Followers

Search Here...

Showing posts with label சொர்க்கம். Show all posts
Showing posts with label சொர்க்கம். Show all posts

Saturday 25 May 2019

மோக்ஷத்திற்கு மிகவும் எளிதான பாதை எது? சொர்க்கம் எவன் வேண்டுமானாலும் அடையலாம். ஆனால் அது ப்ரயோஜனமில்லை...மோக்ஷமே ஜீவன் அடைய வேண்டிய இலக்கு... ஒரு அலசல்...

ராமபிரான் சரித்திரத்தில் நாம் பல விதமான "ராம பக்தர்களை" பார்க்கிறோம்.



மனிதர்களில் மட்டுமல்லாது, ராக்ஷஸர்களில், மிருங்கங்களில், பறவைகளில், ரிஷிகளில் என்று பல தரப்பட்ட பக்தர்கள், ராமரை 'பரமாத்மா'வாக அறிந்தனர்.

குறிப்பாக "சபரி மற்றும் குகன்" என்ற இரண்டு பக்தர்கள், ஸ்ரீ ராமரை தரிசிக்கும் போது, பழங்களை ஆசையோடு ராமருக்கு சமர்பிக்கும் பாக்கியம் பெற்றனர் என்று பார்க்கிறோம்.

இருவருமே காட்டுவாசிகள்.
ராமரோ அயோத்திக்கு அரசர்.

குலத்தை வைத்து பார்த்தால், இந்த இருவரை விட, உயர்ந்த சூரிய குலத்தில் உதித்தவர் ராமர்.

குணத்திலும் மேன்மையானவர்.
பராக்ரமத்திலும் நிகரற்றவர்.
பார்த்தவர்கள் பார்த்து கொண்டே இருக்க வைக்கும் அழகு கொண்டவர்.
படிப்பிலும் மேன்மையானவர்.


ஆனால் இந்த வேறுபாடுகள் நமக்கு தெரிந்தாலும், ஸ்ரீ ராமருக்கு தெரியவில்லை.

இருவரின் அன்புக்கு கட்டுப்பட்டார்.
குகன் என்ற வேடுவ குல தலைவனை, சக்ரவர்த்தி திருமகன் நண்பனாக பார்த்தார்.
நண்பனை கட்டிக்கொண்டு நலம் விசாரித்தார்.
அதற்கும் மேல், குகனுக்கு சீதையை அறிமுகப்படுத்தும் போது, 'இவள் உன் சகோதரி' என்று உறவு கொண்டாடினார்.
தன் அடியவருக்கு எளியவன் என்று இருந்தார் ஸ்ரீ ராமர்.
குகன் ஸ்ரீ ராமருக்கு, தான் கொண்டு வந்த பழங்களை சமர்பிக்கிறான்.
ஸ்ரீ ராமர் குகனின் அன்புக்கு கட்டுப்பட்டு, அதை தொட்டு ஏற்றுக்கொள்கிறார். சாப்பிடவில்லை.


ஸ்ரீ ராமருக்கு ஒரு கொள்கை இருந்தது.
பிறருக்கு தன்னிடம் உள்ளதை கொடுப்பதற்கு ப்ரியப்படுவாரே ஒழிய, மற்றவர்களிடம் வாங்கும் பழக்கம் இல்லாதவர்.
ஸ்ரீ ராமரின் கைகள் எப்போழுதுமே கொடுப்பதற்காக நீளுமே தவிர, வாங்குவதற்கு நீளாது.

இதை அறிந்த குகன், ஸ்ரீ ராமர் தான் கொடுத்த பழங்களை தொட்டு ஏற்றுக்கொண்டதே தன் பாக்கியம் என்று சந்தோஷப்பட்டார்.
ஸ்ரீ ராமர் கம்பீர புருஷன் என்று குகன் அறிந்தவரும் கூட.

அதே ஸ்ரீ ராமர், காட்டில் வசித்த வயதான மூதாட்டியான "சபரி'யை வனவாச சமயத்தில் சந்தித்தார்.
சபரியின் குருநாதர் 'மதங்க முனி' மறையும் பொழுது, 'ஸ்ரீ ராமர் வரும்வரை ஆஸ்ரமித்தில் வாழ்ந்து, ஸ்ரீ ராமரை தரிசித்த பின், உடலை பூலோகத்திலேயே விட்டு விட்டு, தான் இருக்கும் மேல்லோகத்திற்கு வர சொன்னதாக' ஸ்ரீ ராமரிடம் தன் முழு சரித்திரத்தையும் சொன்னாள்.

