Followers

Search Here...

Showing posts with label காளை. Show all posts
Showing posts with label காளை. Show all posts

Sunday 22 April 2018

உலகத்தில் தர்மம் எதை ஆதாரமாக கொண்டு நிற்கிறது? தர்மத்தின் நான்கு கால்கள் என்ன? பரீக்ஷித் கலி புருஷன் சரித்திரம். தெரிந்து கொள்ள வேண்டாமா?

துவாபர யுகம் முடிந்து, கலியுகம் ஆரம்பம் ஆகியிருந்த ஸமயம்.
பரிக்ஷித்து மன்னன் ஆட்சியில் இருந்தார். 

பரிக்ஷித்து, உலகத்துக்கே பேரரசனாக இருந்தார்.
பரிக்ஷித்து, அபிமன்யுவின் மகன்.
அபிமன்யு அர்ஜுனனின் மகன்.
அர்ஜுனனின் மனைவி சுபத்ரா.
சுபத்ரா கிருஷ்ணரின் தங்கை.




பரிக்ஷித்து மன்னன், ஒரு நாள் தனது நாட்டில் ரதத்தில் பவனி வந்து கொண்டிருக்கும் பொழுது, சரஸ்வதி நதிக்கரையில் ஒரு பசு மாட்டையும் , மூன்று கால்களும் வெட்டப்பட்டு ஒற்றைக் காலுடன் கண்ணீர் வடித்த நிலையில் ஒரு காளையையும் கண்டார்.
ஒற்றைக் காலில் நிற்கும் காளையை, ஒருவன் தடி கொண்டு அடிப்பதனையும் கண்டார்.

அவன் பார்ப்பதற்கு 'மன்னன் போன்று வேஷம்' போட்டிருந்தாலும், அவன் அரச குலத்திலிருந்து வந்தவன் போல் இல்லை. 

ஒரு அரசன் இது போன்று பசுவையும், காளையையும் துன்புறுத்த மாட்டான்.

கையில் காண்டீபம், வில் ஏந்திய பரிக்ஷித்து மன்னன் காளை இருக்கும் இடம் சென்றார்.
கடும் கோபம் கொண்டு அடித்தவனை பார்த்து கர்ஜித்தார் -
"என்னுடைய ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தில், இது போன்று அப்பாவி உயிர்களை இரக்கமில்லாமல் கொலை செய்ய முற்பட்ட நீ யார் ? பார்ப்பதற்கு ஒரு தேவன் போன்று ஆடை உடுத்தி இருந்தாலும், நீ செய்யும் செயலை கண்டால் நாகரீகம் தெரியாத காட்டு மிராண்டி போன்று இருக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணரும், அர்ஜுனரும் இங்கு இல்லை என்கிற தைரியத்தில் இது போன்று அப்பாவி காளையை அடிக்க துணிந்தாயோ? குற்றவாளியான நீ கொல்லப்பட வேண்டியவன்."

இப்படி சொல்லிக் கொண்டே அருகில் உள்ள பசுவின் உதவியோடு நின்று அழுது கொண்டிருந்த காளையை நோக்கி பேசலானான் -
"மூன்று கால்களையும் இழந்து, இந்த பசுவின் துணை கொண்டு நிற்கும் நீ, உண்மையிலேயே ஒரு காளை தானா, அல்லது இந்த சோக காட்சியை காண வைக்க வேண்டும் என்று காளை ரூபத்தில் உள்ள ஒரு தேவனா?
இந்த உலகம் முழுவதும் என் ஆட்சி பரவி உள்ளது. இது நாள் வரை, ஒருவரும் இது வரை இது போன்று கஷ்டப்படவில்லை, கண்ணீர் வடிக்கவும் இல்லை."

அருகில் இருந்த பசுவை பார்த்து,
"ஹே பசு மாதா, என்னுடைய ஆட்சியில் ஒருவரும் துன்பப்பட மாட்டார். நான் உயிருடன் இருக்கும் வரை, நீ எந்த விதத்திலேயும் கவலை பட தேவை இல்லை. இந்த கொலைகாரனை பார்த்து பயப்படாதே ! ஒரு உயிரை துன்புறுத்திய குற்றத்திற்கு அவனுக்கு மரணமே தண்டனை. அதை அரசனான நானே அவனுக்கு தருவேன்."

