Followers

Search Here...

Thursday 7 December 2017

புருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? யார் ஒருவரே புருஷன்?

புருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?

"புருஷன்" என்ற சொல்லுக்கு "ஆண்" என்று அர்த்தம்.


பொதுவாக வேதம்,
"சஹஸ்ர சீர்ஷ: புருஷ:" 
என்று பரப்ரம்மமான ஈஸ்வரனை "புருஷன்" என்று மட்டும் சொல்லி அழைக்கிறது.

வேதம், பரப்ரம்மான ஈஸ்வரனை "சஹஸ்ர சீர்ஷ: புருஷ:" என்று சொல்லும் போது, பரப்ரம்மத்தை "புருஷன்" என்று மட்டும் சொல்வதால்,
அவர்
  • இந்திரனா? 
  • அக்னியா? 
  • ருத்ரனா? 
  • விஷ்ணுவா? 
  • ப்ரம்மாவா? 

என்ற சந்தேகம் எழுந்து விடுகிறது.

'அனைத்து உலகத்திற்கு காரணமானவன், காணும் அனைத்துமாகவும் இருக்கும் புருஷன் எவரோ, அவரே பரப்ரம்மம்"
என்று  மட்டும் வேதம் சொல்கிறது.

"சஹஸ்ர சீரஷ: புருஷ:"
என்ற இடத்தில் மட்டுமல்ல,
வேதம் பல இடங்களில் இந்த "புருஷ" என்ற சொல்லை மட்டும்  பயன்படுத்துகிறது.

"புருஷயம் புருஷ மீக்ஷதே"
என்று வேதம் இன்னொரு இடத்தில் சொல்கிறது.
அதாவது,
"எல்லாருடைய இதயத்திலும் ஒரு புருஷன் அந்தர்யாமியாக இருக்கிறார். அந்த புருஷனை உள்ளுணர்ந்து பார்"
என்கிறது வேதம்.

இந்த வேத வாக்கியத்தின் அர்த்தத்தை ஒத்த தமிழ் சொல் தான் "கடவுள்".
"கடவுள்" என்ற சொல்லுக்கு
"கடந்து உள்ளே பார், உனக்குள்ளும் அந்தர்யாமியாக உள்ள புருஷன் தெரிவான்" என்று பொருள்.

இன்னொரு இடத்தில்,
"பூர்வமேவா: இஹா சமிதி, தத் புருஷஸ்ய புருஷத்வம்"
என்று வேதம் சொல்கிறது.
அதாவது,
"எல்லா படைப்புகளுக்கும் முன், யாராலும் படைக்கப்படாத அந்த புருஷன் மட்டுமே இருந்தார்" என்றும் வேதம் சொல்கிறது.

'புருஷன்', 'புருஷன்' என்று மட்டும் வேதம் பல இடங்களில், அந்த பரப்ரம்மத்தை சொல்வதால்,
வேதத்தில் கூறப்பட்ட "ப்ரம்மா, ருத்ரன், விஷ்ணு மற்றும் பிற தேவதைகளிடத்தில்" பக்தி உள்ளவர்கள்,
வேதத்தில் கூறப்பட்ட அந்த "பரப்ரம்மம்", அந்த "புருஷன்", அந்த "ஈஸ்வரன்",
"நாங்கள் வழிபடும் தெய்வமே" என்று பயன்படுத்துகின்றனர்.

"புருஷயம் புருஷ மீக்ஷதே"
என்ற வேத வாக்கின் படி, "அந்த புருஷன், எல்லாருடைய இதயத்திலும் அந்தர்யாமியாக இருக்கிறான்" என்பதால்,
"அந்த பரமாத்மா தேவதைகளுக்கு உள்ளும் இருக்கிறான்" என்பதால், பரப்ரம்மமாகிய புருஷனுக்கு இது ஒன்றும் குறையில்லை.

இதன் காரணமாக,
ருத்ரனையோ, ப்ரம்மாவையோ, "புருஷன், ஈஸ்வரன், பரமாத்மா என்று வணங்காதே" என்று கட்டுப்பாடு விதிக்கவில்லை நம் தர்மம்.
ஆனால் உண்மையான பரப்ரம்மம் யார்?

"புருஷன் என்று தானே வேதம் சொல்லி இருக்கிறது. அது எங்கள் தெய்வத்தை தான் சொல்கிறது"
என்று பக்தனாய் இருப்பவன், தன் தன் இஷ்ட தெய்வத்துக்கு "புருஷாய நம:" என்ற சொல்லை, "ஈஸ்வரன்" என்ற சொல்லை பயன்படுத்திக் கொள்கிறான்.

வேதம் எந்த இடத்திலாவது, யார் அந்த புருஷன்? என்று சொல்லி இருக்கிறதா? என்று கவனித்தால்,
வேதத்தின் உண்மையான அபிப்ராயத்தை கண்டுபிடிக்க முடிகிறது.

புருஷ சூக்தத்தில், யார் அந்த புருஷன்? என்று வேதம், ஒரு இடத்தில் தெளிவாக சொல்கிறது.
" ह्रीश्च॑ ते ल॒क्ष्मीश्च॒ पत्न्यौ॓"
என்று சொல்கிறது.
"ஹ்ரீஸ்சம் தே லக்ஷ்மீஸ்ச பத்ன்யௌ"
என்று சொல்லும் போது, வேதம் "அந்த புருஷனின் பத்னி லட்சுமி" என்று சொல்கிறது.




"லட்சுமி பத்னி" என்றதும், மற்ற தெய்வங்கள் "நான் அல்ல" என்று விலகினர்.
"ஹ்ரீஸ்சம் தே லக்ஷ்மீஸ்ச பத்ன்யௌ"
என்று சொல்லும் போது,
வேதம் "யாராலும் படைக்கப்படாத அந்த புருஷன் யார்?"
என்ற கேள்விக்கு, விடை கொடுத்து விடுகிறது.

"அந்த பரப்ரம்மம், அந்த புருஷன் விஷ்ணுவே தான்"
என்று வேதம் ஊர்ஜிதப்படுத்துகிறது.

மேலும், வேதம், "ஸ ஏக புருஷ:" என்றும் சொல்கிறது.
அதாவது, "அவர் ஒருவரே புருஷன்" என்று சொல்கிறது.

"அவர் ஒருவரே புருஷன்" என்று வேதம் சொல்வதால்,
ஆண் வர்க்கத்தில் உள்ள "தேவதைகள், மனிதர்கள், விலங்குகள் எல்லாம்", அந்த புருஷனான விஷ்ணுவுக்கு முன்னால், "ஒரு பெண் போல" என்று அர்த்தமாகிறது.

விஷ்ணுவே புருஷன்.
"விஷ்ணு ஒருவரே புருஷன்" என்பதை மகாலட்சுமி, விஷ்ணுவை மணந்த போது நடந்த நிகழ்ச்சியை கண்டே புரிந்து கொள்ளலாம்.

"பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்துக்கொள்ளுங்கள்"
என்று தேவர்களுக்கு விஷ்ணு பகவான் சொல்ல,
அதை கடைந்த போது
முதலில் ஆலகால விஷம் வர, அதை சிவபெருமான் குடித்து "நீலகண்டன்" என்றும், அமிர்தம் சாப்பிடாமல் விஷத்தை சாப்பிட்டாலும் "தான் அமரன்" என்று காட்டினார் தேவர்களுக்கு.
அதன் பின்பு
  • ஐராவதம் என்ற யானை,
  • காமதேனு என்ற பசு,
  • கற்பக விருட்சம்,
  • புஷ்பக விமானம்,
  • பாரிஜாத மரம் 

என்று ஒவ்வொன்றாக தோன்றின.
இவைகளை தேவர்களும், அசுரர்களும் பங்கு போட்டுக்கொண்டனர்.

அதன் பின்,
ஸ்ரீமகாலட்சுமி கையில் செந்தாமரை மலருடன் எழுந்தருளினாள்.
தேவர்களும், அசுரர்களும் "தனக்கு மாலை இடுவாள்" என்று நினைத்து வரிசையில் நின்றனர்.


விஷ்ணு பகவான், இதில் கலந்து கொள்ளாமல் தள்ளி நிற்பதை பார்த்தாள், மகாலட்சுமி.

மகாலட்சுமிக்கு, பரம புருஷனான விஷ்ணுவை பார்த்த பிறகு, அங்கு கூடி இருந்த முப்பது முக்கோடி தேவர்கள், அசுரர்கள் என்று யாரைப் பார்த்தாலும் பெண்களாகவே தோன்ற,
ஆண்கள் கூட்டத்தில், ஒரு வித தயக்கமும் இல்லாமல், நடந்து சென்று, விஷ்ணுவின் கழுத்தில் மாலை இட்டாள்.
வேதம் "புருஷன்" என்று சொல்லும் போது, விஷ்ணு மட்டுமே புருஷன் என்று சொல்லிவிட்டது.

மற்றவர்கள் எல்லாம், அவருக்கு எதிராக பெண்ணை போன்றவர்கள் என்று சொல்வதற்கு காரணம் உண்டு.

பொதுவாக, உலக வழக்கில், பெண் என்பவள் பிறந்தது முதல்,
  • பெற்றோர்களாலும்,
  • தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களாலும்,
  • கல்யாணம் ஆகி கணவனாலும்,
  • பின் குழந்தைகளாலும் 

பாதுகாக்கப்படுகிறாள்.

இவர்கள் சொல்படி. அந்தந்த காலங்களில் கேட்டு நடக்கிறாள். பாதுகாக்கப்படுகிறாள்.

