Followers

Search Here...

Saturday 25 August 2018

உண்மையான குருவின் 6 லக்ஷணங்கள் (qualities) என்ன? தப, ஸ்வாத்யாய நிரதம்,தபஸ்வி,வாக்விதாம் வரம்,முனி புங்கவம்,நாரதம்.. அர்த்தம் தெரிந்து கொள்வோமே


உண்மையான குருவின் 6 லக்ஷணங்கள் (qualities) என்ன?

तपः स्वाध्याय निरताम् तपस्वी वाग्विदाम् वरम् |
नारदम् परि पप्रच्छ वाल्मीकिः मुनि पुंगवम् ||

தப ஸ்வாத்யாய நிரதம்
தபஸ்வி வாக்விதாம் வரம் |
நாரதம் பரி ப்ரக்ஷூசா வால்மீகி முனி புங்கவம் ||
இது வால்மீகி இராமாயணத்தின் முதல் ஸ்லோகம்.



1. தப - யார் உடலை துச்சமாகவும், சாஸ்திர (வேத) ஞானியாகவும்
2. ஸ்வாத்யாய நிரதம் - யார் சாஸ்திரம் படித்த ஞானத்தோடு மட்டும் நிற்காமல், தானே அனுஷ்டானம் செய்பவராகவும்
3. தபஸ்வி - யார் அபரோக்ஷ அனுபூதி (பகவத் அனுபவம்) கொண்ட சம்யக் ஞானியாகவும்
4. வாக்விதாம் வரம் - யார் வாக்கு ஸித்தி பெற்றவராகவும்,
5. முனி புங்கவம் - யார் எப்பொழுதும் பகவத் தியானத்திலேயே இருப்பவராகவும்,
6. நாரதம் - யார் அந்த ப்ரம்ம ஸ்வரூபத்தை (நாராயணனை) நமக்கு கொடுக்கும் சக்தி உள்ளவராகவும்,
யார் இருக்கிறாரோ, அவரே உத்தம குரு.

இந்த 6 லட்சணமும் சேர்ந்த ஒருவரை தரிசிப்பதே அரிது.
அப்படிப்பட்டவர் குருவாக கிடைப்பது அதை விட துர்லபம்.

இப்படி ஆறு லட்சணமும் சேர்ந்த குருவை தேடி தேடி அலைந்தாலும் கண்டுபிடிப்பது அரிது.
கிடைத்தவர்கள் மகா பாக்கியவான்கள்.

அபரோக்ஷ அனுபூதி (பகவத் அனுபவம்) கொண்ட சம்யக் ஞானியாகவும், வாக்கு ஸித்தி பெற்றவராகவும், சாஸ்திர (வேதம்) ஞானியாகவும், எப்பொழுதும் பகவத் தியானத்திலேயே இருப்பவராகவும் கூட குரு கிடைப்பார். ஆனால் அவரிடமும் ஒரு குறையாக, சாஸ்திரத்தை அனுஷ்டானம் செய்யாமல் இருப்பார்.

சிலருக்கு 1 லட்சணம் மட்டுமே கொண்ட "குரு கிடைப்பார்".
சிலருக்கு ஒன்றிலிருந்து ஐந்து வரை லட்சணங்கள் உடையவர் "குருவாக கிடைத்து விடுவார்".

ஆறு லட்சணங்களும் சேர்ந்த குரு கிடைப்பது துர்லபம்.

6 லக்ஷணங்களும் உடைய உத்தம குருவை அடைந்தவன், எப்படி குருவிடம் உபதேசம் பெறவேண்டும்? என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரே சொல்கிறார்.
தத் வித்தி ப்ரணி பாதேன
பிரிப்ரஷ்நேன சேவயா |
உபதேக்ஷந்தி தே ஞானம்
ஞானினஸ் தத்வ தர்ஷின: ||
Chapter 4.  Sloka 34
"6 லட்சணங்கள் உடைய உண்மையான ஞானியை (குருவை) நீ தேடி சென்று, அவருக்கு அடி பணிந்து, அவருக்கு தொண்டு செய்து, அவரின் அபிமானத்துக்கு பாத்திரமாகி, அவர் பிரியப்பட்டு, சிஷ்யனான உனக்கு ஞானத்தை உபதேசமாக தர வேண்டும்"
என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

சிஷ்யன் "குருவுக்கு தொண்டு செய்து உபதேசம் பெற வேண்டும்" என்று ஸ்ரீ கிருஷ்ணர் சிஷ்யனுக்கு சொன்னாலும், 6 லக்ஷணங்களும் கொண்ட குருவோ, கருணை உள்ளவராக இருப்பதால், தகுதி இல்லாத சிஷ்யனுக்கும், 'ராம' நாம உபதேசம் செய்கிறார்.







