Followers

Search Here...

Friday 30 July 2021

பகவான் எதை சாப்பிடுகிறார்? தெய்வ சாந்நித்யம் நிலைக்க, நாம் என்ன செய்ய வேண்டும்?

 பகவான் எதை சாப்பிடுகிறார்? 

தெய்வ சாந்நித்யம் நிலைக்க, நாம் என்ன செய்ய வேண்டும்?

கோவிலிலோ, நம்முடைய வீட்டிலோ உள்ள தெய்வத்துக்கு, நாம் சமைத்த உணவை சமர்ப்பிக்கிறோம் (நெய்வேதயம் செய்கிறோம்)

சமர்ப்பித்த பிறகு? 

பகவான், நாம் சமர்பித்ததை பார்த்து அதில் உள்ள தோஷங்களை நீக்கி அனுக்கிரஹம் செய்கிறார்.

வெறும் சாதத்தை, தெய்வத்துக்கு காட்டிய பிறகு, பிரசாதமாக நமக்கே அது வந்து விடுகிறது.


ஒரு ஊதுபத்தி கொளுத்தினாலும், மனம் நமக்கு வந்து விடுகிறது..




பூ அபிஷேகம் செய்தாலும், அவர் திருமேனியில் பட்ட பூவை நாம் எடுத்து கொண்டு விடுகிறோம்.


இப்படி எது கொடுத்தாலும், அதை அனுக்கிரஹம் செய்து, பகவான் நமக்கே  திருப்பி கொடுத்து விடுகிறார்.


அவர் உண்மையில் திருப்பி கொடுக்காமல் சாப்பிட்டு விடுவது ஒன்றே ஒன்று தான்...

பகவானை நினைத்து கொண்டு "ரமா ரமண கோவிந்தா.. கோவிந்தா.. கோவிந்தா..." என்று சொல்லிவிட்டால், அந்த நாமத்தை அப்படியே சாப்பிட்டு விடுகிறார் பகவான்.


நாமத்தை சொன்ன மாத்திரம்... அப்படியே மறைந்து விடுகிறது... பிரசாதம் போல திரும்ப வருவதே இல்லை...

நாம் செய்ய கூடிய இந்த மங்களாசாசனம் தான்... பகவானை கோவிலிலோ, நமது வீட்டிலோ சாந்நித்யத்துடன் நிற்க செய்கிறது.


எந்த கோவிலில்! எந்த வீட்டில்! பகவன் நாமத்தை சொல்வதில்லையோ, அந்த இடத்தில பகவத் சாந்நித்யம் இருக்கவே இருக்காது.


வேத மந்திரத்தை கொண்டு, பகவன் நாமத்தை மங்களாசாசனம் செய்கிறோம்.


அஷ்டோத்திரம், சஹஸ்ர நாமம் போன்றவற்றை கொண்டும், பகவன் நாமத்தை தான் மங்களாசாசனம் செய்கிறோம்.


"கோடி அர்ச்சனை செய்தால், பகவானுக்கு சாந்நித்யம் ஏற்படும்" என்று பல கோவில்களில் செய்வார்கள்.


"கோடி பூவை பகவானுக்கு அர்ச்சனை செய்தால், பகவான் அங்கு தன் சாந்நித்யத்தை வெளிப்படுத்துகிறார்" என்று நினைத்து விட கூடாது.




"அந்த கோடி அர்ச்சனையில் என்ன சொல்லி அரச்ச்னை செய்தோம்?" என்று பார்க்க வேண்டும்..


கோடி அர்ச்சனையில்... "விஸ்வஸ்மை நம: ! விஷ்ணவே நம: !..." என்று எவ்வளவு நாமத்தை நாம் சொல்கிறோம். 

நாமத்தை சொல்ல சொல்ல, பகவான் நாம் சொல்லுமிடத்தில் சாந்நித்யத்தை காட்டுகிறார்.





கோவிலில் அர்ச்சனை செய்கிறோம். கொடுக்கும் துளசி, பூ, தேங்காய் போன்றவற்றிலா தெய்வத்துக்கு சாந்நித்யம் ஏற்படுகிறது? இல்லை..