ஸ்ரீ ராமருக்கு தான் பறித்த பழங்களை கொடுத்து சாப்பிட சொன்னாள் சபரி பாட்டி.


தன் நண்பன் குகன் ஆசையுடன்  பழங்களை  கொடுக்கும் போது, மரியாதைக்காகவும், குகனின் அன்புக்காகவும் தொட்டு மட்டும் ஏற்றுக்கொண்ட ஸ்ரீ ராமர், 
காட்டுவாசியான சபரி கொடுத்த பழங்களை கை நீட்டி வாங்கி கொண்டார்.
யாரிடமும் வாங்குவதற்கு நீளாத கைகள், உற்ற நண்பன் குகனுக்காகவும் நீளாத கைகள், சபரி என்ற வேடுவச்சிக்காக நீண்டது.
தான் மட்டும் அல்லாமல், தன் கூட இருந்த லக்ஷ்மணரையும் சபரியிடம் பழங்களை வாங்கி சாப்பிட சொன்னார் ஸ்ரீ ராமர்.

இருவருமே வேடுவர்கள், காட்டு வாசிகள்..  சபரியை விட குகனுக்கு ஸ்ரீ ராமர் மேல் அன்பு அதிகம்.
இருந்தும் ஸ்ரீ ராமர் சபரி கொடுத்ததை மட்டும் ஏன் ஏற்றுக்கொண்டார்?... இதில் ஒரு காரணம் இருக்க வேண்டுமே...

பொதுவாகவே இறை பக்தி உள்ளவர்கள் உலகில் அதிகம் காணப்படுகிறார்கள்.
குகனை போன்ற தீவிரமான இறை பக்தி உள்ளவர்களும் உலகில் உண்டு.


கோவிலுக்கு செல்லும் அனைவருமே ஏதோ ஒரு அளவில் இறை பக்தி உள்ளவர்கள் தான்.

பகவான் நாராயணன், தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, அவர்கள் வேண்டும் வரத்தை அளிக்கிறார்.
பிரார்த்தனைகளுக்கு அவர்கள் பக்தியின் நம்பிக்கையை பொறுத்து நடத்தி கொடுக்கிறார்.
திருப்பதியில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள். அவர்கள் பிரார்த்தனை பலிப்பதால் தானே மீண்டும் மீண்டும் வருகிறார்கள்.
குகனை போன்ற பக்தர்கள் இருந்தால், பெருமாள் சிலையாக இருந்தாலும் கனவிலும், மறைமுகமாகவும், நேரிலும் பேசுகிறார். 
மகான்கள் சரத்திரத்தில், பகவான் பேசினார், திருவிலையாடல் செய்தார் என்று பார்க்கிறோம்.
அவரவர் பக்தியை பொறுத்து, பெருமாள் தன்னை வெளிப்படுத்துகிறார்.

குகனை போன்று, சபரிக்கு பக்தி ராமரிடத்தில் இல்லையென்றாலும், அவளின் 'குரு பக்தியும், குருவின் வாக்கின் மீது இருந்த, அசையாத திட நம்பிக்கையுமே', ஸ்ரீ ராமபிரானை அவள் கொடுக்கும் பழத்தை கை நீட்டி வாங்க வைத்தது.
பொதுவாக பெருமாளை அடைவதற்கு, குருவின் துணை இல்லாமல் பக்தி செய்வதை காட்டிலும், 'குரு பரம்பரையை ஆச்ரயித்து பக்தி செய்பவர்களுக்கு' பெருமாள் எதையும் கொடுக்க தயாராகிறார்.
பெருமாள் சுலபமாகிறார். இதற்கு காரணம் உண்டு.

இதையே குகனிடத்தில், சபரியிடத்தில் பெருமாள் பழகிய விதம் காட்டுகிறது.




