Followers

Search Here...

Showing posts with label செய்தாலும். Show all posts
Showing posts with label செய்தாலும். Show all posts

Tuesday 3 October 2017

தவறு செய்தாலும் பரிகாரம் கேட்காத உத்தமர்கள் - பரிக்ஷித், தசரதர்.. நல்லவர்கள் சில சமயம் செய்யும் தவறை, நாம் ஒரு போதும் சொல்லி காட்ட கூடாது


தவறு செய்தாலும், துக்கம் வந்தாலும், பரிகாரம் (பாவ மன்னிப்பு) கேட்காத பக்தன்:

கலி ஆரம்ப சமயம்:
வேட்டையாட சென்ற பரீக்ஷித், ஏதோ  ஒரு கோபத்தில் சமீகர் என்ற ரிஷி மீது, அங்கு இருந்த செத்த பாம்பை அவர் கழுத்தில் போட்டு விட்டு, சென்று விட்டார்.


ரிஷியின் 7 வயது மகன்  ஸ்ருங்கி இதை பார்த்து, 'இப்படி செய்தவன் 7ஆம் நாள் தக்ஷகன் என்ற பாம்பு கடிக்க கடவது' என்று சபித்துவிட்டான்.

அரண்மனை சென்றிருந்த பரீக்ஷித் "இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டோமே! அர்ஜுனனின் பேரன், அபிமன்யு மகனாக, ஸ்ரீ கிருஷ்ணரை குல தெய்வமாக கொண்ட இந்த பரம்பரையில், நாம் பிறந்து, எப்படி இப்படி ஒரு காரியம் செய்தோம்?
தன் தாத்தா 'தர்மபுத்திரர் யுதிஷ்டிரர்' அரசாண்ட இந்த அரசாட்சியில், நாம் இப்படி ஒரு அதர்ம காரியத்தை செய்து விட்டோமே!
மக்கள் தவறு செய்தால், அரசன் தண்டனை கொடுப்பான். அரசனான நானே செய்த இந்த குற்றத்துக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?
இந்த அரசனுக்கு, பகவானே, நீயே தகுந்த  தண்டனை கொடு"
என்று மிகவும் மனம் வருந்தி கேட்டுக் கொண்டார்.

இந்த சமயம், அங்கு வந்த சமீகரின் சிஷ்யர்
'7ஆம் நாள் தக்ஷகன் என்ற பாம்பு கடிக்க கடவது என்று சமீகரின் மகன் உங்களை சபித்துவிட்டார், இதை உங்களுக்கு தெரிவித்து விட சொன்னார்'
என்று சொல்லிவிட்டு சென்றார்.


கலியில், சில சமயங்களில் மிகவும் நல்லவர்களும், சில தவறு செய்து விடுவார்கள்.

இவர்கள் நல்லவர்களாக இருப்பதால், இப்படி செய்தோமே!! என்று பிறகு  வருந்தவும் செய்வாரகள். இது கலியின் தோஷம்.

ஆகையால், நல்லவர்கள் சில சமயம் செய்யும் தவறை, நாம் ஒரு போதும் சொல்லி காட்ட கூடாது.

இவர்கள் பொதுவாக எத்தனை நல்லவர்களாக இருந்தார்கள் என்று நினைத்து, கலியில் சில சமயம் நல்லவர்களின் புத்தியும், அவர்களையும் மீறி செயல் படுத்த செய்து விடும் என்று அவர்கள் தவறுகளை நம் மனதில் நிறுத்தி  கொள்ளாமல், தள்ளி விட வேண்டும்.

இப்பொழுது ஒரு கேள்வி!
சபித்த விஷயத்தை எதற்காக தன் சிஷ்யர்களை விட்டு உடனே சொல்ல சொன்னார்? சொல்லாமல் இருந்திருக்கலாமே?
இதற்கு காரணம், சாபம் பலித்தால், இன்னும் 7 நாளில் அரசன் மடிந்து விடுவான்.
அரசன் இல்லாத நாடு என்ன நிலையாகும்?? மக்கள் கஷ்டப்படுவார்கள். நல்லவர்களை  காத்த அரசன் போனால், தீயவர்கள் பெருகுவார்கள். அதர்மம் பெருகும்.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான், சமீகர் விஷயத்தை உடனே பரீக்ஷித்திடம் சொல்ல சொன்னார்.

பொதுவாக உலகில் அனைவருக்கும் துன்பம் வருகிறது.
துன்பத்திற்கு  காரணம், அவன் இந்த ஜென்மத்திலோ, போன ஜென்மங்களிலோ செய்த கர்மாவே, செயல்களே காரணம்.

தெரிந்தோ தெரியாமலோ, அகலிகை போன்ற, நலகூபுர போன்ற தேவர்கள் கூட சில சமயம் தவறு செய்து சாபத்தை வாங்கினர். 

சாபம் கொடுத்தவர்களிடமே இவர்கள் சென்று, பரிகாரம் கேட்டு, அந்த சாபத்திலிருந்து தப்பித்து உள்ளனர். 
அகலிகை 'கல்லாக போ' என்று சபிக்கப்பட்டதும், பரிகாரம் கேட்க, ஸ்ரீ ராமரின் பாத தூளி பட்டால், சாபம் விலகும் என்று பரிகாரத்தை அறிந்தாள்.

இப்படி சாபத்துக்கு பரிகாரம் உண்டு என்பதால், ஒரு வேளை, பரீக்ஷித் மகாராஜன் பரிகாரம் கேட்டால், பரிகாரம் சொல்லி காப்பாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தான், சமீகர் தன் சிஷ்யனை அனுப்பி வைத்தார்.