அருகில் இருந்த காளை பக்கம் திரும்பி
"நீ எந்த விதமும் தவறு செய்தவன் போன்று தெரியவில்லை. இது போன்ற கீழ் தரமான காரியங்களை ஸ்ரீ கிருஷ்ணர் இருந்த இந்த பூமியில் ஒருவரும் செய்யமாட்டர். இப்படி இருக்க உன் மூன்று கால்களையும் யார் வெட்டினார்கள்?
ஏன் அழுது கொண்டிருக்கின்றாய்?
ஏன் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கின்றாய்?
உனது மற்ற கால்கள் என்னவானது?
உன்னை இவன் ஏன் அடிக்கின்றான்?
நீ சரியான காரணம் கூறினால், இவனை நான் கொன்று விடுகின்றேன்.
எனது அரசாட்சியில்,இது மாதிரியான கொடுமைகள் நிகழ்வதனை நான் அனுமதிக்க முடியாது. என் எதிரிலே உன்னை அடித்ததனால், இவனை கொல்வதே சரி ..."
என்று தனது கூரிய இடை வாளை கையில் எடுத்தான் மன்னன்.

ஆச்சரியப்படும் விதமாக,
அந்தக் காளை பேச ஆரம்பித்தது.

"உயர்ந்த பாண்டு மன்னன் குலத்தில் இருந்து வந்த நீயும் உயர்ந்த குணம் கொண்டிருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

உங்களின் உயர் பண்பினால் தான், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் உங்களுடன் நட்பு கொள்ள ஆசை பட்டு வந்தார்.

உயர்ந்த குணம் உள்ள மன்னா! துன்பம் ஒருவனுக்கு வரும் போது, அதற்கு உண்மையான காரணத்தை நாம் அறிய முடியாது.

தன் துன்பங்களுக்கு
1. சிலர், "தானே" காரணம் என்று சொல்கிறார்கள்.
2. சிலர், விதியென்று சொல்கிறார்கள்.
3. மற்றவர்கள் அவரவர் செய்த கர்மங்களின் பலன் என்று சொல்கிறார்கள்.
4. மற்றவர்கள் இயற்கை என்றும்
5. சிலர் இது போன்ற கேள்விகளுக்கு கொடுக்கப்படும் எந்த பதிலும் காரணமாக இருக்க முடியாது என்று சொல்கிறார்கள் ....

இவைகளில் எது சரி?
துன்பங்களுக்கு காரணம் என்ன என்று நீ நினைக்கிறாய்?"
என்று மன்னன் கேட்ட கேள்விக்கு பதில் உரைக்காமல் திருப்ப பதில் கேள்வி கேட்டது.




பொதுவாக ஒருவன் துன்பத்தில் இருக்கும் போது, ஆறுதலாக ஒருவன் வரும் போது, உடனே தன் சோக கதையை சொல்லி அழுது புலம்பி, ஆறுதல் தேட, உதவி தேட நினைப்பவர்கள் தான் உலகத்தில் உண்டு.

இப்படி இருக்க, இந்த காளை காப்பாற்ற மன்னன் வந்தும், காக்க வேண்டும் என்று கேட்காமல், ஒரு ஞானியை போன்று பேசியது மன்னனுக்கு ஆச்சர்யம் அளித்தது.

ஒரு விலங்கு பேசியதும் ஆச்சர்யம் அளித்தது.
மன்னன், தன்னிடம் பேசுவது சாதாரண காளை அல்ல என்பதனை உணர்ந்தான்.

மேலும், தர்ம தேவதையே காளையாய் வடிவம் கொண்டு வந்துள்ளது என்பதனையும் உணர்ந்தான்.

பூமி மாதாவே பசுவாய் வடிவம் கொண்டு வந்துள்ளது என்பதனையும் உணர்ந்தான்.

"காளை உருவில் இருக்கும் தர்ம தேவதையே, நீ இப்படி பேசியதற்கு காரணம் புரிகிறது.
குற்றம் செய்தவனும், குற்றம் இவன் செய்தான் என்று காட்டிக் கொடுப்பவனும், உண்மையில் அனைவரது உள்ளேயும் அந்த பகவான் உள்ளார் என்று அறியாமையால் தான் செய்கின்றனர்.

அதனால் தான் நான், "யார் உன்னை துன்பப் படுத்தினார்கள்?" என்று கேட்டதற்கு

"இவன் தான்" என்று கூற மறுக்கிறாய்.

நீ தர்ம தேவதை என்று உணர்ந்தேன்.

இந்த உலகத்தில் தர்மம் நான்கு கால்கள் கொண்டு தான் நிலை பெற்று இருக்கிறது என்று அறிவேன்.