ஆறு லட்சணம் பொருந்திய குரு, ஒருவனுக்கு கிடைத்தால், ஒரு கவலையும் இல்லாமல், அந்த குருவின் அணுகிரஹத்தினால், நாராயணனை அடைகிறான் மோக்ஷம் அடைகிறான்.
** யார் தன் உடலை துச்சமாக நினைத்து, தன் உடல் வருந்தினாலும் விரதம், பூஜை, பஜனை என்று பகவத் கைங்கர்யம் எப்பொழுதும் செய்து கொண்டு, ஞானத்திலும் (அறிவிலும்) சாஸ்திர (சப்த ப்ரம்மத்தில் நிஷ்டையுடைய) ஞானியாகவும் இருந்து, சம்யக் (ப்ரம்மத்தில் நிஷ்டையுடைய) ஞானியாகவும் இருந்து,  தபஸ்வியாக இருக்கிறாரோ,
(‘தபோ நிரதம்’),
** யார் சாஸ்திரத்தை (சப்த ப்ரம்மம் என்ற வேதத்தை) படித்து,படித்ததோடு மட்டுமில்லாமல், அதன் படி தன் வாழ்க்கையில் தானே அனுஷ்டித்து கொண்டும் இருக்கிறாரோ ('ஸ்வாத்யாய நிரதம்’)
** சாஸ்திர (வேதம் என்ற சப்த ப்ரம்மம்) ஞானமும் இல்லாமல், சம்யக் ஞானிமும் இல்லாமல், அனுஷ்டானமும் இல்லாமல் தகுதி எதுவும் இல்லாமல் இருக்கும் ஒரு சிஷ்யன், யாருடைய வாக்கை கேட்ட மாத்திரத்தில் அவரிடம் ஆகர்ஷிக்கப்படுகிறானோ.
யார் வாக்கின் சக்தியை உணர்ந்து, வீண் பேச்சு பேசாமல், பகவானை பற்றியே பேசி கொண்டிருக்கிறாரோ. வாக்கினால் முதலில் ஈர்க்கப்பட்ட சிஷ்யன், அவனே பின்னர், சாஸ்திரத்தில் ஆர்வமும், அதை தன் வாழ்க்கையில் அனுஷ்டிக்கும்  ஆர்வமும் பெற்று, தன் குருவை போலவே தானும் ஆகும் அளவிற்கு, யாருடைய வாக்கை கேட்ட மாத்திரத்தில் ஏற்படுமோ ('வாக் விதாம்பரம்’)

** யார் உலக விஷயங்களில் ஈடுபட்டாலும், உலக விஷயங்கள் பேசினாலும், தனித்து இருந்தாலும், மனம் அடங்கி, எப்பொழுதும் மனது உலக விஷயத்தில் அலையாமல், மனதை பகவத் தியானத்திலேயே வைத்து இருப்பாரோ (முனிபுங்கவம்)
** யாரிடம் நாம் சரணடைந்தால், அந்த ப்ரம்ம ஸ்வரூபத்தை (நாராயணனை) நமக்கு கொடுக்கும் சக்தி உள்ளவராகவும்
இருக்கிறாரோ (நாரதம்)
அவரே உத்தம குரு.
'நாரம் ததாமி' என்ற சமஸ்கரித சொல்லுக்கு, "நாராயணனை தருபவர்" என்று அர்த்தம்.

'நாரம் ததாமி' என்பதே நாரதர் என்ற ஆனது.

நாரதருக்கு, 'நாரதர்' என்ற பெயர் கிடைத்ததே இதன் காரணமாக தான்.
நாரதரை குருவாக கொண்ட, துருவன், பிரகலாதன், வால்மீகி, வியாசர், புரந்தரதாசர் என்று அனைவருக்கும் பகவத் தரிசனம் கிடைத்ததே!
நாரதரே உத்தம குரு.
ஆறு லட்சணங்களும் உடையவர் நாரதர். 
நாரதரை மதிப்பு குறைத்து நினைப்பதே மகாபாபம்.

