Followers

Search Here...

Saturday 18 May 2024

கேசவா, கோவிந்தா நாராயணா மாதவா என்ற பெயருக்கு அர்த்தம் என்ன?

கேசவா, கோவிந்தா நாராயணா மாதவா என்ற பெயருக்கு அர்த்தம் என்ன?

விஷ்ணு

ब्रह्मादि नामानि हरेर्हि देवीं विष्णो:

स्व-नामानि ददौ दिवौकसाम्

नादाद् दीर केशव आदीनि कन्ये 

स्वकं पुरं प्रविहायैव राजा

एवं मयोक्तं कन्यके सर्वं एतदे 

तत्परं सम्यगारोहणीयम् 

- கருட புராணம்

பிரம்மாவின் பெயர் உட்பட, உலகத்தில் உள்ள அனைத்து பெயர்களும் விஷ்ணுவின் பெயர்களே! 

விஷ்ணுவின் நாமங்களே! அவரே தான் இஷ்டப்பட்டு தன் பெயர்களை அனைத்து தேவர்களுக்கும் கொடுத்து இருக்கிறார். இருந்த போதிலும், எப்படி ஒரு அரசன் தன் நாட்டையே கொடுத்தாலும், "அரசன்" என்ற தன் அடையாள பெயரை விட்டு கொடுப்பதில்லையோ அது போல, கேசவன் போன்ற குறிப்பிட்ட பெயர்களை யாருக்கும் கொடுக்காமல் தனக்கே வைத்து இருக்கிறார்.


திருப்பதி

गोविन्द नारायण माधव इति 

यूयं मया सर्वं आराधि तव्यम्

सर्वे मिलित्वा पुन: एवं खगेन्द्र 

समारुहन वैङ्कटाद्रिं गृणन्त:

- கருட புராணம்

ஆதலால், கருடா! வேங்கட மலையில் (திருப்பதி) இருக்கும் ஶ்ரீனிவாசன் அவருகென்றே வைத்து இருக்கும் பெயர்களான "கோவிந்தா நாராயணா மாதவா" என்ற பெயர்களை (நாமங்களை) சொல்லி மீண்டும் மீண்டும் அழைப்பது உத்தமம். 


கேசவா

ब्रह्मणम् आहु: च पुराण माह 

क शब्द वाच्यम सर्वलोकेशम्  आहु:

ईशम चार्हं रूद्रम् इत्येव चाहु: 

तत्प्रेरकं सृष्टि संहार कार्ये

- கருட புராணம்

புராதனமான நாராயணன், ஒரு சமயம் பிரம்மாவை படைத்தார். பிரம்மா உலகங்களை படைத்தார். கேசவன் என்ற இவருடைய பெயரில், "க" என்ற ஒலி "அனைத்து உலகங்களையும் படைத்தவர்" என்ற அர்த்தத்தை குறிக்கிறது. 

அது போல, பிரம்மாவின் நெற்றியில் இருந்து சுயமாக வெளிப்பட்ட ருத்ரன், ஈசனாக (தலைவனாக) இருந்து சம்ஹார காரியங்கள் செய்கிறார். 

உண்மையில், படைத்தல் அழித்தல் என்ற இரண்டு காரியத்தையும் இவரே தான் பிரம்மாவாகவும், ருத்ரனாகவும் இருந்து கொண்டு செய்கிறார். 

இதனாலேயே இவருக்கு "கேசவன்"  என்ற பெயரும் உண்டு.

நாராயணா

नारायणेति प्रवदन्तीह लोके 

नारानुबन्धात् सर्वमुक्ताः खगेन्द्र  ।

नाराः प्रोक्ता आश्रयत्वाच्च तेषाम् 

अत: अपि नारायण एव वीन्द्र ।

मुक्ताश्च ये तु प्रपदंनु जग्मु: 

अण्डोदकं यस्य कटाक्षमात्रात् ॥

- கருட புராணம்

உலகத்தில் மனிதனாக பிறந்த எவனும், நாராயணனை சரணாகதி செய்வதால் மட்டுமே, 

சம்சார துக்கத்தில் இருந்து விடுபட்டு மோக்ஷம் அடைய முடியும்.

மனிதன் (நரன் - நார:) என்று உலகத்தில் பிறந்த எவரும் ஆஸ்ரயிக்க (அயன) தகுந்த ஒரே ஒருவர் விஷ்ணுவே. 

அதனாலேயே விஷ்ணுவுக்கு "நாராயணன்" என்றும் பெயர். அந்த நாராயணனின் கடாக்ஷத்தை பெற்ற நரன் (மனிதன்) சம்சாரம் என்ற இந்த பெரிய அண்டத்தை விட்டு வெளியேறி மோக்ஷம் அடைகிறான். 


यद् उत्पन्नं तेन नाराः खगेन्द्र 

तेषां सदापि आश्रयत्वाच्च वीन्द्र ।

नारायणेति प्रवदन्तीह लोके हि 

अनन्त ब्रह्माण्ड विसर्जकत्वात् ॥

- கருட புராணம்

ககேந்திரா! நாரா என்ற சொல்லுக்கு தண்ணீர் என்றும் அர்த்தம் உண்டு. நதியில் உள்ள தண்ணீர் எப்படி அதன் உற்பத்தி ஆகும் இடத்தையே ஆஸ்ரயித்து/அண்டி (அயன) இருக்கிறதோ! அது போல, உலகத்தில் உள்ள அனைத்து ஜீவாத்மாக்களும் உற்பத்தியான இடமான நாராயணனையே ஆஸ்ரயித்து (அயன) இருக்கிறது.