சட்டம் இல்லாத, ஒழுங்கீனமான தேசங்களில் கூட, ஆண்கள் எப்படியும் வாழ்ந்து விட முடியும்.
ஆனால் பெண்ணுக்கு பாதுகாப்பு வீட்டில் இவர்களாலும், சமுதாயத்தில் சட்டம் ஒழுங்கு போன்றவற்றாலும் கட்டாயம்  தேவைப்படுகிறது.

ஒரு ஆணுக்கு இந்த பயமில்லாததால், "பெண்" என்ற இனத்தை வைத்து பார்க்கும் போது, உலக ரீதியில் இவர்கள் "ஆண்" என்ற தகுதியை பெற்றனர்.

ஆனால், வேதம்
"விஷ்ணுவே புருஷன்"
என்று சொல்லிவிட்டு, புருஷன் என்ற சொல்லின் தகுதி என்ன?
என்றும் சொல்கிறது.

விஷ்ணு ஒருவனே புருஷன் என்று சொல்வதற்கு காரணம் என்ன? என்று கேட்டால், அவருடைய "நித்ய ஸ்வாதந்த்ரியமே" காரணம் என்கிறது வேதம்.

'நித்ய ஸ்வாதந்த்ரியம்' என்றால்,
"எப்பொழுதும் யாருக்கும் கட்டுப்பட்டவன் அல்ல"
என்று பொருள்.

"எப்பொழுதும், யாருக்கும் கட்டுப்படாதவனே, புருஷன்" 
என்று சொல்லும் வேதம், அந்த "புருஷனின் பத்னி லட்சுமி" என்கிறது.


"நாம் அனைவரும் அவருக்கு எதிரே 'நானும் புருஷன்' என்று நிற்க முடியாது" என்கிறது வேதம்.
"விஷ்ணுவுக்கு முன்னால், தேவர்களும் கைகூப்பி பாதுகாப்பு கேட்டனர்" 
என்று பார்க்கிறோம்.

'எப்பொழுதும், யாருக்கும் கட்டுப்படாதவனே, புருஷன்'
என்ற பெருமை விஷ்ணுவை தவிர மற்ற யாருக்கும் இல்லை என்று சொல்லும் போது,
மற்றவர்கள் அனைவரும் எப்பொழுதோ, யாருக்கோ கட்டுப்படுவார்கள் என்று புரிகிறது.
கட்டுப்படுவதாலேயே இது புருஷ லக்ஷணம் இல்லை என்கிறது.

சாதாரண ஜனங்களாக இருக்கும் நாம்,
  • தேசத்தால் அடிமைப்படுகிறோம்.
  • பசி போன்றவைகள் இருப்பதால், நம் உடம்புக்கே அடிமைப்படுகிறோம்.
  • நம் புலன்களுக்கு அடிமைப்படுகிறோம்.
  • விதிக்கு அடிமைப்படுகிறோம்.
  • செய்த கர்மத்துக்கு அடிமைப்படுகிறோம்,
  • காலத்துக்கு அடிமைப்படுகிறோம்,
  • தெய்வத்துக்கு அடிமைப்படுகிறோம்,
  • இயற்கைக்கு அடிமைப்படுகிறோம்,
  • பிற மனிதர்களுக்கு அடிமைப்படுகிறோம்.
  • குடும்பத்துக்கு அடிமைப்படுகிறோம்,
  • மனைவியாக இருந்தால் கணவனுக்கு அடிமைப்படுகிறோம்,
  • மனைவிக்கு கணவன் அடிமை,
  • இரண்டு பேரும் சேர்ந்து குழந்தைக்கு அடிமை.
  • பிள்ளைகள், அப்பா அம்மாவுக்கு அடிமை
  • எல்லோரும் சேர்ந்து அரசனுக்கு அடிமை.

இப்படி சார்ந்து வாழ வேண்டி இருப்பதாலேயே, வேதம், 
"விஷ்ணுவுக்கு முன்னால், அனைவரும் ஒரு ஸ்திரீயே" என்கிறது.

இப்படி எதற்கோ, யாருக்கோ அடிமைப்பட்டு இருப்பவர்களை, "புருஷன்" என்று எப்படி சொல்ல முடியும்?

யார் காலத்துக்கு அடிமை இல்லையோ !
யார் கர்மாவுக்கு அடிமை இல்லையோ !
யார் இயற்கைக்கு அடிமை இல்லையோ !
யார் தேசத்துக்கு அடிமை இல்லையோ !
யார் மனசுக்கு அடிமை இல்லையோ !
யார் யாருக்கும் அடிமை இல்லையோ !
யாருக்கு மேல் ஒரு தெய்வமும் இல்லையோ !
அவனே "புருஷன்"
என்கிறது வேதம்.



அவரே "விஷ்ணு" என்று அறிந்து "அவரிடம் பக்தி செய்" என்கிறது வேதம்.

"அவர் அபயம் (பயப்படாதே) என்று நமக்கு அணுகிரஹம் செய்துவிட்டால், உலகமே முயற்சி செய்தாலும், நம்மை அழிக்க முடியாது" என்கிறது வேதம்
"புருஷன்" என்று அவரவர் கணவனை அழைத்தாலும் கூட, 
மற்ற தேவதைகளை "புருஷன்" என்று அழைத்தாலும் கூட, 
புருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் ஸித்திக்கும் படியாக இருப்பது, 
அந்த பரப்ரம்மமான விஷ்ணுவே" 
என்று தீர்மானமாக சொல்கிறது வேதம்.

வேதம், "லட்சுமிபதி யாரோ அவரே புருஷன்" என்று சொல்லிவிட்டதால், புருஷன், பரமேஸ்வரன் "விஷ்ணுவே தான்" என்று ஊர்ஜிதப்படுத்துகிறது.
வாசுதேவனான "விஷ்ணுவே புருஷன்".
அவரே அவதாரம் செய்த விபவ அவதாரங்களில் மிகவும் நமக்கு நெருக்கமான அவதாரங்கள் "நரசிம்ஹ, ராம, கிருஷ்ண" அவதாரங்கள்.
ஸ்ரீ கிருஷ்ணரின் வாக்கில் இருந்து வந்த உபதேசம் "கிருஷ்ண கீதை" என்று சொல்லப்படாமல், "பகவத் கீதை" என்று குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம், "அவரே வாசுதேவன், அவரே பகவான், அவரே புருஷன்" என்பதால் தான்.

அவருடைய சரிதத்தை சொல்லும் போது, "கிருஷ்ண சரித்திரம்" என்று சொல்லாமல், பகவான் என்ற சொல்லை கொண்டு "பாகவதம்" என்று சொல்லப்படுகிறது.

வேதத்தை புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், மனிதனாக பிறந்தவன், ஸ்ரீ கிருஷ்ணன் சொன்ன "கீதையை தினமும் ஒரு ஸ்லோகம் உள்ளுணர்ந்து படித்தாலே, வேதத்தின் சாரம் புரியும்".
இந்த பகவத் கீதையிலும், ஸ்ரீ கிருஷ்ணன் "புருஷன்' என்ற சொல்லுக்கு அர்த்தத்தை சொல்கிறார் அர்ஜுனனுக்கு.
உத்தம புருஷஸ்த்வன்ய:
பரமாத்யேத் யுதாஹ்ருத: |
யோ லோகத்ரயம் ஆவிஷ்ய
விபர்த்தவ்யய ஈஸ்வர: ||
Chapter 15. 17th ஸ்லோகம்.
அதாவது,
அர்ஜுனா! உலகத்திற்கும், ஜீவன்களுக்கும் அப்பாற்பட்டு,  'சித்-அசித்'(ஜீவன், இயற்கை) என்ற அனைத்தையும் "நிர்வாகம் செய்யக்கூடிய, நிர்வாகம் செய்யும் திறனுடைய" புருஷோத்தமனாக 'நானே' இருக்கிறேன்.
என்று வேதத்தின் புருஷ சப்தத்தின் சாரத்தை கூறுகிறார்.


பரம புருஷனான வாசுதேவனை, ஸ்ரீ கிருஷ்ணனை ஆராதிப்போம்.
அவர் அபயம் கிடைக்க, பக்தி செய்வோம். 

Tuesday 5 December 2017

மஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Bangladesh)

மஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Bangladesh)


அங்க தேசம், வங்க தேசம் ஆகிய தேசங்கள் இந்தியாவில் உள்ள "வங்காள தேசத்தில்" (West Bengal)உள்ளது.

பௌண்ட்ரக தேசம், சுஹ்மா தேசம் இன்றைய வங்காள நாடு (Bangladesh).

அங்க தேசம் என்ற தேசம், இன்றைய வங்காள தேசத்தின் (West Bengal) மேற்கு திசையில் உள்ள ஒரு பகுதி.

வங்க தேசம் என்ற தேசம், இன்றைய வங்காள தேசத்தின் (West Bengal) கிழக்கு பகுதியையும், வங்காளத்தின் (bangladesh) மேற்கு பகுதியையும் சேர்த்த பகுதி.

பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து கொலை செய்ய நினைத்த துரியோதனனிடம் இருந்து தப்பித்து, சில காலம் மறைந்து வாழ்ந்தனர்.

புலிந்த தேசம் சென்று, பின்பு அங்கிருந்து பல இடங்கள் சென்று, இறுதியாக வங்க தேசத்தில் உள்ள 'ஏகசக்ரம்' என்ற ஊரில், ஒரு பிராம்மண குடும்பத்தில் தங்கினர்.
இந்த வங்க தேசத்தில், பகாசுரன் என்ற அரக்கன் மனித மாமிசம் சாப்பிட்டு அங்கிருந்தவர்களை பயமுறித்திக்கொண்டிருந்தான்.
ஊர் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
பகாசுரனை பீமன் கொன்றான்.