அந்த அர்ச்சனையில் நாம சங்கீர்த்தனம் உள்ளது. 

அந்த நாம சங்கீர்த்தனமே பகவானை அங்கு சாநித்யத்தோடு இருக்க செய்கிறது.


எத்தனைக்கு எத்தனை கோவிலில், நம் வீட்டில், நாமம் ஒலிக்கிறதோ, அத்தனைக்கு அத்தனை கோவிலில் தெய்வ சாந்நித்யம் அதிகரிக்கும்.


எததனைக்கு எத்தனை நாம் நமக்குளேயே "ராம... ராம... ராம..." என்று நாம ஜபம் செய்து கொண்டே இருக்கிறோமோ! அத்தனைக்கு அத்தனை நம் இதயத்துக்குளேயே தெய்வம் வந்து அமர்ந்து இருப்பதை அறிய முடியும்..

நாமசங்கீர்த்தனம் செய்து, ஹிந்துக்கள் தெய்வ சக்தியை எங்கும் நிலைபெற செய்ய வேண்டும். 

போலி பிரச்சாரங்கள் தானாக ஒழிந்து விடும்.

Thursday 29 July 2021

ஸ்ரீரங்கம் பெருமை... பாசுரம் (அர்த்தம்) - "பச்சை மா-மலை போல் மேனி". ஸ்ரீரங்கத்தில் (திருச்சி மாவட்டம்) வீற்று இருக்கும் ரங்கநாத பெருமாளை தொழும் பாசுரம். தொண்டரடிப்பொடியாழ்வார் வர்ணிக்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !

ஸ்ரீரங்கத்தின் பெருமை....

பச்சை மா-மலை போல் மேனி!
பவள-வாய் கமல-செங்கண்!
அச்சுதா!
அமரர் ஏறே!
ஆயர்தம் கொழுந்தே! என்னும்,
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம்  ஆளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன்!
அரங்க மாநகர் உளானே!

வேதநூல் பிராயம் நூறு
மனிசர்தாம் புகுவரேலும்,
பாதியும் உறங்கிப் போகும்
நின்றதில் பதினை  ஆண்டு,
பேதை பாலகன்  அதாகும்
பிணி! பசி! மூப்பு! துன்பம்!
ஆதலால், "பிறவி வேண்டேன்"
அரங்கமா நகர் உளானே !
- திருமாலை (தொண்டரடிப்பொடியாழ்வார்)

ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டு இருக்கும் ரங்கநாதரை பார்த்து 
"எனக்கு பரலோகமும் வேண்டாம், இக லோகமும் வேண்டாம்" என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

பெருமாளுக்கு இகலோகம், பரலோகம் - என்ற இரு சொத்துக்கள் தானே உள்ளது !!




நமக்கு இகலோகம் பிடிக்கவில்லை என்றால், "சரி.. பரலோகம் செல்" என்பார்.

பரலோகம் செல்ல நம்மில் பலருக்கு இன்னும் ஆசை வரவே இல்லை! 
ஆதலால், "சரி.. இகலோகத்திலேயே இரு" என்று நம்மை மீண்டும் மீண்டும் பிறக்க செய்கிறார்.

ஆழ்வாரோ, தனக்கு "அச்சுவை பெறினும் வேண்டேன்" என்று சொல்லி "பரலோகம் கூட வேண்டாம்' என்கிறார்.

"சரி... இகலோகம் தரட்டுமா?' என்றால்... 'அதுவும் வேண்டாம்' என்கிறார்.

'ஏன் இகலோகம் வேண்டாம்?' என்று பெருமாள் கேட்டால்,

ஆழ்வார் தன் மனசாட்சியையே கேட்டு பதில் சொல்கிறார்..
"உலகத்திற்கு எத்தனை ஆயுசு கொடுக்கப்பட்டு இருக்கிறது?
ஆகாசத்திற்கு எத்தனை ஆயுசு? ஆகாசம் எவ்வளவு காலம் இருக்கிறது? 
இந்த பூமி எவ்வளவு காலம் இருக்க போகிறது? 
கடல் எவ்வளவு காலம் இருக்கப்போகிறது? 
மலை எவ்வளவு காலம் இருக்கப்போகிறது?