கோவிந்தா

एवं न अनृतु: परिशंसयन्तो गोविंद

हि न च एव दर्शनम्

गो शब्द वाच्यास्तु समस्त वाचो 

गोभि: च सर्वै प्रतिपाध्यते यत:

अतो हि गोविन्द इति स्मृत: सदा 

भो वेद-वेद्येति तथा न अनृतु:

- கருட புராணம்

"கோ" என்ற ஒலி, ஆகாசத்தில் பரவி இருக்கும் வேத ஒலியை குறிக்கிறது. அந்த வேத சப்தத்தால் அறிய வேண்டியவர் என்பதால், இவருக்கு "கோவிந்தன்" என்ற பெயரும் உண்டு. 


வாசுதேவா

यतस्त्वमेवं वसतीति वासुश्चात्रैव 

नित्यं क्रीडते सर्वदैव ॥

- கருட புராணம்

நீங்களே எங்கும் வசிக்கிறீர்கள். நீங்களே இந்த அனைத்து உலகத்திலும், அனைத்து தேவதைகளிலும் அந்தர்யாமியாக இருந்து நீங்களே லீலைகள் செய்கிறீர்கள்.


यतो देवेत्येवमाहुर्महान्तस्त्वतो 

हरिं वासुदेवेति चाहुः ।

भो वासुदेवेति ननृतुः सर्वदैव 

भो माधवेति ननृतुश्चैव सर्वे ॥

- கருட புராணம்

அனைத்து தேவதைகளுக்கு உள்ளும் நீங்களே வசிப்பதால், உங்களுக்கு "வாசுதேவன்" என்றும் பெயர். நீங்கள் வசிக்காத இடம் என்று ஒன்றுமே இல்லை. உண்மையில் அனைத்து தேவதைகளுமே வாசுதேவனான நீங்கள் தான். மாதவா!  உங்களை தவிர வேறு தனியான தெய்வங்கள் என்று ஏதும் இல்லை. 


மாதவா

लक्ष्मीपते चेति वदन्ति सर्वे धनीति 

शब्दः स्वाभिवाची यतो हि ।

अतोपि आर्या माधवेति ब्रुवन्ति 

लक्ष्मीपते पाहि तथैव भक्तान् ॥

- கருட புராணம்

ப்ரபோ! விஷ்ணுவாகிய உங்களை "லக்ஷ்மீபதி" என்றும் அழைக்கிறார்கள். தனத்திற்கு (செல்வத்திற்கு) உரிமையாளனாக நீங்களே இருக்கிறீர்கள். மாதாவான லக்ஷ்மியை உடையவர் (தவ) என்பதால், பண்புள்ளவர்கள், உங்களை  "மாதவன்" என்றும் அழைக்கிறார்கள். லக்ஷ்மீபதி! 

உங்கள் பக்தர்களை நீங்களே காக்க வேண்டும்.

Sunday 5 May 2024

பெண்களிடம் பொய் சொல்வதால் பாபம் ஏற்படாது.. வ்யாஸ மஹாபாரதம்

அசுரகுல குருவான சுக்ராச்சாரியாரின் பெண்ணான தேவயானியை மணந்து கொண்டிருந்த யயாதியிடம் "எக்காரணம் கொண்டும் சர்மிஷ்டையிடம் சேராதே" என்று சொல்லி இருந்தார்.

தேவயானியோடு சர்மிஷ்டையும் அவளின் 1000 கன்னிகைகளும் யயாதியோடு வந்து தங்கினார். அங்கு ஒரு மாளிகையில் வசித்தனர்.

சில காலத்திற்கு பிறகு, தேவயானி ஒரு ஆண் பிள்ளையை பெற்றாள்.


அசுரனான வ்ருஷபர்வனின் பெண் சர்மிஷ்டை, தனக்கும் ஒரு பிள்ளை வேண்டும் என்று யயாதியிடம் கேட்டாள்


சுக்ராச்சாரியார் சொன்னதை யயாதி சொல்ல, சர்மிஷ்டை இவ்வாறு சொன்னாள்,

"சிரிப்பதற்காகவோ, பெண்களிடமோ, திருமணம் செய்வதற்கோ, உயிருக்கு ஆபத்து ஏற்படும் சமயத்திலோ, அனைத்து சொத்தும் பறிக்கப்படும் சமயத்திலோ, பொய் பேசலாம் என்று சொல்லி இருக்கின்றனர், இந்த 5 பொய்கள் பாபங்கள் ஆகாது" என்று சொன்னாள்.

न नर्मयुक्तम् अनृतं हिनस्ति

न स्त्रीषु राजन् न विवाहकाले।

प्राणात्यये सर्वधनापहारे

पञ्चानृतान्याहुरपातकानि।। 

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்) 

சாட்சிக்கு நீதிமன்றம் சென்றவன், பொய் சொன்னான் என்றால், அவனை "பதிதன்" என்று சொல்கின்றனர்.

पृष्टं तु साक्ष्ये प्रवदन्तमन्यथा

वदन्ति मिथ्या पतितं नरेन्द्र।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்) 

ஒரு தேசத்தை காக்க, ஒரு ஊரை இழக்கலாம்.. தன்னை காக்க, தன் நிலத்தை இழக்கலாம்.. வ்யாஸ மஹாபாரதம்

வ்ருஷபர்வன் என்ற அசுரன், தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதியின் மகன் "கசன்", தங்களின் குருவான சுக்ராச்சாரியாரிடம் குருகுல வாசம் செய்கிறான் என்று தெரிந்து, கொலை செய்தனர்.

சுக்ராச்சாரியார் சஞ்சீவினி கொண்டு உயிர் கொடுத்து காப்பாற்றினார்.

வ்ருஷபர்வாவின் மகள் ஷர்மிஷ்டா ஒரு சமயம் தவறுதலாக சுக்ராச்சாரியாரின் பெண்ணான தேவயானியின் ஆடையை எடுத்து உடுத்தி கொண்டாள். 