இந்த அங்க தேசத்தில் ஒரு சமயம், மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான், தன் நெற்றி கண்ணால் காமதேவனை பொசுக்கிய பொழுது, அவன் அங்கம் சிதறிய இடம் என்பதால், அங்க தேசம் என்ற பெயர் பெற்றது.

இந்த அங்க தேசத்தை, பல சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர்.

பீஹார் என்று இன்று அழைக்கப்படும் தேசம், அன்று மகத தேசம் என்று அழைக்கப்பட்டது.
ஜராசந்தன் மகத தேச (பீஹார்) நாட்டு அரசன்.

ஜராசந்தன், அங்க தேசத்தின் பல பகுதியையும் கைப்பற்றி இருந்தான்.

ஜராசந்தன், துரியோதனன் இருவரும் நட்பு உள்ளவர்கள்.

துரியோதனனின் நட்புக்காக, ஜராசந்தன் "அங்க தேசத்தை" கர்ணனுக்கு கொடுத்து, அவனை சிற்றரசன் ஆக்கினான்.

அங்க தேச அரசர்கள் யாவரும்,
யுதிஷ்டிரர் நடத்திய ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

யாகத்திற்கு ஆகும் வரவு-செலவு, யாகத்திற்கு வந்த அனைவருக்கும் வசதி, உணவு ஆகும் வரவு-செலவு பார்க்க தன் கஜானாவின் சாவியை, யுதிஷ்டிரர், அங்க அரசன் கர்ணனிடம் கொடுத்தார்.

கர்ணன் துரியோதனின் பக்கம், மேலும் இவன் தானம் உலகம் அறிந்தது, என்று தெரிந்தும், தன் கஜானாவை காலி செய்தாலும் பரவாயில்லை, யாகமும், வந்த அனைவரும் குறை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில், கர்ணனை நியமித்தார் யுதிஷ்டிரர்.
கர்ணனை விட உதார குணம் உடையவர் "யுதிஷ்டிரர்" என்ற உண்மையை, இந்த நிகழ்ச்சியில் நாம் அறியலாம்.
பௌண்ட்ரக தேச அரசன், ஸ்ரீ கிருஷ்ணரின் புகழில் காழ்ப்புணர்ச்சி கொண்டவன்.
இதன் காரணமாக, ஸ்ரீ கிருஷ்ணன் போலவே உடை உடுத்தி, கிருஷ்ணனை போலவே தானும் பலசாலி, மாயம் தெரிந்தவன் என்று சொல்லி, தன் பெயரையும் "வாசுதேவ கிருஷ்ணன்" என்று வைத்துக் கொண்டான். பௌண்ட்ரக வாசுதேவன் என்றும் அழைத்தனர்.


பௌண்ட்ரக வாசுதேவன் வங்க தேசத்தின் கிழக்கு பகுதியை கைப்பற்றினான்.

அங்க தேச அரசன் 'கர்ணன்' வங்க தேசத்தின் மேற்கு பகுதியை கைப்பற்றினான்.

ப்ரகஜ்யோதிச (அசாம்) தேச அரசன் 'பகதத்தா' வங்க தேசத்தின் வடக்கு பகுதியை கைப்பற்றினான்.

பௌண்ட்ரக வாசுதேவன், மகத அரசன் (பீஹார்) ஜராசந்தனிடம் நட்பு கொண்டவன்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்காக திக்விஜயம் புறப்பட்ட பீமன், சுஹ்ம தேசம், மற்றும் பௌண்ட்ரக தேசத்து அரசர்களையும் தோற்கடித்தான்.

பௌண்ட்ரக வாசுதேவனை போரில் தோற்கடித்து அவன் வைத்து இருந்த பெரிய சங்கை பீமன் எடுத்துக்கொண்டு சென்றான்.

பௌண்ட்ரக வாசுதேவன் யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டான்.

ஒரு சமயம், பௌண்ட்ரக வாசுதேவன் துவாரகைக்கு கடிதம் அனுப்பி, ஸ்ரீ கிருஷ்ணரை போருக்கு அழைத்தான்.
"நீ வாசுதேவனா? இல்லை நானா? என்று பார்த்துவிடலாம்" என்றான்.

சிரித்துக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணர், "அப்படி போர் புரிந்து இறக்க ஆசையிருந்தால், சரி" என்றார்.

பௌண்ட்ரக வாசுதேவனுக்கு துணையாக காசி ராஜனும் துணைக்கு வந்து போரிட்டான்.
போரில் பௌண்ட்ரக வாசுதேவன் ஸ்ரீ கிருஷ்ணரை போன்று நீல நிறத்தில் இருப்பதற்காக, சாயம் பூசிக்கொண்டு வந்திருந்தான்.
இதை பார்த்த ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிரிப்பு தாளவில்லை.

"இப்படி ஒரு கணவனுடன், உன் மனைவி எப்படி குடும்பம் நடத்துகிறாள்?" என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
இதனை புரிந்து கொள்ளாமல் மேலும் சண்டைக்கு இழுத்தான்.
ஸ்ரீ கிருஷ்ணர் தன் சுதர்சன சக்கரத்தின் மூலம் காசி ராஜன் தலையையும், பௌண்ட்ரக வாசுதேவன் தலையையும் கொய்து எறிந்தார்.

அங்க தேச, வங்க தேச, பௌண்ட்ரக தேச அரசர்கள் யாவரும் துரியோதனின் பக்கம் நின்று போர் புரிந்தனர்.
இந்த "பௌண்ட்ரம்" என்ற சங்கை, மஹா பாரத போரில், பீமன் விண்ணை பிளக்கும் வகையில் ஊதி, எதிரிகளை கலங்கடித்து, தான் போருக்கு தயார் என்று ஊர்ஜிதப்படுத்தினான்.

போரில் பௌண்ட்ரக வாசுதேவன் இல்லாது இருந்தாலும், அவன் படைகள் துரியோதனின் பக்கம் நின்று, அர்ஜுனனுக்கு எதிராக கடும் போர் புரிந்தனர்.

மஹா பாரத போரில், பீஷ்மர், துரோணர் வீழ்ந்த பின், அங்க அரசன் கர்ணன் தலைமை ஏற்றான்.

கர்ணனுக்கு, தேர் ஓட்ட மாத்ர அரசர் - சல்லியன் (punjab in today's pakistan) நியமிக்கப்பட்டார்.
இது சல்லியனை அவமானம் படுத்துவதாக இருந்தது. இருந்தாலும் சம்மதித்தார்.


போர் புரியும் சமயத்தில், இருவருக்கும் பல வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் கொண்ட கர்ணன், ஓரு சமயம், த்ரிதராஷ்டிரன் சபையில், வேதம் கற்ற ப்ராம்மணர்கள், 'எந்த ஒரு காலத்திலும் வாலிகர்களுடனும், அதே போன்ற செயல்களில் ஈடுபடும் மாத்ர தேசத்தவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ள கூடாது' என்று கூறியதை நினைவு கூறி, 'நீ அந்த தேச அரசன் தானே?' என்றான்.

வேத மார்க்க வழியில் நடப்பவனை, 'நீ ஒரு வாலிகன்' என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம்.
சல்லியன் பெரும் அவமானம் கொண்டார்.
இப்படிப்பட்ட வாக்குவாதங்களின் காரணமாக, இக்கட்டான சமயத்தில், தேர் குழியில் சிக்கி கொண்ட சமயத்தில், சல்லிய அரசர், தேரை விட்டு இறங்கி சென்று விட்டார். அங்க அரசன், கர்ணன் அர்ஜுனன் பொழிந்த அம்பு மழையில் மடிந்தான்.

போர் முடிந்த பின், அஸ்வமேத யாகத்திற்காக திக் விஜயம் செய்த அர்ஜுனன், பௌண்ட்ரக தேச நகரத்து சிற்றரசர்களையும் தோற்கடித்து, திரும்பினான்.

Sunday 3 December 2017

மஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan எப்படி இருந்தது?

மஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan

"நிஷாத தேசம்", "மத்ஸ்ய தேசம்", "சால்வ தேசம்", "மால்வ தேசம்" ஆகிய தேசங்கள், இன்று ராஜஸ்தானில் உள்ளது.


மஹா பாரத காலத்துக்கும் முன் வாழ்ந்த சத்யவான்-சாவித்ரி தம்பதிகள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்.
சத்யவான் "சால்வ தேச" அரசன்.
சாவித்ரி "மால்வ தேச" இளவரசி.
சத்யவான் உயிரை பறித்த யமனை காணும் சக்தி பெற்றவளாக இருந்தாள்.

யமனிடம் தர்க்கம் செய்து, போன உயிரை திரும்பப்பெற்றாள்.
எம தர்மராஜன், இன்னும் "நூறாண்டுகள் வாழ்க" என்று ஆசிர்வதித்து விட்டு சென்றான்.
இது ஹிந்துக்களான அனைவருக்கும் தெரிந்த சரித்திரம்.

மத்ஸ்ய தேசம் என்பது யமுனை நதி ஓரத்தில், மீன் பிடித்து வாழும் ஒரு சமூகம்.
குரு அரசன் (உத்திரபிரதேசம்) சந்தனு, இந்த தேசத்தின் மீன் பிடிக்கும் தலைவனின் மகள் "சத்யவதி"யை பார்த்து திருமணம் செய்ய நினைத்தார்.

பீஷ்மர் தன் தந்தைக்காக, சபதம் செய்து, சத்யவதியின் குழந்தைகளே சந்தனுவுக்கு அடுத்து அரசனாகட்டும் என்று சபதம் செய்து, சத்யவதிக்கும், சந்தனு மகாராஜாவுக்கும் மணம் செய்து கொண்டனர்.
இந்த தியாகத்தால், "விரும்பிய பொழுது மரணம்" என்ற வரத்தை பெற்றார் பீஷ்மர்.
இதே தேசத்தில் மகா பாரத காலத்தில் இருந்து, எழுதிய வியாச பகவானும் அவதரித்தார்.

