி ராமாயணம்)

பாவம் இந்த வேலையாட்கள் மற்றவர்களுக்காக செய்த தவறுக்கு, இவர்களை கோபித்து என்ன பயன்?
(விதேயானாம் ச தாசீனாம் க: குப்யேத் வானரோத்தம || - வால்மீகி ராமாயணம்)

என்னுடைய போறாத காலம், என் கர்ம பலனால் நான் கஷ்டங்களுக்கு உள்ளானேன்.

அவரவர்கள் செய்த பூர்வ செயலுக்கு, பலனை அவரவர்கள் தானே அனுபவிக்க வேண்டும்.
எனக்கு நடந்த அசம்பவங்கள் என் துரதரிஷ்டமே என்று உணர்ந்து ஏற்கிறேன்.
(பாக்ய வைசம்ய யோகேன புரா துஷ்சரிதேன ச | மயை தத் ப்ராப்யதே சர்வம் ஸ்வக்ருதம் ஹ்யுபபுஜ்யதே || - வால்மீகி ராமாயணம்)

என் தலைவிதி தரும் கஷ்டம் இது என்பதால், ராவணனின் வேலையாட்களான இவர்கள் கொடுக்கும் பலவித துக்கங்களை பொறுத்து கொண்டேன்.

என்னை இவர்கள் திட்டியது அனைத்துமே, ராவணனின் ஆணையின் பெயரில் தானே நடந்தது.
இப்பொழுது ராவணன் இறந்து விட்டான். இனி இவர்கள் என்னை திட்ட போவதும் இல்லை.

பண்பட்டவர்கள் மற்றவர்கள் தனக்கு செய்யும் பாவச் செயல்களால் கூட  வேதனைப்படுவதில்லையாம்.
பண்பட்ட மனிதனுக்கு குறிப்பாக இந்த உயர்ந்த குணம் இருக்க வேண்டும்.

பண்பட்ட மனிதர்கள் (ஆரியன்) தன்னிடம் பழகுபவன்  நல்லவர்களாக இருந்தாலும், பாபம் செய்பவர்களாகவே இருந்தாலும், இருவரிடமும் இரக்கம் காட்டுவார்கள்.
(பாபானாம் வா சுபானாம் வா வதார்ஹானாம் ப்லவங்கம்  | கார்யம் கருணம் ஆர்யேன ந கஸ்சின்ன அபராத்யதி || - வால்மீகி ராமாயணம்)

குறை இல்லாதவர்கள் உலகில் இல்லையே.
ஆதலால், ராவணனின் ஆணைக்கு கட்டுப்பட்டு இவர்கள்  கீழ்த்தரமாக பேசியதற்கு இப்போது பழி வாங்குவது நல்லதல்ல."
என்று தன்னை திட்டிய ராக்ஷஸிகளுக்காக தாயார் சீதை பரிந்து பேசினாள்.

சீதா தேவியின் பேச்சை கேட்ட ஹனுமான், 
"தாயே! நீங்கள் மட்டுமே தர்ம ரூபமான ராமபிரானுக்கு ஏற்ற துணை என்று அறிகிறேன். 
(ப்ரத்யுவாச தத: சீதாம் ராமபத்னீம் யக்ஷஸ்வினீம் || - வால்மீகி ராமாயணம்)

உங்களிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு, நான் ராமபிரானிடம் செல்கிறேன்" என்றார்.

"நான் என் கணவனை பார்க்க ஆவலாக இருக்கிறேன்." என்றாள் சீதா தேவி.
(அப்ரவீத் த்ருஷ்டும் இச்சாமி பர்தாரம் வானரோத்தம | வால்மீகி ராமாயணம்)




பெருமகிழ்ச்சி அடைந்த ஹனுமான், சீதையை பார்த்து, 
"சசி தேவி இந்திரனை பார்ப்பது போல, சீக்கிரமே நீங்கள் ராமபிரானை லக்ஷ்மணனோடு பார்க்க இருக்கிறீர்கள். 
அவருடைய எதிரிகள் அழிந்தனர்.
அவருடைய நண்பர்கள் அவருடன் உறுதியாக இருக்கிறார்கள்."
என்று சொன்னார்.

இவ்வாறு சொல்லிய பிறகு, ஹனுமான் ராமபிரானை பார்க்க வந்தார்.
ராமபிரானிடம் வந்த ஹனுமான், 
"தாங்கள் யாருக்காக இத்தனை முயற்சி செய்தீர்களோ, அந்த சீதா தேவியை காணுங்கள்.
(யன் நிமித்தோயம் ஆரம்ப: கர்மனாம் ச பலோதய: | தாம் தேவீம் சோகசன்தப்தாம் மைதிலீம் த்ரஷ்டுமர்ஹசி || வால்மீகி ராமாயணம்)

சோகமும், கண்ணீரும் தோய்ந்து இருந்த தேவியின் கண்களில், உங்களின் வெற்றி செய்தியை கேட்ட பின், ஆனந்தம் துளிர்த்தது.

நான் ஏற்கனவே சீதா தேவியை பார்த்து இருந்ததால், என் மீது நம்பிக்கை கொண்டார் சீதா தேவி.

வெற்றி அடைந்த விஜய ராகவனை, அவர் தம்பி லக்ஷ்மணரோடு தான் பார்க்க ஆசைப்படுவதாகவும் சொன்னாள்."
என்றார்.

இதை கேட்டதுமே, ராமபிரானின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
(அகச்சத் சஹஸா த்யானமீஷத் பாஷ்ப பரிப்லுத: || - வால்மீகி ராமாயணம்)
பெரு மூச்சு விட்டு, நிலத்தை பார்த்து கொண்டே விபீஷணனிடம்,
"நான் சீதையை சர்வ அலங்காரத்துடன் பார்க்க விரும்புகிறேன். அவளுக்கு ஸ்நானம் செய்து, அலங்காரம் செய்த பிறகு, இங்கே கூட்டி வாருங்கள்" 
என்றார்.
(திவ்யாங்க ராகான் வைதேஹி திவ்யாபரண பூஷிதாம் | இஹ சீதாம் சிர: ஸ்நாதாம் உபஸ்தாபய மா சிரம் || வால்மீகி ராமாயணம்)

இலங்கை அரசன் விபீஷணன் தன் மனைவியை முன்னிட்டு கொண்டு, சீதா தேவியிடம்,
"சீதா தேவி.. உங்களுக்கு மங்களம்.  சர்வ அலங்காரமும் செய்து கொண்டு இந்த பல்லக்கில் ஏறுங்கள்.
உங்கள் கணவர் உங்களை பார்க்க விரும்புகிறார்.'
என்றார்.

சீதாதேவி, "ராக்ஷஸ அதிபதியே! நான் எந்த வித ஸ்நானமும், அலங்காரமும் செய்து கொள்ள விரும்பவில்லை. நான் இப்படியே என் பர்தாவை பார்க்க ஆசைப்படுகிறேன்" என்றாள்.
(அஸ்நாதா த்ருஷ்டுமிச்சாமி பர்தாரம் ராக்ஷஸாதிப: | - வால்மீகி ராமாயணம்)

இதை கேட்ட விபீஷணன், "தேவி.. இது உங்கள் கணவர் விருப்பம். இதை நீங்கள் செய்து கொள்ள வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.

கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழும் சீதாதேவி,  "அப்படியென்றால் சரி. செய்து கொள்கிறேன்" என்று கூறி சம்மதித்தாள்.
(தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா மைதிலீ பர்த்ரு தேவதா | பர்த்ரு பக்தி வ்ரதா சாத்வீ ததேதி ப்ரத்ய பாஷத || - வால்மீகி ராமாயணம்)

பிறகு அங்கு இருந்த பெண்கள், சீதா தேவியை ஸ்நானம் செய்வித்து, அலங்காரம் செய்விக்க, சீதாதேவி தயாராக இருந்தாள். 
சீதாதேவியை அழைத்து செல்ல, பல்லக்கு கொண்டு வந்தார் விபீஷணன்.
அந்த பல்லக்கில் சீதா தேவி ஏறிக்கொள்ள, தன் ராக்ஷஸ படைகளை இருபுறமும் காவலுக்கு நிறுத்தி, ராமபிரான் இருக்குமிடத்திற்கு வர சொல்லி விட்டு, தானே ராமரை பார்க்க ஓடினார். 

ராமபிரானிடம், சீதாதேவி வந்து கொண்டிருப்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ராவணனின் மாளிகையில் பல மாதஙகள் சிறைப்பட்ட தன் சீதை வந்து கொண்டு இருக்கிறாள் என்றதும், ஒரே சமயத்தில் 'ஆனந்தமும், வருத்தமும், கோபமும்' ராமபிரானிடம் சேர்ந்து நுழைந்தது.
(தாம் ஆகதாம் உபஸ்ருத்ய ரஷோ க்ருஹ சிரோஷிதாம் | ஹர்ஷோ தைன்யம் ச ரோஷஸ் ச த்ரயம் ராகவம் ஆவிசத் || - வால்மீகி ராமாயணம்)

விபீஷணனை பார்த்து, ராமபிரான், "ராக்ஷஸ அரசனே! என் வெற்றிக்காக எப்பொழுதும் ஆசைப்படுபவரே! சீதையை வேகமாக என் அருகில் அழைத்து வாருங்கள்" என்றார்.

மூடு பல்லக்கில் சீதா தேவி, ராமர் இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

'சீக்கிரமாக சீதையை அழைத்து வாருங்கள்' என்று ராமபிரான் சொன்னதால், விபீஷணன் சீதாதேவிக்கு பாதை கிடைப்பதற்காக, சூழ்ந்து இருக்கும் லட்சக்கணக்கான வானர சேனை விலக்க முயற்சித்தார்.

பல்லக்கை சுற்றி பாதுகாப்புடன் வந்த ராக்ஷஸர்கள், தங்கள் கைகளில் உள்ள தடியால் அடித்தும், கைகளால் தள்ளியும், பெரும் உற்சாகத்தில் இருந்த வானர கூட்டத்தை விலக்கி கொண்டு, வேகமாக வரத்தொடங்கினர்.
(கஞ்சுகோஷ்னீஷினஸ் தத்ர வேத்ர ஜர்ஜரபானய: | உத்ஸார யந்த: புருஷா: சமந்தாத் பரிசக்ரமு: || - வால்மீகி ராமாயணம்)

பல்லக்கை சூழ்ந்து இருந்த வானரர்களும், பிற ராக்ஷஸர்களும், ருக்ஷர்களும், முன்னும் பின்னும் நகர்ந்து, முடிந்த வரை வழி விட்டு பின்னுக்கு சென்றனர்.

எந்த சீதைக்காக, தங்கள் உயிரையும் துச்சம் என மதித்து போர் புரிய வந்தார்களோ! அந்த சீதாதேவி, தங்கள் அருகில் மூடு பல்லக்கில் வருவதை பார்த்ததும்,
"ஜெய் சீதா ராம்... 
ஆ.. இதோ இதில் தான் சீதா மாதா இருக்கிறார். 
ஆஹா... ஆஹாஹா..." 
என்று ஆனந்தமும், வெற்றி கோஷமும் சேர்ந்து பேரிறைச்சலை உண்டாக்கி விண்ணை பிளந்தது.

சீதையை பார்க்கும் ஆவலால், பெரும் சலசலப்பு ஏற்பட, பாதுகாவலர்கள் தடியால் வானர கூட்டத்தை அடித்து விலக்க, முன்னுக்கு பின் தள்ள, வானர சேனையில் பெரும் உற்சாகம் தொற்றி கொண்டு, அதனோடு பெரும் சலசலப்பு ஏற்பட்டு பேரிறைச்சல் உண்டானது. 

இது கடலில் அலை ஓசையும், காற்றின் ஒலியும் சேர்ந்து கொண்டால் எப்படி இருக்குமோ அது போல இருந்தது.
(தேஷாம் உத்சார்யமானாநாம் சர்வேஷாம் த்வனிருத்தித: | வாயுனோத் வர்தமானஸ்ய சாகரஸ் ஏவ நிஸ்வன: || - வால்மீகி ராமாயணம்)

உற்சாகம் மிகுந்த வானர சேனை  முன்னும் பின்னும் அலைந்து கொண்டு, சலசலப்பு ஏற்படுவதை பார்த்த ராமபிரான், அவர்களிடம் இரக்கமும், அதே சமயம் மறுபக்கம் கோபமும் கொண்டார்.

வந்து கொண்டிருந்த பல்லக்கை அங்கேயே நிற்க சொன்னார்.
(தாக்ஷின்யாத் ததம் அர்ஷாச்ச வாரயாமாச ராகவ: || - வால்மீகி ராமாயணம்)
வானரர்களை பாதுகாவலர்கள் அடிப்பதை பார்த்து, கொஞ்சம் கோபத்துடன் ராமபிரான், விபீஷணனை பார்த்து, 
"என் அனுமதி இல்லாமல் ஏன் கூட்டத்தில் இத்தனை சலசலப்பு ஏற்பட்டது?
உங்கள் ஜனங்கள் செய்யும் இது போன்ற விரும்பத்தகாத காரியங்களை உடனே நிறுத்துங்கள். 
இவர்களுக்கு கொடுத்த வேலையை நிறுத்துங்கள். இவர்கள் அனைவருமே என்னுடைய பிரஜைகள்.
(கிமர்தம் மாம் அனாஹ்ருத்ய க்லிஷ்யதேயம் த்வயா ஜன: | நிவர்தயைனம் உத்யோகம் ஜநோயம் ஸ்வஜனா மம || வால்மீகி ராமாயணம்)

பெரிய அரண்மனையோ, பெரிய ஆடையோ, பெரிய மதில்சுவரோ, ஒரு பெண்ணுக்கு நிஜமான பாதுகாப்பு ஆகி விடாது.
(ந க்ருஹானி ந வஸ்த்ராணி ந ப்ராகாராஸ்திரஸ் க்ரியா : | - வால்மீகி ராமாயணம்)

அவள் நடத்தையே, அவளுக்கு உண்மையான பாதுகாப்பு தருகிறது.
(நேத்ருஷா ராஜசத்காரா வ்ருத்தம் ஆவரணம் ஸ்த்ரியா: || வால்மீகி ராமாயணம்)

குல பெண்கள் தங்களை மற்றவர்களுக்கு பொதுவாக காட்டி கொள்வதில்லை.
ஆனால்,
1. ஆபத்து காலங்களில், 
2. இக்கட்டான காலங்களில்,
3. யுத்த களத்தில், 
4. வேத சம்பந்தமாக தான் ஈடுபடும் காரியங்களில், 
5. தன் ஸ்வயம்வரத்தில், 
6. தன்னுடைய திருமணத்தில் 
குல பெண்கள் தன் முகத்தை காட்டுவது தவறல்ல.
(வ்யசனேஷு ந க்ருச் ச்ரேஷு ந யுத்தேஷு ஸ்வயம்வரே | ந க்ரதொள ந விவாஹே ச தர்சனம் துஷ்யதி ஸ்த்ரியா || - வால்மீகி ராமாயணம்)

இப்பொழுது சீதை 'யுத்த களத்தில்' இருக்கிறாள். 
மேலும் இது ஒரு 'இக்கட்டான காலமும்' கூட.
மேலும், 'நானும் இங்கு இருக்கிறேன்' என்பதால், உயிரையே கொடுக்க தயாராக இருந்த என் பிரஜைகளான வானரர்களுக்கு, என் சமீபம் வரும் வரை சீதை தன் தர்சனத்தை கொடுப்பதில் தோஷமில்லை.
(சைஷா யுத்தகதா சைவ க்ருச்ரே ச மஹதி ஸ்திதா | தர்சனேஸ்யா ந தோஷ: ஸ்யான்மத் சமீபே விசேஷித: || - வால்மீகி ராமாயணம்)

யாருக்காக உயிர் கொடுக்க துணிந்தார்களோ! அந்த சீதையை இவர்கள் தரிசிக்கட்டும். 

சீதை மூடுபல்லக்கில் வர வேண்டிய அவசியமில்லை.




ஆதலால், 
சீதை மூடு பல்லக்கில் இருந்து இறங்கி, காலால் நடந்து வரச் சொல்லுங்கள்.

விபீஷணா ! என்னை நோக்கி வரும் சீதையை, இந்த வானரர்கள் அனைவரும் தரிசிக்கட்டும்."
(ததாநய சமீபம் மே சீக்ரமேனாம் விபீஷணா | சீதா பஸ்யது மாமேஷா சுஹ்ருத் குணவ்ருதம் ஸ்திதம் || - வால்மீகி ராமாயணம்)
என்று ராமபிரான் விபீஷணனை பார்த்து சொன்னார்.

சீதா தேவியை வானர சேனைக்கு நடுவே நடந்து வர சொன்னதும் லக்ஷ்மணன், சுக்ரீவன், ஹனுமான் அனைவரும் பதட்டம் அடைந்தனர்.

ராமபிரான் முகத்தை பார்த்தும், அவர் என்ன நினைக்கிறார்? என்று யாராலும் எதுவும் கண்டு பிடிக்கமுடியவில்லை. 

ஒருவேளை சீதா தேவியின் வருகையை ராமபிரான் விரும்பவில்லையோ!! என்று கூட நினைத்தனர்.
(களத்ர நிரபேக்ஷைச இங்கிதைரஸ்ய தாருனை: | அப்ரீதமிவ சீதாயாம் தர்கயந்தி ஸ்ம ராகவம் || - வால்மீகி ராமாயணம்)

மூடுபல்லக்கில் வந்து கொண்டிருந்த சீதாதேவியிடம், ராமபிரானின் விருப்பத்தை விபீஷணன் தெரிவிக்க, சீதாதேவி மூடுபல்லக்கை விட்டு இறங்கி, நடந்து வர தொடங்கினாள். 

விபீஷணன் வானர சேனையை விலக்கி கொண்டு ராமரை நோக்கி வர, சீதை பின் தொடர்ந்து வந்தாள். 

ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் கிளம்பிய சீதாதேவி, தன்னை சூழ்ந்து ஆர்ப்பரிக்கும் வானர சேனையை பார்த்து, 
திடீரென்று தன் முகத்தை யாரிடமும் காட்டி கொள்ள விரும்பாமல், தன் புடவை தலைப்பால் முகத்தை மறைத்து கொண்டு, கூனிக்குறுகி, பெரும் அவமானத்தை சுமந்து கொண்டு, அருவெறுப்புடன், விபீஷணனை தொடர்ந்து வந்தாள்.
(குறிப்பு: ராமபிரான் தன்னை ஏற்று கொண்ட பின், தன்னால், அவருக்கு ஏற்பட போகும் பழியை நினைத்து தாளாத வேதனையுற்றாள் சீதா தேவி. 
தன் நிலையை நினைத்து தன்னையே வெறுத்தாள். கூனி குறுகி போனாள் சீதா தேவி.. 
'மானுக்கு ஆசைப்பட்டு, இப்படி மாட்டிக்கொண்டோமே! 
உலகம் ராமபிரானை பேசுமே! தான் இந்த நிலையில் வாழ வேண்டுமா? 
இங்கேயே உயிர் விட்டு விடலாமா? 
அவர் அனுமதியை கேட்டு விட்டு உயிரை அவர் முன் தியாகம் செய்து விடலாமா? 
தான் ஒழுக்கம் தவறாதவள் என்று எப்படி உலகத்திற்கு நிரூபிப்பேன்?' 
என்ற பலவித எண்ணங்கள் சூழ, உயர்ந்த குலபெண்ணான சீதாதேவி தன்னை யாரிடமும் காட்டி கொள்ள பிரியப்படாமல் இப்படி முகத்தை மூடி, தன்னையே அருவெறுத்து கொண்டு நடந்தாள். 

'சீதா தேவியின் மன ஓட்டத்தை கவனித்து விட்டார்' ராமபிரான்.
சீதையின் மன ஓட்டத்தை அறிந்தவர் ராமபிரான். 
ராமபிரானும், சீதாதேவியும் திவ்ய தம்பதிகள் அல்லவா.. 

"தன் ஒழுக்கத்தை உலகுக்கு எப்படி நிரூபிப்பேன்?" என்று கூனி குறுகி போன சீதையின் நிலையை கண்டு கலங்கினார். 
தன்னை கல்லாக்கி கொண்டு, அதற்கு வழியை தானே கொடுக்க தயாரானார் ராமபிரான்.
 
சீதையின் தர்ம சங்கடத்தை அறிந்த ராமபிரான், உலகை பொறுத்தவரை, தன்னை பொல்லாதவன் போல காட்டி, அவளை வெறுத்தது போல பேசி, சீதை என்ன நினைக்கிறாளோ அதை அறிந்து கொள்ள நினைத்தார். 
சீதைக்காக, தன்னை கோபக்காரனாக காட்டிக்கொண்டார்.)

தன்னால் ராமபிரானுக்கு பெரும் அவமானம் ஏற்படுமே ! என்ற வேதனையில், ராமபிரான் அருகில் வந்ததும், சீதாதேவிக்கு அடக்க முடியாத கண்ணீர் பீறிட்டது.
அதே சமயம், 
இனிமையான முகம் கொண்ட ராமபிரானை, நிலவு போன்ற சீதாதேவி கண்டதும், ஆச்சரியம், உற்சாகமும் அடைந்தாள்.

குறையே இல்லாத வெண்மையான முழு நிலவு போல இருந்த சீதை, வெகு காலம் கழித்து தன் நாதனின் முகத்தை பார்க்கிறாள். 
பார்த்தவுடனேயே அவள் மனதில் இருந்த கவலைகள் அழிக்கப்பட்டுவிட்டது.

சீதா தேவி பணிவுடன் ராமபிரான் அருகில் வந்து நிற்க, கோபத்தை தன்னில் அனுமதித்து கொண்டு, ராமபிரான் பேசலானார்…
"மங்களமானவளே! (भद्रे) என் எதிரிகளை வீழ்த்தி, உன்னை வென்றுள்ளேன். 
என் பராக்ரமத்தை எவ்வளவு காட்ட வேண்டுமோ! அவ்வளவும் காட்டி இதை சாதித்தேன்.
(ஏசாஸி நிர்ஜிதா பத்ரே சத்ரும் ஜித்வா மயா ரனே | பௌருஷாத்யதனுஷ்டேயம் ததேததுபபதிதம் || வால்மீகி ராமாயணம்)

எனது சீற்றம் இங்கு முற்றிலும் தேவைப்பட்டது. என் முயற்சிக்கு பலன் கிடைத்தது. நான் சொன்ன சொல்லை காப்பற்றியவன் என்று ஆனேன்.

நீ தனிமையில் இருக்கும் போது, உன்னை இந்த கீழ்தரமான புத்தி கொண்ட ராக்ஷஸன் கடத்தி சென்றான்.
விதியால் ஏற்பட்ட களங்கத்தை, மனிதனாக இருக்கும் நான் வென்று காட்டிவிட்டேன்.
(யா த்வம் விரஹிதா நீதா சல சித்தேன ரக்ஷஸா | தைவ சம்பாதிதோ தோஷோ மானுஷேன மயா ஜித: || - வால்மீகி ராமாயணம்)

எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தனது சுய வலிமையால் அகற்றாது போனால், அந்த வலிமை இருந்து தான் பயன் என்ன?