இதனை கவனித்த தேவயானி மரியாதை தெரியாதவளே என்று சொல்ல, பிராம்மணனான நீங்கள் பிச்சை எடுத்து வாழ்ந்து, தன் அசுர குல அரசனிடம் கை கட்டி துதி பாடுபவர்கள் தானே என்று திட்டினாள்.


இதனால், இனி இவர்களோடு இருக்க மாட்டேன் என்று தேவயானி தன் தந்தையிடம் சொன்னாள்.

தானும் தன் மகளோடு செல்வதாக சுக்ராச்சாரியார், விருஷபர்வனிடம் சொல்ல, தங்களை விட்டு செல்ல கூடாது. 

அசுர குரு சென்று விட்டால், தாங்கள் அனைவரும் அக்னியில் விழுவோம் என்று மன்னிப்பு கேட்டான்.


தன் பெண்ணை சமாதானம் செய்யுங்கள் என்று சொல்ல, 

தேவயானி, "வ்ருஷபர்வனின் பெண் சர்மிஷ்டா அவளோடு 1000 கன்னிகைகளோடு எனக்கு வேலைக்காரியாக இருக்க வேண்டும். என்னை என் தந்தை எங்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அங்கு அவளும் என் பின்னே வர வேண்டும்" என்று சொன்னாள்.

दासीं कन्या सहस्रेण शर्मिष्ठामभिकामये।

अनु मां तत्र गच्छेत्सा यत्र दद्याच्च मे पिता।।


அதற்கு சம்மதம் தெரிவித்து, தன் மகளை தேவயாணியோடு அனுப்ப சம்மதித்தான் வ்ருஷபர்வன்.

அப்பொழுது, 

त्यजेत् एकं कुलस्यार्थे ग्रामार्थे च कुलं त्यजेत् ।

ग्रामं जनपदस्यार्थे आत्मार्थे पृथिवीं त्यजेत् ।।

ஒரு குலத்தை காக்க வேண்டிய நிலை வந்தால், அந்த குலத்தில் ஒருவனை இழக்கலாம். 

ஒரு கிராமத்தை காக்க வேண்டிய நிலை வந்தால், அந்த கிராமத்தில் உள்ள ஒரு குலத்தை இழக்கலாம்.

ஒரு தேசத்தை காக்க வேண்டிய நிலை வந்தால், அந்த தேசத்தில் உள்ள ஒரு கிராமத்தை இழக்கலாம்.

தன்னை காக்க வேண்டிய நிலை வந்தால், தான் வைத்திருக்கும் நிலத்தை இழக்கலாம்.

என்று சொன்னான்.


சர்மிஷ்டை, "தன் தவறுக்காக சுக்ராச்சாரியார் போக வேண்டாம். தேவயானியும் போக வேண்டாம்" என்று சொல்லி, அவளுக்கு வேலைக்காரியாக இருக்க சம்மதித்தாள்.

பாம்பு தன் சட்டையை கழற்றி எறிவது போல கோபத்தை கழற்றி ஏறிய வேண்டும். கோபத்தை பற்றி சுக்ராச்சாரியார் சொல்கிறார். வ்யாஸ மஹாபாரதம்

வ்ருஷபர்வா என்பவன் அசுரர்களில் ஒருவன். அவனுக்கு "சர்மிஷ்டா" என்ற பெண் உண்டு.

ப்ராம்மணரான அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியாருக்கு "தேவயானி" என்ற பெண் உண்டு.

இந்த பெண்கள் இருவரும் ஒரு சமயம் நதியில் குளிக்க சென்றார்கள். குளித்த பிறகு, ஆடைகள் கலந்து இருந்ததால், தேவயானி உடையை எடுத்து உடுத்தி கொண்டு விட்டாள் சர்மிஷ்டை.


தேவயானி "ஏ அசுரர் குல பெண்ணே! உங்கள் குல குருவான சுக்ராச்சாரியாரின் பெண்ணான என் ஆடையை எப்படி அணியலாம்?" என்று கேட்டாள்.

இதனால் கோபப்பட்ட அவள், 

"ஏ பிராம்மண பெண்ணே! உன் தந்தை தான் என் தகப்பன் முன் உட்காரும் போதும், படுக்கும் போதும் அடங்கி ஒடுங்கி குனிந்து நின்று எப்பொழுதும் என் தந்தையை துதித்து கொண்டு இருக்கிறார். நீ பிச்சை எடுத்து கொண்டு பிறரை துதி பாடி வாங்கி செல்பவருடைய பெண். நான் துதிக்கப்படுபவரும், கொடுப்பவருமான, தானம் வாங்காதவருமான அசுர குல பெண். ஏ பிச்சைக்காரி! ஆயுதம் இல்லாத நீ, ஆயுதம் உள்ள என்னிடம் பேசுகிறாய். நீ எனக்கு விரோதமாக பேசியதால், நான் இனி உன்னை மதிக்க மாட்டேன்" என்றாள்.

கோபத்தோடு, தேவயானியை பாழுங்கிணற்றில் தள்ளி விட்டு, சாகட்டும் என்று அசுர குணத்தோடு சென்று விட்டாள்.


பிறகு, யயாதி என்ற அரசன், வனத்தில் வேட்டைக்கு சென்று இருந்த போது, அவளை காப்பாற்றி அனுப்பி வைத்தான்.


தன் தந்தையான சுக்ராச்சாரியாரிடம் சென்று தான் அவமானப்படுத்த பட்டதை சொல்லி அழுதாள் தேவயானி. கோபப்பட்டாள்.

அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், அசுரர்களை இறந்த பிறகும் உயிர்ப்பிக்கும் சஞ்சீவினியை வைத்து இருந்தார். 