சால்வ அரசன், காசி தேசத்து இளவரசி "அம்பா"வை விரும்பினான்.

காசி அரசன், தன் 3 மகள்களுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்து இருந்தார்.
சாலவ அரசனும் இந்த  சுயம்வரத்திற்காக வந்தான்.

காசி ராஜன், குரு அரசன் 'விசித்ரவீர்யனுக்கு' அழைப்பு விடவில்லை. இதனால், பீஷ்மர் கோபத்துடன், காசி தேசத்துக்கு படையெடுத்தார்.

அங்கிருந்த அனைத்து அரசர்களையும், சால்வ அரசன் உட்பட, தன் பராக்ரமத்தால் வென்று, 3 இளவரசிகளையும் குரு தேசத்திற்கு கொண்டு சென்றார்.
"அம்பா" சால்வ அரசனை மணக்க இருந்ததாக சொல்ல, அம்பாவை சால்வ அரசனிடம் விட்டு சென்றார்.

காசியில் அம்பாவை காப்பாற்ற முடியாமல், பீஷ்மரிடம் தோற்றதால் அவமானம் அடைந்த சால்வ அரசன், ஒரு க்ஷத்ரியனாக இருப்பதால், அம்பாவை மணக்க முடியாது என்று மறுத்து விட்டான்.



இதனால் வேதனையும், பீஷ்மரிடம் கோபமும் கொண்டாள் அம்பா.

வாழ வழி இல்லாததால், தீ மூட்டி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
பின்னர், சிகண்டியாக துரௌபதிக்கு சகோதரனாக பிறந்தாள்.

நிஷாத தேச அரசன் பெயர் "நலன்".

நிஷாத அரசனும், கோசல அரசனும் (உத்திரபிரதேசம்) நண்பர்கள்.

இந்த நிஷாத தேசம், காடுகளும், மலைகளும் நிரம்பி இருந்தன.

பாண்டவர்களும், கௌரவர்களும் துரோணரிடம் பாடம் கற்று கொண்டிருந்த சமயம் அது.
இந்த காட்டு பகுதியில் சில நாள் தங்கி போருக்கான சஸ்திர பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

ஏகலைவன் என்ற வேடுவன், துரோணரின் குருகுலத்தில் வில் வித்தை கற்று கொள்ள ஆசைப்பட்டான்.
துரோணர் க்ஷத்ரியனுக்கு மட்டுமே "இந்த சஸ்த்ர வித்தைகள் கற்று தர முடியும்" என்று மறுத்து விட்டார்.

ஏகலைவன், மறைந்து நின்று பல நாள் இவர்கள் செய்யும் பயிற்சியினை பார்த்தான்.
பின்னர், துரோணரின் பாத மண்ணை எடுத்துக்கொண்டு, அதை ஒரு இடத்தில் வைத்து அவரை போலவே ஒரு சிலை வடித்து, பல வருடங்கள் பார்த்த வில் வித்தையை பயிற்சி செய்ய ஆரம்பித்தான்.

அவன் கொண்ட குருவின் பக்தி, வில் வித்தையில் அர்ஜுனனுக்கு நிகராக நிற்கும் அளவிற்கு திறமை தந்துவிட்டது.

ஒரு நாள், துரோணர் பாண்டவர்களுடன் காட்டில் நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு நாய் குறைக்க முடியாத படி, அதன் வாயை சுற்றியும், அதனை சுற்றியும் அம்புகள் தெய்க்கப்பட்டு இருந்தன. ஆச்சர்யமாக, அந்த நாய் ஒரு காயமும் அடையாதவாறு அமைக்கப்பட்டு இருந்தது.

இதை கண்டு அர்ஜுனனே ஆச்சர்யப்பபட்டான்.
தேடிப்பார்த்த போது, ஏகலைவன் எதிர் வந்தான். தன் குரு தன் முன் இருப்பதை கண்டு ஆனந்தத்தில் மகிழ்ந்தான். அவரை வணங்கி "உங்கள் மூலமே இதனை கற்றேன்" என்றான்.

துரோணர் இது உடனே கண்டிக்கப் பட வேண்டியது என்று நினைத்து, இது பேராபத்து என்றும் உணர்ந்து, "எனக்கு குரு தக்ஷிணையாக உன் கட்டை விரலை கொடு" என்றார்.

ஏகலைவன் ஒரு வேடுவன்.
அம்பு விடுவதில் ஏற்கனவே வல்லவன்.
இவன் மறைமுகமாக கற்றுக் கொண்டது அஸ்திர, சஸ்திர ப்ரயோகம். அதாவது அணுகுண்டு போன்றவை உபயோகப்படுத்தும் முறை.
இவன் க்ஷத்ரியன் (army person) அல்ல. இவன் ஒரு சாதாரண பிரஜை (citizen). சாதாரண பிரஜை அணுகுண்டு தயாரிப்பது, உபயோகிப்பது ஆகியவை சட்ட விரோதமானது.


துரோணர் நினைத்தது போலவே, இவன் துரியோதனனின் பக்கம் போய், அதர்மத்தின் வழியில் சண்டை போட்டான்.

ஏகலைவன் தந்தை, மகத நாட்டின் (பீஹார்) அரசன் "ஜராசந்தனுக்கு" படை தளபதியாக இருந்தான்.
17 முறை ஜராசந்தன் ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கும் மதுராவை தாக்கினான்.
17 முறையும் தோற்றான். இதில் போரிட்ட ஏகலைவனின் தந்தை மாண்டு போனான்.

ஜாராசந்தனும் பீமனால் பின்னர் இரண்டாக கிழிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

ஏகலைவன், துரியோதனிடம் நட்பு கொண்டான்.
இதனால் சமயம் எதிர்ப்பார்த்து பகைமை கொண்ட ஏகலைவன், பாண்டவர்களின் தாய் குந்தியின் ஊரான "குந்தி போஜ" (மத்யபிரதேசம்) அரசன் குந்திபோஜன் மீதும், மதுராவின் ஸ்ரீ கிருஷ்ணர் மீதும் யாதவர்களுக்கு எதிராக போரிட தயாரானான்.

"யாதவர்கள் அனைவரும் அழிய வேண்டும்" என்ற எண்ணத்துடன் குந்திபோஜ தேசத்தை தாக்க வந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையில் இருந்து வந்து, யாதவர்களுக்காக போரிட்டார்.

துரியோதனின் யோசனை பேரில், ஸ்ரீ கிருஷ்ணரின் மகன் "சம்பா"வை போரில் கொலை செய்ய ஏகலைவன் முயற்சி செய்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் தக்க சமயத்தில் வந்து, யாதவர்களை கொல்லும் எண்ணம் கொண்ட  ஏகலைவன் தலையை அங்கிருந்த பாறையில் மோத, தலை பிளந்தது.

யுதிஷ்டிரரின் ராஜா சுய யாகத்திற்கு திக்விஜயமாக புறப்பட்ட நகுலன், மால்வ தேசத்து அரசர்களை தோற்கடித்தான்.
மால்வ அரசர்கள், யுதிஷ்டிரரின் ராஜா சுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

மஹாபாரத போர் நிச்சயம் என்ற நிலையில், கர்ணன் மால்வ தேசத்து அரசர்களிடம் போர் புரிந்து வெற்றி பெற்றான்.

மஹாபாரத போரில், சில மால்வ அரசர்கள் துரியோதனன் பக்கம் நின்று போரிட்டனர்.
சில மால்வ அரசர்கள் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

மகத அரசன் (பீகார்) ஜராசந்தனுக்கு பயந்து, சால்வ தேச (ராஜஸ்தான்) அரசர்கள் பல சமயம் குந்தி தேசத்திற்கு (மத்யபிரதேசம்) ஓடி விடுவர்.

இன்னும் சில சால்வ அரசர்கள் சிசுபாலன் இருக்கும் சேடி தேசம் (மத்யபிரதேசம்) வரை சென்று தஞ்சம் புகுவர்.

இன்னும் சில சால்வ அரசர்கள், ஜராசந்தனுக்கு பயந்து, ருக்மி இருக்கும் விதர்ப தேசம் (மஹாராஷ்டிரா) வரை சென்று தஞ்சம் புகுவர்.


மஹா பாரத போரில், ஒரு சில சால்வ அரசர்கள், துரியோதனன் பக்கம் நின்று போரிட்டனர்.
சில சால்வ அரசர்கள், பாண்டவர்கள்  பக்கம் நின்று போரிட்டனர்.

மஹாபாரத போரில், சில நிஷாத சிற்றரசர்கள், பாண்டவர்கள் பக்கம் போரிட்டனர்.
மற்றும் சிலர் துரியோதனன் பக்கம் போரிட்டனர்.
துரியோதனன் பக்கம் நின்ற நிஷாத அரசர்கள் அனைவரையும், பீமன் ஒருவனே கொன்றான்.

மஹா பாரத போரில், இந்த மத்ஸ்ய தேச படைகள், துரியோதனின் பக்கம் நின்று போரிட்டனர்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka





sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka


Saturday 2 December 2017

பல தெய்வங்கள் பெயரை சொல்லி வழிப்படுகிறது - ஹிந்து மதம்

பொதுவாக, வேதம் பல தெய்வங்கள் பெயரை சொல்லி வழிபடுகிறது.

அக்னி, இந்திரன், வாயு, சிவன், துர்கை என்று அனைவருக்கும் மந்திரம் உள்ளது.
ஆஹுதி உள்ளது.