தவம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?
தபம் என்ற சொல்லுக்கு, இரண்டு அர்த்தங்கள் உண்டு.

ஒன்று, உடலை வருத்தி, சுத்தி செய்து கொள்ளுதல்.
மற்றொன்று ஞானத்தில் நிலைத்தல்.

யார் ஞானியாக இருக்கிறாரோ, யார் உடலை துச்சமென கருதி, உடல் வருத்தினாலும், பகவத் கைங்கர்யம் செய்து, சுத்தி செய்து கொள்கிறாரோ, அவரே தபஸ்வி.

எந்த விதத்திலாவது, தன் உடலை சுத்தி செய்து கொள்வதற்கு, தவம் என்ற சம்ஸ்கிருதத்தில் சொல்கிறோம்.

உண்ணாமல் ஒரு நாள் விரதம் இருந்து, உடலை சுத்தி செய்வதும், ஒரு தவம் தான்.

அதை ஏகாதசி அன்று பகவானை நினைத்து விரதம் இருந்தால் மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.
அதே தவத்தை பக்தி இல்லாமல், ராவணன், ஹிரண்யகசிபு போன்றவர்கள் போலவும் தவம் செய்து பெரும் வரங்களை பெற்று, அட்டகாசம் செய்து, பின்பு அழியவும் முடியும்.

தவத்தின் நோக்கம் உடல் சுத்தி மேலும் ஞான சுத்தியே.


ஞானம் (அறிவு) இரண்டாக உள்ளது.
சாஸ்திர ஞானம், சம்யக் ஞானம்.
இதை பற்றி தெரிந்து கொள்ள
www.proudhindudharma.com/2018/08/SastraSamyaggyaani.html

உபதேசம் பெற என்ன தகுதி வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது?

சாஸ்திரத்தில் சொன்ன கர்மாக்களை விடாமல் செய்து கொண்டு,
செய்யும் கர்மாவில் பலனை எதிர்பார்க்காமல், தான் கர்மா செய்வதே பகவான் என்னை பார்த்து ப்ரீதி அடைவான் என்ற நோக்கத்தில் மட்டும் செய்து,
இதனால் கர்வம் அகன்று, சித்தம் சுத்தி ஆகி, மனம் தெளிவு பெற்றவனே, குருவின் உபதேசத்திற்கு தகுதி ஆகிறான்.

இந்த தகுதியுடன், குருவின் உபதேசம் பெற்றவனுக்கு உடனே அந்த உபதேசம் ஸித்தி ஆகிவிடுகிறது.

உடல் வேறு ஆத்மா வேறு என்று குரு உபதேசம் செய்தாலும், அந்த உபதேசம் சிஷ்யனுக்கு மனதில் ஏறாததற்கு காரணம், இந்த தகுதியை சம்பாதிக்காத சிஷ்யனின் குறையே இது.

தகுதி அடைந்த சிஷ்யனுக்கு, குருவிடம் உபதேசம் பெற்றவுடன் அது பலித்து விடும்.

சமிகர் என்ற ரிஷியின் கழுத்தில் விதிவசத்தால், பரிக்ஷித் மன்னன் இறந்த பாம்பை போட்டு விட்டு சென்று விட்டார்.
சமிகர், தன் மகனுக்கு பூணல் போட்டு ப்ரம்ம உபதேசம் செய்து இருந்தார்.
உபதேசம் பெற தகுதி உள்ளவனாக இருந்த அந்த சிறுவன், உபதேசம் ஸித்தி பெற்று இருந்தான்.
"ஏழு நாளில் தக்ஷகன் என்ற பாம்பு கடித்து பரிக்ஷித் மரணிக்கட்டும்" என்று சபித்து விட்டான் அந்த சிறுவன். "தகுதி உள்ள ஒருவன், குருவிடம் உபதேசம் பெரும் போது, அவனுக்கு உடனே ஸித்தி ஆகி விடும்" என்பது இந்த சரித்திரத்தில் தெரிகிறது.