தன் மந்திர பலம் அசுரர்களை விட உயர்நதது என்று சொல்லி சமாதானம் செய்தார்.

பலம் இருந்தாலும், பொறுமை காப்பது அவசியம் என்று சமாதானம் செய்தார்.


தேவயானியை பார்த்து, 

"எந்த மனிதன் பிறர் கடுமையான சொற்களால் திட்டினாலும், அதிகமாக பொறுமையை கடைபிடிக்கிறானோ! அவன் நினைத்தால் உலகத்தையே வெற்றி கொள்ள முடியும்.

यः परेषां नरो नित्यमतिवादांस्तितिक्षते।

देवयानि विजानीहि तेन सर्वमिदं जितम्।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)

தனக்குள் உண்டாகும் கோபத்தை எவன் குதிரையை அடக்குவது போல அடக்குகிறானோ! அவன் தான் சாரதி என்று அழைக்கப்படுகிறான்.

यः समुत्पतितं क्रोधं निगृह्णाति इयं यथा।

स यन्तेत्युच्यते सद्भिर्न यो रश्मिषु लम्बते।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)


தேவயானி! தனக்கு ஏற்படும் கோபத்தை விலக்கி கொண்டு அடக்க தெரிந்தவன் எவனோ! அவனால் உலகத்தையே ஜெயிக்க முடியும் என்று அறிந்து கொள்.

यः समुत्पतितं क्रोधमक्रोधेन निरस्यति।

देवयानि विजानीहि तेन सर्वमिदं जितम्।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)


பாம்பு தன் சட்டையை கழற்றி எறிவது போல, எவன் தன் கோபத்தை கழற்றி எறிகிறானோ, அவனே "ஆண்" என்று அறிந்து கொள்.

यः समुत्पतितं क्रोधं क्षमयेह निरस्यति।

यथोरगस्त्वचं जीर्णां स वै पुरुष उच्यते।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)


எவன் கோபத்தை அடக்கி கொள்கிறானோ! எவன் பிறர் திட்டுவதை பொறுத்து கொள்கிறானோ, எவன் பிறரால் துன்புறுத்தப்பட்டும் வருத்தம் கொள்ளாமல் இருக்கிறானோ, அவன் தான், தான் நினைத்த காரியத்தை செய்து முடிக்கத்தக்கவன்.

यः संधारयते मन्युं योऽतिवादांस्तितिक्षते।

यश्च तप्तो न तपति दृढं सोऽर्थस्य भाजनम्।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)


100 வருடங்களும் ஒவ்வொரு மாதமும் சோம்பல் இன்றி யாகம் செய்யும் ஒருவன் ஒரு பக்கம், 

எதற்கும் கோபம் அடையாதவன் மற்றொரு பக்கம்.

இவர்கள் இருவரில், கோபமே அடையாதவன் தான் மேலானவன்.

यो यजेदपरिश्रान्तो मासिमासि शतं समाः।

न क्रुद्ध्येद्यश्च सर्वस्य तयोरक्रोधनोऽधिकः।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)


கோபமில்லாதவனே அனைவரையும் விட சிறந்தவன். ஆசையும் (காமமும்), கோபமும் கீழ்த்தரமான குணங்கள்.

तस्मादक्रोधनः श्रेष्ठः कामक्रोधौ विगर्हितौ।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)


கோபமுள்ளவன் தானம் செய்தாலும், யாகம் செய்தாலும், தவம் செய்தாலும் பயன் கிடைக்காது.

அன்புள்ளவளே ! யாரிடத்தில் கோபம் கிடையாதோ, அவன் செய்யும் யாகம், தவம், தானம் அனைத்தும் அதிகமாக பலன் தரும்.

கோபமுள்ளவனிடம் இவை எந்த பலனும் தராது.

இது நிச்சயம்.

क्रुद्धस्य निष्फलान्येव दानयज्ञतपांसि च।।

तस्मादक्रोधने यज्ञतपोदानफलं महत्।

भवेदसंशयं भद्रे नेतरस्मिन्कदाचन।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)


எவன் கோபத்துக்கு வசமாகிறானோ, அவன் சந்நியாசி ஆவதற்கு தகுதி அற்றவன், அவன் ரிஷியும் ஆக மாட்டான், யாகம் செய்தவனும் ஆக மாட்டான், தர்ம பலன் எதையும் அடைய மாட்டான், அவனுக்கு இகமும் இல்லை, பரமும் இல்லை.

न यतिर्न तपस्वी च न यज्वा न च धर्मभाक्।

क्रोधस्य यो वशं गच्छेत्तस्य लोकद्वयं न च।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)

கோபம் கொள்பவனிடம் அவன் புத்திரன் கூட சேர்ந்து இருக்க மாட்டான். அவன் வேலைக்காரன், நண்பன், சகோதரன், மனைவி, அறம் என்ற தர்மம், சத்யம் என்ற உண்மை எதுவுமே கூட இருக்காது.

पुत्रो भृत्यः सुहृद्भ्राता भार्या धर्मश्च सत्यता।

तस्यैतान्यपयास्यन्ति क्रोधशीलस्य निश्चितम्।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)


சிறு குழந்தைகள் புத்தி இல்லாமல் கோபப்படுவார்கள். அவர்களை போல தானும் கோபப்பட வேண்டும் என்று அறிவுள்ளவன் முற்பட மாட்டான். சிறு குழந்தைகள் கோபத்தின் பலனையும், பொறுமையின் பலனையும் அறிய மாட்டார்கள்"

என்று சொல்லி, கோபத்தை விலக்க சொன்னார்.