சத்ய யுகத்தில் உனக்கு "தவம், நன்னடத்தை, இரக்கம், உண்மை" என்ற நான்கு கால்களுடன் இருந்தாய்.

பின்பு காலம் செல்ல செல்ல, தற்பெருமை, ஆசை, அகங்காரம் இந்த மூன்றின் காரணமாக, நீ உன்னுடைய மூன்று கால்களான "தவம், நன்னடத்தை, இரக்கம்" போன்றவற்றை இழந்து, "உண்மை" என்ற காலுடன் மட்டும் இந்த கலியில் நிற்கிறாய் என்று உணர்ந்தேன்.

அதனையும் பொய் என்ற பிரம்பு கொண்டு அடித்து, ஒரு காலையும் பறிக்க முயல்பவன் "கலி புருஷன்" என்றும் அறிந்தேன்.
"பூமி" என்ற பசுவும் செய்வதறியாது கவலை மிகக் கொண்டு பார்த்துக் கொண்டு நிற்கிறது என்றும் அறிந்தேன்."
இவ்வாறு தர்மம் தேவனையும், பூமி மாதாவையும் சமாதானப் படுத்திய மன்னன், சினம் கொண்டு, தன் வாளை உருவி, கலி புருஷனை நோக்கி கொல்ல முனைந்தார்.

இதனால் அரச வேடத்தில் இருந்த "கலி புருஷன்" பயங்கொண்டு, தன் நிஜ ரூபத்தில் பரிக்ஷித்து மன்னன் காலில் விழுந்து மன்றாடினான்.




1. ஏழைகளும்,
2. தஞ்சம் புகுந்தவர்களும்,
3. பாராட்டப்பட வேண்டியவர்களும்
ஒரு அரசனால் கனிவாக காப்பாற்ற படவேண்டியவர்கள்.

இதை அறிந்த பரிக்ஷித்து மன்னன், காலில் விழுந்த கலி புருஷனை பார்த்து சொன்னார்

"என் காலில் விழுந்து விட்டதால் நீ உயிருக்கு பயப்பட வேண்டாம். ஆனால் உயிர் ஹிம்ஸை செய்யும் நீ, பண்பாடு இல்லாதவன். இங்கு உள்ள அனைவரும், தெய்வம் எங்கும் எதிலும் இருக்கிறார் என்று அறிந்தவர்கள்.

காற்று உள்ளும் புறமும் எங்கும் உள்ளது போல, அவர் இல்லாத இடம் இல்லை. அதனால் எந்த உயிரையும் ஹிம்சிக்க மாட்டார்கள்.

இப்படி இருக்க, உன்னை போன்றோர் இந்த உலகத்தில் இருப்பது பெரிய தீங்கு.
நீ உடனே இந்த உலகத்தை விட்டு சென்று விடு"
கை கூப்பிய வண்ணம் கலி புருஷன்
"உலகில் கலியுகம் துவங்கிவிட்டதால் கலி புருஷனாகிய நான், இறைவனின் கட்டளையால் நானும் இருந்தாக வேண்டியவனாகிறேன்.

உங்கள் அரசாட்சியின் கீழ் நான் உங்களுக்கு அடி பணிகிறேன்.
என்னால் ஒரு போதும் மக்களுக்கும் தீங்கு விளையாது. ஓ மன்னனே! நான் சில இடங்கள் நிரந்தரமாக தங்க, தாங்கள் தயை கூர்ந்து அனுமதிக்க வேண்டும்." என்று கேட்டார்.

அதற்கு மன்னன் "சூதாட்டம் (பொய்), மது, விபச்சாரம், பிராணிகள் கொல்லப்படும்" இடம் ஆகிய இடங்களில் தங்க அனுமதிக்கின்றேன் என்றார்.

கலி புருஷன் மேலும் ஓரிடம் வேண்டும் என்று கேட்டார்.

மன்னன் "பேராசை (தங்கம்) கொண்ட இடத்திலும்" நீ தங்கிக் கொள்ளலாம் என்றார்.

பொய் சொல்லுதல், மது அருந்துதல், கொலை செய்தல், பேராசை, காமம் கொண்டு தவறு இழைத்தல் ஆகியன கலியின் குணங்களாயின.
இதுவே பஞ்ச மகா பாவங்கள் ஆகும்.
இதில் ஒன்று செய்தால் கூட கலி புருஷன் ஆட்கொள்வான்.
"நேர்மையாக வாழ விரும்புபவன்" இந்த ஐந்தையும் தவிர்த்து வாழும் போது, அவனுக்கு கலியின் தாக்கம் உண்டாகாது என்றும், இறைவன் அருள் கிட்டும் என்பதனை உணரவேண்டும் என்றார் மன்னன்.