தகுதி பெற்ற ஒருவன், குருவின் உபதேசத்தின் உள் அர்த்தத்தை உணர்கிறான்.
தகுதி இல்லாமல் பெறும் உபதேசம், நமக்கு வார்த்தையாக இருக்குமே தவிர, அனுபவத்தில் வராது.

உபதேசத்திற்கு எந்த தகுதியும் இல்லாமல் இருக்கும் சிஷ்யனுக்கு, கருணையால், குரு "ராம" நாமம் உபதேசம் செய்கிறார்.

இந்த ராம மந்திரத்தை, தகுதி இல்லாதவனும் சொல்லலாம்.

உத்தம குரு, தகுதி இல்லாத தன் பக்தனுக்கு, "ராம" நாம உபதேசம் செய்கிறார்.
தன் அணுகிரஹத்தாலும், ராம நாமத்தின் பலத்தாலும், உபதேசம் பெற்றவனுக்கு, சிறிது காலத்திலேயே, தான் செய்யும் கர்மாக்கள் பகவான் ப்ரீதிக்காக தான் என்ற ஞானம் உருவாகுமாறு செய்து, சித்த சுத்தியாக்கி, ராம நாமத்தின் மகத்துவத்தை அனுபவிக்க ஆரம்பிக்கிறான்.

குரு, சிஷ்யனுக்கு உபதேசத்தை முதலில் கொடுத்து, பின்னர் தகுதியை
சம்பாதித்து மோக்ஷம் அடைய கருணை செய்கிறார்.

இப்படிப்பட்ட குருவை அடைந்த ஒரு சிஷ்யன், குருவின் நிலையை புரிந்து பழக வேண்டும்.

எப்பொழுதும் பகவத் தியானத்தில் இருக்கும் குருவிடம், நாம் போய், உலக விஷயங்களை பேச கூடாது.

நாம் குருவை தரிசிக்க போவதே, நமக்கு இந்த உலக விஷயங்கள் மறந்து, பகவத் விஷயமாக நினைவு வர வேண்டும் என்பதற்காக தான்.

ஆறு லக்ஷணங்கள் உடைய குரு கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள்.

ஹிந்துவாக நாம் பிறந்ததே புண்ணியத்தால் தான்.

வாழ்க ஹிந்துக்கள். நம் ஆத்ம குருவே, நமக்கு துணை.
ஹிந்துக்கள் ஒன்று சேருவோம்.

  



Monday 20 August 2018

யாரை குருவாக ஏற்றுக்கொள்ள கூடாது? இரண்டு ஞானிகள் உண்டு! சாஸ்திர ஞானி, சம்யக் ஞானி - ஒரு அலசல்

நமக்கு, ஞானம் இரண்டு விதத்தில் ஏற்படும், என்று வேதம் சொல்கிறது.
தெய்வத்தை பற்றிய ஞானமானாலும் சரி,
உலகத்தை பற்றிய ஞானமானாலும் சரி,
ஞானத்தை (ஒரு விஷயத்தை பற்றிய உண்மை அறிவு), இரண்டு வகையில் பெறலாம்.




ஒன்று : சாஸ்திர ஞானம். (Academic)
மற்றொன்று : சம்யக் ஞானம். (Experienced)

ஒருவன் ஒரு விஷயத்தை பற்றிய உண்மையான அறிவை (ஞானத்தை) பெற, அதற்கு சம்பந்தமான புத்தகங்களை (சாஸ்திரங்களை) படித்து தெரிந்து கொள்கிறான். இப்படி படித்ததினால் ஏற்படும் ஞானத்தை "சாஸ்திர ஞானம்" என்று சொல்கிறது வேதம்.

"கல்கண்டு சாப்பிட்டால் இனிப்பாக இருக்கும், மாம்பழம் சாப்பிட்டால் இனிப்பாக இருக்கும்" என்பதை ஒரு புத்தகத்தை படித்தே தெரிந்து கொள்ளலாம்.
இதை "சாஸ்திர ஞானம்" என்று சொல்லுவார்கள்.
படித்ததினால் உண்டாகும் அறிவு இது.

படித்ததை படித்ததோடு மட்டும் நிறுத்தாமல், அதை அனுபவத்தில் கொண்டு வந்தவனை, 'சம்யக் ஞானம்' உடையவர்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.