ஹனுமான் கடலை தாண்டி, இலங்கையை கொளுத்தி செய்த பெருமுயற்சிக்கு, பலன் இன்று கிடைத்து இருக்கிறது.

சுக்ரீவன் இந்த போரில் எனக்கு செய்த உதவியும், அவருடைய திறனும், நிர்வாகமும் இன்று பலன் தந்து இருக்கிறது.

என்னிடம் பக்தி உள்ள விபீஷணன், குணம் கெட்ட தன் சகோதரனை விட்டதற்கான பலன் இன்று கிடைத்து இருக்கிறது." 
என்றார்.

இவ்வாறு ராமபிரான் பேச ஆரம்பிக்க, தன்னை பற்றி ஒரு வார்த்தை பேசாத ராமபிரானை பார்த்து, பெண் மானின் கண்களை ஒத்து இருந்த, சீதையின் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது.

ஆனால், 
தீயில் நெய் ஊற்ற ஊற்ற எப்படி தீ இன்னும் கொழுந்து விட்டு எரியுமோ! அது போல, ராமபிரானுக்கு சீதையை பார்க்க பார்க்க கோபம் இன்னும் அதிகமானது.

சீதையை பார்த்து கூட பேசாமல், வேறு பக்கம் பார்த்து கொண்டே, வானரர்கள், ராக்ஷஸர்கள் சூழ்ந்து இருக்க, மேலும் கடுமையான சொற்களை கொண்டு பேசலானார்..
"பகைவர்கள் என் மேல் சுமத்திய அவமானத்தை துடைக்க என்ன முயற்சி எல்லாம் செய்ய வேண்டுமோ! அதை நான் ஒரு ஆண் மகனாக செய்து முடித்தேன்.
(யத் கர்தவ்யம் மனுஷ்யேன தர்ஷனாம் பரிமார்ஜிதா | தத் க்ருதம் சகலம் சீதே சத்ருஹஸ்தாதம் அர்ஷனாத் || வால்மீகி ராமாயணம்)

எப்படி அகஸ்திய முனி, வீழ்த்த முடியாத தென் தேசத்தை தன் ஆளுமைக்கு கொண்டு வந்தாரோ, அது போல, நான் உன்னை வென்றேன்.

மங்களமானவளே (भद्रे)! 
போரில் நான் செய்த முயற்சிகள் யாவும், உனக்கு தெரிந்து இருக்கும். 

(குறிப்பு: சீதை மங்களம் குறையாதவள் என்று சொல்லும் போதே, ராமபிரானுக்கு துளியும் சந்தேகமில்லை என்று தெரிகிறது.)

இந்த முயற்சிகள் யாவும் உன்னை கருத்தில் கொண்டு நான் செய்யவில்லை.

என்னுடைய ஒழுக்கத்தை நிலை நாட்டவும், எனக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்கவும், என் இக்ஷவாகு குல பெருமைக்காகவும் தான், உன்னை காப்பாற்றினேன்.
(ரக்ஷதா து மயா வ்ருத்தம் அபவாதம் ச சர்வச: | ப்ரக்யாதஸ்ய ஆத்ம வம்சஸ்ய ந்யங்கம் ச பரிரக்ஷதா || - வால்மீகி ராமாயணம்)

நீ எனக்கு முன்னால், ஒழுக்கம் சந்தேகிக்கப்பட்டவளாக நிற்கிறாய்.
கண் நோய் உள்ளவனுக்கு ஒளியை ஏற்றுக்கொள்ள முடியாது. 
அது போல, நீ எனக்கு ஏற்று கொள்ளமுடியாதவளாக  இருக்கிறாய். 
(ப்ராப்த சாரித்ர சந்தேஹா மம ப்ரதிமுகே ஸ்திதா | தீபோ நேத்ரா துரஸ்யேவ ப்ரதிகூலாசி மே த்ருடம் || வால்மீகி ராமாயணம்)

(குறிப்பு: சீதை 'ஒளியை போன்று தூய்மையானவள்' என்று தான் சொல்கிறார். உலகில் 'கண் நோய் உள்ளவனுக்கு நீ களங்கம் போல தெரிகிறாய்' என்று மறைமுகமாக உன் மீது குற்றமில்லை என்று சொல்கிறார். 
ராமபிரானுக்கு துளியும் சந்தேகமில்லை என்று தெரிகிறது. 
ராமபிரான் மனதை புரிந்தவள் சீதா தேவி).

ஆதலால், நீ என்னை விட்டு, எங்கு விருப்பப்பட்டாலும் செல்லலாம்.
மங்களமானவளே! பத்து திசைகளும் உனக்காக பரந்து விரிந்து இருக்கிறது.
நான் உனக்கு செய்ய வேண்டியது ஏதும் இல்லை.
(ஏதா தஸா திசோ பத்ரே கார்யம் அஸ்தி ந மே த்வயா | வால்மீகி ராமாயணம்)

ராவணன் போன்ற கீழ்தர புத்தி உள்ளவன் உன்னை பல மாதங்கள் தன் இடத்தில் வைத்து கொண்டு, மனதில் உன்னை பற்றி ஆசையோடு இருந்து இருக்கிறான்.
எந்த ஒழுக்கம் உள்ளவன், ஒழுக்கமுள்ள குடும்பத்தில் பிறந்தவன், உன்னை போன்ற பெண்ணை மீண்டும் ஏற்று கொள்வான்?
(க புமான் ஹி குலே ஜாத: ஸ்த்ரியம் பர க்ருஹோஷிதாம் | தேஜஸ்வி புனராத் அத்யாத் சுஹ்ருள் லேக்யேன சேதசா || - வால்மீகி ராமாயணம்)

ராவணனின் கட்டுப்பாட்டில் இருந்த நீ, தாளாத துன்பத்தை அனுபவத்து இருக்கிறாய். ராவணன் உன்னை காம பார்வையோடு பார்த்து கொண்டு இருந்திருக்கிறான்.
நல்ல ஒழுக்கம் உள்ள பரம்பரையில் வந்த நான் உன்னை எப்படி ஏற்க முடியும்?
(ராவணாங்க பரிப்ரஷ்டாம் த்ருஷ்டாம் துஷ்டேன சக்ஷுஸா | கதம் த்வாம் புனராதத்யாம் குலம் வ்யப திசன் மஹத் || வால்மீகி ராமாயணம்)

என் கௌரவத்தையும், என் புகழையும் காப்பாற்றவே, ராவணனை ஒழித்து உன்னை மீட்டேன்.
எனக்கு உன் மீது எந்த பாசமும் கிடையாது.

நீ விருப்பப்பட்டபடி எங்கு வேண்டுமானாலும் போகலாம்.
பரதன், லக்ஷ்மணன், சுக்ரீவன், விபீஷணன் உன்னை காப்பாற்றுவர்கள். 

நீ விருப்பப்பட்டால், அவர்கள் இருக்கும் இடத்தில் கூட பாதுக்காப்பாக இருக்கலாம்.

ராவணன் உன்னிடம் இருந்த திவ்யமான அழகை கண்டு சகித்திருக்க மாட்டான்." 
என்று பேசினார் ராமபிரான்.

'ஆறுதலாக ராமபிரான் தன்னிடம் பேசுவார்' என்று நினைத்த சீதை, ராமபிரானின் கடுமையான சொற்களை கேட்டதும், மலர்கொடியை ஒரு யானை தன் துதிக்கையால் பிடுங்கி, அசைத்து நாசமாக்குவது போல, துடிதுடித்து அழுதாள்.

மயிர்கூச்சு ஏற்படும் படி ராமபிரான் பேசிய பின், சீதை தாளமுடியாத துன்பத்தை அடைந்தாள்.

இது போன்று கடும் சொற்களை, தன் வாழ்நாளில் என்றுமே பேசாத ராமபிரான், இன்று அனைவருக்கும் எதிராக, இப்படி பேசி விட, சீதை பெரும் அவமானத்தை அனுபவித்தாள்.

தன் நிலையை நினைத்து கூனி குறுகினாள்.

காயம் பட்ட இடத்திலேயே மேலும் காயம் பட்டது போல, ராமபிரானின் கடும் சொற்களால், கலங்கி இருந்த கண்களில் நீர் வழிந்தோடியது.

க்ஷத்ரிய பெண்ணான சீதை, உடனேயே தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு, தழுதழுத்த குரலில், தன் கணவன் ராமபிரானை பார்த்து கம்பீரமாக பேசலானாள்..
"நாகரீகம் இல்லாதவனை போல, தரம் தாழ்ந்த வார்த்தைகளை கொண்டு என் காது பட, ஏன் பேசினீர்கள்?

நீங்கள் என்னை சந்தேகித்தது போல, நான் உங்களை என்றுமே சந்தேகித்தது கிடையாதே! 
நான் உங்கள் ஒழுக்கத்தை என்றுமே திடமாக நம்புகிறேனே!!
(ந ததாஸ்மி மஹாபாஹோ யதா த்வம் அவ கச்சஸி | ப்ரத்யயம் கச்ச மே யேன சாரித்ரேநைவ தே சபே || வால்மீகி ராமாயணம்)

ஒரு சில பெண்கள் செய்யும் தவறுக்காக, ஒட்டு மொத்த பெண்களையும் சந்தேகப்படுவீர்களா?
(ப்ருதக் ஸ்த்ரீனாம் ப்ரசாரேன ஜாதிம் தாம் பரிசங்கசே|  - வால்மீகி ராமாயணம்)

நான் ஒழுக்கம் மீறாதவள் என்று நிரூபித்தால் உங்கள் சந்தேகத்தை விடுவீர்களா?
(பரித்யஜேமாம் சங்காம் து யதி தேஹம் பரிக்ஷிதா || - வால்மீகி ராமாயணம்)

(குறிப்பு: இந்த சுதந்திரத்தை சீதைக்கு கொடுத்து, அவள் தன் சோகத்திலிருந்து விடுபட,  தன்னை பொல்லாதவன் போல காட்டிக் கொண்டார் ராமபிரான்.)

ஆதரவு இல்லாத நிலையில் ராவணன் என்னை கடத்தி சென்றதற்கு, என் தலை விதியை பழிக்க வேண்டுமே தவிர, என்னை இல்லை.




என்னை தொட்டு தூக்கி சென்றான், ஆனால் என் மனம் உங்களை விட்டு பிரியவில்லையே!
(மத் அதீனம் து யத்தன்மே ஹ்ருதயம் த்வயி வர்ததே | - வால்மீகி ராமாயணம்)

இவன் செயலுக்கு நான் என்ன செய்ய முடியும்?
அன்று உதவி செய்வார் யாருமில்லையே!

இத்தனை வருடங்கள் நாம் சேர்ந்து வாழ்ந்தோமே! இந்த அனுபவத்திற்கு பிறகும், நீங்கள் என் ஒழுக்கத்தின் தூய்மையை புரிந்து கொள்ள முடியாமல் போனது என்றால், நான் இறந்ததற்கு சமமல்லவா!
(சஹ சம்வ்ருத்த பாவச்ச சம்சர்கேன ச மானத | யத்யஹம் தே ந விக்யாதா ஹதா தேனாஸ்மி சாஸ்வதம் || - வால்மீகி ராமாயணம்)

என்னை பார்க்க ஹனுமனை அனுப்பினீர்களே! 
'சீதையை தியாகம் செய்து விட்டேன்' என்று அப்பொழுதே எனக்கு அவரிடம் சொல்லி அனுப்பி இருக்கலாமே?
அன்றே ஹனுமானுக்கு முன் என் உயிரை தியாகம் செய்து இருப்பேனே!! 
(ப்ரேஷிதஸ்தே யதா வீரோ ஹனுமான் அவலோகக: | லங்காஸ்தாஹம் த்வயா வீர கிம் ததா ந விசர்ஜிதா || ப்ரத்யக்ஷம் வானரேன்த்ரஸ்ய தத் வாக்ய சமனந்தரம் | த்வயா சந்த்யக்த்யா வீர த்யக்தம் ஸ்யாஜ் ஜீவிதம் மயா || - வால்மீகி ராமாயணம்)

இப்படி ஒரு வீணான முயற்சி நீங்கள் செய்தே இருக்க வேண்டாமே!!
உங்கள் நண்பர்களும் பலன் தராத பெரும் போரை தவிர்த்து இருக்கலாமே?

தரம் தாழ்ந்த ஒரு மனிதனை போல, உங்கள் ஆத்திரத்தைக் காண்பித்து, உங்கள் ஆளுமையை மட்டுமே வெளிப்படுத்தினீர்கள். 

மறக்க வேண்டாம்.. நான் பூமியில் இருந்து தானாக தோன்றியவள். ஜனக மஹாராஜனால் வளர்க்கப்பட்டவள். 
ஒழுக்கத்தில் உயர்ந்தவரே! நீங்கள் என் ஒழுக்கத்தை மதிக்க தெரிந்து கொள்ளவில்லை.
(அபதேசேன ஜனகான்னோத்பத்திர் வசுதா தலாத் | மம வ்ருத்தம் ச வ்ருத்தங்ய பஹு தே ந புரஸ்க்ருதம் || - வால்மீகி ராமாயணம்)

சிறு வயதில் இருந்தே நாம் சேர்ந்து வாழ்ந்தோம். இருந்தும், ஒன்றும் அறியாத சிறுவனை போல, என் தூய்மையை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை.
என்னுடைய ஈடுபாடும், என்னுடைய ஒழுக்கமும் உங்களுக்கு தெரியவில்லை."

இவ்வாறு சொன்ன சீதா தேவி, கண்ணீர் விட்டு கதறி அழுதாள்.

துக்கத்தில், துயரத்தில் இருந்த சீதா தேவி, லக்ஷ்மணனை பார்த்து தழுதழுத்த குரலில் ஆணையிட்டாள்..

"லக்ஷ்மணா! என் துக்கத்திற்கு மருந்தாக எனக்கு ஒரு சிதை மூட்டு.
(சிதாம் மே குரு சௌமித்ரே வ்யசனஸ்யாஸ்ய பேஷஜம் ! - வால்மீகி ராமாயணம்)

பொய்யான குற்றச்சாட்டுடன் என்னால் வாழ முடியாது.
(மித்யோப காதோ பஹதா நாஹம் ஜீவிதும் உத்சுஹே ! - வால்மீகி ராமாயணம்)

என் கணவன் இந்த கூட்டத்தில் நான் இருப்பதை விரும்பவில்லை.
(அப்ரீதஸ்ய குனைர் பர்த்ரு த்யகத்தாயா ஜன சம்சதி ! - வால்மீகி ராமாயணம்)

நான் அக்னியில் பிரவேசிக்க வேண்டும்."
(யா க்ஷமா மே கதிர்கந்தும் ப்ரவேக்ஷ்யே ஹவ்ய வாஹனம் - வால்மீகி ராமாயணம்) என்று கூறினாள்.

கோபத்தை வரவழைத்து கொண்டு அமர்ந்து இருந்த ராமபிரானின் முகத்தை, லக்ஷ்மணன் பார்த்தார்.

ராமபிரான் முகத்தில் இதற்கு எதிர்ப்பு இல்லாமல் இருந்ததை குறிப்பு அறிந்த லக்ஷ்மணன், சிதையை மூட்டினார்.

(குறிப்பு: லக்ஷ்மணன் 'ராமபிரான் இருக்கிறார். அவர் பார்த்துக்கொள்வார்' என்று தைரியமாக இருந்தார்.  
ஹனுமான் தன் வாலில் தீயிட்ட போது, இலங்கையே தீக்கு இறையான போதும், சீதையின் பிரார்த்தனையே தன்னை காத்தது என்ற போது "சீதாதேவிக்கு ஒன்றும் ஆகாது" என்று திடமாக இருந்தார். 
ராமபிரான் "சத்தியத்தில் தான் நியமித்த தெய்வங்கள் இருக்க நினைக்கிறதா?" என்று பரிக்ஷை செய்தது போல இருந்தது.  இது சம்பந்தமாக ராமபிரான் பேசவும் போகிறார்...)

சீதா தேவி தலை குனிந்து, மெதுவாக ராமபிரானை வலம் வந்து, அக்னி குண்டத்திற்கு அருகில் வந்தாள்.

தேவதைகளையும், ப்ராம்மணர்களையும் மனதில் நமஸ்கரித்து விட்டு, அக்னி தேவதையை பார்த்து பேசலானாள்,

"என் இதயம் ராமபிரானை விட்டு விலகியதில்லை என்பது சத்தியமானால்! இந்த அக்னி என்னை காப்பதை இந்த உலகத்தில் உள்ளோர் பார்க்கட்டும்.
(யதா மே ஹ்ருதயம் நித்யம் நாபசர் பதி ராகவாத்! ததா லோகஸ்ய சாக்ஷி மாம் சர்வத: பாது பாவக: - வால்மீகி ராமாயணம்)

(குறிப்பு: 'தான் காக்கப்பட வேண்டும்' என்று சீதை ஆசைப்படுகிறாள் என்று தெரிகிறது. மேலும் 'ராமபிரானோடு அயோத்தி சென்று மாதா கௌசல்யாவை பார்க்க வேண்டும்' என்று ஆசை சீதைக்கு உள்ளது என்பதும் தெரிகிறது.)

நான் தூய்மை அற்றவள் என்று புரிந்து கொள்ளாமல் பேசினார் ராகவன்! 
நான் தூய்மையானவள் என்பது சத்தியமானால்! இந்த அக்னி என்னை காப்பதை இந்த உலகத்தில் உள்ளோர் பார்க்கட்டும்.
(யதா மாம் சுத்த சாரித்ராம் துஷ்டாம் ஜானாதி ராகவ:! ததா லோகஸ்ய சாக்ஷி மாம் சர்வத: பாது பாவக:  - வால்மீகி ராமாயணம்)

உடலாலும், மனதாலும், வாக்கினாலும், தர்மமே உருவான ராகவனையே நினைத்து இருந்தது சத்தியமானால், இந்த அக்னி என்னை காப்பதை இந்த உலகத்தில் உள்ளோர் பார்க்கட்டும்.
(கர்மனா மனசா வாசா யதா நாதி சராம்யஹம்! ராகவம் சர்வ தர்மஞம் ததா மாம் பாது பாவக: - வால்மீகி ராமாயணம்)

நான் ஒழுக்கமானவள் என்று சூர்ய தேவன், வாயு தேவன், சந்திரன், திசைகள், சந்தி காலங்கள், இரவு காலங்கள், பூமி, ஆகாயம் அனைத்தும் அறியும்"
(ஆதித்யோ பகவான் வாயூர் திசஸ்ச சந்த்ரஸ் ததைவ ச! அஹஸ்சாபி ததா சந்த்யை ராத்ரிஸ்ச ப்ருத்வீ ததா !! யதான்ஏபி விஜானந்தி ததா சாரித்ர சம்யுதாம்!! - வால்மீகி ராமாயணம்)

இவ்வாறு சொல்லிவிட்டு, சீதாதேவி அக்னியை வலம் வந்து, பற்றுதலை விட்டு, ஒரே மனத்துடன் அக்னியில் இறங்கி விட்டாள்.

அங்கு குழுமி பெரும் கூட்டத்தில் இருந்த வயது குறைந்தவர்கள், வயதானவர்கள் அனைவரும், சீதா தேவி அக்னியில் நுழைந்ததை கண்டு நடுநடுங்கினர்.

தங்க ஆபரணங்கள் அணிந்து, அக்னியை போல ஜொலித்த சீதாதேவி, அனைவரின் முன்பாக அக்னியில் இறங்கி விட்டாள்.

அக்னிக்கு ஆஹுதி கொடுப்பது போல, சீதை இறங்கியதை மூன்று உலகமும் பார்த்தது.

இதை பார்த்து அங்கிருந்த பெண்கள் யாவரும் கதறி அழுதனர்.

தேவர்கள், சொர்க்கத்தில் இருந்து சாபத்தினால் நரகத்திற்கு விழுவது போல, சீதை அக்னியில் இறங்கியது இருந்தது. 

இந்த காட்சியை தேவர்கள், கந்தர்வர்கள் உட்பட அனைவரும் கண்டனர்.

சீதா தேவி அக்னியில் குதித்த போது, வானரர்களும், ராக்ஷஸர்களும் "ஐயோ.. ஐயோ.." என்று அலறி அழுதனர்.

அனைவரது அழுகையும், ராமபிரானின் மனதை வாட்டியது. 
சீதையின் உண்மையான் அன்பு அவர் மனதில் எழ, தாமரை போன்ற ராமபிரான் கண்களில் இருந்து நீர் பெருகியது.
(ததோ ஹி துர்மனா ராம: ஸ்ருத்வைவம் வததாம் கிர: | தத்யௌ முஹூர்தம் தர்மாத்மா பாஸ்ப வ்யாகுல லோசன: || - வால்மீகி ராமாயணம்)

அப்பொழுது, 
குபேரன், எம தர்மன், 1000 கண்களையுடைய இந்திரன், வருணன், மஹாதேவனான முக்கண்ணன், பிரம்மா அனைவரும் பல சூரியனை போல இலங்கையில் ராமபிரான் முன் ப்ரத்யஷமாகிவிட்டனர்.
(ததோ வைஸ்ரவநோ ராஜா, எமஸ்சா மித்ரகர்சன: | சஹஸ்த்ராஷோ மஹேந்த்ரஸ்ச வருணஸ்ச பரந்தப: || ஷடர் தனயன: ஸ்ரீமான் மஹாதேவோ வ்ருஷத்வஜ: | கர்தா சர்வஸ்ய லோகஸ்ய ப்ரம்மா ப்ரம்ம விதாம் வர: || ஏதே சர்வே சமாகம்ய விமானை: சூர்ய சந்நிபை: | ஆகம்ய நகரீம் லங்காம் அபிஜக்முஸ்ச ராகவம் || - வால்மீகி ராமாயணம்)

கண் எதிரே காட்சி கொடுத்த தேவர்களை பார்த்து ராமபிரான் கை குவித்து நிற்க, 
ராமபிரானை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி கொண்டு அனைவரும் பேசலனாயினர்..
"உலகங்களை படைத்த நீங்கள், 
அனைத்திலும் முதன்மையான நீங்கள், 
ஞானத்தில் சிறந்தவரான நீங்கள், எப்படி சீதையை வெறுத்து, அக்னியில் விழ சம்மதித்தீர்கள்?
(கர்தா சர்வஸ்ய லோகஸ்ய ஸ்ரேஷ்டோ ஞானவதாம் வர: ! உபேக்ஷஸே கதம் சீதாம் பதந்தீம் ஹவ்ய வாஹனே?! - வால்மீகி ராமாயணம்)

அனைத்து தெய்வங்களிலும் உயர்ந்தவர் நீங்கள் தான் என்பதை எப்படி நீங்கள் மறந்தீர்கள்?
(கதம் தேவகண ஸ்ரேஷ்டம் ஆத்மானம் ந அவா புத்யசே?! - வால்மீகி ராமாயணம்)

அண்டங்கள் அனைத்தும் அதனதன் வேலைகளை செய்வதற்கு இருப்பிடமே தாங்கள் தான். நீங்களே வசுக்களுக்கு ப்ரஜாபதியாக இருக்கிறீர்கள்.