குகன் பழம் கொடுக்கும் போது, தொட்டு ஏற்று கொண்ட பெருமாள்,
'குருவை ஆச்ரயித்த, குருவின் வாக்கில் துளியும் சந்தேகமற்ற' சபரி, பழம் கொடுக்கும் போது, தன் கொள்கையையும் விட்டு, கை நீட்டி அவள் கொடுக்கும் பழத்தை வாங்கி உண்டார்.
உத்தமமான குருவின் துணை கொண்டு, பெருமாளை தரிசிக்கும் போது,
சுமாரான பக்தனுக்கு கூட, பெருமாள் தடையே இல்லாமல், குருவின் பக்தியை மனதில் வைத்து கொண்டே, சிஷ்யனான பக்தனுக்கும் பேரருள் செய்து விடுகிறார்.

'உத்தமமான குருவை, உத்தமமான குரு பரம்பரையில் உள்ள குருவை நாம் ஆச்ரயிக்கும் போது', நம்மை போன்ற சாதாரண பக்தர்களை பார்க்கும் போதும், பெருமாள் அபரிமிதமான கருணையை வர்ஷித்து விடுகிறார்.

உத்தமமான ஆத்ம குருவை நாம் அடையும் போது, பெருமாளின் கிருபை எளிதாக கிடைக்கிறது.
இதற்கு ப்ரமாணம் சபரியே.

குரு பரம்பரையை ஆச்ரயித்த சபரி மோக்ஷம் அடைந்தாள். 
குரு பரம்பரையை ஆச்ரயித்தவன் வீண் போகவே மாட்டான், அவர்களும் மோக்ஷம் அடைவார்கள் என்று நிரூபணம் செய்யும் விதமாக, ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது...

ஒரு சமயம் ஸ்ரீ ரங்கத்தில், ராமானுஜர் தன் சிஷ்யர்களுக்கு ராமாயண உபன்யாசம் சொல்லிக்கொண்டு இருந்தார்.
சிஷயர்கள் சிரத்தையோடு கேட்டுக்கொண்டு இருந்தனர்.
விபீஷணன் ஸ்ரீ ராமரை சரணாகதி செய்யும் கட்டத்தை சொல்லி கொண்டு இருந்தார், ராமானுஜர்.
ராமானுஜரே (சாக்ஷாத் ஆதிசேஷ அவதாரம், அவரே லக்ஷ்மணன்) ராமாயண உபன்யாசம் செய்தார் என்றால், அந்த உபன்யாசம் எப்படி அற்புதமாக இருந்து இருக்கும்.
கண் கொட்டாமல் பக்தர்கள் கேட்டுக்கொண்டு இருந்தனர்.

விபீஷணன் சரியான காலத்தில் வரவில்லை, 
இவன் ஒரு ராக்ஷஸன், 
ராவணனின் தம்பி, 
நம் படையை வேவு பார்க்க வந்து இருக்கிறான், 
என்று பல தரப்பட்ட விவாதங்கள் வானரர்களுக்குள் நடந்து கொண்டிருந்தது.
ஸ்ரீ ராமானுஜர் தர்ம-அதர்ம விஷயங்கள் பற்றி ஆச்சர்யமாக காலட்சேபம் செய்து கொண்டிருந்தார்.
அனைவரும் ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் "பிள்ளை உறங்காவில்லி தாசர்" என்பவர், மிகவும் மனம் நொந்து, திடீரென்று உபன்யாசத்துக்கு நடுவில் எழுந்து புறப்பட தயாராகி விட்டார்.

அந்த காலங்களில்,
பகவானை பற்றிய காலட்சேபம் நடக்கும் போது,
பகவானை பற்றிய விஷயங்கள் சொல்லும் போது 
மரியாதை நிமித்தமாகவும், அலட்சியம் செய்ய கூடாது என்பதற்காகவும், உபன்யாசத்தின் நடுவில் எழுந்து போகவே மாட்டார்கள்.

