Followers

Search Here...

Showing posts with label அலங்கெழு. Show all posts
Showing posts with label அலங்கெழு. Show all posts

Saturday 22 February 2020

பாசுரம் (அர்த்தம்) - அலங்கெழு தடக்கை ஆயன் - திருமங்கையாழ்வார் திருபுட்குழி, திருநீர்மலை, திருவிடந்தை பெருமாளை சேர்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற் கழியுமால் என் உள்ளம் என்னும்,
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் !!
போதுமோ நீர்மலைக் கென்னும் !!
குலங்கெழு கொல்லி கோமள வல்லி
கொடியிடை நெடுமழைக் கண்ணி !
இலங்கெழில் தோளிக்
என் நினைந்து இருந்தாய்?
இடவெந்தை எந்தை பிரானே.
-- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)




இங்கு ஒரு திவ்ய தேசத்தோடு இன்னொரு திவ்ய தேசத்தை சேர்த்து கொண்டு பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

திருமங்கையாழ்வாரே  பரகால நாயகி என்ற பெண்ணாகி, தன் நாயகனான பெருமாளிடம் தீராத காதல் கொண்டு, தன் நாயகன் உகந்து இருக்கும் திவ்ய தேசங்களுக்கு சென்று தரிசிக்கலாமா என்று தன் தாயிடமே கேட்க துணிகிறாளாம்.
பெருமாளிடம் ஏற்பட்ட தீராத காதலால், இந்த பரகால நாயகிக்கு,
அவளுடைய காதலன் இருக்கும் இடம் கூட இனிக்கிறது.
அவளுடைய காதலன் இருக்கும் ஊர் கூட இனிக்கிறது.

ஆழ்வாருக்கு ஏற்பட்ட இதே அனுபவத்தை ஆண்டாளும் சொல்கிறாள் என்று பார்க்கிறோம்.

ஆண்டாள், பெருமாளிடம் காதல் கொண்டு, 'பெருமாளின் கோவில் வாசல் கதவில் கூட தனக்கு நேசம் உண்டு' என்று சொல்கிறாள்.
ஆண்டாள், திருப்பாவையில் "நிலைக் கதவம்" (கதவு) என்று வெறுமனே சொல்லாமல்,
"நேய நிலைக் கதவம்" (நேசமுள்ள கதவு) என்று குறிப்பிட்டு சொல்கிறாள் என்று கவனிக்கிறோம்.

பெருமாளின் சம்பந்தம், ஒரு ஜட பொருளின் மேல் ஏற்பட்டால் கூட, அதில் கூட நேசம் உண்டாகி விடுமாம் உண்மையான வைஷ்ணவனுக்கு.

"கோவிலை பூட்டி, பெருமாள் தரிசனம் இப்போது இல்லை" என்று சொன்னாலும்,
ஸ்ரீ ரங்கத்தில் உள்ள பக்தர்கள் "சரி.. கோவில் நடை திறந்த பிறகு பெருமாளை பார்த்து கொள்ளலாம்" என்று நகர மாட்டார்களாம்.
மாறாக,
பெருமாளுக்கு சம்பந்தப்பட்ட அந்த பூட்டிய கதவையே ஆசையோடு பார்த்துக்கொண்டு, அதன் அருகிலேயே உட்கார்ந்து இருப்பார்களாம் உண்மையான பக்தர்கள்.
இப்படிப்பட்ட வைஷ்ணவர்களுக்கு, பெருமாள் சம்பந்தப்பட்ட கதவு கூட "நேய நிலைக் கதவாக" தோன்றுமாம்.

பெருமாளிடம் பக்தி கொண்டவர்களுக்கு,
கோவில் கதவை பார்க்கும் போதே, இவர்களுக்கு ஒரு நேசம் உண்டாகுமாம்..
கோவில் கதவை பார்க்கும் போதே, இவர்களுக்கு பெருமாளின் நினைவே ஏற்படுத்துமாம்.