தக்க உரையினால் காளைக்கு ( நீதி தேவதைக்கு ) இழந்த மூன்று கால்கள் திரும்பக் கிடைத்தன.

பசு வடிவில் நின்று கொண்டிருந்த பூமி மாதாவும், அரசனின் பதிலுரையால் திருப்தி அடைந்து மறைந்து விட்டது.

ஸ்ரீ கிருஷ்ணர்,
"எப்பொழுதெல்லாம் தர்மம் வீழ்ச்சி அடைகிறதோ அப்பொழுது எல்லாம் நான் அவதாரம் செய்கிறேன்" என்கிறார்.

தர்மம் எப்பொழுது வீழ்ச்சி பெரும் என்ற கேள்விக்கு, இந்த நிகழ்ச்சி நமக்கு விடை கொடுக்கிறது.

தர்மம் என்ற மேடை, "தவம், நன்னடத்தை, இரக்கம், உண்மை" என்ற நான்கு கால்களுடன் நிற்கிறது.
இந்த தர்மத்தின் மீது தான் தலைவனாக நிற்கிறார் "பெருமாள்". 
எந்த கோவிலிலும், நம் வீட்டிலும் உள்ள தெய்வ விக்ரஹங்கள் உள்பட ஒரு மேடை மீது நிற்பது இதனை தான் விளக்குகிறது.

எதிலும் காரணம் இல்லாமல் ஒரு ஹிந்து செய்ததாக இல்லை.
"தெய்வத்தை வழிபடும் போது" இதையே தியானிக்க வேண்டும்.

மனிதனின் "கடமை" இந்த நான்கு கால்களான
1. தவம் (மன கட்டுப்பாடு),
2. நன்னடத்தை,
3. இரக்கம்,
4. உண்மை
போன்றவற்றை கடை பிடிப்பதே.

அதனால் தான் தெய்வத்திடம் காலில் விழுந்து வணங்குவது என்ற பழக்கம் நமக்கு உள்ளது.
இந்த நான்கை கடை பிடிப்பவன், தர்மத்தை கடை பிடிப்பவன் ஆவான்.

தர்மத்தை காப்பவனுக்கு இறை அருள் கிட்டும். தர்மம் தலை காக்கும்.

கலியில் மூன்று கால்கள் இழந்த நிலையில் இருந்த தர்ம தேவன், மறைமுகமாக சொல்வது என்ன?

இனி வரும் மனிதர்கள் தவம், நன்னடத்தை, இரக்கம் குன்றி காணப்படுவர்.

ராவணன், ஹிரண்யகசிபு, கம்சன் போன்ற பொல்லாதவர்கள் கூட போன யுகங்களில் தவம் செய்யும் வலிமையுடன் இருந்தனர். பல ஆண்டுகள் உடலை வருத்தி, ப்ரம்ம தேவனையும், சிவனையும் நேரில் காணும் வலிமை கொண்டிருந்தனர்.

பொதுவாக தவம் செய்பவர்கள் உடலையும், புலன்களையும் அடக்கும் சக்தி உள்ளவர்கள்.

இனி இந்த கலியில் தவம் மிகவும் குன்றி போகும். புலன்களை அடக்குவது முடியாத காரியமாகி போகும்.

ஏகாதசி போன்ற நாளில், ஒரு நாள் கூட சுத்த பட்டினி இருக்க முடியாதவர்களாக, சக்தி அற்றவர்களாக இருப்பர்.

மூன்று வேளை சாப்பிட்டாலும், இன்னும் பசி என்பர், சோம்பேறிகளாக இருப்பர்.
இனி இந்த கலியில் நன்னடத்தையும் (தூய்மை) மிகவும் குன்றி போகும். கோவிலுக்கு குளித்து விட்டு தான் செல்ல வேண்டும், அசுத்தமான காலங்களில் பெண்கள் வீட்டில் வேலை செய்யாமல் ஓய்வு எடுக்க வேண்டும், ஆண்கள் வீட்டு வேலைகளை இந்த சமயங்களில் செய்யலாம். தினமும் வாசலையும், வீட்டையும் சுத்தமாக தானே வீட்டில் உள்ளவர்கள் செய்ய வேண்டும். மன தூய்மை வேண்டும், புறத் தூய்மையும் வேண்டும். இவை எல்லாம் இனி இந்த கலியில் கெடும் என்று உணர்த்தினார். கலி ஆரம்பித்து 5000 வருடங்களே ஆகியுள்ள நிலையில் இதன் தாக்கம் இப்போதே உள்ளது. கலி யுகத்தின் மொத்த வருடமோ 4,32,000 வருடங்கள். இனி இன்னும் எப்படி எல்லாம் கெடும் என்று தெரிகிறது.