இந்த மூன்று உலகங்களையும் படைத்த மூலகாரணம் நீங்கள். 
(த்ரயானாம் த்வம் ஹி லோகானாம் ஆதிகர்தா ஸ்வயம் ப்ரபு: - வால்மீகி ராமாயணம்)
 
11 ருத்ரர்களில் 8வது ருத்ரனாக நீங்களே இருக்கிறீர்கள்.
சாத்யர்களில் 5வது சாத்யராக நீங்களே இருக்கிறீர்கள்.
(ருத்ரானாம் அஷ்டமோ ருத்ர: சாத்யானாம் அசி பஞ்சம: - வால்மீகி ராமாயணம்)

தேவ மருத்துவர்களான அஸ்வினி  தேவதைகள் உங்கள் இரு காதுகள்.
சூரியனும், சந்திரனும் உங்கள் இரு கண்கள்.
(அஸ்விநௌ சாபி தே கர்நௌ, சந்த்ர சூர்யௌ ச சக்ஷுசி - வால்மீகி ராமாயணம்)

இந்த உலகங்கள் படைக்கப்பட்ட ஆரம்பித்திலும், இந்த உலகங்கள் அழிந்து போன நிலையிலும் நீங்கள் சாஸ்வதமாக இருக்கிறீர்கள்.
(அந்தே சாதொள ச லோகானாம் த்ருஷ்யசே த்வம் பரந்தப | - வால்மீகி ராமாயணம்)

ஒன்றும் அறியாதவரை போல, எப்படி நீங்கள் சீதையை நிராகரித்தீர்கள்?"
என்று கேட்டனர்.
(உபேக்ஷஸே ச வைதேஹீம் மானுஷ: ப்ராக்ருதோ யதா | - வால்மீகி ராமாயணம்)

உலகங்களை காக்கும் தேவதைகள் இப்படி பேசி நிற்க, மூன்று உலகங்களுக்கும் ஈஸ்வரனான, தர்மமே உருவான ராமபிரான் பேசலானார்…
(இத்யுக்தோ லோகபாலைஸ்தை: ஸ்வாமி லோகஸ்ய ராகவ: | அப்ரவீத் த்ரிதச ச்ரேஷ்டான் ராமோ தர்மப்ருதாம் வர: || - வால்மீகி ராமாயணம்)
"நான் தசரத மஹாராஜனின் புத்திரன், நான் ஒரு மனிதன் என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறேன்.
நான் யார்? யாருடையவன்? யாரிலிருந்து வந்தவன்? என்று நீங்களே சொல்லுங்கள்." 
என்றார்.
(ஆத்மானம் மானுஷம் மன்யே, ராமம் தசரதாத்மஜம்! யோயம் யஸ்ய யதஸ்சாஹம் பகவாம்ஸ் தத் அப்ரவீத் மே!! - வால்மீகி ராமாயணம்)

பரப்ரம்மத்தை அறிந்த ப்ரம்ம தேவன், ராமபிரான் கேட்டதும், பேசலானார்,

"பராக்கிரமசாலியான ஸ்ரீ ராமா! சத்தியத்தை சொல்கிறோம்.. கேளுங்கள்! 
(அப்ரவீ ஸ்ருனு மே ராம சத்யம் சத்ய பராக்ரம - வால்மீகி ராமாயணம்)

தாங்களே ஸ்ரீயபதி. தாங்களே கால சக்கரத்தை ஏந்தி இருக்கும் சாஷாத் பரம்பொருள் நாராயணன். 
ஒரு கையில் வேதத்தின் நாதத்தை குறிக்கும் சங்கத்தை வைத்து, தீய சக்திகளை ஒழிப்பவர் தாங்களே.
(பவான் நாராயணோ தேவ: ஸ்ரீமான் சக்ராயுதோ விபு:! ஏக சங்கோ வரா ஹஸ்த்வம் பூதபவ்ய சபன்தஜித:!! - வால்மீகி ராமாயணம்)

ராமா! தாங்களே என்றும் அழியாத பரப்ரம்மம்.
தாங்களே சத்யத்தின் ஆரம்பமாகவும், நடுவாகவும், முடிவாகவும் உள்ளீர்கள்.
(அக்ஷ்ரம் ப்ரம்ம சத்யம் ச மத்யே ச அந்தே ச ராகவ | - வால்மீகி ராமாயணம்)

தாங்களே உலகத்துக்கு தர்மத்தின் ரூபம். தாங்களே நான்கு கைகளுடைய விஸ்வக்சேனர்.
(லோகானாம் த்வம் பரோ தர்மோ விஸ்வக்சேனஸ் சதுர்புஜ: ! - வால்மீகி ராமாயணம்)
சாரங்கம் என்ற வில் எந்தியவர் தாங்கள். இந்திரியங்களுக்கு ஈசன் தாங்களே.
தாங்களே புருஷர்களில் புருஷோத்தமன். யாராலும் தோற்கடிக்க முடியாதவர் தாங்கள்.
கைகளில் கத்தி வைத்து இருப்பவர், எங்கும் வியாபித்து இருக்கும் விஷ்ணு தாங்களே! 
யாவரையும் கவர்ந்து இழுக்கக்கூடியவர் தாங்களே, மஹா பலசாலியும் தாங்களே!
(சார்ங்கதன்வா ஹ்ருஷிகேச: புருஷ: புருஷோத்தம: ! அஜித: கங்கத்ருத விஷ்ணு: கிருஷ்ணஸ்சைவ ப்ருஹத் பல: || - வால்மீகி ராமாயணம்)





சேனைகளுக்கு அதிபதி தாங்கள். புலன்களை ரமிக்க செய்பவர் தாங்களே! புத்தியை தூண்டுபவர் தாங்களே! சத்வ குணத்துக்கு காரணமும் தாங்களே! பொறுமை என்ற குணத்துக்கும் காரணம் தாங்களே! பற்றற்ற குணத்துக்கும் காரணம் தாங்களே!
(சேனானீர் க்ராமனீஸ்ச த்வம் புத்தி: சத்வம் க்ஷமா தம: | -  வால்மீகி ராமாயணம்)

ஆரம்பமும், முடிவும் தாங்களே. தாங்களே உபேந்திரன் என்ற பெயரில், தேவர்கள் கூட்டத்தில் இந்திரனுக்கு சகோதரனாகவும் இருக்கிறீர்கள். 
மது என்ற அரக்கனை அழித்தவரும் தாங்களே!
(ப்ரபவஸ்சாப்ய யஸ்ச த்வம் உபேந்த்ரோ மதுசூதன:!! - வால்மீகி ராமாயணம்)

இந்திர தேவனை கொண்டு உங்கள் காரியங்களை தாங்களே செய்து கொள்கிறீர்கள். 
தாங்களே பத்மநாபன் என்று அறியப்படுகிறீர்கள்.  
சரண் அடைந்த அனைவருக்கும், அடைக்கலம் தருபவர் தாங்களே என்று ரிஷிகளும் சொல்கின்றனர்!  
(இந்த்ர கர்மா மஹேந்திரஸ் த்வம் பத்மநாபோ ரனாந்த க்ருத்! சரண்யம் சரணம் ச த்வாம் ஆஹுர் திவ்யா மஹர்ஷய:!! - வால்மீகி ராமாயணம்)

ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இருக்கும் வேதம் பல வித ஒலிகளில், பல வித வழிகளில் உங்களையே அழைக்கின்றது.
(சஹஸ்ர ஸ்ருங்கோ வேதாத்மா ஸதஜிஹ்வோ மஹர்ஷப:! - வால்மீகி ராமாயணம்)

தாங்களே மூன்று உலகங்களையும் படைத்தவர். தாங்களே ப்ரபு. ஸித்தி அடைந்தவர்களுக்கும் லட்சியம் தாங்களே. மோக்ஷம் அடைய முயற்சி செய்பவர்களுக்கும் லட்சியம் தாங்களே! முதலில் இருந்தவரும் தாங்களே!
(த்வம் த்ரயானாம் ஹி லோகானாம் ஆதிகர்தா ஸ்வயம் ப்ரபு:! ஸித்தானாம் அபி ஸாத்யானாம் ஆஸ்ரயஸ் சாஸி பூர்வஜ: - வால்மீகி ராமாயணம்)

யாகமும் தாங்களே!  வஸத்தும், ஓங்காரமும் தாங்களே! தவத்துக்கும் அப்பாற்ப்பட்டவர் தாங்கள். 
தங்களை ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவர் கிடையாது. தாங்களை யாருமே அறிந்து கொள்ளவும் முடியாது.
(த்வம் யஞ்யஸ்த்வம் வஸத்காரஸ்த்வம் ஓங்கார: பரந்தப:! ப்ரபவம் நிதனம் வா தே ந விது: கோ பவாநிதி !! - வால்மீகி ராமாயணம்)

தாங்களே எங்கும் அனைவரிடத்திலும் இருந்தாலும், ப்ரம்மத்தையே உபாசிக்கும் ப்ரம்மணர்களிடமும், பசுக்களிடமும், அனைத்து திசைகளிலும், ஆகாயத்திலும், மலைகளிலும், மரங்களிலும் குறிப்பாக தெரிகிறீர்கள். 
(த்ருஷ்யசே சர்வ பூதேஷு ப்ராஹ்மணேஷு ச கோஷு ச! திக்ஷு சர்வாசு ககனே பர்வதேஷு வனேஷு ச!! - வால்மீகி ராமாயணம்)

ஆயிரம் கால்கள் உடையவர் தாங்களே! 
மஹாலக்ஷ்மி என்றும் உங்களுடனேயே இருப்பதால் தாங்கள் ஸ்ரீமானாகவே இருக்கிறீர்கள். 
ஆயிரம் முகங்களில் ஆயிரக்கணக்கான கண்கள் உடையவர் தாங்கள். பூமியை மலைகள் தாங்கி இருப்பது போல, தாங்களே எங்களை தாங்குகிறீர்கள்.
(சஹஸ்ர சரண: ஸ்ரீமான் ஸதஷீர்ஷ: சஹஸ்ர த்ருக் ! த்வம் தாரயசி பூதானி வசுதாம் ச ச-பர்வதாம்! - வால்மீகி ராமாயணம்)

ஒரு பெரிய சர்பம் தன்னை சுருட்டி கொண்டு இருப்பது போல, லோகங்கள் ஸ்ருஷ்டி ஆகாத காலத்தில், தேவ கந்தர்வர்கள் உட்பட 14 லோகங்களையும் (பொதுவாக மேலுலகம், பூலோகம் , பாதாள லோகம் என்று மூன்று லோகம் என்று சொல்வோம்) சேர்த்து தனக்குள் அடக்கி கொண்டு, நீங்கள் மட்டுமே அன்று இருந்தீர்கள்.
(அந்தே ப்ருதிவ்யா சலிலே த்ருஷயசே த்வம் மஹோரக: | த்ரீல்லோகான் தாராயன் ராம தேவ கந்தர்வ வதானவான் || - வால்மீகி ராமாயணம்)

நானே உங்கள் இதயம். சரஸ்வதியே உங்கள் நாக்கு. தேவர்கள் உன் தலை கேசம். ரூபமில்லாத நிலையில் ப்ரம்மமாக நீங்கள் இருக்கும் நிலையில் இப்படி தானே வேதம் உங்களை வர்ணிக்கிறது.
(அஹம் தே ஹ்ருதயம் ராம ஜிஹ்வா தேவீ சரஸ்வதி | தேவா காத்ரேஷு ரோமானி நிர்மிதா ப்ரஹ்மண ப்ரபோ || - வால்மீகி ராமாயணம்)

நீங்கள் விழித்து இருந்தால், அதுவே பகல். நீங்கள் உறங்கினால், அதுவே இரவு. வேதங்கள் உங்களை பற்றியும், உங்கள் குணங்களை பற்றியும் தான் சொல்கிறது! நீங்கள் இல்லாமல் வேதமே இல்லை.
(நிமேசஸ்தே பவேத்ராத்ரி ருன்மேஷஸ்தே பவேத்திவா | சம்ஸ்காராஸ்தேபவன் வேதா ந தத்ஸதி த்வயா வினா || வால்மீகி ராமாயணம்)

அனைத்து உலகங்களும் உங்கள் சரீரம். இந்த பூமி உங்களின் தைரியத்தை குறிக்கிறது. அக்னி உங்கள் கோபம். நிலவு உங்கள் அணுகிரஹம், அதுவே உங்கள் ஸ்ரீவத்சம்.
(ஜகத்சர்வம் சரீரம் தே தைர்யம் தே வசுதாதலம் | அக்னி கோப: ப்ரஸாதஸ்தே சோம ஸ்ரீவத்ச லக்ஷன || - வால்மீகி ராமாயணம்)

நீங்களே புராண காலத்தில் மூன்று அடியால் பூலோகம் முதல் சத்ய லோகம் வரை பலி சக்கரவர்த்தியிடம் இருந்து மூன்று லோகங்களையும் கைப்பற்றி, இந்திர தேவனை மீண்டும் மகேந்திரன் ஆக்கினீர்கள்.
(த்வயா லோகாஸ்த்ரய: க்ராந்தா: புரானே விக்ரமைஸ்த்ரிபி: | மஹேந்த்ரஸ்ச க்ருதோ ராஜா பலிம் பத்த்வா மஹாசுரம் || - வால்மீகி ராமாயணம்)

சீதாதேவி சாக்ஷாத் மஹாலக்ஷ்மி. தாங்கள் சாக்ஷாத் மஹாவிஷ்ணு. நீங்கள் மனித ரூபத்தில் வந்தது ராவணனை வதம் செய்வதற்கே! 
(சீதா லக்ஷ்மீர் பவான் விஷ்ணு தேவ: க்ருஷ்ண: ப்ரஜாபதி: | வதார்தம் ராவணஸ்யேஹ ப்ரவிஷ்டோ மானுஷீம் தனும் || - வால்மீகி ராமாயணம்)

ஓ தர்மத்தின் தலைவனே! உங்கள் காரியம் இனிதே நிறைவேறியது. ராவணன் கொல்லப்பட்டுவிட்டான். நீங்கள் உங்களுடைய  விண்ணுலகத்திற்கு மகிழ்ச்சியோடு வாருங்கள். 
(ததிதம் ந: க்ருதம் கார்யம் த்வயா தர்மப்ருதாம் வர| நிஹதோ ராவணோ ராம ப்ரஹ்ருஷ்டோ திவமாக்ரம || - வால்மீகி ராமாயணம்)

உங்கள் வலிமையும் வீரமும் அமோகமானது.
உங்கள் நோக்கம் அமோகமானது.
உங்கள் மகிமை அமோகமானது.
உங்கள் பக்தர்கள் கூட ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள்.
(அமோகம் பல வீர்யம் தே அமோகஸ்தே பராக்ரம | அமோகம் தர்சனம் ராம ந ச மோக: ஸ்தவஸ்தவ || அமோகாஸ்தே பவிஷ்யந்தி பக்திமன் தஸ்ச யே நரா: || - வால்மீகி ராமாயணம்)

ஆதி புருஷரான உங்களை சரணடைந்து பக்தி செய்பவர்கள் எவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரும், இக லோகத்தில் தான் விரும்பியது அனைத்தையும் அடைந்து, விண்ணுலகத்திலும் ஆனந்தத்தை பெறுகிறார்கள்.
(யே த்வாம் தேவம் த்ருவம் பக்தா: புராணம் புருஷோத்தமம் | ப்ராப்னுவந்தி சதா காமாநிஹ லோகே பரத்ர ச || - வால்மீகி ராமாயணம்)

ஆதி புருஷரான, நித்யமாக இருக்கும் உங்கள் சரித்திரத்தை கீர்த்தனம் செய்யும் மனிதர்கள் ஒரு போதும் நாசமாக மாட்டார்கள்." 
என்று ஆச்சர்யமாக 'ராமபிரானை ஸ்தோத்திரம் செய்தார்', ப்ரம்ம தேவன்.
(இமமார்ஷம் ஸ்தவம் நித்யம் இதிஹாசம் புராதனம் | யே நரா: கீர்த்தயிஷ்யந்தி நாஸ்தி தேஷாம் பராபவ: || - வால்மீகி ராமாயணம்)

சத்ய லோகத்தை விட்டு விட்டு, உலகுக்கே தாத்தாவான (பிதாமஹ) ப்ரம்ம தேவனே, ராமபிரான் முன் வந்து, இவ்வாறு ஸ்தோத்திரம் செய்து நிற்க, இதை கேட்ட அக்னி தேவன், சிதையை விலக்கி கொண்டு, சீதாதேவியுடன் வெளிப்பட்டு விட்டார்.
(ஏத ஸ்ருத்வா சுபம் வாக்யம் பிதாமஹ சமீரிதம் | அக்னேநாதாய வைதேஹீம் உத்பபாத விபாவசு: || - வால்மீகி ராமாயணம்)

இளம் சூரியனை போல பிரகாசித்து காணப்பட்டாள் சீதாதேவி. 
தங்க ஆபரணங்கள் அணிந்து இருந்தாள். 
சிவப்பு ஆடை உடுத்தி இருந்தாள். 
அக்னியில் இருந்து வெளிப்பட்டும், சீதாதேவியின் கூந்தல் சிறிதும் குலையாமல், கருமையாகவே இருந்தது.

அவள் உடுத்தி இருந்த ஆபரணங்கள், அலங்காரம் அப்படியே இருந்தது. 
சீதாதேவியை அப்படியே ராமபிரானிடம் ஒப்படைத்து விட்டு நின்றார், அக்னி தேவன்.

மேலும், அக்னி தேவன், ராமபிரானை பார்த்து,
"இதோ உங்கள் சீதை. அவளிடம் ஒரு பாபமும் கிடையாது. 
(ஏஷா தே ராம வைதேஹீ பாபமஸ்யாம் ந வித்யதே | - வால்மீகி ராமாயணம்)

ஓ ஒழுக்கத்தின் உறைவிடமே! உங்களை மீறி சீதை தன் வாக்காலோ, மனதாலோ,  கண்களாலோ கூட சென்றதில்லை. சீதாதேவி மஹா உத்தமி.
(நைவ வாசா ந மனசா நானு த்யானான்ன சக்ஷுஸா | சுவ்ருத்தா வ்ருத்த சௌன்டீர் ந த்வாமதி சசார ஹ || - வால்மீகி ராமாயணம்)

ராவணன் தன் வலிமையை காட்டி, சீதையை கடத்தி சென்றான். சீதையை சிறை வைத்தான். 
ஆனால், அவள் எப்பொழுதும் உங்கள் தியானத்திலேயே இருந்தாள். ராக்ஷஸிகள் சூழ்ந்து சீதையை காவல் காக்க, சீதை உங்கள் தியானத்தில் அடைக்கலம் அடைந்து இருந்தாள்.

ராவணன் பல வித முறைகளில் சீதையை கவர நினைத்தும், ராக்ஷஸிகள் பல விதத்தில் மிரட்டியும், சீதாதேவி தன் உயிரை உங்களிடம் சமர்ப்பித்து, ராவணனை சிறிதும் பார்க்காமல் இருந்தாள். 

சீதை இதய பூர்வமாக புனிதமானவள். 
ஒரு குறையும் அற்றவள். 
ஓ ராமா! சீதையை ஏற்றுக்கொள்ளுங்கள். 
சீதையிடம் கடுமையான வார்த்தைகளை பேசாதீர்கள். இது என் ஆணையும் கூட",
(விசுத்தபாவாம் நிஷ்பாபாம் ப்ரதிக்ருஹ்நீஷ்வ ராகவ | ந கிஞ்சித் அபிதாதவ்யம் அஹம் ஆக்ஞா பயாமி தே || - வால்மீகி ராமாயணம்
என்று ஒரு தகப்பனை போல பேசினார் அக்னி தேவன்.

(குறிப்பு : ராமபிரான் இது போன்று கடுமையாக என்றுமே பேசியதே கிடையாது என்று சீதாதேவியே சொன்னாள். 
ராமபிரான் சீதையிடம் கோபமே இல்லாதவர் என்பது, இனி இவர் பேசும் போது தெரிகிறது. 
மேலும் இவர் ப்ரம்ம தேவன் முதல் ருத்ரன் வரை தானாக வருவார்களா? என்று இவர்களுக்கு பரிக்ஷை வைத்ததும் தெரிகிறது.)

அக்னி தேவன் பேசியதை கேட்டு, ராமபிரான் மகிழ்ச்சி கொண்டார்.

சீதா தேவி கண் எதிரே நிற்க, அவள் மேல் உள்ள உண்மையான அன்பினால், ராமபிரான் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

தர்மமே வடிவான ராமபிரான், அக்னி தேவனை பார்த்து பேசலானார்.
(அப்ரவீத் த்ரிதசஸ்ரேஷ்டம் ராமோ தர்ம ப்ருதாம் வர: | - வால்மீகி ராமாயணம்)

"ராவணனின் இடத்தில் சீதை விதி வசத்தால் அகப்பட்டு போனதற்கு, இவள் இத்தனை துன்பங்களை, மூன்று உலகமும் கொடுத்த துயரத்தை அனுபவித்தது சரியே இல்லை. 
(அவஸ்யம் த்ரிஷு லோகேஷு ந சீதா பாபமர்ஹதி | தீர்க காலோஷிதா ஹீயம் ராவணான்த: புரே சுபா: || - வால்மீகி ராமாயணம்)

(குறிப்பு: மூன்று உலகமும் சேர்ந்து கொண்டு சீதைக்கு துன்பங்களை கொடுத்தீர்கள்!! என்று மறைமுகமாக ப்ரம்ம, ருத்ர, மற்றும் தேவர்களை பார்த்து சொல்கிறார், ராமபிரான்)

சீதையை நான் அப்பொழுதே ஏற்று கொண்டிருந்தால், என்னை விளையாட்டு பிள்ளை என்றோ, அல்லது காம புத்தி உடையவன் என்றோ உலகம் பேசி இருக்கும்.
(பாலிஸ: கலு காமாத்மா ராமோ தசரதாத்மஜ: | இதி வக்ஷ்யந்தி மாம் சந்தோ ஜானகீம் அவிசோத்ய ஹி || - வால்மீகி ராமாயணம்)

கற்புக்கரசியான சீதை என்றுமே என் மீது பக்தி உடையவள் என்று அறிவேன். அவள் என்றுமே என் இதயத்தில் வசிப்பவள்.
(அனன்ய ஹ்ருதயாம் பக்தாம் மச்சித்த பரிவர்தினீம் | அஹமப்ய வ கச்சாமி மைதிலீம் ஜனகாத்மஜாம் || - வால்மீகி ராமாயணம்)
இந்த மூவுலகமும் சத்தியத்தில் இருக்க நினைக்கிறதா? என்று பரிக்ஷை செய்யவே, நான் அக்னி பிரவேசம் செய்த சீதையிடம் பாராமுகம் போல இருந்தேன்.
(ப்ரத்யார்தம் து லோகானாம் த்ரயானாம் சத்ய சம்ஸ்ரய: | உபேக்ஷே சாபி வைதேஹீம் ப்ரவிசந்தீம் ஹுதாசனம் || - வால்மீகி ராமாயணம்)

எப்படி கடல் எல்லையை கடக்க முடியாமல் இருக்கிறதோ, அது போல, ராவணன் சீதையிடம் குடிகொண்டுள்ள தேஜஸை பார்த்தே நெருங்க முடியாது என்று அறிவேன்.