இவைகளின் ஆயுசை பார்க்கும் போது, இவ்வளவு பெரிய உலகத்தில், இந்த மனிதனுக்கு எத்தனை சொற்ப காலம் ஆயுசு உள்ளது !!

ஆகாசம் அளவுக்கு ஆயுசு இல்லாவிட்டாலும், ஒரு ஆயிரம் வருடமாவது மனிதனுக்கு ஆயுசு இருந்தால் பரவாயில்லை.

நூறு வயது காலம் தான் "மனித ஆயுசு" என்று எல்லை வைக்கிறதே!! (வேதநூல் பிராயம் நூறு)

வேதம், 'மனிதனுக்கு 100 வயது' என்று சொன்னாலும், அந்த நூறு வயதை தொடுபவன் கூட கோடியில் ஒரு சிலர் தானே !




50 வயதிலோ, 25 வயதிலோ, குழந்தையாக இருக்கும் போதோ, 'பட்' என்று ஆயுசு முடிந்து விடுகிறது.

கல்யாணம் ஆன பிறகு சிலருக்கு மரணம் ஏற்பட்டு விடுகிறது. கல்யாணம் ஆகாமலேயே மரணம் சிலருக்கு.

சொந்த வீட்டில் இறந்து போகிறான்.
வீடு இருந்தும் எங்கேயோ விபத்தில் இறந்து விடுகிறான். 

பந்துக்கள் சூழ்ந்து இருக்கும் போது இறந்து போகிறான். அனாதையாக இறந்து போகிறான்.

ஆஸ்பத்திரியில் இறந்து விடுகிறான். மாரடைப்பு ஏற்பட்டு மரணம். 
கொடுக்கப்பட்ட 100 வயதை கழிப்பதற்குள், வித விதமான வழிகளில் மனிதனுக்கு மரணம் ஏற்பட்டு விடுகிறது.

ஒன்று நிச்சயாமாகிறது.

'ஒரு நாள், இந்த உயிர், இந்த உடலை விட்டு கிளம்பி விடும்' என்று நிச்சயமாக தெரிகிறது.

சரி.. கிடைத்த ஆயுசை என்ன செய்கிறான் என்று பார்த்தால்!! பாதி நாள் தூக்கத்திலேயே கழிக்கிறான்.

வாழ்ந்த நாட்களில் "பகல் முழுக்க முழித்து கொண்டு இருந்தான்" என்பது தான் மனித பிறவியின் ப்ரயோஜனமா?

சரி..  முழித்து கொண்டு இருக்கும் வேளையில் நன்றாகவே இருக்கிறானா? அதுவும் இல்லை.. 

முதல் 15 வருடங்கள் பாலகனாக விளையாடி வீணடித்து விடுகிறான்.

பிறகு, மிச்ச ஆயுசை பிணியாலும், பசியாலும், மூப்பினாலும், பல வித விதமான துன்பங்களாலும் அனுபவித்து செலவு செய்கிறான்.

சீ ! இந்த உலக வாழ்க்கை வெறுக்கத்தக்கதாக இருக்கிறதே !

ஏதோ பூர்வ கர்மாவால், இந்த ஜென்மாவை எடுத்து விட்டேன். எனக்கு இக லோகமும் பிடிக்கவில்லை.

பரலோகமான இந்திர லோகம் ஆளும், அச்சுவை பெறினும் வேண்டேன்!"
(ஆதலால், "பிறவி வேண்டேன்") என்று பிரார்த்திக்கிறார்.