யாகம் செய்யும் பொழுது பொதுவாக எல்லா தேவதைகள் பெயரையும் சொல்லி, சமமாக ஆராதிக்கிறார்கள்.
இதுவே வைதீக முறை.

இப்படி பல தேவதைகளை சொல்லி, அனைவரையும் ஆராதிக்க வேண்டும் என்று யாகத்தின் விதியாக சொல்லும் போது,
வழிபாடு செய்பவன் ஒரு அஞானியாக இருந்தால், எப்படி ஆராதனை செய்வான்?

வழிபாடு செய்பவன் ஒரு ஞானியாக இருந்தால், எப்படி ஆராதனை செய்வான்?

இது ஒரு பொதுவான கேள்வி.

வைதீக மதம் பரவாசுதேவனான நாராயணனே, ஹரியே பரப்ரம்மம் என்று சொல்கிறது.
அவரால் தான் ப்ரம்மா படைக்கப்பட்டார்.
அதற்கு பிறகு தான் மற்ற அனைத்து படைப்புகளும் நடந்தன என்றும் சொல்கிறது.

ஓம் என்ற பிரணவத்துக்கும் முன்னும் ஹரியே இருக்கிறார் என்பதை தெளிவாக "ஹரி: ஓம்" என்று சொல்கிறது.

இப்படி ஒரே தெய்வம் தான் படைப்பிற்கு காரணம் என்று தெளிவாக சொல்லும் வேதம், பல தெய்வங்கள் பெயரை வணங்க சொல்வதாக வருவதற்கு காரணம் என்ன? வேதத்தின் உண்மையான அபிப்ராயம் என்ன?

வேதத்தின் உண்மையை உணர்ந்த ஞானி குழம்ப மாட்டார்.

அஞானியாக இருப்பவன், வேதத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், வைதீக தர்மம் (ஹிந்து) பல தெய்வங்களை வழிபட சொல்கிறது என்று நினைப்பான்.

இதற்கு காரணம், அஞானமே.




அதாவது, வேதத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ளாததே !!

வேதத்திற்கு தமிழில் ஒரு அழகான பெயர் உண்டு. வேதத்தை "மறை நூல்" என்று சொல்வர்.

வெளியோட்டமாக பார்த்தால் வேதம் கர்ம காண்டமாக தோன்றும்.
உண்மை உணர்ந்து பார்த்தால் ஞானத்துக்கு வழி சொல்வது புரியும்.

அதாவது, அஞானத்தோடு பார்க்கும் போது, வேதம் கர்மங்களை பற்றியும், அதன் பலன்கள் பற்றி சொல்வது போன்று தோன்றும்.
அதன் உண்மையான பொருள் மறைந்து இருப்பதாலேயே, இதற்கு "மறை" என்று பெயர்.

அர்த்தங்களை மறைத்து பேசுவதாலேயே அதற்கு "மறை" என்று பெயர்.

இந்திரன், வருணன், யமன், அக்னி, சிவன் என்று வேதம் பேசுகிறது.

இப்படி சொல்லும் போது, இந்திரன் என்று ஒரு தேவதை,

வருணன் என்று தேவதையை சொல்கிறது என்று  நினைக்கிறோம்.

ஆனால் வேதத்துடைய அபிப்பிராயம் இந்திரன் தேவன் இல்லை, அக்னி தேவன் இல்லை, வருண தேவன் இல்லை.

பின் யாரை சொல்கிறது? என்று கேட்டால், வேதமே சொல்கிறது,
"ஏகம் சந்தம் விப்ரா பஹுதா கல்பயந்தி"
அதாவது,
ஒரே பரமாத்மாவான வாசுதேவனை தான், இப்படி பல பெயர்களில் சொல்கிறேன்
என்று தெளிவாக சொல்கிறது.

இப்படி சொல்லிவிட்டு,
'இந்திராய ஸ்வாஹா'
என்று சொல்லும் போதும்
"நான்(வேதம்) அவரையே சொல்கிறேன் என்று உணர்ந்து கொள்"
என்று உண்மையான அர்த்தத்தை மறைத்து பேசுவதாலேயே, இதற்கு மறை என்று பெயர்.

வேதத்தின் லட்சியமே, ஜீவாத்மாவை பரமாத்மாவோடு சேர்ப்பதே.

மோக்ஷம் விரும்பும் ஆத்மாவுக்காக ஞான மார்க்கம் காட்டும் வேதம்,
வெளியோட்டமாக கர்ம மார்க்கத்தை காட்டி அல்ப பலன்களையும், தேவதைகளை தனித்தனியே வழிபாடு செய்யும் முறையையும் காட்டுகிறது.

வேதத்தின் உண்மையை உணர்ந்த ஞானி, வேத சொர்களில் ஞானத்தையும், பக்தியையும் தருவதை உணர்கிறான்.

வேத சொற்களை கேட்கும் ஒரு அஞானி,
வேதம் பல தெய்வங்களை வழிபட சொல்கிறது.
வேதம் கர்மா செய்ய சொல்கிறது.
கர்மாவுக்கு பலனாக, அந்தந்த தெய்வங்களின் பலன் கிடைக்கிறது என்று புரிந்து கொள்வான்.
பல தெய்வங்கள் உள்ளதால், பல தெய்வ வழிபாடு செய்ய சொல்கிறது என்றும் நினைப்பான்.

அஞானியாக இருப்பவன், ப்ரார்த்திக்கும் போதும், தான் சொல்லும் ஒவ்வொரு தேவதையும் தனித்தனி என்று நினைத்து, அந்தந்த தேவதையை மட்டும் தியானிப்பான்.
வேதம் அந்த தேவதையை பற்றித்தான் சொல்கிறது என்று நினைப்பான்.

இந்திராய ஸ்வாஹா என்று சொல்லும் இடத்தில், இது இந்திர தேவனுக்காக என்று நினைப்பான்.
தான் கொடுக்கும் ஆஹுதி, அந்த இந்திர தேவனை போய் சேருகிறது என்று நினைப்பான்.

சூர்யாய ஸ்வாஹா என்று சொல்லும் இடத்தில், இது சூரிய தேவனுக்காக என்று நினைப்பான்.
தான் கொடுக்கும் ஆஹுதி, அந்த சூரிய தேவனை போய் சேருகிறது என்று நினைப்பான்.

வேத மந்திரங்கள் இப்படி தான் இருக்கிறது.
பல தேவதைகள் பெயர்களை சொல்லி தான் வழிபாடு செய்கிறது என்பதும் உண்மையே !

ஞானியாக இருந்தாலும், அஞானியாக இருந்தாலும் இப்படி தான் சொல்லியாக வேண்டும் என்பதும் விதி.
மந்திரத்தை மாற்றவும் முடியாது.
க்ரியையும் மாற்றவும் கூடாது.

அப்படியென்றால், ஞானி வழிபாடு செய்யும் போது எப்படி மாறுபடுகிறார்?
ஞானி யஞ்யத்தை எப்படி செய்கிறார்?

ப்ரம்ம தேவன் பூலோகத்துக்கு வந்து, காஞ்சிபுரத்தில் அஸ்வமேத யாகம் செய்தார்.
அவரோ வேத ஸ்வரூபன். ஞானி. அவரே வேதம்.

பரவாசுதேவனின் முதல் படைப்பு என்ற பெருமை உடையவர்.

பரவாசுதேவனே வேதத்தை நேரிடையாக பிரம்மாவுக்கு உபதேசித்தார் என்ற பெருமை உடையவர்.

பிரம்மாவின் ஒரே லட்சியம் "நாராயணன்".

இவர் வேறு தெய்வங்களை வணங்குவாரா?

அனைத்து தேவதைகளும் இவருக்கு பின்னால் படைக்கப்பட்டவர்கள்.

வேதத்தில் இந்திரன் என்ற சொல்லப்பார்த்து, இந்த பதவிக்கு தகுந்த ஒரு ஆத்மாவை, இந்திர தேவனாக பணி அமர்த்தினார்.
தேவர்களுக்கும் காலம் உண்டு என்பதும் நாம் அறிந்ததே.

வேதத்தை கொண்டு உலகையும் படைத்து, தேவர்களையும் நியமித்தவர், ப்ரம்மா.

இப்படி இருக்க, இவர்கள் படைப்புக்கு முன்பே வேதத்தில் உள்ள இந்த சொற்கள் எதை சொல்லுகிறது என்று சிந்திக்கும் போது,
வேதம் 'இந்திராய ஸ்வாஹா' என்று சொல்லும் போது, அது இந்திர தேவனை சொல்லவில்லை என்று நமக்கு புரியும்.

ஞானியான ப்ரம்ம தேவன், யாகத்தில்
"இந்திராய ஸ்வாஹா" என்று சொல்லும்போது,
தனக்கு பின் படைக்கப்பட்ட இந்திர பதவியில் இருக்கும் தேவனை நினைக்கவில்லை.

பரவாசுதேவனே விராட் ஸ்வரூபத்தில் இருக்கிறார். அவரால்தான் வேதமே தனக்கு கொடுக்கப்பட்டது.
அவர் தான் தன்னையும் படைத்தார்.
அவரே விஸ்வமாகவும் இருக்கிறார்.
அவர் சக்தியில் தான் தானும் இயங்குகிறேன்.
அவர் சக்தியில் தான் உலகமே இயங்குகிறது என்ற உண்மையை அறிந்தவர் ப்ரம்மா.