यत्कुमाराः कुमार्यश्च वैरं कुर्युरचेतसः।

न तत्प्राज्ञोऽनुकुर्वीत न विदुस्ते बलाबलम्।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)

பிராம்மணன் குடிக்க கூடாது. பெண் எப்படிப்பட்ட ஆணை கண்டு காம வயப்படுகிறாள்? தெரிந்து கொள்வோம் வ்யாஸ மஹாபாரதம்

பெண் எப்படிப்பட்ட ஆணை கண்டு காம வயப்படுகிறாள்?

गायन्तं च एव शुल्कं च दातारं प्रियवादिनम्।

नार्यो नरं कामयन्ते रूपिणं स्रग्विणं तथा 

- ஆதி பர்வம் (வ்யாஸ மஹாபாரதம்)

ஆனந்தமாக பாடிக்கொண்டும், தேவையான பொருளை கொடுத்து கொண்டும், அன்போடு பேசி கொண்டும், நறுமணமிக்க திரவியங்கள் பூசி கொண்டும், அழகோடும் இருக்கும் ஆண், ஒரு பெண்ணிடம் பழகினால், அவள் அவனை கண்டு காம வயப்படுகிறாள், மனதை பறிகொடுக்கிறாள்


அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியாரின் பெண் "தேவயானி", தன்னிடம் பழகிய தேவர்களுக்கு குருவான ப்ருஹஸ்பதியின் மகனான "கசன்" என்பவனை கண்டு காமவசப்பட்டு விட்டாள்.


அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியார், சஞ்சீவனி என்ற ரகசிய ஆயுர்வேதத்தை வைத்து இருந்தார். இதனால், அசுரர்கள் போரில் இறந்தாலும், பிழைக்க செய்து கொண்டிருந்தார்.

தேவர்களுக்கு குருவான ப்ருஹஸ்பதிக்கு இந்த ரகசியம்  தெரியாததால், தன் பிள்ளை சுக்ராச்சாரியாரியாரிடம் அனுப்பி ப்ரம்மச்சர்யத்தில் இருந்து பணிவிடை செய்ய அனுப்பினார்.

மேலும், அவரின் பெண்ணான தேவயானியின் மனதில், இவனை கண்டு பிரியம் ஏற்படும் படி நடந்து கொள்ள சொன்னார்.


தேவயானியிடம் சமயம் கிடைக்கும் போதெல்லாம், அன்பாக பேசி கொண்டும், ஆடி பாடி கொண்டும், அவளுக்கு தேவையான பூ பழம் எல்லாம் வாங்கி கொடுத்து கொண்டும் 5 வருடங்கள் பழகினான்.

தேவயானி இவனிடம் பெரும் ஆசை கொண்டு இருந்தாள்.


ஒரு சமயம், கசன் மாடுகளை மேய்க்க சென்ற போது, ஆலமரத்தின் நிழல் அருகே மாடுகளோடு வந்த கசனை அசுரர்கள் கண்டனர். அசுரர்கள் இவனை வழி மறித்து, அடித்து கொன்று, துண்டு துண்டாக்கி நாய்க்கு (स्व) போட்டு விட்டனர்.

हत्वा शालावृकेभ्यश्च प्रायच्छँल्लवशः कृतम्।

ततो गावो निवृत्तास्ता अगोपाः स्वं निवेशनम्।।


தேவயானி இவன் திரும்பி வராததை கண்டு, தன் தகப்பனாரிடம் சென்று, "ஏதோ ஆபத்து ஏற்பட்டு விட்டது. கசன் அசுரர்களால் கொல்லப்பட்டு இருக்க வேண்டும். பிழைக்க வையுங்கள்" என்று அழுதாள்.

 

அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியார், சஞ்சீவினி மந்திரத்தை ஜபிக்க, அந்த நாய்களை கிழித்து கொண்டு கசன் உயிரோடு திரும்பி விட்டான்.

भित्त्वा भित्त्वा शरीराणि वृकाणां स विनिर्गतः।

आहूतः प्रादुरभवत्कचो हृष्टोऽथ विद्यया।।


இதே போல, மீண்டும் ஒரு சமயம், அசுரர்கள் இவனை பிடித்து, இவனை அரைத்து, சமுத்திர ஜலத்தில் கரைத்து விட்டனர்.

वनं ययौ कचो विप्रो ददृशु: दानवाश्च तम्।

पुनस्तं पेषयित्वा तु समुद्राम्भस्यमिश्रयन्।।


மீண்டும் தேவயானி அழுது பிழைக்க வைக்க வற்புறுத்தினாள்.

அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியார், சஞ்சீவினி மந்திரத்தை ஜபிக்க, மீண்டும் கசன் உயிரோடு திரும்பி விட்டான்.


தங்களுடைய குரு இவனை மீண்டும் மீண்டும் பிழைக்க வைக்கிறார் என்று கோபம் கொண்ட அசுரர்கள், மீண்டும் ஒரு சமயம், மூன்றாவது முறையாக கசன் மாட்டி கொண்ட போது, அவனை கொன்று, கொளுத்தி, மாவாக பொடித்து, மதுவில் சேர்த்து அந்த ப்ராம்மணரான சுக்ராச்சாரியாருக்கே கொடுத்து விட்டனர், அவரும் குடித்து விட்டார்.

ततस्तृतीयं हत्वा तं दग्ध्वा कृत्वा च चूर्णशः।

प्रायच्छन्ब्राह्मणायैव सुरायामसुरास्तथा।।


மீண்டும் தேவயானி அழுது பிழைக்க வைக்க வற்புறுத்தினாள்.

அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியார், சஞ்சீவினி மந்திரத்தை ஜபிக்க, அவர் வயிற்றில் தான் கசன் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டார்.


தேவயானியிடம் "தான் வேண்டுமா? கசன் வேண்டுமா" என்று கேட்டார்.