சரித்திரத்தை ஆதியில் இருந்து பார்க்கும் போது, தான் செய்த தவறுக்கு, வரும் கஷ்டத்தை, சாபத்தை, பரிகாரம் கேட்காமல் ஏற்றுக்கொண்டவர்கள் இருவர் மட்டுமே!!

  1. ஒருவர், ஸ்ரீ ராமரின் தந்தை 'தசரதர்',
  2. மற்றொருவர், 'பரீக்ஷித்'.

வேட்டையாட வந்த தசரதர், "யானைதான் தண்ணீர் குடிக்கின்றது" என்று நினைத்து, ஒலி வந்த திசை நோக்கி அம்பு விட்டார்.
ஆனால், தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த ஸ்ரவனன் என்ற 16 வயது சிறுவனை தவறுதலாக அம்பு எய்து கொன்றுவிட்டார்.


"தான் செய்த தவறுக்கு பகவானே ஒரு தண்டனை தரட்டும்" என்று நினைத்த தசரதர், அவர் நினைத்தது போலவே, ஸ்ரவனனின் கண் தெரியாத அவர் தந்தை, "எப்படி நாங்கள் எங்கள் குழந்தையை இழந்து, உயிரை விட போகிறோமோ, அதே போல, நீயும் உன் பிள்ளைகளை இழந்து உயிரை விடுவாய்" என்று சபித்தார்.


"செய்த தவறுக்கு, சரியான தண்டனை கிடைத்தது" என்று, தசரதரும் அவரிடம் பரிகாரம் கேட்கவில்லை.
அதே போல, இங்கு பரீக்ஷித் மகாராஜனும் பரிகாரம் கேட்கவில்லை.

"உயிரே போகும் துக்கம் வந்தாலும், இதற்கு தெய்வம் தான் காரணம், தெய்வம் உதவி செய்யவில்லை" என்று உண்மையான பக்தன் சொல்ல மாட்டான்.
மாறாக,
"இது என் கர்மத்துக்கான வினை" என்று மேலும் பகவானை நெருங்குவான், பக்தி செய்வான்.

"உயிரே போகும் துக்கம் வந்தும், பகவானை குறை சொல்லாமல், பக்தி செய்தவர்" பரீக்ஷித் மகாராஜன்.
இதுவே நமக்கு பாடம்.

சமாதானம் அடைய முடியாமல், மனம் வருந்திக் கொண்டிருந்த பரீக்ஷித், "தனக்கு இப்படி ஒரு தண்டனை தகும்" என்று ஏற்றுக்கொண்டார்.

"உடனே தக்ஷகன் கடித்து சாகாமல், தனக்கு 7 நாள் அவகாசம் கொடுத்து இருக்கிறாரே!!" என்று மகிழ்ந்து, அப்படியே ராஜ்யத்தை மந்திரிகளிடமும், தன் மகன் ஜனமேஜெயனுக்கு விட்டு விட்டு, கங்கை நதி ஓரம் வந்து அமர்ந்தார்.

அங்கு வந்த ரிஷிகள், ஒவ்வொருவராக, நடந்த விஷயத்தை பற்றி விசாரிக்க முயல, பரீக்ஷித் விசாரிப்பதை  நிறுத்தச்சொன்னார்.

பொதுவாக, ஒருவனுக்கு துக்கம் வரும் போது, தன் கஷ்டத்தை பற்றி குறைந்த பட்சம் யாராவது விசாரிப்பார்களா?? என்று எதிர்பார்ப்பார்கள். இது இயற்கை.

இறந்தவன் வீட்டில் சென்று, துக்கம் விசாரிப்பார்கள்.
துக்கம் விசாரிப்பதால், இறந்தவன் வரப்போவதில்லை.

விசாரித்தால், துக்கத்தில் உள்ளவனுக்கு ஒரு மன ஆறுதல் கிடைக்கும்.

ஞானி போன்ற வைராக்ய நிலையில் இருந்த பரீக்ஷித்துக்கு, இப்படி ரிஷிகள் வந்து விசாரிப்பது தேவைப்படவில்லை.

"இந்த சாபம் தனக்கு ஏற்பு உடையது தான்" என்று துக்கம் அடையாமல், இனி இந்த 7 நாளில் என்ன செய்ய வேண்டும்? எதை உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டும்?
என்ற கேள்வியுடன் அமைதியாக அமர்ந்திருந்தார்.

வந்த ரிஷிகள், பரீக்ஷித்தின் பக்குவ நிலையை பார்த்து,
'நாங்கள் இவரை சாந்தமாக ஆக்க விசாரிக்க வந்தால், இவரோ, 7ஆம் நாள் மரணம் என்று தெரிந்தும், சாந்தமாகவே இருக்கிறாரே' 
என்று ஆச்சர்யப்பட்டனர்.

ரிஷிகள் கூட்டம், பரீக்ஷித் மகராஜனை சூழ்ந்து அமைதியாக அமர்ந்தனர்.

மனிதராக பிறந்தவன் உண்மையில் எதை தெரிந்து கொள்ள வேண்டும்? என்ற கேள்வியுடன் இருந்த பரீக்ஷித் மகாராஜனை பார்க்க வ்யாசரின் புத்திரர் 'சுகர்' வந்தார்.
7 நாளும் பாகவதம் சொன்னார்.
பாகவதம் கேட்டதனாலேயே பரீக்ஷித் முக்தி பெற்றார்.

குருவே துணை