ஆகையால், ஞானியான ப்ரம்மா  "இந்திராய ஸ்வாஹா" என்று சொல்லும்போது, இந்திரன் விராட் ஸ்வரூபியான பகவானின் புஜம் என்றும்,

"அக்னயே ஸ்வாஹா" என்று சொல்லும்போது, சூரியன் விராட் ஸ்வரூபியான பகவானின் வாக்கில் வெளிவரும் அக்னி  என்றும்,

"சோமாய ஸ்வாஹா" என்று சொல்லும்போது, சோமன் விராட் ஸ்வரூபியான பகவானின் ஹ்ருதயம் என்றும்,


மனதில் தியானித்து, காஞ்சிபுரத்தில் யாகத்தை, அந்த பரவாசுதேவனுக்கே ஒரு "அங்க பூஜை"யாக செய்தாராம்.

இதுவே ஞானியின் நிலை.

ஞானி எந்த கர்மாவை செய்தாலும், கர்ம பலனுக்காக செய்யாமல், நாராயணனின் ஆராதனையாக செய்வார்கள் என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

நாராயணனே விஸ்வரூபன். எல்லா தேவதைகளும் அவரின்  அங்கங்களில் இருக்கின்றனர் என்று வேதமே சொல்கிறது.

பொதுவாக அங்கங்களில் செய்யும் பூஜை, அந்த அங்கத்தில் உரிமை உடையவனுக்கு தான் போய் சேரும்.

ஒரு தாய்க்கு கால் பிடித்து விடும் குழந்தை, "காலுக்கு தான் பிடித்து விட்டேன், உனக்கு இல்லை" என்று அறிவீனத்தால், தாயிடமே சொன்னாலும், தாய்க்கு உண்மை தெரியுமே.

அதே போல
"நான் சூரியனை தான் வணங்குகிறேன், நாராயணனை அல்ல"
என்று அஞானத்தால் சொன்னாலும், அந்த நாராயணன், தன் வாக்கில் உள்ள அக்னியாக இருக்கும் சூரிய தேவன் வழியாக நாம் கேட்கும் பலனை கொடுத்து விடுகிறார்.

இதையே, பகவத் கீதையில், வாசுதேவனே, ஸ்ரீ கிருஷ்ணராக  துவாபர யுகத்தின் கடைசியில்  அவதாரம் செய்து,

"நீ எந்த தெய்வத்தை வணங்கி வரம் வாங்கினாலும், அந்த வரத்தை அந்த தெய்வம் வழங்குமாறு செய்தவனே நான் தான். நீ எந்த தெய்வத்தை நம்பிக்கையுடன் வணங்கினாலும் அது என்னை வணங்கியது தான் என்று உணர்ந்து கொள்" என்கிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தை சொல்லும் போது, வேதத்தின் ஞான மார்கத்தையே  சொல்கிறார் என்று தெரிகிறது.

ஸ்லோகம் :
யே அன்ய தேவதா பக்தா
யஜந்தே ச்ரத்தையான் விதா: !
தேபி மாம் ஏவ கௌந்தேயே
யஜந்த விதி பூர்வகம் !!

அர்ஜுனா! எந்த எந்த தெய்வங்களை அஞானத்தால் ஒருவன் வணங்கினாலும், அந்த தெய்வங்களுக்கும் ஆத்மாவாக இருக்கும் நான், அவர்கள் வழியாக இவன் கேட்கும் பலனையும் கொடுக்கிறேன். இப்படி அஞானத்தில் வணங்குபவர்கள், உண்மை  அறியாமலேயே என்னை தான்  வணங்குகின்றனர்.

அங்கங்களில் உள்ள தேவதைகளுக்கு செய்யும் பூஜையும், அங்கியாக உள்ள நாராயணனையே போய் சேரும் என்பதே வேதத்தின் அபிப்ராயம்.

தலையில் கிரீடம் வைத்தால் தலைக்காக வைக்கப்படுவது இல்லை.
தலையை உடையவனுக்கு தான் அணிவிக்கிறோம்.

மார்பில் சந்தனம் பூசினால், மார்புக்காக இல்லை.
மார்பை உடையவனுக்கு தான் அணிவிக்கிறோம்.

காலில் செருப்பு அணிந்தால் காலுக்காக இல்லை.
கால் உடையவனுக்கு தான் அணிவிக்கிறோம்.

அதை போன்று, இந்திரன், வருணன் என்று வேத சப்தம், அவருடைய ஒவ்வொரு அங்கங்களை துதிக்கின்றது.
இதையே, வேதம், "நான் ஹரியையே, பல பெயர்களில் துதிக்கிறேன்" என்று சொல்கிறது.

இந்த உண்மையின் காரணமாகவே, சந்தியா வந்தனத்தில் பல தேவதைகள் பெயர்கள் வந்தாலும், முதலும் முடிவாக, நாராயணனே நின்று நாம் செய்யும் பூஜையை அங்கீகரிக்கிறார்.

ஞானத்தோடு செய்யும் போது, பல தேவதைகள் அவர் அங்கங்கள் என்ற உண்மை புரிந்து விடும்.

மேலும், செய்யும் கர்மாவும் ஞானத்தோடு செய்வதால், அந்த நாராயணனை நேரிடையாக பூஜித்த பலனை தரும்.

அஞானத்தோடு செய்யும் போது, பல தேவதைகள் அவர் அங்கங்கள் என்ற உணராமல், அந்த தேவதையை மட்டும் வணங்கிய கர்ம புண்ணியத்தை மட்டும் தந்து விட்டு, அந்த தேவதைகள் விலகி விடும்.

ப்ரம்ம தேவன் மஹாஞானியாக இருப்பதால்,
"இந்திராய ஸ்வாஹா",
"அக்னேயே ஸ்வாஹா",
"சோமாய ஸ்வாஹா"
என்று சொல்லி யாகம் செய்யும் போது, எந்தெந்த தேவதைகள் எம்பெருமாளுக்கு அவயவங்களாக இருக்கிறார்களோ, அந்த அவயவங்களுக்கு செய்யும் ஆஹுதியாக தியானம் செய்தார்.

பகவானுடைய (நாராயணன்) அவயவங்கள் என்ற ஞானம் (அறிவு) இல்லாமல், வேதத்தில் உள்ள தேவதைகளின் பெயரை சொன்னோமானால், அல்ப பலனே கிடைக்கும்.

இந்திர தேவன் என்று மட்டும் நினைத்து வணங்கினால், சொர்க்கம் என்ற பலனை மட்டும் இந்திர தேவன் கொடுத்து விட்டு சென்று விடுவார்.
அந்தந்த தேவதைகளின் சக்திக்கு உட்பட்ட அணுகிரங்கள் செய்து விட்டு விலகி விடும்.

இதனாலேயே, ப்ரம்மாவிடமும், சிவனிடமும் வரம் வாங்கிய ராவணன், தேவர்களை இம்சிக்க,  பரவாசுதேவன் ஸ்ரீ ராமராக அவதரித்து சம்ஹாரம் செய்தார். சிவனும், பிரம்மாவும் விலகி விட்டார்.

வேதத்தின் நோக்கத்தை உணர்ந்து ஞானத்தோடு சொன்னோமானால், அதற்கு வேறு விதமான பலன்கள் உண்டு என்று உபநிஷத்துக்களே சொல்கிறது.

பரமாத்மாவின் அங்கங்கள் தானே இந்த தேவதைகள் என்று ஞானியாக இருப்பவன் பார்க்கிறான்.

அவயவங்களாக இருக்கும் தேவதைகள் மீது பிடிக்காத்தனம், துவேஷம் ஞானியாக இருப்பவனுக்கு வர இயலாது.

தேவதைகளுக்கு செய்யும் பூஜை அவர்களை மட்டும் மகிழ்ச்சி படுத்த அல்ல, ஆனால் அங்கியாக இருக்கும் அந்த பரமாத்மா என் பூஜையை ஏற்றுக்கொள்ளட்டும்  என்ற தியானத்தில், ஞானி யாகம் செய்கிறான்.

நாம் பொதுவாக எந்த கர்மாவை செய்தாலும் இந்த ஞானத்தோடு செய்தால், அனைத்து கர்மாவும் நாராயணனை துதித்தாகவே ஆகி விடும்.

ஒரு மனிதனை கண்டு கை கூப்பி வணக்கம் சொன்னாலும்,
நடந்து போகும் போது, நாம் பார்க்கும் மரமோ, பசுவோ, நதியோ எதை பார்த்தும் வணங்கும் போதும்,
நாம் நினைக்க வேண்டியது  என்னவென்றால்,
"அதற்குள்ளும் அந்தர்யாமியாக அந்த பரமாத்மாவே இருக்கிறார்" என்ற ஞானத்தோடு
"அந்த அந்தர்யாமிக்கு நமஸ்காரம் செய்கிறேன்" என்று நினைக்க வேண்டும்.

வெளியோட்டமாக உள்ள தோற்றத்தை பார்த்து இவன் தாழ்ந்தவன், இவன் முதலாளி, இது மரம், இது விலங்கு என்று வணங்க கூடாது. வெளி தோற்றத்துக்கு வணக்கம் சொல்ல கூடாது.

அந்த பரமாத்மாவின் சக்தியினால் தான், இந்த ஜடப்பொருள் (உடல்) வேலை செய்கிறது என்று ஞானத்தோடு பார்க்க வேண்டும்.

இந்த ஞானம் கொண்டவன் ஜீவ ஹிம்சை கூட செய்ய மாட்டான்.

பரமாத்மா எங்கும் வ்யாபித்து இருக்கிறான் என்ற ஞானத்தோடு இருப்பவனே ஞானி.

இந்த ஞான நிலை ஹனுமானிடம் காணப்பட்டது.

'ஸ்ரீ ராமரை தவிர எனக்கு வேறு தெய்வம் கிடையாது'
என்று சொல்பவர் ஹனுமான்.
ஏக நிஷ்டை உடையவர்.