அந்த கீழ்தரமான ராவணன், சீதையை மனதால் கூட தீண்ட முடியாது. 

சீதை ராவணனின் அரண்மனையில் கொட்டி இருக்கும் செல்வங்களை கண்டு மயங்குபவள் இல்லை.
எப்படி சூரியனிடமிருந்து ஒளி பிரியாமல் இருக்கிறதோ, அது போல, சீதை என்னை விட்டு பிரியாதவள்.

இந்த மூவுலகுமும் அறியும் சீதையின் ஒழுக்கத்தை.
புகழ் எப்படி என்னை விட்டு பிரிக்க முடியாததோ, அது போல, சீதை என்னை விட்டு பிரியாதவள்.
(விசுத்தா த்ரிஷு லோகேஷு மைதிலீ ஜனகாத்மஜா | ந ஹி ஹாதுமியம் சக்யா கீர்த்திர் ஆத்மாவதா யதா || - வால்மீகி ராமாயணம்)

நிச்சயமாக, நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன்.
நீங்கள் எனக்கு நல்லதே நடக்க ஆசைப்படுபவர்கள், மேலும் உலகமே மதிக்கக்கூடியவர்கள் நீங்கள்."
என்றார் ராமபிரான்.

ராமபிரான் மகிழ்ச்சியுடன் சீதையை ஏற்றார். 
சீதைக்கு தன்னை நிரூபித்ததால், மனக்குறை நீங்கி, மனதுயரமும் நீங்கிற்று.

ராமபிரான் இப்படி பேசியதும், சிவபெருமான் பேசலானார்..
(இதம் சுபதரம் வாக்யம் வ்யாஜஹார மஹேஸ்வர: | - வால்மீகி ராமாயணம்)
"தாமரை போன்ற, தீர்க்கமான கைகளை கொண்ட, வலிமையான நெஞ்சம் கொண்ட ஸ்ரீராமா ! நீங்கள் நல்ல காரியம் செய்தீர்கள். 

உலகத்திற்கே இருளை உண்டாக்கி, பெரும் பயத்தை உண்டாக்கிய ராவணனை நீங்கள் ஒழித்து கட்டி, உலகத்துக்க மங்களம் செய்துள்ளீர்கள்.
(திவ்யா சர்வஸ்ய லோகஸ்ய ப்ரவ்ருத்தம் தாருணம் தம: | அபாவ்ருத்தம் த்வயா சங்கோ ராம ராவணஜம் பயம் || - வால்மீகி ராமாயணம்)

பரதனை, கௌசல்யா, கைகேயி, லக்ஷ்மணனின் தாயார் அனைவரையும் சமாதானம் செய்ய உடனே புறப்படுங்கள்.

அங்கு அயோத்தியில் அரசாட்சியை ஏற்று இக்ஷ்வாகு குலத்துக்கு பெருமை சேருங்கள்.




அஸ்வமேத யாகம் செய்யுங்கள். எதிர்க்க முடியாத புகழை நிலை நிறுத்துங்கள்.

வேத ப்ராம்மணர்களுக்கு நிறைய தானம் செய்யுங்கள். கடைசியாக உங்கள் விருப்பப்படி விண்ணுலகம் வாருங்கள்.
(ப்ராஹ்மணேப்யோ தனம் தத்வா த்ரிவிதம் கந்துமர்ஹசி || - வால்மீகி ராமாயணம்)

அதோ அந்த திவ்யமான ஆகாய விமானத்தில் உங்களின் பிதா என்ற ஸ்தானத்தை பெற்ற 'தசரத மன்னன் இருக்கிறார் பாருங்கள்'. 
மனித உலகத்தில் நீங்கள் அவதரிக்க ஒரு வழிகாட்டியாக இருந்தவர். 
(ஏஷ ராஜா விமான ரத பிதா தசரதஸ்தவ | காகுத்ஸ்வ மானுஷே லோகே குருஸ்தவ மஹாயஷா: || - வால்மீகி ராமாயணம்)

உங்களை புத்திரனாக பாக்கியம் பெற்ற இவர், இப்பொழுது இந்திர லோகத்தில் இருக்கிறார். 
தாங்களும், லக்ஷ்மணனும் சேர்ந்து அவரை வணங்குங்கள்."
(இந்த்ர லோகம் கத: ஸ்ரீமான் த்வயா புத்ரேன தாரித: | லட்சுமணேன சஹ ப்ராத்ரா த்வமேனம் அபிவாதய || - வால்மீகி ராமாயணம்)

இவ்வாறு சிவபெருமான் சொல்ல, ராமபிரான், லக்ஷ்மணனோடு சேர்ந்து, தேவ ரதத்தில் இருக்கும் தன் 'தகப்பனாருக்கு' நமஸ்காரம் செய்தனர்.

தன் தகப்பனார் திவ்ய விமானத்தில், ஜொலிப்பதை கண்டு ஆனந்தப்பட்டார் ராமபிரான்.

தன் உயிரையும் விட மேலான தன் மகன் ராமனை பார்த்த ஆனந்தத்தில் திளைத்தார் தசரதர்.

தன் மடியில் ராமபிரானை அமர்த்தி கொண்டு, ராமபிரானை கட்டி அணைத்து பேசினார் தசரதர்..
"ராமா! நான் ஒரு உண்மையை சொல்லட்டுமா?.. எனக்கு கிடைத்த சொர்க்க லோக வாழ்க்கையும், தேவர்களும் ரிஷிகளும் என் மீது காட்டும் பக்தியும் கூட எனக்கு நீ இல்லாமல் ரசிக்கவில்லை.
(ந மே ஸ்வர்கோ பஹுமத: சம்மானஸ்ச சுரர்ஷிபி | த்வயா ராம விஹீனஸ்ய சத்யம் ப்ரதி ஸ்ருநோதி தே || - வால்மீகி ராமாயணம்)

இப்பொழுது உன்னை பார்த்ததால், இதயப்பூர்வமாக பேரானந்தம் அடைந்தேன். 
நீ எனக்காக 14 வருட வனவாச காலத்தை ஏற்று, விஜயராகவனாக நிற்பதை கண்டு பூரண திருப்தி கொண்டேன்.

கைகேயி சொன்ன வார்த்தைகள் என் நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை.

சூரியன் க்ரஹன காலத்தில் மறைக்கப்பட்டு, பிறகு மீண்டும் பிரகாசம் ஆவது போல, பெரும் துக்கத்தில் இருந்த நான், இன்று உன்னை, லக்ஷ்மணனோடு கட்டி அணைக்கும் போது, துக்கம் விடுபட்டு இருக்கிறேன். 

மகனே! என் வாக்கை உயர்ந்த ஆத்மாவான நீ காப்பாற்றினாய். 

தேவனாகி போனதால், இந்த லீலை யாவும் ராவணனை கொல்வதற்கு ஏற்படுத்தப்பட்ட திட்டமே என்று அறிகிறேன்.

எதிரிகளை ஒழிப்பவனே! உன்னால் கௌசல்யா பெருமைப்படுகிறாள். அவள் பாக்கியசாலி. 
நீ திரும்பி அயோத்தி வருவதை பார்க்க கொடுத்து வைத்தவள்.

யாரெல்லாம் உன்னை அயோத்தியில் பார்க்க இருக்கிறார்களோ, அவர்கள் யாவருமே பாக்கியசாலிகள். 
அவர்கள் உன்னுடைய பட்டாபிஷேகத்தை பார்க்க இருக்கிறார்கள்.
(சித்தார்த்தா கலு தே ராம நரா யே த்வாம் புரீம் கதம் | ஜலார்த்ரம் அபிஷிக்தம் ச த்ரக்ஷ்யந்தி வசுதாதிபம் || - வால்மீகி ராமாயணம்)

நீயும், பக்தனான பரதனும் மீண்டும் சந்திக்க போவதை பார்க்க ஆவல் கொள்கிறேன். 

நீ 14 வருட வன வாசத்தை ஏற்றாய். 
என் வாக்கை காக்க நீயும், சீதையும், லக்ஷ்மணனும் வனத்தில் வாழ்ந்தீர்கள். இன்று வன வாச காலம் முடிந்து விட்டது.
நான் கொடுத்த சத்யம் நிறைவேறியது. 

ராவணன் வதைக்கப்பட்டதால், விண்ணுலக தேவர்கள் யாவரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். 
(ராவணன் ச ரனே ஹத்வா தேவாஸ்தே பரிதோஷிதா: || - வால்மீகி ராமாயணம்)

நீ பெரிய காரியத்தை செய்து முடித்து இருக்கிறாய். 
உன் சகோதரர்களுடன் சேர்ந்து இருந்து, அரசாட்சி செய்து, நீடூழி வாழ்க !" என்றார் தசரதர்.

இப்படி தசரத மகாராஜன் பேசிக்கொண்டு இருக்க, கைக்குவித்து கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார் ராமபிரான்.

பிறகு ராமபிரான், தசரதரை பார்த்து,
"நியாயம் அறிந்தவர் தாங்கள்! தாயார் கைகேயி மீதும், தம்பி பரதன் மீதும் உள்ள கோபத்தை விட்டு, அணுகிரஹம் செய்யுங்கள்.
நீங்கள் கைகேயியையும், பரதனையும் தியாகம் செய்து விட்டதாக சொன்னீர்களாம். 
(குரு ப்ரசாதம் தர்மக்ஞ கைகேய்யா பரதஸ்ய ச | சுபுத்ராம் த்வாம் த்யஜாமீதி யதுக்தா கைகேயி த்வயா || - வால்மீகி ராமாயணம்)

இது கொடுமையான சாபத்திலிருந்து கைகேயி மாதாவுக்கு விடுதலை கொடுங்கள்." 
என்று கைக்குவித்து வேண்டினார்.

தசரதர் ராமபிரானின் வேண்டுகோளை ஏற்றார்.

பிறகு, தசரதர், லக்ஷ்மணனை பார்த்து,
"லக்ஷ்மணா! நீ ராமனுக்கும் சீதைக்கும் சேவகனாகவே இருக்கிறாய். 
உன் பக்தியை கண்டு நான் பெருமை அடைகிறேன். 
நீ தர்ம விஷயமான சுகங்கள் அனைத்தையும் அடைவாய்.
நீ பெரும் புகழ் பெறுவாய். 
ராமனின் அணுகிரஹத்தில் அனைத்து உயர்வுகளையும் அடைவாய்.
ராமனுக்கே சேவை செய். உனக்கு எல்லா மங்களமும் உண்டாகட்டும்.

ராமனுக்கே சேவை செய்யும் சகோதரனே! 
சுமித்திரையின் ஆனந்தமே! ராமன் எப்பொழுதும் உலகத்துக்கே நல்லது நடக்க ஆசைப்படுபவன். 
(ராமம் சுஸ்ரூச பத்ரம் தே சுமித்ரா நந்தவர்தன | ராம: சர்வஸ்ய லோகஸ்ய சுபேஸ்வபிரத சதா || - வால்மீகி ராமாயணம்)

மூவுலகில் இருக்கும் அனைத்து ரிஷிகளும், சித்தர்களும் உன் ராமனை புருஷோத்தமன், பரமாத்மா என்று வழிபடுகிறார்கள். 
(ஏதே சேந்த்ராஸ் த்ரயோ லோகா: சித்தாஸ்ச பரமர்ஷய: | அபிகம்ய மஹாத்மானம் அர்ச்சந்தி புருஷோத்தமம் || - வால்மீகி ராமாயணம்

யாருக்கும் புலப்படாத (அவ்யக்தம்), முடிவில்லாத (அக்ஷரம்) ப்ரம்ம ஸ்வரூபமே, புலப்படும் படியாக ராமனாக தெரிகிறார். அனைவரது ஹ்ருதயத்திலும் இவர் இருக்கிறார்.
(ஏதத் ததுக்தம் அவ்யக்தம் அக்ஷரம் ப்ரம்ம நிர்மிதம் | தேவானாம் ஹ்ருதயம் சௌம்ய குஹ்யம் ராம பரந்தப: || - வால்மீகி ராமாயணம்)


லக்ஷ்மணா! நீ ராமனுக்கும், சீதைக்கும் தொண்டு செய்வதே உன் தர்மமாக கொண்டு, பெரும் புகழ் பெறுவாய்."
என்றார் தசரதர்.

பிறகு, தன் மருமகளாக இருக்கும் சீதாதேவியை பார்த்து, 
"வைதேஹி! உன்னிடம் பாராமுகமாக போல இருந்த ராமனை கண்டு கோபப்படாதே! ராமன் உன் நல்லதையே என்றும் விரும்புபவன். 
(கர்த்தவ்யோ ந து வைதேஹீ மன்யுஸ் தியாகமிமம் ப்ரதி | - வால்மீகி ராமாயணம்)

உன்னுடைய ஒழுக்கத்தை, தூய்மையை வெளிக்காட்டவும், 
உன் மனதில் இருந்த மனக்குமுறலை போக்கவும், 
தவறான குற்றச்சாட்டுகள் ஏற்படுமோ? என்ற உன் மன பயத்தை அகற்றவுமே, 
பாராமுகம் போல, கோபம் உள்ளது போல காட்டிக்கொண்டான். 
நீ உன் புகழை, உன் ஒழுக்கத்தை அனைவருக்கும் நிரூபித்தாய்.

பதி சேவையை பற்றி நான் உனக்கு சொல்ல வேண்டியதே இல்லை. நீயே பதி சேவையின் இலக்கணம்.
இருந்தாலும், நான் உனக்கு மாமனார் என்ற ரீதியில், உனக்கு இதை சொல்ல ஆசைப்பட்டேன்.
உன் கணவன் சாகிஷாத் அந்த பரப்ரம்மமே! உனக்கும் இது நன்றாக தெரியும்.. ", என்றார்.

இப்படி தான் இரண்டு புத்ரர்களிடமும், சீதையுடன் பேசிவிட்டு, தசரத மன்னர், தான் வந்து இருந்த விமானத்தில் பயணித்து, திரும்பி இந்த்ர லோகம் சென்று மறைந்து விட்டார்.
(இதி பிரதிசம் ஆதிஷ்ய புத்ரோ சீதாம் ததா ஸ்னுசாம் | இந்த்ர லோகே விமானேன யயௌ தசரதோ ஜ்வலன் ||  - வால்மீகி ராமாயணம்)

இப்படி தசரதர் சொல்லி விட்டு மறைந்த பின், தேவேந்திரன் கை குவித்து நிற்கும் ராமபிரான் முன் பேசலானார்..
(ப்ரதிப்ரயாதே காகுத்ஸம் மஹேந்திர பாகசாசன: | அப்ரவீத் பரம ப்ரீதோ ராகவம் ப்ராஞ்சலிம் ஸ்திதம் || - வால்மீகி ராமாயணம்)
"ஓ ராமா! எதிரிகளை ஒழிப்பவரே !  உங்கள் தரிசனமே அமோகமானது. உங்களால் நாங்கள் பெரும் ஆனந்தம் அடைந்துள்ளோம். நீங்கள் என்ன வேண்டுமோ கேளுங்கள்.."
என்றார் இந்திர தேவன்.
(அமோகம் தர்சனம் ராம தவாஸ்மாகம் பரந்தப | ப்ரதி யுக்தா ஸ்ம தேன த்வம் ப்ரூஹி யன்மனசேச்சஸி || - வால்மீகி ராமாயணம்)

சீதை, லக்ஷ்மணனுடன் கை குவித்து நின்று கொண்டிருந்த ராமபிரான், தேவேந்திரன் இப்படி கேட்டதனால் பேசலானார்.
"ஓ சொர்க்க லோகத்தின் அதிபதியே, சுரேந்திரனே !! 
நீங்கள் என் மீது ஒருவேளை மகிழ்ச்சி அடைந்து இருந்தால், நான் என் ஆசையை உஙகளிடம் சொல்கிறேன். என் ஆசையை சத்யமாக்குங்கள்.
(யதி ப்ரீதி சமுத்பன்னா மயி சர்வ சுரேஸ்வர | வக்ஷ்யாமி குரு தே சத்யம் வசனம் வததாம் வர || - வால்மீகி ராமாயணம்)

சத்தியம் மீறாதவரே! பல வானரர்கள் எனக்காக உயிர் கொடுத்து, யமலோகம் சென்று விட்டனர். 
எனக்காக இவர்கள் அனைவரது உயிரையும் திருப்பி கொண்டுவந்து, மீண்டும் அனைவரையும் எழுப்பி விடுங்கள்.
(மம ஹேதோ பரா க்ராந்தா யே கதா யம சாதனம் | தே சர்வே ஜீவிதம் ப்ராப்ய சமுத்திஷ்டந்து வானரா: || - வால்மீகி ராமாயணம்)

இவர்கள் அனைவரும், தன் மனைவியை, குழந்தைகளை விட்டு விட்டு, எனக்காக கடுமையாக உழைத்தவர்கள். 
என் நலனுக்காக, தங்கள் உயிரை பற்றி கூட கவலைப்படாதவர்கள்.
உங்கள் அணுகிரஹத்தால்  இவர்கள் அனைவரும் உயிர்த்து எழட்டும். 

இதையே எனக்கு நீங்கள் வரமாக தாருங்கள்.
(த்வத் ப்ரஸாதாத் சமேயுஸ்தே வரமேததஹம் வ்ருனே | - வால்மீகி ராமாயணம்)

உயிர் விட்ட அனைத்து வானரர்களையும், ருக்ஷர்களையும், கோலாங்குளர்களையும் ஒரு காயம் இல்லாமல், அதே ஆரோக்கியத்தோடு, வலிமையோடு, நான் பார்க்க விரும்புகிறேன்.
(நீருஜோ நிர்வ்ரனாம்ஸ்சைவ சம்பன்ன பல பௌருஷான் | கோலாங்கூலா ததைவர்வஷான் த்ருஷ்டுமிச்சாமி மானத: || - வால்மீகி ராமாயணம்)

வானரர்கள் வாழும் இடங்களில் பூக்களும், கனிகளும், கிழங்குகளும் அனைத்து காலங்களிலும் நிரம்ப கிடைக்கட்டும். 
அவர்கள் வாழும் இடங்களில் நதிகள் குறையில்லாமல் ஓடட்டும்." 
என்று ராமபிரான் தேவேந்திரனை கேட்டார்.
(அகாலே சாபி முக்யானி மூலானி ச பலானி ச | நத்யஸ்ச விமலாஸ் த்தர திஷ்டேயுர்யத்ர வானர: || - வால்மீகி ராமாயணம்)

ராமபிரான் கேட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்ற தேவேந்திரன் பேசினார்,
"ரகு நந்தனா! மஹாத்மாவான நீங்கள் மட்டுமே இப்படி ஒரு வரத்தை பிறருக்காக கேட்க முடியும். 
நான் என்றுமே பொய் பேசுவதில்லை. ஆதலால் நான் உங்களுக்கு கொடுத்த வாக்கை பூர்த்தி செய்கிறேன்.

ராக்ஷஸர்களால் கொல்லப்பட்ட அனைத்து வானரர்களையும் எழுப்பி விட்டு விடுகிறேன்.

அங்கங்கள் துண்டிக்கப்பட்டு வதம் செய்யப்பட்ட ருக்ஷர்கள், கோலாங்குளர்கள் அனைவரையும் எழுப்பி விட்டு விடுகிறேன்.

அனைவரும் ஆரோக்கியத்தோடு வருவார்கள்.
அனைவரும் ஆழ்ந்த தூக்கத்திற்கு பிறகு எழுந்திருப்பது போல இப்பொழுது எழுந்து விடுவார்கள்.

இவர்கள் அனைவருமே தங்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகளை பார்க்க இருக்கிறார்கள்.
(சுஹ்ருத்பிர் பாந்தவைஸ்சைவ ஞாதிபி: ஸ்வஜநைரபி | சர்வ ஏவ சமேஷ்யந்தி சம்யுக்தா: பரயா முதா || - வால்மீகி ராமாயணம்)

வானரர்கள் வாழும் இடங்களில் வளரும் மரங்கள், அனைத்து காலத்திலும் பூக்களையும், பழங்களையும் கொடுக்கும்.
அவர்கள் வாழும் இடங்களில் நதிகள் தண்ணீர் குறையில்லாமல் ஒடும்."
என்று தேவேந்திரன் அணுகிரஹம் செய்ய, 
வதம் செய்யப்பட்ட அனைத்து வானரர்களும் ஒன்று விடாமல் எழுந்து விட்டனர்.

படுகாயம் ஏற்பட்டு இறந்த வானரர்களின் காயம் மாயமாக மறைந்து, ஆரோக்கியத்துடன் எழுந்தனர். 
எழுந்த வானரர்கள் எல்லோரும் அனைவரும் "என்ன இது? என்ன நடந்தது" என்று ஆச்சர்யத்தில் மூழ்கினர்.
(சவ்ரனை: ப்ரதமம் காத்ரை: சம்வ்ருத்தைர்நிர்வ்ரனை: புன: | தத: சமுத்திதா: சர்வே சூப்த்வேவ ஹரிபூங்கவா: | பபூவுர் வானரா: சர்வே கிமேததிதி விஸ்மிதா: || - வால்மீகி ராமாயணம்)

அனைத்து தேவர்களும் ராமபிரானையே பார்த்து கொண்டு, லக்ஷ்மணனோடு இருக்கும் ராமபிரானை பார்த்து சொன்னார்கள்..
"நாயகனே! வானரர்களுக்கு விடைகொடுத்து விட்டு, தாங்கள் அயோத்தி செல்லுங்கள். 

கற்புக்கு இலக்கணமான சீதையை சமாதானம் செய்யுங்கள். 
(மைதிலீ சாந்த்வய வைனாமனுரக்தாம் தபஸ்வினீம் | - வால்மீகி ராமாயணம்)

உங்கள் பிரிவினால் வாடும், பரதனை, சத்ருக்னனை, தாயாரை காணுங்கள்.
மணிமகுடம் ஏற்று கொண்டு, ராம ஜனங்களை குதூகலப்படுத்துங்கள்."
(சத்ருக்னம் ச மஹாத்மானம் ப்ராத்ரு சர்வா: பரந்தப || பராதரம் பஸ்ய பரதம் த்வத் சோகாத் வ்ரத தாரினம் | அபிஷேசய சாத்மானாம் பௌராண் கத்வா ப்ரஹர்ஷய || - வால்மீகி ராமாயணம்)
இவ்வாறு ஆசிர்வதித்து, அனைவரும் மறைந்தனர். 

உடனே விபீஷணன், ராமபிரான் அருகில் வந்து, ஜடையுடன் கூடிய கேசத்தை களைந்து, ஸ்நானம் செய்து, பட்டாடை உடுத்தி கொள்ள பிரார்த்தித்தார்.
அதற்கு ராமபிரான், "விபீஷணா! பரதனை பார்க்காமல் நான் அலங்காரம் செய்து கொள்ள விரும்பவில்லை. 
நம் சுக்ரீவ மஹாராஜனுக்கு, அவருடைய அனைத்து வானர சேனைக்கும் தேவையான அனைத்து உபச்சாரங்கள் செய்யுங்கள்.
நான் உடனேயே பரதனை காண என் நகரத்துக்கு செல்ல வேண்டும். என் பிரிவால் வாடி கிடக்கும் பரதனை காண உடனேயே கிளம்ப வேண்டும்.