இப்படி காதல் கொண்டு நிற்கும் இந்த பரகால நாயகி (திருமங்கையாழ்வார்),
  • இப்பொழுது தன் நாயகன் எங்கு இருப்பார்?
  • திருபுட்குழியில் இருக்கிறாரோ?
  • அல்லது,
  • திருநீர்மலைக்கு சென்று இருக்கிறாரோ?
  • அங்கு சென்று கொஞ்சம் அவரை பார்க்கலாமா?
என்று தன் தாயிடமே துணிந்து வெட்கத்தை விட்டு கேட்கிறாளாம்.







இங்கு திருபுட்குழியை பற்றி சொல்லும் போது,
"புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்" என்று வர்ணிக்கிறார்.
இன்று கூட, திருபுட்குழி என்ற திவ்ய தேசம் வயல் சூழ்ந்து, தண்ணீர் நிறைந்த சோலையாக தான் இன்று வரை உள்ளது.

"புலங்கெழு பொருநீர்" என்ற சொல்லுக்கு 2 அர்த்தங்களை நமக்கு காட்டுகிறார் பெரியவாச்சான் பிள்ளை.

முதல் அர்த்தம்:
  • புலம் என்றால் வயல்
  • வயல்கள் நிறைந்து தண்ணீர் சூழ்ந்த, பசுஞ்சோலையாக இருக்கிறது "திருப்புட்குழி" என்று ஒரு அர்த்தம்.
விசேஷ அர்த்தம்:
  • புலம் என்றால் புலன் என்றும் அர்த்தம் உண்டு.
  • திருப்புட்குழியில் உள்ள விஜயராகவ பெருமாளை பார்த்தாலே, நமது 5 புலன்களும் புஷ்டியாகி ஆரோக்கியத்தை அள்ளி தரும் என்று இன்னொரு அர்த்தம்.
இந்த பரகால நாயகி, பெருமாளிடம் தனக்கு ஏற்பட்ட அடக்கமுடியாத காதலால், தன் அருகில் அவள் தாய் இருப்பதை அறிந்தும், பயப்படாமல் "கலப்பை போன்ற உறுதியான கைகளுடைய, யாதவ குலத்தில் உதித்த  என் நாயகன், தன்னுடைய சிவந்த உதட்டில் இலையினால் செய்யப்பட்ட சிறு ஊதுகுழல் கொண்டு நிற்க, 
இந்த காட்சி என் மனதை விட்டு அகலாமல், என் நெஞ்சம் அவர் நினைவாகவே இருக்கிறது. (அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற் கழியுமால் என் உள்ளம்).
 என் நாயகனை திருப்புட்குழி சென்று நான் காணலாமா? (புலங்கெழு பொருநீர்ப் புட்குழி)
திருநீர்மலை சென்று காணலாமா? (போதுமோ நீர்மலை)"
என்று தைரியமாக வெட்கத்தை விட்டு கேட்கிறாளாம்.

கூச்சத்தை விட்டு இந்த பரகால நாயகி கேட்கிறாள் என்பதால் "பாடும்" என்ற பதத்தை பயன்படுத்துகிறார் ஆழ்வார். - "புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்"

உலகம் என்ன நினைக்குமோ! என்ற கூச்சப்படாமல்,
பக்தன் பெருமாளிடம் தைரியமாக பக்தி செய்கிறான் என்பதையே இங்கு ஆழ்வார், தன்னை பரகால நாயகியாகவும், பெருமாளை நாயகனாகவும் ஆக்கிக்கொண்டு பாடுகிறார்.
ஸ்ரீ கிருஷ்ண அவதார சமயத்தில், ருக்மிணி தேவி 'சிசுபாலனுக்கு தன் அண்ணன் ருக்மி, தன்னை மணம் செய்து கொடுக்க முயற்சிக்கிறான்' என்றதும், பெரும் தாபத்தை அடைந்த ருக்மிணி, வெட்கத்தை விட்டு, துணிந்து ஸ்ரீ கிருஷ்ணருக்கு "காதல் கடிதம்" கொடுத்து அனுப்பி விட்டாள் என்று பார்க்கிறோம்.
ஸ்ரீ கிருஷ்ணர் "என்ன இப்படி தைரியமாக எழுதி இருக்கிறாளே ருக்மிணி?" என்று தன்னை தவறாக நினைத்து விடுவாரோ என்று, அவளே "மணந்தால் உங்களை தான் மணப்பேன் என்று எனக்கு ஏற்பட்ட தவிப்பால் தான் இப்படி துணிந்து எழுதி விட்டேனே தவிர, ருக்மிணி இப்படி வேறு ஒரு புருஷனுக்கு வெட்கத்தை விட்டு கடிதம் எழுதுவாளோ என்று கூட நினைத்து விட வேண்டாம்"
என்று தன் தாபத்தின் காரணத்தை சொல்கிறாள்.