ராமானுஜர், புறப்பட தயாரான பிள்ளை உறங்காவில்லியை தடுத்து நிறுத்தி, "ஏன் புறப்பட்டு விட்டீர்?" என்று கேட்டார்.
பிள்ளை உறங்காவில்லி தாசர் மன வேதனையுடன்,
"இலங்கை ராஜ்யத்தையே விட்டு, நாட்டை விட்டு, 
மக்களை விட்டு, அண்ணனை விட்டு, மனைவியை விட்டு, 
உற்ற உறவினர்களையும் விட்டு, அனைத்தையும் விட்டு விட்டு, 'பெருமாளே கதி எனக்கு' என்று ஸ்ரீ ராமரிடம் சரணாகதி செய்து கொண்டு நிற்கிறார் விபீஷண ஆழ்வான்.
பூரண சரணாகதி செய்த அவர் விஷயமாகவே,
'இவரை சேர்த்து கொள்ளலாமா? சேர்த்து கொள்ள கூடாதா?' 
என்று இத்தனை ஆலோசனை நடக்கும் என்றால்,
அடியேன் ஒன்றையும் விடவில்லையே!!. 
என் மனைவியை விடவில்லை. என் மக்களை விடவில்லை. எதையுமே விடவில்லையே!!. 



இப்படி இருக்க, பெருமாளுக்கு என் விஷயமாக எத்தனை ஆலோசனை இருக்கும்? 
எனக்கு எப்படி பெருமாள் அபயம் கொடுக்க போகிறார்? 
எதையுமே பெருமாளுக்காக தியாகம் செய்யாத எனக்கா வைகுண்டம் தருவார்? என்று தோன்றியதால், மனதில் அதைரியம் உண்டாகி எழுந்து விட்டேன்" என்றார்.

ராமானுஜர், பிள்ளை உறங்காவில்லி தாசரை பார்த்து,
"அது ராமர் கோஷ்டி.. நீர் ராமானுஜன் கோஷ்டி. சஞ்சலப்படாமல் உட்காருங்கள்.
விபீஷணனை சேர்த்து கொள்ளலாமா? வேண்டாமா? என்று ராமர் கோஷ்டியில் தான் ஆலோசனை நடந்தது.
ராமானுஜன் கோஷ்டியில் சேருவதற்கு ஆலோசனையே கிடையாது.
ஆதலால்,
'ராமானுஜரே கதி' என்று கவலைப்படாமல், அதைரியம் அடையாமல் உட்காரும்.

'பெருமாள் சேர்த்து கொள்வார்' என்று என்ன தைரியத்தில் சொல்கிறீர்கள்? என்று கேட்டால், சொல்கிறேன்.

இந்த ராமானுஜன் 'வைகுண்டம்' போக போவது உண்மை தானே?
ராமானுஜன் நரகம் போய்விட போவதில்லையே?
நான் வைகுண்டம் போவது சத்தியம் என்றால், உமக்கும் வைகுண்டம் கிடைக்கப்போவது சத்தியமே. உட்காருங்கள்." என்றார்.


தான் மட்டும் வைகுண்டம் போவேன்!! என்று ராமானுஜர் எப்படி நிச்சயமாக சொன்னார்?
வைகுண்டம் செல்ல அனைத்து தகுதியும் உடையவரல்லவா ஸ்ரீ ராமானுஜர். 
மறுக்க முடியுமா அவர் வாழ்க்கை சரித்திரத்தை.

'நான் ஸ்ரீ மத் ராமாயண காலட்சேபம் செய்கிறேன்.
பரத்துவ ஞானம் உடையவனாக இருக்கிறேன்.
பெருமாளிடம் பக்தி உடையவனாக இருக்கிறேன்.
உலக விஷயங்களில் பற்றில்லாமல் வைராக்கியம் உடையவனாக இருக்கிறேன்.
ஜகத் குருவாக இருக்கிறேன்.
ஸ்ரீ பாஷ்யம் எழுதி இருக்கிறேன்.
சந்யாசியாக இருக்கிறேன்.
பகவத் விஷயங்களே சொல்கிறேன்.
திவ்ய தேசங்கள் அனைத்தும் சென்று பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்து இருக்கிறேன்.
அப்பேற்பட்ட தகுதிகள் மட்டுமில்லாது, நானே ஆதிசேஷன் அவதாரமும் கூட.
அப்பேற்பட்ட ஆச்சார்யனை அடைந்தும் கூடவா, பரமபதம் கிடைக்குமா,? பெருமாள் சேர்த்து கொள்வாரா? என்று உமக்கு சந்தேகம்?!!'
என்று சொல்லிக்கொள்ளவில்லை ராமானுஜர்.