நான் வந்த வழியிலேயே மீண்டும் செல்ல விரும்புகிறேன். 
ஆனால் இது நேரம் கடத்துமே என்று யோசிக்கிறேன்" என்றார்.

இலங்கையை வெற்றி கொண்ட ராமபிரான், இலங்கை நகரத்துக்குள் வர கூட இல்லை. 
'இப்போதே கிளம்புகிறேன்' என்றதும் விபீஷணன் பதைப்பதைத்தார்.
 
உடனே விபீஷணன், 
"விஜய ராகவா! என்னிடம் திவ்யமான புஷ்பக விமானன் (flight) உள்ளது. அதில் நீங்கள் ஒரே நாளில் சென்று விடலாம்.
(அஹ்நா த்வாம் ப்ராபயிஷ்யாமி தாம் புரீம் பார்திவாத்மஜ | புஷ்பகம் நாம பத்ரம் தே விமானம் சூர்ய சந்நிதம் | - வால்மீகி ராமாயணம்)

(குறிப்பு:  த்ரேதா யுகத்தில் 'விமானம்' (12 லட்சம் வருடங்கள் முன்பு நடந்த நம் சரித்திரத்தில் விமானம் இருந்துள்ளது) சொல்லப்படுகிறது
1000 வருட அந்நிய ஆக்கிரமிப்பால், நம் கலாச்சாரம், கல்வி, மொழியை நாசமாக்கி விட்டனர் என்பது, ஹிந்துக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.)

இந்த விமானம் என் சகோதரன் குபேரனுடையது. 
இதை ராவணன் குபேரனோடு போர் செய்து, கைப்பற்றி வைத்து இருந்தான்.

பெரிய மேகத்தை போல பறந்து செல்லும் இந்த விமானத்தில், உங்களை அழைத்து செல்கிறேன்.
இதில் நீங்கள் ஒரு கவலை இல்லாமல் வேகமாக சென்று விடலாம்.

நான் உங்கள் அபிமானத்துக்கு கொஞ்சம் பாத்திரமாகி இருந்தாலும், 
நீங்கள் ஏதாவது ஒரு நல்லதை என்னிடம் பார்த்து இருந்தாலும், 
நான் உங்களிடம் உண்மையான அன்பு வைத்து இருந்தால், 
நீங்கள் சிறிது நேரம் தங்கி, நான் 'உங்களுக்கும், சீதா தேவிக்கும், லக்ஷ்மணருக்கும் செய்யும் மரியாதையை ஏற்று கொள்ள வேண்டும்'.

நான் உங்களை வற்புறுத்தி ஆணையிடவில்லை. 
நான் உங்கள் சேவகன். உங்களிடம் உள்ள அன்பினால், நட்பால், மரியாதையால் இதை பிரார்த்திக்கிறேன்."
என்று வேண்டினார் விபீஷணன்.
கருணையே வடிவான ராமபிரான், விபீஷணனை பார்த்து பேசலானார்..
"விபீஷணா! உங்களுடைய உதவியாலும், நடத்தையாலும், அன்பினாலும், என்னிடம் உங்களை இதயப்பூர்வமாக சமர்ப்பித்தும், நீங்கள் எனக்கு பெரும் மரியாதை செய்துள்ளீர்கள்.
(பூஜிதோ அஹம் த்வயா சௌம்ய சாசிவ்யேன பரந்தப | சர்வாத்மநா ச சேஷ்டாபி: சௌஹ்ருதேனோத்தமேன ச || - வால்மீகி ராமாயணம்)




நீங்கள் கேட்பதை இப்பொழுது செய்யமுடியாமல் இருக்கிறேன்.
ராக்ஷஸ ஈஸ்வரா! நான் உங்கள் பிரார்த்தனையை கேட்கவில்லை என்று நினைக்காதீர்கள். 
என் மனம், 'என்னை காண சித்ரகூடத்தில் ஓடி வந்த பரதனை' காண்பதில் ஓடுகிறது.

அருமையான பரதன், என்னிடம் தலை குனிந்து பிரார்த்தனை செய்தும், அன்று அவன் பிரார்த்தனையை நிறைவேற்றாமல் இருந்தேன். 
(சிரஸா யாசதோ யஸ்ய வசனம் ந க்ருதாம் மயா | - வால்மீகி ராமாயணம்)

மேலும், என் தாயார் கௌசல்யா, மேலும் சுமித்ரா மற்றும் கைகேயி தாயாரை உடனே பார்க்க என் மனம் துள்ளுகிறது. 

என் குருநாதரையும், அயோத்தி நகரத்து அபிமானிகளையும், என் பரிவாரங்களையும் உடனே பார்க்கும் ஆவலில் இருக்கிறேன்.

உங்களுடைய அந்த திவ்ய விமானத்தை கொண்டு வாருங்கள்.
ஓ ராக்ஷஸ தலைவனே! வேலை முடிந்த இடத்தில் நான் எப்படி இருக்க முடியும்? 
(உபஸ்தாபய மே க்ஷிப்ரம் விமானம் ராக்ஷஸ ஈஸ்வர | க்ருத கார்யஸ்ய மே வாச: கதம் ஸ்யாதிஹ சம்மத: || - வால்மீகி ராமாயணம்)

என் அருமை நண்பா! என்னை நீங்கள் ஏற்கனவே பெரும் மரியாதை செய்து விட்டீர்கள். 
எனக்கு உத்தரவு தாருங்கள். தயவு செய்து என்னை தவறாக நினைக்க வேண்டாம்."
என்று ராமபிரான் கேட்டுக்கொண்டார்.
(அனுஜானீஹி மாம் சௌம்ய பூஜிதோஸ்மி விபீஷண | மன்யுர் ந கலு கர்தவ்ய த்வரிதம் த்வா அனுமானயே || - வால்மீகி ராமாயணம்)

ராமபிரானின் நிலையை அறிந்த விபீஷணன், உடனேயே ரத்தினங்கள் பதித்த, தங்க மயமான புஷ்பக விமானத்தை கொண்டு வந்தார்.

ராமபிரானை பார்த்து, 
"இன்னும் என்ன சேவை செய்ய வேண்டும், தாங்களுக்கு.." என்று விநயத்தோடு நிற்க, 
ராமபிரான்,
"இந்த வானரர்கள் பெரும் காரியத்தை செய்து இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் மரியாதை செய்து, பொன்னும் பொருளும் கொடுங்கள். 

ராவணனின் ஜெயிக்க முடியாத இலங்கையை நான் இந்த வானரர்கள் உதவியை கொண்டு தான் சாதித்தேன்.
உயிரை பொருட்படுத்தாது, எனக்காக உழைத்தவர்கள். இவர்களுக்கு உயர்ந்த ரத்தினங்களால் மரியாதை செய்யுங்கள்.

உங்களால் மதிக்கப்பட்ட இவர்கள், உங்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பார்கள்.

எந்த முதலாளி (employer) தன் தனிப்பட்ட விருப்பத்தை ஒதுக்கி விட்டு, புலனடக்கம் உள்ளவனாக, இரக்கம் உள்ளவனாக இருக்கிறானோ, அப்படிப்பட்டவனுக்கு வேலை செய்யும் தொழிலாளி என்றுமே உறுதுணையாக இருப்பான்.
இதை உங்களுக்கு ஞாபப்படுத்தி கொள்வதற்காக சொல்கிறேன்.
(த்யாகினம் சங்க்ரஹீதாரம் சானுக்ரோசம் யசஸ்வினம் | சர்வே த்வாமவ கச்சந்தி தத: சம்போதயாம்யஹம் || - வால்மீகி ராமாயணம்)

எப்போதும் தண்டிக்கும், கொலை செய்ய துணியும், அன்பும், நற்பண்பும் இல்லாத படைதலைவனை (army general) சமயத்தில் படை வீரர்கள்  கைவிடுவார்கள்."
என்று சிறு ராஜ உபதேசம் செய்தார் ராமபிரான். 

விபீஷணன் அனைத்து வானரர்களுக்கும், ராமபிரான் ஆணைக்கு உட்பட்டு, தகுந்த மரியாதை செய்தார்.

அனைவரும் மரியாதை பெற்றவுடன், ராமபிரான் புஷ்பக விமானத்தில் ஏறினார்.

அவர் அருகில் சீதா தேவி அமர்ந்து கொண்டாள். அருகில் லக்ஷ்மணன் நின்று கொண்டான்.

விபீஷணனோடு, வானர சேனையோடு இருக்கும் சுக்ரீவனையும் பார்த்து, ராமபிரான்,
"நீங்கள் அனைவரும் எனக்கு பேருதவி செய்துள்ளீர்கள்.
நான் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். நீங்கள் உங்கள் இடத்துக்கு செல்லலாம்.

ஓ சுக்ரீவ மகாராஜா ! தர்மத்துக்கு பயந்து நீங்கள் எனக்கு கொடுத்த வாக்கை நண்பனாகவும், நலம் விரும்பியாகவும் இருந்து செய்து முடிக்க உதவினீர்கள். நீங்கள் உங்கள் சேனையுடன் கிஷ்கிந்தை செல்லுங்கள்.

ஓ விபீஷண மஹாராஜா! நான் கைப்பற்றி கொடுத்த இந்த இலங்கை நகரம் இனி உங்களுடையது. 
தேவேந்திரன் கூட உங்களை எதிர்க்க மாட்டார்.
(ஸ்வராஜ்ய வச லங்காயாம் மயா தத்தே விபீஷண | ந த்வாம் தர்ஷயிதும் சக்தா: சேந்த்ரா அபி திவௌகச: || - வால்மீகி ராமாயணம்)

நான் என் தந்தையின் நகரமான அயோத்திக்கு செல்கிறேன்.
(அயோத்யாம் ப்ரதியாஸ்யாமி ராஜதானீம் பிதுர் மம | - வால்மீகி ராமாயணம்)

உங்களிடமிருந்து நான் விடை பெறுகிறேன்." 
என்றார் ராமபிரான்.

ராமபிரான் கிளம்புகிறார், என்றதும், அனைத்து வானரர்களும், விபீஷணன் உட்பட, அனைவரும், 
"நாங்களும் உங்களோடு அயோத்தி வர ஆசைப்படுகிறோம். 
தயவு செய்து எங்களையும் அழைத்து செல்லுங்கள்.
(அயோத்யாம் கந்தும் இச்சாமி சர்வான் நயது நோ பவான் | உத் யுக்தா விசரிஷ்யாமோ வனானி நகராணி ச || - வால்மீகி ராமாயணம்)

அயோத்தியை தரிசத்த பின், எங்கள் நகரத்துக்கு சென்று விடுகிறோம்.

ஓ நர ச்ரேஷ்டரே! நீங்கள் உங்கள் தாயார் கௌசல்யா தேவியை நமஸ்கரிப்பதையும், உங்கள் பட்டாபிஷேகத்தையும் பார்த்து விட்டு, எங்கள் இருப்பிடம் செல்கிறோம்."
என்று பிரார்த்திக்க, 

ராமபிரான் மிகுந்த உற்சாகத்துடன்,
"உங்கள் அனைவரையும் என்னோடு அழைத்து கொண்டு அயோத்தி செல்வதே எனக்கும் ஆசை. 
வானரர்கள் அனைவரும் ஏறிக்கொள்ளுங்கள். 
(ப்ரியாத் ப்ரியதரம் லப்தம் யதஹம் சசுஹ்ருஜ்ஜன: | சர்வைர் பவத்பி: ஸஹித ப்ரீதிம் லப்ஸ்யே புரீம் கத: || - வால்மீகி ராமாயணம்)

ஓ சுக்ரீவ! ஓ விபீஷண! உங்கள் மந்திரிகளுடன் புஷ்பக விமானத்தில் ஏறிக்கொள்ளுங்கள்." 
என்று சொன்னதும்,
(க்ஷிப்ரம் ஆரோஹ சுக்ரீவ விமானம் வானரை: சஹ | த்வம் அத்யாரோஹ சாமாத்யோ ராக்ஷஸேந்த்ர விபீஷண || - வால்மீகி ராமாயணம்)

விஸ்வகர்மா ஸ்ருஷ்டி செய்த திவ்யமான விமானம் (flight), ஏற ஏற அனைவருக்கும் இடம் கொடுத்தது.

அனைவரும் புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டனர்.

ராமபிரான் ஆணைக்கு உட்பட்டு, விமானம் வானில் பறக்க ஆரம்பித்தது.

ராமபிரான் பெரும் மகிழ்ச்சியோடு, தந்தையின் வாக்கை நிறைவேற்றிய திருப்தியோடு 'விஜய ராகவனாக' அமர்ந்து இருந்தார்.

அவருடன் குழுமி இருந்த அனைத்து ராக்ஷஸர்களும், வானரர்களும் பெரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

தான் வந்த வழியே மேகத்தை போல பறந்து கொண்டிருந்த புஷ்பக விமானத்தில், ராமபிரான், அருகில் இருந்த சீதா தேவியிடம் இலங்கையில் "விஸ்வகர்மா ஸ்ருஷ்டி செய்த த்ரிகூட மலையை பார்" என்று காட்டினார்.
ரத்தமும் சதையும் விழுந்த போர்க்கள இடத்தை காட்டினார்.

ராக்ஷஸர்களும், வானரர்களும் ஒருவருக்கு ஒருவர் பயங்கரமாக சண்டை இட்ட இடங்களை காட்டினார்.

பெரும் வரங்களை வாங்கி வைத்து இருந்த ராவணன் தன்னால் கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.

கும்பகர்ணன் கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.
ப்ரஹஸ்தன் கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.

ஹனுமானால் தூம்ராக்ஷஸன் கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.

சுசேனரால் வித்யுன்மாலி கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.

லக்ஷ்மணன் இந்திரஜித்தை கொன்ற இடத்தை காட்டினார்.
அங்கதன் விகடனை கொன்ற இடத்தை காட்டினார்.


மேலும், விரூபாக்ஷன், மஹாபார்ஷ்வா, மஹோதரா, அகம்பனா, மற்றும் பல ராக்ஷஸர்கள் கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.

மண்டோதரி, ராவணனின் மற்ற ஆயிரக்கணக்கான மனைவிகளுடன், ராவணனின் உடலை கண்டு அழுத இடத்தை காட்டினார்.
(அத்ர மண்டோதரீ நாம பார்யா தம் பர்யதேவயத் | ச-பத்னீநாம் சஹஸ்திரேன சாஸ்த்ரேன பரிவாரிதா || - வால்மீகி ராமாயணம்)

பிறகு, பாலம் அமைத்த பின், தான் தங்கி இருந்த இடத்தை காட்டினார்.

சீதையை மீட்க கட்டிய பாலத்தை காட்டினார். 
மிகவும் சிரமமான பாலத்தை நலன் திறம்பட கட்டினான் என்று பாராட்டினார்.

தங்கம் போன்ற மலை கடலின் நடுவே இருப்பதை காட்டினார்.
இந்த மலையே ஹனுமான் இளைப்பாற இடம் கொடுத்து வெளி வந்தது என்று காட்டினார்.

பாலம் கட்டி கொண்டு இருக்கும் போது, பாலத்தின் நடுவே வந்த போது, அங்கேயே சேனையை தங்க வைத்து, வியூகம் அமைக்க பேசிய இடத்தை காட்டினார். 
கடலில் அமைத்த இந்த சேதுவை (அணையை) கண்டு மூவுலகும் பிரமித்தது. இந்த சேதுவை தரிசிப்பதே மஹா பாபங்களை போக்கி விடும்.
(ஏதத்து த்ருஷ்யதே தீர்த்தம் சாகரஸ்ய மஹாத்மன: | சேது பந்த இதி க்யாதம் த்ரை லோக்யேனாபி பூஜிதம் || ஏதத் பவித்ரம் பரமம் மஹாபாதக நாசனம் || - வால்மீகி ராமாயணம்)
இப்படியே புஷ்பக விமானம் கடலை கடந்த பின், உபவாசம் இருந்து மஹாதேவனின் அணுகரஹத்தை பெற்ற இடத்தை காட்டினார். (இன்று ராமேஸ்வரம் என்று சொல்கிறோம்)
(அத்ர பூர்வ மஹாதேவ ப்ரசாதம் அகரோத் ப்ரபு: | - வால்மீகி ராமாயணம்)

பிறகு, ராக்ஷஸ தலைவன் விபீஷணன் தன்னை தரிசித்த இடத்தை காட்டினார்.
(அத்ர ராக்ஷஸ ராஜோ அயமாஜகாம விபீஷண: || - வால்மீகி ராமாயணம்)

(குறிப்பு: இந்த சமயத்தில் மதுராந்தகம் வந்து விபண்டகர் (ருஷ்ய ச்ருங்கரின் தந்தை), தனக்காக காத்து இருக்கிறார் என்று தெரிந்து ஒரு சில நிமிடங்கள் இறங்கி சென்றார் என்று, திவ்ய தேச சரித்திரம் நமக்கு சொல்கிறது.)

பிறகு, சுக்ரீவன் வாழும் அழகிய கிஷ்கிந்தையை காட்டினார்.
'வாலி' கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.

சீதை, கிஷ்கிந்தையை கண்டதும், ராமபிரானிடம், தன்னோடு சுக்ரீவனின் மனைவி தாரா மற்றும் அனைத்து வானர ஸ்திரிகளையும் அயோத்தி செல்ல ஆசைப்பட்டாள்.

சீதையின் ஆசையை நிறைவேற்ற, புஷ்பக விமானத்தை நிறுத்தினார் ராமபிரான். 

சுக்ரீவனை பார்த்து, "வானர தலைவனே! நீங்கள் அனைவரும் உங்கள் மனைவியோடு சேர்ந்து, அயோத்திக்கு வாருங்கள். உடனே அழைத்து வாருங்கள். கிளம்பலாம்" என்றார்.

ஆனந்தம் கொண்ட சுக்ரீவன், வேகமாக தன் அரண்மனைக்கு நுழைந்து, தன் மனைவி தாராவை அழைத்து,
"அன்பானவளே ! நீயும், மற்ற வானர ஸ்த்ரீகளும் அயோத்திக்கு கிளம்ப தயாராகுங்கள். நாம் அனைவரும் அயோத்தியை, ராமபிரானின் தாயாரை தரிசிக்கலாம்." என்றார். 

இதை கேட்ட தாரா, அனைத்து வானர ஸ்த்ரீகளுடன் அலங்காரம் செய்து கொண்டு, சீக்கிரமாக சீதா தேவியுடன் புஷ்பக விமானத்தில் சேர்ந்து கொண்டனர்.

மீண்டும் விமானம் புறப்பட்டது.

ராமபிரான், பிறகு, ரிஷிமுக மலையை காட்டி "அங்கு தான் சுக்ரீவனை நான் சந்தித்து, வாலியை கொல்வேன் என்று  வாக்குறுதி கொடுத்தேன்" என்று சொன்னார்.
(அத்ராஹம் வானரேன்த்ரேன சுக்ரீவேன சமாகத: | சமயஸ்ச க்ருத: சீதே வதார்தம் வாலினோ மயா || - வால்மீகி ராமாயணம்)

பிறகு, பம்பா நதிக்கரையை காட்டி, இங்கு தான் சீதையை தொலைத்து விட்டு, துக்கம் தாளாமல் புலம்பினேன் என்று சீதா தேவியிடம் காட்டினார்.
பிறகு, 
தபஸ்வியான சபரியை தரிசித்த இடத்தை காட்டினார்.
(ஏஷா ஸா த்ருஷ்யதே பம்பா நளினீ சித்ரகாணனா | த்வயா விஹீனோ யத்ராஹம் விளலாப சதுக்கித: | அஸ்யாஸ்தீரே மயா த்ருஷ்டா சபரீ தர்ம சாரினி || - வால்மீகி ராமாயணம்)

மேலும் புஷ்பக விமானம் செல்ல, 
பிறகு, கபந்தன் கொல்லப்பட்ட இடத்தை காட்டினார்.

பிறகு, ராவணனுடன் ஜடாயு போர் செய்த இடத்தை காட்டினார்.

பிறகு, கர, தூஷன் கொல்லப்பட்ட இடத்தையும், த்ரிசிரஸ் தோற்கடிக்கப்பட்ட இடத்தையும் காட்டினார்.
பிறகு, ராவணன் சீதையை கடத்தி கொண்டு போன இடத்தையும் கண்டனர்.




பிறகு, கோதாவரி நதியை, அகஸ்தியர் ஆசிரமத்தை தரிசித்தனர்.

சுதீக்ஷணரின் ஆசிரமத்தை கண்டனர்.
இந்திர தேவன் வந்த, சரபங்கர் ஆசிரமத்தை கண்டனர்.

பிறகு விராதனை கொன்ற இடத்தை சீதைக்கு காட்டினார். 
பிறகு, தாங்கள் தரிசித்த பல ரிஷிகளின் ஆசிரமத்தை கண்டனர்.

அத்ரி ரிஷியின் ஆசிரமத்தை பார்த்தனர். 
சீதைக்கு அங்கு அனசூயை பார்த்த தருணத்தை நினைவு கூர்ந்தார்.

பிறகு, கைகேயின் புதல்வன் பரதனை கண்ட சித்ரகூடம் வந்தனர். 
பிறகு அழகான யமுனா நதியை கண்டனர்.
பிறகு பரத்வாஜ ரிஷியின் ஆசிரமத்தை கண்டனர்.

பிறகு புனிதமான கங்கையை கண்டனர்.
ஸ்ருங்கபேரிபுரத்தை கண்ட ராமபிரான், குஹனை நினைத்துக்கொண்டார்.

பிறகு, சீதையை பார்த்து, 
"சீதா! அதோ பார்.. சரயு நதி.. கரை முழுவதும் யாகங்கள் நடக்கும் சரயு நதியை பார்.
இதோ... என் தந்தை தசரத மன்னரின் அயோத்தி நகரம். 
நான் இந்த அயோத்தியை நோக்கி தலை வணங்குகிறேன்." 
என்றார்.

இதை கேட்ட வானரர்கள் தலையை தூக்கி, எட்டி எட்டி அயோத்தி நகரின் அழகை கண்டனர்.

அயோத்தி நகரமே வெண் நிற விரிப்பு போர்த்தி, வெயில் படாமல் இருந்தது.
இந்திரனின் சொர்க்க லோகமோ? என்று சொல்லும் அளவிற்கு ஜொலித்தது.

14 வருடம் முடிந்து... 5வது நாள், புஷ்பக விமானத்தை விட்டு இறங்கி, ராமபிரான், பரத்வாஜ ஆசிரமத்துக்கு நுழைந்தார்.
"அயோத்தி எப்படி உள்ளது. அயோத்தி மக்கள் எப்படி உள்ளனர். பரதன் எப்படி இருக்கிறான். என்னுடைய தாயார் எப்படி இருக்கிறார்? அனைவரும் உயிரோடு இருக்கிறார்களா?"
என்று விஜாரித்தார்.