இனி இந்த கலியில் இரக்கம் என்ற குணமும் கெட்டு போகும். பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் உயிருடன் இருக்கும் போது மட்டுமின்றி, இறந்த பின்பும் நன்றி உணர்வுடன், தான் உயிருடன் இருக்கும் வரை திவசம் செய்த இவர்கள் குடும்பத்தில் வரும் மனிதர்கள், இருக்கும் போதே அனாதையாக தாய் தந்தையை விட்டு விட்டுவர்.




பண மோகம் தலை விரித்தாடி, தன் சொந்தங்கள் கஷ்டப் பட்டாலும் பார்த்து கொண்டு தான் இருப்பர்.

இருக்கும் போதே தாய், தந்தைக்கு சோறு போடாதவன், கொல்லி வைக்காதவன், திவசம் மட்டும் செய்து விடுவானா? தன் குறையை மறைக்க நாத்தீகமும் பேசுவான். சாஸ்த்திர பொய் என்று பேசி தன்னை நியாயப்படுத்த முனைவான்.

முதலாளிக்கு தொழிலாளியிடம் இரக்கம் இருக்காது. தொழிலாளிக்கு முதலாளியிடம் இரக்கம் இருக்காது. பணம் ஒன்றே அனைவருக்கும் குறிக்கோள் என்று இருப்பர்.
இப்படி மூன்று கால்களும் (தவம், நன்னடத்தை, இரக்கம்) தேய்ந்து போகும் என்பதை கலியின் ஆரம்பத்திலேயே தர்ம தேவன் உரைத்தான்.

உண்மை என்ற ஒரு கால் மட்டும் இந்த கலியில் இன்னும் உயிர் வாழ்கிறது என்று தர்ம தேவன் உணர்த்தினார்.

உண்மை இந்த உலகில் உள்ளதா என்று நமக்கு கேள்வி எழும்.

இந்த உண்மை நம்மை மட்டும் குறித்து பேசப்படவில்லை. மனிதன் தவம், நன்னடத்தை, இரக்கம் போன்றவற்றை இழந்து மனித சமுதாயத்துக்கும், தேவர்களுக்கும், பூமிக்கும் செய்யாத கேடுகள் எல்லாம் செய்த போதிலும், பூமி மாதாவும், தேவர்களும் அந்த நாராயணருக்கு பயந்து, தன் கடமையை பொறுத்து கொண்டு செய்வார்கள் என்பதை இது உணர்த்துகிறது. உண்மை என்ற சத்தியம் இவர்களால் கலியில் நிலைக்கும்.

மனிதன் விடி காலையில் எழுந்திருக்கிறானா, சூரிய தேவனுக்கு, சோம தேவனுக்கு, குரு தேவனுக்கு, சுக்ரன், சனீஸ்வரனுக்கு, அங்காரகம் (செவ்வாய் தோஷம்) தேவனுக்கு, புதன் தேவனுக்கு நன்றி சொல்கிறானா, உண்மையாக தான் இருக்கிறானா என்று எதிர் பார்க்காமல், சத்தியத்திற்கு கட்டுப்பட்டு தேவர்கள் தன் கடமை செய்வர்.

பூமியில் எங்கும் வெடி வைத்தும், குழி தோண்டியும், பூமியை வைத்து பணம் சம்பாதித்தும் இந்த கலியில் பூமி மாதாவை ஹிம்சிப்பர். இருந்தும் பொறுமை காத்து, நில நடுக்கம், விளைச்சல் இல்லாமல் செய்து உணவு பஞ்சம் செய்யாமல் பூமி மாதா தன் சத்தியத்தின் வழி நடப்பாள்.




சில இடங்களில் அசம்பாவிதம் காண்பது, நம்மை எச்சரிக்கவே !

சூரிய தேவன் இன்றுவரை தன் நிலையில் இருந்து நம் அருகில் வராமல் இருப்பதே அவர் தன் சத்தியத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது. இதையே தர்ம தேவன் ஒரு கால் மட்டும் கலியில் இருப்பதாக காட்டினார்.