இப்படி ஆழ்வார் "இகலோகமும் வேண்டாம், பரலோகமும் வேண்டாம்" என்று சொல்ல, 
ஸ்ரீரங்கநாதர், 'இகலோகம், பரலோகம் என்ற இரண்டு சொத்து தானே என்னிடம் இருக்கிறது. இரண்டுமே வேண்டாம் என்றால் எப்படி? இப்படி பிடிவாதம் செய்ய கூடாது.' என்றார்




தாய் தன் குழந்தையை மடியில் வைத்து கொண்டாள். "மடியில் இருக்க மாட்டேன்" என்று கத்தி பிடிவாதம் செய்தது.

"சரி..." என்று கீழே இறக்கிவிட்டாள். 
"கீழே இறக்கி விடாதே" என்று அழுதது.

'குழந்தையை எப்படி சமாதானப்படுத்துவது?' என்று புரியாமல் தாய் தவிப்பது போல, 
'எனக்கு இகமும் வேண்டாம்.. பரமும் வேண்டாம்' என்று புலம்பி அழும் தொண்டரடிப்பொடியாழ்வாரை சமாதானம் செய்ய முடியாமல் பெருமாள் திகைக்க, ஆழ்வாரே தனக்கு வேண்டியதை ரகசியமாக கேட்கிறார்.

'அரங்க மாநகர் உளானே' என்று சொல்லும் போது... "எனக்கு இக லோகமும் வேண்டாம்.. பரலோகமும் வேண்டாம் .. ஆனால், யாருக்கும் தெரியப்படுத்தாமல், ரகசியமாக வைத்து இருக்கும் உங்கள் மூன்றாவது சொத்தான ஸ்ரீரங்கத்தில் நீங்கள் வாசம் செய்ய, உங்களுக்கு ஏதாவது சிறு கைங்கர்யம் செய்து கொண்டு ஸ்ரீரங்க வாசம் செய்யும் பாக்கியத்தை தாருங்கள்" 
என்று கேட்காமல் கேட்கிறார்.

"ஸ்ரீரங்கம் இகலோகத்தில் தானே இருக்கிறது..  நீர் தான் இகலோகம் வேண்டாம் என்கிறீரே?" என்று பெருமாள் கேட்க...

"ஸ்ரீரங்கநாதருக்கு கைங்கர்யம் செய்பவருக்கு இக லோக துக்கமே தெரியவில்லையே!" என்கிறார்.

"சரி.. ஸ்ரீரங்கம் பரமபதத்தை காட்டிலும் உயர்ந்ததோ?" என்று கேட்க..

"பரமபதம் உயர்ந்தது தான் என்றாலும்..  அங்கு பரமபத நாதன் எப்பொழுதும் தரிசன ஆனந்தம் மட்டும் தானே தருகிறார். 
இங்கோ ! 
அதே பரமபத நாதன் 'ரங்கநாதனாக' இருந்து கொண்டு, தரிசன ஆனந்தம் கொடுத்து, பற்பல உற்சவங்கள் செய்து கொண்டு பஞ்ச இந்திரியங்களுக்கும் ஆனந்தம் கொடுக்கிறாரே! 
அவருக்கு விதவிதமான கைங்கர்யம் செய்வதால், கைங்கர்ய ஆனந்தமும் கிடைக்கிறதே!. பரமபதத்தை விட, எனக்கு ஸ்ரீரங்கம் பேரானந்தத்தை தருகிறதே!" என்கிறார்.

இப்படி. ஆச்சர்யமாக, ஆழ்வார், 'எனக்கு ஸ்ரீ ரங்கநாதரே போதும்.. ஸ்ரீரங்கமே போதும்... வேறு எதுவும் வேண்டாம்' 
என்று சொல்லி கதறி அழும் பாசுரம் இது.

'பக்தி என்றால் என்ன?
என்பதை ஆழ்வார் பாசுரங்களை படித்து அர்த்தம் தெரிந்து கொண்டாலே நாம் புரிந்து கொள்ள முடிகிறது..

தமிழனாய் பிறந்தவன் - வாழும் சில வருட வாழ்நாளில், ஒரு வருடமாவது 4000 தமிழ் பாசுரங்களை அர்த்தம் தெரிந்து படிக்க முயற்சிக்க வேண்டும்.

குருநாதர் துணை