किं ते प्रियं करवाण्यद्य वत्से

वधेन मे जीवितं स्यात् कचस्य।


தேவயானி அழுது கொண்டே, "கசன் இல்லாமல் எனக்கு உலகில் சுகம் இல்லை. நீங்கள் இல்லாமல் நான் வாழவும் முடியாது" என்றாள்.

कचस्य नाशे मम शर्म नास्ति

तवोपघाते जीवितुं नास्मि शक्ता।।


பிராம்மணன் மட்டுமே சஞ்சீவினி மந்திரத்தை கற்று அதில் ஸித்தி அடைய முடியும். உள்ளே இருக்கும் கசன் கூட பிராம்மணன் தான்.

ஆதலால், கசனிடம் "சஞ்சீவினி மந்திரத்தை கற்று கொடுத்து, பிறகு அவனை உயிர்ப்பிக்க' முடிவு செய்தார். 

குழந்தாய்! நீ என்னால் பிழைக்கப்பெற்று, நீ என் சரீரத்திலிருந்து வெளி வர போவதால், நீ எனக்கு புத்ரனாகிறாய். நீ என் புத்ரனாகி என்னை பிழைக்கவும் செய்.  

पुत्रो भूत्वा भावय भावितो मां 

अस्मद् देहाद् उपनिष्क्रम्य तात।


அவன் ஒழுக்கமானவன் என்பதால், வெளியே வந்த பிறகு, தன்னை பிழைக்க செய்யுமாறும் கேட்டு கொண்டார்.


குருவிடம் வித்தையை கற்று கொண்ட கசன், அந்த மந்திரத்தை ஜபித்து கொண்டே, அவருடையாய் குக்ஷியை (வயிற்றை) கிழித்து கொண்டு வெளி வந்தான்.

गुरोः सकाशात्समवाप्य विद्यां

भित्त्वा कुक्षिं निर्विचक्राम विप्रः।


விழுந்து கிடந்த சுக்ராச்சாரியாரை தான் ஜபம் செய்து உயிர்ப்பிக்க செய்தான். 

உடனே கசன், அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியாரின் காலில் விழுந்து, "கல்வி தாகம் உள்ளவனுக்கு எந்த ஆசிரியர் காதுகளில் கல்வியை போதிக்கிறாரோ, அவர் அவனுக்கு தகப்பனாகவும், தாயாகவும் ஆகிறார். அவர் செய்த இந்த பெரிய உபகாரத்துக்கு, பதிலாக அந்த ஆசிரியருக்கு எந்த தீங்கும் நினைக்க மாட்டான். அப்படிப்பட்ட கல்வி அறிவை தந்த ஆசிரியரை எவன் பூஜிக்காமல் இருக்கிறானோ, அவன் புகழ் அழியும், அவன் பாப லோகங்களையே அடைவான்

என்று சொன்னான்.

यः श्रोत्रयो: अमृतं सन्निषिञ्चेद् विद्याम् अविद्यस्य यथा त्वमार्यः।

तं मन्येऽहं पितरं मातरं च तस्मै न द्रुह्येत्कृतमस्य जानन्।।

ऋतस्य दातारम् अनुत्तमस्य निधिं निधीनामपि लब्धविद्याः।

ये नाद्रियन्ते गुरुम् अर्चनीयं पापाँल्लोकांस्ते व्रजन्त्यप्रतिष्ठाः।।

இப்படி அழகாக பேசிய கசனை கண்ட அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், தான் மது குடித்ததாலும், அதனோடு பிரியமான கசனையும் தாம் குடித்ததையும் நினைத்து, அதனால் ஏமாற்றப்பட்டதையும் அறிந்து பெரும் கோபம் கொண்டார். 

அந்த கோபத்திலும், ப்ராம்மணர்களுக்கு நன்மை கிடைக்கவேண்டும் என்று எண்ணி, இவ்வாறு சொன்னார்.


"இன்று முதல் எந்த பிராம்மணன் அறிவு கெட்டு மது பானம் செய்வானோ, அவன் புத்தி கெடும். அதனால் தர்மத்தை விடுவான். ப்ரம்மஹத்தி செய்த பாபத்தை மது அருந்தியதால் இவன் பெற்று வாழும் லோகத்திலும், பர லோகத்திலும் இகழப்படுவான்.

என்னால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த பிராம்மண தர்மத்தை தங்கள் குருவிடம் பாடம் பயின்ற அனைத்து சாதுக்களான ப்ராம்மணர்களும், தேவர்களும் மற்றும் எல்லா மக்களும் கேட்க கடவீர்" என்றார்.

यो ब्राह्मणो अद्यप्रभृति इह कश्चित्  मोहात् सुरां पास्यति मन्द-बुद्धिः।

अपेतधर्मा ब्र्हमहा च एव स स्या- स्याद् अस्मिं लोके गर्हितः स्यात्परे च।।

मया चैतां विप्र धर्मोक्ति सीमां मर्यादां वै स्थापितां सर्वलोके।

सन्तो विप्राः शुश्रुवांसो गुरूणां देवा लोकाश्चोपशृण्वन्तु सर्वे।।


பிறகு, விதியினால் மதி இழந்த அசுரர்களையும் அழைத்து, இவ்வாறு சொன்னார்.

"அசுரர்களே! நீங்கள் முட்டாள்களாக இருக்கிறீர்களே! நீங்கள் செய்த செயலால், கசன் தான் நினைத்த காரியத்தில் வெற்றி பெற்று விட்டான். 

பிரம்மாவுக்கு நிகராக, இனி இவனும் எனக்கு சமமாக அமர போகிறான்.

தேவர்களுக்காக, யாரும் செய்ய துணியாத செயலை செய்து சாதித்து விட்டான்.

