Followers

Search Here...

Thursday 26 December 2019

தீபாவளி அன்று திவசம் செய்கிறார். "பெருமாளே கதி "என்று வாழ்ந்த பக்தனுக்கு "தானே உறவு" என்று காட்டிய சாரங்கபாணி பெருமாள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

"சிரார்த்தம் என்பதை முக்கியமான பந்துக்கள் (உறவுகள்) மட்டுமே செய்யலாம்"
என்று சாஸ்திரம் சொல்கிறது..




நம் அனைவருக்குமே பந்துவாக (உறவாக) இருக்கிறார் பெருமாள்.

"அனாதை" என்று யாருமே சொல்லிக் கொள்ள கூடாது.
"நம் அனைவருக்குமே நாதனாக பெருமாள் இருக்கிறார்" என்று திடமாக நம்ப வேண்டும்.
பொதுவாக கோவில்களில் வசந்தோத்சவம், பிரம்மோற்சவம் என்றெல்லாம் பெருமாள் பல உற்சவங்கள் செய்து கொள்கிறார் என்று பார்க்கிறோம்...

"சிரார்த்த உத்சவம்" செய்யும் பெருமாளை கேள்விப்பட்டு இருக்கிறோமா?...

அனைவருக்கும் தானே உறவு என்று, 
சிரார்த்தம் செய்யும் பெருமாள் திருகுடந்தையில் (கும்பகோணம்) இருக்கிறார்.
தெரிந்து கொள்ள வேண்டாமா?
திருகுடந்தையில் உள்ள சாரங்கபாணி பெருமாள் சிரார்த்த உத்ஸவம் செய்து கொள்கிறார்..

திருக்குடந்தையில் திரும்பிய பக்கமெல்லாம் கோவில்கள்..

ஒரு சமயம், ஒரு பக்தன் அந்த கோவிலுக்கு போகலாமா, இந்த கோவிலுக்கு போகலாமா என்று அங்குமிங்கும் பார்த்து, கடைசியில் ஆராவமுதன் கோவில் எல்லா கோவிலை விட பெரிதாக இருப்பதாக அவனுக்கு தோன்ற, அங்கேயே அவனுக்கு ஈடுபாடு உண்டானது...

உஞ்சவ்ருத்தி எடுத்தாவது 'கோபுரம் கட்ட வேண்டும்' என்று நினைத்தான் அந்த பக்தன்.
"பைத்தியக்காரா.. இது உன்னால் ஆகுமா?" என்று பலர் பேசினர்..
"என் ஜென்மாவில் இது ஒன்றே வேலை" என்று சொல்லிவிட்டான் அவன்.




அதி ஆச்சர்யமாக, கோவில் கோபுரம் கட்டப்பட்டு, சம்ரோக்ஷனையும் அவன் காலத்தில் ஆகி விட்டது.

இப்படி கோவிலுக்கு திருப்பணி செய்வதே லட்சியம் என்று வாழ்ந்த அந்த பக்தனுக்கு, விவாஹம் செய்து கொள்ள வேண்டிய வயது தாண்டிவிட்டது...
கல்யாண வயதை தாண்டிய இவனுக்கு பெண் கொடுக்க யாரும் தயாரில்லை..
தன் இளமை காலத்தை கோபுரம் கட்டுவதிலேயே செலவழித்து விட்டான்.

இனி மனைவி மக்கள் கிடையாது, குடும்பம் கிடையாது, என்பதால், "இனி வாழும் காலத்தை பெருமாளுக்கு பூ கட்டி கொண்டே காலத்தை கழித்து விடுவோம்" என்று கோபுர வாசலிலேயே இருந்து கொண்டு வந்தான்..

பசிக்கு, கோவிலிலேயே பிரசாதம் வாங்கி கொள்வான்..
குடும்பம் தனக்கு இல்லை என்று சொல்லிக்கொள்ள மாட்டான்.
"சாரங்கபாணி தான் தன் பிள்ளை.." என்று சொல்லி கொள்வான்.
இப்படியே வாழ்க்கை போய் கொண்டு இருந்தது...
வயதாகி கிழவனாகி விட்டான்.

ஒரு சமயம், தீபாவளி அன்று கோவில் வாசலிலேயே உயிர் பிரிந்து விட்டது..
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தீபாவளி அன்று அவரவர் வீட்டில் எண்ணெய் தேய்த்து, கங்கா ஸ்நானம் செய்து புது துணி கட்டி கொள்ள ஆசைப்படுவார்களா? இல்லை, ஒரு அனாதை பிரேதத்துக்கு நெருப்பு போட வருவார்களா?...




இவரோ அனாதை பிரேதம்.
இவருக்கு சொந்தம் என்று யாருமே வந்தது கிடையாது.

அவரவர்கள் அவர்கள் காரியத்தை பார்த்து கொண்டு இருந்தனர்.
ஒரு சிலர், "அப்புறம் பார்த்து கொள்ளலாம்" என்று சொல்லி சென்று விட்டனர்.

அப்பொழுது அங்கு ஒருவன், "அப்பா... அப்பா..  போய்ட்டியா.. அப்பா.. அப்பா... போய்ட்டியா" என்று வயிற்றிலும், மார்பிலும் அடித்து கொண்டு, கதறி அழுது கொண்டு வந்தான்..
அவர் பிரேத சரீத்தை பார்த்து, விழுந்து புரண்டு கதறி அழுதான்.
அவரது உடலைத் தன் மடியில் போட்டுக் கொண்டு அழுதான்.