மாம்பழத்தை சாப்பிட்டு, கல்கண்டையும் சாப்பிட்டு அனுபவித்தவன், எழுத்தால் வர்ணிக்க முடியாத இனிப்பு என்ற சுவையை, உண்மையில் அனுபவிக்கிறான்.
இதை 'சம்யக் ஞானம்' என்று சொல்லுவார்கள்.

படிக்காமல் ஒருவனுக்கு சம்யக் ஞானம் வராது.
முதலில் சாஸ்திர ஞானத்தை பெற்று, பின்னரே ஒருவன் சம்யக் ஞானத்தை அடைகிறான்.

பிறக்கும் பொழுதே சம்யக் ஞானியாக தோன்றிய சம்பந்தர், ரமணர் போன்றோர், முற்பிறவியில் சாஸ்திர ஞானம் ஸித்தி பெற்று, பிறக்கும் போதே சம்யக் ஞானியாக பிறக்கின்றனர்.

சாஸ்திர ஞானி, சம்யக் ஞானியிடம் தோற்றுவிடுவார்கள்.

முதலில் சாஸ்திர ஞானியாக இருந்து, பின் அனுபவத்தால் சம்யக் ஞான நிலை அடைவதால், உண்மையான ஞானிகள், சாஸ்திரத்தை ஒதுக்க மாட்டார்கள்.

ஒருவேளை சாஸ்திர ஞானத்தை சம்யக் ஞானி மறுத்தால், நாம் அவரை குருவாக ஏற்றுக்கொள்ள கூடாது.

குரு என்ற சமஸ்கரித சொல்லுக்கு, இருளை (அஞானத்தை) போக்குபவர் என்று அர்த்தம்.







சாஸ்திர ஞானியாகவும் இருந்து, சம்யக் ஞானியாகவும் இருக்கும் ஒரு ஞானி, யாருக்கு குருவாக கிடைகிறாரோ!! அவர்களே பாக்கியவான்கள். அப்படிப்பட்ட ஞானியே உண்மையான குரு.

ஸ்ரீ கிருஷ்ணர், தான் பகவானாக இருந்தும், சம்யக் ஞானியாகவே இருந்தும், உலகத்திற்கு வழி காட்டும் பொருட்டு, தானே குருகுல வாசம் செய்து சாஸ்திர பாடங்களை கற்று, சாஸ்திர ஞானத்தின் முக்கியத்துவத்தை காட்டினார்.

சாஸ்திரத்தை மீறி செய்யும் எந்த காரியமும், அதர்மமே!
எது அதர்மம் என்று தெரிந்து கொள்ள, சாஸ்திர ஞானம் அடிப்படை தேவையாகிறது.

ஒரு விஷயத்தை பற்றிய சாஸ்திர ஞானம் உயர்ந்தது தான்.
அதை விட உயர்ந்தது சம்யக் ஞானம்.

அமெரிக்காவில் உள்ள ஒருவன் தன் நாட்டை பற்றி புத்தகம் எழுதுகிறான். வேறு தேசத்தில் உள்ளவனுக்கு அதை படிப்பதினால் "சாஸ்திர ஞானம்" ஏற்படுகிறது.
எழுதினவன் உண்மையை எழுதி உள்ளானா? பொய்யான விஷயங்களை எழுதி உள்ளானா? என்பது, சாஸ்திர ஞானத்தால் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.
உண்மையில் அமெரிக்கா சென்று, 10 வருடங்கள் இருந்து, அவன் படித்த புத்தகம் உண்மை என்று உணர்ந்தால், அதுவே சம்யக் ஞானம்.

பொதுவாக, பாரத தேசத்தில், ஆத்மாவை அறிந்து கொள்ள விரும்பும் ஞானிகள் உதித்து கொண்டே இருக்கின்றனர்.
மற்ற நாடுகளில், உலகை அறிந்து கொள்ள விரும்பும் ஞானிகள் உதித்து கொண்டே இருக்கின்றனர்.

பாரத தேசத்தில், ஆத்மாவை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்த "சாஸ்திர ஞானிகளை" காணலாம்.
அதே போல,
மற்ற நாடுகளில், உலக விஷயங்களை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்த "சாஸ்திர ஞானிகளை" காணலாம்.