தன்னை பற்றிய பெருமையை பேசவே மாட்டார் ஸ்ரீ ராமானுஜர்.
மாறாக, ஸ்ரீராமானுஜர் பேசலானார்,
"என் ஆச்சாரியன் 'பெரிய நம்பி'களுக்கு வைகுண்டம் உண்டாகில், அடியேனுக்கும் உண்டு.
எனக்கு வைகுண்டம் உண்டாகில், உமக்கும் உண்டு.

'ஆளவந்தாருக்கு' வைகுண்டம் உண்டாகில், அவர் சிஷ்யர் பெரிய நம்பி'களுக்கும் உண்டு.

'மணக்கால் நம்பி'க்கு வைகுண்டம் உண்டாகில், 'ஆளவந்தாருக்கும்' உண்டு.

'உய்யக்கொண்டாருக்கு' வைகுண்டம் உண்டாகில், 'மணக்கால் நம்பி'க்கும் உண்டு.

'நாதமுனி'களுக்கு வைகுண்டம் உண்டாகில், 'உய்யக்கொண்டாருக்கும்' உண்டு.

'விஸ்வத்சேனருக்கு' வைகுண்டம் உண்டாகில் 'நாதமுனி'க்கும் உண்டு.

'பெரிய பிராட்டியான மகாலட்சுமி'க்கு வைகுண்டம் உண்டாகில், 'விஸ்வத்சேனருக்கும்' உண்டு.

அந்த 'பெருமாளுக்கு' வைகுண்டம் உண்டாகில், 'மகாலக்ஷ்மி'க்கும் உண்டு.

இந்த குரு சிஷ்ய பரம்பரை பெருமாள் வரை போகிறது.
இப்பொழுது, இந்த ராமனுஜனை ஆச்ரயித்த ஒருவனுக்கு வைகுண்டம் இல்லையென்றால், இந்த தொடர் சங்கிலி வைகுண்டம் வரை சென்று, பரவாசுதேவனுக்கே வைகுண்டம் இல்லை என்று ஆக்கி விடும்.

ஆக பரவாசுதேவன், மகாலட்சுமி தொடங்கி, நாதமுனிகள் மத்தியில் இருந்து கொண்டு, தொடர்ந்து வரும் குரு பரம்பரையில் இருந்து கொண்டும், பெருமாள் சேர்த்து கொள்வாரா என்று நீர் கவலை பட காரணமில்லையே..



நமக்கு வைகுண்டம் நிச்சயம். கிடைக்க போகும் சொத்து என்பதை உணர்ந்து,
இந்த உலகில் இருக்க போகும் காலம் வரை, நாம் காலத்தை எப்படி கழிக்க வேண்டும்? என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, வைகுண்டம் கிடைக்குமா? என்று கேள்வியே எழ கூடாது.

இருக்கும் காலத்தில், ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெருமாளிடம் பக்தியை வளர்த்து கொள்ள வேண்டும்.
வைராக்யத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.
கர்ம யோகத்தில் வாழ வேண்டும்.
அனுஷ்டானம் தவறாமல் வாழ வேண்டும்.
தியான யோகமும் செய்ய வேண்டும்.
சந்யாசமும் வாங்கி கொள்ள வேண்டும்.
என்று யார் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும்,
'நீர் ஆச்சாரியன் திருவடியே கதி' என்று இருந்தால் போதும்.
நமக்கு மோக்ஷத்திற்கான முயற்சி, சாதனை இதுவே.

யோகம் செய்பவர்கள் செய்யட்டும்.
பக்தி செய்பவர்கள் செய்யட்டும்.
சந்யாசம் வாங்கி கொள்பவர்கள் வாங்கி கொள்ளட்டும்.
குரு பரம்பரையை ஆச்ரயித்த சிஷ்யனுக்கு "ஆச்சாரியன் திருவடியே கதி" என்று இருக்க வேண்டியது தான் மோட்சத்திற்கு சாதனம்.
"ஆச்சாரியன் திருவடியே கதி" என்று இருந்தால் போதும்.
ஆச்சாரியன் நம்மிடத்தில் ஒரு அபிமானம் கொண்டிருந்தாலே நமக்கு போதும்.
நிச்சயம் நம்மை வைகுண்டத்தில் இருந்து தள்ளி விட மாட்டார்கள்.