பரத்வாஜ ரிஷி, "அனைவரும் நலம். உன் வருகைக்காக, தானும் மரவுரி அணிந்து தவ கோலத்தில் இருக்கும் பரதன் காத்து கொண்டு இருக்கிறான்.

அன்று கைகேயின் வரத்தை நிலை நாட்ட, இதோ இந்த காட்டு வழி பாதையில், சீதா, லக்ஷ்மணனுடன் நீ சென்றது நினைவில் வருகிறது. 
தசரதர் கொடுத்த வாக்குக்காக, அப்பாவை மீற கூடாது என்ற தர்மத்தை காக்க, கிடைத்த பதவியை உதறி விட்டு, தன் சொத்தை எல்லாம் தானம் செய்து விட்டு, தன் சுகத்தை எல்லாம் உதறி விட்டு, 
14 வருடமும் காய், கனி, கிழங்குகள் மட்டுமே உட்கொண்டு நீ செய்த பெரும் காரியம் இன்று சபலமானது.

இப்போது, நீ உன் நலன் விரும்பிகள், நண்பர்கள் அனைவருடனும் இருக்கிறாய். 

உன் எதிரிகளை அழித்து, விஜய ராகவானாக இருக்கும் உன்னை கண்டு நான் ஆனந்தம் கொள்கிறேன்.

சாதுக்களான ரிஷிகளை காக்கவே, நீ ஜனஸ்தானத்தில் அட்டகாசம் செய்த ராக்ஷஸர்களை ஒழித்தாய் என்று அறிகிறேன்.

ஒரு குறையும் இல்லாத சீதையை, ராவணன் அபகரித்து சென்றுள்ளான். மாரீசன் மாய மான் போல வந்து நிற்க, அதை கண்டு ஆசைப்பட்டு, சீதை பெரும் துன்பத்திற்கு ஆளாகி விட்டாள்.

பிறகு நீ கபந்தனை கண்டு, பிறகு பம்பா நதி அருகில் இருந்த சபரி என்ற தபஸ்வினியை கண்டாய்.

பிறகு சுக்ரீவனுடன் நட்பு கொண்டு, அவன் மனைவியை தன்னிடம் வைத்து இருந்த வாலியை வதைத்து, வானர சேனை முழுவதும் சீதையை தேட புறப்பட்டது.

ஹனுமான் இந்த காரியத்தில் வெற்றி பெற்று, சீதை இருக்குமிடத்தை கண்டறிந்தார்.

பிறகு நலன் பாலம் அமைக்க, வானர சேனையோடு இலங்கையை சூழ்ந்து முற்றுகை இட்டீர்கள்.

ராவணன், தன் பிள்ளைகள், சொந்தங்கள், மந்திரிகள் மேலும் அவர்கள் படைகளோடு சேர்ந்து அழிந்து போனான்.

விண்ணுலக தேவர்கள், தேவதைகள் அனைவரும் உனக்கு ப்ரத்யக்ஷம் ஆனார்கள். அவர்கள் அனைவரும் உனக்கு வரமும், ஆசீர்வாதமும் செய்தனர்.

ஓ ராமா! என் தனி மனித ஒழுக்கத்தால், தவ வலிமையால், உனக்கு நடந்த சம்பவங்கள் யாவையும் அறிந்தேன்.

ஓ மஹாவீரனே! இப்போது நானும் உனக்கு வரம் தர ஆசைப்படுகிறேன். இந்த நீரை எடுத்து உன் கைகளை அலம்பிக்கொண்டு, அயோத்தி நகருக்குள் பிரவேசம் செய்."
என்றார் பரத்வாஜர்.

ராமபிரான், பணிவுடன் வணங்கி, 
"அயோத்தியா நகரம் செல்லும் பாதை முழுவதும், மரங்கள் எங்கும் பூக்கள் பூத்து, தேன் சொட்டும் பழங்கள் இருக்க வேண்டும்." என்று வரமாக கேட்டார்.

பரத்வாஜ ரிஷி, "இன்னும் 3 யோஜனை தூரம் இருக்கும் அயோத்தி வழி எங்கும், மரங்களில் கனிகள் கொட்டி கிடக்கும், பூக்கள் பூத்து குலுங்கும். அப்படியே ஆகட்டும்" என்று ஆசிர்வதித்தார்.

அயோத்தியை நோக்கி சேனை முழுவதும் நடந்து வர, வானரர்கள் அனைவரும் வரும் வழியில் கொட்டி கிடக்கும் பழங்களை சுவைத்து கொண்டே உற்சாகமாக வந்தனர்.

அயோத்தியை நெருங்கி விட்ட ராமபிரான், ஹனுமானை பார்த்து,
குகனை பார்த்து நலம் விஜாரித்து விட்டு, பிறகு பரதனை பார்த்து, "தானும், சீதை, லக்ஷ்மணன் அனைவரும் நலம், வந்து கொண்டு இருக்கிறோம்" என்ற தகவலை சொல்ல அனுப்பினார்.

மேலும், சீதையை ராவணன் அபகரித்து சென்றதையும், சுக்ரீவனுடன் தனக்கு ஏற்பட்ட நட்பையும், வாலியை கொன்றதையும், பாலம் அமைத்ததையும், ராவணன் கொல்லப்பட்டதையும், பிறகு அனைத்து தேவர்களும் ப்ரத்யக்ஷம் ஆனதையும், சிவபெருமான் அணுகிரஹத்தால் தனக்கு தந்தையின் தரிசனம் கிடைத்ததையும் சொல்லி, 'தான் வருவதை பற்றி பரதன் என்ன நினைக்கிறான்' என்று அறிந்து வர அனுப்பினார்.
குறிப்பாக ஹனுமானை பார்த்து,
"பரதனின் அங்க அசைவுகளை, அவனுடைய முக பாவனையை, பேச்சை கவனியுங்கள்.
(ஞேயாஸ்ச சர்வே வ்ருத்தாந்தா பரதஸ்த்யேக் கிதானி ச | தத்வேன முக வர்ணேன திருஷ்ட்யா வ்யா பாஷனேன ச || - வால்மீகி ராமாயணம்)

14 வருடங்கள் அரச போகங்களை, அரச மரியாதையை, அரசனின் ரதங்களை அனுபவித்தால், யாருக்குமே மோகம் ஏற்பட்டு விடும்.

ஒரு வேளை, 'என் சகோதரன் பரதன் தானே ஆள வேண்டும்!' என்று ஆசைப்பட்டால், அவனே இந்த ராஜ்யத்தை தொடர்ந்து ஆளட்டும்.
அவனுடைய எண்ணத்தை அறிந்து கொண்ட பின், மேலும் என் ப்ரயாணத்தை தொடர நினைக்கிறேன்"
(சங்கத்யா பரத: ஸ்ரீமான் ராஜ்யார்தீம் சேத் ஸ்வயம் பவேத் | பிரசாசஸ்து வசுதாம் க்ருத்ஸ்னாம் அகிலாம் ரகுநந்தன: || - வால்மீகி ராமாயணம்)
என்று சொல்லி, ஹனுமானை வேகமாக பார்த்து விட்டு வர அனுப்பினார் ராமபிரான். 


அடுத்த நொடி, ஹனுமான் கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் ப்ரயாகையை கடந்து, ஸ்ருங்கபேரிபுரம் வந்து அடைந்தார்.
ராமபிரான் பரத்வாஜ ஆசிரமத்தில் இப்போது இருப்பதை தெரிவித்து, உங்கள் நண்பன் உங்களை விஜாரித்தார் என்று சொன்னார்..

குஹனிடம் 'ராமபிரான் உங்களை தரிசிக்க வர போகிறார்' என்ற தகவலை தெரிவித்து, ஆகாய மார்க்கமாக பறந்து அயோத்தியை நெருங்கினார். 
அங்கு 'நந்தி கிராமம்' என்ற இடத்தில் பரதன் தங்கி இருக்கும் குடிலை கண்டார்.

பரதன் ப்ரம்ம ரிஷியை போன்று, ப்ரம்மசர்யத்தோடு, ராமபிரானை போன்றே மரவுரி அணிந்து, ஜடை அணிந்து, சகோதரனை பிரிந்த வேதனையுடன் இருப்பதை கண்டார்.

ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருந்தாலும், 'ராம பாதுகை ஆளுகிறது' என்று பாதுகைக்கு மரியாதை செய்து கர்வம் இல்லாமல் இருந்தார்.

நான்கு வர்ணத்தாரையும் குறையில்லாமல் கவனித்து கொண்டார்.

தன்னுடன் இதயத்தில் நல்ல குணம் கொண்டவர்களையே மந்திரியாகவும், புரோகிதராகவும், பாதுகாப்பு தளபதியாகவும் வைத்து இருந்தார்.

ஆதலால், தங்கள் அரசன் மரவுரி தரித்து வாழ்கிறான் என்று இவர்களும் தங்கள் கடமையை தவறவில்லை, மேலும் அரசனை கைவிடவும் இல்லை.

பரதனின் பக்தியை கண்டு கண்ணீர் விட்டு ஹனுமான், பாதனிடம் சென்று,
"தண்டக வனத்தில் இருந்த ராமபிரான், எப்பொழுதும் உங்களை பற்றியே பேசுவார். 
ஓ தர்மாத்மா! உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை கொண்டு வந்துள்ளேன்.
உங்களுடைய துக்கம் இன்றோடு ஒழிந்தது.
நீங்கள் ராமபிரானோடு இணைய போகிறீர்கள்.
ராவணனை கொன்று, சீதா தேவியை மீட்ட ராமபிரான், தன் நலன் விரும்பிகளோடு வந்து கொண்டு இருக்கிறார்.
சீதா தேவியுடன், கூடவே லக்ஷ்மணனும் வருகிறார்."
என்று ஹனுமான் கூற,

14 வருடங்கள் எப்போது கழியுமோ, என்று வேதனையோடு காத்து இருந்த பரதன், மூர்ச்சையாகி கீழே மயங்கி விழுந்தார்.

உடனேயே தன்னை நிதானப்படுத்தி கொண்டு, இப்படி ஒரு செய்தியை சொன்ன ஹனுமானை, ஆனந்த கண்ணீருடன் கட்டி அணைத்து கொண்டார். 
ஹனுமானை பார்த்து,
"நீங்கள் உண்மையில் மனிதனா? அல்லது தேவனா? எனக்கு கருணை செய்வதற்காகவே வந்தது போல இருக்கிறதே! 
நான் உங்களுக்கு ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்.
லட்சக்கணக்கான பசுக்களை உங்களுக்கு தரட்டுமா? நூற்றுக்கணக்கான கிராமங்கள் தரட்டுமா? 
அல்லது, 
16 நற் குணங்களும் நிரம்பிய, நல்ல பரம்பரையில் பிறந்த, அங்கங்கள் அழகாக உள்ள, ஆபரணங்கள் அணிந்த, நிலவு போன்ற, தங்க நிறம் கொண்ட ஒரு பெண்ணை உங்களுக்கு மணம் செய்து கொடுக்கவா?" 
என்று ஆனந்தத்தின் எல்லைக்கு சென்று விட்ட பரதன் ஹனுமானை கண்டு பேரானந்தம் அடைந்து விட்டார்.
மேலும், ஹனுமானை பார்த்து, 
"பல வருடங்கள் முன், என் அண்னா வனம் புகுந்து சென்றார்.  
அதற்கு பிறகு, இத்தனை வருடங்கள் கழித்து தான், அவர் சம்பந்தமாக ஒரு சொல் கேட்கிறேன். 
இது என்னை தாங்க முடியாத ஆனந்தத்துக்கு இழுத்து செல்கிறது.

'பொறுமையை கடைபிடிப்பவனுக்கு கண்டிப்பாக ஏதோ ஒரு நாள் மீண்டும் சந்தோஷம் கிடைக்கும்' என்று சொல்வார்கள்.
இந்த வாக்கு சத்தியம் என்று உணர்கிறேன்.

எப்படி வானரர்களும், ராமபிரானும் இணைந்தார்கள்? எப்படி இது நடந்தது? எங்கு நடந்தது? ஏன் நடந்தது? தயவு செய்து எனக்கு சொல்லுங்கள்.."
என்று கேட்க, ஹனுமான் தன் வாயால் ராமாயண சரித்திரத்தை பரதனுக்கு விளக்கமாக சொல்கிறார்.

'ராவணன் வதைக்கப்பட்டு, சீதையை மீட்டு, புஷ்பக விமானத்தில் ஏறி, பரதவாஜ ஆஸ்ரமத்தில் வந்து தங்கி இருக்கிறார், நாளை உங்களை பார்க்க அயோத்தி வந்து விடுவார்' 
என்று நடந்த விவரங்களை ஹனுமான் பரதனுக்கு விளக்கினார்.

பரதன் ஹனுமானை பார்த்து கை குவித்து "பல வருடங்கள் கழித்து, நாளை என் மனோரதம் பூர்த்தி ஆக போகிறது." என்றார். 


ஹனுமான் மூலம் ராமாயணம் கேட்கும் பாக்கியம் பெற்ற பரதன்,  பேரானந்தம் அடைந்தார். 
பிறகு, சத்ருக்னனை பார்த்து தேவையான ஏற்பாடுகள் செய்ய சொன்னார்.
(ஸ்ருதவா து பரமானந்தம் பரத: சத்ய விக்ரம: | ஹ்ருஷ்டம் அஞாபயாமாச சத்ருக்னம் பர வீரஹா || - வால்மீகி ராமாயணம்)

சத்ருக்னனை பார்த்து,
"பல வித மலர்களால் யாக காரியங்கள் செய்யும் வேத ப்ராம்மணர்களை வர ஏற்பாடு செய். 
வேத ஒலிகள் எங்கும் ஒலிக்கட்டும்.
நம் புராண சரித்திரத்தை காட்டும் பாடல்களை பாட, தேர்ந்த பாடகர்களும், வாத்தியம் இசைப்பவர்களும் வர ஏற்பாடு செய்.
அனைவரும் நம் ராமபிரான் முகத்தை அருகில் பார்க்கட்டும்." 
என்று கட்டளை இட்டார் பரதன்.
(அபினிர்யாந்து ராமஸ்ய த்ரஷ்டும் சசினிபம் முகம் | - வால்மீகி ராமாயணம்)

சத்ருக்னன் உடனே தன் உதவியாளர்களை பார்த்து,
மேடு பள்ளம் இல்லாத படி நந்தி கிராமம் முதல் அயோத்தி வரை உள்ள பாதையை சரி செய்து,
அலங்காரம் செய்து, பாதை எங்கும் குளிர்ந்த நீரை தெளித்து, பாதை வழி முழுவதும் பூக்களால் நிரப்ப சொன்னார்.

ஒவ்வொரு வீட்டிலும் அயோத்தி கொடி பறந்தது.

ராஜ வீதி முழுவதும், நறுமணமுள்ள பூக்களை தூவி அலங்காரம் செய்ய சொன்னார்.
(ஸ்ரக்தாமபிர் முக்தபுஷ்பை: சுகந்தை: பஞ்ச வர்ணகை: | ராஜமார்கம் சம்பாதம் கிரந்து சதசோ நரா || - வால்மீகி ராமாயணம்)

நந்திகிராமத்தை நோக்கி, தசரத மன்னனின் பத்னிகள் யாவரும், அயோத்தி சேனையும், ராணுவ வீரர்களின் பத்னிகளும், புரோகிதர்களும், அரச குல க்ஷத்ரியர்களும், த்ருஷ்டி, ஜெயந்தன், விஜயன், சித்தார்த்தன், அர்த்தசாதகன், அசோகன், மந்த்ரபாலன் மற்றும் சுமந்திரர் ஆகிய 8 மந்திரிகளும் கிளம்பினார்கள்.




இவர்கள் கூடவே குதிரை படையும், யானை படையும் பலவித ஆபரணங்களை சுமந்து கொண்டு வந்தது.

அயோத்தி நகரமே நந்தி கிராமம் வந்தது போல இருந்தது.

பரதன் ராமபிரானின் பாதுகையை தன் தலை மேல் வைத்து பூஜித்து விட்டு, ஹனுமானை பார்த்து,
"நான் இன்னும் என் ராமன் அண்ணாவை பார்க்க முடியவில்லையே! வானர சேனையையும் பார்க்க முடியவில்லையே!
வானரர்கள் நிலையான சித்தம் உள்ளவர்கள் இல்லை என்று சொல்வார்கள். இருந்தாலும், நீங்கள் சொன்னது உண்மை என்றே நம்புகிறேன்" 
என்றார்.
(கச்சின்ன கலு கோபேயி சேவ்யதே சல சித்ததா | ந ஹி பஸ்யாமி காகுத்சம் ராமம் ஆர்யம் பரம்தபம் || - வால்மீகி ராமாயணம்)

இதை கேட்ட ஹனுமான், பரதனின் தாபத்தை உணர்ந்து, அழகாக பேசினார்.
"பாருங்கள்.. மரங்கள் அனைத்திலும் கனிகளும், பூக்களும், அளவில்லாமல் பூத்து குலுங்கி இருக்கிறது. அதை மொய்க்க மயக்கமுற்ற நிலையில் தேனீக்கள் வட்டமிடுகின்றன.

இவை பரத்வாஜ ரிஷியின் அணுகிரஹத்தால் ஏற்பட்டது.

பரத்வாஜ ரிஷி தன் ஆசிரமத்தில், தற்போது ராமபிரானுக்கும், வானர, ராக்ஷஸ சேனைக்கும் அதிதி சத்காரம் செய்து கொண்டு இருக்கிறார்."
என்று சொல்லும் போதே, வானர சேனையின் பேரொளி கேட்க தொடங்கியது.

"அதோ வானரர்கள் கோமதி நதியை கடந்து வருகின்றனர். பாருங்கள் புழுதி கிளம்பி வானத்தை தொடுகிறது." என்றார்.

அப்போது, வானில் புஷ்பக விமானம் (Flight) பறந்து வருவது தெரிந்தது.
(ததேதத்ருஷ்யதே தூராத் விமலம் சந்த்ர சந்நிபம் | விமானம் புஷ்பகம் திவ்யம் மனசா ப்ரம்ம நிர்மானம் - வால்மீகி ராமாயணம்)

அதில் அமர்ந்து இருந்த ராமபிரான் சூரியன் போல ஜொலித்தார்.
(தருண ஆதித்ய சங்காசம் விமானம் ராம வாஹனம் | - வால்மீகி ராமாயணம்)
அயோத்தியில் இருந்து நந்தி கிராமம் வந்து சேர்ந்திருந்த அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.

குதிரையில், யானையில் அமர்ந்து இருந்தவர்கள் எல்லோரும், கீழே இறங்கி, ராமபிரான் வந்து கொண்டிருக்கும் விமானத்தை பார்த்தனர்.

விமானத்தில் அமர்ந்து இருக்கும் ராமபிரானை பார்த்ததும், பரதன் அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டார்.
(ததோ விமான ஆக்ரகதம் பரதோ ப்ராதரம் ததா | வவந்தே ப்ரயதோ ராமம் மேருஸ்தமிவ பாஸ்கரம் - வால்மீகி ராமாயணம்)

ராமபிரானும், பரதனை பார்த்து விட்டார். 
புஷ்பக விமானம் ராமபிரானின் ஆணைக்கு இணங்கி, தரையில் இறங்கியது.
(ததோ ராமப்யனுஞாதம் தத் விமானம் அனுத்தமம் | ஹம்ஸ யூக்தம் மஹாவேகம் நிஷ்பபாத மஹீதலே || - வால்மீகி ராமாயணம்)

ராமபிரானை தரிசிக்க, விமானத்தில் ஏறி ஓடி வந்தார் பரதன்.

ராமபிரான் அருகில் வந்ததும், மீண்டும் அவர் காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.
(ஆரோபிதா விமானம் தத் பரத: சத்ய விக்ரம: | ராமம் ஆசாத்ய முதித: புனரேவாப்ய வாதயத் || - வால்மீகி ராமாயணம்)

பரதனை கை பிடித்து தூக்கி, 14 வருடம் கழித்து தன் சகோதரனை பார்த்த ஆனந்தத்தில், கட்டி அணைத்து கொண்டார், ராமபிரான்.
(தம் சமுத்தாப்ய காகுத்ஸ்த சிரஸ்யாக்ஷிபதம் கதம் | அங்கே பரத ஆரோப்ய முதித: பரிசஸ்வஜே || - வால்மீகி ராமாயணம்)

அருகில் இருந்த சீதா தேவியை கண்டு, சீதா தேவிக்கும் விழுந்து நமஸ்காரம் செய்தார். 
பிறகு லக்ஷ்மணனை ஆரத்தழுவி கொண்டார்.
(ததோ லக்ஷ்மணன் ஆசாத்ய வைதேஹீம் சாப்யவாதயத் | அபிவாத்ய தத: ப்ரீதோ பரதோ நாம சாப்ரவீத் || - வால்மீகி ராமாயணம்)

பிறகு, விமானத்தில் இருந்த சுக்ரீவன், ஜாம்பவான், அங்கதன், மைந்தன், த்விவிதன், நீலன், ரிஷபன், சுசேனன், நலன், கவாக்க்ஷன், கந்தமாதன், சரபன், பனசன் என்று அனைவரையும் ஆரத்தழுவி கொண்டார் பரதன்.

வானரர்கள் அனைவருமே மனித ரூபத்தில் இருந்தார்கள்
அனைவரும் பரதனின் நலனையும் விஜாரித்தார்கள்.
(தே க்ருத்வா மானுஷம் ரூபம் வானரா: காமரூபிண: | குசலம் பர்யப்ருச்சம்ஸ்தே ப்ரஹ்ருஷ்டா பரதம் ததா || - வால்மீகி ராமாயணம்)
சுக்ரீவனை பார்த்து, பரதன் "அன்பிலிருந்து நட்பு உருவாகிறது. நான்கு சகோதரர்களாக இருந்த நாங்கள், இனி உங்களுடன் சேர்ந்து ஐவர் ஆனோம்." என்றார்.
(த்வம் அஸ்மாகம் சதுர்நா து ப்ராதா சுக்ரீவ பஞ்சம: | சௌஹ்ருதாஜ்ஜாயதே மித்ரம் அபகாரோரி லக்ஷணம் || - வால்மீகி ராமாயணம்)

விபீஷணனை பார்த்து, "உங்களுடைய உதவியால், சாதிக்க முடியாத காரியமும் சாதிக்கப்பட்டது." என்றார்.

பிறகு, சத்ருக்னன், 'ராம லக்ஷ்மணர்களை' நமஸ்கரித்தார்.
பிறகு, பணிவுடன் 'சீதா தேவியின் பாதங்களை' நமஸ்கரித்தார்.

மகனை விட்டு 14 வருடங்கள் பிரிந்த சோகத்தால் துவண்டு இருந்த கௌசல்யா மாதாவை நோக்கி ராமபிரான் சென்று, அவள் பாதத்தை தொட்டு, ஆறுதல் அளித்தார். 
தொடர்ந்து, சுமித்திரை, கைகேயி மற்றும் குழுமி இருந்த ராஜ மாதாக்களை நமஸ்கரித்தார்.