ஆனால், இதே ஹனுமான், இலங்கைக்கு கடலை தாண்ட தயாரான போது,
"சூரியனுக்கும், மகேந்திரனுக்கும், என் நமஸ்காரங்கள்"
என்று எல்லா தேவதைகளின் பெயரையும் சொல்லி வணங்கினார் என்று பார்க்கிறோம்.

ஹனுமானின் மனோபாவத்தில், இந்த தேவதைகளின் அந்தர்யாமியாக ஸ்ரீ ராமரே இருக்கிறார் என்று உணர்ந்து, அனைத்து தேவதைகளும் ஸ்ரீ ராமரின் அவயவங்களாக பாவித்து பூஜை செய்தார் என்று ஞானத்தோடு கவனித்த துளசி தாசர் தன் துளசி ராமாயணத்தில் விளக்கிச் சொல்கிறார்.

இந்த ஞானத்தோடு இருப்பதால் தான், எங்கும் எதிலும் ஸ்ரீ ராமரே இருப்பதை உணர்ந்த ஹனுமான், எப்பொழுதும் கை குவித்து கொண்டே இருக்கிறார்.

கோவிலில் நாம் காணும் ஆஞ்சநேயர் கை குவித்து நம்மையும் பார்த்து அஞ்சலி செய்வது, அவரின் ஞான நிலையை உணர்த்துகிறது.

நம் உள்ளும் அந்த அந்தர்யாமியாக ஸ்ரீராமர்  இருப்பதாலேயே நாம் ஜீவித்து இருக்கிறோம் என்று பார்க்கும் ஹனுமான், நம்மை பார்த்து கூட அஞ்சலி ரூபத்தோடேயே இருக்கிறார்.

ஹனுமானின் ஞான நிலையும், பிரம்மாவின் ஞான நிலையும் நமக்கும் வர வேண்டும் என்று ஆசை படவேண்டும்.

இந்த ஞானம் உடையவன், ஒரு நாயை பார்த்தாலும் அஞ்சலி செய்வான்.
அவன் உண்மையில் நாய் என்ற ஜீவனுக்கு செய்ய வில்லை. உள்ளே இருக்கும் அந்த பரமாத்மாவான வாசுதேவனுக்கு அஞ்சலி செய்கிறான்.

இந்த ஞான நிலையில் இருந்த ஹிந்துக்கள், 1200 ஆண்டுகள் இஸ்லாமிய, கிறிஸ்துவ படையெடுப்பு, மத மாற்றம், ஆக்கிரமிப்பு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு போன்ற கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சியால்,
இந்த தெளிந்த ஞானம் மறந்து, பரம்பரை பழக்கம் போன்று ஆகி விட்டது.

வெளியோட்டமாக பார்த்த வெளிநாட்டவனுக்கு
ஹிந்துக்கள் கல்லை கும்பிடுகின்றனர்,
நாயை கும்பிடுகின்றனர்,
பல தெய்வங்களை கும்பிடுகின்றனர்
என்று தானும் குழம்பி, கலாச்சார சீரழிவினால் குழம்பி இருந்த ஹிந்துக்களையும் குழப்பி, மத மாற்றம் செய்தார்கள்.
இன்றும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

வாசுதேவனே எங்கும் உளன் என்ற ஞானத்தோடு,
நாம் எந்த தெய்வத்தை பூஜை செய்தாலும்,
அந்த தெய்வங்களுக்கு உள்ளும், அந்தர்யாமியாக அந்த பரமாத்மாவே இருக்கிறார்
என்ற நினைப்போடு, அன்பாகவும், ஆசையோடும், ஆர்வத்தோடும் செய்ய வேண்டும்.

யாரிடமும் பழகினாலும், பழகும் மனிதர்களுக்கு உள்ளும் அந்தர்யாமியாக அந்த பரமாத்மாவே இருக்கிறார்
என்ற நினைப்போடு, அன்பாகவும், ஆசையோடும், ஆர்வத்தோடும் செய்ய வேண்டும்.

சர்வேஸ்வரனே கர்த்தா (செய்கிறார்). சர்வேஸ்வரனுக்கே இந்த பலன் என்று இருப்பவன் பண்டிதன்.
அப்படி செய்யும் கர்மாவின் பலன்களும் அவனிடம் சேராது.

அப்படி செய்யும் கர்மாவும் அவனுடைய மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுத்து விடும்.

ப்ரம்மா ஞானியாக இருப்பதால், தான் செய்த யாகத்தை, ஒரு பலனை கருதி செய்யாமல், விஷ்ணுவுக்கு ஒரு ஆராதனை செய்ய கிடைத்த வாய்ப்பாக செய்தாராம்.

அல்ப பலனை எதிர்பார்த்து, தேவதைகளை மட்டுமே நினைத்து செய்தால், புண்ணியங்கள் மட்டுமே கிடைக்கும்.

ஆனால், ப்ராம்மவோ, அதே யாகத்தை விஷ்ணுவுக்கு ஒரு ஆராதனையாக செய்ததால், அதன் பலனாக, அக்னி குண்டத்தில் இருந்து, அதி ஆச்சர்யமாக "வரதராஜ பெருமாள்" ஆவிர்பவித்தார்.

அஸ்வமேத யாகம் செய்தால் புண்ணியம் தானே கிடைக்கும்? ஆனால் யஞ்யம் செய்த பலனாக, பெருமாளே வந்து விட்டார்  ப்ரம்மாவுக்காக.

இந்திரனை நினைத்து வழிபட்டு இருந்தால், பெருமாள் இந்திர தேவனை அனுப்பி அணுகிரஹம் செய்ய சொல்லி இருப்பார்.

தன்னையே ஆராதனை செய்ததால், பிரம்மாவின் யாகத்தின் பலனாக தானே வந்தார் அர்ச்ச அவதாரமாக.

எந்த செயலையும் கர்மாவாகவும் நாம் செய்ய முடியும், ஞானமாகவும் செய்ய முடியும்.

பிரம்மா யாகம் செய்த முறை மூலம், ஞானத்துடன் செயதால் என்ன லாபம் கிடைக்கும், எனபது  புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.

கர்மாவாக செய்தோம் என்றால், அதற்கு கர்ம பலன் உண்டு.

ஞானத்தோடு செய்தோம் என்றால், அதற்கு பகவத் தரிசனமும் உண்டு. மோக்ஷமும் உண்டு.

இந்திரன், அக்னி, சோமன், சிவன்  என்று  தனித்தனியாக பார்த்து, வணங்குவது சாதாரண வழிபாடு.

ஞானி, அக்னியை பூஜிக்கும் போதும், வாசுதேவனின் அங்கங்கள் என்று உணர்ந்து, வாசுதேவனையே ஆராதனை செய்து, கர்மம் செய்தும் கூட மோக்ஷத்திற்கு வழி தேடி விடுகிறார்கள்.

கர்மத்தையும் ஞானத்தோடு செய்ததால், பிரம்மாவுக்காக காஞ்சிபுரத்தில் அர்ச்ச அவதாரமாக சங்கு சக்ரத்துடன், பீதாம்பரம் உடுத்திக்கொண்டு, முக மலர்ச்சியுடன் வரதராஜ பெருமாளாக, யக்யத்தின் பலனாக, அக்னி குண்டத்தில் இருந்து வெளி வந்து, அனைவருக்கும் திருகாட்சி கொடுத்தார்.

இன்று போனாலும், ப்ரம்மாவுக்காக வந்த வரதராஜ பெருமாளை நாமும் சென்று தரிசிக்கலாம்.

நாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார். மேல்கோட்டை செல்லப்பிள்ளை சம்பந்தமாக ராமானுஜர் வாழ்வில் நடந்த சம்பவம்.

கைங்கர்யம், செல்லப்பிள்ளை



ஸ்ரீ ராமானுஜர், வரதராஜனுக்கு காஞ்சியில் சேவை செய்து கொண்டிருந்தார்.

பின்னர், ஸ்ரீரங்கநாதர், இங்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு அழைக்க, கடைசி வரை ஸ்ரீரங்கநாதருக்கே சேவை செய்து கொண்டு ஸ்ரீ ரங்கத்திலேயே இருந்தார்.

ஸ்ரீ ராமானுஜருக்கு, பெருமாளுக்கு முன் தான் 'தாஸன்' என்ற மனோபாவம் உண்டு. அவரே புருஷன் என்பதால், அவருக்கு ஸ்திரீ ஆகிறான்.

இதனால், ஸ்ரீ ராமானுஜருக்கு, தான் ஸ்திரீ என்ற நிலையில், காஞ்சிபுரம் இவருக்கு பிறந்த ஊராக மனோபாவம்.
காஞ்சி வரதனே இவரின் 'தந்தை'.

காலத்தில் ஒரு தகப்பன் நல்ல வரன் பார்த்து, தன் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து அனுப்புவது போல,
இவரை ஸ்ரீ ரங்கநாதருக்கு சேவை செய்ய அனுப்பி விட்டார்.

இதனால், ஸ்ரீ ராமானுஜருக்கு, தான் ஸ்திரீ என்ற நிலையில், ஸ்ரீரங்கம் இவருக்கு புகுந்த ஊராக மனோபாவம்.
ரங்கநாதரே இவரின் 'கணவன்'. கம்பீரமானவர்.

சோழ அரசன் "கிருமி கண்ட சோழன்" சைவ வெறி தலைக்கு ஏறி, ஸ்ரீ ரங்கத்தையே கலவர பூமியாக்கினான்.

ஸ்ரீ ராமானுஜர் கலவரத்தால் வெளியேறி, 12 வருடங்கள் கர்நாடகாவில் உள்ள திரு நாராயணாபுரம் என்ற மேல்கோட்டையில் வாசம் செய்தார்.
அங்கு இவருக்காகவே, செல்லப்பிள்ளையாக பெருமாள் கிடைத்தார். அங்கேயே தங்கி, செல்லப்பிள்ளைக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.