இவனுடைய புகழ் அழியாததாகி விட்டது.

இவன் இனி யஞ பாகத்துக்கும் உரியவனாகி விட்டான்."

என்றார்.

आचक्षे वो दानवा बालिशाः स्थ सिद्धः कचो वत्स्यति मत्सकाशे।

सञ्जीविनीं प्राप्य विद्यां महात्मा तुल्यप्रभावो ब्राह्मणो ब्रह्मभूतः।।

योऽकार्षीद्दुष्करं कर्म देवानां कारणात्कचः। 

न तत्किर्तिर्जरां गच्छेद्याज्ञीयश्च भविष्यति।।

பதில் பேசமுடியாமல் திகைத்து நின்ற தானவர்கள் (அசுரர்கள்), திரும்பி சென்றனர்.

एतावदुक्त्वा वचनं विरराम स भार्गवः।

दानवा विस्मयाविष्टाः प्रययुः स्वं निवेशनम्।।


அதன் பிறகு, கசன், அசுர குருவான சுக்ராச்சாரியாரிடம் 1000 வருடங்கள் தொடர்ந்து பணிவிடை செய்து, பிறகு தன் தேவ லோகத்துக்கு புறப்பட தயார் ஆனான்.

गुरोरुष्य सकाशे तु दश वर्षशतानि सः।

अनुज्ञातः कचो गन्तुमियेष त्रिदशालयम्।।


கசன் கிளம்புவதை கண்ட தேவயானி, "அங்கிரஸ ரிஷியின் பேரனே ! நீங்கள் ஒழுக்கத்தாலும், உங்களின் குலத்தாலும், உங்களின் கல்வியினாலும், உங்களின் தவத்தினாலும், புலன்களை அடக்கி இருந்ததாலும் நீங்கள் சோபிக்கிறீர்கள். எப்படி என் தந்தையான சுக்ராச்சாரியாருக்கு உங்கள் பாட்டனார் அங்கிரஸர் மரியாதைக்கு பாத்திரமானவரோ, அது போல உங்கள் தந்தையான ப்ருஹஸ்பதி எனக்கு மரியாதைக்கு பாத்திரமானவர். பூஜிக்கத்தக்கவர். நான் சொல்வதை கேளுங்கள். நீங்கள் பிரம்மச்சர்ய விரதத்தில் இருந்த போது, நான் எப்படி கட்டுப்பாடுடன் நடந்து கொண்டேனோ, அது போல, வித்யை கற்ற பிறகு, நீங்கள் அன்புள்ள என்னிடம் பிரியம் வைக்க தகுதி பெறுகிறீர்கள். வேத மந்திரங்கள் சொல்லி, சாஸ்த்திரப்படி என்னை பாணிக்கிரஹணம் செய்து கொள்ளுங்கள்" என்று கேட்டாள்.

ऋषे: अङ्गिरसः पौत्र वृत्तेनाभिजनेन च।

भ्राजसे विद्यया चैव तपसा च दमेन च।।

ऋषिर्यथाङ्गिरा मान्यः पितुर्मम महायशाः।

तथा प्रान्यश्च पूज्यश्च मम भूयो बृहस्पतिः।।

एवं ज्ञात्वा विजानीहि यद्ब्रवीमि तपोधन।

व्रतस्थे नियमोपेते यथा वर्ताम्यहं त्वयि।।

स समावृतविद्यो मां भक्तां भजितुमर्हसि।

गृहाण पाणिं विधिवन्मम मन्त्रपुरस्कृतम्।।


"குற்றமில்லாதவளே! உன்னுடைய தந்தையை நான் எப்படி பூஜிக்கிறேனோ, அந்த அளவுக்கு உன்னை பூஜிக்கிறேன். நீ உண்மையில் அதை விட பூஜிக்க தகுதியானவள். 

நீ உன் தந்தையான சுக்ராச்சாரியாருக்கு உயிரை விட ப்ரியமானவள். குரு புத்ரியே! நீ தர்மப்படி பூஜிக்க தகுந்தவள். 

தேவயானி! என் குருவும், உன் தகப்பனாருமான சுக்ராச்சாரியார் எப்படி என்னால் பூஜிக்க தகுதி உள்ளவரோ! அது போல நீயும் பூஜிக்க தகுந்தவள். ஆதலால் நீ இவ்வாறு கேட்க கூடாது" என்றான் கசன்.

पूज्यो मान्यश्च भगवान्यथा तव पिता मम।

तथा त्वमनवद्याङ्गि पूजनीयतरा मम।।

प्राणेभ्योऽपि प्रियतरा भार्गवस्य महात्मनः।

त्वं भत्रे धर्मतः पूज्या गुरुपुत्री सदा मम।।

यथा मम गुरुर्नित्यं मान्यः शुक्रः पिता तव।

देवयानि तथैव त्वं नैवं मां वक्तुमर्हसि।।


தேவயானி கசனை பார்த்து, "நீங்கள் அங்கிரஸரின் பிள்ளையும் தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதிக்கு தான் பிள்ளை. என் தந்தைக்கு பிள்ளை இல்லை நீங்கள். நீங்கள் எனக்கு பூஜிக்கதக்கவராகவும், கௌரவிக்க தக்கவராகவும் இருக்கிறீர்கள். கசனே! நீங்கள் பலமுறை அசுரர்களால் கொல்லப்பட்ட போதும், ஆரம்பம் முதலே நான் உங்கள் மீது வைத்து இருந்த அன்பை நினைத்து பார்க்க வேண்டும். அன்பினாலும் ஆசையினாலும் நான் உங்களிடம் காட்டிய அன்பை நீங்கள் அறிவீர்கள். உங்களிடம் பற்று உள்ள என்னை, குற்றம் செய்யாத என்னை நீங்கள் கை விட கூடாது" என்றாள்  