பாரத தேசத்தில், ஆத்மாவை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்து, அதை பின்பற்றி, அதை அனுபவத்தில் கொண்டு வந்த சம்யக் ஞானிகளையும் காணலாம். இவர்களே மகாத்மாக்கள். இவர்களே மெய் ஞானிகள்.
மெய் ஞானிகளை, குருவாக பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

தெய்வத்தை காண, வேத சாஸ்திரங்கள் வழி சொல்கின்றன.
சாஸ்திர அறிவு மட்டும் பெற்றவன் "சாஸ்திர ஞானி".
அது சொன்ன படி வாழ்க்கையை அமைத்து, தெய்வத்தை தன் அனுபவத்தில் உணர்ந்தவர்களே "சம்யக் ஞானி".

சாஸ்திரம் தெய்வத்தை காண, பல நிபந்தனைகளை விதிக்கிறது.
மனசு, வாக்கு, மெய் (உடல்) இந்த மூன்றாலும் ஒழுக்கமாக இருக்க சொல்கிறது.
இப்படி ஒழுக்கம் உள்ள ஒருவனுக்கு, பகவானை அடைய பல வழிகளையும் சொல்கிறது.

தஞ்சாவூர், திருவையாற்றில் பிறந்த தியாகராஜர், சிறுவனாக இருந்த போது, அவர் தந்தை மரண படுக்கையில் இருந்தார்.

தன் மகனுக்கு கொடுக்க சொத்து ஒன்றும் இல்லை அவரிடம்.
தியாகராஜரை அருகில் கூப்பிட்டு, "100 கோடி தடவை "ராம ராம" என்று சொல். ஸ்ரீ ராமர் வெறும் சொப்பனத்தில் தரிசனம் தராமல், நேரில் வந்து காட்சி தருவார்' என்று சொல்லி உயிர் துறந்தார்.

அனுபவத்தில் கொண்டு வந்து,
ஸ்ரீ ராமரை பார்த்தே தீர வேண்டும் என்று அன்றிலிருந்தே ஆரம்பித்தார் தியாகராஜர்.
தினமும் ராம நாம ஜபம் என்று உட்கார்ந்து கணக்கு வைத்துக்கொள்வார்.

80 கோடி முடித்த சமயத்தில், அவர் வீட்டின் கதவை திறந்து கொண்டு, ஸ்ரீ ராமர், தன்னுடன் சீதை, லக்ஷ்மணன், ஹனுமான் என்று அனைவரும் சூழ தியாகராஜர் வீட்டுக்குள் கண்ணால் காணும்படியாக உள்ளே நுழைந்தார். தியாகராஜரின் மனைவி என்ற காரணத்தாலேயே, அவளும் இந்த அற்புதமான தரிசனத்தை பெற்றாள்.

"80 கோடி தானே முடிந்தது, 100 கோடி இன்னும் சொல்லவில்லையே?" என்று தியாகராஜர் கேட்க,




"ஜபம் தவிர்த்து, நடக்கும் போதும், அமரும் போதும், எப்பொப்பொழுதெல்லாம் ராம நாமம் சொன்னீர்களோ, அதையும் நான் கணக்கு எடுத்து கொண்டிருந்தேன். இப்பொழுது 100 கோடி முடிந்து விட்டது. தரிசனம் தர வந்து விட்டேன்"
என்றாராம் ஸ்ரீ ராமர்.
இப்படி கதவை திறந்து, ஸ்ரீ ராமர் உள்ளே வந்த போதுதான், தியாகராஜர், கண்ணுக்கு நேர் நிற்கும் ஸ்ரீ ராமரை பார்த்து
"பால கனக மய ... "
என்று பாடுகிறார். 
(ராமர் காட்சி கொடுத்த போது, தியாகராஜர் பரவசத்துடன் உள்ளே வரவேற்கும் போது பாடிய பாடல் கேட்க
https://youtu.be/sw9lE0VKd1A
https://www.dailymotion.com/video/x1e607u )
அனுபவத்தில் கொண்டு வந்த ஞானிகளே "சம்யக் ஞானிகள்".
சம்யக் ஞானிகளை குருவாக கொண்டவர்கள் பாக்கியசாலிகள்.