12 வருடங்கள் ஆகி விட்டதால், ஸ்ரீரங்க பெரிய பெருமாளுக்கு, ஸ்ரீ ராமானுஜர் மேல் கோட்டையிலேயே இருந்து விடுவாரோ!! என்று கூட தோன்றி விட்டது.
அதனால், பெரிய பெருமாளே, ராமானுஜரை உடனே  திரும்பி வர சொல்லி விட்டார்.

ராமானுஜருக்கோ நிலை கொள்ள முடியாத நிலை.
ஸ்ரீ ரங்கம் சென்றால், செல்லப்பிள்ளையை விட்டு பிரிய வேண்டும்.

அப்பொழுது தான் யதியாக (சந்யாசி) இருக்கும் ஸ்ரீராமானுஜருக்கு ஒரு தாய், தன் பிள்ளையை விட்டு பிரிய வேண்டும் என்கிற நிலையில், எத்தனை மனத் துயரம் அடைவாள் என்ற அனுபவம் கிடைத்ததாம்.

தன் பிள்ளை வேலைக்காக எங்கோ சென்று வாழ்கிறான்.
வயதான கணவனோ தான் இருக்கும் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று அடம் பண்ணுகிறார்.

பிள்ளை ஒழுங்காக சாப்பிட்டானோ?!! 
நல்ல உடை உடுத்திக் கொள்கிறானோ?!! 
என்று கவலைப்பட்டு, ஒரு வாரம் அவனோடு இருக்கலாம் என்று தன் பிள்ளையுடன் தங்கினாள்.

ஒரு வாரம் ஆனதும், தானும் வர மாட்டேன் என்று இருக்கும் கணவன் ஞாபகமும் வர, அவர் என்ன சமைத்தாரோ!! உடம்புக்கு ஏதாவது வந்தால் யார் பார்த்துக் கொள்வார்கள்? என்று இரக்கமும் வந்து, பிள்ளையையும் பிரிய முடியாமல் தவித்தாள்.

பிள்ளைக்கு தேவையான அனைத்து பக்ஷணம், வீட்டுக்கு தேவையான அனைத்தும் வாங்கி கொடுத்து, அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் போய், தன் பிள்ளைக்கு ஒன்றும் தெரியாது, கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு, பிள்ளையை பிரிய முடியாமல் ஒரு தாய், தன் கணவன் இருக்குமிடம் திரும்பிச்  செல்கிறாள்.



அதே மனநிலையில் இருந்த ஸ்ரீ ராமானுஜர், தனக்காக கிடைத்த "செல்லப்பிள்ளை"யான நாராயணனை தான் பெற்ற பிள்ளையாக 12 வருடம் ஆசையோடு வளர்த்து வந்தார்.

பெரிய பெருமாள் கூப்பிட, அவருக்கு தன்னை விட்டால் யார் ஒழுங்காக  பார்த்துக்கொள்வார்கள் என்று மனைவி நினைப்பது போன்று, ஸ்ரீ ராமானுஜர் ஒத்துக்கொண்டு, மேல்கோட்டையில், பெரிய பெருமாளுக்கு என்ன என்ன உத்ஸவங்கள் உண்டோ, பூஜை உண்டோ அனைத்தையும் ஏற்பாடு செய்து, வைஷ்ணவர்களை குடி அமர்த்தி, ஒரு குறையும் தன் செல்ல பிள்ளைக்கு வந்து விடக்கூடாது என்று எல்லாவிதமான ஏற்பாடுகளும் செய்து விட்டு திரும்பி புறப்படுகிறார்.

கிளம்பும் போது, அங்கு இருந்த வைஷ்ணவர்களை பார்த்து, யதிராஜர், தானே ஒரு தாயாகி, கண்களில் கண்ணீர் ததும்ப,
"செல்லப்பிள்ளையை கிணத்தடி பிள்ளைபோல கவனித்து கொள்ளுங்கள்" என்றாராம்.

"கிணற்றுக்கு அருகில் அம்மா துணி தோய்த்து கொண்டிருந்தாலும், குளித்து கொண்டிருந்தாலும் கூட, தன் பிள்ளை அந்த கிணற்றுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தால், கவனிக்காமல் தவறி விழுந்து விட போகிறதே என்ற பயத்தில் ஒரு கண் தன் பிள்ளை மீதே வைத்துக்கொண்டு தன் காரியங்களை செய்வது போல, வைஷ்ணவர்களாகிய நீங்களும் உங்கள் காரியத்தை செய்து கொண்டிருந்தாலும், செல்லப்பிள்ளையை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்" என்றாராம் ஸ்ரீ ராமானுஜர்.

எப்படி ராமானுஜர் செல்லப்பிள்ளையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னாரோ, அதே போல தான், நம்மிடமும் சொல்லிவிட்டு சென்றார் என்று உணரும் போது, நமக்கும் அரச்சா அவதாரத்தில் பக்தி வரும்.

பெருமாளிடம் என்ன வரம் வாங்கலாம்? என்ற எண்ணத்தை விட, நமக்காக இங்கேயே தங்கி விட்டாரே!! இவருக்கு நாம் என்ன சேவை செய்யலாம்? என்று எண்ணம் தோன்றும்.
இதுவே பக்தி.

நமக்காக வைகுண்டத்தை விட்டு ஸ்ரீ ரங்கநாதனாகவும், திருமலையப்பனாகவும், வரதராஜனாகவும், பத்ரி நாதனாகவும், அர்ச்ச அவதாரம் தாங்கி சேவை செய்வதற்கு வாய்ப்பு தருகிறார் பக்தனுக்கு.

நாம் சாப்பிடும் உணவில், தினமும் ஒரு கைப்பிடி அரிசியாவது, அருகில் தீபம் கூட ஏற்றாமல் இருக்கும் கோவிலில் சென்று கொடுக்கலாம்.

தன் வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று ஒரு தீபம் ஏற்றலாம்.

சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பு இது !! என்று உணர்ந்தால், நமக்காக பெருமாள் அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார் என்பது புரியும்.

நாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்தால், ஒரு உண்மையான பக்தனுக்கு, சேவை செய்யாமல் எப்படி இருக்க முடியும்?



இந்த உணர்வு, ஹிந்துக்களுக்கு வந்தாலே, அரசாங்கமும் தேவை இல்லை, கோவில் நிர்வாகமும் தேவை இல்லை.
அனைத்து கோவில்களிலும் தீபம் எரியும்.

நமக்காக அல்லவோ அர்ச்ச அவதாராமாக நிற்கிறார் என்ற 'உணர்வு' வந்தாலே போதும், நமக்கு சேவை செய்ய வேண்டும் என்ற புத்தி வந்து விடும்.

சக்கரவர்த்தியாக இருந்த அம்பரீஷன், தன் மனைவி கோவிலில் கூட்டி பெருக்க, தான் பெருமாளுக்கு தீவெட்டி பிடிப்பாரராம்.

அவர் மாளிகையில், அவருக்கு பணிவிடை செய்ய 100 வேலைக்காரர்கள் உண்டு.
பின்பு ஏன் இப்படி செய்கிறார்?
கோவிலை பெருக்க ஆள் போடலாமே?
தீவெட்டி பிடிக்க ஆள் போடலாமே?
என்றால், அம்பரீஷன் சொல்கிறார்,
"நான் இந்த தேசத்துக்கு சக்கரவர்த்தி, ஆனால் எம்பெருமானோ அகிலத்துக்கும் சக்கரவர்த்தி ஆயிற்றே.
அவர் அர்ச்ச அவதாரம் எடுத்து இருக்கும் போது, இந்த சந்தர்ப்பத்த்தில்  நானே சேவை செய்யாமல் எப்படி இருக்க முடியும்?.
மேலும் நான் இந்த சேவையை என் வேலைகாரனிடம் கொடுத்து செய்ய சொன்னால், அது புண்ணியமாகி போகும். கர்மாவாகிவிடும்.
நானே செய்தால்,பெருமாளுக்கு நான் செய்யும் சேவையாகி விடும். மோக்ஷத்திற்கு வழி செய்யும். நான் அதையே விரும்புகிறேன்" என்றார்.

நம்மால் முடிந்த அளவு சிறிது அரிசி, பூ, தீபம் ஏற்றினால் கூட அர்ச்ச அவதாரமாக இருக்கும் பகவான் நம் சேவையை பரிபூரணமாக ஏற்று, அணுகிரஹிக்கிறான்.

வீட்டில் இருக்கும் விக்ரஹமும், நாம் எந்த அளவு சேவை செய்ய ஆசையோடு இருக்கிறோம் என்று தான் காத்துக் கொண்டு இருக்கிறார்.

நாம் பூஜை செய்யாமல், அழுக்காக விக்ரஹ ரூபத்தில் உள்ள தெய்வங்களை அவமதித்திக்க கூடாது.
என்றாவது ஒரு நாள் இவன் நமக்கு சேவை செய்வானா?
இவனுக்கு அதன் பலனாக மோக்ஷமும் கொடுத்து விடலாமா?
என்று நமக்காகவே நம் வீட்டிலும், கோவிலிலும் அர்ச்சா திருமேனியுடன் நாம் செய்யும் அபச்சாரங்களை சகித்துக்கொண்டு, சேவை செய்வானா? என்று காத்துக்கொண்டு இருக்கிறார்.

பெருமாளின் சேவையே பக்தி. பெருமாளின் சேவையே மோக்ஷத்திற்கு வழி.

Hare Rama Hare Krishna - Bhajan
Sandhya Vandanam - Morning




Sandhya Vandanam - Evening

Sandhya Vandanam - Afternoon