பரகால நாயகி, தன் தாயிடத்தில் வெட்கத்தை விட்டு,
"தன் நாயகனை பார்க்க, திருப்புட்குழி போகட்டுமா? 
திருநீர்மலை போகட்டுமா?" என்று கேட்க,

இப்படி வெட்கத்தை விட்டு, தாயான தன்னிடமே "தன் காதலனிடம் செல்லலாமா?" என்று கேட்க,
தன் மகள் பரகால நாயகி (திருமங்கை ஆழ்வார்) படும் தாபத்தை  கண்டு, அவள் தாயே, தன் மகளுக்காக திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமானிடம் சென்று முறையிடுகிறாள்.

திருமங்கைஆழ்வார், தன்னையே தாயாகவும் மகளாகவும் பாவித்துக் கொண்டு,
மகள் படும் பாட்டைத் தாய் முறையிடுவது போல எம்பெருமானிடம்
முறையிடுகிறார்
"எம்பெருமானே! 
என் மகள் உங்கள் மீது காதல் பித்துப் பிடித்து அலைகிறாள். 
அழகு பொருந்திய தடக்கைகள் (தோள்) கொண்ட ஆயனாக வந்த கண்ணபிரானின் ஆம்பல் நிற வாயைச் சுவைக்கவே என்னுள்ளம் அழிகிறதென்கிறாள். 
திவ்ய தேசத்து எம்பெருமானின் பேரழகையெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்கிறாள். 
பல திவ்ய தேசத்து எம்பெருமான்களை நினைத்துப் பார்க்கிறாள். 
திடீரென அவளுக்கு புட்குழியெம்பெருமானின் நினைவு வருகிறது. 
திருப்புட்குழி எம்பெருமானை வாயாரப் பாடுகிறாள்! 
அக்கணமே, 
திருநீர் மலை எம்பெருமானின் நினைவு வருகிறது. 
திருநீர்மலைக்குப் போக மாட்டேனோ? என்று பொருமுகிறாள். 

கொல்லிமலைப்பாவை போன்றல்லவா இவள் இருக்கிறாள். 
கோமள வதனமும், கொடியிடையும், மழைமேகம்
போன்ற கூந்தலில் அழகிய மலர்களைச் சூடி, எழில்கொஞ்சும் தோள்களைக்
கொண்டு கொல்லியம் பாவை போன்ற பேரழகுபொருந்திய இவள் பொருட்டு,
நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?"என்று தன் மகள் பொருட்டு தாயொருத்தி கேட்பது போல் திருமங்கை ஆழ்வார்  கேட்டு மங்களாசாசனம் செய்கிறார்.




நாராயணன் மட்டுமே ஆண். 
அவர் முன் நாம் அனைவருமே பெண் தான்.

ஒரு பெண்ணுக்கு எப்படி பிறந்து வீடு, புகுந்த வீடு உண்டோ,
அது போல,
நமக்கு புகுந்த வீடு, வைகுண்டமே!
நமது நாதன் நாராயணனே! 

இங்கு, பரகால நாயகி என்ற பெண்ணாக ஆகி, ஆழ்வார், "நாராயணனை அடைவதே நமக்கு லட்சியமாக இருக்க்க வேண்டும்" என்று காட்டுகிறார்.

நமது பக்தியின் நிலையை கண்டு, தாயை போல ஒரு ஆத்ம குரு வந்து, நமக்காக பெருமாளிடம் பிரார்த்தித்து பெருமாளிடம் நம்மை சேர்கிறார் என்று காட்டுகிறார்.

மூன்று பக்தி நிலைகள் என்ன? என்று தெரிந்து கொள்ள...