Followers

Search Here...

Tuesday 28 December 2021

பெருமாளின் இதயத்தில் பெரியபிராட்டி இருக்கிறாள் என்று தெரிந்தும், பெருமாளை பரகால நாயகி ஆசைப்படுகிறாள். பாசுரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வோம். முற்றாரா வனமுலையாள்...

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

முற்று ஆராவனம் முலையாள் பாவை மாயன்

மொய் அதலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்

அற்றாள் தன் நிறைவு அழிந்தாள் ஆவிக்கின்றாள்

'அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ' என்னும்

பெற்றேன் வாய் சொல்லி இறையும் பேச கேளாள்

பேர்ப்பாடி தண்குடந்தை நகரும் பாடி

பொற்றாமரை கயம் நீராட போனாள்

பொருவு அற்றாள் என் மகள்

உம் பொன்னும் அஃதே?

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

"அழகிய முத்து ஹாரங்களை மார்பில் அணிந்து இருக்கும், அம்ருதம் கடையும் போது அம்ருதம் போல வெளிப்பட்ட அழகில் நிகரில்லாத 'பெரியபிராட்டி, ஆராவமுதனான எம்பெருமானின் அழகிய திருமார்பினுள் இருக்கிறாள்' என்பதை நேராக கண்ட பிறகும், தன் ஆசையை விட மறுக்கிறாளே என்னுடைய மகள் !

(முற்று ஆராவனம் முலையாள் பாவை மாயன் மொய் அதலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்)


'அச்சம் மடம் நாணம்' இது தானே பெண்ணுக்கு லக்ஷணம்! யார் என்ன சொல்வார்களோ! என்ற அச்சமும் இவளிடம் இல்லை. நாணமும் இல்லையே! தன்னுடைய வெட்கத்தை விட்டு, 'தனக்கும் எம்பெருமானிடத்தில் ஒரு இடம் கிடைக்குமா?' என்று கேட்டுக்கொண்டு பெரு மூச்சு விட்டு நிற்கிறாளே !

(அற்றாள் தன் நிறைவு அழிந்தாள் ஆவிக்கின்றாள்)




அருகில் இருக்கும் தோழியை பார்த்து, பயமே இல்லாமல், 'தோழீ! திருவரங்கம் சென்று ஒரு குதி குதித்து ஆடினால் தான் மனதுக்கு சமாதானம் ஆகும் போல இருக்கிறது. திருவரங்கம் சென்று ஆடுவோமா?‘ என்கிறாளே !

('அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ' என்னும்)

பெற்றவள் அருகிலேயே இருக்கிறேன். தாயிடம் சொல்லிக்கொண்டு போகவேண்டும் என்று கூட இவளுக்கு தோன்றவில்லையே! 'என் வார்த்தையை கொஞ்சமாவது கேள்' என்று சொன்னாலும் 'கேட்கமாட்டேன்' என்கிறாள்.

(பெற்றேன் வாய் சொல்லி இறையும் பேச கேளாள்)

எப்பொழுது பார்த்தாலும் வாயில் நாம சங்கீர்த்தனமே செய்கிறாள். இப்படி சதா சர்வகாலமும் பஜனை செய்தே கெட்டு போய் விட்டாளே !

'பகவத் பஜனை தானே ! செய்யட்டும்' என்று கொஞ்சம் இடம் கொடுத்தால், இவளோ இப்படி பஜனையிலேயே மூழ்கி போய் விட்டாளே !

'திருக்குடந்தை ஆராவமுதனை பார்க்க போகிறேன் என்று பஜனை செய்கிறாளே !"

(பேர்ப்பாடி தண்குடந்தை நகரும் பாடி)

'எம்பெருமானை அடைய முடியாததால் ஏற்பட்ட விரகத்தை தனித்து கொள்ள, பொற்றாமரை குளத்தில் சென்று நீராடி விட்டு வருகிறேன்' என்று சொல்லி விட்டு சென்று விட்டாளே !

(பொற்றாமரை கயம் நீராட போனாள்)

உலகத்தில் பெண்கள் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்.. என்னுடைய மகள் மட்டும் இப்படி வேறுபட்டு இருக்கிறாளே!!"

என்று பரகால நாயகியின் தாய் வருத்தப்பட்டாள்.

'பரகால நாயகியாக' இருப்பவர் திருமங்கையாழ்வார் தான்.

இவரை போலவே, 

நம்மாழ்வாரும் தன்னை 'பராங்குச நாயகியாக' வரித்து கொண்டு, எம்பெருமானை அடைய பல பாசுரங்கள் பாடி இருக்கிறார்.

திருமங்கையாழ்வாருக்கு 'நம்மாழ்வார் நிலையும், தன் நிலையும் ஒன்று போல இருக்க', தனக்கு தாயாக இருப்பவள், பராங்குச நாயகியின் தாயாரை பார்த்து, 

"தோழீ! என் மகள் (திருமங்கையாழ்வார்) தான் இப்படி இருக்கிறாளா? அல்லது உன் பெண்ணுக்கும் (நம்மாழ்வார்) இதே நிலை தானோ?"

(பொருவு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே?) என்று கேட்பது போல பாடுகிறார்.

பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.

நம்மாழ்வாராகிய பராங்குச நாயகியின் தாயார், திருமங்கையாழ்வாராகிய பரகால நாயகியின் தாய் சொன்னதை கேட்டு விட்டு சொல்கிறாள்,

"தோழீ! என் மகளை பார்த்தால், 'இவள் நப்பின்னை என்ற ஆயர் குலமகளோ! அல்லது பூமி தேவியோ! அல்லது சாக்ஷாத் மஹாலட்சுமியோ! என்பது போல, எப்பொழுது பார்த்தாலும் 'தொலைவில்லி மங்கலம்... தொலைவில்லி மங்கலம்" என்றே சொல்லி கொண்டிருந்தவள், என்னிடம் சொல்லிக்கொள்ளாமலேயே சென்று விட்டாள். உன் மகளாவது பொற்றாமரை குளம் செல்கிறேன் என்று சொல்லி விட்டு தானே சென்று இருக்கிறாள்.

இருவருமே அநேகமாக 'தொலைவில்லி மங்கலம்' (இரட்டை திருப்பதி) தான் சென்று இருப்பார்கள். வா 'தொலைவில்லி மங்கலம்' செல்வோம்" என்று சமாதானம் செய்தாள்.

பின்னை கொல்?

நில மா மகள் கொல்? 

திருமகள் கொல்? பிறந்திட்டாள், என்ன மாயங்கொலோ இவள்? 'நெடுமால்' என்றே நின்று கூவுமால்

முன்னி வந்தவன் நின்று இருந்து 

உறையும் தொலைவில்லி மங்கலம் 

சென்னியால் வணங்கும்  

அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே!

- நம்மாழ்வார் (திருவாய்மொழி)

No comments: