Followers

Search Here...

Friday 6 April 2018

நல்லவர்களுக்கு சில சமயம் தீய குணம் கொண்ட குழந்தைகள் பிறப்பது ஏன்? காரணத்தை தெரிந்து கொள்வோமே.

சொன்ன சொல் மீறாத தசரதனுக்கு, சத்ய ஸ்வரூபமாக ஸ்ரீராமர் பிறந்ததில் ஆச்சரியமில்லை. 
நல்லவர்களுக்கு நல்ல பிள்ளைகள் பிறப்பதில் ஆச்சரியமில்லை.

பிறர் மனைவியை அபகரிக்க நினைத்த ராவணனுக்கு, அவனை போன்ற கீழ் தரமான, பிள்ளையாக பிறந்தான் இந்திரஜித். 
அப்பன் செய்த தவறுக்கு தானும் உடந்தையாக இருந்து, உயிரை விட்டான். 
கெட்டவனுக்கு கெட்ட பிள்ளைகள் பிறப்பதும் ஆச்சரியமில்லை.




சில சமயங்களில், நல்ல குடும்பத்தில் ஒரு அயோக்கிய பிள்ளை பிறந்து விடுகிறான். 

அயோக்கியனுக்கு, சில சமயம் நல்ல பிள்ளை பிறந்து விடுகிறான். 
கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கு, நேர் மாறாக நாத்தீகன் பிள்ளையாக பிறந்து விடுகிறான். 

இது ஏன் நடக்கிறது? இதன் ரகசியம் என்ன? 
ஹிரண்யகசிபுவுக்கு, ;பிரகலாதன் என்ற விஷ்ணு பக்தன் எப்படி மகனாக பிறந்தான்'? 
பிரகலாதன் பிறப்பை, கவனிக்கும் போது, இதன் ரகசியம் புலப்படுகிறது.

ஹிரண்யகசிபு நாத்தீகனை விட ஒரு படி மேல். "நானே கடவுள்" என்று சொல்லிக்கொண்டான். 
சொன்னது மட்டுமல்ல, அதை நிரூபித்தும் காட்டினான். 
ப்ரம்மா, சிவன் உட்பட அனைத்து தேவர்களையும் அடக்கி, க்ஷீராப்தி என்ற பாற்கடலுக்கும் சென்று, அந்த விஷ்ணுவாகிய நாராயணனையும் அடக்கி விடலாம் என்று, தன் தவ வலிமையால் சென்று பார்த்தான். 

விஷ்ணு மறைந்து விட, தன் எதிரி 'அந்த நாராயணன் ஒருவனே, மற்ற தேவர்கள் எல்லாம் எனக்கு அடிமை' என்று உலகிற்கு காட்டி, "நான் கடவுள்" என்று நிரூபித்தே விட்டான். 



தன்னிடம் சிக்காத விஷ்ணுவுக்காக காத்திருந்தான். 
இப்படி தேவர்களும், சிவனும், பிரம்மாவும் கூட எதிர்க்க முடியாத சக்தி கொண்ட ஹிரண்யகசிபுவை, சாதாரண பூலோக ஜனங்கள் என்ன செய்து விட முடியும்? 
உலகத்தையே ஆட்டிப் படைத்தான்.

இவனே பல லட்ச வருடங்கள் "தானே கடவுள்" என்று உலகை ஆண்டு வந்தான். 
உலக மக்கள் "நாமோ நாராயணா" என்ற சொல்லை கூட மறந்து விட்டனர். 
அனைவரும்  "ஹிரண்யகசிபுவே நம:" என்று சொல்லும் அளவிற்கு, நிலைமை ஆகி விட்டது.

இப்படி எதிரிகளே இல்லாத ஹிரண்யகசிபுவுக்கு, அவன் பெற்ற பிள்ளை, இவனுக்கு நேர் எதிராக இருந்தான். 

ஹிரண்யகசிபுவை "கடவுள்" என்று சொல்ல மறுத்தான் பிரகலாதன் 

இதை விட ஆச்சர்யம், உலகமே நாராயணா என்ற சப்தத்தை கூட மறந்து இருந்த நிலையில், "நாராயணனே எங்கும் உள்ளார். அவரே பரமாத்மா" என்று தைரியமாக சொன்னான். 
இப்படி மகா கெட்டவனுக்கு, எப்படி பக்த பிரகலாதன் பிறந்தான்? 
நாரதர், பிரகலாதன் கருவில் இருக்கும் போதே, அணுகிரஹம் செய்தார் என்பது ஒரு விஷயம்.

அதற்கு முன் நடந்த சம்பவமே உண்மையை நமக்கு விளக்குகிறது.    

ஹிரண்யகசிபு, தன் சகோதரன் "ஹிரண்யாக்ஷன்" இறந்து விட்டான் என்று தெரிந்ததும், நாராயணன் மீது கடும் கோபம் கொண்டான். 

அந்த விஷ்ணுவை எப்படியாவது கண்டுபிடித்து, அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், மேலும் தவம் செய்து தன் வலிமையை கூட்டிக்கொள்ள நினைத்தான்.




அதற்காக தன் அரண்மனையை விட்டு, தவம் செய்ய காட்டுக்கு கிளம்புகிறான்.
ஏற்கனவே இவன் சம்பாதித்து உள்ள பலம் அதிகம். 

இன்னும் பலம் பெறுவானானால், இன்னும் பல லட்ச வருடம் இவனை எதிர்க்க ஆளில்லாமல் போய் விடும் என்று நினைத்த, நாரதர், தன்னுடன் பர்வத முனியையும் அழைத்து கொண்டு, இரண்டு கிளியாக மாறி ஹிரண்யகசிபு அரண்மனை வாசலில், ஒரு மரத்துக்கு மேலே, அவன் பார்க்கும் விதமாக வந்து அமர்ந்தனர். 

தவத்திற்காக அரண்மனையை விட்டு, வெளியே வந்து ஹிரண்யகசிபுவை பார்த்தவுடன், "நாராயணா, நாராயணா" என்று பறவை ரூபத்தில் இருந்து கூவினர்.

இதை கேட்ட ஹிரண்யகசிபு, மகா ஆத்திரம் வந்தது. "சீ.. இது என்ன கெட்ட சகுனம்" என்று நினைத்தான்.
"யாரை அழிக்க நினைத்தோமோ, அவன் பெயரை கேட்க நேர்ந்ததே" என்று கோபம் அடைந்தான். "சகுனம் சரி இல்லை" என்று நினைத்தான்.

"இந்த சமயத்தில் தவம் செய்ய போக வேண்டாம், நாளை போகலாம்" என்று அரண்மனை திரும்பி விட்டான்.

திரும்பி வந்த ஹிரண்யகசிபு, தன்  மனைவி "கயாது" இருக்கும் அந்தப்புரம் சென்றான். 

அந்த பறவைகள் சொன்ன, நாராயண சப்தம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க,
"இப்படி என் தவம் செய்ய முடியாமல், இந்த நாராயண சப்தம் கேட்க நேர்ந்ததே" 
என்று நினைத்து கொண்டே இருந்தான்.

இந்த நினைவு மனதை விட்டு நீங்காமல், "இப்படி பக்ஷிகள் நாராயணா என்று சொல்லி என் தவத்தை இன்று தடுத்து விட்டதே !!" என்ற நினைவுடனேயே அன்று இரவு தன் மனைவியுடன் சேர்ந்தான்.

கயாது மிக நல்லவள். 
அந்த சமயத்தில் ஹிரண்யகசிபுவும் "நாராயணா என்று சொல்லி என் தவம் கெட்டு விட்டதே!!,  நாராயணா என்று சொல்லி, என் தவம் கெட்டு விட்டதே!!" 
என்ற நாராயண நினைவுடனேயே தன் மனைவியுடன் சேர்ந்ததால், பக்த பிரகலாதன் பிறந்தான். 
அதனால் தான், நம் சாஸ்திரம் 'கணவன் மனைவி சேரும் போது கூட, நல்ல மனதுடன், தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும்' என்று வழி சொல்கிறது.

'கணவனும், மனைவியும் எந்த சிந்தனையில் அந்த சமயத்தில் இருக்கிறார்களோ, அந்த குணத்திற்கு ஏற்ற ஆத்மாக்கள் இவர்களுக்கு குழந்தையாக பிறக்கிறது' என்கிறது நம் சாஸ்திரம்.

இதன் காரணமாக தான், நல்லவர்களுக்கு கூட, சில கெட்ட பிள்ளைகள் பிறந்து விடுகின்றனர். 

ஹிந்துவாக இருப்பதால், நம்மை வழி நடத்த, நம் சாஸ்திரங்கள் ஒவ்வொரு சமயமும் நமக்காக நல் வழிகளை காட்டுகிறது. 

வாழ்க ஹிந்துக்கள். 


Tuesday 3 April 2018

கல் தெய்வமாகி விட முடியுமா?

கல் தெய்வமாகி விட முடியுமா?
 நாம் குப்பை செடி என்றும் ப்ரயோஜனம் இல்லாத செடி என்று நினைக்கும் இலைகளை, ஒரு மருத்துவன் கையில் எடுக்கும் போது, அதை ஏதோ செய்து, ப்ரயோஜனம் இல்லாத செடி என்று நினைத்த நமக்கே, உடல் உபாதை வரும் போது, சாப்பிட சொல்கிறான். நோய் விலகுகிறது.

சாதாரண மனிதன் செடி தானே என்று நினைக்கிறான்.
அதே செடியை, தன் கை பக்குவத்தால், மருந்தாக்கி, அந்த மனிதனுக்கே கொடுத்து விடுகிறான் மருத்துவன்.

அதேபோல,

சாதாரண மனிதன் கல் தானே என்று நினைக்கிறான்.
அதே கல்லை, தன் பக்தியாலும், தவத்தாலும் எங்கும் உள்ள தெய்வத்தை அதில் நிலைநிறுத்தி, சாதாரண மக்களும் வந்து பார்த்து, கேட்கும் வரங்களை கொடுக்குமாறு வரமும் வாங்கி, காண முடியாத, எங்கும் உள்ள தெய்வத்தை, இங்கு பூரணமாக இருக்கிறார் என்று உணர செய்து, அந்த சாதாரண மனிதனுக்கே கொடுத்து விடுகிறார்கள் ஞானியும், ரிஷியும், தேவர்களும்.

மகாபலிபுரத்தில்,  மிகவும் ஆச்சர்யமான அழகான சிவனின் சிலைகளை செதுக்கி விற்பனைக்கு வைத்துள்ளனர் சிற்பிகள். இந்த அற்புதமான சிலைகளை கண்டால் சிலை என்று தான் தோன்றுமே தவிர, தெய்வம் என்று தோன்றாது.

பார்க்கும் கல்லை எல்லாம் தெய்வம் என்று சொல்லும் முட்டாள் அல்ல பாரத தேச ஹிந்துக்கள்.

ஆனால், அழகே இல்லாமல், லிங்கமாக கர்பக்ரஹத்தில்  இருக்கும் சிலையை கண்டால் மட்டும் தெய்வம் என்று தோன்றும். ஆச்சர்யம் !!

இந்த கல்லுக்கு மட்டும் எதனால் தெய்வம் என்ற ஸ்தானம் கிடைத்தது?

எந்த கல்லை, ஒரு மகான், ஒரு ஞானி, ஒரு ரிஷி, ஒரு பக்தன் தன் பக்தியால் தெய்வ பிரதிஷ்டை செய்கிறானோ, அந்த கல் தெய்வ சாந்நித்யம் பெறுகிறது.

கல் தானாக தெய்வமாகவில்லை.
ஒரு ஞானியின் பக்தியால்,  தெய்வம் கல்லுக்குள் பிரவேசிக்கிறது.

நமக்கு எளிதில் தெய்வ அருள் கிடைக்க, ஞானிகளும் மகான்களும் செய்த பெரிய உபகாரம் இது.

அதனால் தான், நம் சாஸ்திரம், ஒரு ஞான குருவும், இஷ்ட தெய்வமும் ஒரு சேர வந்தால், தெய்வத்தை கூட வணங்க வேண்டாம், ஆனால் அந்த குருவுக்கே முதல் நமஸ்காரம் செய்ய வேண்டும் என்கிறது.

ராம பக்தர், கபீர் தாஸ் தன் கவிதைகளில் இதையே சொல்கிறார்.

ஞானிகளும், ரிஷிகளும், பக்தனும், யோகிகளும் இருப்பதாலேயே, நமக்கு தெய்வ சாந்நித்யம் கொண்ட சிலைகள் கிடைத்தன.
கல்லில் குடிகொண்டுள்ள இந்த தெய்வங்களே, நமக்கு அணுகிரஹமும், தெய்வ சிந்தனையும் ஏற்பட செய்கிறது.

பாரத தேசத்தை தவிர, ஞானிகள் வேறு எங்கும் பிறக்க பிரியப்படாததால் தான், தெய்வ சிந்தனை குறைந்த மக்கள் உலகெங்கிலும் உள்ளனர்.

மேலும் படிக்க....   Click செய்யவும்.