गुरुपुत्रस्य पुत्रो वै न त्वं पुत्रश्च मे पितुः।

तस्मात्पूज्यश्च मान्यश्च ममापि त्वं द्विजोत्तम।।

असुरैर्हन्यमाने च कच त्वयि पुनःपुनः।

तदाप्रभृति या प्रीतिस्तां त्वमद्य स्मरस्व मे।।

सौहार्दे चानुरागे च वेत्थ मे भक्तिमुत्तमाम्।

न मामर्हसि धर्मज्ञ त्यक्तुं भक्तामनागसम्।।


"தேவயானி! செய்ய கூடாத காரியத்தில் என்னை நீ ஏவ கூடாது! நீ என் விஷயத்தில் கருணை செய். எனக்கு நீ குருவுக்கும் மேலான குரு. சந்திரனை போன்ற முகமுள்ளவளே! இனியவளே! கோபமுள்ளவளே! நீ எந்த சுக்ராச்சாரியார் வயிற்றில் வசித்தாயோ, நானும் அதே வயிற்றில் தான் வசித்தேன்! தர்மப்படி நீ எனக்கு சகோதரி ஆனாய். ஆதலால் நீ இவ்வாறு சொல்லாதே! குருகுலத்தில் சுகமாக வசித்தேன். எனக்கு கோபமில்லை. உன்னிடம் நான் விடைபெற்று கொள்கிறேன்! செல்கிறேன்! எனக்கு மங்களம் உண்டாக நீ பிரார்த்தனை செய். தர்மத்துக்கு விரோதமின்றி நான் இருந்தேன். சோம்பல் இல்லாமல் என் குருவான சுக்ராச்சாரியாருக்கு எப்பொழும் பணிவிடை செய்து கொண்டிரு" என்று சொன்னான் கசன். 

अनियोज्ये नियोक्तुं मां देवयानि न चार्हसि।

प्रसीद सुभ्रु त्वं मह्यं गुरोर्गुरुतरा शुभे।।

यत्रोषितं विशालाक्षि त्वया चन्द्रनिभानने।

तत्राहमुषितो भद्रे कुक्षौ काव्यस्य भामिनि।।

भगिनी धर्मतो मे त्वं मैवं वोचः सुमध्यमे।

सुखमस्म्युषितो भद्रे न मन्युर्विद्यते मम।।

आपृच्छे त्वां गमिष्यामि शिवमाशंस मे पथि।

अविरोधेन धर्मस्य स्मर्तव्योऽस्मि कथान्तरे।

अप्रमत्तोत्थिता नित्यमाराधय गुरुं मम।।

 

"அறம் என்ற தர்மத்தை மீறாத காமம் தவறல்ல. அந்த காமத்தை உன்னிடம் கேட்ட என்னை நீ விட்டு விடுவாயானால், நீ கற்ற சஞ்சீவினி வித்யை உனக்கு பலன் கொடுக்காமல் போகட்டும்" என்று கடிந்து பேசினாள்.

यदि मां धर्मकामार्थे प्रत्याख्यास्यसि याचितः।

ततः कच न ते विद्या सिद्धिमेषा गमिष्यति।।  


"நீ என்னுடைய குருவின் பெண் என்பதால் ஒன்றும் செய்யாமல் விடுகிறேன். உன் குற்றத்தினால் அல்ல. குருவும் எனக்கு உன்னை சபிக்க அனுமதி கொடுக்கவில்லை. நீ விரும்பினால், இன்னும் ஆசைதீர சபித்து கொள். ரிஷிகள் சொன்ன தர்மத்தை நான் சொன்னேன். நான் சாபத்திற்கு தகுதி அற்றவன் என்றாலும், உன்னுடைய காமத்தால் சபிக்கப்பட்டேன். உன்னுடைய காமம் நிறைவேறாது. நீ பிராம்மண பெண்ணாக பிறந்தும், உன்னை எந்த ரிஷி புத்திரனும் மணம் செய்து கொள்ள மாட்டான். 

நீ என்னை பார்த்து "உன் வித்யை பலிக்காது" என்று சொன்னாய். 

அப்படியே இருக்கட்டும்.

நான் இந்த வித்யையை யாருக்கு சொல்லி தருகிறேனோ அவர்களுக்கு பலத்தால் போதும்."

என்று சொல்லிவிட்டு, அந்த பிராம்மண ஸ்ரேஷ்டனான் கசன் உடனே விரைவாக சொர்க்க லோகம் நோக்கி கிளம்பினான்.

गुरुपुत्रीति कृत्वाऽहं प्रत्याचक्षे न दोषतः।

गुरुणा चाननुज्ञातः काममेवं शपस्व माम्।।

आर्षं धर्मं ब्रुवाणोऽहं देवयानि यथा त्वया।

शप्तो ह्यनर्हः शापस्य कामतोऽद्य न धर्मतः।।

तस्माद्भवत्या यः कामो न तथा स भविष्यति।

ऋषिपुत्रो न ते कश्चिज्जातु पाणिं ग्रहीष्यति।।

फलिष्यति न ते विद्या यत्त्वं मामात्थ तत्तथा।

अध्यापयिष्यामि तु यं तस्य विद्या फलिष्यति।।


அவன் வந்ததை கண்ட இந்திரன் முதலான தேவர்கள், ப்ருஹஸ்பதியை முதலில் கௌரவித்து, பிறகு அவர் மகனான கசனை பார்த்து "எங்களுக்கு பயன் கிடைப்பதற்காக, ஆச்சர்யமான காரியத்தை நீ செய்ததால், உன் புகழ் என்றுமே அழியாது. நீ யஞ பாகத்திற்கு உரியவன் ஆனாய்" என்று வாழ்த்தினர்.