அங்கு இருந்தவர்களுக்கு பெரும் ஆச்சர்யம்..
"அடடா... இந்த கிழவனுக்கு சொந்தம் இருக்கு போல இருக்கே..
நாம் ஏதோ இவர் அனாதை என்றல்லவா நினைத்தோம்...
இவருக்கு நெருப்பு போட ஆள் இருக்கிறார்கள் போல இருக்கே.." என்றதும் அங்கு பலர் கூடிவிட்டனர்.

அனைவரும் வந்த பையனை சமாதானம் செய்து, அவன் தகப்பன் தகனத்துக்கு வேண்டிய உதவிகள் செய்ய, 
சக்கரபடி துறையில் அவருக்கு நெருப்பு போட்டு விட்டு, காவிரி நதியில் ஸ்நானம் செய்து விட்டு, வந்து உட்கார்ந்தான்..

மறுநாள் காலை, தகப்பனை இழந்து இருக்கும் இந்த பையன் சாப்பிட்டானோ என்னவோ என்று நினைத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்க்க வர, அந்த பையனை எங்கு தேடியும் காணவில்லை.
அன்றைய ராத்திரி, அர்ச்சருக்கும், கோவில் நிர்வாகிக்கும்  சாரங்கபாணி பெருமாள் சொப்பனத்தில் வந்து, "என் அப்பாவுக்கு நெருப்பு போட நானே தான் வந்தேன்..
நெருப்பு போட்டால் மட்டும் போதாது. வருடாவருடம் சிரார்த்தம் செய்ய வேண்டும்.
இனி நம் கோவிலில் ஒவ்வொரு தீபாவளியும் சிரார்த்த உத்ஸவம் நடக்கட்டும்." என்று சொல்லிவிட்டார்.

"பெருமாளே கதி "என்று வாழ்ந்த அந்த பக்தனுக்கு "தானே பந்து" என்று காட்டினார் பெருமாள்.

அன்றுமுதல், தீபாவளி அன்று, ஸ்ரீசாரங்கபாணி பெருமாளின் திருக்கரங்களில் தர்ப்பை பவித்ரம் அணிவித்து, ச்ராத்த சமையல் செய்து, 2 ஸ்ரீவைஷ்ணவர்களை அழைத்து, அன்னம் கொடுத்து, சிரார்த்த உத்ஸவம் நடத்தி கொள்கிறார் பெருமாள்.

எந்த கோவிலிலும் இல்லாத உத்ஸவம் இது. சாரங்கபாணி பெருமாள் செய்து கொள்கிறாரே!!
பகத்வத்சலன் அல்லவா பெருமாள்.

"பக்தனுக்காக எதுவும் செய்வேன்" என்றல்லவா பெருமாள் இங்கு சிரார்த்த உத்ஸவம் செய்து கொள்கிறார்.

தன் பக்தனை என்றுமே கைவிடாதவர் பெருமாள்..
"தன் பக்தன் என்றுமே அனாதை இல்லை. பக்தனுக்கு தானே பந்து (உறவு)" 
என்று நிரூபித்த பெருமாள் அல்லவா திருக்குடந்தையில் வீற்று இருக்கும் சாரங்கபாணி.

திருக்குடந்தை என்ற கும்பகோணத்தில், பக்தவத்சலனாக உள்ள சாரங்கபாணி பெருமாளை "தீபாவளி" அன்று சேவிக்கும் பாக்கியம் பெறுவோம்.

ஹிந்துவாக வாழ்வதே நமக்கு பெருமை.
நம் தெய்வங்கள் நம்மிடம் உறவு காட்டும் அழகை உணர, நாம் அவரிடம் வைத்து இருக்கும் அன்பே அடிப்படை என்று உணர வேண்டும்.

அன்பிற்கு குழந்தை வசமாகும்.. பரதெய்வமான நாராயணனும் வசமாகிறார்.


2 comments:

Premkumar M said...

"பெருமாளே கதி "என்று வாழ்ந்த பக்தனுக்கு "தானே உறவு"
என்று காட்டிய கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

திவசம் கொடுக்கும் பெருமாளை கண்டதுண்டா?

சரீர சம்பந்தமான உறவுகள் இல்லாமல் போனாலும், "பெருமாளே கதி" என்று வாழ்பவன், என்றுமே அனாதை இல்லையே!
அவனை காக்கவும் ஒரு நாதன் இருக்கிறானே..
சாரங்கபாணி பெருமாள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

https://www.proudhindudharma.com/2019/12/shraddha-thithi-by-sarangapani-perumal.html

Premkumar M said...

"திவசம் - முக்கியமான பந்துக்கள் (உறவுகள்) மட்டுமே செய்யலாம்" என்று சாஸ்திரம் சொல்கிறது..

திவசம் செய்யும் பெருமாளை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?...

நம் அனைவருக்கும் தானே உறவு என்று சொல்லிக்கொண்டு, அனாதை யாரும் இல்லை என்று
சிரார்த்தம் செய்யும் பெருமாள் திருகுடந்தையில் (கும்பகோணம்) இருக்கிறார். தெரிந்து கொள்ள வேண்டாமா?

http://www.proudhindudharma.com/2019/12/shraddha-thithi-by-sarangapani-perumal.html