பிறகு வசிஷ்டர் அருகில் வந்து ராமபிரான் சேவித்தார்.
வசிஷ்டர், "வருக.. வருக.. கௌசல்யா மாதாவின் இன்பமே!" என்று வரவேற்றார்.

இதையெல்லாம், பரதன் கை குவித்து கொண்டே பார்த்து ஆனந்தப்பட்டார்.

பிறகு, பரதன் தான் பூஜித்த பாதுகையை எடுத்து வந்து, ராமபிரானின் பாதத்தில் அணிவித்தார். 
(பாதுகே தே து ராமஸ்ய க்ருஹீத்வா பரத: ஸ்வயம்| சரநாப்யாம் நரேந்த்ரஸ்ய யோஜயாமாஸ தர்மவித: || - வால்மீகி ராமாயணம்)

பிறகு ராமபிரானை பார்த்து, பரதன் பேசலானார்.
"அரசே! உங்கள் ராஜ்யம் இத்தனை வருடங்களாக காக்கப்பட்டது.
இப்பொழுது இந்த ராஜ்யம் உங்களிடமே சமர்ப்பிக்கப்படுகிறது.
என் பிறப்பு இன்று சபலமானது. என் விருப்பம் இன்று நிறைவேறியது.

நீங்கள் அயோத்தி வந்து விட்டீர்கள். நீங்கள் அரசாள போவதை நான் பார்க்க போகிறேன்.

உங்கள் கருவூலம், களஞ்சியம், கோட்டை மற்றும் படைகளை ஆய்வு செய்யுங்கள்.
இவை அனைத்தும் பலமடங்காக உயர்ந்துள்ளது." என்று சமர்ப்பித்தார்.

(உலகத்தில், பொதுவாக சொத்துக்காக சண்டை போட்டு, சகோதரர்கள் நடுத்தெருவில் நிற்பார்கள்
ஆனால், 
இங்கு சகோதரர்கள் பிரியாமல், சொத்து நடுத்தெருவில் நின்றது.)

பரதனின் அன்பை கண்ட ராமபிரானும், கூடவே இருந்த வானரர்கள், விபீஷணன் அனைவரும் கண்ணீர் விட்டனர். 

ராமபிரான் பிறகு, திவ்யமான புஷ்பக விமானத்தை பார்த்து, "இனி நீ திரும்பி செல்லலாம். நீ குபேரனிடம் சென்று அவனுக்கு சேவை செய்" என்றார்.

வடக்கு திசையில் வசிக்கும் குபேரன் இருக்குமிடம் நோக்கி, புஷ்பக விமானம் பறந்து சென்றது.

அதற்கு பிறகு, வசிஷ்டரின் பாதத்தை தொட்டு விட்டு, ராமபிரான் அவருக்கு அருகில் போடப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

பரதன் கையை தலைக்கு மேல் குவித்து, கண்ணீர் விட்டு கொண்டே, ராமபிரானை பார்த்து, 
"என் தாயார் இந்த ராஜ்யத்தை எனக்காக வாங்கி கொடுத்து கௌரவபடுத்த எண்ணினார்.
(பூஜிதா மாமிகா மாதா தத்தம் ராஜ்யம் இதம் மம | - வால்மீகி ராமாயணம்)

உங்களிடமிருந்து வாங்கிய ராஜ்யத்தை அப்படியே உங்களுக்கு தந்து விடுகிறேன்.
(தத்தாமி புனஸ்துப்யம் யதா த்வம் அததா மம || - வால்மீகி ராமாயணம்)

ஒரு கன்றுக்குட்டி பெரிய எருது தூக்கி சென்ற சுமையை எப்படி தூக்க முடியாமல் சிரமப்படுமோ, அது போல, இந்த நிர்வாகத்தை சுமந்தேன்.

அணையில் நிரம்பி வழியும் நீரினால் ஆங்காங்கு ஏற்படும் ஓட்டைகளை அடைப்பது போல, நிர்வாகத்தில் ஏற்படும் ஓட்டைகளை அடைக்க பெரிதும் சிரமப்பட்டேன். 
 
எப்படி ஒரு குதிரையின் வேகத்தில் கழுதை போக முடியாமல் தவிக்குமோ,

எப்படி ஒரு அன்ன பறவையை போல, ஒரு காக்கை பறக்க முடியாமல் தவிக்குமோ,
(கதிம் 'கர' இவாஸ்வஸ்ய 'ஹம்ஸ'ஸ்யேவ ச வாயச: | - வால்மீகி ராமாயணம்)

அது போல, 
உங்களை போன்ற திறமையுடன் நிர்வாகம் செய்ய திறனில்லாமல் தவிக்கிறேன்.

தோட்டத்தில் ஒரு பெரிய மரம் நன்றாக உயர்ந்து வளர்ந்து, பெரிய பெரிய கிளைகளுடன் இருந்து, பூக்கள் பூத்த பின், பழமாக ஆகாமல் வாடி போனால், அந்த மரத்தை வைத்தவன் பழத்தை அனுபவிக்க முடியாமல் தவிப்பான். 
அது போல, 
நிர்வாக திறன் இருந்தும், இத்தனை தாசர்கள், வேலையாட்கள் இருந்தும், நீங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்று கொள்ளாமல் இருக்க கூடாது.

இந்த உலகம் நீங்கள் 'பட்டாபி ராமனாக' இருப்பதை பார்க்கட்டும்.
(ஜகத் அத்யாபிஷிக்தம் த்வாம் அனுபஸ்யது சர்வத: | ப்ரதபந்தம் இவாதித்யம் மத்யாஹ்னே தீப்த தேஜஸம் || - வால்மீகி ராமாயணம்)

அரசனாக நீங்கள் காலை வேளையில் வீணையின் மதுரமான கானத்தையும், ஆபரணங்கள் எழுப்பும் ஓசையையும் கேட்க வேண்டும்.

இந்த உலகம் சுற்றும் வரை, உங்கள் ராஜ்யம் நீடிக்கட்டும். இந்த உலகம் எதுவரை படர்ந்து உள்ளதோ, அது வரை உங்கள் ராஜ்யம் பரவட்டும்."
என்று ராமபிரானை பிரார்தித்தார்.
(யாவத் ஆவர்ததே சக்ரம் யாவதி ச வசுந்தரா | தாவத் த்வம் இஹ சர்வஸ்ய ஸ்வாமித்வம் அனுவர்தய || - வால்மீகி ராமாயணம்)

ராமபிரான் பரதனை பார்த்து, "அப்படியே ஆகட்டும்" என்று சம்மதம் தெரிவித்து மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தார்.
(பரதஸ்ய வச: ஸ்ருத்வா ராம: பர புரஜ்ஜய: | ததேதி ப்ரதி ஜக்ராஹ நிஷாத ஆசனே சுபே || - வால்மீகி ராமாயணம்

பிறகு, சத்ருக்னன் ஆணையின் பெயரில், திறன்மிக்க நாவிதர்கள் ராமபிரானின் ஜடா முடியுடன் கூடிய கேசங்களை களைந்து அலங்காரம் செய்து விட்டனர்.

இந்த சமயத்தில், பரதன், லக்ஷ்மணன், சுக்ரீவன், விபீஷணன் அனைவரும் ஸ்நானம் செய்து தயாராகி கொண்டு இருந்தார்கள்.

ஜடா முடி களைந்த பின், ராமபிரான் ஸ்நானம் செய்து கொண்டார். 
பிறகு, 
அழகான மாலைகள் அணிந்து கொண்டு, சந்தனம் பூசி கொண்டு, ராஜ ஆபரணங்கள் அணிந்து கொண்டார்.

சத்ருக்னன் நேரடி பார்வையில் ராமபிரானுக்கும், லக்ஷ்மணருக்கும் சர்வ கைங்கர்யமும் நடந்தது.

தசரதரின் ராஜ பத்னிகளே, சேர்ந்து கொண்டு, தன் மருமகளான சீதா தேவிக்கு சர்வ அலங்காரமும் செய்து விட்டார்கள்.
(ப்ரதிகர்ம ச சீதாயா: சர்வா: தசரத ஸ்திரிய: | ஆத்மனைவ ததா சக்ருர் மனஸ்வின்யோ மனோஹரம் | - வால்மீகி ராமாயணம்)

கௌசல்யா மாதா, தன் ராமனின் அன்பு மிகுதியால், வானர ராஜ்யத்தை சேர்ந்த பெண்களுக்கும் தானே அலங்காரம் செய்து அழகு பார்த்தாள்.

சத்ருக்னனின் உத்தரவின் பெயரில், அரசர் அமரும் தேரை, சுமந்திரரே ஒட்டி கொண்டு வந்தார்.

அதை பார்த்த ராமபிரான், உற்சாகத்துடன் ஏறி அமர்ந்து கொண்டார்.

ஸ்நானம் செய்து விட்டு, காதில் குண்டலங்கள், ஆபரணங்கள் அணிந்து கொண்டு சுக்ரீவனும், ஹனுமானும் சேர்ந்து கொண்டனர்.





சீதையோடு அலங்காரம் செய்து கொண்ட தாரா, அழகான ஆபரணங்கள் அணிந்து கொண்டு, அயோத்தி நகரை பார்க்கும் ஆவலில் இருந்தாள்.

பட்டாபிஷேக தலைமை பொறுப்பை வசிஷ்டர் ஏற்க, மற்ற காரியங்களை தசரத மன்னனின் 8 மந்திரிகளும் சரியாக திட்டமிட்டு வைத்து இருந்தனர்.

ராமபிரானின் புகழுக்கும், நகரத்தின் மேன்மைக்கும் என்ன என்ன செய்ய வேண்டுமோ, அனைத்தும் வகுத்து வைத்திருந்தனர்.

ராமபிரான், தேரில் அமர்ந்து, நந்தி கிராமத்திலிருந்து அயோத்தி நகரை நோக்கி பயணமானார்.

ரதத்தின் கயிறை பரதனே பிடித்து ஓட்ட, 
சத்ருக்னன் குடை பிடிக்க
லக்ஷ்மணன் ராமபிரானுக்கு விசிறி கொண்டு வந்தார்.
(ஜக்ராஹ பரதோ ரஸ்மி சத்ருக்ன சத்ரம் ஆததே | லஷ்மணோ வ்யஜனம் தஸ்ய மூர்க்நி சம்பர்ய வீஜயத் || - வால்மீகி ராமாயணம்)

சத்ருஞ்சயம் என்ற வெண்மையான யானை மீது சுக்ரீவன் ஏறி கொண்டார்.
ராக்ஷஸேந்திரனான விபீஷணன் சந்திர சங்காசமான (சமமான) மற்றொரு சாமரத்தை எடுத்துக் கொண்டு, ராமபிரானுக்கு முன்னால் நின்று, விசிறினார்
(ஸ்வேதம் ச பால வ்யஜனம் ஜக்ராஹ புரத ஸ்தித: | அபரம் சந்த்ர சங்காசம் ராக்ஷஸேந்த்ரோ விபீஷண: || - வால்மீகி ராமாயணம்)

வானத்தில் இருந்து ரிஷிகள், கந்தர்வர்கள் ராமபிரானின் புகழை பாட, அது அனைவருக்கும் கேட்டது.

மனித ரூபத்தில் சர்வ அலங்காரமும் செய்து கொண்டு இருந்த வானர்கள், 9000 யானையின் மேல் அமர்ந்து கொண்டு ராமபிரான் தேருக்கு முன் சென்று கொண்டிருந்தனர்.
(நவனாக சஹஸ்த்ராணி யயுராஸ்தாய வானரா: | மானுஷம் விக்ரஹம் க்ருத்வா சர்வாபரண பூஷிதா: || - வால்மீகி ராமாயணம்)

அயோத்தி நகருக்குள் ராமபிரான் நுழைந்ததும், சங்க நாதமும், மேளமும் விண்ணை பிளந்தது.

அயோத்தி மக்கள், ராமபிரானை வெகு நாட்கள் கழித்து, பார்த்தனர்.

"ஸ்ரீ ராமருக்கு வெற்றி.. ஜெய் ஸ்ரீ ராம்" என்று ராமபிரானுக்கு முன் கோஷமிட்டனர். 
அவர்களின் உற்சாகத்தை கண்டு, ராமபிரான் பெரிதும் மகிழ்ச்சி உற்றார்.

தேர் நகர்ந்து செல்ல, ராமபிரானை தொடர்ந்து கொண்டே, ஜெயகோஷம் செய்து கொண்டே பரதனோடு வந்தனர் அயோத்தி மக்கள்.

மந்திரிகள், புரோகிதர்கள், மேலும் பலர் சூழ்ந்து இருக்க, ராமபிரான் நக்ஷத்திரங்களுக்கு நடுவே, குளிர் தரும் நிலவு போல இருந்தார்.

ராமபிரானுக்கு வாழ்த்து கோஷங்களை, தாளத்தோடு பாடி கொண்டே, பாடகர்கள் ராமபிரானுக்கு முன் சென்றனர்.

மேலும், பசுக்கள், புரோகிதர்கள், பாலால் செய்யப்பட்ட இனிப்பு தின்பண்டங்கள், தங்க ஆபரணங்கள், அரிசி போன்ற தானியங்கள் அனைத்தையும் ராமபிரான் முன் எடுத்து கொண்டு சென்றனர்.

ராமபிரான், மந்திரிகளிடம், 'சுக்ரீவனின் நட்பு பற்றியும், ஹனுமானின் வலிமையையும், வானர வீரர்களின் கட்டுப்பாட்டையும், ராக்ஷஸர்களின் பலத்தை பற்றியும், தான் விபீஷணனோடு சேர்ந்ததை பற்றியும்' விவரித்து கொண்டு இருந்தார்.
(சக்யம் ச ராம: சுக்ரீவே ப்ரபாவம் சானிலாத்மஜே | வானராம் ச தத்கர்ம ராக்ஷஸானாம் ச தத் பலம் | விபீஷணஸ்ய சம்யோகம் ஆச சக்ஷேச மந்த்ரீனாம் || - வால்மீகி ராமாயணம்)

இதை கேட்ட மந்திரிகள் ஆச்சரியப்பட்டனர்.

இப்படி பேசிக்கொண்டு இருக்க, அயோத்தி நகரை அடைந்து விட்டார் ராமபிரான்.
வானரர்கள் உற்சாகமாக நகருக்குள் பிரவேசித்தனர்.

ஒவ்வொரு வீட்டிலும் அயோத்தி கொடி பறப்பதை கண்டனர்.

ராமபிரான், முதன் முதலாக தன் தந்தை தசரதர் இருந்த மாளிகைக்குள் நுழைந்தார். அங்கு இருந்த தன் மாதா கௌசல்யாவை நமஸ்கரித்தார்.
(பித்ருர் பவன மாஸாத்ய பிரவிஸ்ய ச மஹாத்மன: | கௌசல்யாம் ச சுமித்ராம் ச கைகேயீம் அபிவாத்ய ச || - வால்மீகி ராமாயணம்)

பிறகு, பரதனை பார்த்து, "முத்தும், வைரமும் கொட்டி கிடக்கும், அசோக மரங்கள் அடர்ந்து அழகாக இருக்கும் என்னுடைய பெரிய மாளிகையை சுக்ரீவனுக்கு கொடுத்து தங்க சொல்." என்றார் ராமபிரான்.

உடனே பரதன், சுக்ரீவன் கையை பற்றிக்கொண்டு, தானே  மாளிகைக்கு கூட்டி சென்றார்.

இதற்கிடையில், சத்ருக்னன் ஆணையின் படி, வேலையாட்கள் விரிப்புகள், கட்டில் மெத்தகள், விளக்குகள் எடுத்து கொண்டு சென்றனர்.

சத்ருக்னன் சுக்ரீவனை பார்த்து, "அரசே! ராம பட்டாபிஷேகத்துக்கு தயார் ஆவதற்கு உங்கள் வானரர்களுக்கு ஆணை இடுங்கள்" 
என்று பிரார்த்திக்க,
(உவாச ச மஹா தேஜா: சுக்ரீவம் ராகவானுஜ: | 'அபிஷேகாய ராமஸ்ய தூதான் அஞாபய ப்ரபோ || - வால்மீகி ராமாயணம்)

உடனேயே சுக்ரீவன், முத்துக்கள் பதித்த 4 தங்க குடங்களை எடுத்து, தன் நான்கு வானர தலைவர்களை அழைத்தார்.

பிறகு அவர்களை பார்த்து,
"வானரர்களே! நாளை காலை விடுவதற்கு முன், இந்த குடங்களில் நான்கு திசைகளில் உள்ள கடலின் தீர்த்தமும் நிரப்பப்பட்டு, என் அடுத்த உத்தரவுக்காக நீங்கள் காத்து இருக்க வேண்டும்" என்று நியமித்தார்.

'ஜாம்பவான், ஹனுமான், வேகதர்சி, ருஷபன்' ஆகிய நால்வரும் கருடனை போல வேகமாக செல்ல கூடியவர்கள். மகா பலசாலிகள். 
இவர்கள் நான்கு திசைக்கும் பறந்து சென்று சமுத்திர ஜலத்தை எடுத்து வந்தனர்.
மேலும் பல வானரர்கள் 500 நதிகளின் தீர்த்தத்தை எடுத்து கொண்டு வந்து விட்டனர்.

இதை தவிர, சுசேனன் 'கிழக்கு சமுத்திரம்' சென்று அங்கிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார்.

ருஷபன் சந்தன கட்டைகள் கலந்து, 'தெற்கு சமுத்திரம்' சென்று அங்கிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார்.

கவயன் குளிர்ந்த 'மேற்கு சமுத்திரம்' சென்று அங்கிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார்.

காற்றை போல பறக்க கூடிய நலன், 'வடக்கு சமுத்திரம்' (arctic ocean) சென்று அங்கிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார்.

உலகத்தில் உள்ள சமுத்திர தீர்த்தம் அனைத்தும், நதிகளின் தீர்த்தம் அனைத்தும் அயோத்திக்கு வந்து சேர்ந்து விட, சத்ருக்னன், வஷிஷ்டரை 'ராம பட்டாபிஷேகத்தை நடத்துமாறு' கேட்டுகொண்டார்.

தொடர்ந்து, வசிஷ்டர் மற்றும் தலைமை புரோகிதர்கள் 'ராமபிரானை, சீதையோடு ரத்தினங்கள் பதித்த ராஜ சிம்மாசனத்தில்' அமர செய்தார்கள்.
(ராமம் ரத்னமயே பீடே சஹசீதாம் ந்யவேசயத் || - வால்மீகி ராமாயணம்)

வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, கஸ்யபர், காத்யாயனர், சுயக்னா, கௌதமர், விஜயர் போன்ற 8 ரிஷிகள் பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்தனர்.

8 வசுக்கள் சேர்ந்து கொண்டு, இந்திரனுக்கு ராஜ்ய அபிஷேகம் செய்தது போல, ராமபிரானுக்கு செய்து வைத்தனர். 

புரோகிதர்கள், பின் கன்னிப் பெண்களும், மந்திரிகளும், அதன் பின் போர் வீரர்களும் ராமபிரானுக்கு அபிஷேகம் செய்வித்தனர். 

வேத மந்த்ரங்களோடு அபிஷேகம் செய்தனர். 
மகிழ்ச்சியுடன் செய்தனர்.

தேவ லோகத்திலும், ஆகாயத்திலுமாக நின்ற படி, தேவதைகள் அபிஷேகம் செய்தனர். 
உலகத்தை காக்கும் பொறுப்பில் உள்ள நால்வரும் (இந்திரன், குபேரன், வருணன், யமன்) சேர்ந்து கொண்டு, அனைத்து விதமான ஔஷதிகள் கலந்த, திவ்யமான ஜலத்தால் அபிஷேகம் செய்தனர்.  

ப்ரம்மாவால் நிர்மாணிக்கப்பட்டு, ரத்னங்கள் பதித்த கிரீடம், முன்பு  ஸ்வாயம்பு மனுவுக்கு முடி சூட்டபட்டது.
அதன் பின், அந்த வம்சத்தில் வரிசையாக அதே கிரீடத்தை அரசர்கள் முடி சூட்டிக்கொண்டார்கள். 
அதே கிரீடத்தை இப்போது இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய ராமபிரான் தலையில் சூட்டினார் வசிஷ்டர்.
(நாநா ரத்னமயே பீடே கல்பயித்வா யதா விதி | கிரீடேன தத: பஸ்சாத் வசிஷ்டேன மஹாத்மன: || - வால்மீகி ராமாயணம்

புரோகிதர்கள் ராமபிரானுக்கு ராஜ மரியாதைகள் செய்து, ராஜ ஆபரணங்கள் அணுவித்தனர்.
(ருத்விக்பிர் பூஷனைஸ்சைவ சமயோக்ஷத ராகவ: || - வால்மீகி ராமாயணம்)
 
பட்டபிஷேகம் செய்து கொண்டு, ராமபிரான் சிம்மாசனத்தில் வீற்று இருக்க, 
சத்ருக்னன் வெண் குடை பிடித்தார்.
(சத்ரம் தஸ்ய ச ஜக்ராஹ சத்ருக்ன: பாண்டுரம் சுபம் | - வால்மீகி ராமாயணம்)

சுக்ரீவன் இப்போது வெண் சாமரம் வைத்து விசிறினார்.
(ஸ்வேதம் ச வால வ்யஜனம் சுக்ரீவோ வானரேஸ்வர: || - வால்மீகி ராமாயணம்)
ராக்ஷஸ தலைவன் விபீஷணன் மற்றொரு பக்கம் நின்று கொண்டு சந்திர சங்காசமான (சமமான) மற்றொரு சாமரத்தை ஏந்தி விசிறினார்.
(அபரம் சந்த்ர சங்காசம் ராக்ஷஸேந்த்ரோ விபீஷண: || - வால்மீகி ராமாயணம்)

இந்திரனின் ஆணைக்கு இணங்கி, வாயு தேவனே நூறு தங்க தாமரையை மாலை கட்டி ராமபிரானுக்கு சமர்ப்பித்தார்.
அதனோடு, முத்து மாலை ஒன்றையும் சமர்ப்பித்தார்.

விண்ணுலக கந்தர்வர்களே அயோத்தியில் வந்து அற்புதமான கானம் செய்து பட்டாபிஷேக நாளை அலங்கரித்தனர்.

ராமபிரான் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது, உலகமே சுபிட்சமாக ஆனது. 
மரங்களில் நறுமணமிக்க மலர்கள் பூத்து குலுங்கின, பழங்கள் ஏராளமாக கிடைத்தன.

பட்டாபி ராமன், லட்சக்கணக்கான பசுக்களை, காளை மாடுகளை, குதிரைகளை தானமாக கொடுத்தார்.

ராமபிரான் ஏராளமான தங்க ஆபரணங்களை வேதம் படித்த வேதியர்களுக்கு தானம் செய்தார்.

பிறகு, சுக்ரீவனுக்கு சூரியனை போல பிரகாசிக்கும் மாலைகளை பரிசாக தந்தார்.

விலை மதிப்பில்லாத கல் பதித்த தங்க காப்புகள், வளையல்களை அங்கதனுக்கு தந்தார் ராமபிரான்.