அப்படிப்பட்ட குருவை ஆச்ரயித்த ஒருவன், வைகுண்டம் தனக்கு நிச்சயம் என்று கவலையே இல்லாமல் இருப்பான்.

பெருமாள் ஆரம்பித்து வரும் இத்தகைய அருமையான பரம்பரையில் ஆச்சாரியனாக ஆக கிடைத்தவன்,
தான் அடைந்த பாக்கியத்தை அறிந்து கொள்ளாமல் இருந்தால், அவனே
துர்பாக்கியசாலி.


'எத்தனை அருமையான சம்பரதாயத்தில் ஆச்சார்யனாக வந்துள்ளோம்' என்று தன் பெருமையை உணர்ந்து கொள்பவர்கள் மகா பாக்கியவான்கள்.

இத்தகைய குரு பரம்பரையில் வந்த குருவை ஆச்ரயித்த ஒருவன் 'ஆச்சரியன் திருவடியே கதி' என்று மட்டும் இருந்தாலேயே, பெருமாள் ஒரு கேள்வியும் கேட்காமல் வைகுண்ட வாசலை திறந்து விட்டு விடுகிறார்.

குருவின் சம்பந்தம் இல்லாமல், பக்தியில் சிறந்த, நண்பனான குகன், பெருமாளுக்கு பழம் சமர்ப்பிக்க, அவன் பக்திக்காக தொட்டு ஏற்று கொண்ட ராமபிரான், 
அதே சமயம், 
குருவை ஆச்ரயித்த சபரி, ஸ்ரீ ராமபிரானுக்கு பழம் கொடுக்க, அவளுடைய குரு பக்திக்கு வசப்பட்டு, யாரிடமும் தன் கைகளை நீட்டி வாங்காத ஸ்ரீராமர், அவள் கொடுத்த பழங்களை வாங்கி சாப்பிட்டார்.

சுயமாக பகவானிடம் பக்தி செய்து, அவர் அணுகிரஹத்தை பெறுவதை விட,
ஸத் பரம்பரையில் வழி வழியாக வரும் குருவை ஆச்ரயித்து, 'ஆசாரியன் திருவடியே கதி' என்று வாழ்ந்து விட்டால், பெருமாள் மரண வேதனை ஏற்படாமல், நம்மையும் வைகுண்டம் அழைத்து சென்று விடுவார்.
குருவே துணை நமக்கு. 
அனைவருக்கும் ஆத்ம குரு அவசியம்  தேவை.
ஸத் பரம்பரையாக ஏற்பட்ட குரு பீடத்தில், ஒரு குருவை ஆச்ரயிக்க வேண்டும். மோக்ஷத்திற்கு ஆசைப்பட வேண்டும்.
நம் பக்தியினால் மட்டுமே பெருமாளை ஆகர்ஷிக்க முடியாது. ஸ்ரீ ராமானுஜர் ஆச்ரயித்தது போன்ற ஒரு குரு பரம்பரையில் நாம் குரு சிஷ்ய சம்பந்தம் பெற வேண்டும்.
அதுவே மோக்ஷத்திற்கு வழி.


மோக்ஷம் அடையாது போனால், மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்க வேண்டியது தான்.
உலகமோ இயற்கையாகவே நம்மை பொறுத்தவரை நிலையற்றது, சுகம் நிரந்தரமாக கொடுக்காதது.
ஸ்ரீ கிருஷ்ணரும் பகவத் கீதையில், 'அநித்யம் அசுகம் லோகம்' என்று சொல்லி எச்சரிக்கிறார்.
'மோக்ஷத்திற்கு முயற்சி செய்' என்கிறார்.

ஸ்ரீ ராமானுஜர், 'மோக்ஷத்திற்கு மிகவும் எளிதான பாதை ஒரு குரு பரம்பரையில் வந்த குருவை பற்றிகொள்வதே' என்று நமக்கு வழி காட்டி விட்டார். 
பெருமாள் நமக்கு வைகுண்ட வாசலை திறந்து விட, குருவை ஆச்ரயிப்போம்.

Hare Rama Hare Krishna - Bhajan

Sandhya vandanam with meaning - morning

Sandhya vandanam with meaning - afternoon



Sandhya vandanam with meaning - evening