நிலவு போன்ற அழகான, நவரத்தினங்கள் பதித்த மாலையை சீதைக்கு கொடுத்தார்.

நிலவு போல ஒளி வீசும், மாசற்ற அழகிய வஸ்திரங்கள், மற்றும்  ஆபரணங்களை வாயு புத்திரன் ஹனுமானுக்கு கொடுத்தாள், சீதா. 

இதை தவிர, தன் கழுத்திலிருந்து ஒரு மாலையை கழற்றி வானர வீரர்களையும், தன் கணவனையும் மாறி மாறி பார்த்தாள்
(அவமுச்ய ஆத்மன: கண்டாத் தாரம் ஜனக நந்தினி | அவேக்ஷத ஹரீன் ஸர்வான் பர்தாரம் ச முஹர் முஹு: || - வால்மீகி ராமாயணம்)

தன் மாலையை யாருக்கு கொடுக்கலாம்? என்று யோசிக்க, 
சீதையை பார்த்து ராமபிரான்,
"ஜனக நந்தினி! ஹாரத்தை யாருக்குத் தர விரும்புகிறாயோ கொடு.
 
பாமினீ! நீ யாரிடம் அதிக திருப்தியுடன் இருக்கிறாயோ, அவருக்கே கொடு
என்று சொல்ல, 
(ப்ர-தேஹி சுபகே ஹாரம் யஸ்ய த்ருஷ்டாமி பாமினி || - வால்மீகி ராமாயணம்)

'தேஜஸ், தன்னம்பிக்கை, மகிமை, திறமை, சாமர்த்யம், பணிவு, இனிமை, வலிமை, வீரம், புத்திசாலித்தனம்' இவை யாரிடம் எப்பொழுதுமே இருக்கிறதோ! அந்த 'வாயு புத்திரனுக்கு' தன் முத்து மாலையை கரு விழியாளான வைதேஹி கொடுத்தாள்

அந்த மாலையணிந்து ஹனுமான், விசேஷமாகத் தெரிந்தார். 

மலை மீது, சந்திரனின் கிரணங்கள், வெண்மையாகப் படிந்து இருப்பது போல, சோபித்தார் ஹனுமான்.

இதன் பின் த்விவிதன், மைந்தன், நீலன் ஆகியோருக்கு ராமபிரான் அவர்களின் எல்லா விதமான நல்ல குணங்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கினார். 

வயதில் மூத்த வானரர்கள், பிற வானர அரசர்கள் என்று அனைவரும் வஸ்திரங்களாலும், பூஷணங்களாலும் முறைப்படி பூஜிக்கப்பட்டனர். கௌரவிக்கப்பட்டனர்.  

விபீஷணனும், சுக்ரீவனும், ஹனுமானும், ஜாம்பவானும், மற்ற முக்கியமான வானர வீரர்களும், ராமபிரானுடைய குறைவற்ற தெளிவான செயலால், முறைப்படி கௌரவிக்கப் பட்டனர்.

அவரவர்கள் விரும்பியபடி ரத்னங்களோ, மற்ற பொருட்களோ, கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியுடன் நிறைந்த செல்வந்தர்களாகவே அனைவரும் திரும்பிச் சென்றனர்.   

ராஜா ராமபிரானை வணங்கி விடை பெற்று, வானரர்கள் கிஷ்கிந்தை சென்றனர். 

வானர ஸ்ரேஷ்டரான சுக்ரீவனும், ராமனின் அபிஷேக வைபவத்தில் கலந்து கொண்டு,  முறைப்படி கௌரவிக்கப் பட்டவராக விடை பெற்று கிஷ்கிந்தை சென்றார்.

விபீஷணனும் தன்னுடன் வந்த ராக்ஷஸ வீரர்களுடன் விடை பெற வந்தார்




விபீஷணனுக்கு குலதனம் கிடைத்தது. 
(குறிப்பு: இங்கு குலதனம் என்பதை தன் குல தனமான இலங்கை ராஜயம் என்றும் சொல்லலாம். ஆனால் இலங்கை ராஜ்யத்தை இலங்கையிலேயே கொடுத்து விட்டார் ராமபிரான்.)

ராமபிரானின் குல தெய்வம் "ரங்கநாதரை" எடுத்து சென்றார்.
ரங்கநாதரை பெற்றுக் கொண்டு இலங்கையை நோக்கி விபீஷணன் புறப்பட்டார். 
(விபீஷணோபி தர்மாத்மா சஹ தைர்நைர் ருதர் சபை: | பூஜிதஸ்சைவ ராமேன கிஷ்கிந்தாம் ப்ராவிஷத் புரீம் || - வால்மீகி ராமாயணம்)
(குறிப்பு: இலங்கை செல்லும் வழியில், ஸ்ரீ ரங்கம் வந்த போது, இரு புறமும் ஓடும் காவிரியை பார்த்து, சந்தியா வேளை வந்து விட்டதால், அங்கேயே சந்தியா வந்தனம் செய்து விட்டு பிறகு இலங்கைக்கு புறப்படலாம் என்று நினைத்து, ரங்கநாதரை வைத்து விட்டு, ஸ்நானம் செய்து, சந்தியா வந்தனம் செய்ய சென்றார். 
திரும்பி வரும் போது, ரங்கநாதர் அங்கேயே தான் காவிரி நதி கரையில் இருக்க விரும்புவதாக சொல்லி, 'தெற்கு முகமாக இலங்கையை பார்த்து அணுகிரஹம் செய்கிறேன்' என்று சொல்லிவிட்டார்.
மீற முடியாத விபீஷணன் அங்கேயே ரங்கநாதரை வைத்து விட்டு, அன்றிலிருந்து தினமும் ரங்கநாதரை சேவிக்க வரும் பழக்கம் கொண்டார்.

ராம அவதாரம் த்ரேதா யுகத்தில் நிகழ்ந்தது. கணக்கிட்டு பார்த்தால், குறைந்தது சுமார் 8 லட்சம் வருடம் முன் த்ரேதா யுகம். 
ஸ்ரீ ரங்கநாதர், ப்ரம்ம தேவனால் பூஜிக்கப்பட்டு, பிறகு ஸ்வாயம்பு மனுவால் பூலோகம் வந்து, பிறகு இக்ஷவாகு அரசர்கள் வழிபட்டு, நாராயணனே ராமபிரானாக வந்து, தன்னையே குலதெய்வமாக வழிபட்டு, தான் அயோத்தியில் இருக்க, ரங்கநாதராக இருக்கும் இவரே தென் தேசம் வந்து விட்டார். குறைந்தது 8 லட்சம் வருடங்களாக 'ஸ்ரீரங்கநாதர்' ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது.

ராமபிரானின் குலதெய்வமான, குலதனமான 'ரங்கநாதர்' தமிழ் நாட்டுக்கு வந்தது, தமிழர்களுக்கு கிடைத்த பாக்கியம்.)

ராஜ்யம் முழுவதுமாக பரந்த எண்ணத்துடன், பரிபாலித்துக் கொண்டு, பெரும் புகழுடன், எதிரிகள் யாரும் இன்றி மிகவும் சந்தோஷமாக ஆண்டு வந்தார் ராகவன்
(ச ராஜ்யம் அகிலம் சாசன் நிஹதாரிர் மஹா யஷா: | ராகவ பரமோதார: சசாச பரயா முதா || - வால்மீகி ராமாயணம்)

லக்ஷ்மணனை தன்னுடன் சேர்ந்து ராஜ்ய நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ள பணித்தார், ராமபிரான்.

"தர்மம் அறிந்தவன் நீ. நம் முன்னோர்கள் ஆண்ட ராஜ்யம் இது. 
நீயும் எனக்கு சமமாக தந்தையால் வளர்க்கப் பட்டவன்.  
யுவ ராஜாவாக முடி சூட்டிக் கொண்டு எனக்குத் துணையாக வா" என்றார். 
(துல்ய மயா த்வம் பித்ருபிர்த்ருதா யா தாம் யௌவராஜ்யே துரமுதுஹஸ்வ | சர்வாத்மநா பர்யனுநீயமானோ யதா ந சௌமித்ரிருபைதி யோகம் || - வால்மீகி ராமாயணம்

பலவிதமாக வேண்டியும் லக்ஷ்மணன் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்து விடவே, பரதனை 'யுவ ராஜாவாக' நியமித்தார் ராமபிரான்.
(நியுஜ்ய மானோபி ச யௌவ ராஜ்யே ததோ அப்யசிஞ்சத் பரதம் மஹாத்மா || - வால்மீகி ராமாயணம்)

பௌண்டரீக மற்றும் அஸ்வமேத யாகங்கள் செய்து, வாஜபேயம் எனும் யாகத்தையும் அடிக்கடி செய்து ராமபிரான் இன்னும் பல யாகங்களையும் செய்தார். 

பத்தாயிரம் வருடங்களுக்கு மேல் ராமபிரான் ஆட்சி செய்து, நிறைய தக்ஷிணைகள் கொடுத்து, நூறு அஸ்வமேத யாகங்கள் செய்து புகழ் பெற்றார்.

பலவிதமான யாகங்களை, தாயாதிகள், பந்துக்கள், நண்பர்களுடன் சேர்ந்து நடத்தினார் ராமபிரான்.

ராமராஜ்யத்தில், யாரும் கணவனை இழந்து விதவை ஆகவில்லை.

பாம்பு கடிக்குமே என்ற பயமோ, வியாதி வருமே என்ற கவலையோ யாருக்கும் இருக்கவில்லை. 

ராமபிரான் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்கள் நிம்மதியாக கஷ்டங்கள் எதுவும் இன்றி வாழ்ந்தனர். 

திருடர்கள் இல்லாமல் உலகம் கவலையின்றி இருந்தது. 


மற்றவர்கள் பொருளை யாரும் தொடக் கூட மாட்டார்கள் என்ற நிலை இருந்தது.

முதியவர்கள் பாலர்களுக்கு அந்திம சம்ஸ்காரங்கள் செய்யும்படியாக ஒரு சம்பவம் கூட நிகழவில்லை.

எங்கும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. 

எங்கும் தர்மமே தலை தூக்கி நின்றது. 

ராமனையே அனுசரித்து அனைவரும் இருந்தனர். 

யாரும், தங்களுக்குள் சண்டையிடுவதில்லை.  அடித்துக் கொள்வதில்லை. 

அனைவரும் ஆயிரம் வருஷங்கள் ஆயிரக் கணக்கான புத்திரர்களோடு வாழ்ந்தனர். 
(ஆஸன் வர்ஷ சஹஸ்ராணி ததா புத்ர சஹஸ்ரிண: | - வால்மீகி ராமாயணம்)
(आसन्वर्षसहस्राणि तथा पुत्र सहस्रिणः | - वाल्मीकि रामायण)

ராமபிரான் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்கள் வியாதியின்றி, வருத்தம் இன்றி, சுகமாக இருந்தனர். 

'ராமா, ராமா, ராமா' என்றே ப்ரஜைகள் எப்பொழுதும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.  
(ராமோ ராமோ ராம இதி ப்ரஜானாம் அபவன் கதா | - வால்மீகி ராமாயணம்)
(रामो रामो राम इति प्रजानाम् अभवन् कथाः | -  वाल्मीकि रामायण)

கதைகள் பேசினாலும், ராமனைச் சுற்றியே, ராமனைப் பற்றியே பேசினர்.  
ராம மயமாகவே உலகம் விளங்கியது. 
ராமபிரான் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்களின் மனதில் ராமரே நிறைந்திருந்தார். 
(ராமபூதம் ஜகத் அபூத் ராமே ராஜ்யம் ப்ரசாஸதி || - வால்மீகி ராமாயணம்)
(रामभूतं जगाभूद् रामे राज्यं प्रशासति || -  वाल्मीकि रामायण)

மரங்கள் நித்யம் பூத்துக் குலுங்கின. 
பழங்கள் பழுத்துத் தொங்கின. கிளைகள் படர்ந்து விஸ்தாரமாக நின்றன.  

பருவ காலங்களில் விடாது மழை பெய்தது.  
காற்று இதமாக வீசியது. 

ப்ராம்மணர்களோ, க்ஷத்திரியர்களோ, வைஸ்யர்களோ, சூத்ரர்களோ, யாராக இருந்தாலும் பேராசை இன்றி, அவரவர் வேலைகளை நியாயமாக செய்து கொண்டிருந்தனர்
தங்கள் தங்கள் கடமைகளை ஈடுபாட்டுடன் செய்தனர். 
தங்கள் செயல்களிலேயே திருப்தியுடன் இருந்தனர். 
ப்ரஜைகள் தர்மத்தில் நம்பிக்கையுடன் அனுசரித்தும் வந்தனர்.
(ப்ராஹ்மணா ஷத்ரியா வைஸ்யா சூத்ரா லோப விவர்ஜிதா | ஸ்கர்மசு ப்ரவர்தந்தே துஷ்டா: ஸ்வைரேவ கர்மபி: || - வால்மீகி ராமாயணம்)
(ब्राह्मणाः क्षत्रिया वैश्याः शूद्रा लोभविवर्जिताः | स्वकर्मसु प्रवर्तन्ते तुष्ठाः स्वैरेव कर्मभिः || -  वाल्मीकि रामायण)

ராமபிரான் ராஜ்ய பாலனம் செய்த பொழுது, ப்ரஜைகள் பொய் பேசாமல் இருந்தார்கள்.
எங்கும் சத்யமே வழக்கில் இருந்தது. 

எல்லோருமே லக்ஷணம், அழகு பரி பூர்ணமாக விளங்க, தர்மத்தில் நடப்பவர்களாகவே இருந்தனர்.

பத்தாயிரம் வருஷங்கள், மேலும் பத்து நூறு வருஷங்கள், சகோதரர்களுடன் ஸ்ரீமானான ராமபிரான் ராஜ்யத்தை பரிபாலித்து வந்தார்.
(தச வர்ஷ சஹஸ்த்ராணி தச வர்ஷ சதானி ச | ப்ராத்ருபி: ஸஹித: ஸ்ரீமான் ராமோ ராஜ்யம் அகாரயத் || - வால்மீகி ராமாயணம்)
தர்மத்தை போதிக்கும் இந்த ஆதி காவ்யம், மகானான வால்மீகியினால் இயற்றப் பட்டது. 
(தர்மயம் யசஸ்ய மாயுஷ்யம் ராஞ்யம் ச விஜயாவஹம் | ஆதி காவ்யம் இதம் த்வார்சம் புரா வால்மீகினா க்ருதம் || - வால்மீகி ராமாயணம்)
(धर्मयं यशस्यमायुष्यं राज्ञां च विजाअवहम् || आदिकाव्यमिदं चार्षं पुरा वाल्मीकिना कृतम् || -  वाल्मीकि रामायण)

(தமிழகத்தில் அன்பில் என்ற தேசத்தில் அவதரித்த, பிருகு அவதாரமான வால்மீகி, ராமபிரான் சமகாலத்தில் வாழ்ந்தார். 
ராமபிரான் காலம் வரை உத்திரபிரதேசத்தில் இருந்து ராம காவியம் எழுதினார். 
ராமபிரான் வைகுண்டம் சென்ற பிறகு, வால்மீகி பிறகு, மீண்டும் தமிழகம் வந்தார்.
திருநீர்மலையில் தங்கி, அங்கு ராமபிரானை தியானித்து இருந்தார். பரவாசுதேவன் நாராயணன், ராமபிரானாக மீண்டும் காட்சி கொடுத்து சமாதானம் செய்தார். 
வால்மீகி மகரிஷியின் முக்தி ஸ்தலமாக திருநீர்மலை அமைந்தது.)

புனிதமானது, புகழைத் தரக் கூடியது, வால்மீகி ராமாயணம். 

ஆயுளை வளர்க்கும், வால்மீகி ராமாயணம். 

அரசர்களுக்கு வெற்றியைத் தரும், வால்மீகி ராமாயணம். 

வால்மீகி ராமாயணத்தை யார் படிக்கிறார்களோ, உலகில் கேட்கிறார்களோ, அந்த மனிதன் தன் பாபங்களிலிருந்து விடுபடுவான். 

புத்ர காமனாக இருப்பவன், வால்மீகி ராமாயணம் படிப்பதால்  புத்திரனை அடைவான். 

செல்வத்தை விரும்புபவன், வால்மீகி ராமாயணம் படிப்பதால்  செல்வங்களை அடைவான். 

வால்மீகி ராமாயணத்தில் ராமாபிஷேக வைபவத்தை கேட்பவர்கள், பெரும் நற்பயனை அடைவார்கள். 

ராஜாவாக இருப்பவன், வால்மீகி ராமாயணம் படிப்பதால் பூமியை வெல்லுவான், எதிரிகள் தொல்லையின்றி ஆளுவான். 

மாதா கௌசல்யா ராகவனுடன் இருந்தது போல,
சுமித்ரா லக்ஷ்மணனோடு,சத்ருக்னனோடு இருந்தது போல,
கைகேயி பரதனுடன் இருந்தது போல,
வால்மீகி ராமாயணம் படிப்பதால், தாய்மார்கள் தன் புத்திரர்களோடு நிம்மதியாக வாழுவார்கள்.




வால்மீகி ராமாயணம் படிப்பவர்கள், பிள்ளை, பேரன் பேத்திகளுடன் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பர். 

வால்மீகி ராமாயணம் கேட்பவர்கள் தீர்கமான ஆயுளைப் பெறுவர். 

ராமனுடைய விஜயத்தையும், அவருடைய தெளிவான மற்ற செயல்களையும் யார் கேட்கிறார்களோ! 
வால்மீகி முனிவரால் இயற்றப் பட்ட இந்த காவ்யத்தை யார் கேட்கிறார்களோ!
அவர்கள் காரியத்தில் கருத்துடையவர்களாக, கோபத்தை வென்றவர்களாக, தடைகளை கடந்து செல்லும் மாவீரர்களாக இருப்பர். 

வெகு தூரம் பயணம் செய்பவர்கள், பிரிவின் முடிவில் வால்மீகி ராமாயணம் கேட்பதால், பந்துக்களோடு இணைவர். 

வால்மீகி ராமாயணம் படித்து, ராகவனிடம் பிரார்த்திக்கும், வேண்டும் வரங்கள் அனைத்தையும் கிடைக்கப் பெறுவர்.  

வால்மீகி ராமாயணம் கேட்பதால், தேவர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள். 

வால்மீகி ராமாயணம் படிப்பதால் இடையூறுகள் நீங்கும். 

வால்மீகி ராமாயணம் படிப்பதால் வீடுகளில் தோன்றும் கஷ்டங்கள் விலகும். 

வால்மீகி ராமாயணம் படிப்பதால், பூமியை அரசன் வென்று,  விஜயனாக இருப்பான். 

வால்மீகி ராமாயணம் படிப்பதால், வெளிநாடு சென்றவன் சௌக்யமாக திரும்பி வருவான். 

இளம் பெண்கள் வால்மீகி ராமாயணம் கேட்பதால், உத்தமமான புத்திரர்களைப் பெறுவார்கள்.  

இந்த புராதனமான வால்மீகி ராமாயணம் இதிகாசத்தை படித்தும், பூஜித்தும் வழி படுபவர்கள் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுவர்.  

வால்மீகி ராமாயணம் படிப்பவர்கள், தீர்கமான ஆயுளைப் பெறுவார்கள். 

தலை வணங்கி வினயத்துடன் ப்ராம்மணர்கள் வால்மீகி ராமாயணம் படிக்க, க்ஷத்திரியர்கள் கேட்கலாம். 

வால்மீகி ராமாயணம் படிப்பதால், ஐஸ்வர்யமும், புத்ர லாபமும் உண்டாகும், சந்தேகமேயில்லை. 

வால்மீகி ராமாயணம் முழுவதுமாக கேட்பவர்களும், சதா படிப்பவர்களும் எல்லா நன்மைகளையும் அடைவர் என்பதில் சந்தேகமேயில்லை. 

அது தவிர, ராமபிரானும், வால்மீகி ராமாயணம் படிப்பவரை கண்டு ப்ரீதியடைகிறார்.  

ராமபிரானே சனாதனமான "விஷ்ணு பகவான்". அவரே "ஆதி தேவன்"
அவரே மஹாபாஹுவான "ஹரி நாராயணன்".  

ரகுகுல நாயகனாக வந்த ராமபிரான் தான், சாக்ஷாத் நாராயணன்

சேஷன் எனும் ஆதி சேஷன் தான் "லக்ஷ்மணன்" என்று அழைக்கப் படுகிறார்.

குடும்ப வ்ருத்தி, 
தன தான்ய வ்ருத்தி,
உத்தமமான ஸ்த்ரீகள், 
உயர்ந்த சுகம், 
இவை அனைத்தும், சுபமான இந்த வால்மீகி ராமாயண காவ்யத்தைக் கேட்பதன் மூலம் பெறுவதோடு, பெரும் செல்வத்தையும் அடைகிறார்கள். 

வால்மீகி ராமாயணம் படிப்பதால், உலகில் பொருள் நிறைந்து, ஆரோக்யம் பெற்று வாழ்வர். 

இந்த ராமபிரானுடைய காவ்யம், ஆயுளைத் தரக் கூடியது.

இந்த ராமபிரானுடைய காவ்யம், ஆரோக்யமான வாழ்வைத் தரும். 

இந்த ராமபிரானுடைய காவ்யம், புகழைத் தரும்..  

இந்த ராமபிரானுடைய காவ்யம், சகோதரனைக் கொடுக்கும், நல்ல சகோதரர்கள் அமைவார்கள். 

இந்த ராமபிரானுடைய காவ்யமே சுபமானது, 
இந்த ராமபிரானுடைய காவ்யம், தெளிந்த புத்தியை தரக் கூடியது. 

வால்மீகி ராமாயணத்தை நல்லவர்கள் சொல்ல, நியமமாக கேட்க வேண்டும். 

இந்த ராமபிரானுடைய காவ்யம், சொல் வன்மையும், நாவளமும் அளிக்க வல்லது. 

மேன் மேலும் மேன்மையடைய விரும்புபவர்கள், வால்மீகி ராமாயணத்தின் மூலம் தங்கள் எண்ணம் நிறைவேறப் பெறுவார்கள்.

வால்மீகி ராமாயணம் படிப்பதால், விஷ்ணுவின் பலம் பெருகும். 

வால்மீகி ராமாயணத்தை ஏற்றுக் கொள்வதாலும், கேட்பதாலும், நம்மை கண்டு தேவர்களும் திருப்தியடைகிறார்கள். 
வால்மீகி ராமாயணத்தை கேட்பதால், பித்ருக்கள் திருப்தியடைகின்றனர். 

வால்மீகி ரிஷி, தானே செய்த இந்த மகா காவ்யத்தை, பக்தியுடன் யார் எழுதுகிறார்களோ, அவர்களும் நற்கதியடைவார்கள்.  

அவர்களும் த்ரிவிஷ்டபம் எனும் தேவலோகத்தில் வாசம் செய்யும் பெருமையை அடைவார்கள்.

ஜெய் ஸ்ரீ ராம..  ஸ்ரீ ராம ஜெயம்.
ஜெய் சீதாராம்.. ஜெய் ஸியாராம்.